Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 14 | SudhaRaviNovels

அத்தியாயம் - 14

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 14

அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோவில் மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில் கண் விழித்தான் மாறன். உடலெல்லாம் வலி. தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் கண்களைச் சுழற்றினான். அதுவொரு மருத்துவமனை என்பது மட்டும் புரிந்தது.

திரும்பி படுக்க முயற்சிக்க, சுளீர் என்று வலி எழ, முகச்சுளிப்புடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். மெல்ல கண்களைத் திறந்து தனக்கு என்னவானது என்று புரிந்து கொள்ள முயற்சிக்க ஆரம்பித்தான்.

அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நர்ஸ் அவன் விழித்திருப்பதை பார்த்ததும் அவனது நலத்தை ஆராய்ந்து விட்டு “எப்படி இருக்கீங்க?” என்றார்.

“முதுகில் வலி இருக்கு. எனக்கு என்ன ஆனது? எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறேன்?”

“உங்களுக்கு விபத்து நடந்து முதுகு தண்டில் பலமாக அடிபட்டிருக்கு. இருபத்தைந்து நாட்களாக இங்கே அனுமதிக்கபட்டிருக்கீங்க” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போய் விட்டான். அதோடு அமெரிக்க மருத்துவமனையில் இருபத்தைந்து நாட்கள் இருப்பது என்றால் அதன் செலவை எப்படி சமாளிப்பது என்கிற யோசனைக்குச் சென்று விட்டான். அதை அவரிடம் கேட்கவும் செய்து விட்டான்.

அவனது கவலையை உணர்ந்தவர் சிரித்த முகத்துடனே “நடந்த விபத்தில் உங்களது காரை இடித்து தள்ளியவர் மேல் தான் தவறு. அதனால் அவருடைய இன்ஷுரன்ஸ் கம்பனி தான் உங்களுக்கு ஆகும் செலவுகளை பொறுபேற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.

அதைக் கேட்டதும் பெருத்த நிம்மதி எழ, அடுத்து தன்னைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமே என்கிற எண்ணம் எழுந்தது. அதிலும் தர்ஷணா என்ன நினைத்திருப்பாள் என்கிற கவலை அதிகமாக இருந்தது.

இவன் விழிப்பதற்கு பத்து நாட்கள் முன்னரே விபத்து பற்றிய அனைத்து தகவல்களும் அவன் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டது. மாறனின் அமெரிக்க நண்பன் ராபர்ட் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருந்தான். இந்திய அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது.

தர்ஷணா திருமணத்தை ஒட்டி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்ததால் அவளுக்கு இந்த விவரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கார்த்திக்கிற்கு மாறனுக்கு நடந்தவை அனைத்தும் தெரிந்திருந்தது.

மாறன் விழித்து விட்டான் என்று தெரிந்ததும் ராபர்ட் வந்து விட்டான். அவனிடம் சொல்லி மாறனின் பெற்றவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவனுடைய போன் முற்றிலுமாக சிதைந்து போயிருக்க, ராபர்ட் உதவியுடன் புதிய சிம் வாங்கி தாய், தந்தைக்கு அழைத்துப் பேசினான்.

அவர்களுக்கு அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மாற்றி மாற்றி இருவரும் பேசினார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு “தர்ஷு எப்படி இருக்காம்மா? என்னை காணவில்லை என்றதும் பதறி போய் இருப்பாள். அவள் உங்களை தொடர்பு கொண்டாளா?”

அவன் அவளைப் பற்றி பேசியதும் “வேண்டாததை எல்லாம் இப்போ எதுக்கு தம்பி பேசுற? சீக்கிரம் குணமாகி இங்கே வந்து சேருகிற வழியைப் பார்” என்றார் அன்னை.

அவரின் பேச்சில் தெரிந்த ஒரு கோபத்தை கண்டு அதிர்ந்து போனவன் “என்னம்மா? ஏன் இப்படி பேசுறீங்க?” என்று பதறினான்.

அதற்குள் மாறனின் தந்தை சுதாரித்துக் கொண்டு “அது ஒன்னுமில்லப்பா உனக்கு என்னாச்சுன்னு தெரியாம ரெண்டு பேரும் தவிச்சுப் போயிட்டோம். அந்த ஆதங்கத்துல பேசுறா” என்றார் சமாளிப்பாக.
அவர்களின் வேதனையை உணர்ந்தவன் “சரிப்பா! நான் இந்த நம்பரில் இருந்து இனி கூப்பிடுவேன். இன்னைக்கு டாக்டரைப் பார்த்தால் தான் தெரியும் குணமாக எத்தனை நாள் ஆகும் என்று. அதன் பின்னாடி எப்போ வருவது என்று முடிவெடுக்கிறேன்” என்று சொல்லி வைத்தவனின் மனம் தர்ஷணாவை தான் சுற்றி வந்தது.

அவளும் மிகவும் தவித்துப் போயிருப்பாள் என்றெண்ணி அவளது எண்ணிற்கு அழைத்தான்.

திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில் தர்ஷ்ணாவிற்கு வாழ்வே வெறுத்துப் போயிருந்தது. உன்னை எனக்குப் பிடிக்கும், என்னைத் தவிர வேறொருவரால் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்கிற வசனத்தைக் கேட்டு கேட்டு அலுத்துப் போயிற்று.

அவளின் முகம் எந்நேரமும் இறுக்கத்துடனே இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த சுகன்யா ஊரில் தான் இருந்தாள். கார்த்திக்கின் மனைவியிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருந்தவளுக்கு தர்ஷணாவின் இறுக்கம் ஒருவித எரிச்சலை கொடுத்தது.

விஜியுமே என்ன இந்தப் பெண் இப்படி இருக்கிறது? என்று யோசனையுடன் இருந்தார்.


அன்று காலை கார்த்திக் வெளியில் சென்றிருக்க, மாமியார் நாத்தனாருடன் ஹாலில் அமர்ந்திருந்தாள் தர்ஷ்ணா.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
சுகன்யா அன்று அவளிடம் எதுவும் பிரச்சனையா என்று கேட்டுவிடுவது என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

விஜி வேலை செய்வதைப் பார்த்து தானே சென்று அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள் தர்ஷு. சுகன்யாவும் அவளின் கூட சென்று நின்றவள் “ஏன் தர்ஷு நீயும் கார்த்திக்கும் ஒரே ஆபிஸ் தானே? யார் முதலில் ப்ரொபோஸ் பண்ணினது?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

அவளின் கேள்வியில் அதிர்ந்து “என்னக்கா கேட்டீங்க?” என்றாள் தடுமாற்றத்துடன்.
அதற்குள் விஜி வந்து “என்னடி இது? இதெல்லாமா கேட்பாங்க” என்று கடிந்து கொண்டார்.

“அம்மா! தம்பி பொண்டாட்டி கிட்ட இதைக் கூட கேட்கலேனா எப்படி?” என்று சிரித்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்க இவளின் மனமோ என்ன சொல்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.

அதற்குள் அவளின் போன் அடிக்கும் சப்தம் கேட்க, அவசரமாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கு சென்றாள்.

“உங்கப் பிள்ளை தான் பண்ணி இருப்பான் அம்மா. இவ கிட்ட மிரட்டி இருப்பான் நம்மகிட்ட சொல்லக் கூடாதுன்னு” என்று சிரித்தாள்.

அறைக்குள் சென்றவளோ போனில் வந்த எண்ணைப் பார்த்து குழம்பி போய் நின்றாள். தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. அதிலும் அமெரிக்காவிலிருந்து என்றபோது தன்னை அறியாமல் உள்ளம் துடித்தது. அதே சமயம் எடுக்கவும் பயமாக இருக்க, யோசனையுடன் அழைப்பைத் துண்டித்தாள்.

இங்கே இவர்கள் இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.

“தர்ஷுவுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையோம்மா? அவள் ஒரு மாதிரி இறுக்கமாவே இருப்பது போல இருக்கே?”

“அவங்களுக்குள்ள சண்டையோ என்னவோ? அவன் ஜாலியா தான் இருக்கான். இவ தான் எந்நேரமும் சோகமாவே இருக்காளே”.

“அதெல்லாம் இல்லம்மா பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. கூடிய சீக்கிரம் சரியாகிடும். தம்பியைப் பார்த்தீங்க தானே. அவளை எப்படி தாங்குறான் பாருங்க”.

“அது தான் எனக்கு கவலையா இருக்கு சுகி. இவன் உள்ளங்கையில் வச்சு தாங்குறான். அதை அவ கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்குறா”.

“சரியாகிடும்மா. அவளைப் பார்த்தால் சாதுவான பெண்ணாக தான் இருக்கிறாள். என் தம்பி சரி பண்ணிடுவான் பாருங்க”.

போன் அழைப்பை கட் செய்துவிட்டு திரும்பியவளை மீண்டும் அந்த அழைப்பு நிறுத்தியது. மறுபடியும் கட் செய்தாள். உடனே அடுத்த அழைப்பு வர, அவளுக்குள் சிறு யோசனை.

ஏனோ இதயம் எகிறிக் குதிக்க, மெல்ல அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

அதுவரை அழைப்பை ஏற்பாளா என்று தவித்துக் கொண்டிருந்த மாறன் அவள் ஏற்றதும் அமைதியாகி விட்டான். இரு பக்கமும் மூச்சுக் காற்றின் ஓசை மட்டுமே.

அந்தச் சுவாசக்காற்றே ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொண்டனர்.

“தர்ஷு” என்று நெஞ்சுக் கூட்டிலிருந்து அவன் அழைக்க, இந்தப் பக்கம் இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர், தொண்டையிலிருந்து லேசான விசும்பல்.

மாறன் உயிருடன் இருக்கிறான் என்கிற எண்ணமே அவளின் சுவாசத்தை சீராக்கியது.

“சாரி-டா! எனக்கு இங்கே..” என்று தனக்கு நடந்தவற்றை எல்லாம் அவன் பகிர்ந்து கொண்டான்.

இந்தப் பக்கம் இருந்தவள் அவன் சொன்னதைக் கேட்டதும் மொத்தமாக உடைந்து போனாள். இந்தக் குரல் ஒரு பத்து நாள் முன்பு ஒலித்திருக்க கூடாதா? அவன் உயிருடன் இருக்கிறான் என்கிற ஒரு செய்தி அவளது பலவீனத்தை எல்லாம் உடைத்து எறிந்திருக்குமே என்று கண்ணீர் விட்டாள்.

“நீ எப்படி இருக்கிற தர்ஷு? என்னை நினைத்து பயந்துட்டியா?” என்று அவன் கேட்டு முடித்ததும் கண்களை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டவள் “ம்ம்...ரொம்பவே மாறன். நிறைய கஷ்டப்பட்டுட்டேன். இனி, உங்களுக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருப்பேன்”.

“உன்னைப் பார்க்க உனக்காக சீக்கிரம் குணமடைந்து ஓடி வருவேன் தர்ஷு”.

“மாறன்! இனி என்னை இந்த போனில் கூப்பிடாதீங்க. என்னுடைய இந்த சிம் பிரச்சனை ஆகி விட்டது. நான் வேற நம்பர் வாங்கிட்டு உங்களுக்கு மெச்செஜ் பண்றேன்” என்றாள்.


“ம்ம்...சரி-டா”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
போனை அனைத்து வைத்துவிட்டு அப்படியே படுக்கையில் அமர்ந்து யோசிக்க தொடங்கி விட்டாள். மாறனை எப்படி எதிர்கொள்வது? நிச்சயம் தனக்கு திருமணம் ஆனதை எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் இங்கு வருவதற்குள்ளாகவே தனது திருமண செய்தி அவனை எட்டிவிடும் என்று அவளுக்குத் தெரியும்.

கார்த்திக் எப்படி மாறனை எதிர்கொள்வான் என்கிற யோசனையும் கூடவே எழுந்தது. ஆபிஸ் முழுவதும் தனக்கு எதிராக இருக்கும் நிலையில், மாறன் வந்த பின்பு கார்த்திக்குடன் தான் அங்கு வேலைக்குச் செல்வது எத்தனை பெரிய அவமானத்தை தரும்.

மாறனும் அவளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான். அவளது குரலில் தெரிந்த தடுமாற்றம், அழுத்தம் அவன் மனதை அழுத்தியது அவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று எண்ணியபடியே ஷ்யாமை அழைத்தான்.

மாறனின் குரல் கேட்டதுமே அந்தப் பக்கம் இருந்த ஷ்யாமிற்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.

“எப்படி இருக்கீங்க மாறன்? இங்கே எல்லோரும் உங்களுக்கு என்னவாயிற்று என்று எண்ணி பயந்து போயிட்டோம்?”

“நல்லா இருக்கேன் ஷ்யாம். அங்கே நம்ம டீமில் உள்ள எல்லோரும் எப்படி இருக்காங்க?”

“நீங்க நல்லா இருக்கீங்க என்று கேட்டதும் இங்கே இருப்பவர்கள் எல்லோருக்கும் அத்தனை சந்தோஷம் மாறன்”.

அதன்பின்னர் அலுவலக விஷயங்கள் சிலவற்றை பேசிவிட்டு “ஷ்யாம் நான் ஒன்று கேட்கிறேன் மறைக்காம சொல்லணும்” என்றான் தயங்கியபடி.

அதுவரை இந்தக் கேள்வி வந்துவிடக் கூடாது என்று பயந்தபடி இருந்தவனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்கிற யோசனை எழுந்தது.

“சொல்லுங்க மாறன்”.

“தர்ஷு எப்படி இருக்கா? என்னைக் காணாமல் ரொம்ப தவிச்சுப் போயிட்டாளா?”

“மாறன்! ப்ளீஸ்! இப்போ இதைப் பற்றி பேச வேண்டாமே” என்று விட்டான்.

“ஷ்யாம்! என்ன பிரச்சனை? எதுவாக இருந்தாலும் சொல்லு?”

எச்சிலை விழுங்கிக் கொண்டவன் “தர்ஷ்ணாவிற்கு நம்ம ஆபிஸ் கார்த்திக்குடன் திருமணம் முடிந்து விட்டது” என்ற குண்டைத் தூக்கிப் போட்டான்.

உடலின் வலியைத் தாண்டி இப்போது நெஞ்சம் வலிக்கத் தொடங்கியது. இதை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஏன்? எப்படி? எதனால்? நான் வரும் வரை காத்திருப்பேன் என்று கூறினாளே. கண்களில் இருந்து கண்ணீர் அவனது மார்பில் விழுந்தது.

“மாறன்! மாறன் !”

“ம்ம்...இருக்கேன் ஷ்யாம்! அவளை கட்டாயப்படுத்தி நடந்த திருமணமா இது?”

“அப்படித் தெரியவில்லை மாறன். நான் ஒன்று சொல்கிறேன் தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் காதலுக்கு ஏற்றவள் இல்லை அவள்”.

“ஷ்யாம்! நான் அப்புறம் பேசுறேன்” என்று சொல்லியவன் போனை வைத்து விட்டான்.

என்ன நடந்தது? என் மேல் அத்தனை காதலை வைத்திருந்தவள் எப்படி அவனை திருமணம் செய்து கொண்டாள்? அதிலும் நான் காணாமல் போன அந்த இருபது நாட்களுக்குள் அவசரமாக திருமணம் நடந்திருக்கிறது என்று மனம் கணக்குப் போட ஆரம்பித்தது.

கார்த்திக்! அவளை அழைத்துப் பேசியதாக கூறிய அன்று அவளின் முகமே சரியில்லையே.

நாங்கள் காதலிக்கிறோம் என்று ஆபிசில் அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் அவளை எப்படி திருமணம் செய்தான் கார்த்திக்?

அம்மாவும் இதனால் தான் அப்படி பேசினார்கள் என்பதை உணர்ந்து கொண்டான். அவள் தவறானவள் அல்ல. நிச்சயம் அவளுக்கு ஒரு காரணம் இருக்கும் என்றவனின் மனது அவளை எண்ணி வருந்தியது.

இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் யோசித்துக் கொண்டிருந்த வேளை கார்த்திக்கிற்கு மாறன் நன்றாக இருக்கிறான் என்கிற செய்தி வந்தடைந்தது. அதைக் கேட்டதுமே அவன் உடலில் ஒரு பரபரப்பு வந்து தொற்றிக் கொண்டது.

உள்ளுக்குள் ஒரு பதற்றம் இருந்தாலும் அவன் தருவிடம் பேசி இருப்பானா என்கிற ஐயம் எழ, உடனே அவளுக்கு அழைத்து விட்டான்.

போனை கையில் வைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தவள் அது அழைக்கவும் திரையில் தோன்றிய எண்ணைப் பார்த்ததும் எதற்காக அழைக்கிறான் என்று புரிந்து போனது.

அவனது போனை எடுக்காமல் சற்று நேரம் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னர் விடாது அழைக்கவும் எடுத்து காதில் வைத்தாள்.

“தரு! உனக்கு யாராவது கால் பண்ணினாங்களா?” என்றான் எடுத்ததுமே.

அதை கேட்டதுமே இவள் இதழில் ஏளனப் புன்னகை.