Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 13 | SudhaRaviNovels

அத்தியாயம் - 13

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 13

கல்யாணராமனுக்கு பெரும் நிம்மதி. தர்ஷ்ணா எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது திருமணத்தை ஏற்றுக் கொண்டது.

காயத்ரியும், அஞ்சனாவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். தந்தை திருமண ஏற்பாடுகளில் செய்திருந்த குளறுபடிகளை எல்லாம் அன்னையிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் அஞ்சனா. அதை கார்த்திக்கின் வீட்டினர் யாரும் தவறாகப் பேசாததைப் பற்றியும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

அதனால் இருவரும் இந்த திருமணம் நல்லபடியாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தனர்.
கார்த்திக்கும் அனைத்து தடைகளையும் மீறி அவளின் கரம் பிடித்ததை எண்ணி உற்சாகத்தில் இருந்தான். அவர்களின் அலுவலகத்தில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்.

ஆர்த்தி, ஷ்யாம் என்று அவளின் டீம் ஆட்கள் அவனுக்கு கை கொடுத்துவிட்டு அவளிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் சென்று விட்டனர். அவளும் அவர்களிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவளின் முகத்தில் சிறு புன்னகைக்கு கூட பஞ்சமாக இருந்தது.

சுகன்யா அதை கவனித்துவிட்டு வந்து மாலையை சரி செய்வது போல “தர்ஷு கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரும்மா. உனக்கு எதுவும் இந்த புடவை நகை கஷ்டப்படுத்துதா?”.

“இல்லக்கா...” என்றாள் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன். ஆனால் மனமோ ‘புடவை நகை எல்லாம் கஷ்டம் இல்லக்கா உங்க தம்பியை கட்டி இருக்கிறது தான் கஷ்டம்’ என்று எண்ணிக் கொண்டாள்.

அதன்பின்னர் மற்றவர்களுக்கு காட்சிப்பொருள் ஆகாமல் மெல்லிய புன்னகையுடன் நிற்க ஆரம்பித்தாள். அதை ஒருவித ஏளனத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆர்த்தி.

மற்ற சடங்குகள் எல்லாம் முடித்துக் கொண்டு பெண், பிள்ளையை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதுவரை கார்த்திக் அவளிடம் பேசிக் கொள்ளவே இல்லை. சிறு பார்வையுடனும், சிரிப்புடனும் இருந்து கொண்டான்.

அவனது நண்பர்கள் கூட அதற்காக அவனை ஒட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் மீறி அவன் மிகத் திருப்தியுடன் இருந்தான்.

வீட்டிற்கு வந்து விளக்கேற்றி பால், பழம் கொடுத்து முடித்த பின்னர் அவளை ஒரு அறையில் ஓய்வெடுக்க கூறினார்கள். அஞ்சனாவிற்கு அக்காவுடன் பேச வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. ஆனால் கார்த்திக் வீட்டினர் என்ன சொல்வார்களோ என்கிற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார்த்திக்கின் அன்னை அவளின் ஆசையை உணர்ந்து “நீ போய் கொஞ்ச நேரம் அக்காவோட பேசிட்டு இரும்மா” என்று அனுப்பி வைத்தார்.

அறைக்குள் சென்றவளோ ஓய்ந்து போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். கதவை முழுவதுமாக சாத்தாமல் வைத்துவிட்டு அக்காவின் அருகே வந்தமர்ந்தாள் அஞ்சனா.

“அக்கா!”

தனக்குள் நடக்கும் போராட்டத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு “என்னடா?” என்றாள்.
“எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்குக்கா”.

“ம்ம்...இந்த மூட்லையே இல்லாம ஒழுங்கா பரீட்சை எல்லாம் எழுது அஞ்சு”.

அவள் படிப்பைப் பற்றி பேசியதும் “போக்கா! இப்போ போய் அதைப் பற்றி பேசிட்டு இருக்க. அக்கா! நான் ஒன்னு கவனிச்சேன். உங்க பிரெண்ட் ஆர்த்தி ஏன் உங்களுக்கு கை கொடுக்கவே இல்ல பேசவும் இல்ல”.

அவள் அதை கவனித்திருப்பாள் என்று எதிர்பார்க்காதவள் சற்றே நிமிர்ந்து அமர்ந்து “கூட்டமா இருந்ததால போய் இருப்பாள்”.

“ஆனா அக்கா நம்ம அப்பா கல்யாண ஏற்பாடு எல்லாம் சொதப்பிட்டார். மாமா வீட்டு ஆட்கள் யாரும் அதை குறை சொல்லவே இல்ல தெரியுமா?”

“அப்பா பற்றி தெரிஞ்சது தானே!” என்றாள் சலிப்பாக.

“இருந்தாலும் அக்கா வேற யாரா இருந்தாலும் அசிங்கமா போயிருக்கும். கார்த்திக் மாமாவும் சரி அவங்க வீட்டு ஆட்களும் சரி கிரேட்-கா” என்றதும் “நீ இதைப் பற்றி தான் பேசிட்டு இருக்கப் போறேன்னா ப்ளீஸ் என்னை கொஞ்சம் ப்ரீயா விடு” என்று விட்டாள்.

அவளின் பேச்சில் சற்றே முகம் சுருங்கி விட, உடனே எழுந்து கொண்டவள் “சரிக்கா! நான் வெளில போறேன். நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டாள்.
 
  • Love
Reactions: Shanbagavalli

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
வேறு ஏதோ வேலைக்கு அந்தப் பக்கம் சென்ற சுகன்யாவின் காதில் அக்கா தங்கையின் பேச்சு காதில் விழ, ‘என்ன இந்தப் பொண்ணு கொஞ்சம் மூடி டைப் போல. கார்த்திக் எப்படி இவளை விரும்பினான்னு தெரியலையே. கல்யாணத்தில் கூட பெரிதாக சந்தோஷப்பட்ட மாதிரி தெரியல’ என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.

கார்த்திக்கின் சொந்தங்கள் மெல்ல ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றிருக்க, வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தனர். ரெங்கநாதன் கல்யாணராமனிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவரோ எப்போது கிளம்புவோம் என்கிற எண்ணத்துடனே இருந்தார். கடமை முடிந்தது இனி இங்கே என்ன வேலை என்கிற எண்ணத்துடனே இருந்தார்.

சுகன்யா நினைத்தது போலவே ரஞ்சித்தும் கல்யாணராமனைப் பற்றி நினைத்தான். வீட்டினர் அனைவருக்கும் காயத்ரியையும், அஞ்சனாவையும் மிகவும் பிடித்தது. திருமணப் பேச்சின் ஆரம்பத்தில் இருந்து தர்ஷ்ணா யாரிடம் அதிகம் ஒட்டவில்லை. மகனுக்குப் பிடித்திருக்கிறது என்பதால் அதை ஒரு குறையாகப் பேசாமல் அவர்கள் ஒத்துக் கொண்டனர்.

இந்த திருமணத்தில் ஏனோ கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு கூட சில நெருடல்கள் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை இதுவொரு காதல் திருமணம் என்றே நினைத்திருந்தனர்.

தம்பதிகள் இருவருக்கும் ஏதோ ஊடல் இருக்கிறது போல் ஒரு தோற்றத்தை அவர்களுக்கு உருவாக்கியது. கார்த்திக்கும் அவளிடம் அதிகம் பேசவில்லை. இருவருக்கும் இடையில் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது, போகப் போக சரியாகி விடும் என்று தங்களை தேற்றிக் கொண்டனர்.

இரவு உணவு முடிந்து தம்பதிகளை அறைக்குள் அனுப்பிவிட்டு தர்ஷணாவின் அப்பா, அம்மா தங்கை கிளம்பி விட்டார்கள். அவளின் அத்தையும் மாமாவும் மட்டும் அன்று தங்குவதாக ஏற்பாடு.

தர்ஷ்ணா மனதில் மூண்ட எரிச்சலுடன் கார்த்திக்கின் அறைக்குள் சென்றாள். அங்கு அவனைக் காணாமல் கண்கள் அலைபாய, மெல்ல போன் பேசிக் கொண்டே பால்கனியிலிருந்து உள்ளே வந்தான்.

கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தவன் “உட்காரு தரு ஏன் நிற்கிற” என்றான் எதுவுமே நடக்காத மாதிரி.

அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் வெடிக்க “எதுக்காக இப்படியொரு திருமணத்தை பண்ணீங்க கார்த்திக்? உங்களைப் பிடிக்காத ஒருத்தியை கல்யாணம் செஞ்சு என்ன கிடைக்கப் போகுது உங்களுக்கு?”

அவளின் கேள்வியைப் பற்றி கவலைப்படாமல் அங்கே வைக்கப்பட்டிருந்த திராட்சைப் பழத்தை எடுத்து வைத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தவன் “இப்படியே நின்னுட்டே பேசப் போறியா? உட்கார் தரு!” என்றவன் ஒவ்வொரு திராட்சையாக எடுத்து மெல்ல சுவைக்க ஆரம்பித்தான்.

கடுப்புடன் அவன் எதிரே அமர்ந்து கொண்டவள் “காதல் என்பது இரண்டு பேருடைய விருப்பம். இங்கே நான் வேறொருவரின் காதலி” என்று அவள் முடிக்கும் முன்னே “என் மனைவி தரு. நீ வேறொருவரின் காதலியாக இருந்தது கடந்த காலம்”.

“அது தான் ஏன்? எங்கள் காதலைப் பற்றி தெரிந்தும் எதுக்கு எங்களைப் பிரிச்சீங்க?”

“நான் பிரிக்கல தரு. கடவுள் என்னால தான் உன்னை நல்லா பார்த்துக்க முடியும் என்று நினைத்து நம்மை சேர்த்து வைச்சிருக்கார். அதோட நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். அந்த மாறனால கூட உன்னை நல்லா பார்த்துக்க முடியாது”.

“லூசா நீ? நானும் அன்னையிலிருந்து பொறுமையாவே பேசிட்டு இருக்கேன். நீ என்ன என்னை நல்லா பார்த்துகிட்டு இருக்க? நம்ம ஆபிசில் வைத்து என்னை அசிங்கப்படுத்தி இருக்க. என் மேல இருந்த நல்ல அபிப்பிராயத்தை கெடுத்து கேவலப்படுத்தி இருக்க”.

“ஹே! ஹே! ஏன் இவ்வளவு கோபப்படுற? நான் உன்னை லவ் பண்றேன் தரு. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்”.

“வேண்டாம்! விட்டுடு! நீ நல்லவன் வேஷம் போட ட்ரை பண்ற. ஆனா நீ என்ன நினைத்தாலும் ஒன்னு மட்டும் நடக்காது. என் மனசுல உனக்கான இடம் என்னைக்கும் கிடைக்காது”.

“நீ என்னை நல்லவனா நினைக்க வேண்டாம் தரு. ஏன் நீ என்னை லவ் கூட பண்ண வேண்டாம். அது தான் நானே உனக்கும் சேர்த்து பண்ணிக்கிறேன் என்று சொல்றேனே. சோ நாம நம்ம வாழ்க்கையை சேர்ந்து வாழ்வோம்” என்று அவளின் தோள் மீது கை வைத்தான்.

பட்டென்று கையைத் தட்டிவிட்டவள் “என்னால ஒத்துக்க முடியாது. என் மனசுலையே இடம் இல்லாதப்ப என் உடம்பில் மட்டும் உனக்கு அனுமதி வேண்டுமா? தூர போ!”.

அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன் விளக்கை அணைத்து விட்டு “நான் உனக்கு பழக்கமாகனும் என்றால் இது நடக்கணும்” என்றவன் அவளின் எதிர்ப்பை மீறி தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விட்டான்.

அங்கு கண்ணீருடனும், வலியுடனும் அவளின் பெண்மை பறி போனது. மனமோ மாறன் மாறன் என்றே கதறிக் கொண்டிருந்தது.
 
  • Love
Reactions: Shanbagavalli

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டவன் ஒருவித பெருமிதத்ததுடன் “இனி, நீ முழுமையாக தர்ஷணா கார்த்திக்” என்றான்.

கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் வேகமாக எழுந்து “அது என்னைக்கும் நடக்காது. என் மனம் மாறனிடம் மட்டுமே இருக்கும்” என்று சொல்லிவிட்டு சென்று வாஷ்ரூமிற்குள் கதவடைத்துக் கொண்டாள்.

‘நீ மாறுவ! என் லவ் உன்னை மாற வைக்கும் தரு’ என்று பைத்தியக்காரன் போல சொல்லிக் கொண்டு படுத்திருந்தான்.

அவளோ வாஷ்ரூமிற்குள் நின்று கதறி தீர்த்து விட்டாள். ஒரு பாட்டம் அழுது முடித்துவிட்டு வெளியே வந்தவள் நேரே அவனிடம் சென்று “என்னால இனி அந்த ஆபிசிற்கு வர முடியாது. நான் ரிசைன் பண்ணிடுறேன்”.

ஒருபக்கம் திரும்பிப் படுத்து தலையை கைகளில் தாங்கிக் கொண்டு அவளைப் பார்த்தவன் “நோ தரு! நீ கண்டிப்பா நம்ம ஆபிசில் வேலை செய்யணும். நாம இரண்டு பேரும் ஒண்ணா போயிட்டு வருவோம்”.

அவன் பேச்சில் அவள் ரத்தம் அழுத்தம் எகிற “இன்னும் என்னடா வேணும் உனக்கு? அது தான் நீ நினைத்ததை எல்லாம் நடத்திகிட்ட இல்ல? என்னை எதுக்கு இப்படி டார்ச்சர் பண்ற?”

பட்டென்று எழுந்து அவளை தன் பிடிக்குள் வைத்துக் கொண்டவன் “வேலைக்குப் போறது தான் உன் கனவுன்னு அஞ்சனா சொன்னா. உன் கனவை நான் கெடுக்கலாமா? நீ கண்டிப்பா வேலைக்குப் போகணும் தரு”.

“என்னை விட்டுடு! நான் அங்கே வரல. என்னை எல்லோரும் அசிங்கமா பார்க்கிறாங்க” என்று முகத்தை மூடி அழுதாள்.

அவளை தன் பக்கம் திருப்பியவன் “நீ கார்த்திக் மனைவி உன்னை யார் அசிங்கமா பார்க்கிறாங்க என்று பார்க்கிறேன்” என்றவனை தள்ளிவிட்டு “போதும்! உன் அக்கறை எல்லாம். தெரியாம சொல்லிட்டேன் என்னை விட்டுடு. நான் வந்து தொலைக்கிறேன்” என்றாள்.

அவளை தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டவன் மெல்ல அவளின் முகத்தின் மீது விழுந்த முடியைத் தள்ளிவிட்டு “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தரு. உனக்கு என்னைப் பிடிக்கலேன்னா பரவாயில்லை. என்னால உன்னை வேற யாருக்கும் விட்டுத் தர முடியாது. பிகாஸ் ஐ லவ் யூ. என்னால தான் உன்னை நல்லா பார்த்துக்க முடியும்”.

முதன்முறையாக கார்த்திக்கின் மீது பயம் வர ஆரம்பித்தது. இவன் நல்ல மனநிலையில் தான் இருக்கிறானா? எந்த மனிதனால் இப்படி பேச முடியும்? இவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்கிற பயம் அவள் உள்மனதில் அழுத்தமாகப் பதிந்தது.