Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் 12 | SudhaRaviNovels

அத்தியாயம் 12

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
வைதேகி வீட்டினுள் சென்ற போது, ஹர்ஷிதா உள்ளே செல்லாமல் வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும்,

"வீட்டுக்குள்ள வா பேசணும்" என்று சொல்லி விட்டு வேகமாக வைதேகி நடந்து சென்று விட, அவள் அந்த வரவேற்பறையை விட்டு அசையவில்லை.

வைதேகி சொன்னதைக் காதில் வாங்காதது போல் மும்முரமாக செல்ஃபோனில் ஆரிஃப்க்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்தும் வீட்டினுள் வராமல் இருக்கும் மகளின் பிடிவாதத்தை கண்டவர், அவரே வரவேற்பறைக்கு வந்து விட, அவள் செல்ஃபோனை விட்டு நிமிர்ந்துப் பார்க்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். வைதேகி அருகில் நிற்பதை உணர்ந்தும்.

"என் பொண்ணோட விஷயம் வெளியில் தெரியக்கூடாது நினைச்சு தான் உள்ளே கூப்பிட்டேன்" என்று அருகில் அமர்ந்தார்.

"உனக்கு பிடித்ததை முதல் முதலா என்னால் நிறைவேற்ற முடியாது. ஜஸ்ட் டூ டேஸ் தானே.. " என்றார்.

"என் மனசை உன்கிட்ட தானே ஃபர்ஸ்ட் சொன்னேன். அப்பவே சொல்ல வேண்டியது தானே. இப்போ என்ன? ஹோ! ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு போனதால் பிடிக்கலயா? இல்லை அவர் நம்ம சாமியை கும்பிட மாட்டார்ன்னு பிடிக்கலயா?"

"ஏய் லூசு!!! நீ பண்ணின வேலைக்கு நான் தான் கோபப்படணும். இங்கே நீ இப்படி பண்ற. ஃபர்ஸ்ட் சாப்பிடு" என்றார் விரக்தியான முறுவலுடன்.

"ஆரிஃப் ஃபோன் வந்தால் தான் சாப்பிடுவேன்" இப்போது ஸ்விட்ச் ஆஃப் மோட் க்கு சென்றிருந்தது.

ஒரே நாளில் மாறும் விஷயமல்ல என்பதால் அமைதியாகவே இருந்தார். அதே நேரம் இந்நேரத்தில் தானும் கோபத்தை வெளிபடுத்துவது நல்லதல்ல என்று முயன்று கட்டுப்படுத்தி வெளிக்காட்டாமல் அவளிடம் மென்மையாக பேசினார்.

"செல்லம்மா! அம்மா மேல் நம்பிக்கை இருக்கு தானே"

"உனக்கு ஏன்ம்மா என் மேல் நம்பிக்கை இல்லாமல் போச்சு" என்று அழவும்,

"எல்லா ஃபார்மாலிட்டீஸ்ம் முடிச்சு வச்சிருக்கார். நீயும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல இருக்கன்னு சொல்லும் போது கொஞ்சம் கோபம் வந்துடுச்சு. சாரிடா. நீ சைன் பண்ணணும் நினைத்திருந்தால், ஒரு ஃபோன் பண்ணியாவது என்னிடம் சொல்லியிருப்பன்னு இப்போதான் யோசிக்கிறேன்" என்றதும், அவள் உதட்டில் முறுவல் தோன்றி மறைந்தது.

"சரி சாப்பிடு"

"ஃபோன் மட்டும் பேசிட்டு வரேன். உனக்கு ஆரிஃப் பிடிக்கலன்னா.. இது வேணாம்" என்று சொல்லும் போதே, குரல் உள்ளே சென்று விட, அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டார். பிரிவின் வலியை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர், செல்லும் வழிகளில் எல்லாம் பூக்கள் மட்டுமே தூவியிருக்காது என்று சொல்லி வளர்த்தவர் தான், ‘இதில் இருந்து மீண்டு வரும் மன வலிமை அவளுக்கு வேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.
 

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
அந்நேரத்தில் உள்ளே நுழைந்த ஆரிஃப், வரவேற்பறையில் இருந்த சார்ஜரில் தன் செல்ஃபோனை சொருகி விட்டு, பழைய நாளிதழ் ஒன்றை வைதேகியின் பார்வைக்காக டேபிளில் வைத்தான்.

பின் ஹர்ஷிதாவை பார்த்து முறைத்தப் படியே,

"ஃபோன் அட்டென்ட் பண்ணலன்னா, திரும்ப பண்ற வரைக்கும் வெயிட் பண்ணணும். அதை விட்டு திரும்ப திரும்ப அடிச்சி, என் ஃபோன் பேட்டரி அழுதுடுச்சு" என்றான்.

அருகில் இருந்த வைதேகியைப் பார்த்து,

"ஒரு நிமிஷம் உங்க ஃபோனை யூஸ் பண்ணிக்கிறேன்" என்று தகவலை தந்து விட்டு, அனுமதியை எதிர்பாராமல் வைதேகியின் அருகில் இருந்த காட்லஸை எடுத்து, நம்பரை அழுத்தியப்படி அவர்கள் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

அப்போது அந்த நம்பருக்கு ஏதோ அழைப்பு வர, வைதேகியிடன் நீட்டினான். வைதேகி நாளிதழில் இருந்த செய்தியை யோசனையுடன் பார்த்து விட்டு, அழைப்பை ஏற்று பேசினார்.

“நீ பண்ணின வேலை. எங்கே கொண்டு வந்து விட்டுருக்கு பார்” என்று மட்டும் சொல்லி விட்டு, பதட்டத்துடன் காரை எடுத்து வேகமாக கிளப்பினார்.

“என்னம்மா ஆச்சு” என்று பின்னாலேயே ஓடி வந்தவளையும், அவரை காண வந்திருந்த ஆரிஃபையும் கண்டுக் கொள்ளாமல் செல்ல, இரு கைகளையும் விரித்து என்னவென்பது போல் அவள் வினவ,

“தெரியலையே” என்று தோளை குலுக்கினான்.

“சரி பை நானும் போறேன்” என்று கிளம்ப முற்பட்டவளின் கரத்தைப் பற்றி நிறுத்தினான்.

“என்ன பிரச்சனை வந்தாலும் உன்னை விட மாட்டேன்” என்று அவள் கண்களை பார்த்து சொல்ல,

‘ரொமான்ஸ் பண்ற நேரத்தை பாரு’ என்று முணுமுணுத்தவள், வேறெதுவும் சொல்லாமல் பள்ளிக்கு விரைந்தாள்.

பள்ளியின் வாயிலை ஒட்டிய சுவரை, அரசாங்க இடத்தை ஆக்கிரமித்ததாக சொல்லி பிரத்யேக இயந்திரம் வைத்து இடித்துக் கொண்டிருந்த போது தான் வைதேகி அவ்விடத்தை அடைந்தார். பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தான் அவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் மதிக்காமல், தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

ஹர்ஷிதாவும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவள் கேட்டதற்கும், ‘சேட்டிலைட் மேப்’ என்று ஆதார பூர்வமாக சொன்னார்கள். இப்படி ஒரு சூழ்நிலையை ஆரிஃப் எதிர்பார்க்கவில்லை. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததற்கு,

“உங்ககிட்ட கேட்டு தானே ஆரம்பித்தோம்” என்றனர். ஹர்ஷிதாவின் முறைப்பை எதிர்கொள்ள முடியாமல், அவர்களிடமிருந்த ஃபைலை வாங்கினான். அதில் அவன் தான் சரிப்பார்த்து கையெழுத்திட்டுள்ளான்.

சற்று நேரத்திற்கு முன் தாசில்தார் பெரிய இடம் என்று அவனிடம் தகவல் தெரிவித்தப் போது கூட, தன்னுடைய சொந்த பிரச்சனைகளால் முழுதாக அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.

“நீங்க வேலையை ஆரம்பிக்க. நான் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று மட்டும் சொல்லியிருந்தான்.

ஆனால் இவர்களுக்கு சொந்தமான இடம் என்று இப்போது தான் தெரியும். ஹர்ஷிதாவாவது கோபப் பார்வை பார்த்து வைத்தாள். வைதேகி மறந்தும் கூட அவன் புறம் திரும்பவில்லை. ஹர்ஷிதா, இவனை முறைத்தப்படியே அலைபேசியை காதில் வைத்து யாருக்கோ அழைத்தாள். .

‘நான் எனது வேலையை தானே செய்கிறேன்’ என்பது போல் இருவரையும் பார்த்து விட்டு காரில் சென்று அமர்ந்தான். பின்னாலேயே ஓடி வந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர்,

“சார், நீங்க நேர்மையானவர் னு வெளி உலகத்துக்கு காட்ட தான் இப்படி பண்றதா சொல்றாங்க. ஏன்னா நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு கேள்விப்பட்டோம்” என்றுக் கேட்க,

“நீங்க வேறடா” என்று முணுமுணுத்து, அவனுக்கு பதில் சொல்லாமல், ஹர்ஷிதாவை பார்த்தப்படியே கார் வின்டோவை மேலே ஏற்றினான்.

இந்நிலையில் அவர்கள் மனம் எப்படி இருக்கும் என்று அவனுக்கும் புரிந்தது. சிறிது நேரம் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திய போது, யாரோ கார் கதவை தட்ட, கண் விழித்து பார்த்தான்.

எதிரே நின்றிருந்தவன், ஏதோ அவனிடம் பேச முயற்சிக்க, அவன் கண்கள் முதலில் தேடியது ஹர்ஷிதாவை தான். அவள் பார்வை வட்டத்திற்குள் அவள் இல்லை என்றதும், இவன் புறம் திரும்பி காரின் கதவை திறந்தான்.

“சார், நான் அவங்க லாயரோட ஜீனியர். எங்க லாயர் இந்த பேப்பர்ஸ் எல்லாம் உங்களிடம் தரச் சொன்னார். நாங்க லீகலா அப்ரோச் பண்ண போறோம்” என்றதும், அவன் கொடுத்த விவரங்கள் அடங்கிய ஃபைலை வாங்கிப் பார்த்தான்.

அதில் இவர்கள் இரு தலைமுறையினருக்கு முன்னரே முறையாக பட்டா வாங்கிய அனைத்து பத்திரங்களும் சரியாக இருக்க, முதன்முறையாக தன் வேலையில் சற்று சறுக்கி இருப்பது தெரிந்தது.

காலையில் வைதேகி சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான். ‘எல்லாம் உன்னால் தான்’ என்று ஹர்ஷிதாவை திட்டியது ஞாபகத்திற்கு வந்தது. ஏதோ அவள் காலையில் பதிவு திருமணத்திற்கு சம்மதிக்காதலால் நடந்ததாகவே அனைவரும் நினைப்பர். நெற்றியை இரு விரல்களால் தேய்த்தவன்,

“பட் என்னிடம் இருந்த டாக்குமென்ட்ஸ்ம் பக்காவா இருக்கே” என்றான் குழப்பத்துடன். யாரோ நன்றாகக் கோர்த்து விட்டது புரிந்தாலும் யார் என்று கண்டுக் கொள்ள முடியாமல் இருந்தவன், சிறிது நேரத்தில்,

“மினிஸ்டர்” என்று சொல்லி, அவர் தான் காலையில் நடந்த நிகழ்வுக்கு இப்படி செய்திருப்பார் என்று தாசில்தாரைக் கேட்காமலே அறிந்து கொண்டான்.

ஆனால் கையெழுத்து இட்டது சில மாதங்களுக்கு முன்னே என்பதை அந்த நேர அழுத்தத்தில் யோசிக்கவில்லை

அதற்குள் அவன் வீட்டில் இருந்து அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தவன், அடுத்த பிரச்சனையா என்று மனதினுள் நொந்துக் கொண்டான்.
 

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
இரவு வரை ஏதேதோ வேலைகள் இழுத்து கொள்ள, அவன் அன்னை ஆயிஷா வீடு வந்து சேரும் போது வாசலிலேயே அமர்ந்திருந்தார்.

‘இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்த ஷாக் ன்னா அவங்களும் என்ன பண்ணுவாங்க’ என்றெண்ணி அவரருகில் அமர்ந்து அவரின் கையை பற்றி,

“ம்மா. சாரிம்மா! எனக்கு ஹர்ஷியை பிடிச்சிருக்கு” எவ்வித சலனமுமில்லாமல், அவனைப் பார்த்தவர், நிமிர்ந்து அவன் தந்தையைப் பார்க்க,

“அஸ்ரத் அம்மா காலையில் உன் கடந்த காலத்தைப் பற்றி கவலையில்லைன்னு சொல்லியும், நீ ஒரு வார்த்தைக் கூட பதில் பேசாமல் இருந்தப்பவே நினைச்சேன்” என்றார் அவனின் தந்தை.

"அந்த அஸ்ரத் மேடம் கல்யாணத்தை நிறுத்த சொல்லி என்னிடம் கேட்டாங்க. அதுக்கு தான் ஃபர்ஸ்ட் ரெஜிஸ்டர் பண்ணணும் நினைச்சேன். மேடம்க்க்கு என் மேல் நம்பிக்கை இல்ல. அவங்களாவே கல்யாணத்தை நிறுத்துறேன்னு, எங்கேயோ இருந்து பழைய நியூஸ் பேப்பரை பிடிச்சிட்டு வந்து அவங்க வீட்ல சொல்லி பிரச்சனையை ஆரம்பிச்சிருக்காங்க... "

"அஸ்ரத் கல்யாணத்தை நிறுத்த சொன்னுச்சா. நீ ஏன் சொல்லவே இல்ல?" என்று இருவருமே அதிர்ந்தனர்.

"என் மேலேயே நம்பிக்கை இல்லாமல் எல்லோருக்கும் முன்னாடி அடிக்க வந்தீங்க. அவங்க வீட்டில் மட்டும் என்ன பண்ணிடுவாங்க?"

காலையில் ஆரிஃப் ஹர்ஷிதாவை பதிவு திருமணம் செய்ய வர சொன்ன அதே தருணத்தில் அஸ்ரத், எங்கேயோ கிடைத்த பழைய பேப்பரில், பயிற்சியின் போது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக போட்டு இருந்ததைக் காட்டி ஆரிஃப் வேண்டாம் என்று பிரச்சனையை அவள் வீட்டில் ஆரம்பித்தாள்.

பெரும்பாலான படிப்பாளிகளின் வழக்கம். தன் சுயநலத்திற்காகவும், தன் காரியத்தை சாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்வர். அதில் ஒன்று தான் இது. ஆரிஃப்க்கு அலைபேசி வழியாக தகவல் வந்ததும், அவன் தந்தையும் அஸ்ரத் வீட்டிற்கு வர, அவனும் விரைந்தான்.

அப்போது தான் அஸ்ரத் அன்னை,

“பழைய விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். இனி உங்கள் வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும்” என்றார். அனைவரும் அவனையே பார்க்க, அது பெயர் குழப்பத்தினால் வந்த செய்தி, ஓரிரு நாட்களிலே அந்த நிகழ்வை சுட்டி இன்னொரு செய்தியும் நாளிதழில் வந்தது, அதையெல்லாம் விளக்க விரும்பாதவன்,

“வேண்டாம் அப்பா! வாங்க” என்று அழைத்து சென்று விட்டான். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவருக்கு, அடுத்த அதிர்ச்சியாக மகன் இந்து பெண்ணைக் காதலிக்கிறான் என்ற செய்தி வர, காலையில் இருந்து வீடே களையில்லாமல் இருக்கிறது.

“சரி ஆரிஃப், இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது. அந்த பெண்ணை முஸ்லீமா மாற சொல்லு. நிக்காஹ் ஏற்பாடு பண்ணலாம்” என்றதும் மறுப்பாக தலையசைத்தவன்,

“அவ தினமும் கண்விழிப்பதே அவள் வீட்டருகில் இருக்கும் கோவில் கோபுரத்தில் தான். அவள் எப்படி சாமி கும்பிடுவான்னு தெரிந்த நானே எப்படிம்மா சொல்வேன்?” என்று நிறுத்தியவன்,

“மற்றப்படி ரொம்ப நல்ல பொண்ணும்மா” என்று மனமுருகி, அவரின் கையை எடுத்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு ஆரிஃப் கேட்க, அவரால் மகனுக்கு சாதகமாக பதில் சொல்லவும் முடியவில்லை. அதே நேரம் மகனின் ஆசையை கலைக்கவும் முடியவில்லை. எதுவும் சொல்லாமல் அமைதியாக எழுந்து சென்று விட்டார்.

இந்த வீட்டைப் போலவே கும்பகோணத்தில் ஹர்ஷிதா வீட்டிலும் சாப்பாடு மேஜையில் இருந்த உணவை உண்ண ஆளில்லாமல் இருவரும் அமைதியாகவே அமர்ந்து இருந்தனர். அவர்கள் எதிரே இருந்த டிவியில் ஏதோ செய்தி சேனலில், மறுநாள் புயல் பற்றி வானவியல் நிபுணர் பேசிக் கொண்டிருந்ததை, இருவரும் கவனிக்கவும் இல்லை. அதை நிறுத்த முயற்சிக்கவும் இல்லை.

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர புயலாக உருமாறி வலுப்பெற்றுள்ளது. இதனால் நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு, தீவிர சேதத்தை தவிர்க்க, ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடு குறித்த நிருபர்களின் கேள்விக்கு தலையசைத்து பதில் சொன்னவன், இந்நிலைமையிலும் அவனுடைய காதலைப் பற்றிக் கேள்விக் கேட்டவனை அழுத்தமான பார்வையால் பார்த்து விட்டு,

“பர்சனல் வேணாம்” என்றவன்,

“பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பல்கலைகழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழு, மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளன. அந்தந்த பகுதி தாசில்தார், வருவாய் அலுவலகர்கள் தலைமையில் குழுக்களும் தயார் நிலையில் இருக்கிறது. தன்னார்வ குழுவினரோடு இணைந்து செயல்பட மொபைல் ஆப் ஒன்றும் உள்ளது” என்று புயலின் முன்னெச்சரிக்கை நடவேடிக்கைகளை பட்டியலிட்டான்.

தொலைக்காட்சி திரையில் தெரிந்தவனை, எந்தவித சலனமுமின்றி பார்த்துக் கொண்டே இருந்தாள் ஹர்ஷிதா.

‘நாளை என்பது விடியாமலே இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று தான் தோன்றியது அவளுக்கு. அந்த அளவிற்கு நாளையை எதிர்கொள்ள தயங்கினாள். ஆனால் சீக்கிரமே விடிந்து அவள் பயத்தை மேலும் அதிகமாக்கியது. வழக்கமான கோவில் மணி சத்தத்தில் கண் விழித்தவள், வைதேகியை தேட அவரும் அதே இடத்தில் அமர்ந்து அதே கலக்கமான விழிகளுடன் மகளைப் பார்த்தார்.