Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 12 | SudhaRaviNovels

அத்தியாயம் - 12

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 12

அவளை வீட்டில் விட்டுவிட்டு காயத்ரியிடம் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவன் சென்றதும் மகளின் அருகே வந்தமர்ந்தவர் “என்ன பிரச்சனை உனக்கு? இப்போ எல்லாம் அடிக்கடி தலைவலி வருது? மாப்பிள்ளை உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறார்”.

அவரை நிமிர்ந்து பார்த்தவள் “இனிமே யாரும் என்னைப் பற்றி கவலைப்படாதீங்க. அவங்க அவங்க வாழ்க்கையைப் பாருங்க”.

மகளின் பேச்சில் கடுப்பானவர் “நீ சரியில்ல தர்ஷனா. உன்னை நான் சரியாக வளர்க்களையோன்னு தோணுது”.

“ஆமாம்ம்மா! நீங்க சரியா வளர்த்திருந்தா நான் இப்படி என்ன முடிவெடுக்கிறது என்று தெரியாம எல்லோரிடமும் அசிங்கப்பட்டு இருந்திருக்க மாட்டேன்”.

சட்டென்று எழுந்து கொண்டவர் அவளை முறைத்துவிட்டு “நல்லவொரு வாழ்க்கை கிடைச்சிருக்கு உனக்கு. அதை இப்படியே பேசிப்பேசியே கெடுத்துக்காதே. இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் தான் இருக்கு. நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க. முகத்தை இனி இப்படி வச்சுக்காதே. சந்தோஷமா இரு” என்றார்.

அன்னை சொல்லிச் சென்றதை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டவள் ‘இப்போ தான்ம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். காதலிச்சவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என் வீட்டிலேயே அநாதை மாதிரி இருக்க வேண்டிய சூழ்நிலை. இதுல இத்தனை நாள் பழகிய நட்புகளுக்கு நான் இப்படியொரு காரியத்தை செய்வேனா என்று கூட தோன்றாமல் என்னை கேவலமாக ஜட்ஜ் பண்ணும் நிலையில் இருக்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்-மா’ என்று சொல்லிக் கொண்டவளின் கண்களில் கண்ணீர்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு அலுவலகம் நரகத்தைக் காட்டியது. யாரும் அவளிடம் வந்து பேசவில்லை. மாறனைப் பற்றி அவர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியவில்லை. இதில் கார்த்திக் வேறு அவ்வபோது வந்து நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்டு சென்றது அனைவரின் பார்வையும் அவள் மீது காறி துப்பியது.

ஆர்த்தி அவள் அருகில் கூட வர முயலவில்லை. அவளைப் பார்த்தாலே அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். மொத்தத்தில் அலுவலகத்தில் தனிப்பட்டுப் போனாள். உதவி தேவைப்பட்டால் கூட யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை.

உணர்வுகள் மரத்த நிலைக்குச் சென்று விட்டிருந்தாள். எல்லாமே எல்லை மீறிச் சென்று விட்டது. இனி, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள்.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுப்பு எடுக்கும்படி சொல்லி விட்டார்கள். அது அவளுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்தது. தன் பங்கிற்கு அவள் யாருக்கும் பத்திரிக்கையோ அழைப்போ வைக்கவில்லை. அனைவரின் ஏளனப் பார்வையில் இருந்தும் தப்பித்தது போல் இருந்தது.

வீட்டில் சொந்தங்கள் மெல்ல வரத் தொடங்கியதால் அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை. மணப்பெண் என்று ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்று விடுவார்கள். அதனால் தனிமையில் மாறனை எண்ணி மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். இதுவரை அவனைப் பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மற்றவர்கள் பேசிக் கொண்டதை வைத்து தெரிந்து கொண்டிருந்தாள். மொத்தமாக நம்பிக்கை இழந்து போயிருந்தது.

இப்படியொரு சூழ்நிலை தன் வாழ்வில் வரும் என்று நினைக்கவே இல்லை. அன்று தனியே அழைத்துச் சென்ற கல்யாணராமன் பேசிய வார்த்தைகள் மனதில் அழியாமல் இருந்தது.

“மாப்பிள்ளை கிட்ட பேசினியாமே? அவர் சொன்னார்”.

அவரின் வார்த்தையில் சற்றே தயங்கி “என்னப்பா சொன்னார்?”

“அது தான் மாறனை லவ் பண்றேன் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னியாமே?”
அவர் சொன்ன பதிலில் ஆடிப் போய் “அப்பா!”...”உங்களுக்கு நா...நான்...மாறனை காதலிப்பது தெரியுமா?”

“தெரியுமே! அவன் தான் என்னிடம் வந்து பேசினானே”.

“என்னப்பா சொல்றீங்க? தெரிஞ்சும் எதுக்கு?”


“என் மகளை யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு நான் தான் முடிவெடுக்கணும்”.
 
Last edited:

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
“அப்பா! உங்க மகளுக்கு என்று விருப்பம் இருக்கு. அது மாறன் மேல தான் இருக்கு”.

“நீ ஆசைப்படுவதை எல்லாம் நான் செய்ய முடியாது. எனக்கு தெரியும் உனக்கு என்ன செய்யணும்னு”.

“ஏன் அப்பா? மாறன் ரொம்ப நல்லவர்-பா. அவங்க குடும்பமும் நல்ல மாதிரி. அவரை ஏன்-பா வேண்டாம்னு சொல்றீங்க?”

நடப்பதை நிறுத்திவிட்டு நின்றவர் “உனக்கு கார்த்திக் தான் மாப்பிள்ளை. அவரை தான் நீ கல்யாணம் செஞ்சுக்கணும். மீறி வேற எதுவும் செய்யணும்னு நினைச்சா மொத்த குடும்பத்துக்கும் விஷத்தை கொடுத்திட்டு நானும் செத்திடுவேன்” என்றார் மிரட்டலாக.

அவளோ அவரின் பேச்சில் அதிர்ந்தவள் பாய்ந்து கைகளைப் பற்றிக் கொண்டு “ப்பா! ப்ளீஸ்! எனக்கு மாறன் வேணும்-பா” என்று நடுத்தெருவில் நின்று அழ ஆரம்பித்தாள்.

அவளையே வெறித்துப் பார்த்தவர் “ஒரு அப்பா கிட்ட இப்படி வந்து கெஞ்சுறேன்னா அவன் கூட படுத்திட்டியா?” என்று கேட்டு விட்டார்.

அவரின் கேள்வி அவளுக்கு அருவெறுப்பைத் தர, சட்டென்று கைகளை உதறியவள் “அப்பா! ஏன் இவ்வளவு அசிங்கமா பேசுறீங்க?”

அவரோ அவளின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் “அப்படியே இருந்தாலும் கார்த்திக் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கார்” என்றாரே பார்க்கலாம்.

உடல் அருவெருத்துப் போனது. மகளின் திருமணத்தைப் பற்றி வரப் போகும் மருமகனிடம் பேசும் பேச்சா இது. தன் தந்தை இத்தனை மோசமானவரா? தன் மகளை அடுத்தவன் இப்படி பேசினால் வெட்டிப் போடுபவர்களைத் தான் கேட்டிருக்கிறாள். ஆனால் இவரோ தன்னிடமே இத்தனை கேவலமானதொரு கேள்வியை கேட்டாரென்றால் இவர் என்ன மாதிரியான மனிதர்.

அவரை கேவலமாகப் பார்த்துவிட்டு “இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லையா?”

“இப்படியொரு ஜென்மமா பிறந்ததுக்கு நீ தான் வெட்கப்படனும். இதோ பார்! நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அது இதுன்னு சொன்ன அப்புறம் நடக்கிறதே வேற சொல்லிட்டேன்”.

“நான் மாறனைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் அப்பா” என்றாள் அழுத்தமாக.

அவளை கோபமாகப் பார்த்தவர் “அப்போ அஞ்சனாவை கார்த்திக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்”.

“அப்பா! அவ படிக்கிற பொண்ணுப்பா” என்று பதறி விட்டாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒன்னு நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. இல்லேன்னா அஞ்சனா கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கனும். இது ரெண்டுல ஏதாவது ஒன்று நடந்தே ஆகணும்”.

“அப்படி என்னப்பா அந்த கார்த்திக்கை மாப்பிள்ளையாக கொண்டு வருவதில் ஆர்வம்?”
“ஒரு ஆம்பளை எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கான்”.

இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகையோடு “உங்களை மாதிரி” என்று சொல்லிவிட்டு வீட்டுப் பக்கம் திரும்பி நடக்கக் ஆரம்பித்தாள்.

அவளின் மனம் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றியாக வேண்டும் என்று பயப்பட ஆரம்பித்தது. இங்கு நாம் ஏதோ ஒரு வகையில் அடுத்தவரின் நலனுக்காக கைகள் கட்டப்பட்டு சூழ்நிலைக் கைதியாகி தன்னலத்தை இழக்கிறோம்.

கல்யாணராமன் நிச்சயம் சொன்னதை செய்வார். அவருக்கு தான் நினைத்தது நடக்க வேண்டும். அப்படி அவர் முடிவெடுத்தால் அஞ்சனாவின் முடிவு என்னவாக இருக்கும்? வீட்டை விட்டு சென்றுவிட முடிவெடுப்பாளா? அப்படி சென்றால் அது அவளுக்கு பாதுகாப்பானது இல்லை.

அவளின் எதிர்காலம் என்னாவது? என்று பலவாறு யோசித்து நடந்து கொண்டிருந்தவள் கண்களில் வெறுமையுடன் “கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள்.

அவள் சொன்ன பதிலைக் கேட்டு அவர் சந்தோஷம் எல்லாம் பட்டுவிடவில்லை.

“ம்ம்...மறுபடியும் மாப்பிள்ளை கிட்ட எதுவும் பேச முயற்சித்தேன்னு தெரிஞ்சது அப்புறம் நான் சொன்னது தான் நடக்கும். அதை மனசில பதிய வச்சுகிட்டு இரு” என்று சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தார்.

செல்பவரின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் வேதனை அடைந்தது. சிறு வயதில் இருந்து அப்பா என்ற ஒரு மனிதரின் அன்பிற்காக எத்தனை ஏங்கி இருக்கிறேன். பள்ளித் தோழிகளின் தந்தையரைப் பார்க்கும் போதெல்லாம் தன்னை அறியாமல் கண்களில் ஏக்கம் படர்ந்திருக்கும். வளர்ந்த பின்பு தான் அது நிறைவேறாத ஆசை என்பது புரிந்து போனது.

மண வாழ்வில் அமையப் போகும் புதிய சொந்தமான கணவனாவது அன்பைத் தருவானா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்கு மாறனைப் பார்த்ததும் நம்பிக்கைப் பிறந்தது. ஆனால் இதோ எதிர்காலத்தையே மொத்தமாக குழித்தோண்டி புதைத்துவிட்டு நெஞ்சை நிமிர்த்திச் செல்கிறார்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அன்றைய நினைவுகளில் படுத்திருந்தவளை யாரோ அழைக்க அதிலிருந்து விடுபட்டு எழுந்தவளின் அருகே வந்து நின்றாள் அஞ்சனா.

“என்ன அஞ்சனா? யார் கூப்பிட்டாங்க?”

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் “அத்தை தான் கூப்பிட்டாங்க அக்கா” என்றவள் சட்டென்று அவளை அணைத்து “சாரி அக்கா! நான் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடு.

எனக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் அதை நீ கெடுத்துக்கப் போறியோன்னு நினைச்சுப் பேசிட்டேன்” என்றாள் கண்ணீருடன்.

அவளுக்குமே தங்கையிடம் கடிந்து பேசியதில் மனம் வலித்துக் கொண்டு தான் இருந்தது. அவளின் தலையை வருடிக் கொடுத்து “நானும் சாரி சொல்றேன்-டா. என்னவோ டென்ஷன் அதை எல்லாம் உன்கிட்ட காட்டிட்டேன். நான் இல்லேன்னாலும் நீ நல்லாப் படிச்சு வேலைக்குப் போய் உன் வாழ்கையை நீயே தேர்ந்தெடுத்துக்கோ. உன்னுடைய எதிர்காலத்தை யார் கையிலும் கொடுக்காதே”.

அவள் அப்படி சொன்னதுமே “நீ இல்லாம நான் இங்கே எப்படி இருக்கப் போறேன்” என்றாள் அழுகையுடன்.

“அம்மாவுக்கு நீ மட்டும் தான்-டா ஆதரவு. அவங்களை நல்லா பார்த்துக்கோ”.

“எனக்கு நீ தான் எல்லாமே! கல்யாணம் முடிஞ்சதும் நீ அத்தானோட அங்கே போயிடுவ இல்ல” என்று கேட்டு விசும்ப ஆரம்பித்தாள்.

அவர்கள் அதுவரை பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் அறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த காயத்ரியின் கண்களும் கலங்கி இருந்தது. பெரியவள் இந்த திருமணப் பேச்சிற்கு பின் அதிக மன அழுத்தத்தில் இருந்ததை எண்ணி உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தார். அதன் காரணமாக அக்கா, தங்கை இருவருக்கும் இடையே சாதரண பேச்சு வார்த்தை கூட நின்றிருந்தது. அதில் பெரிதும் கவலை அடைந்திருந்தார். இப்போது தான் அவர்கள் இயல்பாகப் பேசிக் கொள்வதைக் கேட்டு நிம்மதி அடைந்தார்.

அதன்பின்னர் நாட்கள் மிக வேகமாக ஓடியது. கார்த்திக் ஆசையுடன் எதிர்பார்த்த அந்த நாளும் விடிந்தது. ஆம்! இன்று தான் கார்த்திக் தர்ஷணாவின் திருமணம்.

தன் மனக்குமுறல்களை எல்லாம் இதயத்திற்கு பூட்டி வைத்துவிட்டு வருவதை எதிர்கொள்ள தயாராகி விட்டாள். திருமணத்திற்கு நடுவில் இருந்த நாட்களில் அவளின் மனம் இறுகி கற்பாறையாகி இருந்தது. மாறனைப் பற்றி அறிந்து கொள்ள பழைய நட்புக்களுக்குத் தொடர்பு கொண்ட போது அவர்கள் யாரும் இவளிடம் பேசத் தயாராக இல்லை. வேறு யாரிடமும் கேட்டறிந்து கொள்ள முடியவில்லை.

இந்த மூன்று வருடப் பழக்கத்தில் தன்னை அவர்கள் இந்த அளவிற்கு தான் புரிந்து கொண்டு இருக்கிறார்களா என்று நொந்து போனாள். இந்த ஆர்த்தி எத்தனைப் பேச்சு பேசிவிட்டாள். நட்பு, உறவுகள் இனி யாரையும் அவள் நம்பத் தயாரில்லை.

கல்யாணராமன் தன் கடமையை கழிக்க எண்ணி சுமாராக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார். அதில் கார்த்திக்கின் பெற்றவர்களுக்கும் அவன் சகோதரிக்கும் மனக்குறை தான்.

“என்னம்மா கல்யாண ஏற்பாடெல்லாம் நல்லா பண்ணி இருக்கலாமே. நம்ம ஆளுங்க எல்லாம் பேசுறாங்க” என்றபடி வந்து நின்றாள் சுகன்யா.

“ஆமா-டி! எல்லோரும் என்கிட்டேயும் வந்து சொல்றாங்க. ரூமெல்லாம் சரியாவே இல்லைன்னு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல” என்று பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ரஞ்சித் சுகன்யாவின் கணவன் “அத்தை! பொண்ணு வீட்டு சைட்ல அவங்க போட்ட ரூமெல்லாம் நம்ம ஆட்களுக்கு ஒத்து வராது. நானும் மாமாவுமா வேற ரூமுக்கு ஏற்பாடு பண்ணிட்டோம்” என்றான்.

“நாம தான் போட்டுக் கொடுத்தோம்னு மட்டும் சொல்லிடாதீங்க மாப்பிள்ளை. அப்புறம் தர்ஷ்ணா வந்தா அவ கிட்டேயே நம்ம ஆட்கள் பேசிடுவாங்க”.

“இல்ல அத்தை. பொண்ணு வீட்டுக்காரங்க தான் வேற ரூம் கொடுத்திருக்காங்கன்னு சொல்லிட்டோம்”.

சுகன்யாவும் “ஆமாம் அவ வந்ததுமே தேவையில்லாத விமர்சனம் அவள் குடும்பத்து மேல விழும். முதல் அபிப்பிராயமே நல்லதா இருக்கட்டும். நம்ம சைட்ல எந்த பிரச்சனை வந்தாலும் நாமலே பார்த்துக்கலாம்” என்றாள்.

அந்தப் பக்கம் அவர்களுக்கு பூ கொடுக்க வந்த அஞ்சனா காதில் இதெல்லாம் விழுந்திருக்க, அவளின் மனதில் கார்த்திக்கின் குடும்பம் உயர்ந்து கொண்டே போனது.

கார்த்திக் தன் நட்புக்களுடன் அமர்ந்திருந்தான். அவன் தன்னுடயவளை கரம் பிடிக்கப் போகும் மகிழ்வுடன் அமர்ந்திருந்தான். நல்ல நேரம் நெருங்க அவனை மண மேடைக்கு அழைத்து விட்டனர்.

சற்று நேரத்தில் தர்ஷணா வந்து அவன் அருகில் அமரவும், தன் கனவு நிஜமாகிக் கொண்டிருப்பதை எண்ணி கைகளை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அவளின் கண்களோ கலங்கி இருக்க, மனம் முழுவதும் ‘என்னை யார் பக்கத்திலோ அமர வைத்து விட்டீர்களே மாறன்’ என்று கதறிக் கொண்டிருந்தது.

ஐயர் மந்திரங்களை சொல்லி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, அதை பவ்யமாக வாங்கி அவளின் கழுத்தில் பூட்டினான்.

அனைவரும் ஆசிர்வதிக்க அவள் திருமதி. தர்ஷணா கார்த்திக் ஆனாள்.