Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 12 | SudhaRaviNovels

அத்தியாயம் - 12

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
அத்தியாயம் – 12

சுமார் பத்து நாட்கள் கடந்திருந்தது. விக்ரம் மெல்ல எழுந்து நடக்க தொடங்கி இருந்தான். நடுவில் ஒரு தரம் மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தார்கள். அப்போது ரம்யாவை பார்த்த போது எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்து விட்டான். செண்பகம் தான் ஏன் பேசவில்லை என்று கேட்டே ஓய்ந்து போனார்.

அன்று அவரிடம் அவளை பற்றி பேசிய பிறகு அவன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனது எண்ணம் எப்படி போகிறது என்று புரியாமல் செண்பகம் தவித்து போயிருந்தார். தேனுவிடம் புலம்பி தள்ளினார்.

“ரொம்ப அமைதியா இருக்கான் தேனு. இப்படியே போனா எனக்கு பைத்தியம் தான் பிடிக்க போகுது”.

“விடுங்க ஆண்ட்டி! கால் சரியாகட்டும்னு வெயிட் பண்றாங்க போல”.

“இவன் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டான். என் மனசு கிடந்தது அடிச்சுக்குது. இவன் எப்போ பேசி அவ எப்போ ஒத்துகிட்டு அறுபதாம் கல்யாணம் தான் பண்ணுவான் போல”.

“ஆண்ட்டி நான் வேணா அஜய் கிட்ட சொல்லி ரம்யாவை பற்றி விசாரிக்க சொல்லவா?”

அவளை யோசனையுடன் பார்த்தவர் “உன் புருஷன் சொதப்பாம விசாரிப்பானா?”

“சொதப்பாம இருந்தா அது அஜய் இல்ல ஆண்ட்டி. ஆனாலும் நமக்கு வேண்டிய விவரம் வந்துடும். என்ன சொல்றீங்க?”

“எனக்கு விக்கிக்கு முன்னே நமக்கு அவளை பற்றி தெரிஞ்சிருக்கணும்”.

அவரை கூர்ந்து பார்த்தவள் “அப்போ அவளுடைய நிலைமை வேறு விதமா இருந்தா வேண்டாம்னு சொல்ல தானே இந்த ஏற்பாடு?”

சட்டென்று அதிர்ந்து “என்னை பார்த்து இப்படி கேட்கலாமா? நான் எதுக்கு அவனுக்கு முன்னாடி விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்னா சில விஷயங்களை முடிவெடுக்க தான். எப்போ என் மகன் மனதில் அவளுக்கு என்று ஒரு இடம் கொடுத்துட்டானோ அதை நான் மதிக்க தான் செய்வேன் தேனு”.

மெல்லிய புன்னகை இதழில் எழ “சும்மா கேட்டு பார்த்தேன். அஜய் கிட்ட பேசிட்டு சொல்றேன் ஆண்ட்டி”.

“இல்ல இப்போவே போனை போடு. என் பையன் வெளில கிளம்பிட்டான்னா அவனை நிறுத்த முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் விசாரிச்சு சொல்லணும்”.

அதன்பிறகு தேனு அவனை அழைத்து ரம்யாவை பற்றி விசாரித்து சொல்லுமாறு கூற, அவன் சற்றே தடுமாறினான். விக்ரமே அனைத்தையும் விசாரித்து சொல்லட்டுமே என்று நினைத்தான். ஆனால் செண்பகம் விடவில்லை. நீ விசாரித்து சொல்ல வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்.

இதன் நடுவே ரம்யா ரத்னா சொன்ன மருத்துவமனைக்கு மாறி விட்டாள். ஹாஸ்டலையும் மாற்றிக் கொண்டு அந்த கிராமத்திற்கே சென்று விட்டாள். விக்ரம் அவளை எப்படி அணுகுவது என்கிற யோசனையிலேயே இருந்தான். அஜய்யோ அவளை பற்றிய விவரங்களை அறிய முயன்று தோல்வி தான் கிட்டியது. தந்தையின் பெயர் மட்டும் தான் அறிந்து கொள்ள முடிந்தது. அதோடு அவள் மருத்துவமனையை விட்டு சென்று விட்டாள் என்கிற செய்தியை மட்டும் அறிந்து கொண்டான்.

அதை கேட்டு தேனுவிற்கும், செண்பகத்திற்கும் அதிர்ச்சியாக போய் விட்டது.

“இப்போ என்ன பண்றது தேனு? இந்த பய வேற அவ நினைப்பாவே இருக்கான். நாளைக்கு டாக்டர் கிட்ட காண்பிக்க ஆஸ்பத்திரிக்கு போகணும். அங்கே போய் இவள் இல்லேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்?” என்றார் கவலையாக.

தேனுவிற்குமே யோசனையாக தான் இருந்தது. ஆனால் சூழ்நிலை மாறும் போது ஏற்றுக் கொள்வது தானே நல்லது.

“விடுங்க ஆண்ட்டி! எல்லாம் நன்மைக்கே என்று நினைப்போம். என்ன ஒரு பத்து நாள் தேடி பார்த்திட்டு விட்டுடுவாங்க. அவங்களுக்கு என்று பிறந்த பொண்ணு எங்கே இருந்தாலும் தேடி வருவா”.

மேலே கையை காண்பித்து “தூரத்துல கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சுது. இப்போ அதுவும் மறைஞ்சு போச்சு. இவன் ஜாதகத்துல கல்யாண திசை இல்லவே இல்ல போல. எந்த நேரத்துல பொறந்தானோ இவன் பார்த்ததுமே எல்லாம் பிச்சுகிட்டு போயிடுது”.

“ஆண்ட்டி!” என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்டவள் “விக்கியை சாதரணமா நினைக்காதீங்க. நல்லதே நடக்கும்”.

“நீ எப்போ இந்த மாதிரி அருள்வாக்கு எல்லாம் சொல்ல ஆரம்பிச்ச் தேனு?” என்றார் கிண்டலாக.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
அவரை முறைத்து விட்டு “நேரம்! சரி நான் கிளம்புறேன். நாளைக்கு போயிட்டு வந்து என்ன ரியாக்ஷன் என்று சொல்லுங்க” என்றாள்.

“ஏண்டியம்மா நீயும் கூட வந்து பார்க்கிறது? வாழ்வே மாயம்னு பாட போறானா இல்ல அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளேன்னு பாட போறானான்னு தான் தெரியல”.

அவர் முகவாயில் லேசாக இடித்து “குசும்பு!” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

தேனுவிடம் சொல்லி விட்டாலும் அவரின் மனது மகனை நினைத்து வருந்தி கொண்டு தான் இருந்தது. நாளை ரம்யா அங்கு வேலையை விட்டு போய் விட்டாள் என்று தெரிந்தால் எப்படி உணருவானோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை கிளம்பி இருவருமாக மருத்துவமனைக்கு வந்தனர். ரிஷப்ஷனில் கேட்டுக் கொண்டு டாக்டரின் அறை அருகே கிடந்த நாற்காலியில் காத்திருக்க ஆரம்பித்தனர். ரத்னா வரும் முன்னே ஒரு நர்ஸ் வந்து கதவை திறந்து அறையை தயார் செய்து விட்டு சென்றார். அதை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனை செண்பகமும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் ரத்னா வந்துவிட, அவருடன் புதிய நர்ஸ் ஒருவர் உள்ளே சென்றார். அதை கண்டதும் அவனது நெற்றி லேசாக சுருங்கி விரிந்தது. அதன் பிறகு இயல்பாகவே இருந்தான். இவரோ ‘என்ன நினைக்கிறான்னு தெரியலையே? சரியான கல்லுளிமங்கன். முகத்துல எதையாவது காண்பிக்கிறானா? என்று உள்ளுக்குள் கடுப்படித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் முறை வந்ததும் இருவரும் உள்ளே நுழைந்தனர். புதிய நர்சின் உதவியுடன் அவனை பரிசோதித்து முடித்து விட்டு “எல்லாம் நார்மல் மிஸ்டர் விக்ரம். இனி நீங்க சாதரணமா நடக்கலாம். ஆனா உடனடியாக அதிகம் ஸ்ட்ரெயின் பண்ண கூடாது. ஒரு ஒரு மாதம் நான் சொன்னவற்றை எல்லாம் பாலோ பண்ணுங்க. அதன் பிறகு எல்லாம் ஓகே தான்” என்றார்.

அவரிடம் எதுவும் கேட்காமல் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தவன் ஆட்டோவை நோக்கி செல்ல, அவன் பின்னே அவனை மாதிரியே காலை விந்தி விந்தி சென்றவர் “என்ன நீ எதுவுமே கேட்கல?” என்றார்.

நடையை நிறுத்தி விட்டு “எல்லாம் கேட்டேனே. டாக்டர் தான் சொன்னாங்களே” என்றான்.

“ம்ச்..அதில்லை-டா! நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற?”

“வேற என்ன கேட்க சொல்ற?”

“மறந்துட்டியா இல்ல மறந்த மாதிரி நடிக்கிறியா?”

“மா! உங்களுக்கு என்ன பிரச்சனை? ஆட்டோ வெயிட்டிங்ல இருக்கு. எனக்கும் அதிக நேரம் நின்னா கால் வலிக்கும். எதை கேட்கிறதா இருந்தாலும் ஆட்டோவில் போகும் போது கேளுங்க”.

அவனை முறைத்து விட்டு ‘எல்லாம் என் நேரம். இவன் காதல் தோல்வியில் இருப்பான்னு நினைச்சு கேட்டா நாய் மாதிரி குலைக்குது’ என்று சொல்லிக் கொண்டே வேகம் வேகமாக ஆட்டோவை நோக்கி சென்றார்.

அவரின் பின்னோடு மெதுவே சென்றவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

ஆட்டோவில் ஏறியதும் அவன் பக்கமே திரும்பாது அமர்ந்து கொண்டார். அவனோ அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

சற்று நேரம் பொறுத்தவர் “ஏண்டா என்னையே பார்த்துகிட்டு இருக்க?’ என்று கடுப்படித்தார்.

“இல்ல என்னமோ கேட்டீங்களே? இப்போ மறந்துட்டீங்களே?”

“ம்ம்...ஒண்ணுமில்ல!”

“சும்மா கேளுங்க”.

அவன் அப்படி சொன்னதும் அவசரமாக திரும்பி அமர்ந்தவர் “நீ ரம்யாவை தேடவே இல்லையே?”

“ஏன் தேடனும்?”

“என்னடா இப்படி கேட்கிற?”

“நீங்களே சொல்லுங்க ஏன் தேடனும்?”

கண்களை விரித்து அவனை பார்த்தவர் “அந்த பெண்ணை லவ் பண்றேன் அப்படி இப்படின்னு சொன்ன? இப்போ இப்படி கேட்கிற?”

“ஆமாம்! இப்பவும் சொல்றேன் லவ் தான் பண்றேன்”.

“அப்போ ஆஸ்பத்திரியில் அவளை ஏன் தேடல”.

“எனக்கு தான் தெரியுமே. அவ அங்கே இல்லேன்னு”.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனவர் “என்னடா சொல்ற?”

தலையை மெல்ல அசைத்து “தெரியும்மா! அவ அங்கே இல்லென்னும் தெரியும். எங்கே இருக்கான்னும் தெரியும்”.

“எப்புட்ரா?”

இப்போது நன்றாகவே சிரித்தவன் “நீங்க எதையும் நினைத்து கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்”.

“வீட்டுல தானே-டா இருந்த? அப்புறம் எப்படி-டா இதெல்லாம் கண்டுபிடிச்ச?”

“மா! நான் அவளை விரும்புறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அப்போ என்ன செய்யணும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா? அது தான் ஆரம்பிச்சுட்டேன்”.
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
144
81
28
“அது சரி! இதெல்லாம் கொஞ்சம் உன் பிரெண்ட்டுக்கும் சொல்லி குடுறா. சரியான கிராக்கா இருக்கான். விசாரிச்சுட்டு வாடான்னா அப்பா பேர் ரெங்கநாதன் அப்படின்னு வந்து சொல்றான்-டா. அது தான் நமக்கே தெரியுமே” என்று தன்னை மறந்து விசாரிக்க சொன்னதை அவனிடம் உளறிக் கொண்டிருந்தார்.

அவரை முறைத்தவர் “அப்போ இந்த வேலை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிருக்கீங்க?” என்றான்.

“இல்லடா-இல்லடா! அதுவொரு ஆர்வக்கோளாறுல செஞ்சுட்டேன்” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“சரி உங்களை வீட்டில் இறக்கி விட்டுட்டு எனக்கொரு வேலை இருக்கு பார்த்திட்டு வரேன்”.

கண்களை சிமிட்டி “அவளை பார்க்க போறியா-டா?” என்றார்.

அதுவரை அமைதியாக வண்டியை ஒட்டிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் “சார் இவங்க நிஜமாவே உங்க அம்மா தானா?” என்றான் சிரிப்புடன்.

அதை கேட்டு விக்ரமிற்கு சிரிப்பு வர, செண்பகமோ “இல்லப்பா தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தேன் இந்த பயலை” என்றார்.

சிரித்தபடியே அவரை வீட்டில் இறக்கி விட்டு தனது அலுவலகத்திற்கு சென்றவன் அங்கு சில வேலைகளை முடித்துக் கொண்டு அவள் வேலை செய்யும் புதிய ஆஸ்பத்திரிக்கு சென்று இறங்கினான்.

சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த கிராமத்திற்கு வந்திருந்தான். காலை லேசாக சாய்த்து சாய்த்து நடந்து வந்தவன் அங்கே வெளியில் அமர்ந்திருந்த நர்ஸ் அம்மாவிடம் ரம்யாவை பார்க்க வேண்டும் என்று கூறினான். அவனை மேலும் கீழும் பார்த்தவர் “ஏம்ப்பா அந்த பெண்ணே நாலு நாள் முன்னாடி தான் வேலைல சேர்ந்துச்சு. அதுக்குள்ள இங்கே தேடி வந்திருக்க? யாரு நீ?” என்றார்.

“அவங்க சொந்தக்காரன் தான். ஒரு வகையில் மாமா பையன்” என்றான்.

“ஒ..” என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்த நாற்காலியை காண்பித்து “உட்காருப்பா வர சொல்றேன்” என்று சொல்லி சென்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளிக்கு கட்டு போட்டுக் கொண்டிருந்தவளை கலைத்தது அந்த நர்ஸ் அம்மாவின் குரல்.

“இந்தா பெண்ணே ரம்யா உன்னை பார்க்க உங்க மாமா பையன் வந்திருக்கார். வெளியில காத்துகிட்டு இருக்கார். போய் பாரு” என்றார்.

கட்டு கட்டிக் கொண்டிருந்த கை அப்படியே நிற்க, ‘மாமா பையனா?’ என்று அதிர்ந்து ‘இங்கே யாரும் இல்ல வர மாட்டாங்கன்னு அப்பா சொன்னாங்களே’ என்று எண்ணிக் கொண்டே செய்து கொண்டிருந்த பணியை முடித்துக் கொண்டு நெஞ்சம் தடதடக்க மெதுவே வெளியில் வந்தாள்.

அங்கே அமர்ந்திருந்தவனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவன் எங்கே இங்கே வந்தான் என்கிற யோசனையுடன் சுற்றிமுற்றி பார்த்து விட்டு வேறு யாரும் இருக்குமோ என்று யோசனையுடன் நின்றாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல எழுந்து அவள் அருகே சென்றான்.

தன்னருகே வந்தவனை பார்த்ததும் அதுவரை இருந்த பதட்டம் நீங்கி “யார் நீங்க?” என்றாள் கோபமாக.

“உங்க மாமா பையன். என்னை கண்டு அவ்வளவு பயமா? சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டீங்க? கல்யாணம் செஞ்சுக்க தானே கேட்டேன். அதுவொரு தப்பாங்க?” என்றான் சிறு சிரிப்புடன்.

அவனது பேச்சில் ரத்த அழுத்தம் எகிற பல்லைக் கடித்துக் கொண்டு “ஹலோ! முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க. ஒரு தடவை சொன்னா புரியாதா? நான் திருமணம் ஆனவள். என் புருஷன் பெயர் ரத்தன் ஷர்மா” என்றாள் அழுத்தமாக.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன் “தெரியும்! அப்பா பெயர் ரெங்கநாதன். ஒரு தங்கச்சி மகாலட்சுமி தம்பி சரவணன். உன் கணவர் இப்போ உயிரோட இல்லை”.

அவன் சொல்லியவற்றை கேட்டு உடல் நடுக்கமெடுக்க கண்கள் கலங்கி விட “ப்ளீஸ்! போயிடுங்க! வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்திச்சுட்டேன். தயவு செய்து போயிடுங்க” என்றாள்.

அவளது கரங்களை பற்றி அழுத்தம் கொடுத்தவன் “இப்போ போறேன். நீ என் வாழ்க்கையில் வரும் வரை எங்கே போனாலும் வருவேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தான்.

அவனது செய்கை மற்றும் பேச்சு உச்சபட்ச அதிர்வை கொடுக்க, அப்படியே திகைத்து நின்றாள். மனமோ இதென்ன புது பிரச்சனை? ஏன் அனைத்தும் என்னை சுற்றியே வருகிறது என்றே தோன்றியது. அதோடு ஓடிச் சென்று ‘டேய்! என்னை விட்டுடு. என்ன பாவம் செய்தேனோ ஓடிக் கொண்டே இருக்கேன். இப்போ இன்னொரு ஏழரையை இழுத்து விடாதேன்னு’ அவன் சட்டையை பிடித்து கத்த வேண்டும் போல துடித்தது.

சற்று தூரம் சென்றவனோ நின்று நிதானமாக பார்த்து “உனக்கு ஏதாவது என்னிடம் சொல்லனுமா?” என்று கேட்டான்.

தலையசைக்க கூட மறந்து நின்றாள்.

அவளையே பார்த்திருந்தவன் “உன் மனதில் உள்ளவற்றை எல்லாம் என்னிடம் சொன்னா நிச்சயமா அதற்க்கான தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு. உனக்கா தோன்றும் போது சொல்லு. அதுவரை தைரியமா இரு” என்று சொல்லிவிட்டு சென்றான்.

“நில்லுங்க! நான் சார் கிட்ட சொல்லிட்டு வரேன். நான் சொன்ன பிறகாவது உங்க வாழ்க்கையை பாருங்க” என்று சொல்லியபடி கண்களை துடைத்துக் கொண்டு அனுமதி கேட்க உள்ளே சென்றாள்.
 
  • Like
Reactions: Kothai suresh
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!