Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 11 | SudhaRaviNovels

அத்தியாயம் - 11

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 11

அவள் நடந்து கொண்ட விதத்தை அன்னை வந்ததும் அவரிடம் பகிர்ந்து கொண்டாள் அஞ்சனா. காயத்ரிக்கு இப்போது பெரியவளை எண்ணி உள்ளுக்குள் மிகுந்த கவலையாகிப் போயிற்று.

அவள் ஏதோவொரு அழுத்தத்தில் அப்படி செய்கிறாள் என்று எண்ணி இருக்க, ஒவ்வொரு நாளும் அவளின் போக்கு மேலும் அதிகமாக சென்று கொண்டிருப்பதை எண்ணி பயந்து போனார்.

“யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குமாம். அப்படி இருக்கு உங்க அக்கா பண்றது. கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேன்னு இருக்காளே!”.

“அவ சரியில்லம்மா! அக்காவுக்குள்ள இப்படியொரு குணம் இருக்கும்னு நானும் நினைக்கலம்மா. இப்போ எனக்கு அத்தானை நினைத்து தான் கவலையாக இருக்கு. அந்த மனுஷன் இவளுக்கு தலைவலின்னு சொன்னவுடனே பதறிப் போய் போன் பண்றார்”.

“நேத்து நான் அவ்வளவு பேசி இருக்கேன் அஞ்சு. அப்பா வேற கூப்பிட்டு புத்திமதி சொல்லி இருக்காங்க. எல்லாத்தையும் கேட்டுகிட்டு அதற்கு பிறகும் இப்படி பண்றாளே”.

“நான் அவ கிட்ட இனி இதைப் பற்றி பேசப் போறதில்லைம்மா. எனக்கு வெறுத்துப் போச்சு”.

“நானும் தான்!”.

அவர்கள் அவளைப் பற்றி பலவாறு பேசிக் கொண்டிருக்க, அவளோ தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள். அவளின் மனம் கடவுளிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டு இருந்தது.

அவனுக்கு எதுவும் நடந்திருக்க கூடாது. நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.

அன்று முழுவதும் எவரிடமும் பேசாமல் தன் உணர்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தாள். அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களும் அப்படியே கழிந்தது.

ஆபிசிலும் அதற்கடுத்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். நாட்கள் வேகமாக கடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வில்லாமல் தன் எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்தாள்.

திருமணப் பத்திரிக்கை வந்து கோவிலில் வைத்து வாங்கியபின் காயத்ரியும் கல்யாணராமனும் மெல்ல உறவினர்களுக்கு வழங்க ஆரம்பித்திருந்தனர். அவளை கேட்டால் அந்தப் பத்திரிகையில் என்ன இருந்தது என்று கூட தெரியாது.

அலுவலகத்தில் அவள் டீமில் இருந்தவர்களுக்கு அவளைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. அவர்கள் டீமே சுவாரசியம் இழந்து காணப்பட்டது. எல்லோருக்கும் மாறனை மிகவும் பிடிக்கும். யாருக்கும் உதவி என்றால் உடனே ஓடிச் சென்று செய்பவன் ஆயிற்றே. கார்த்திக் எட்டி இருந்து இருக்கும் சூழ்நிலையை அவதானித்துக் கொண்டிருந்தானே தவிர, அவளின் அருகே வர முயற்ச்சிக்கவில்லை.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. அவளுக்கு எதுவும் அதைப் பற்றி கவலை இல்லை. அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஷ்யாம் அவளிடம் ஓடி வந்தான்.

அவன் முகமே பதற்றத்தில் இருப்பதைக் காட்டியது.

“தர்ஷ்! அங்கே இருக்கிறவங்க கிட்ட இருந்து மெச்செஜ் வந்திருக்கு. மாறன் அந்த வீகென்ட் பக்கத்திலிருந்த ஒரு ஊருக்கு காரில் கிளம்பி போய் இருக்கார். போகும் வழியில் விபத்து நடந்திருக்கு. இப்போ விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு மூணு கிலோ மீட்டரில் ஒரு பாடி கிடைச்சிருக்காம்” என்று சொல்லி முடிக்கும் முன்னே மயங்கி விழுந்திருந்தாள்.

அப்போதுதான் உள்ளே நுழைந்த ஆர்த்தி வேகமாக ஓடி வந்து அவளை தாங்கிப் பிடிக்க, அலுவலகமே கலவரமாகிப் போனது. அவளுக்கு தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்க முயற்சிகள் எடுத்தனர்.

மயக்கம் தெளிந்ததும் தன் இரு கரம் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். சுற்றி இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தவிக்க ஆரம்பித்தனர். கார்த்திக் அப்போது வந்திருக்கவில்லை.

மீண்டும் வந்த செய்தி உண்மை தானா என்று கேட்டறிந்து கொண்டு அனைவருமாக கூடி கூடிப் பேசினார்கள். அப்போது மாறனின் பெற்றோர்கள் வந்திருப்பதாக யாரோ வந்து கூறவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போயினர்.

அவளின் கண்களில் கண்ணீர் வற்றாத நதியைப் போல ஓடத் துவங்கியது. அனைவருக்குமே அந்த நடுக்கம் எழ ஆரம்பித்தது. மேல் அதிகாரிகள் விஷயம் அறிந்து மாறனின் பெற்றவர்களை அழைத்து வந்திருந்த செய்திகளை அவர்களுக்குத் தெரிவித்தனர்.

“நிச்சயமா அது உங்க மகனுடைய உடல் தான் என்று எந்த தகவலும் வரல. அதனால நமக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. மாறனுக்கு எதுவும் ஆகி இருக்காது என்று நம்புவோம்” என்று ஆறுதல் அளித்து அவர்களை அனுப்பினார்கள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
கலங்கிய கண்களுடனும் கண்ணீருடனும் வெளியில் வந்தவர்கள் மாறனின் டீம் ஆட்கள் ஒவ்வொருவரிடமும் வந்து பேசினார்கள். அனைவருமே அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார்கள். மாறனின் அன்னை வந்து அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு “நீ தைரியமா இரும்மா. என் மகன் நிச்சயம் நல்லபடியா வருவான்” என்றார் தன் துக்கத்தை மறைத்துக் கொண்டு.

அவரின் வார்த்தைகள் மேலும் வேதனையை கிளறிவிட, அவரை கட்டிக் கொண்டு அழுது விட்டாள்.

இவை எல்லாம் நடந்து கொண்டிருக்க, அப்போது தான் வந்து கொண்டிருந்தான் கார்த்திக். கையில் அவர்களின் திருமணப் பத்திரிக்கை அடங்கிய கவர்.

அங்கே என்ன நடக்கிறது என்று எதையும் அறிந்து கொள்ளாமல் நடுவில் வந்து நின்று “கைஸ்! எல்லோரும் இங்கே வரீங்களா? உங்களுக்கு எல்லாம் ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்” என்று கூறினான்.

அவன் வந்ததையோ பேசியதையோ கவனிக்காத தர்ஷு மாறனின் அன்னையுடனே பேசிக் கொண்டிருந்தாள். அவன் தந்தையும் அவளுக்கு பயப்பட வேண்டாம் நிச்சயம் அவன் திரும்பி வருவான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கார்த்திக் அழைக்கவும் அங்கிருந்த அனைவரும் ‘என்ன இது’ என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒன்று கூடினார்கள்.

அனைவரையும் பார்த்து உற்சாகமாகச் சிரித்தவன் “கைஸ்! எனக்கு இன்னும் பத்து நாளில் திருமணம். அந்த சந்தோஷமான விஷயத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளத்தான் கூப்பிட்டேன்” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் தங்களது துக்கத்தை விழுங்கிக் கொண்டு தங்களின் வாழ்த்தை தெரிவிக்கலாயினர்.

எல்லோரும் சொல்லி முடிக்கவும் “அப்புறம் ஒரு சர்ப்ரைஸ் பொண்ணு யாருன்னு சொல்லவே இல்லையே?” என்று அனைவரையும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தான்.

யாருக்கும் பதில் சொல்லும் எண்ணமோ ஆசையோ இல்லை என்பதால் அமைதியாகவே நின்றனர்.

“நம்ம ஆபிஸ் தான்” என்று க்ளு கொடுத்தான்.

அப்போதும் அனைவரும் அமைதியாக இருக்க, அவன் மெல்ல நகர்ந்து மாறனின் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்தவளின் தோள்களில் கையைப் போட்டு தனன்ருகே இழுத்துக் கொண்டு வந்து நின்று “தர்ஷனாவிற்கும் எனக்கும் தான் திருமணம்” என்கிற குண்டை அனைவரின் தலையிலும் விள்ளாமல் விரியாமல் இறக்கினான்.

அதிர்ச்சி! அதிர்ச்சி! அப்படியொரு அதிர்ச்சி!

அவளுக்கும் தான். இப்படியொரு சம்பவத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மாறனின் பெற்றோரோ வெளிறிய முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அவளின் டீம்மில் இருந்தவர்களோ அவளைத் தான் உடனடியாக பார்த்தனர். என்ன சொல்வாள்? எப்படிச் சொல்வாள்? நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் யாரையும் பார்க்க முடியாமல் தலை தாழ்ந்து கொள்ள, கண்ணீருடன் அனைவரின் முன்பு நின்றாள்.

கார்த்திக்கோ தன்னிடம் இருந்த பத்திரிக்கையை எடுத்து ஒவ்வொருவருக்காக கொடுக்க ஆரம்பித்திருந்தான். மாறனின் டீம் ஆட்களுக்கு இவன் பொய் சொல்கிறானோ என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் பத்திர்க்கை அவன் சொன்னதற்கு ஆதாரமாகப் போனது.

அதுவரை அவளை பரிதாபமாக பார்த்த கண்கள் அனைத்தும் ஏளனமாகவும், இகழ்ச்சியாகவும் பார்க்க ஆரம்பித்து விட்டன. மாறனின் அன்னையின் கண்களில் வெறுமையும், வெறுப்பும் தெரிந்தது. அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

ஒரு குற்றவாளியைப் போன்று ஆடையின்றி கூட்டத்தினிடையே நின்றவளைப் போன்று அனைவரின் முன்பும் நின்று கொண்டிருந்தாள்.

வந்த வேலை முடிந்தது என்பது போல அங்கிருந்தவர்களுக்கு பத்திர்க்கையைக் கொடுத்துவிட்டு அவன் சென்று விட்டான்.

அவள் தான் பிடித்து வைத்தது போல அங்கேயே நின்று கொண்டிருந்தாள். யாரும் அவள் அருகே வரவில்லை.

ஆர்த்தி மட்டும் வந்து பத்திரிக்கையை காண்பித்து “இதுக்கு என்ன விளக்கம் சொல்லப் போற? அப்போ மாறன் மீது உனக்கிருந்த காதல் பொய்யா? இத்தனை நாள் அவனை காணவில்லை என்று சொன்னதெல்லாம் நடிப்பா?”

நடுசந்தியில் நிற்க வைத்து செருப்பால் அடித்தது போல கேள்விகளை கேட்டாள். என்ன பதில் சொல்ல முடியும்?

அவளை துச்சமாகப் பார்த்து “உன் கூட பழகினதை நினைத்து அருவெறுப்பா இருக்கு. இப்படிக் கூட ஒருத்தியால நடிக்க முடியுமா?”
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணீர் நெஞ்சைத் தொட “நடிக்கல ஆர்த்தி! என்னால நடிக்க முடியாது”.

கைகாட்டி நிறுத்தியவள் “நீ பேசாதே! விட்டுடு! உன்னை மாதிரி ஒருத்தியை காதலித்த பாவத்திற்கு மாறன் இறந்தே போகட்டும்” என்று விட்டாள்.

அவ்வளவு தான் அவளின் வார்த்தைகளை கேட்டதும் அப்படியே கீழே மடங்கி அமர்ந்து விட்டாள். உண்மை தானே? காதலுக்கும் காதலித்தவனுக்கும் உண்மையாக இல்லாமல் போய் விட்டேனே.

அங்கு யாரும் அவளின் கண்ணீர் கண்டு பரிதாபப்படவில்லை. அவளை ஒரு மனுஷியாகக் கூட கருதவில்லை. அவளுக்காக வருத்தபப்ட்ட அதே நண்பர்கள் இப்போது அவளை ஒரு அசிங்கத்தைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.

அவள் என்ன சொல்லிவிட முடியும்? யாரிடம் அடைக்கலம் தேட முடியும்? அவளின் கதவுகள் எல்லாப் பக்கமும் அடைபட்டு விட்டது. முடியாது! இதற்கு மேல் இங்கு வேலை பார்த்தால் இவர்களின் பார்வைகளே தன்னைக் கொன்று விடும். நடப்பது நடக்கட்டும் வெள்ளம் தலைக்கு மேல் போய் விட்டது.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் மெல்ல எழுந்து சென்று தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அப்போது அவள் அருகே வந்த ஷ்யாம் “உன்கிட்ட இதை எதிர்பார்க்கல. எனக்கு ஒரு விஷயம் புரியல. கல்யாணம் பத்திரிக்கை அடிக்கும் வரை போயிருக்கு , நீ என்னென்னா இங்கே மாறனை நினைத்து கவலைப்படுவதைப் போல நடந்துகிட்ட. எங்களை எல்லாம் பார்த்தால் எப்படி தெரியுது? சீ! நீ எல்லாம் மனுஷியே இல்ல. நல்லவேளை மாறன் தப்பிச்சுகிட்டார்” என்று கேவலமாக காறி உமிழ்து விட்டுச் சென்றான்.

அவளுக்கு அவர்கள் பேசியது எல்லாம் கூட கவலை இல்லை. ஆனால் மாறனின் பெற்றோர்கள் முகத்தில் வந்து போன உணர்வுகளை பார்த்தபோது தான் மொத்தமாக மரித்துப் போயிருந்தாள்.

‘உன்னைப் பற்றி என் மகன் அப்படிச் சொல்லி இருந்தானே நீ இப்படியொரு இழி பிறவியா? என்று கேட்டது போல தோன்றியது.

இனி, என்ன? எல்லாமே முடிந்து போயிற்று. செத்த பிணத்தை வைத்து திருமணம் நடக்கப் போகிறது. மொத்தமாக என் அடையாளத்தை, என் மனதை, என் உணர்வுகளை அழித்து அதன் மீது ஒரு திருமணம். நடக்கட்டும்! இனி, எல்லாமே சவத்துக்கு நடக்கும் மரியாதைகள் தான் என்று எண்ணியபடி அமர்ந்து விட்டாள்.

கார்த்திக்கோ உள்ளே இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவளின் உணர்வுகளை, அழுகையை என்று ஒவ்வொன்றையும் பார்த்தன். அவளது நட்புக்கள் பேசிச் சென்ற வார்த்தைகள் என்று அனைத்தும் அவனுக்கு கேட்டது.

உள்ளுக்குள் ஒரு மக்ழிச்சி எழுந்தது. அதை மேலும் பெரிதாக்க தன் இடத்திலிருந்து வெளியே வந்தவன் அவளின் அருகே வந்தான்.

“என்னாச்சு தரு? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டு அவள் அருகே நின்றான்.

அவன் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவள் ‘ நீ நினைத்ததை எல்லாம் நடத்திப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாய்? நீ ஆடு! நன்றாக ஆடு!’ என்று சொல்லிக் கொண்டாள்.

அவளின் நெற்றியில் கை வைத்துப் பார்த்து “சூடு இருக்கே! நீ வா டாக்டரிடம் போகலாம்” என்று அவளின் கைகள் தொட்டு எழுப்ப முயன்றான்.

பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டவள் “வேண்டாம்!” என்றாள் வெற்றுக் குரலில்.

அங்கே இருந்த அனைவரும் இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரின் பார்வையிலும் அவள் ஒருபடி கீழிறங்கி இருந்தாள்.

அவனோ விடாது அவளது தோள்களைப் பற்றி எழுப்பி தன்னோடு வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு சென்றவன் “கைஸ்! அவளுக்கு உடம்பு சரியில்லை. ஒரு அரை நாள் லீவ் போட்டுடுங்க” என்று சொல்லிவிட்டு தன் காருக்கு அழைத்துச் சென்றான்.

அவளால் அவனிடம் இருந்து திமிர முடியவில்லை. அவனது அணைப்பே உடலெல்லாம் நெருப்பு கங்குகளை அள்ளி வீசியதைப் போலிருந்தது.

அவளின் முதுகிற்குப் பின்னே “சரியான ஜாலக்காரி போல. மாறன் போனதும் அடுத்தது கார்த்திகைப் பிடிச்சிருக்காளே’ என்று பேசிக் கொண்டனர்.

அந்த வார்த்தைகளைக் கேட்டு அனலில் இட்டப் புழு போல துடித்தாள். அவனோ அவளை அழுத்தமாகப் பற்றி காருக்கு இழுத்துச் சென்றான்.

காருக்குள் அமர வைத்துவிட்டு அருகே அமர்ந்தவனை முறைத்தவள் “மாறன் அப்பா அம்மாவை பார்த்துவிட்டு தானே கல்யாணப் பத்திரிக்கையை கொடுத்தீங்க?”

அவளின் கேள்வியில் முகம் முழுவதும் புன்னகை எழ, அவளின் தலையைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு “வெரி ஸ்மார்ட்-டா நீ! எஸ்! அவங்களைப் பார்த்ததும் தான் உடனே கொடுக்க முடிவு பண்ணினேன்” என்றான் கண்களைச் சிமிட்டி.

“இதனால உங்களுக்கு என்ன கிடைக்குது? ஏன்?”

அவளை திரும்பிப் பார்த்து “என் மனைவியாகப் போகிறவளை அவங்க தன் மருமகளைப் போல பார்த்தாங்க. சோ அது எனக்குப் பிடிக்கல. அது தான்”.

இதழில் எழுந்தவொரு கேலியுடன் “உங்கள் மனைவியாகப் போகிறவளின் மனதில் மாறனுக்கு மட்டுமே இடம். எந்தக் காலத்திலும் அங்கே உங்களுக்கு இடம் கிடைக்காது என்பதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
 

Kothai suresh

Member
Jan 26, 2022
66
23
18
அச்சோ தப்பே பண்ணம எஎல்லோர் முன்னாடியும் குற்றவாளி போல நிக்க வைச்சிட்டானே, 😡😡😡😡😡
 
  • Love
Reactions: SudhaRavi50

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அச்சோ தப்பே பண்ணம எஎல்லோர் முன்னாடியும் குற்றவாளி போல நிக்க வைச்சிட்டானே, 😡😡😡😡😡
பாவம் அக்கா அவள்....பார்ப்போம் மாறன் வந்து காப்பாத்துகிறானா என்று............