Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 11 | SudhaRaviNovels

அத்தியாயம் - 11

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அத்தியாயம் – 11

ஊட்டியின் ப்ரூக்ளின் எஸ்டேட் நடுவே இருந்த அந்த மாளிகையின் ஒரு அறையில் கையில் கிளாசுடன் அமர்ந்திருந்த க்றிஸ் தொண்டைக்குள் இறங்கிய திரவத்தை ரசித்து கண்களை மூடி அனுபவித்துக் கொண்டிருந்தான்.

தாங்கள் வந்த நோக்கத்தின் முதல் அடியை வெற்றிகரமாக முடித்து வைத்த திருப்தியில் கையிலிருந்ததை அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது அலைப்பேசி அடிக்க, ஒருவித அலட்சியத்துடன் அதை எடுத்து காதில் வைத்தான்.

“என்ன பண்ணிட்டு இருக்க க்றிஸ்?”

“என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் ஜாக். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு. அடுத்த மூவை முடிவு செய்வோம்”.

“நோ க்றிஸ்! நீ கவனமா இருக்கணும். எனக்கென்னவோ நம்மை போலீஸ் மோப்பம் பிடிச்சிட்டாங்ளோன்னு தோணுது”.

கையிலிருந்த கிளாசை கீழே வைத்து விட்டு சத்தமாக சிரித்தவன் “நோ வே! இங்கே இருக்கிற போலீஸ் எல்லாம் நம்ம கிட்ட நெருங்க கூட முடியாது. நம்ம சிந்தனை வேற. அவனுங்களால இப்படியொரு விஷயத்தை யோசிக்கவே முடியாது” என்றான் அகம்பாவமாக.

“கேரளாவில் நடந்ததை மறந்திட்டியா க்றிஸ். அவனுங்களால தான் நாம இரண்டு வருஷம் எதுவும் பண்ணாம இருந்தோம். அதோட பனிரெண்டு வருடங்களுக்கு முன் நடந்ததையும் மறந்திட்ட இல்ல. எவனையும் எளிதா நினைச்சிடாதே. நாம ரொம்ப கவனமா இருக்கணும்”.

அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த க்றிஸ் நறநறவென்று பற்களை கடித்து “இதுக்காகவே நாம யாருன்னு காட்டனும் ஜாக். நீ அங்கே மற்றவற்றை கவனி. நான் பூஜைக்கான இடத்தை தயார் செய்கிறேன். மற்றவை எல்லாம் நமக்கான வழியில் தகவல்கள் உனக்கு வந்து சேரும்”.

“ம்ம்...கவனம்” என்று கூறி போனை வைத்து விட்டான்.

அதே நேரம் சிவதாசும் சுபெஷும் தாம்பரம் மலைப்பகுதியை சுற்றி வந்து கொண்டிருந்தனர். அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு இடமும் தேடலுக்கு உள்ளானது. சுமார் இரண்டு தினங்களாக தேடல் நடந்தாலும் அவர்களால் அங்கு எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அவனது மனசாட்சி சொன்னது நிச்சயம் அங்கே தான் அவன் தேடும் தடயங்கள் இருக்கிறது என்று. ஆனால் ஏதோவொன்று அதை கிடைக்க விடாமல் தடுக்கிறது.

“சுபேஷ்! நான் சொல்கிற மாதிரி ஒரு பவுண்டரி ரெடி பண்ணுங்க. அதுக்குள்ள நிச்சயமா நாம தேடுகிற விஷயம் கிடைக்கும்”.

“ஓகே தாஸ்”.

அவன் சொன்னபடி அனைத்தும் தயாராக ஆனது. மீண்டும் தேடுதல் வேட்டை தீவிரமானது. அவன் சொன்ன எல்லைக்குள் அந்த பாழடைந்த மண்டபமும் அதை சுற்றியுள்ள இடங்களும் வர, மெல்ல மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். அது கண்ணில் பட்டதுமே சிவதாசிற்கு நம்பிக்கை பிறந்தது.

அதன் பிறகு அவர்களே எதிர்பார்க்காதவண்ணம் தேடியது அனைத்தும் கிடைத்தது. இதன் பின்னணி இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தது தான் என்றாலும் இத்தனை மோசமான ஒன்றை எதிர்பார்க்கவில்லை.

அந்த குகையின் நடுவே நின்றிருந்த சிவதாஸின் கண்கள் அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தது. சுபேஷ் அனைத்தையும் தன் கையிலிருந்த கருவியில் பதிந்து கொண்டிருந்தான்.

“சுபேஷ்! எதையும் மிஸ் பண்ணிடாதே! அதோட இந்த மலையடிவாரத்தில் நம்ம ஆட்களை காவலுக்கு போடு. போலீஸ் பார்வை அவங்க மேல விழுந்தது சந்தேகமா மட்டுமே இருக்கணும். அது தான் அவர்களை வெளியே கொண்டு வரும்”.

“ஓகே தாஸ் நான் பார்த்துக்கிறேன். அடுத்த மூவ் என்ன?”

அங்கு சுவற்றில் அழிக்கப்பட்டிருந்த ஒவிங்களை பார்வையிட்டுக் கொண்டே “க்றிஸ் எங்கே இருக்கான்னு பார்க்கணும். இந்த க்ரூப்பில் அவன் தான் டேஞ்சரானவன். எப்படியும் ஒரு சில நாட்களில் இந்த பாலோயர்களுக்கு தகவல் வரும். அதை தொடர்ந்து நம்மாளு அவர்களின் நடுவே உள்ளே நுழைவான்”.

அவன் சொன்னது சுபேஷிற்கு ஓரளவு தான் புரிந்தது. ஒருவித குழப்பத்துடன் “நம்மாளு எப்படி?” என்றான்.

“எஸ்! நீ சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பு. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பினான்.

அவனது மனம் அடுத்தடுத்த நடவடிக்கைகளை கணக்கு போடா ஆரம்பித்தது.

திருவானைக்காவல் வீட்டில் கங்கா ஒரு பெரிய அறைக்குள் சஞ்சலாவை அழைத்துச் சென்று காண்பித்துக் கொண்டிருந்தார்.

“இது தான் மா என்னுடைய நூலகம். இங்கே தான் உனக்கு வேலை. நான் சொல்கிற குறிப்புகளை எடுத்து இங்கிருக்கிற நூல்களில் இருந்து தேவையானவற்றை ஆராய்ந்து எனக்கு நோட்ஸ் எடுத்து தர வேண்டும்” என்றார்.

அவளும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டாலும் அந்த அறையை கண்கள் அலசி ஆராய்ந்தது.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அறையின் மறுபக்கத்தை காண்பித்து “இந்த ஷெல்ப் பக்கம் மட்டும் போயிடாதேம்மா. இது அவரோட பழைய கேஸ் சம்மந்தப்பட்ட டாகுமென்ட்ஸ் வச்சிருப்பார். அதுல கை வச்சா அவருக்கு பிடிக்காது” என்றார்.

அதை கேட்டதுமே மனதிற்குள் ஒரு பரபரப்பு. இதை தேடித்தானே வந்தேன் என்பது போல அத்தனை ஆர்பரிப்பு. ஆனால் முகத்தில் அதை வெளிக்காட்டாது “ஓகே மேம்! நீங்க சொன்னதை மட்டும் செய்கிறேன்” என்றாள்.

அவளது ஒவ்வொரு அசைவையும் தனது அறையிலிருந்த மடிகணினியில் பார்த்துக் கொண்டிருந்தார் சிவதாஸின் தந்தை. அவர் இதழ்களில் மெல்லிய புன்னகை கூட எழுந்தது. மகன் துல்லியமாக கணக்கிட்டு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார்.

கங்கா வருவதற்குள் கணினியின் திரையை மாற்றிவிட்டு கணக்கு வழக்குகளை பார்ப்பதை போல அமர்ந்து கொண்டார். ஒருவித சந்தேக கண்களோடு உள்ளே நுழைந்த கங்கா “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றார்.

மெல்லிய புன்னகையுடன் “நான் தான் போலீசா இருந்தவன். என்னையே விசாரிக்கிரியா நீ?” என்றார் கிண்டலாக.

ஒருவித கடுப்புடன் “அப்பாவும், பிள்ளையும் போலீசா இருந்து என்னை பாடாய்படுத்துறீங்க” என்றார்.

சத்தமாக சிரித்து “எல்லாம் நன்மைக்கே!” என்றார்.

அவரின் சிரிப்பு சத்தம் நூலக அறைக்குள் இருந்தவளின் செவியை தீண்ட “சிரிங்க! எவ்வளவு நாள் சிரிபீங்கன்னு பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு கங்கா கொடுத்த வேலைகளை பார்க்கலானாள்.

அன்று முழுவதும் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவளுக்கு அறையின் வரைபடம் தெளிவாக புரிந்து போனது. அவர் கொடுத்த வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் தனது அடுத்த கட்டத்திற்கான திட்டமிடலும் நடந்து கொண்டிருந்தது மனதிற்குள்.

மாலை நேரம் கண்காவுடன் அங்கிருந்த தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தாள்.

அவரோ “உன்னைப் பற்றி சொல்லும்மா? உனக்கு கூட பிறந்தவங்க எத்தனை பேர்? என்ன பண்ணிட்டு இருக்காங்க?”

அவர் கேட்டதும் ஒரு நிமிடம் தயங்கி பின்னர் “நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணுங்க. அம்மா, அப்பா நான் இது தான் எங்க குடும்பம்” என்றாள்.

“ஒரே பெண்ணை எப்படிம்மா இவ்வளவு தூரம் அனுப்பி வச்சாங்க?”

அவரின் முகத்தை பார்க்காமலே “எனக்கு இந்தவேலையில் ஆர்வம் அதிகம். அது தான் அவங்க சொல்லியும் கேட்காமல் வந்துட்டேன்”.

“ஒ...என் பையனும் அப்படித்தான். நான் அவனை கலெக்டர் ஆக்க முயற்சி செய்தேன். ஆனா அவனோ போலீஸ் வேலை தான் எனக்கு பிடித்தம்னு சொல்லிட்டான்” என்றார்.

அவர் அவனைப் பற்றி கூறியதும் ஒரு நிமிடம் அவளது நடை நின்று பின் தொடர்ந்தது.

அதன்பின்னர் சிறிது நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு அவர் உள்ளே போய் விட, அவள் அங்கு போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தாள். அன்று இரவு அவரின் பழைய கேஸ் விபரங்களை எடுத்து விட வேண்டும் என்று மனம் கணக்கு போட்டது. அதிக நாட்கள் அங்கிருப்பது நல்லதல்ல என்று தோன்றியது.

இரவு உணவை முடித்துக் கொண்டு தனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். பெரியவர்களும் படுக்க சென்று விட, வீடே இருளில் மூழ்கியது. பனிரெண்டு மணிக்கு மேல் எழுந்து செல்லலாம் என்று விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள்.

பதினொரு மணியளவில் ஊரின் எல்லையில் ஒரு ஜீப் சப்தமின்றி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சிவதாஸ் சிறுத்தை போன்று பதுங்கி பதுங்கி எவர் கண்ணிலும் படாது தனது வீட்டின் கொல்லைப்புறம் சென்றான்.

அங்கிருந்த காம்பவுண்டை தாண்டி அவன் உள்ளே குதிக்க, முதலில் யாரோ என்று பாய்ந்த அவனது நாய்கள் அவனைக் கண்டதும் வாலாட்டிக் கொண்டு விழுந்து பிரண்டு கொஞ்சின. அவற்றை எல்லாம் தட்டிக் கொடுத்து விட்டு மெல்ல பின்புற கதவின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்தவன் பூனை நடையுடன் நூலக அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டான்.

சுமார் ஒரு மணியளவில் மெல்ல தனது அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த சஞ்சலா நூலக அறைக்குள் நுழைந்தாள்.

இருளிலும் அவளது பார்வை தீர்க்கமாக இருந்தது. கதவை தாளிட்டுவிட்டு பென் டார்ச்சின் உதவியுடன் கேஸ் சம்மந்தப்பட்ட டைரிக்களை ஆராய ஆரம்பித்தாள். அவர் வேலை பார்த்த நாளில் இருந்து ஒவ்வொரு வருடமும் அவர் பார்த்த வழக்குகளை பற்றி அனைத்தும் அந்த டைரிக்களில் எழுதப்பட்டிருந்தது. வருடம் குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்ததால் அவள் தேடியது சற்று நேரத்திலேயே கிடைத்தது.

அதை கைகளில் ஏந்தியவளின் உடலில் ஒரு நடுக்கம். மனமோ அன்றைய நாளின் நினைவுகளுக்கு செல்ல முயற்சிக்க, அதை தடுத்து அந்த டைரியின் முதல் பக்கத்தைப் பிரித்தாள்.

தமயந்தி கொலை வழக்கு!

அவளது விரல்கள் அந்த பெயரில் நின்று அதை தடவிக் கொடுத்தது. கண்களோ கலங்கி நின்றது.

இவை அனைத்தையும் ஒரு ராக்கின் பின்னே நின்று கவனித்துக் கொண்டிருந்தான் சிவதாஸ்.

அவளது இதழ்கள் தமயந்தி என்று தன்னையும் மீறி உச்சரித்தது.

அந்நேரம் அவளது தோள்கள் அழுத்தமான கரங்களால் இறுகப் பற்ற பட்டிருந்தது.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
பட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவள் பின்னே இருந்தவனை அடித்து வீழ்த்த முயன்றாள்.

அவனோ மேலும் அவளோடு நெருங்கி நின்று காதோரம் “ஷ் சஞ்சலா! நான் தாஸ்! சிவதாஸ்! அமைதியா இரு” என்றான்.

அப்பொழுதும் அவனை அடித்து விடும் நோக்கத்தோடு முட்டியை பின்பக்கமாக கொண்டு சென்று அவனது வயிற்றில் குத்த முயற்சிக்க, அடுத்த நிமிடம் அவளது கைகளை வளைத்துப் பிடித்து தன் பக்கம் திருப்பி இருந்தான்.

அதில் அதிர்ந்து போனவள் “என்ன பண்ணிட்டு இருக்க?” என்றாள் கோவமாக.

அந்த இருளிலும் பளபளக்கும் விழிகளோடு அவளை பார்த்தவன் “நான் கேட்க வேண்டிய கேள்வி? இங்கே என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்.

அவனது பிடி அவளுள் சங்கடத்தை ஏற்படுத்த “முதலில் விடு என்னை! எதுக்கு என்னை தொடர்ந்து வர?”

அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு “இது என் வீடு. நீ தான் என்னை தொடர்ந்து வர. என்ன வேணும் உனக்கு? அந்த தமயந்தி யார்?” என்று அவளை அதிர வைக்கும் கேள்வியை கேட்டான்.

அதுவரை அவனிடமிருந்து விடுபட போராடியவள் அவனது கேள்வியில் கோபம் எழ, ஒரே தள்ளாக தள்ளிவிட்டு எதிரே நின்றவள் “கேட்காதே! மரியாதையா போயிடு” என்றாள்.

“சோ எங்கப்பாவை முடிக்க தான் வந்திருக்க?” என்றான் இடுப்பில் கை வைத்துக் கொண்டே அவளை ஆராய்ந்தபடி.

“ஆமாம்!” என்றாள் அழுத்தமாக.

நீண்ட பெருமூச்சு எழ, “நீ பார்த்தது கேட்டது எல்லாமே சித்தரிக்கப்பட்டது. உண்மை என்னன்னு எதுவுமே தெரியாம இத்தனை வருஷமா தேடி இருக்க”.

“அப்பான்னு சொன்னதும் பாசம் பொங்குதோ நீதி நேர்மைக்கு பெயர் போன சிவதாசுக்கு” என்றாள் நக்கலாக.

அவளை கூர்ந்து பார்த்தவன் “நீ எதுக்கு அந்த க்றிஸ் ஜாக் ரெண்டு பேரையும் தேடுற? அவர்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”

“மிஸ்டர் சிவதாஸ்! உங்க செர்விஸ் உங்களுக்கு நிறைய சொல்லி கொடுத்திருக்கு போல. மடை மாற்றாதீங்க. நான் தேடி வந்தது உங்கப்பாவை தான்”.

பட்டென்று அவளது கைகளைப் பற்றி இழுத்தவன் “அப்புறம் எதுக்கு அந்த ராஜி பெண்ணை வைத்து அந்த க்றிஸ், ஜாக் இருவரையும் தொடர்ந்த?” என்றான் காதோரம் குனிந்து.

செவிகளில் அவனது இதழ்கள் உரசியதில் கடுப்பானவள் “அது எங்க குழுவிற்காக நாங்க செய்வது. இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம்” என்றாள் எரிச்சலுடன்.

“ஒ...அப்போ நீ எனக்கு வேணும்” என்றான் அழுத்தமாக.

அதில் அதிர்ந்து அவனை பார்த்தவள் “சிவதாஸ்!” என்றாள் கோபமாக.
 
  • Like
Reactions: Kothai suresh
Need a gift idea? How about a tea mug?
Buy it!