Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 10 | SudhaRaviNovels

அத்தியாயம் - 10

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அத்தியாயம் – 10

வீடு வந்து சேர்ந்த பின்னரும் அவன் பேசிய வார்த்தைகள் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. இவன் சரியானவன் இல்லை என்கிற பயம் முதன்முறையாக உள்ளுக்குள் எழ ஆரம்பித்திருந்தது.

தனியே அறையில் அமர்ந்திருந்தவளிடம் வந்தமர்ந்த அஞ்சனா “என்னக்கா யோசனை?” என்றாள் மெல்லிய குரலில்.

அவளை திரும்பிப் பார்த்தவளின் மனது ‘இவளிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாமா’ என்று யோசித்தது.

“அக்கா!”

சொன்னால் என்ன ஆகும்? இவளால் என்னை காப்பாற்ற முடியுமா? அம்மாவால் கூட முடியாத ஒன்று அஞ்சனவால் முடியுமா? இல்லை வீட்டை விட்டு சென்று வெளியில் ஹாஸ்ட்டலில் தங்கி விடலாமா மாறன் வரும் வரை?

“என்னக்கா? ஏன் பேச மாட்டேன்ற?”

“ம்ம்...உனக்கு படிக்க எதுவும் இல்லையா? ஏன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்க?”

சட்டென்று எழுந்து கொண்டவள் “உனக்கு என்ன ஆச்சுக்கா? ஏன் இப்படி இருக்க?”

“எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் நடக்குது. என்னைத் தவிர மற்ற எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க. யாருமே என்னைப் பற்றி கவலைப்படவே இல்லை தானே? பின்ன நான் எப்படி இருக்க முடியும்?”

தர்ஷனாவை முறைத்துப் பார்த்த அஞ்சனா “ஆனாலும் உனக்கு இந்தப் பிடிவாதம் ஆகாதுக்கா. நம்ம அப்பா நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார் தான். அதற்காக அவர் செய்த ஒரு நல்ல விஷயத்தை ஏற்க கூடாதுன்னு நினைக்கிற பார், இது ரொம்ப தப்புக்கா”.

அவளின் பேச்சில் அதிர்ந்து போனவள் “நான் அப்படி செய்யக் கூடியவளா அஞ்சு?”

“அது தான் செஞ்சிட்டு இருக்கியே. அத்தானைப் பொறுத்தவரை என்னால எந்த தப்பும் பார்க்க முடியலக்கா. அதிலும் அவங்க குடும்பம் ரொம்ப இயல்பானவங்களா இருக்காங்க. இதை விட வேற என்னக்கா வேணும் உனக்கு?”

“சின்ன பொண்ணுன்னு நிரூபிக்கிற” என்றாள் வெறுத்துப் போன உணர்வுடன்.

“நான் சின்ன பொண்ணு தான்- அக்கா. ஆனா உன்னை விட தைரியமானவள். எனக்கு என்ன தேவையோ அதை அப்பாவிடம் நேரடியா கேட்டு வாங்க கூடியவள். இப்பவும் சொல்றேன் அப்பாவை வைத்து அத்தானை எடை போடாதே!”

“அப்படின்னு உனக்கு யார் சொன்னா?”

“அப்போ வேற என்ன காரணம்?”

“நான் எங்க ஆபிசிலேயே வேற ஒருத்தரை காதலிக்கிறேன்” என்று உண்மையை போட்டு உடைத்தாள்.

எகத்தாளமான ஒரு சிரிப்புடன் “இதை நான் நம்பனும். பிடிவாதத்துக்காக எதுவும் பேசாதே. தயவு செய்து அத்தானைப் புரிஞ்சுக்கப் பாரு” என்றாள்.

கண்களில் வெறுமையுடன் “தயவு செய்து இனி என்கிட்ட வந்து ஏன் அப்படி இருக்க? இப்படி இருக்கன்னு கேட்காதே அஞ்சு” என்று விட்டாள்.

அஞ்சுவிற்கு அத்தனை கோபம் “அக்கா கிடைக்கிற நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதே” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.

அவள் சென்று அன்னையிடம் அனைத்தையும் கூறிவிட அவர் தர்ஷனாவைப் பார்க்க வந்து விட்டார்.

“என்ன தர்ஷனா இது! உன்கிட்ட இதை எதிர்பார்க்கல. நான் பார்த்தவரை மாப்பிள்ளை மேலையும், அந்த குடும்பத்து மேலையும் நல்ல அபிப்பிராயம் தான் அதிகமாயிட்டே வருது. எந்த இடத்திலேயும் அவங்க தவறான ஆளாக தெரியல. நாம எதிர்பார்த்தது இப்படியொரு வாழ்க்கையைத் தானே?”

நீங்களுமா அம்மா? என்பது போல பார்த்துவிட்டு “சரிம்மா! உங்க மாப்பிள்ளை தங்கமானவர் தான். அது தான் நான் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கிட்டு தானே இருக்கேன். இன்னும் என்கிட்ட என்ன எதிர்பார்க்குறீங்க?”

“அஞ்சு கிட்ட ஆபிசில் யாரையோ லவ் பண்றேன்னு எதுக்கு சொன்ன? நீ சொன்னது மாப்பிள்ளை காதுல விழுந்தா என்ன ஆகும்? தப்பா நினைக்க மாட்டாங்க?”

அன்னையின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் ‘சொன்ன பிறகும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு படுத்துறான்-மா. என்னால முடியல. ஒன்னு செத்துடனும் இல்ல இங்கிருந்து எங்கேயாவது போயிடனும்’ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தாள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
அவளது முதுகில் தட்டிக் கொடுத்து “நல்லா யோசி தர்ஷு. தேவையில்லாம மனசை போட்டு உருட்டாதே. மாப்பிள்ளை மேல நம்பிக்கையோட கல்யாணம் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அவர் சென்றதும் அப்படியே சுருண்டு படுத்துவிட்டார். எத்தனை நேரம் அப்படியே படுத்திருந்தாளோ கதவு திறக்கும் சப்தம் கேட்டு எழுந்தமர்ந்தாள்.

உள்ளே வந்த அஞ்சனா “அப்பா உன்கிட்ட பேசணும்னு சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு தன் மேஜையில் சென்றமர்ந்து கொண்டாள்.

அடுத்து அவரா? என்கிற யோசனையுடன் சென்று முகம் கழுவி தலையை ஒதுக்கிக் கொண்டு வெளியே வந்தவளைப் பார்த்த கல்யாணராமன் “என்னோட வா வெளில போய் பேசலாம்” என்று செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே சென்றார்.

சமையலறை வாசலில் நின்ற அன்னையை திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் இருந்தது. எதுவும் பேசாமல் தந்தையைப் பின் தொடர்ந்தாள்.

சுமார் அரை மணி நேரம் இருவரும் நடந்துவிட்டு வந்தார்கள். வீட்டிற்கு திரும்பி வந்தவளின் முகம் மேலும் இறுகிப் போய் இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்று படுத்து விட்டாள்.

அந்த வீட்டில் அவளுக்கு இருந்த ஆதரவு முற்றிலுமாக குறைந்து போனது. காயத்ரி கூட இந்தப் பெண்ணுக்கு இத்தனை அழுத்தம் கூடாது என்று கோபத்தில் இருந்தார்.

மறுநாள் காலை யாருமே அவளிடம் பேசவில்லை. அதே இறுக்கமான முகத்தோடு காலை உணவை முடித்துக் கொண்டு எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஆபிசிற்கு கிளம்பிச் சென்றாள்.

அஞ்சனா அவளின் முகத்தைக் கூட பார்க்கவில்லை.

ஆபிஸ் வந்தவுடன் முதலில் நேரே ஷ்யாமிடம் சென்று நின்றாள். மாறனைப் பற்றிய புதிய தகவல் எதுவும் கிடைத்திருக்கிறதா என்று அறிந்து கொள்ள, அவனிடம் பேசினாள்.

“கொஞ்சம் வெயிட்டு பண்ணு தர்ஷ். எப்படியும் இன்னைக்கு எதுவும் தகவல் தெரியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தவனைப் பார்த்து “ஹாய் ஷ்யாம். காலையிலையே பேச ஆரம்பிச்சாச்சா?’ என்று கேட்டபடி அவர்களை கடந்து சென்றான் கார்த்திக்.

தங்களை கடந்து செல்பவன் முதுகையே வெறித்து பார்த்தவள் “என்ன ஆகி இருக்கும் ஷ்யாம். தகவல் சொல்ல முடியாத அளவிற்கு?” என்றவளின் கண்ணீர் கன்னங்களைத் தொட்டது.

“ஹேய் தர்ஷ்! நீ எதுவும் கவலைப்படாதே. மாறன் நல்லா இருப்பான். டோன்ட் வொர்ரி தர்ஷ்” என்று சமாதானப்படுத்தினான்.

எல்லோரும் தன்னை கவனிப்பதை போலிருக்க, கண்களைத் துடைத்துக் கொண்டு தன் இடத்தில் அமர்ந்தாள். அவள் அருகே சேரை நகர்த்திக் கொண்டு வந்த ஆர்த்தி “எதுவும் இருக்காது தர்ஷ். மாறன் நல்லா இருப்பார். நீ கவலைப்படாதே” என்றாள்.

“ம்ம்...நல்லா இருக்கணும்” என்றாள் எதிரே தெரிந்த கணினித் திரையை வெறித்தபடி.
மதியம் வரை எந்த தகவலும் இல்லை. கார்த்திக் தன் வேலையில் இருந்தாலும் இவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். லஞ்ச் முடிந்த பின்னர் அவரவர் பணியில் மூழ்கி இருக்க, ஷ்யாம் பரபரப்பாக வந்து நின்றான். அவன் முகத்தில் பதற்றமும், குழப்பமும் இருந்தது.

அதை பார்த்ததும் அவசரமாக எழுந்து நின்றவள் “என்ன ஷ்யாம்?” என்றாள் பயத்தில் உள்ளே போன குரலுடன்.

“மாறனோட காரை கண்டுபிடிச்சிருக்காங்க. ஒரு ஹை-வேயில் விபத்து நடந்திருக்கும் போல இருக்கு. ஆனா மாறன் கிடைக்கல” என்று சொன்னதும் அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

கண்கள் தன்னை அறியாமல் கண்ணீரைப் பொழிய, ‘போய் விட்டானா? எல்லாவற்றிலும் உனக்கு துணை இருப்பேன் என்று சொன்னவன் மொத்தமாக விட்டுவிட்டு போய் விட்டானா? என்று நெஞ்சு துடித்தது.

அவள் மேஜையை சுற்றி அனைவரும் கூடி இருக்க, மொத்த அலுவலகமும் மாறனைப் பற்றியே பேச ஆரம்பித்திருந்தனர்.

கார்த்திக்கும் மெல்ல அங்கே வந்து நின்றான். அவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் ஷ்யாமிடம் “ஏன் ஷ்யாம் உயிரோட இருக்க வாய்ப்பிருக்கா?” என்று கேட்டுவிட அனைவரும் பதறி போயினர்.

அவள் காதுகளில் அவன் பேசிய வார்த்தைகள் விழ, மெல்ல நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அத்தனை வலி. உனக்கு சந்தோஷமா என்கிற கேள்வியும் இருந்தது.

அப்போது மற்றுமொரு தகவல் கிடைத்தது. மாறனின் போன் விபத்து நடந்த இடத்திற்கு சற்று தள்ளி கிடைத்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு தகவலாக வர வர மொத்தமாக உடைந்து போனாள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
274
268
63
சிறிதளவேணும் நம்பிக்கை இருந்தது. திருமணத்திற்குள் அவனை தொடர்பு கொண்டு விடலாம் என்கிற சிறு நம்பிக்கையும் மொத்தமாக பொய்த்துப் போனது. வாழ்க்கையில் அத்தனை நல்ல விஷயங்களையும் கொடுத்தவன் அனைத்தையும் மொத்தமாக சுருட்டிக் கொண்டு போய் விட்டான். முடிந்தது! எல்லாமே முடிந்தது! என்று பொம்மை போல அமர்ந்திருந்தாள்.

கார்த்திக் அவளை கண்டும் காணாமல் அங்கிருந்து சென்றுவிட, மற்றவர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர். பேச்சில்லை, கண்கள் இமைக்கவில்லை, சுவாசம் கூட இருக்கிறதா என்கிற அளவில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அனைவரும் சேர்ந்து அவளை சமாதானப்படுத்தி அங்கிருந்து காண்டீனிற்கு அழைத்துச் சென்றார்கள். ஆர்த்தியை கட்டிக் கொண்டு அழுது தீர்த்து விட்டாள். அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.

“ஒன்னும் ஆகி இருக்காது தர்ஷ். நீ பயப்படுகிற மாதிரி எதுவும் நடந்திருக்காது” என்று ஒருவர் மாற்றி ஒருவர் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள்.

யார் என்ன சொன்னால் என்ன அவளுக்கு அவன் நிலை என்ன என்கிற கேள்வியே சுற்றிச் சுற்றி வந்தது. அதற்கு மேல் அங்கிருக்க மனமில்லாமல் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

அங்கே அவளின் நல்ல காலம் அம்மாவும், அப்பாவும் திருமண வேலை சம்மந்தமாக வெளியில் சென்றிருந்தார்கள். தன் அறையில் சென்று படுக்கையில் விழுந்தவள் கதறி தீர்த்து விட்டாள்.

“எங்கே போனீங்க மாறன்? உனக்கு எந்த சங்கடம் வந்தாலும் உடனே ஓடி வருவேன்னு சொன்னீங்களே? ” என்று அழுது கரைந்தாள்.

எதிர்காலமே பூஜ்யமாக போன உணர்வு. அதிலும் கார்த்திக்கின் நடவடிக்கையைக் கண்டு மனம் சுக்கு நூறாக உடைந்துப் போனது.

அஞ்சனா வரும் வரை அழுது கொண்டு தான் இருந்தாள். கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும் அவசரமாக வாஷ்ரூமிற்குள் சென்று நுழைந்து கொண்டாள். வீட்டிற்குள் வந்த அஞ்சனா அக்கா வந்து விட்டதை அறிந்து கொண்டாள்.

அழுத தடம் தெரியாதபடி முகத்தை சீர் செய்து கொண்டு வெளியே வந்தவளைக் கண்ட அஞ்சனா “என்ன சீக்கிரம் வந்துட்டக்கா?” என்றாள்.

“ம்ம்...தலைவலி அதுதான் வந்துட்டேன்”.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹாலிற்கு செல்லும் நேரம் தர்ஷுவின் அலைப்பேசி அடிக்க ஆரம்பித்தது. கார்த்திக் தான் அடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் எரிச்சலுடன் சத்தத்தைக் குறைத்துவிட்டு ஓரமாக வைத்தாள்.

போன் அடிப்பதும் அதை எடுக்காமல் அவள் தூக்கி வைத்ததையும் பார்த்துவிட்டு ஹாலிற்கு சென்றாள் அஞ்சு.

விடாது ஒரு ஆறு ஏழு தடவைக்கு மேல் அடித்த போனை எரிச்சலுடன் மொத்தமாக அணைத்து தூக்கிப் போட்டாள். ஹாலில் இருந்தாலும் போன் அடிப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள் அஞ்சு.

சற்று நேரத்தில் அவளின் போன் அடித்தது. புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. சற்று நேரம் யோசனையுடன் பார்த்தவள் மெல்ல எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ”

“ஹலோ அஞ்சனா. நான் கார்த்திக் பேசுறேன்”.

அவன் குரல் கேட்டதும் சந்தேகத்துடன் “எந்த கார்த்திக்?” என்றாள்.

“அக்கா வீட்டுக்கு வந்துட்டாளா அஞ்சனா. தலைவலின்னு சொல்லி கிளம்பி போனா...அதுக்கு தான் போன் பண்ணினேன்”.

“அத்தான் நீங்களா? ம்ம்...வந்துட்டா” என்றவள் பேசிக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

“இப்போ எப்படி இருக்கா? அவளால பேச முடியுமா?”

அக்காவைப் பார்க்க அவளோ கடுப்பாக தலையசைத்தாள்.

இவளும் சைகையில் பேசு என்றாள்.

அவள் முடியாது என்று சொல்லிவிட, “அத்தான்! அவள் நல்லா தூங்கிட்டு இருக்கா” என்று சொல்லிவிட்டாள்.

அவன் மேலும் தர்ஷுவைப் பற்றி கேட்டுவிட்டு வைத்துவிட, ஒரு முறைப்புடன் “நீ லீவ் போட்டுட்டு வந்ததும் உடனே போன் போட்டு கேட்கிறார். அதுக்கு பதில் சொல்லக் கூட உன்னால முடியலையா அக்கா? போன் எடுக்க மாட்டியா?”

அவளிடம் பதில் சொல்லாமல் அமைதியாக படுக்கையில் அமர்ந்து விட்டாள். அவளின் மனம் மாறனிடமே இருந்தது.

“இது நல்லா இல்லக்கா. நீ அவரை இப்படி அவமதிக்கிறது சரியில்ல. உடம்பு சரியில்லேன்னு கேட்கத்தானே போன் பண்ணினார். எதுக்கு போனை ஆப் பண்ணி வச்ச?”

அஞ்சுவின் கேள்விகளுக்கு அவளின் பதில் மௌனம் மட்டுமே. கண்களோ கலங்கி நின்றது. அவளின் மனம் முழுவதும் மாறன் மட்டுமே.