Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 10 | SudhaRaviNovels

அத்தியாயம் - 10

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அத்தியாயம் – 10

திருவானைக்காவல் கோவிலின் மணி அடிக்கத் தொடங்க, விடியலின் நேரம் கோவில் திறக்கப்பட்டு பூஜைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த வீடுகளின் விளக்குகள் எரிய தொடங்கின.

பெண்கள் மெல்ல கதவை திறந்து தங்கள் வீட்டு வாசலை பெருக்கி தண்ணீர் தெளிக்க தொடங்கினார்கள். ஆறு மணிக்குள் வீட்டு வாசல்களில் அழகாக கோலம் வரையப்பட்டு தெருவே அழகாக்கியது.

ஊருக்குள் முதல் பஸ் தனது பெருத்த ஹாரனுடன் நுழைந்தது. அந்த அதிகாலை நேரத்தில் பேருந்தில் ஒன்றிரண்டு ஆட்களே இருக்க, முதல் ஆளாக சஞ்சலா இறங்கினாள். ஒற்றை பின்னல் இட்டு, சுடிதார் அணிந்து துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணி, பார்க்கவே மிகவும் பவ்யமான பெண்ணாக இருந்தாள்.

பேருந்திலிருந்து இறங்கியவள் சுற்றுபுறத்தை ஆராய, டீக்கடை வாசலில் அமர்ந்திருந்த பெருசுகளும், ஒரு சில இளைஞர்களும் அவளை தான் பார்த்தனர். அந்த இளைஞர்கள் ஊரை சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு மெல்ல டீக்கடையை நோக்கி சென்றாள்.

அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் “இங்கே ராமசாமி ஐயா வீடு எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?” என்றாள் மெல்லிய குரலில்.

அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்த பெருசு ஒன்று “நீ யாரும்மா? எங்கே இருந்து வர? ஐயாவுக்கு நீ என்ன வேணும்?” என்றார்.

மிகவும் மரியாதையுடன் “கங்கா அம்மா வேலைக்கு ஆள் கேட்டிருந்தாங்க. அதுக்கு தான் வந்திருக்கேன்” என்றாள்.

அதை கேட்டதும் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவர் “சரி உன்னை பற்றி சொல்லு? உன் குடும்ப பின்னணி எல்லாம் சொல்லு” என்றார் சற்றே அதிகாரமாக.

அவர் கேட்டதும் அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் அனைத்தையும் கூறினாள். அவரின் முகம் அதை வெளிப்படுத்த, அப்போது ஒரு இளைஞன் “இங்கே பாரு பொய் எதுவும் சொல்லி இருந்தேன்னா மாட்டிக்குவே. எங்க அண்ணன் முட்டிக்கு முட்டி தட்டி மூலையில உட்கார வச்சிடுவாரு” என்றான் மிரட்டலான குரலில்.

வெளியில் அதிர்ந்த மாதிரி காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் ‘உங்க அண்ணனுக்கு சுளுக்கு எடுக்க தான் வந்திருக்கேன் ராசா’ என்றெண்ணிக் கொண்டு வெறுமனே தலையசைத்தாள்.

அதன்பின் மேலும் பத்து நிமிடங்களுக்கு விசாரணை தொடர, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கே சலிப்பாகி போக “டேய்! சந்துரு இந்த பொண்ணை அம்மா கிட்ட அழைச்சிட்டு போ. பார்த்தா நல்லா பொண்ணா தான் தெரியுது” என்று விட்டார்.

இவை அனைத்தையும் சிவதாஸின் டீம் கண்காணித்து கொண்டு தான் இருந்தது. உடனே அவனுக்கு தகவலும் அனுப்பப்பட்டது.

செங்கல்பட்டு அருகே இருந்த கெஸ்ட் ஹவுசில் தனது காலை நேர ஓட்டத்தை தொடர்ந்திருந்தவனின் மொபைல் விடாமல் அடித்தது. வியர்வை வழிய ஓடிக் கொண்டிருந்தவன் மொபைலின் ஒலியில் சற்றே நின்று போனை எடுத்தான்.

“தாஸ் ஹியர்!”

“தாஸ்! பட்சி வந்து இறங்கியாச்சு”.

“குட்! குட்! ரொம்ப கவனமா இருங்க. அவ கண்ணுல படவே கூடாது. அம்மாவும் ஜாக்கிரதை” என்று கூறி வைத்தவனின் இதழ்களில் கேலி புன்னகை.

இடுப்பில் கை வைத்து தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்தவன் ‘ரொம்ப சுவாரசியமா இருக்கு சஞ்ச..லா! நீ என்னோட மூவை தெரிஞ்சு வச்சிருப்பேன்னு தெரியும். ஆனா உன்னை இங்கே வரவழைத்தது நான் தான்னு உன்னால யூகிக்க முடியாது. உன்னை என் பக்கம் யோசிக்க வைத்து என்னிடம் கொண்டு வந்திருக்கேன். கூடிய சீக்கிரம் நாம சேர்ந்து டிராவல் பண்ணுவோம்’ என்றவனின் இதழ்களில் நைய்யாண்டி தெரிந்தது.

தலைக்கு குளித்து முடித்து நெற்றிக்கு இட்டுக் கொண்டு பூஜையறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார் கங்கா. கண்களை இறுக மூடி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தவரை “அம்மா!” என்ற குரல் களைத்தது.

மெல்ல பூஜை அறையை விட்டு வெளியே வந்தவர் “யாருப்பா அது?” என்று கேட்டபடியே வாசல் கேட்டருகே வந்தார்.

“நான் தானுங்கம்மா ராஜா. உங்களை தேடி ஒரு பொண்ணு வந்திருக்கு. அது தான் கொண்டு வந்து விடலாம்னு வந்தேன்” என்றான்.

பூட்டி இருந்த கதவை திறந்து விட்டவர் அவளை பார்த்து புன்சிரிப்புடன் “வாம்மா” என்று விட்டு “நல்லா இருக்கியாப்பா? அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? வேலைக்கு போற தானே?” என்று கேள்விகளை அடுக்கினார்.

அவரது கேள்விகளுக்கு பதிலை சொன்னவன் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். அவளை அடுத்து வந்த ஹாலில் அமர வைத்தவர், அவளை பற்றிய மொத்த விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

“ரொம்ப சின்ன பெண்ணா இருக்கியேம்மா. உன்னை எப்படி வெளியூருக்கு வேலைக்கு அனுப்பினாங்க. அதுவும் கிராமத்துக்கு எப்படி வர ஒத்துகிட்ட?”

அவளோ மிகவும் சாமர்த்தியமாக “மேம்! நீங்க என்னை விசாரிக்கிற மாதிரி அவங்களும் உங்க குடும்பத்தை பற்றி விசாரிச்சிட்டு தான் அனுப்பினாங்க” என்றாள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அவளது பதிலில் திருப்தியுற்றவர் உள்ளே அழைத்துச் சென்று அவள் தங்குவதற்கு என்று ஒரு அறையை காண்பித்தார். சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு காலை உணவிற்கு வரும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அந்த அறைக்குள் நுழைந்தவளின் பார்வை அறையை முற்றிலுமாக ஆராய்ந்தது. அது பழங்காலத்து வீடு போல இருந்தாலும் உள்ளே புதிய மாற்றங்களுடன் இருந்தது. அறையின் ஒவ்வொரு மூலையையும் அவளது கண்கள் ஆராய்ந்தது. போலீஸ்காரன் எதுவும் எடக்கு மொடக்கா பண்ணி வச்சிருந்தாலும் வச்சிருப்பான் என்று எண்ணியபடி ஒவ்வொன்றையும் ஆராய்ந்து விட்டு மெல்ல அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தாள்.

அவளது எண்ணம் முழுவதும் அடுத்து என்ன என்று திட்டங்களை வகுத்துக் கொண்டது. தன்னை சுத்தப்படுத்திக் கொடுத்து வந்து கங்கா தன்னை அழைப்பதற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு அவளது அறைக் கதவு தட்டப்பட, மெதுவாக சென்று கதவை திறந்தாள். அங்கே விரிந்த புன்னகையுடன் அவளுக்காக காத்திருந்தார் கங்கா.

அவளை ஆசையாக பார்த்துவிட்டு “குளிச்சு ரெடி ஆகிட்டியா? வாம்மா சாப்பிடலாம்” என்று அழைத்துக் கொண்டு உணவு மேஜைக்கு சென்றார்.

ஆறு பேர் அமர்ந்து சாப்பிடும் மேஜையின் நடுநாயகமாக அமர்ந்திருந்தவரை பார்த்ததும் உள்ளுக்குள் திடுக்கென ஒரு உணர்வு எழ, மெல்ல அங்கே சென்று நின்றாள். அவரின் பார்வையும் அவள் மீது தான்.

“என்னங்க! இந்த பொண்ணு பேர் அகல்யா. நான் என்னோட எழுத்து வேலைக்கு நோட்ஸ் எடுக்க ஆள் தேவைன்னு கேட்டிருந்தேன். அதுக்கு தான் வந்திருக்கா” என்றார்.

அவரை நேருக்கு நேர் பார்த்து “வணக்கம் சார்” என்றாள்.

ராமையா அவளை கூர்ந்து பார்த்து விட்டு “உன்னை ஏற்கனவே பார்திருக்கேனோ?” என்றார் சந்தேகத்துடன்.

நாற்காலியை நகர்த்தி விட்டு அவளை அமர சொன்னவர் “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க போலீஸ் புத்தியை” என்று கிண்டலாக அவரிடம் கேட்டுவிட்டு உணவை பரிமாற ஆரம்பித்தார்.

போலீஸ் என்றதும் சஞ்சலாவின் உடல் லேசாக விறைத்து பின் இயல்பிற்கு மீண்டது.

“இல்ல சார்! நான் இப்போ தான் உங்களை பார்க்கிறேன்” என்றாள்.

அவளிடம் புன்னகயுடன் “அவர் ரிடையர்ட் ஐஜி அகல்யா. யாரை பார்த்தாலும் குற்றவாளியாகவே பார்ப்பாங்க அப்பாவும் பிள்ளையும்” என்றார்.

உணவருந்த ஆரம்பித்தாலும் அவரின் பார்வை முழுவதும் அவள் மீதே இருக்க, தைரியமான சஞ்சலாவிற்கே நெருடலாக இருந்தது. கங்கா அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறி சாப்பிட சொன்னாலும், அவரின் விடாத பார்வையில் உணவு இறங்க மறுத்தது.

சாப்பிட்டுவிட்டு எழுந்து நின்றவர் வாக்கரின் உதவியுடன் மெல்ல நடக்க ஆரம்பிக்க, அதைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தவள் “மேம்! சாருக்கு...” என்று இழுத்தாள்.

அவரின் மறுபக்கம் சென்று பிடித்துக் கொண்டவர் “ஒரு முக்கியமான கேஸில் பிடிப்பட்டவங்க காலில் வெட்டிட்டாங்க” என்றபடி அவரை அழைத்துக் கொண்டு நடந்தார்.

கங்கா சொன்னதை கேட்டு அதிர்ந்து ராமையாவை பார்த்தபடி நின்றாள். அவரும் மெல்ல தலையை திருப்பி அவளை பார்த்து விட்டு “வா! உன் கிட்ட பேசணும்” என்றார்.

அதை கேட்ட கங்கா மெல்லிய குரலில் “என்ன விசாரணையா? நல்ல பெண்ணாக தான் தெரியுறா” என்றார்.

திரும்பி மனைவியை முறைத்து விட்டு “அதை நான் பார்த்து சொல்றேன்” என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு நடந்தார்.

அவர்களின் வழக்காடலை கேட்டுக் கொண்டே பின்னே சென்றாள். அறைக்குள் இருந்த சாய்வு நாற்காலியில் சென்றமர்ந்தவர் எதிரே இருந்த டீபாயின் மீது காலை வைக்க முயல, கங்கா அவருக்கு உதவினார்.

சஞ்சலா அவரின் முன்னே சென்று நின்றாள். நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டவர் “ம்ம்...சொல்லு. உன் உண்மையான பெயர் என்ன? எதுக்காக இங்கே வந்திருக்க?” என்றார்.

“சார்! என் பெயர் அகல்யா. மேம் விளம்பரம் கொடுத்திருந்தாங்க அதை பார்த்து தான் வந்தேன்” என்றாள்.

அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டே “அது உங்க மேம் கிட்ட நீ சொன்ன கதை. எனக்கு தேவை உண்மை” என்றார்.

மனதிற்குள் கிழட்டு சிங்கம் இன்னும் மாறல என்று எண்ணிக் கொண்டே மீண்டும் அதையே திருப்பிச் சொன்னாள்.

சற்று நேரம் அந்த அறையில் அமைதி நிறைத்தது. சிந்தனையுடன் இருந்தாலும் அவரின் பார்வை அவள் மீதே இருந்தது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு கங்காவை பார்த்து கையை நீட்ட அவர் போனை அவரிடம் கொடுத்தார்.

சிவதாசிற்கு அழைத்து “சிவா! சரியான ஆளை தான் தேர்வு செய்திருக்க. தைரியமும், திமிரும் கலந்தே இருக்கு” என்றார்.

அவர் யாரிடம் பேசுகிறார் என்று யோசனையுடன் கவனித்த சஞ்சலாவிற்கு அவர் தன்னை பற்றி சொல்கிறாரோ என்கிற சந்தேகமும் எழ, அவரையே பார்த்திருந்தாள்.

அவளின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டவர் “சுபேஷ் தான் சரியான ஆள். அம்மா சொன்னா நீ சொன்ன விவரங்களை எல்லாம் சரி பார்த்துட்டேன். எல்லாம் சரியா இருக்கு” என்றார்.

கங்காவை பார்த்து மெல்லிய குரலில் “மேம் நான் கிளம்பவா?” என்றாள்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
52
33
8
அவரும் “சரிம்மா! அப்பாவும் பிள்ளையும் பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாங்க. நீ போய் ரெஸ்ட் எடு. நாளைக்கு நம்ம வேலைகளை ஆரம்பித்து கொள்ளலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அவரிடம் தலையசைத்துவிட்டு அவசரமாக அறையை விட்டு வெளியேறும் முன் ராமையாவை பார்க்க, அப்போதும் அவரின் பார்வை அவளின் மீது தான் இருந்தது.

வேக நடையுடன் தன் அறைக்கு வந்தவளுக்கு முதன் முறையாக வியர்க்க ஆரம்பித்தது. அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்று எண்ணி தான் வந்தது. ஆனால் கால் மட்டும் தான் சரியில்லையே தவிர, அந்த பார்வையின் வீரியம் இன்னும் குறையவில்லை. சிவதாசிடம் கூட இந்த வீரியம் இல்லை. அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணியபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.

தான் நினைத்ததை சில நாட்கள் தள்ளி போடுவோமா என்றும் யோசித்தாள். தான் தயங்குகின்ற ஒவ்வொரு நொடியும் அவர்களின் வேகம் கூடும் என்கிற எண்ணமும் எழ, நிச்சயமாக இதை முடித்தே ஆக வேண்டும் என்கிற உறுதி எழுந்தது. அதே சமயம் தன்னை அறிந்து கொள்ளாதது பெரிய ஆசுவாசத்தை கொடுத்தது.

போனில் பேசிக் கொண்டிருந்த ராமையா “அப்போ சின்ன பெண்ணா பார்த்தது. நல்லா வளர்ந்துட்டா சிவா. என் பார்வையை கண்டு குற்றவாளிகளே நடுங்குவாங்க. ஆனா இவ தெனாவெட்டா நிற்கிறா. குட் சாய்ஸ்! எப்படி இவளை பிடிச்ச?”

“அதெல்லாம் இந்த கேஸ் முடிந்ததும் சொல்றேன் பா. இனி அவ உங்க பொறுப்பு. எந்த தவறும் நடக்காம பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு வைத்து விட்டான்.

தான் வந்து வலையில் சிக்கி இருக்கிறோம் என்று அறியாத அந்த பெண் சிங்கம் தனது கணக்குளை எப்படி முடிக்க வேண்டும் என்கிற சிந்தனையில் இருந்தது.

அவர்களின் தெரு முழுவதும் சிவதாசின் டீமின் கண்ட்ரோலில் வந்திருந்தது. ஒரு நாய் கூட அவர்களின் அனுமதி இன்றி அங்கே உள்ளே நுழைய முடியாதபடி அனைத்தும் மறைமுகமாக செய்யப்பட்டிருந்தது.

கங்கா தான் சற்று கவலையுடன் “இதெல்லாம் சரியா வருமாங்க? ரொம்ப சின்ன பெண்ணா இருக்காளே? அவளுக்கு ஏதாவது ஒன்று...” என்று சொல்லி முடிக்கும் முன்னே “கங்கா! இனி இதை பற்றி பேச நமக்கு அனுமதி இல்லை. அவன் பார்த்துப்பான். அதோட அவளையும் சாதரணமா எடை போடாதே” என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து கொள்ள முயற்சித்தார்.

அவருக்கு உதவி செய்து படுக்க வைத்து விட்டு தானும் படுத்த கங்காவின் மனது தான் அடித்துக் கொண்டது. சிவா வந்து அவரிடம் இந்த வேண்டுகோளை வைத்த போது கடுமையாக மறுத்தார். ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் வேலையின் குற்றப் பின்னணியை கூறிய போது தன்னையும் மீறி அவனுக்கு தலையசைத்தார்.

இனி என்ன முயன்றாலும் இதில் பின் வாங்க முடியாது. நடப்பது நடக்கட்டும் என்று எண்ணி கண்களை மூடிக் கொண்டார். பெண் சிங்கமோ ஜன்னல் வழியே வீட்டின் வெளியே ஆராய்ந்து கொண்டிருந்தது. ஏதேனும் பாதுகாப்பு தெரிகிறதா என்று. அப்படி எதுவும் தென்படாது போக அமைதியாக கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
 
  • Like
Reactions: Dsk
Need a gift idea? How about some novelty socks?
Buy it!