Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
அத்தியாயம் – 1

‘கவிதா பெண்கள் விடுதி’ என்கிற போர்டை பார்த்தபடி அவன் நின்றிருந்தான். உள்ளே சென்று அவளைப் பார்பதற்கு யோசனையாக இருந்தது. அவளின் கேள்விகளுக்கு தன்னால் பதில் தர இயலுமா? நிச்சயமாக முடியாது. என்ன தைரியத்தில் இங்கு வந்து நிற்கிறோம் என்று யோசித்தபடியே மீண்டும் போர்டை பார்த்தான்.

பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். காவலாளி இவன் வெகுநேரமாக போர்டை பார்த்துக் கொண்டே நிற்பதை சந்தேகக் கண்ணோடு பார்த்தான்.

அவனுடைய பார்வை எங்கேனும் அவளாக தென்படுகிறாளா என்று தேடியது. அத்தனை நேரம் நின்றும் அவள் கண்களில் படவில்லை எனும் போது வாய்ப்பில்லை என்றே புரிந்தது.

தயக்கத்தை உதறி தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான். வரவேற்ப்பில் இருந்த பெண்ணிடம் “சுடர்கொடியைப் பார்க்கணும்” என்றான்.

“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?”

“மாமா”.

அங்கே சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை நிறுத்தி சுடரை அழைத்து வரும்படி கூறினாள்.

தனதறையில் இருந்த மேஜையில் குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தவளை கலைத்தது அந்தப் பெண்ணின் குரல்.

“சுடர்கொடி உனக்கு கெஸ்ட். உங்க மாமா வந்திருக்காங்க” என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள்.

“மாமாவா? அது யாரு?” என்று யோசனையுடன் எழுந்தவள் மெல்ல படியிறங்கி வர ஆரம்பித்தாள்.

அங்கு இடுப்பில் கை வைத்தபடி முதுகு காட்டிக் கொண்டு நின்றவனை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. மனமோ ‘மாமாவா?’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள்.

அவளின் வருகையில் சட்டென்று திரும்பியவனின் பார்வை முழுமையாக ஆராய்ந்தது. அதில் அவளின் உடல் மெலிவும், கண்களின் கருவளையமும் அவளின் மனதை கூறியது.

“வா வெளில போய் பேசுவோம்”.

அவளும் அங்கே வைத்து எதையும் பேசக் கூடாது என்று அமைதியாக அவன் பின்னோடு சென்றாள்.

விடுதியின் முன்புறம் உள்ள மரத்தின் கீழே சென்றதும் பொறுமையைப் பறக்க விட்டவள் “எதுக்கு மாமான்னு சொன்னீங்க?” என்று எகிறினாள்.

இருகைகளையும் கட்டிக் கொண்டு அவளை ஆழ்ந்துப் பார்த்தவன் “அப்போ நான் யார் உனக்கு?”

அவளும் நேரடியாக அவன் கண்களைப் பார்த்து “யாருமே இல்லை! நமக்குள்ள என்ன உறவிருக்கு? எதுவுமில்லை”.

“சோ வெறுத்து ஒதுக்கிட்ட”.

“ஒதுங்கிட்டேன்! வேற என்ன செய்ய முடியும்? எதுவுமே வேண்டாம் யாருமே வேண்டாம்னு ஒதுங்கி வந்துட்டேன்”.

“ஏன் சுடர்? நான் தான் சொன்னேனே. எல்லாவற்றிற்கும் காலம் நேரம் இருக்கு பொறுமையாக இரு என்று”.

சட்டென்று கண்கள் கலங்கிவிட “தவறு எங்கப் பக்கம் இருக்கு நடந்து முடிந்துவிட்ட எதையும் மாற்றிவிட முடியாது. ஆனால் கொட்டப்பட்ட வார்த்தைகளை அள்ளிவிட முடியுமா சொல்லுங்க? அந்த வார்த்தைகள் என்றைக்கும் என்னை துரத்திக் கொண்டே தான் இருக்கும். அதோட கயல் அவளை நினைத்தால் எதுவுமே பேசக் கூடாது”.

“அந்த வார்த்தைகள் தான் உனக்கு முக்கியமா போயிடுச்சு இல்ல? நான் உன் வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் உண்டாக்கலையா? ம்ம்..சரி விடு! நீ எதுக்கு ஹாஸ்டலில் இருக்க?”

முகம் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? நம்மை பொறுத்தவரை எல்லாமே முடிஞ்சு போச்சு. தயவு செய்து என்னை பார்க்க வராதீங்க”.

“என் கேள்விக்கு பதில் சொல்லு சுடர். நீ ஏன் இங்கே இருக்க?”

அவனை முறைத்து பார்த்துவிட்டு நகர எத்தனிக்க, அவளின் மணிக்கட்டைப் பிடித்திருந்தான். அழுத்தி பிடித்ததில் வலி எடுக்க ஒருவித எரிச்சலுடன் “விடுங்க! இன்னும் என்ன வேணும்? மொத்தமா என் உயிரை அள்ளி குடிச்சாச்சு. வேற என்ன தான் வேணும்?”

அவளின் கையை விட்டவன் “ஏண்டி? ஏன்? நீயும் உன் பங்கிற்கு என்னை படுத்துற? கொஞ்சம் பொறுமையா இருன்னு தானே சொல்றேன்?”

மேலும் கண்களும் முகமும் கசங்கிப் போக “இதுக்கு தான்! இதுக்கு தான் ஒதுங்கி போயிடுங்கன்னு சொல்றேன். மனசெல்லாம் விஷமாகி போச்சு. இதுல நாம செய்வதற்கு எதுவுமே இல்லை. வேண்டாம் அர்ஜுன்! இதுக்கு மேல என்னை தொந்திரவு செய்தால் நான் இங்கிருந்தும் போக வேண்டிய நிலை வரும். குற்ற உணர்வில் மறுகிக் கொண்டு இருக்கிறேன் அர்ஜுன்”.


அவளை முறைத்து பார்த்துவிட்டு ஓய்ந்து போய் “என்னால முடியல சுடர். ஆளாளுக்கு அவங்க தரப்பைப் பேசி என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டு இருக்கீங்க. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துட்டேன். யாருமே இறங்கி வரலேன்னா எப்படி? நீ என்ன தப்பு செய்த குற்ற உணர்வில் உழல்வதற்கு?”
 
Last edited:
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
ஒருவித விரக்தியுடன் “அதனால தான் சொல்றேன். விட்டுடுங்க! எல்லோருமே அவங்க அவங்க தரப்பில் காயப்பட்டாச்சு. தவறின் பக்கம் நான் நிற்கிறேன் அர்ஜுன். எனக்கு எந்த தகுதியும் இல்லை. இந்த ரணங்கள் காலம் முழுக்க ஆறாது. நெருக்கமான உறவிற்குள்ள அதற்கான சாத்தியங்கள் இல்லை. கயலின் வாழ்க்கை நல்லபடியா இருக்கணும் என்பது தான் இப்போதைக்கு என்னுடைய வேண்டுதல்”.

அவளின் கரங்களை அழுத்தமாகப் பிடித்து நிற்க வைத்தவன் “ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் என்னால எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது சுடர். தேவையில்லாம ஓடிக் கொண்டே இருக்காதே! என் வாழ்க்கையும் உன் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கு. அதற்கான காலத்திற்காக நாம காத்திருக்க வேண்டியது தான்”.

“ம்ச்...சொன்னா கேட்க மாட்டீங்க! என்னை விட்டு விலகியே இருங்க. அது தான் உங்க வாழ்க்கைக்கு நல்லது” என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

சற்று நேரம் அப்படியே நின்றவன் யோசனையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

ஆவடியில்..

தனதறையில் பிள்ளையை முதுகில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அறைக்கு வெளியே நின்ற மங்களம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். குழந்தை உறங்கியதும் மெல்ல கதவை சாற்றிவிட்டு வெளியே வந்த மகளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மற்றொரு அறைக்குள் சென்றார்.

“என்னமா?”

“மாப்பிள்ளை என்ன தான் சொல்றார்? இன்னும் பிடிவாதமா இருக்காரா? அவளைப் பற்றி ஏதாவது தெரிஞ்சுதா?”

“அந்த மனுஷன் புத்தியை அடமானம் வச்சிட்டு நிக்கிறாரு மா. அந்தம்மா சொல்ற பேச்சைக் கேட்டு ஆடிகிட்டு இருக்கார். அவ எங்கே போய் தொலஞ்சளோ?”

“ஆனாலும் அந்த பொம்பளை பேசுறது ரொம்ப ஓவருடி. நாம கல்யாணம் பேச போனப்ப என்னவோ பேசவே தெரியாத மாதிரி சீன போட்டா. இப்போ என்னா பேச்சு பேசுறா. ஒழுங்கா பெண்ணை வளர்க்காம எல்லாவற்றையும் உன் பக்கம் திருப்பி விட்டிருக்கா”.

“கொஞ்ச நாள் அவங்க பேச்சை கேட்டுகிட்டு இருக்கட்டும்மா. எத்தனை நாளைக்கு இப்படி ஆடுறாருன்னு பார்க்கலாம்”.

“உன் தங்கச்சி வேற ஹாஸ்ட்டலில் போய் உட்கார்த்திருக்கா”.

“விட்டுப் பிடிம்மா. அவ அங்கேயே இருக்கட்டும். என் வீட்டுக்காரர் நம்ம பக்கம் வரட்டும்.

அதுக்குப் பிறகு அந்தம்மாளுக்கு கச்சேரியை வச்சுக்குவோம்”.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க வெளியிலிருந்து வந்த பரதன் தலையில் அடித்துக் கொண்டார்.

தந்தை வந்ததை பார்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்த வசந்தி “மாப்பிள்ளையை பார்க்க போனீங்களே என்ன சொல்றார் அவர்?”

தாயையும், மகளையும் நிமிர்ந்து பார்த்தவர் “பெண்ணா பெத்து வச்சிருக்கீங்கன்னு கேட்கிறார்? என் தங்கச்சி எங்கேன்னு உங்க பெண்ணை கேட்டு சொல்லுங்கன்னு கேட்கிறார்”.

அவர் அப்படி சொன்னதும் “அதை நீங்க கேட்டுகிட்டு வந்திருக்கீங்க. பொண்டாட்டி பிள்ளையை பார்த்துக்க துப்பில்லாம வளர்த்திருக்காளே உங்கம்மான்னு கேட்க வேண்டாமா? இவர் தங்கச்சி எங்கேயோ ஓடிப் போனதுக்கு என் பெண்ணை தப்பு சொன்னா அதை நாங்க கேட்டுகிட்டு இருக்கனுமா?”

மனைவியை முறைத்தவர் “நீ அவளுக்கு புத்தி சொல்கிற இடத்தில் இருக்கிற நிர்மலா. இந்த மாதிரி பேசிப்பேசியே அவள் வாழ்க்கையை கெடுக்காதே”.

“அதானே பார்த்தேன்! நீங்களும் உங்க சின்ன பொண்ணும் ஏன் இப்படி இருக்குறீங்க? நீங்க இந்த விஷயத்தில் ஒதுங்கியே இருங்க போதும். நாங்க பார்த்துக்கிறோம்” என்று எரிந்து விழுந்தார்.

அவரின் பதிலில் வெறுத்துப் போனவர் “எக்கேடோ கெட்டுப் போங்க” என்று கடுப்படித்துவிட்டு எழுந்து போய் விட்டார்.

“நீ வா வசந்தி. அந்த காலத்திலிருந்து மாறவே இல்லை. பொழைக்க தெரியாத மனுஷன்” என்று சலித்துக் கொண்டு மகளை அழைத்துச் சென்றார்.

ஹாஸ்டலில் இருந்தவளோ மனம் முழுவதும் ரணத்தோடு அமர்ந்திருந்தாள். ஜன்னல் வழியாக வாசலில் நின்று கொண்டிருந்தவனையே ஆராய்ந்தது அவள் கண்கள்.

இந்த மூன்று மாதத்தில் நன்றாக இளைத்திருந்தான். கண்களில் வலியும், வேதனையும் தெரிந்தது. உடலில் ஒரு சோர்வும் இருந்தது. அவனைப் பார்க்க பார்க்க அவளின் மனம் தவித்தது.

அப்போது அவனது கண்களும் அவளின் ஜன்னலைத் தொட்டு நின்றது. இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டது. இரு மனங்களும் நடந்த சம்பவங்களை ரப்பர் கொண்டு அழித்து விடக் கூடாதா? என்று தான் எதிர்பார்க்கிறது.

காலம் கடந்து விட்டது என்று மனதிற்கு புரிந்தாலும், காதல் கொண்ட மனங்களுக்கு அது புரியவில்லை.


அவளை தொடர்ந்து பார்க்க முடியாமல் வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு இந்த பிரச்னையை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை. எந்தப் பக்கம் போனாலும் இடிக்கிறது.
 
Last edited:
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
329
323
63
யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவனை கலைத்தது அவனது போன். அண்ணன் தான் அழைத்திருந்தான்.

“சொல்லு குணா”.

“எங்கடா போன? இங்கே அம்மா சத்தம் போட்டுட்டு இருக்கு. உன்னை காணும்னு”.

“ஒரு வேலையா மவுன்ட் ரோட் வரை வந்தேன். என்னாச்சு எதுவும் பிரச்சனையா அம்மா ஏன் கத்துது?”

“நாம சும்மா இருந்தாலும் கிரகம் சும்மா விடாதுடா. என் மாமானார் வந்துட்டு போனார். அவ்வளவு தான் அம்மா சாமி வந்து ஆடிட்டு இருக்கு”.

“போச்சுடா! அந்த மனுஷன் ஏன் வீட்டுக்கு வந்தார். உன்னை வந்து கடையில் பார்த்திருக்கலாமில்ல”.

“அது உனக்கும் எனக்கும் தெரியுது. அந்த மனுஷனுக்குத் தெரியலையே. சம்மந்தியம்மாவை பார்க்கனும்னு வந்து நிற்கிறார்”.

“என்ன தான் சொல்றார்?”

“அவர் என்னத்த சொல்லுவாரு...அம்மாளும், மகளும் தான் பேயிங்க. குழந்தையை நினைச்சுப் பாருங்க மாப்பிள்ளைன்னு கெஞ்சுறாரு”.


பெருமூச்சுடன் “பிள்ளை பாவம் தான் குணா”.

“நம்ம தங்கச்சியை நினைச்சுப் பாரு அர்ஜுன். எனக்கு மட்டும் பிள்ளையை விட்டுட்டு இருக்கணும்னு ஆசையா என்ன? அந்த கேடுகெட்டவ இப்படியொரு காரியத்தை செய்வான்னு நான் நினைச்சேனா?”.

“அவங்க (அண்ணி) கொஞ்சமாவது யோசிச்சு இருந்திருக்கலாம்”.

“நீயும் நானும் செலவு செய்ய வேண்டாம் பாரு. அதுக்காக தான் செய்திருக்கா. அவள் செய்ததை என்னால மன்னிக்கவே முடியாது அர்ஜுன். என்ன ஒன்னு அதனால என் குழந்தையும் கஷ்ட்டப்படுது. அதுக்காக அவளை மன்னிச்சு ஏற்றுக் கொள்ள மாட்டேன்”.

“அதை விடு! ஸ்டேஷன் போய் விசாரிச்சியா? தகவல் எதுவும் கிடைச்சுதா?”

“எதுவுமில்ல! திக்கத்துப் போய் தான் நிற்கிறேன் அர்ஜுன்” என்றவனின் குரல் கலங்கி இருந்தது.

அர்ஜுனுக்கும் மனம் கலங்கிப் போனது.

“என் பிரெண்ட் சுரேஷ் கிட்ட பேசிப் பார்க்கிறேன் குணா. அவனுக்கு கமிஷனரைத் தெரியும். ஏதாவது தகவல் கிடைக்குமா பார்ப்போம்”.

“அம்மாவை நினைச்சு தான் அடிவயிறு எல்லாம் கலந்குதுடா. கயலை நினைச்சு அழுதழுது உடம்பை கெடுத்துக்குது. மூணு மாசம் ஓடிப் போச்சுடா”.

“அண்ணன்களா நாம ரெண்டு பேரும் இருந்தும் விட்டுட்டோமே அதை நினைச்சு தான் மனசெல்லாம் எரியுது குணா”.

“அப்பா இறந்த பிறகு நம்மளை பாடுபட்டு வளர்த்துச்சு. எந்த கஷ்டமும் வரக் கூடாதுன்னு பார்த்து பார்த்து செஞ்சுது. அதிலயும் கயலை பொத்தி பொத்தி வளர்த்துச்சு. இவளை என்னைக்கு நான் கட்டிக்கிட்டு வந்தேனோ அன்னைக்கே நம்ம குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சுடா” என்றான் கண்ணீருடன்.

உண்மை தானே! வசந்தி வந்த பின் தான் இத்தனை அனர்த்தங்களும். அவளால் தான் இன்று கயலை இழந்து வேதனையுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமா? சுடருக்கும் அவனுக்குமான காதலுக்கும் தீயை வைத்தாயிற்று.

பல எண்ணங்கள் அவனை சுழன்று அடிக்க, முதலில் கயல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவளுக்கு எதுவுமில்லை என்று தெரிந்த பின் தான் மற்றவற்றை யோசிக்க வேண்டும்.
 
  • Like
Reactions: Kothai suresh