Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
அத்தியாயம் – 1

விடியலின் நேரம், அந்த பிரம்மாண்டமான பங்களாவின் பூஜை அறை சாம்பிராணி புகையால் மறைந்திருக்க, அங்கே கண் மூடி நின்று கடவுளிடம் தனது பிரார்த்தனையை வைத்துக் கொண்டிருந்தார் அவ்வீட்டின் தலைவர் சிங்காரவேலன். தலை நிறைய மல்லிகையும், நெற்றியில் தீட்டிய குங்கமத்தோடும் தீபாராதனைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.

அவர்கள் இருவருக்கும் நடுவில் நின்று தானும் கண்களை மூடி பிரார்த்தனையில் இருந்தான் அவர்களின் புதல்வன் ஆனந்தன். தீபாராதனை முடிந்து பூஜை அறையை விட்டு வெளியே வந்த வேலன், ஆனந்தின் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே ராஜா?” என்றார்.

ஏழு வயதே ஆன அவனோ “நீங்களும், மேடமும் எழுந்த சப்தம் கேட்டுது. அது தான் நானும் உங்களோட சாமி கும்பிட வந்துட்டேன்” என்றான்.

“மேடம்னு சொல்லக் கூடாது ஆனந்த். அம்மான்னு சொல்லு. நாங்க உன்னை எங்க மகனாக தான் வளர்க்கப் போகிறோம்” என்றார்.

தந்தை, மகன் இருவரும் பேசுவதை பெருமையாக பார்த்துக் கொண்டே இருவருக்கும் பானங்களை எடுத்துக் கொண்டு வந்தவர், எதிரே மாமியாரை பார்த்ததும் “வாங்க அத்தை! நல்லா தூங்கி எழுந்தீங்களா?” என்றார்.

அவரோ மகனுடன் அமர்ந்திருக்கும் ஆனந்தனை முறைத்துக் கொண்டே எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து “என்னடா திமிரு ஏறி போச்சா? அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்க?” - கோபமாக.

அவர் வந்ததுமே சட்டென்று எழுந்து நின்று கொண்ட ஆனந்தை இழுத்து தன்னருகே அமர வைத்துக் கொண்ட வேலன் “உங்களுக்கு என்னமா பிரச்சனை? இவனை ஏன் இப்படி விரட்டுறீங்க?” – எரிச்சலுடன் .

“உனக்கு தான் அறிவு கெட்டுப் போச்சுன்னா இவளும் உன்னோட சேர்ந்து ஆடிட்டு இருக்கா. ரோட்டில் போறவனுக்கு ஒருவேளை சோறு போட்டோமா விட்டுட்டு வந்தோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு இவனை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்து வச்சிருக்க?”

“என்னம்மா நீங்க? பெரியவங்களா இருக்கீங்க இப்படி பேசலாமா? சின்ன பையன் மா. நமக்கு இருக்கிற சொத்துக்கு இவனை வளர்க்கிறதுல என்ன ஆகிடப் போகுது?’

மகன் தான் சொல்வதை புரிந்து கொள்ள மறுக்கிறானே என்கிற கோபத்தோடு “நம்ம தாட்சாயினி இருக்கிறப்போ இவன் எதுக்கு? உதவி செய்யணும்னா காசு பணத்தை கொடுத்து எங்கேயாவது அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடு. வீட்டோட வச்சுகிறது எல்லாம் நல்லதில்லை சொல்லிட்டேன்” என்று முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்துக்கு முகம் சுருங்கிப் போயிருந்தது. அதைக் கண்டு அவனை தன்னோடு அணைத்துக் கொண்ட வேலன் “நீ எதுவும் மனசில் வச்சுக்காதடா. பாட்டி போகப் போக உன்னை ஏத்துக்குவாங்க. நீ எங்க பிள்ளை தான். தாட்ச்சு பாப்பா உன் தங்கச்சி தான்” என்று தட்டிக் கொடுத்தார்.

தாட்சாயினிக்கு இரண்டு வயதாகிறது. மதுரைக்கு அருகே இருக்கும் மாங்குள கிராமத்தில் மிகப் பெரிய செல்வந்தரான சிங்காரவேலன், மதுரை செல்லும் வழியில் பசியோடு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஆனந்தைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அவருக்கு ஆனந்திடம் ஏதோவொரு பற்று வந்திருந்தது. அதனால் மனைவியிடம் அனுமதி பெற்று அவனை வளர்க்க முடிவு செய்தார். ஆனால் அவரது அன்னை அங்கயற்கண்ணி அதை தடுத்தார். அவருக்கு அதில் விருப்பமில்லை.

மாமியாருக்கு காப்பி கொடுக்க அவரது அறைக்குச் சென்றார் மீனாட்சி. அங்கு கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தவர் அருகே சென்று “அத்தை! காப்பி எடுத்துக்கோங்க” என்றார்.

“நீயாவது புரிஞ்சுக்கோ மீனா! இது சரி வராது. உங்களுக்குப் பிள்ளை இருக்கிறப்போ எதுக்கு கண்டதையும் கொண்டு வந்து சேர்க்கிறான்?”

அவரின் கைகளைப் பற்றிக் கொண்டவர் “அவன் மேல ஏதோவொரு பாசம் தான் அத்தை. அதனால் தப்பில்லை. அவனும் நம்ம பாப்பாவோட வளர்ந்திட்டு போகட்டுமே”.

“நான் சொல்ல வரது உங்களுக்குப் புரியல. அவனை வளர்க்கிறது பெருசில்ல. நம்ம பாப்பாவுக்கு வர வேண்டிய சொத்தில் அவனுக்கும் பங்கு கொடுப்பீங்களா? எவன் பெத்த பிள்ளைக்கோ நீங்க எதுக்கு செய்யணும்?”

மாமியார் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தாலும் “அவனை படிக்க வச்சு அவன் காலில் நிற்க வைத்திடுவோம் அத்தை. அதோட நமக்கு இருக்கிறதுல கொஞ்சம் கொடுத்தா குறைஞ்சு போயிட மாட்டோம். அவன் நம்மோட நம்ம பிள்ளையா வளரும் போது நமக்கும் பாசம் இருக்குமில்லையா?”
ஒருவித சலிப்போடு “என்னவோ செய்ங்க! எனக்கு இதெல்லாம் பிடிக்கலை”.

“விடுங்க அத்தை. அவனை நம்ம குழந்தையாகப் பாருங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இரண்டு வயது தாட்சாயினிக்கு ஆனந்தை கண்டதும் குதுகலமாகி விடுவாள். ‘ணா...ணா’ என்றழைத்துக் கொண்டு அவன் பின்னோடு தான் நிற்பாள். எதற்கெடுத்தாலும் அவளுக்கு அவன் தான் வேண்டும். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
216
146
43
சிங்காரவேலனும், மீனாட்சியும் அவரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டாலும் அந்தக் காலப் பெண்மணி அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று விட்டுவிட்டார்கள்.

காலங்கள் உருண்டோடியது. ஆனந்த் வளர்ந்து இருபத்துஒன்பது வயது வாலிபனாகி இருந்தான். தாட்சாயினும் அழகு தேவதையாக வளர்ந்து நின்றாள். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்தபடியே தந்தையின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டாள்.

சிங்காரவேலனுக்கு ஆனந்த் இல்லாமல் எதுவும் முடியாது. எல்லாவற்றிற்கும் அவனைத் தான் தேடுவார். பாட்டிக்கு தொண்ணூறு வயது ஆகி இருந்தது. ஆனாலும் எழுபது வயது தோற்றத்துடன் ஆனந்தை கண்டால் அதே சிடுசிடுப்புடன் தான் இருப்பார். அவனும் இப்போதெல்லாம் அவரை சமாளிக்கப் பழகி இருந்தான். சில நேரங்களில் அவரை சீண்டவும் தயங்க மாட்டான்.

தன் முன்னே நின்றவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு நின்றான் ஆனந்த்.
“ப்ளீஸ் அண்ணா! என் பிரெண்ட் வித்யாவுக்கு மதுரையில கல்யாணம். முதல் நாளே வரச் சொல்றா. இந்த அம்மாவும், பாட்டியும் விட மாட்டேன்றாங்க அண்ணா. நீ அப்பா கிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கி கொடு” என்றாள் கெஞ்சலாக.

குறும்புச் சிரிப்போடு “நீ மதுரைக்கு போனா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு? நான் எதுக்கு உனக்கு பெர்மிஷன் வாங்கித் தரனும்?”

முகத்தை லேசாகச் சுருக்கி “ப்ளீஸ் அண்ணா! நீங்க என்ன கேட்டாலும் செய்றேன்” என்றாள் பாவமாக.

அவனோ கண்களில் வழிந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “அப்போ கல்யாணத்துக்கு என்னையும் கூப்பிடு. நானும் வந்து நாலு பொண்ணுங்களை பார்க்கிறேன்” என்றான்.
அவன் அப்படிகே கேட்பான் என்று எதிர்பார்க்காதவள் “அண்ணா!” என்றாள் கால்களைத் தரையில் உதைத்தபடி.

அவள் தலையை லேசாக குலுக்கி “ஏண்டா நீ போய் அப்பா கிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கி கொடுன்னு ஆர்டர் போட்டிருந்தா செஞ்சிருக்க போறேன். நீ என்னை கெஞ்சனுமா?”
அவனது கைகளை இறுகப் பற்றி கொண்டவள் “என் செல்ல அண்ணா” என்று கொஞ்சிக் கொண்டாள்.

அந்நேரம் அங்கே வந்த பாட்டி “பாப்பா! இங்கே வா! டேய்! நீ கிளம்பு” என்று அவனை முறைத்து விரட்டி விட்டார்.

அவளை தன்னருகே இழுத்து வைத்துக் கொண்டவர் “நீ பண்றது நல்லாயில்ல பாப்பா. உனக்கு எது வேணும்னாலும் நீ தான் நேரடியா உங்கப்பா கிட்ட கேட்கணும். அந்தப்பய யாரு?” என்றார் கடுப்பாக.

அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்துவிட்டு அவசரமாக அங்கிருந்து சென்றான் ஆனந்த்.
பாட்டியும் உள்ளே சென்றுவிட, அவர் மீது கோபத்தோடு தனது அறைக்குச் செல்ல முயன்றவளை அழைத்தது ஆனந்தின் அலைப்பேசி. அதைக் கண்டதும் அவசரமாக சென்று ஆனந்திடம் கொடுத்து விடலாம் என்கிற எண்ணத்துடன் வாசலை எட்டிப் பார்க்க, அங்கே அவன் எப்போதோ சென்றிருந்தான். அதனால் திரையைப் பார்த்தவளின் இதயமோ எகிறி குதித்தது.

ஆனந்தின் நண்பன் தீபன் தான் அழைத்துக் கொண்டிருந்தான். அண்ணன் வெளியே சென்றிருக்கிறான் என்று எடுத்து சொல்லலாமா? என்கிற தயக்கத்தோடு திரையை தொடப் போவதும் கையை இழுத்துக் கொள்வதமாக சிறிது நேரம் போராடியவள் மெல்ல எடுத்து காதில் வைத்தாள்.

அந்தப் பக்கம் ஆனந்த் தான் எடுத்திருக்கிறான் என்கிற எண்ணத்துடன் “மச்சி! எப்படி-டா இருக்க? போன் எடுக்க நேரம் ஆகிற அளவுக்கு பிசியாடா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினான்.

பதில் சொல்ல ஆசை இருந்தாலும், அவனது குரலை உள்வாங்குவதில் அமைதியாக நின்றாள்.
“ஆனந்தா! நான் ஊருக்கு வந்திருக்கேன்-டா. சாயங்காலம் நம்ம இடத்தில பார்க்கலாமா?”
அப்போதும் அமைதியாக “..” நின்றாள்.

அதுவரை சலசலத்துக் கொண்டிருந்த தீபனுக்கு எதுவோ புரிவது போலிருந்தது. லேசாக தொண்டையை செருமிக் கொண்டு “எப்படி இருக்க? ஆனந்த் வந்தா சொல்லிடு” என்று பதிலை எதிர்பாராமல் கட் செய்திருந்தான்.

கண்களை மூடி அவனது குரலை அனுபவித்துக் கொண்டிருந்தவள், அருமையான இசை சடாரென்று நின்றது போலிருந்தது. மனமோ ஊருக்கு வந்திருக்காராமே? எப்படி பார்க்கிறது? என்று யோசித்தது.

அந்தப் பக்கம் இருந்தவனும் அதே நிலையில் தான் இருந்தான். அவளின் மூச்சுக் காற்று போன் வழியாக காதை தீண்டியதை கூட ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் அவளை ஓடோடிச் சென்று பார்க்க ஆவல் எழுந்தது.

அவளின் நினைவோடு தனது இல்லத்திற்கு சென்றவனை வரவேற்றது அன்னையின் குரல்.
“வந்ததும் வராததுமா எங்கடா போன?”

“ஆனந்தை பார்க்க போகலாமான்னு பார்த்தேன்-மா. அவன் இல்ல போல”.

“ம்ம்...வாழ்வு எப்படி எல்லாம் வருது பாரு. எங்கேயோ ரோட்டில பிச்சை எடுத்துகிட்டு இருந்தவனுக்கு வந்த வாழ்வை பாரு” என்றார் கனகம்.

“மா! அவனைப் பற்றி அப்படி பேசாதீங்க”.

“உன் பிரெண்டை சொன்னா உனக்கு ஆகாதே” என்று அலுத்துக் கொண்டு அவனுக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தார்.

“அப்பா எங்கேம்மா?”

“அவருக்கு என்ன எங்கேயாவது உட்கார்ந்து யாருக்காவது பஞ்சாயத்து பண்ணிட்டு இருப்பாரு”.
“நேரா நேரத்துக்கு சாப்பிட வேண்டாமாம்மா? நீயாவது கண்டிச்சு சொல்லலாம் இல்ல” என்று கடிந்து கொண்டிருந்தவனை உற்சாகமாக எழ வைத்தது ஆனந்தின் குரல் “மச்சான்!” என்றபடி உள்ளே வந்தவனை சென்று தழுவிக் கொண்டான்.

“வாப்பா! நீயும் உட்காரு சாப்பிடலாம்” என்று அவனுக்கும் தட்டு வைத்தார்.

“இல்லம்மா அம்மா காத்துகிட்டு இருப்பாங்க”

“என்னடா ரொம்ப பிசியா ஆளை பிடிக்கவே முடியல?”

“நான் என்னடா உன்னை மாதிரி போலீஸ்காரனா? கேஸ் பின்னாடியே ஓடிட்டு இருக்க.

அப்பாவுக்கு உதவியா இருக்கேன் அவ்வளவு தான்”.

“அது சரி!” என்று சாப்பிட்டுக் கொண்டே நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

படிக்கும் போதிருந்தே இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்திருந்தது. வளர்ந்த பின்பும் நெருங்கிய நட்பாகத் தொடர்ந்தது. கனகத்திற்கு மட்டும் ஏனோ அவனுடன் பழகுவது பிடிக்காது. தீபனின் தந்தைக்கு ஆனந்தை மிகவும் பிடிக்கும்.

அவன் வீட்டிற்குச் சென்று வர இருக்கவும், அங்கே தாட்சாயினியை பார்திருந்தவனின் மனதில் சிறு சலனம். அவளது மென்மையான குணமும், பேச்சும் பழகும் விதமும் தீபனை கவர்ந்திருந்தது. அதே போல அவளுக்கும் தீபனை மிகவும் பிடிக்கும். இருவரும் ஒருவரிடம் ஒருவர் நேரடியாக பேசியது கூட இல்லை. ஆனாலும் அடுத்தவரின் அன்பை இருவரும் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்.

நயன மொழியிலே இருவரும் தங்களை அறியாமல் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். தீபனுக்கு மட்டும் அவளுக்கு தன்னைப் பிடிக்கிறதா என்பதில் சிறு சந்தேகம் இருந்தது. அது அவளின் நடத்தையின் காரணமாக எழுந்தது. ஆனால் அவளின் நிலையோ வேறு. பாட்டிக்கு ஆனந்துடன் பேசினாலே ஆகாது. இதில் அவனது நண்பன் வரும்போது அவன் முன் நடமாடுவதைக் கண்டால் கடித்து வைத்துவிடுவார் என்றெண்ணி மறைந்திருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அதிலும் அவன் வேறு ஊரில் வேலை பார்ப்பதால் விடுமுறையின் போது மட்டுமே மாங்குளத்திற்கு வருவான். அப்படி வரும் ஒவ்வொரு சமயமும் ஒருமுறையாவது அவளை கண்டுவிட வேண்டும் என்று தவிப்பான். அவளுக்கும் அந்த தவிப்பு ஏற்படும். எப்படியாவது ஏதாவது ஒரு காரணத்தை உண்டாக்கி அவனை சந்தித்து விடுவாள். அதெல்லாம் தற்செயலாக நிகழ்ந்ததாக அவன் நினைத்திருந்தான்.

அவனை காண வேண்டி அவளாக உருவாக்கிக் கொண்ட சந்தர்ப்பங்கள் அவை என்பதை அவன் அறியான்.