Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,037
2,735
113
அத்தியாயம் - 1

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறதுஅன்னை காவேரியம்மாள் கருணை இல்லம் கரூர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான இல்லம். காலை வழிபாட்டிற்காக அனைவரும் பிரேயர் ஹாலில் குழுமிருந்தனர்.சேவை மனப்பான்மையோடு அங்கு வேலை செய்பவர்களும், ஆதரவின்றி அடைக்கலம் தேடி வந்தவர்களும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அங்கேயே தங்கியிருந்தனர்.

இறைவணக்கம் முடிந்தவுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தனர். ஸ்ருதியும் குழந்தைகளை உணவறைக்கு அழைத்துச் சென்றாள்.

அப்போது இல்லத்தின் தலைவர் சிதம்பரம் அழைப்பதாக ஒருவர் சொல்லி சென்றார். குழந்தைகளை அவரவர் இடங்களில் அமர வைத்து, ஆயாம்மாவிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி சிதம்பரம் அறை நோக்கிச் சென்றாள்.

அவளைப் பார்த்ததும் அமரச் சொன்னவர், தபாலில் வந்த கவரை எடுத்து அவளிடம் தந்தார். அதுவரை ஆசிரம விஷயமாகப் பேச அழைத்திருப்பார் என்றெண்ணி சென்றவளுக்கு, அந்தக் கவரைப் பார்த்ததும் புரிந்து போனது.

கையிலிருந்ததைப் பிரித்துப் பார்க்க மனமில்லாமல் ஒருவித தவிப்புடனே அமர்ந்திருந்தாள்.அவளது உணர்வினை புரிந்து கொண்டவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அவள் முன்னே வைத்தார்.

அதை எடுத்து மடமடவென்று குடித்து முடித்தாள்.அவளுடைய தவிப்பையும்,படபடப்பையும் பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம் “பதட்டபடாதே ஸ்ருதி! எதுவும் இன்னும் முடிஞ்சு போயிடல.நீ மனசு வச்சா எல்லாமே சுபமா முடியும்” என்றார்.

அவரின் வார்த்தையில் அவ்வளவு நேரமிருந்த படபடப்பு குறைந்து அவரை நிமிர்ந்து பார்த்தவள் “இது நான் மட்டும் எடுக்க வேண்டிய முடிவு இல்லைங்க ஐயா. ரெண்டு பேர் சம்மந்தபட்டது.”

“மனசுவிட்டுப் பேசினா எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.”

“இதுதான் என் விருப்பம்னு தெரிவிச்சவர்கிட்ட, அதைக் கொடுக்கிறதுதான் முறை. விருப்பமில்லாமல் இழுபறியா வாழ்க்கையைக் கொண்டு போறதைவிட அவங்கஅவங்க வழியில் போறது புத்திசாலினம்.”

“உனக்கு இன்னும் காலங்கள் இருக்கும்மா. வாழ்நாள் முழுக்க இப்படியே இருந்திட முடியாது.”

“அடம் பிடிக்கிற குழந்தையை ஏமாத்தி வேறொரு பொம்மையைக் கொடுத்து சமாதானப்படுத்துற மாதிரி இல்லையே. இது வாழ்க்கை. அவர் குழந்தையும் இல்ல நான் பொம்மையும் இல்ல. எத்தனை நாட்களுக்குத் தான் உணர்வில்லாத ஜடம் மாதிரியே நடிக்கிறது.”

அவளின் சலிப்பான பதிலைக் கேட்டவர், என்ன சொல்வதென்று தெரியாமல் “உனக்கு நாளைக்கு நைட் சென்னைக்கு டிக்கெட் போட்டுடவா? துணைக்குக் கவிதாவை அழைச்சிட்டு போறியாம்மா?”

“வேண்டாங்கையா...நான் போன் பண்ணி சொல்லிட்டா என் பிரெண்ட் திவ்யா வந்துடுவா, அவ வீட்டிலேயே தங்கி முடிச்சிட்டு வந்துடுறேன்.”

அவள் பேசும்போது முகத்தில் எந்தச் சலனம் இல்லையென்றாலும் விழிகளில் அவளையும் மீறிய சோர்வு தெரிந்தது. அவளிடம் வயதுக்கு மீறிய பக்குவம் எப்போதுமே இருக்கும் என்பதை இங்கு வந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் தானே. இனியும் அவளை அப்படியே விடக்கூடாது. தான் முடிவு செய்திருப்பதைப் போல் அவளுடைய வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

அவள் அங்கிருந்து போகும் முன் “எதற்கும் நல்லா யோசிச்சுக்கோ ஸ்ருதிம்மா! இழந்த பின்னாடி யோசிக்கிறதை விட, அதைத் தடுக்கிறதுக்கு முயற்சி பண்ணலாம்”என்றார்.

கதவருகில் சென்றவள் மெல்லத் திரும்பி பார்த்து “முயற்சி செஞ்சு தோற்றுப் போன பிறகுதான் இங்கே வந்தேன்” என்று கண்கள் கலங்க கூறினாள்.

அவளின் கலக்கம் அவரையும் தொற்றிக் கொள்ள லேசாகத் தொண்டையைச் செருமி தன்னை நிதானித்துக் கொண்டு “ஸ்ருதி! உனக்கு நான் நல்லதுதான் பண்ணுவேன்னு என்மேல நம்பிக்கை இருக்காம்மா?” என்றார்.

குழப்பத்துடன் பார்த்தவள் “என்னங்கையா இப்படிக் கேட்குறீங்க?”

அவளைப் பார்த்தவர் “நீ இனிமே இங்கே இருக்க வேண்டாம். உன்னுடைய மனசுக்கு ஆறுதல் வேணும்னுதான் இடம் கொடுத்தேன். இப்போ எல்லாம் ஒரு நிலைக்கு வந்துடுச்சு. இனி, நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கணும். அதுக்கு இங்கே இருந்தா சரி வராது.”

அவர் சொன்னதைக் கேட்டு பதறியவள் கையெடுத்துக் கும்பிட்டு “என்னை இங்கே இருந்து போகச் சொல்லாதீங்கய்யா. நான் இங்கேயே இருந்திடுறேன்” என்றாள் தவிப்புடன்.

“இல்ல ஸ்ருதி! நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. உனக்குச் சென்னையில வேலை ஏற்பாடு பண்ணி இருக்கேன். எனக்குத் தெரிஞ்ச சிஸ்டர் இருக்காங்க. அவங்க நீ தங்குறதுக்கு இடம் பார்த்து கொடுப்பாங்க. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அவங்ககிட்ட கேட்கலாம்.”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,037
2,735
113
“வேற வழியே இல்லையா ஐயா? நான் இங்கே இருந்து போகத்தான் வேணுமா” என்று பரிதாபமாகக் கேட்டாள்.

“நல்லது நடக்கணும்னா சில கஷ்டங்களைத் தாங்கிதான் ஆகணும். இன்னைக்குப் பெரிய விஷயமாத் தெரியிறது நாளைக்கே ஒண்ணுமில்லாம போகலாம். அதனால நான் சொன்னபடி நீ உன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வச்சிக்கோ.நான் தாமரை சிஸ்டருக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.நீ கோர்ட் வேலையை முடிச்சுகிட்டு அவங்களைப் போய்ப் பாரு” என்றவர் தாமரையின் போன் நம்பர், அட்ரஸ் அடங்கிய கவரை அவளிடத்தில் கொடுத்தார்.

அவரிடத்தில் சொல்லிக் கொண்டு தன்னறைக்கு வந்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அடுத்து என்ன, என்று மனதிற்குள் கேள்விகள் வண்டாய்க் குடைந்தது.

அடுத்தநாள் இரவு சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தவளின் மனம் அமைதியின்றித் தவித்தது. வெளியில் நிதானமாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவன் மேல் முகிழ்ந்திருந்த நேசம் பிரிவை எண்ணி வாடியது.

‘ஏன் என்னைப் பிடிக்காமல் போனது? என் முகம் பார்க்க கூட விரும்பாமல் ஆறு மாதகாலம் ஒரே வீட்டில் எப்படி இருக்க முடிந்தது? அப்படி என்ன தப்பு செஞ்சேன்? உன்னைப் பார்க்காமல், நினையாமல் ஒருநாள், ஒருநிமிடம் கூட இருந்ததில்லை. நீ நெருப்பாக வார்த்தைகளை என் மீது கொட்டினாலும் உன்னை என்னால வெறுக்க முடியல. ஆனால், நீயோ விவாகரத்தையே விரும்பினாய். நீ விரும்பிய ஒரே காரணத்திற்காக அதையும் கொடுக்க வந்து கொண்டிருக்கிறேன்’ என்று நினைத்து வருத்திக் கொண்டே சீட்டை பின்னோக்கி சாய்த்து படுத்துக் கொண்டாள்.

காலை சரியாக ஐந்தரைமணிக்கு சைதாப்பேட்டையை நெருங்கிய பேருந்திலிருந்து இறங்கினாள் ஸ்ருதி. அங்கே அவளுக்காகத் தன்னுடைய காரிலேயே தந்தையுடன் காத்திருந்தாள் திவ்யா.

“வாம்மா! எப்படி இருக்கே? பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா?” என்று விசாரித்தார் திவ்யாவின் தந்தை.

“நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க, ஆன்டி எல்லாம் எப்படி இருக்கீங்க? சாரி உங்களைத் தொந்திரவு பண்ண வேண்டியதா போச்சு.”

“அதனால என்னம்மா! என் பொண்ணுக்கு செய்ய மாட்டேன்னா!” என்றவர் காரில் டிரைவர் சீட்டில் அமர தோழிகள் இருவரும் பின்னே அமர்ந்து கொண்டனர்.

“அப்புறம் சொல்லு ஸ்ருதி! என்ன திடீர் பயணம்?” என்றாள் திவ்யா.

அவள் கேட்டதும் முகம் மாறி உடனே பதில் சொல்லத் தயங்கியவள் “இன்னைக்கு எங்க கேஸ்க்குத் தீர்ப்பு” என்றாள்.

அதுவரை தோழியைப் பார்த்ததில் மகிழ்ந்திருந்தவள், அவளின் வார்த்தையில் அதிர்ந்து “என்ன சொல்ற? அதுக்குள்ளே ஒரு வருஷமாச்சா?”

“ம்ம்...”

“அருண் அண்ணாக்குத் தெரியுமா?”

“ம்ம்ம்..ஆனா, இன்னைக்குத்தான் தீர்ப்புன்னு தெரியாது. ஆறுமாசம் முன்னாடி ஒருநாள் கரூருக்கே வந்து சத்தம் போட்டாங்க. அவங்களோட வந்துட சொல்லி.”

“நான் சுத்தமா இதை எதிர்பார்க்கவேயில்லை ஸ்ருதி. எப்படிடி?.”

ஸ்ருதியின் முக மாற்றத்தையும் தடுமாற்றத்தையும் கண்டவர் “திவி! என்ன பேசுறே! கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா! என்று அதட்டினார் திவ்யாவின் தந்தை.

“விடுங்க அங்கிள்! என்கிட்ட உரிமையோட பேச அவ மட்டும்தான் இருக்கா, அவளைத் தடுக்காதீங்க”என்றாள்.

ஆனால், அதன்பின்னர் அங்கே யாருக்கும் பேச மனமில்லாமல் அமர்ந்திருந்தனர். அந்த மௌனத்தை உடைக்கக் காரிலிருந்த சீடீயை போட்டு விட்டார் திவ்யாவின் தந்தை.

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்து பாடு

அவளது மனநிலைக்கேற்ப பாடலும் ஒலிக்க வீடு சென்றடையும் வரை கண்களை மூடி தனக்குள் நிம்மதியைத் தேடினாள்.

திவ்யாவின் அன்னையிடத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசியபின் இருவரும் அறைக்குள் அடைந்தனர்.

உள்ளே சென்றதும் ஸ்ருதியின் கைகளைப் பிடித்துக் கொண்ட திவ்யா “என்னால தாங்க முடியல ஸ்ருதி.உன்னை ஒருத்தருக்குப் பிடிக்காம போகுமா? அவசரமா நடந்த கல்யாணம் அவசரமாவே முடிஞ்சு போகனுமா? ஏன்?” என்று கலங்கினாள்.

“எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கனும்னு அவசியமில்லையே திவி.உனக்கு என்னைப் பிடிக்க ஒரு காரணமிருக்கு. அதே மாதிரி என்னைப் பிடிக்காம போகிறதுக்கு அவர் கிட்ட ஏதோ ஒரு காரணமிருக்கும்.”

“என்ன காரணமாம்? சொல்ல சொல்லேன்” என்றாள் கடுப்பாக.

அவளின் எரிச்சலைப் பார்த்து மெல்ல சிரித்து “திவி! பஸ்ல வந்ததுல ரொம்பக் களைப்பாயிருக்குக் கொஞ்சநேரம் தூங்கலாமா?”

“சாரி ஸ்ருதி! நான் பேசிட்டே இருந்திட்டேன் பாரு! சரி உனக்கு எத்தனை மணிக்கு கோர்டுக்குப் போகணும்? நானும் உன்னோட வரேன்.”

“பத்து மணிக்கு அங்கே இருக்கணும். நீ வர வேண்டாம் திவி. ஆன்ட்டிக்குப் பிடிக்காது. எனக்குக் கால் டாக்ஸி மட்டும் பிடிச்சுக் கொடுத்துடு.”

“அதெல்லாம் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”

“இல்ல திவி! சொன்னா புரிஞ்சுக்கோ! நான் தனியா போயிட்டு வரேன்.”ஒன்பதரை மணிக்குக் கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்தாள். ஆங்காங்கே கூட்டம்கூட்டமாக நின்று கொண்டு தங்கள் வழக்கறிஞரை பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தனர் மக்கள்.

அவள் வந்ததைக் கவனித்துவிட்டு அவளைப் பார்க்க வந்தார் வக்கீல் சரவணன்.

“வாங்க மேடம்! லேட்டா வந்துடுவீங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நம்ம டைம் பத்து மணிதான். அப்படி அந்த மர நிழலில் வெயிட் பண்ணுங்க. நான் அவங்களைப் பார்த்திட்டு வந்திடுறேன்.”

“சரி சார். நான் வெயிட் பண்றேன். நீங்க பாருங்க”என்றாள்.

ஒரு பதினனைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், யாரோ அவள் தோளை தொடுவது போல் தோன்ற திரும்பியவளின் விழிகள் விரிந்தது.

கண்களில் கண்ணீர் குளம் கட்ட “அத்தை நீங்களா?”

அவள் கன்னம் தொட்டு வருடி “எப்படிடா இருக்கே? நீ சொல்லலேன்னா எனக்குத் தெரியாம போயிடுமா?”

“நல்லாயிருக்கேன் அத்தை...நீங்க...உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இந்த மதி பயதான் சொன்னான்.அதுவும் ராத்திரி பத்து மணிக்கு.”

“எப்படி இருக்கீங்க அத்தை? நீங்க மட்டும் தனியாவா வந்தீங்க?”

“பெரியவன் கொண்டு வந்து இறக்கி விட்டுட்டுப் போனான். அகல்யாவும், ஆர்த்தியும் உன்னைப் பார்க்கனும்னாங்க.சின்னதுங்க ரெண்டும் இன்னும் எழுந்திரிக்கல. அதுங்க ரெண்டையும் எழுப்பிச் சாப்பாட்டைக் கொடுத்து மாமா கிட்ட விட்டுட்டு வருவாங்க.அதுசரி ஒரு வருஷம் என் கண்ணில் படாம இருந்திட்டு எப்படி இருக்கீங்கன்னு கேட்கிற?அவன் பண்ணின தப்புக்கு என்னை ஒதுக்கிட்டியே.”

“அது..இல்லத்தை”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,037
2,735
113
அந்தநேரம் அங்கே வந்த சரவணன் “கிளம்பலாமா மேடம்” என்றான்.

“வந்துட்டான்! விளங்காதவன்! நல்லா தின்னுட்டு மினுமினுதான் இருக்கான்.”

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன் “மேடம்! என்னய்யா சொன்னீங்க?”

“அட! உங்களை இல்ல தம்பி. நான் பெத்ததைச் சொன்னேன்.”

காயத்ரியின் அரட்டல், மிரட்டலில் திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்றான் சரவணன்.

“ஏன் ஸ்ருதி, உனக்கு வேற வக்கீலே கிடைக்கலையா? நல்லா இருக்கவனையே உம் புருஷன் லூசாக்கிடுவான்.இவன் முழிக்கிற முழியே சரியில்லையே.”

அவர் பேசப்பேச சிரிப்பை அடக்கிக் கொண்டு “இவர் பெரிய வக்கீல்தான் அத்தை” என்றாள்.

“என்னத்தைப் பெரிய வக்கீலு? இந்நேரம் எம் பையன் சிண்டை பிடிச்சு இழுத்து வந்து சேர்த்து வச்சு இருக்க வேண்டாமா? அங்கே பாரு! தென்னை மரத்துல பாதி வளர்ந்து நிக்கிறான்.அந்த அளவுக்கு மூளையும் வளர்ந்திருந்தா பரவாயில்லை.”

அவர் காட்டிய திசையில் காரின் மேல் சாய்ந்து நின்று தன் வக்கீல் மதிவாணனுடன் பேசிக்கொண்டிருந்தான் நிகில்.

ஒரு வருடத்திற்குப் பிறகு அவனைப் பார்த்ததும், நெஞ்சில் உறங்கிக் கொண்டிருந்த நேசம் தலைத்தூக்க, இன்றைய நிலையும் ஞாபகம் வர அவனுருவத்தைக் கண்களில் நிறைத்து நெஞ்சில் பொக்கிஷமாகப் பூட்டிக் கொண்டாள்.

அவனோ இவள்புறம் திரும்பாது கோர்ட் வளாகத்துக்குள் செல்ல ஆரம்பித்தான்.

“அவர் உங்ககூட வரலையா அத்தை?”

“என் கூடவா? நீவேற...துரை வீட்டுக்கே வரல. ஹோட்டலில் தங்கியிருக்கார்.”

“என்ன அத்தை சொல்றீங்க? வீட்டுக்கு வரலையா?”

“ஆமாம்! பெரிய ரோஷக்காரர் இல்ல! நீயில்லாம வீட்டுப் பக்கம் காலெடுத்து வைக்காதேன்னு சொன்னேன். அதுக்குத்தான் ஹோட்டலில் இருக்கான்.”

அதைக் கேட்டு அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்னால தானே அத்தை! உங்க பையனும் நீங்களும் பிரிஞ்சுருக்கீங்க. அவரைக் கூப்பிட்டு நீங்களே பேசுங்க அத்தை, ரொம்ப சந்தோஷப்படுவார்.”

“நான் சொன்னா சொன்னதுதான்!உன்னோட அவன் வீட்டுக்கு வந்தா தான் பேசுவேன்.இல்லேன்னா இப்படியே போகட்டும்!”

“அத்தை...”

“மேடம்! டைம் ஆச்சு நாம போகலாமா?” என்றவனைக் கொலைவெறியுடன் பார்த்தார் காயத்ரி.

“ம்ம்..போகலாம்! வாங்க அத்தை” என்று அவரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தாள்.

அறை வாயிலில் நின்று கொண்டிருந்த நிகிலிடம் “நல்லா யோசனை பண்ணிக்கிட்டே இல்ல நிக்கி? அப்புறம் மாத்தமாட்டியே!’ என்று கேட்டுக் கொண்டான் மதி.

“இப்போதான் சரியான முடிவெடுத்திருக்கேன்.இனி, இதில் மாற்றமில்லை மதி. நீ ப்ரோசீட் பண்ணு” என்றான்.

அவர்களிருவரும் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் கடுப்பாகிப் போனார்.

“இவனைப் போயி மகனா பெத்தேனே! பாரு! என்னவொரு சந்தோஷம் பொண்டாட்டியை பிரிய போறதுல. இந்த மதி பய அம்மா! அம்மான்னு கூப்பிட்டுட்கிட்டு எத்தனை தடவை என் கையால சாப்பிட்டுருக்கான். எல்லாமா சேர்ந்து கூட்டுகளவானித்தனம் பண்றானுங்க.இனிமே, எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும் தொடப்பக்கட்டையாலேயே நாலு போடுறேன்”என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அவர் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அங்கே நடப்பவைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

மதி ஜட்ஜ் இருந்த அறைக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வந்தவன் நிகிலை உள்ளே அழைத்துச் சென்றான். ஐந்து நிமிடம் கழித்து இருவரும் வெளியே வரும்போது நிகிலின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

“மச்சி! அம்மா பார்க்கிற பார்வையே சரியில்லை.ஏதாவது சொதப்பினே, என்னை ஓடவிட்டு சாத்துவாங்க சொல்லிட்டேன். என்னைக் காப்பாத்த வேண்டியது உன் கையிலதான் இருக்கு”என்றான் மதி.

இவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க, சரவணன் ஜட்ஜை பார்க்க சென்றான். அப்போது நிகிலின் அண்ணன் ஆகாஷும், அவன் மனைவி அகல்யா, நீரஜின் மனைவி ஆர்த்தி மூவரும் வந்து சேர்ந்தனர்.இருவரும் ஸ்ருதியிடம் நலம் விசாரிக்க, ஆகாஷ் சென்று நிகிலிடம் பேசி வந்தான். அப்போது ஜட்ஜ் அறையிலிருந்து வந்த சரவணன் “ மேடம்! ஜட்ஜ் ஐயாவுக்கு இப்போ முக்கியமான ஒரு வேலை வந்திருக்காம், அதனால தீர்ப்பை ஒரு ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க”என்றான்.

அவனது வார்த்தையில் அங்கிருந்தவர்களின் மனநிலை எப்படிச் சொல்வது. தீர்ப்பு ரெண்டுநாள் தள்ளிப்போனதே நல்ல சகுனமாக எண்ணி ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தனர்.

காயத்ரிக்கு மட்டும் சிறிது சந்தேகமாக இருந்தது. ‘நமக்கு முன்பே நிக்கிக்கு விஷயம் தெரிஞ்சுருக்கு, அப்போ அவன் முகத்துல தெரிகிற சந்தோஷம் டவுட்டா இருக்கே என்று சந்தகக் கண்ணோடு அவனைப் பார்த்தார்.இவன் ஏதோ தில்லுமுல்லு பண்ற மாதிரி தெரியுதே’என்று நினைத்தார்.

அவனும் அப்போது அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஆஹா, அம்மாவுக்குச் சந்தேகம் வந்துடுச்சு போலருக்கே. நல்லா குழம்புமா! குழம்பு! கல்யாணத்தப்ப என்னை எப்படிச் சுத்தலில் விட்டே. இப்போ என் டைம் உன்னைச் சுத்தலில் விடுறேன் பாரு” என்று சொல்லிக் கொண்டவன் மனது தனது திருமண நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கத் தொடங்கியது.