அகிலாவின் அமெரிக்க பயணம்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
506
151
63
ஆனந்த் வந்திறங்கிய நாள் அகிலாவிற்கு அனத்தலுடன் கூடிய காய்ச்சல் வந்துவிட்டது. அகிலாவின் நிலையை பார்த்து,


“அகிமா….! இந்த இன்டெர்வியூ எல்லாம் நீ சுடுற இட்லிய சாப்பிடுறத விட ஈஸியான விஷயம். இன்னிக்கு டாக்டர் கொடுத்த மருந்து சாப்பிட்டிட்டு ரெஸ்ட் எடு. மாமா உனக்கு என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்லனும்னு சொல்லி தாரேன்",


என்று ஆனந்த் கூறியதில்,


"சரிங்க மாமோய்",


என்ற அகிலாவிற்கு அடுத்த இரண்டு நாள் காய்ச்சல் இல்லாமலே கை கால் நடுக்கம் இருந்தது.

இன்னும் மூன்று நாட்களே இன்டெர்வியூக்கு இருந்த நிலையில் இதற்கு மேல் அகிலாவை விடக்கூடாது என்ற எண்ணத்துடன்,


"அகிலா….! இன்னிக்கு நாம உட்கார்ந்து பிராக்டிஸ் பண்றோம். நீ எழுந்துக்கலைனா எங்கம்மாவை வர சொல்றேன். நீ படுத்துகிட்டு இருக்குறப்பவே உனக்கு அவங்க கிளாஸ் எடுப்பாங்க",


என்று ஆனந்த் கூறிய அடுத்த நொடியில் வேகமாக எழுந்தமர்ந்த அகிலா,


"நீங்க சொல்லுங்க… கற்பூரம் மாதிரி டக்குனு அதை பிடிச்சிக்கிட்டு அமெரிக்கக்காரனையே ஆன்னு பார்க்க வைக்குற மாதிரி நான் இங்கிலீஷுஉஉஉ பேசுறேன்",


என்று வீர சபதமிட்டாள்.

அகிலாவின் இந்த சபதம் ஆனந்திற்கு மகிழ்ச்சியை தருவதற்கு பதில் மரண பீதியைக் கிளப்பி விட்டது. பின்னே அகிலா ஒவ்வொரு முறையும் சபதமிடும் பொழுதும் ஆனந்த் ஏகப்பட்ட பிரளயங்களை சந்தித்து மீண்டு வர வேண்டிய நிலைதான் இதற்கு முன்னர் நடந்தது அனைத்தும். திகிலில் திசையறியாமல் அமர்ந்திருந்த ஆனந்தை,


"மாமோய்…! cow are youuu சரியா கேட்டுட்டேனா?",


என்ற அகிலாவின் கேள்வி தலை கிறுகிறுத்து மயக்கம் வரச் செய்தது.

இப்படியே இரண்டு நாட்கள் கடந்திட மூன்றாவது நாள் காலையில் தன் முன் அமர்ந்திருந்த அகிலாவை பார்த்த ஆனந்த்,


"அகிமா அவங்க சொல்றது உனக்கு புரியலைனா ‘பார்டன்’ னு சொன்னா திரும்பச் சொல்லுவாங்க", என்று கூறியதும் "ஏன் மாமா ரைட்ல திரும்பணுமா ?இல்லை லெப்ட்ல திரும்பணுமா?", என அகிலா கேட்டதில் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களிடம் "நீங்கல்லாம் எப்படி இந்தம்மாவை இம்புட்டு காலம் சமாளிகிறீங்க?", என்று சந்தேகம் கேட்டன.

" அப்பா இந்த வருஷமும் நாங்க உங்க கூட வர முடியாதா?", என்று கேட்ட நிவாஸின் தலையை கோதிய ஆனந்த் "உங்கம்மாவோட அப்பாவித்தனத்தை அமெரிக்கா பஜார்ல பார்க்குற வரைக்கும் நான் அங்க இருந்து வரமாட்டேன்டா. அதனால நீ காலேஜ் அங்க வந்து படி", என்று கூறிவிட்டு குலதெய்வத்திடம் தன்னுடைய குமுறலை கூறியவாறு படுத்துவிட்டான்.

மறுநாள் அமெரிக்கன் எம்பஸி முன் காரிலிருந்து இறங்கிய அகிலாவின் மேக்கப்பை பார்த்து அனைவரும் மிரண்டதென்னவோ உண்மை. இன்டெர்வியூக்கு மங்களகரமாக போகவேண்டும் என மஞ்சள் கலர் பட்டு புடவையில், முகம் முழுக்க மஞ்சளில் நனைத்து, பெரிய வட்ட பொட்டுடன் காலில் மூன்றடுக்கு கால் கொலுசுடன் வந்த அகிலாவை பலமுறை பரிசோதனை செய்த பின்னேதான் உள் நுழைய அனுமதித்தனர்.


தனக்குரிய அழைப்பு வந்ததும் அங்கிருந்த அதிகாரியின் முன் அமர்ந்த அகிலா "அலோவ்வ்வ் குட் மெர்னிங்கு. ஹுவ் ஆர் ஏ ",என்று கேட்டதில் மென்னகை புரிந்த அந்த மனிதர்" யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்", என்று கூறினார். அவர் கூறியதில் பாதி புரிந்தும் புரியாத பொழுதும் தைரியமாக புன்னகையுடனே அமர்ந்திருந்த அகிலாவை கண்டு அந்த அதிகாரி கெவின்க்கு வியப்பே அதிகம்.

மிகுந்த அறிவாளி என்று தன்னைத்தானே நினைத்து கொள்ளும் சிலர் விசா இன்டெர்வியூவில் சொதப்புவது மிகவும் சாதாரணமாக கண்டிருந்த கெவின்க்கு அகிலாவின் தன்னம்பிக்கை ஆச்சரியத்தையே அளித்தது. அதற்கடுத்து கெவின் அகிலாவின் கணவர் ஆனந்தின் விவரங்களை மிகவும் மெதுவாக சைகையுடன் கேட்டதில் "ஆஸ்க் மாமா, டெல் மாமா ,குட் மாமா, அபிராமி ,ஸ்வீட் பொங்கல்", என்று கூறியே கெவினையும் மயக்க நிலைக்கு கொண்டு சென்ற அகிலாவிற்கு இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என்று விசாவை கொடுத்துவிட்டனர்.

வெளியில் வந்தவுடன் "ஆனந்த் கால் உன் அருமை அம்மா. டெல் ஐ அமெரிக்கா விசா இந்த ஹாண்ட்", என்று கூறி அகிலா செய்த அலப்பறையில் அங்கிருந்தோர் ஆனந்தை பாவமாக பார்த்தனர் .ஆனால் ஆனந்தோ "எப்படி அகிலா?", என்று உருக்கத்துடன் கேட்ட பொழுது "அது ஒண்ணுமில்லை மாமா அந்த ஆபீசர்கிட்ட இன்னிக்கு விசா தரலைன்னா டெய்லி நீதான் என் மாமாகிட்ட போற வரைக்கும் இங்கிலீஷு கத்து தரணும்னு சொன்னேன். மனுஷன் பொசுக்குன்னு உனக்கு விசா கிடைச்சிடுச்சுனு சொல்லிட்டாரு", என்று கையை ஆட்டி ஆட்டி பேசிய அகிலாவின் அப்பாவித்தனத்தில் ஆனந்தின் காதல் கரை புரண்டோடியது.


அமெரிக்க விசா கிடைத்ததிலிருந்து அகிலாவின் அளவில்லா அலப்பறையை கண்டு நொந்து போனது ஆனந்தின் அம்மாதான். அந்த காலத்து பி .ஏ., என்று பெருமை பேசித்திரியும் அவரிடம்" ஆண்டி ஐ கோ அமெரிக்கா. கம் மை வீடு. கிளீன் டெய்லி ",என்று அவருக்கு இட்ட கட்டளைகளை விட அகிலா பேசிய ஆங்கிலத்தால் தான் படித்தேன் என்பதையே மறந்துவிட்டார் .

அந்த மாத இறுதியில் தன் ஆருயிர் ஆனந்துடனும், அருமை மகன்களுடனும் அமெரிக்க விமானம் ஏறிய அகிலாவின் ஆங்கில புலமையால் நம்முடைய தமிழை அமெரிக்கா தாய்மொழியாக்கிடும் என்ற நம்பிக்கையில் அகிலாவிற்கு டாட்டா காட்டிடுவோம்.