Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 25 | SudhaRaviNovels

அத்தியாயம் - 25

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 25

ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த வர்ஷினிக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. தான்யாவோ அக்காவிற்கு என்னவோ ஆகி விட்டது என்கிற பயத்தில் அழுதபடி அமர்ந்திருந்தாள். தாங்கள் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அவள் உணரவில்லை.

மருத்துவமனையை நோக்கி கிளம்பிய பயணம் முடிவிற்கு வந்து ஓரிடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டதும் தான் தெரிந்தது அது மருத்துவமனை அல்ல. ஏதோவொரு மாளிகை என்று. மிரண்ட பார்வையுடன் தான்யா தன் எதிரே நின்றவர்களைப் பார்க்க, அவர்களோ அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று மாளிகையினுள் விட்டனர். சற்று நேரத்தில் வர்ஷினியை தூக்கிக் கொண்டு வந்து ஓர் அறையில் படுக்க வைத்தனர். அதுவரை பயத்துடன் இருந்தவள் பாய்ந்து “யார் நீங்க? எதுக்கு எங்களை இங்கே கொண்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.

அவள் கேட்டது அவர்களுக்கு புரியாமல் போனதாலும் அவளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாததாலும் கதவை சாற்றி விட்டு அங்கிருந்து வெளியேறினர்.

பிரம்மாண்டமான அந்த பங்களாவே அவளுக்கு அச்சத்தை கொடுக்க, வர்ஷினியின் அருகில் சென்று அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர். என்ன செய்வதென்று புரியாமல் அங்குமிங்கும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அந்நேரம் பங்களாவின் கதவு வேகமாக திறக்கப்படும் சப்தம் கேட்டது. யாரோ வருகிறார்கள் என்று எழுந்து ஓடினாள். அங்கு நின்றவர்களை பார்த்ததும் மிச்சமிருந்த நம்பிக்கையும் காணாமல் போனது.

“அவளை மட்டும் தானே தூக்கிட்டு வர சொன்னேன்? இவளை எதுக்கு கொண்டு வந்தீங்க?”

“ஆம்புலன்சில் வந்ததுனால எங்களால எதுவும் சொல்ல முடியல மேம்”.

“வர வழியில் எங்கேயாவது இறக்கி விட்டிருக்கலாம்”.

“எங்க அக்கா உங்களுக்கு என்ன செஞ்சாங்க? எதுக்கு அவங்களை கடத்தி இருக்கீங்க?”

அவளின் முன்னே நின்ற கேஷ்வி இளக்காரமாக பார்த்து “என்ன செய்யல உங்கக்கா? என்னுடைய திட்டங்களை எல்லாம் கெடுத்தது அவள். சித்தார்த்தின் மனைவி என்கிற அந்தஸ்த்தை என்கிட்டே இருந்து பறிச்சிருக்கா. என்னுடைய பிஸ்னெஸ் சொந்த வாழ்க்கைன்னு எல்லாவற்றையும் என்னிடமிருந்து பரிச்சுக்கிட்டவளை சும்மா விடலாமா?”

“எங்களை விட்டுடுங்க. நானும் எங்கக்காவும் எங்கேயாவது போயிடுறோம்” என்றால் அழுகையுடன்.

“அவ உயிரோடு இருக்கும் வரை என் ஆசைகள் எதுவும் நிறைவேறாது. ஏன்னா சித்தார்த்துக்கு அவள் மேல அளவில்லாத காதல்” என்றவள் “டேய்! நான் சொன்ன மாதிரி ஏற்பாடு செஞ்சிட்டீங்க தானே?” என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டாள்.

“எஸ் மேம்! எல்லாமே தயாராக இருக்கு” என்றனர்.

தான்யாவிற்கு எப்படியாவது அக்காவை காப்பாற்றி விட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது. ஓட முயற்ச்சித்தாலும் அக்காவை அங்கிருந்து எப்படி அழைத்துச் செல்வது என்கிற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் கதவை திறந்து கொண்டு ஒரு பெரிய படையே உள்ளே நுழைந்தது. அதை பார்த்ததும் கேஷ்வியின் ஆட்கள் “ஏய்! யார் நீங்க?” என்று அவர்களை நோக்கிச் சென்றனர்.

அப்போது வேக நடையுடன் உள்ளே நுழைந்தான் சித்தார்த். அவனைக் கண்டதும் கேஷ்வியின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.

அவள் முன்னே சென்று நின்றவன் “நான் உன்னைப் பற்றி கணித்தது சரியா போச்சு. நீ இதை தான் செய்வேன்னு எனக்கு தெரியும்” என்றான் இகழ்ச்சியான குரலில்.

“நா...நான்” என்று அவள் பேசும் முன் இடைமறித்தவன் “தொழிலில் பெரியாளா வரது தான் என் நோக்கம் எனக்கு இந்த திருமணத்தில் ஆர்வம் இல்லேன்னு சொன்னதா ஞாபகம். ஆனா நீ எதிலேயும் தீவிரமா இருக்க மாட்டேன்னு தோணுது”.

“இல்ல சித்தார்த். ஒரு கட்டாயத்தில் நான் இந்த உறவில் நுழைந்தாலும் எனக்கு உங்க மேல ஈர்ப்பு வந்ததை எப்படி தவறுன்னு சொல்லலாம்”.

“அதை தவறுன்னு சொல்லல. ஆனா எனக்கும் வர்ஷுவுக்குமான காதலை அறிந்த பிறகும் அவளை என் வாழ்க்கையில் இருந்து அப்புறபடுத்தனும்னு நினைத்த பாரு அது தான் தவறு”.

“உங்கள் குடும்பத்தினால எங்கள் தொழிலையும் பார்க்க முடியல. என்னுடைய திருமண வாழ்க்கையும் கேள்விகுறியா இருக்கு. அப்போ இதற்கு தீர்வு தான் என்ன?’

“அவளை கொன்னுட்டா நான் உன்னோட வாழ்ந்திடுவேன்னு நினைச்சியா?” என்றான் அருவெறுப்பாக முகத்தை சுளித்தபடி.

“அது அப்படி இல்ல...”

“இங்கே பார் கேஷ்வி! இப்பவும் எனக்கு உன் மேல கோபம் இல்லை. வருத்தம் தான் இருக்கு. எனக்கு தெரிந்து நீ ஒரு சூழ்நிலைக் கைதி தான். உன்னுடைய பிஸ்னெஸ் கனவு நிறைவேறணும்னா அதற்கு என்னால உதவ முடியும். ஆனா என் வாழ்க்கையில் இணைய நினைத்தால் அதற்கு நான் தயார் இல்லை. காதலித்து பார் கேஷ்வி அந்த வாழ்க்கையின் சுவாரசியம் புரியும்”.

கன்னங்களில் கண்ணீர் வழிய “சாரி சித்தார்த். இத்தனைக்குப் பிறகும் எனக்காக யோசிச்சு சொல்றீங்க பாருங்க. ரொம்ப நன்றி. நான் எக்காரணம் கொண்டும் உங்கள் வாழ்க்கையின் குறுக்கே வர மாட்டேன்” என்றாள்.

அவளையும் தான்யாவையும் அழைத்துக் கொண்டு வர்ஷினி இருந்த அறைக்குச் சென்றவன், அவளுக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு தன்னுடன் அழைத்து வந்திருந்த மருத்துவரிடம் சொல்லி ட்ரீட்மென்ட் செய்ய சொன்னான். அதன்பின்னர் கேஷ்வியிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் தான் சொல்லும் சிலவற்றை செய்ய சொன்னான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
தான்யாவிற்கோ கேஷ்வியை அவன் நம்புவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் அவள் கடத்தி கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தவள். அவளை எப்படி நம்புவது என்கிற யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

கேஷ்வி தன் ஆட்களை அங்கிருந்து அனுப்புவதற்காக அங்கிருந்து வெளியே செல்ல, அதை பார்த்ததும் “மாமா! அவங்களை எப்படி நம்புறீங்க? அக்காவை கொலை செய்யும் எண்ணத்தோட இருந்தவங்களை நம்புறது நல்லதில்லை” என்றாள் பதட்டத்தோடு.

அவளை அன்போடு பார்த்தவன் “இல்ல தான்யா. நான் அவளை முழுக்க நம்பல. அதே சமயம் அவ நல்ல பொண்ணு தான். அவளோட இயலாமை அவளை இந்த நிலைக்கு தள்ளிடுச்சு. நிச்சயம் அவ இந்த தப்பை செய்ய மாட்டா” என்றான்.

“எதுக்கும் நீங்க கவனமா இருக்கிறது நல்லது மாமா”.

“நிச்சயமா...இனி என்னுடைய ஒவ்வொரு அடியும் அவங்களை துவம்சம் பண்ணிட்டு தான் விடும்”.

மருத்துவர் கொடுத்த மருந்துகளை எடுத்துக் கொண்டபின் சற்று நேரத்தில் கண் விழித்தாள் வர்ஷினி. நடந்த எதுவும் அவளுக்கு நினைவிற்கு வர மறுக்க, தான் எங்கிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் எதிரே இருந்தவனை பார்க்க, “ஒரு குட்டி டூர் வந்திருக்கிறோம் சோட்டி” என்றான் கண்சிமிட்டி.

அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததும் மெல்ல அங்கிருந்து வெளியேறினாள் தான்யா.

அவள் சென்றதும் வர்ஷுவின் அருகே சென்றமர்ந்து கொண்டவன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு “என்னடா! கஷ்டமா இருக்கா? நான் உன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருப்ப” என்றான் வருத்தமாக.

பட்டென்று அவனிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டவள் அவனது வாயை அடைத்திருந்தாள்.

“நீங்க தான் என் வாழ்க்கை சித்து. நடுவில் நடந்தது எல்லாம் நமக்கு இந்த உலகத்தை புரிய வைப்பதற்காக நடந்தவை. நீங்க என் வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்தால் இப்படியொரு காதலை மிஸ் பண்ணி இருப்பேன்” என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு.

“சோட்டி” என்று ஆழ்ந்த குரலில் அழைத்து கண்களை மூடி அவளை இறுக அணைத்துக் கொண்டான். அந்த நிமிடம் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலை தந்தது. சற்று நேரம் அப்படியே இருந்தவர்கள் அப்படியே நீண்டு போக கூடாதா என்கிற ஏக்கத்துடன் விலகி அமர்ந்தர்னர்.

“சோட்டி! நீ இன்னும் சில நாட்களுக்கு என்னுடைய பாதுகாப்பில் இங்கேயே இருக்கப் போற.

கேஷ்வியும் தலைமறைவாக இருக்கப் போகிறாள். உன்னை கடத்தியதாக அவள் போடப் போகும் நாடகம் அது. அதற்குள் நானாஜியையும், மாமாவையும் மடக்குவதற்கு ஏற்பாடுகளை முடித்து விடுவோம். அதன்பின்னர் நீ வெளியே வந்தால் போதும்” என்றான்.

“என்ன இருந்தாலும் அவங்க உங்க தாத்தாவும், மாமாவும் தானே. விட்டுடுங்க சித்து”.

அவளை சிரிப்புடன் பார்த்தவன் “நீயும் நானும் அப்படி நினைக்கிறோம் சோட்டி. ஆனா அவங்களை விட்டா நம்மளை ஒழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க”.

“உறவுகளுக்குள்ள இதென்ன இப்படியொரு வெறி?”

“அதிகாரம், அந்தஸ்த்து, பணம், புகழ் எல்லாம் செய்யும் மாயம். இதில் உறவுகளுக்கு எங்கே மரியாதை?”

“உண்மை தான்”

அவளது கன்னங்களைப் பற்றி தன் பக்கம் திருப்பியவன் “நீ எதைப் பற்றியும் யோசிக்காது அமைதியா இருடா. கூடிய விரைவில் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு உரிமையுடனும், மரியாதையுடனும் உன்னை நம்ம மாளிகைக்கு கூட்டிட்டுப் போறேன்’ என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தான்.

இருவரும் எழுந்து அறையை விட்டு வெளியே வர, அங்கு கேஷ்வியிடம் பேசிக் கொண்டிருந்த தான்யா ஓடி வந்து அக்காவை கட்டிக் கொண்டாள்.

“சாரி தான்யா! எங்க லைப்ல இருக்கிற பிரச்சனையினால உன் படிப்பும் கெடுது. சீக்கிரம் சரி பண்ணிடுறேண்டா” என்றான்.

“நோ ப்ராப்ளம் மாமா. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா போதும்”.

அதன்பின் தன் ஆட்களை அழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தாதிக்கு பஜ்ரங் மூலியமாக வர்ஷினி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தான். ஆனால் அவள் கேஷ்வியால் கடத்தப்பட்டாள் என்பது போலவே நடந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அலுவலகத்தில் ஷேர்ஹோல்டர்களின் முன்பு அமர்ந்திருந்த பிம்லாவுக்கு நடந்தவற்றை எப்படி மாற்றுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களில் ஒருவர் மெல்ல விஷயத்தை ஆரம்பித்தார். பிம்லாவின் மீது நம்பிக்கை இல்லாததால், தற்காலிகமாக அவரை கம்பனி பொறுப்பிலிருந்து விடுவித்து விட்டு அவருக்கு பதிலாக சித்தார்த்தை அமர்த்த வேண்டும் என்றார்.

நானாஜிக்கு அதை கேட்டதுமே இதை தான் எதிர்பார்த்தேன். இது வரும் என்று எனக்கு தெரியும் என்பது போல மகளை பார்த்தார். தினுவிற்கோ ஆத்திரம் எழ, “நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் ஷேர்களை எங்களிடம் கொடுத்து விட்டு கம்பனியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” என்று விட்டான்.

அதைக் கேட்டதும் அங்கிருந்த பலருக்கு அவனது பேச்சு கோபத்தை கொடுக்க நானாஜியிடம் “என்ன ஜி இது?” என்றனர்.

நன்றாக நிமிர்ந்து அமர்ந்த நானாஜி “அவன் கேட்டதில் தவறில்லையே? உங்களுடைய முடிவு தான் அவனை அப்படி பேச வைத்து விட்டது” என்றார் கூர்மையான குரலில்.

ஷேர்ஹோல்டர்களில் மூத்தவராக இருந்தவர் “அப்படி எல்லாம் கொடுக்க முடியாது. இந்த கம்பனியில் உரிமை இருப்பதால் எங்களுக்கு முடிவெடுக்கும் உரிமை இருக்கிறது” என்றார்.

அப்போது ஒருவர் இடைப்புகுந்து நானாஜியிடம் “இது உங்களுடைய மருமகனின் கம்பனி தானே தவிர உங்களுடையது இல்லை. இந்த மீட்டிங்கிற்கு நீங்கள் வந்திருப்பதே தவறு” என்று விட்டார்.

அவ்வளவு தான் அதுவரை அடக்கிக் கொண்டிருந்தவன் வேகமாக நாற்காலியை பின்னுக்குத் தள்ளி எழுந்து கொண்ட தினு “இந்த கம்பனி என்றில்லை இந்த ஊரில் இருக்கும் எல்லா கம்பனிகளும் எண்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான். யாராவது மறுத்து பேசினால் அழிச்சிட்டு தான் விடுவ்வேன்” என்றான் மிரட்டலாக.

“என்ன மேடம் இது? உங்களுக்கு தந்தையாக, தம்பியாக இருக்கலாம் அதற்காக நாங்கள் எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்றனர் கோபத்தோடு.

பிம்லாவிற்கு நடப்பவற்றை தடுக்க முடியாமல் தினுவின் மீது கோபம் எழ “நீ இங்கிருந்து வெளியே போ தினு” என்று விட்டார்.

அதைக் கேட்டதும் நானாஜியின் முகம் இறுகிப் போக “அவன் மட்டுமா இல்லை நானுமா?” என்றார்.

ஒரு நிமிடம் மூச்சை இழுத்துப் பிடித்தவர் “ம்ம்..ஆமாம்ப்பா” என்றார்.

அடுத்த நிமிடம் சக்கர நாற்காலி கதவை நோக்கி செல்ல தினு பிம்லாவை முறைத்துக் கொண்டே அதன் பின்னே சென்றான். கதவருகே சென்றதும் ஒரு நிமிடம் நின்றவர் “இனி என்ன நடந்தாலும் உனக்கு என்னுடைய ஆதரவு இருக்காது” என்று கூறி விட்டு வெளியே சென்றார்.

தேவ்வோ தங்கையுடன் நின்று கொண்டவர் ‘உங்களுக்கே யாராவது ஆதரவு கொடுக்கும் நிலைக்குப் போக போறீங்க. இந்த மிரட்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று முணுமுணுத்துக் கொண்டார்.

அவர்கள் சென்றதும் மீண்டும் விவாதம் தொடங்கப்பட்டு அனைத்து மாற்றுக் கருத்துக்களும் பேசப்பட்டது. அவர்களின் எந்த முடிவிற்கும் ஒத்துக் கொள்ளாமல் இருந்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு மூன்று மாதத்திற்காவது கம்பனியின் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கி இருப்பதற்கு ஒத்துக் கொண்டார். அதோடு நஷ்டத்திற்கான தொகையையும் தானே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார் .அவரின் கைப்படவே சம்மதத்தை எழுதி வாங்கிக் கொண்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

மூன்று மாதத்திற்குள் எதுவும் நடந்து விடாது என்கிற எண்ணத்துடனும், சித்தார்த்தால் தன்னை மீறி எதுவும் செய்து விட முடியாது என்கிற நம்பிக்கையில் தன் முடிவிற்கான கையெழுத்தை தானே போட்டிருந்தார்.

அங்கே சிவதாஸ் வலுவான ஆதாரங்களை எல்லாம் தேடித் பிடித்திருந்தான்.தொழில் வட்டாரத்தில் முக்கியமானகூட்டம் ஒன்று கூடுவதாக இருந்தது. அங்கு வைத்து அவர்களின் அத்தனை ஆட்டத்தையும் முடிப்பதற்காக காத்திருந்தான்.