Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் - 1

தடுமாறிச் சென்ற காற்றை இழுத்துப் பிடித்து தன் புடவையின் தலைப்பிற்குள் சொருகிக்கொண்டாற்போல் இழுத்துப்பிடித்து மூச்சுவிட்டாள் அழகி. ச்சே இந்த பஸ்ஸிற்காக இன்னும் எத்தனை நேரம்தான் காத்திருக்க வேண்டுமோ ?! தினசரி இதே வேலையாகப் போய்விட்டது. அந்த மேனேஜர் கிழம் மட்டும் இன்றே கடிதத்தை அனுப்பவேண்டும் என்று கறாராக சொல்லியிருக்காவிட்டால் எட்டு மணி பஸ்ஸைப் பிடித்திருக்கலாம் ஆனால் காலையில் தாமதமாக வந்ததுக்கு கிழம் பழிவாங்கிவிட்டது. அலப்புடன் காலையில் மழைத்தூறலுக்கு பயந்து கொண்டு வந்திருந்த பிங்க் நிற பட்டன் குடையை மடித்து ஹேண்ட்பேக்கிற்குள் போட்டாள். வானம் இருளோடு கூடி நிர்மலமாயிருந்தது. பஸ்ஸாண்டிற்குப் பக்கத்தில் வெளிச்சத்தைக் கசிய விட்டிருந்த விளக்குகள் கூட முணுக்முணுக்கென்று அவளைப் பார்த்து பரிகசிப்பதைப் போல அசுவாரஸ்யமாய் இடது பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள் அழகி. பஸ்ஸை சபித்துக் கொண்டே, வழக்கமாக இந்நேரம் வந்திருக்க வேண்டிய வண்டி பயணிகள் கூட அதிகம் இல்லை அங்கொன்றாய் இங்கொன்றாய் சிலர்தான். அவர்களும் இவளைப் போலவே அவஸ்தையாய், உடைந்திருந்த பழைய அலுமினியத் தட்டும், அதில் சிதறியிருந்த சில்லரைகளுமாய் ஒரு பிச்சைக்கார கிழவன் தொண்டை கிழிய பாட்டு என்ற பெயரில் கத்திக் கொண்டு இருக்க, நாலைந்து பெரூமூச்சுகளை செலவு செய்த பின்னர் பல்லவனின் வருகை, பஸ் முழுவதும் நிரம்பி வழிந்தது. இதில் ஏறித்தான் ஆகவேண்டுமா என்று யோசனையோடு ஒரு விநாடி நின்றாள் அந்த தாமதம் போதுமானதாக இருந்தது பல்லவனுக்கு !

பண்டிகைக்கு முகத்தைத் திருப்பிக்கொள்ளும் மாப்பிள்ளையைப் போல் அவன் புகையை கக்கியபடியே கிளம்பிவிட்டான். இருந்த இரண்டு மூன்று பேரும் இப்போது இல்லை அநாதையான பஸ் நிறுத்தத்திற்கு ஆறுதலாய் அவளும் அந்தப் பிச்சைக்கார கிழவனும். இப்போது விளக்குகள் துரிதமாக அணைக்கப்பட்டு விட்டது. காலையில் தொழில் தொடங்க இருந்த வேகத்தைவிடவும், அடைக்கப்படும் வேகம் சற்று அதிகமோ என்ற தோன்றியது அாகிக்கு. என்னம்மா இப்போ போன பஸ்ஸில் நீ ஏறலையா ?

வெள்ளைக்கட்டம் போட்ட சட்டைக்காரன் அவளருகில் வந்து கேட்டான். பேருந்து நிலையத்தை ஒட்டினாற்போல உள்ள துணிக்கடைக்குள் அவனைப் பார்த்திருக்கிறாள் உரிமையாளனா ? பணியாளனா என்று தெரியாது. பார்வைக்கு நல்லவனாக தெரிந்தான். இரண்டு பஸ்ஸிலும் கூட்டம் அதிகம். நேரம் வேற ஆகுது. பயப்படாதே இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில் அடுத்த பஸ் வந்திடும். நான் இன்னும் கடையை அடைக்கலை அப்படி பயமாயிருந்தா கடைக்கிட்ட வெளிச்சத்தில் வந்து நில்லும்மா, கடையை அடைக்கும் வரையில் பார் இல்லைன்னா உன்னை அந்த டெர்மினல் கிட்டே இறக்கி விடறேன் நிமிஷத்திற்கு ஒரு பஸ் வரும். பயப்படாதே நானும் அக்கா தங்கையோடத்தான் பிறந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே காலையில் இருந்து தொங்கிக்கொண்டு இருந்த உடைகளை தூசு தட்டு உள்ளே எடுத்து வைத்தான். அவனின் பேச்சு சற்றே தைரியம் தந்தது அழகிக்கு !

தினசரி காலையில் பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போதும், மாலையில் கிளம்பும் நேரமும் சில நேரங்களில் கண்களில் படுவான்தான். இருந்தாலும் பஸ் வரவில்லை என்று அவனை நம்பி வண்டியில் அமர்ந்து போவது அத்தனை நல்லதாகப் படவில்லை. சமீபத்தில் தொலைக்காட்சியில் இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்திருக்கிறாள். ஒரு பெண் இப்படித்தான் பேருந்திற்குக் காத்திருப்பாள் நேரம் செல்ல செல்ல இருள் சூழத் தொடங்கும் அங்கே அருகில் பெரிய நகைக்கடைக்காரர் தன் கடையை அடைத்துச் செல்லும் போது அந்த பெண்ணின் பாதுகாப்பிற்காக கடையின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு செல்வதைப் போல கூடவே பயப்படாதே என்று ஆறுதலான புன்னகையுடன்.

அதைப்போல இவனும் ஏன் நல்லவனாக இருக்கக்கூடாது என்று ஒரு புறம் தோன்றினாலும், அது கற்பனை அதே தொலைக்காட்சியில் தானே மருத்துவம் பார்க்கப்போன ஒரு டாக்டரை கொடூரமான கொலை செய்ததையும் காட்டினார்கள். உலகம் கையளவு சுருங்க மனிதர்கள் வக்கிரங்களோடு விலகிவிடுகிறார்கள். என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. கடவுளே இந்த பதட்டத்தில் இருந்து சற்று சீக்கிரம் விடுபட உடனே பஸ்ஸை அனுப்பிவைத்துவிடேன் என்று மனதிற்குள் கெஞ்சினாள். கையிலிருந்த தொலைபேசி சிணுங்கியது. என்ன அழகி மணி என்னாகுது இன்னமும் வரலையே வாசுவின் குரல் செவிப்பறையில் உஷ்ணமாய் ?! பஸ் இன்னமும் வரலை ? வந்த இரண்டு பஸ் கூட்டம் அதிகமா இருந்தது. கொஞ்சநேரம் காத்திருந்து பார்த்துட்டு வரலைன்னா டெர்மினல்ல போய் ஏறிக்கலான்னு இருக்கிறேன் என்று அவள் சொல்லி முடிக்கும் போது வாசு உச்சுக்கொட்டினான். இதுக்குத்தான்டா படிச்சி வேலைக்குப் போறவ எல்லாம் வேண்டான்னு தலைதலையா அடிச்சிட்டுகிட்டேன் நீதான் ஊரிலேயில்லாத அழகி இவதான் வேணுன்னு ஒத்தைக்காலில் நின்னே. இப்போ அவளுக்கும் சேர்த்து நான் ஊழியம் செய்றேன் என்று மாமியார் அலுத்துக் கொண்டது கேட்டது. அயர்ச்சியாய் இருக்க...குரலைத் தழைத்தபடியே வாசு மீண்டும் பேசினான். சீக்கிரம் வா அழகி அம்மா கத்திகிட்டே இருக்காங்க. நானென்ன வரக்கூடாதுன்னா இருக்கேன். பஸ் வந்தா வந்திடப்போறேன். அவங்களை மாதிரியே நீங்களும் ஏன் பேசறீங்க ? அழகியும் குரலை உயர்த்திட தூரத்தில் ஒரு வெளிச்சம் பஸ் இத்தனை சிரிசா இருக்காதே என்று யோசித்தபடியே கணவனிடம் வந்திடறேன் நீங்க வண்டியெடுத்துட்டு பஸ்ஸாண்ட் வந்திடுங்க பிக்கப் பண்ண என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, புழுதியைப் பறக்கவிட்டபடி ஒரு சுமோ வந்து நின்றது, அதிலிருந்து இறங்கிய சிறுவர்கள் அவளைக் கடந்து ஓடினார்கள்.

அவர்களின் கரங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள் மின்விளக்கின் வெளிச்சத்தில் பளபளக்க தொண்டைக்குழிக்குள் ஒரு பயஉணர்வு, பஸ்ஸாண்டின் பின்புறம் பதுங்கினாள் சற்று நேரம் முன்பு பேசிவிட்டு சென்ற வெள்ளை கட்டம் போட்ட சட்டைக்காரனின் கடைக்குள் நுழைந்து ஷட்டரை இழுத்து சாத்தினார்கள். மீண்டும் அவர்கள் ஆக்ரோஷமான கூச்சலுடன் காரினுள் வியாபித்து புறப்பட்ட பிறகு அவள் அந்தக் கடையின் வாசலை நோக்கி ஓடினாள். அங்கே அவனின் கட்டம்போட்ட சட்டையின் வெண்மையை சிவப்பாக்கிக் கொண்டு இருந்தது ரத்தம். சத்தியமாய் அவன் செத்திருந்தான். அவளின் அடித்தொண்டையில் இருந்து வீல் என்று ஒரு அலறல் புறப்படலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்க, தூரத்தில் பல்லவன் வரும் சப்தம் அழகி நிமிட நேரம் தாமதிக்காமல் பல்லவனை நோக்கி ஒடினாள்.