லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#16
“நானா மான்ஸ்டரு? போடா போடா!”

அவன் சொன்ன கமெண்டில் காண்டான அலெக்ஸ், நண்பனின் முதுகில் கையை வைத்துத் தள்ளிவிட்டான்.

வினித் தன்னுடைய படுக்கையறையை நோக்கிப் போக, அலெக்ஸ் நண்பனின் முதுகை வெறித்தான்.

‘எப்பவும் கூலாக இருப்பான். என்னாச்சு இப்போ?’

என்ன தான் வினித் நார்மலாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அலெக்ஸ் அந்தச் செய்கையை நம்பவில்லை. யோசனையுடனேயே போய்க் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தான்.

மறுநாள் வார விடுமுறையாக இருக்க, ஒன்பது மணிக்கு மேலே விழித்து எழுந்தான் வினித். எழுந்ததும் முதல் வேலையாக மொபைலில் அழைத்துப் பேசினான்.

முதல் அழைப்பில் புன்சிரிப்புடன் கலகலப்பாகப் பேசினான்.

“அச்சா…”

அடிக்கடிச் சொல்லிச் சிரித்தான்.

“ஐஸாகை கியா?” (அப்படியா?)

வியந்த குரலில் கேட்டுக் கொண்டான். அவனுடைய முகத்தில் மென்மை குழைந்து பார்ப்பதற்கு நன்றாக இருந்தான். முன் தினத்தின் வருத்தம் மறைந்திருந்தது. எப்போதும் மகிழ்ச்சியுடன் அவன் பேசும் அழைப்பு… இன்றும் அப்படியே.

முதல் அழைப்பில் பேசிவிட்டு வைத்தவன், அடுத்த அழைப்பில் கனிவும் சிந்தனையுமாகப் பேசினான். சில நிமிடங்களின் இறுதியில் சொன்னான்.

“ஆப் பீ அப்னா தப்பயத் மே தியான் ரக்கியே...” (நீங்களும் உங்க உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கோங்க.)

பேசி வைத்ததிற்கு அப்புறம் அவனுடைய முகம் சிறு கவலையைக் காட்டியது. ஆனால் அதிலேயே உழலாமல் தன்னுடைய வேலைகளில் இறங்கினான். தன்னுடைய அறையை ஒதுங்க வைத்துச் சுத்தம் செய்யத் தொடங்கினான்.

இவன் மொபைலில் கடைசியாகப் பேசியது சமையலறைக்குள் காஃபி போட்டுக்கொள்ளச் சென்ற அலெக்ஸ்ஸின் காதுகளையும் எட்டியது.

சற்று நேரத்திற்குப் பின்னர் அழுக்குத் துணிகளுடன் வெளியே வந்த வினித்திடம் கேட்டான்…

“எப்படி இருக்காங்க மச்சி. எதுவும் பிரச்சனையா?”.

“எப்பவும் போலத்தான். பிரச்சனை எல்லாம் எதுவுமில்லை.”

முறுவலுடன் சொல்லிவிட்டு வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு, அதனை இயக்கிவிட்டு வந்தான்.

தனக்குப் பிடித்த மாதிரி தேநீர் தயாரிப்பில் இறங்கினான். காஃபியை உறிஞ்சியபடி சமையலறை மேடையில் சாய்ந்து நின்ற அலெக்ஸ் கூர்ந்து வினித்தைப் பார்த்துக் கேட்டான்…

“எதுவோ ஒன்னு உன்னை வருத்துற மாதிரி தெரியுது. என்ன மச்சி அது?”

சென்னைக்கு வேலை எடுத்து வந்த சில மாதங்களில் இருந்து வினித்திற்கு அலெக்ஸ்ஸைத் தெரியும். கிட்டத்தட்ட ஐந்து வருடப் பழக்கம் இருவருக்கிடையில்.

அந்த உரிமையில் கேட்டுவிட்டான். நண்பர்களாக இருப்பினும்; ஒரே வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும் எப்போதும் அவரவர்க்கு உள்ள எல்லையை மதித்து நடந்து கொள்வர். இருவரும் சில விசயங்களை மனம்விட்டும் பேசிக் கொள்வதுண்டு.

இதுவரை இருவருக்குள் இருக்கும் இந்தப் புரிதல் வினித்தைப் பதில் சொல்ல உந்தியது.

அடுப்பில் கொதிக்க ஆரம்பித்த தண்ணீரில் இஞ்சித்துண்டை நறுக்கிப் போட்டபடி வினித் சொன்னான்…

“சைவி, என்னைப் பார்த்து ‘எப்போ கல்யாணம் செய்துக்கலாம்’னு கேட்டா.”

மிகுந்த சங்கடம் தென்பட்டது அவனுடைய முகத்தில்.

“என்ன!”

ஒன்றிரண்டு வினாடிகள் அதிர்ச்சியுடன் நின்றிருந்த அலெக்ஸ் மெதுவான குரலில் கேட்டான்…

“இது எப்போ நடந்தது… நீ என்ன பதில் சொன்னே அவளுக்கு?”

“ஒரு வாரம் இருக்கும்டா. நான் என்ன சொல்லி இருப்பேன்னு உனக்குத் தெரியாதா?”

“...”

இருவரும் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தனர்.

ஒரு பெருமூச்சுடன் வினித் தேநீரில் கவனமானான். கொதித்து வந்த தேயிலைத் தண்ணீரை வடிகட்டி விட்டு, அதிலே அலெக்ஸ் காய்ச்சி வைத்திருந்த பாலைக் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டான்.

பின்னர்ச் சிறிதளவு சர்க்கரை சேர்த்துப் பருகிப் பார்த்து விட்டு, உணவுக் கூடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அவனுக்கு எதிரே இருக்கும் ஓர் இருக்கையைப் பின்னுக்கு இழுத்துப் போட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டான் அலெக்ஸ். நண்பனின் முகம் பார்த்துச் சொன்னான்...

“இது ரொம்ப சென்சிடிவ் விசயம் மச்சி...”

“தெரியும் டா. அதான் ஃபீல் பண்றேன். நான் ஒரு பிரண்டா தான் சைவியை நினைச்சு பழகிட்டு வர்றேன். இந்த மாதிரி அவளுக்கு எப்படித் தோணிச்சுன்னு புரியலை. எந்த இடத்திலே தப்பாகிப் போச்சுன்னு யோசிச்சு யோசிச்சு தலை வெடிக்கிற அளவுக்குக் குழப்பமா இருக்குடா.”

“நீ பிரண்டா நினைச்சு அவகிட்ட பேசிப் பழகுறேன்னு எனக்கும் தெரியும். ஆனால், அவ அதை வேற மாதிரி நினைச்சிட்டா. உன் அக்கறையும் அன்பும் அவளுக்குப் பிடிச்சிப் போய், அதுவே உன் மேலே ஈர்ப்பை வரவழைக்கக் காரணமாயிருக்கு. அவளையும் தப்பா நினைக்க முடியலை.”

“டேய் நான் அப்படி வித்தியாசமா நடந்துக்கலையே. அவ மத்தவங்க மாதிரி கலகலப்பா இல்லைன்னு நல்லா பேசி சிரிக்க வச்சேன். யார்கிட்டேயும் பழக யோசிச்சு தனியாவே இருந்தா. நான் பிரண்டா பழக ஆரம்பிச்சதிலே இருந்து பெட்டரா தெரியுறா. இந்த இடத்திலே என் எண்ணமும் பிரண்ட்ஷிப்பும் எப்படித் தப்பா போச்சு?”
 

sudharavi

Administrator
Staff member
#17
“ம்ம்… எனக்குப் புரியுது மச்சி. ஆனால் சைவி?”

“அதுக்கு நான் என்னடா செய்யட்டும்? ஏன்டா, இந்தக் கீதா; யாமினி; லூனா இப்படி மத்த எல்லாப் பிரண்ட்ஸ் போலத் தானே எனக்குச் சைவியும்?”

“அதை நீ தான் உறுதிப்படுத்திக்கிட்டு, சைவிக்கும் எடுத்துச் சொல்லணும்.”

“உறுதிப்படுத்திக்கணுமா? என்னடா சொல்ற? அப்போ உனக்கும் இதிலே சந்தேகமா?”

“இப்போ என் சந்தேகமா முக்கியம்? மச்சி யோசிடா. இது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உன்னதும் சைந்தவியோடதும்னு ரெண்டு பேர் என்ன உணர்றீங்கன்னு தான் பார்க்கணும். மத்தவங்க சொல்றதுக்கும் நினைக்கிறதுக்கும் என்ன இருக்கு?”

“என்ன உணரணும் நீ எதிர்பார்க்கிறே அலெக்ஸ்? இனி இதிலே நான் எவ்வளவு யோசிச்சாலும் என்ன மாறப் போகுது சொல்லு? ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் இடையிலே பிரண்ட்ஷிப் வந்தா, அதிலே இத்தனை பாண்டிங் (பிணைப்பு) தப்பா? புரியலை!”

“உனக்குப் புரியும். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு யோசிச்சேன்னா கனெக்ட் பண்ணிப்பே. இந்தப் பாண்டிங்க நீ எப்படிப் போய் உருவாக்கின?”

“சரி சரி நானே தான் போய் அவகிட்ட பிரண்டானேன். நல்லதனமா நினைச்சது எப்படித் தப்பா போச்சுன்னு நினைக்கிறே?”

“நீ அவகிட்ட ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கி இருக்கிறே. அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏக்கம் பிடிச்சிப் போயிருந்தவளுக்கு உன் அன்பும் அக்கறையும் பெருசா பட்டிருக்கு. உன்னை அவளை அரவணைக்கும் தோளா நினைச்சிட்டா.”

“அவ அப்படி வேற நினைச்சா நான் என்ன செய்ய முடியும்? லவ்வுங்கிற அர்த்தத்திலே தான் இதை எடுத்துக்கணுமா? ஏன் ஒரு நண்பன் ஆதரவா இருக்கக் கூடாதா? தோள் கொடுப்பான் தோழன்னு உங்க தமிழ் சேயிங் (பழமொழி) இருக்கில்ல… அது தப்பா?”

“இருந்தாலும் நீ இம்புட்டுத் தீவிரமா தமிழ் பேச கத்துக்கிட்டு இருக்கக் கூடாது மச்சி! பழமொழி எல்லாம் ரொம்ப தெளிவா தெரிஞ்சி வச்சிருக்கே?”

“ப்ளீஸ் டோண்ட் டீவியேட் தி டாப்பிக் மேன்!”
(டாபிக்க மாத்தாதே டா).

தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது கிண்டல் செய்த நண்பனை முறைத்தான் வினித். நெற்றியில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்தபடி கேட்டான்…

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை…”.

“தோள் கொடுப்பான் தோழன்னு சொல்றது சரி. அதிலே சந்தேகமில்லை. ஆனால், இங்க தோழனைத் தாண்டி எடுத்திட்டுப் போயிருக்கா சைந்தவி. நீ ஏதாவது ஒரு தருணத்தில் இதை உணர்ந்து கவனிச்சிருக்கலாம்.”

“எப்படிடா இப்படி, உணர்ந்து கவனிச்சிருக்கலாம்ங்கிற… முடிவா என் மேலே தான் தப்புங்கிறே?”

“என்னை முழுசா பேச விடு. சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிடறேன்.”

“...”

‘சரி கண்டின்யூ’ என்று நண்பனைப் பார்வையால் பார்த்திருந்தான் வினித்.

அவனிடம் அலெக்ஸ் கேட்டான்…

“நீ சொன்னியே அந்த லூனா… மத்த பொண்ணுங்க எல்லாம் மும்பை பொண்ணுங்க தானே?”

ஆமாம் என்று தலையசைத்தான் வினித்.

“அவங்க எல்லாம் அக்கம் பக்கத்திலே; ஒரே பில்டிங்; ஸ்கூல்மேட்; காலேஜ்மேட்னு உனக்கு நல்லா பழக்கமானவங்க.

என்ன தான் சென்னை மெட்ரோன்னு சொல்லிக்கிட்டாலும்; இப்போ கொஞ்சம் கல்சர்ல மாற்றம் வந்திருக்குன்னாலும்… தமிழ்ப் பொண்ணுங்க டிரடிஷனல் டைப்புங்கிறது தான் உண்மை.

இதிலே உனக்கு ஒரு முறை உதவி செஞ்ச ஒருத்தி; சைந்தவி உன் ஆஃபீஸ்ல வேலை செய்யலை; வேற எந்த விதத்திலும் நீங்க கனெக்டட் கிடையாது!

வலிய போயிப் பேசிப் பழகி இருக்கே. சைந்தவிக்கு உன் மேல் விருப்பம் வந்ததில் தப்பில்லை மச்சி. நீ பிரெண்டுங்கிற லிமிட்ல நின்றிருந்தாலும், அவ அதுக்கு மேலே லவ்னு நினைச்சிட்டா.”

“திரும்ப நீ முதல்ல சொன்ன விசயத்துக்கே வந்து நிறுத்திட்ட டா. நடந்ததை இனி மாற்ற முடியாது…

அப்படி லவ்வுன்னு எடுத்திட்டதாலே தான் லவ் சொல்லாம நேரா கல்யாணம் பண்ணிக்கக் கேட்டிருக்கா…

ரொம்ப நல்லவ சைவி. இனி எங்க பிரண்ட்ஷிப் எப்பவும் போல இருக்கப் போறதில்லைங்கிறது எனக்குப் பெரிய கவலையா இருக்கு. அவளும் எப்படி மனசுல கஷ்டப்பட்டிட்டு இருப்பா…”

வேதனையால் கசங்கித் தெரிந்தான் வினித். அவனுடைய வருத்தமும் கவலையும் புரியாமல் இல்லை. அலெக்ஸ் நன்றாகவே புரிந்து கொண்டான்.

ஆனாலும் சொன்னான்…

“இத்தனை நாளா நீ நட்பைத் தாண்டி வேற நினைச்சதில்லை… சரி… இனி அப்படி ஒரு கோணத்தில் யோசிச்சு பாரேன் மச்சி. சைந்தவியின் அன்புக்காக… உன் மேல் அவ வச்சிட்ட பிரியத்துக்காக. அவளை உனக்கு ரொம்ப பிடிக்கும்ங்கிறதாலே இதைச் சொல்றேன்.”

இதைச் சொல்வது எளிதாக இல்லையென்றாலும் சொல்லிவிட்டான் அலெக்ஸ். ஒரு நண்பனாக அவனுடைய எண்ணங்களைச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஆனால் இதைக் கேட்டதும் வினித்தின் மனது அத்தனை பாடுபட்டது. வேதனையுடன் மேஜை மேல் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். அவனுடைய கண்களில் வேதனை மட்டுமல்ல இயலாமையும் குடிகொண்டது.

ஒன்றிரண்டு நிமிடங்கள் சென்றிருக்கும்… ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து எழுந்து போனான்.

துவைத்த துணிகளை வாஷிங் மெஷினிலில் இருந்து எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றான். துணிகளைக் கொடியில் காயப்போட்டு விட்டு வந்தவனை அலெக்ஸ் சாப்பிட அழைத்தான்.

“பசிக்கலை டா. நீ சாப்பிடு.”

நண்பனின் நிலையை அறிந்து கொண்டவனால் அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. யோசிக்கட்டும் என்று விட்டு விட்டான்.

வினித் தன்னுடைய அறைக்குள்ளே சென்று கதவடைத்துக் கொண்டான். கொஞ்சம் தண்ணீரைப் பருகிவிட்டு, கட்டிலில் படுத்துக் கொண்டான்.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை அவன் வெறுத்தான். எப்படி இப்படிச் சிக்கிக்கொண்டேன் என்று நினைத்தபடி இமைகளை இறுக்கமாக மூடிக் கொண்டான். சில நிமிடங்களை அமைதியில் கழித்தான்.

அந்த நேரம் சைந்தவி தன்னிடம் கேட்டது வினித்தின் காதுகளுக்குள்ளே ஒலித்துக் கொண்டே இருக்க, அவனுடைய ஞாபகம் கிளறப்பட்டது.

“யூ நோ மீ பெட்டர் வினித்… ஹௌ டிட் யூ நாட் நோ, ஐ’ம் இன் லவ் வித் யூ?” (You know me better Vinith… How did you not know, I’m in love with you?)

(என்னை நல்லா புரிஞ்சவன்… எப்படி நான் உன்னைக் காதலிப்பதை உணரலை?)

‘இவள் கேட்பதும் சரி தானே?’ என்று வினித் அப்போது திகைத்துப் போனது சிறிது நேரம் மட்டுமே.

“எனக்கு உன்னைத் தெரியும்… நல்லா தெரியும் சைவி!”

அவள் கேட்டதில் நியாயம் இல்லை என்று தோன்றியதால் கோபத்தில் அவனுடைய குரல் அழுத்தமாகவே ஒலித்தது.

“அப்புறம் எப்படி இந்தக் காதல் உனக்குத் தெரியாம போச்சு? இத்தனை பெரிய விசயத்தை மிஸ் பண்ணி இருக்கியே…”

கோபமாகவும் ஆதங்கமாகவும் அவளும் கேட்டாள்.

தான் தவறாத ஒன்றிற்கு எப்படிப் பொறுப்பாக முடியும்? வினித்தை அவளுடைய ஆதங்கம் பாதிக்கவில்லை. அவளிடம் மறுத்துப் பேசினான்…

“வெளிப்படையாக இல்லாட்டியும், மறைமுகமாகக் கூட இதுவரை நீ என்னை லவ் பண்றேன்னு எனக்குக் காட்டியதில்லை சைவி. நான் உன்கிட்ட பெருமையா நினைக்கிற ஒரு குணம் உன்னுடைய கண்ணியம்.

அதை எப்பவும் நீ நமக்கிடையில் கடைப்பிடிச்சிருக்கே… என்னுடைய தோழியாய்! நட்புங்கிற அந்த லைனைத் தாண்டி வந்த மாதிரி நான் உணரவே இல்லை.

நம்ம பிரண்ட்ஷிப்பைத் தவிர, வேற எதையும் நான் நமக்கிடையிலே எப்பவும் நினைச்சதில்லை சைவி. அப்படி எந்த எண்ணமும் என் மனசுல இல்லைங்கிறதாலே நான் எதையும் உணராமல் போயிருக்கலாம்னு இப்போ தோணுது.
 

sudharavi

Administrator
Staff member
#18
நீ இந்தளவு என்னை விரும்புறேன்னா, எனக்கு ஒரு தடவையாவது தெரியப்படுத்தி இருக்கலாமே… என்கிட்ட நேரிடையா சொல்லணும்னு உனக்குத் தோணாம போச்சு. ஏன்மா?”

வேகமாகப் பேசத் தொடங்கியவனின் குரல் கடைசியில் உடைந்து கம்மி ஒலித்தது. அந்த, ‘ஏன்மா’ ஆதங்கமும் ஆற்றாமையுமாய் வெளி வந்து சைந்தவியைத் தாக்கியது.

அதில் உடைந்தே போனாள் அவள்.

அவளுடைய அழுகையைக் கேட்டதும் வினித் மௌனமாக நின்றான். அவனைப் பெரிதும் பாதித்தது அவளுடைய நிலை. ஆனாலும் முயன்று கேட்டான் அவளிடம்…

“நானும் கேட்கலாமில்லை…” குரல் கரகரத்தது. தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தான்…

“நீ எப்படி என்னைத் தப்பா புரிஞ்சுட்டே?”

சைந்தவி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க, வினித் சொன்னான், “உனக்கு நல்லது பண்றதா நினைச்சி நட்புக்கரத்தை நீட்டினேன். இப்போ அதனாலேயே நீ வருத்தப்படும்படி ஆகியிருச்சு”.

“அழாதே சைவி! என்னை ரொம்ப ஃபீல் பண்ண வைக்கிறே நீ… ப்ளீஸ் காம் டௌன்!”

சில நிமிடங்கள் பிடித்தன. அவள் அழுது ஓய்ந்ததும் சொன்னான்…

“நான் என்ன செய்யட்டும் சைவி… சொல்லு?”

“சில் வினித்! ஐ வில் பீ ஓகே!”

நான் தேறிடுவேன்… எவ்வளவு சிரமப்பட்டு அவள் இதனைச் சொல்லியிருப்பாள் என்று வினித் இப்போதும் நினைத்துக் கொண்டான்.

ஆனால், அவள் கேட்ட, “என்னை நல்லா புரிஞ்சவன்… எப்படி நான் உன்னைக் காதலிப்பதை உணரலை?” அவனுடைய ஞாபகத்தில் நின்று இன்றும் மிகவும் வருத்திற்று.

“என்ன கேட்டுட்ட சைவி… எப்படி அப்படிக் கேட்க முடிஞ்சது உன்னாலே?”

முணுமுணுத்துக் கொண்டான்.

சற்று முன்னர் அலெக்ஸ்ஸூடன் பேசியதும் மனத்தில் வந்து நின்றது.

வினித் நினைத்தான், ‘அலெக்ஸ் சொன்ன மாதிரி என்னாலே நினைத்துப் பார்க்க முடியுமா?

நட்பு என்பது தனி. அதனுடன் காதல் இணைந்தால்? ஏற்றுக் கொள்ள முடியுமா? சாத்தியமா?’.

வினித்தின் மனதும் அவனுடைய விருப்பமும்… சைந்தவியின் மனதும் விருப்பமும்… இப்படிப் பல சிந்தனைகள் அவனுக்குள்ளே அலையலையாய்த் தோன்றி உயர்ந்தன.

வாழ்க்கைத் துணை என்கிற ரீதியில், இவ்விருவருக்கும் முன்னே விதியின் பயணம் ஆரம்பமானது!

நாட்கள் சில நகர்ந்திருந்தன.

இடைப்பட்ட காலத்தில் சைந்தவி, வினித் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்றில்லை. சந்தித்துக் கொண்டார்கள். பேசிக் கொண்டார்கள். ஆனால் எல்லாமும் குறைந்துவிட்டது.

தங்களுக்கு இடையில் ஏதோ திரை விழுந்தது போல உயிர்ப்பில்லாத சந்திப்புகளாகின அவை. கலகலப்பில்லாத பேச்சுகளாக நிலவின அந்தத் தருணங்கள் யாவும்.

யாருடைய நிலையையும் காலம் கண்டுகொள்வதில்லை. அனைவரின் இயக்கமும் காலத்தின் அசைவில் என்பதும் உண்மை.

சைந்தவி தான் நினைத்தபடியே வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தாள்.

வினித்தைப் பற்றிய வருத்தம் அவளுடைய மனத்திலே ஆழப் பதிந்திருக்கிறது. அவனைக் கடந்து போகும் மேகமாக இவளால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

வினித்திற்கும் சைந்தவி கலைந்து போகும் மேகமாக இல்லை!

நட்போ காதலோ, அழுத்தமானதாக இருப்பின் எளிதில் கலைந்து விடுவது கிடையாது! கடந்தும் போய்விட முடியாது!

இதை இருவருமே தெரிந்து வைத்திருக்கின்றனர். உணர்ந்து கொண்டும் இருக்கின்றனர்.
 

sudharavi

Administrator
Staff member
#19
அத்தியாயம் 06:

சைந்தவிக்கு, தன்னுடைய நினைவிலிருந்து வினித்தை ஒதுக்கி வைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இந்தக் காதல் தன்னைப் பலவீனப்பட்டுப் போக வைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க இருக்க, வினித்தின் நினைவு அவளை வாட்டி எடுத்தது.

எப்பொழுதும் போலில்லாமல், அவனுடன் பேசியில் உரையாடுவது கூட மிகவும் கடினமாகத் தெரிந்தது. அவனை நேரில் சந்திப்பது அதைவிடவும் கொடுமையாகப்பட்டது.

அவனிடம் வார்த்தைகளை எண்ணி எண்ணிப் பேசினாள். தன்னையும் தன்னுடைய மனச் சங்கடத்தையும் மறைக்க நினைத்து, அவனைச் சந்திக்கும் தருணங்களில் அசாதாரணமாக நடந்து கொண்டாள்.

ஒரு நாள் இருவரும் மாலில் சந்தித்துக் கொண்டனர். சில நிமிடங்களை ஷாப்பிங் என்னும் பெயரில் நெட்டித் தள்ள வேண்டியதாக இருந்தது.

“இது ஒன்னும் வேலைக்காகாது.”

பெருமூச்சுடன் முனங்கினான்.

“ஃபுட் கோர்ட் போகலாமா சைவி?”

“சரி வினித்.”

இருவரும் அங்குச் சென்று ஓர் இடம் தேடி அமர்ந்தனர்.

“என்ன சாப்பிடறே? சொல்லு ஆர்டர் பண்ணிட்டு வர்றேன்.”

“நானே பண்ணிக்கிறேன். நீ உனக்கு வேண்டியதை மட்டும் போய் ஆர்டர் பண்ணு.”

அவளுடைய பதிலில் நிதானம் கெக்களித்து அவனைவிட்டு விலகப் போனது. உணர்ந்த சடுதியில் லபக்கென்று பற்றிக் கொண்டு எதிரே அமர்ந்திருந்தவளிடம் சொன்னான்.

“இதென்ன புதுசா… உனக்குத் தனியா ஆர்டர் பண்ணிக்கிறது? சொல்லு என்ன வாங்கட்டும்?”

அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய கண்களில் கோபத்தின் விரிப்பு… உதடுகளை அழுத்திப் பிடித்திருந்ததைத் தாடையின் இறுக்கம் காட்டிக் கொடுத்தது.

கன்னத்துத் தசைகளில் மெல்லிய துடிப்பு வேறு!

“கோபம் வந்தா பொங்கிடு. இந்த லுக் உனக்கு எடுப்பா இல்லைடா.”

கண் சிமிட்டிச் சிரித்தாள். வருத்தம் கொடுத்துவிட்டாள். வேண்டும் என்றே. ஆனால், அவளால் அவனைத் துன்பமாகவும் பார்க்க இயலவில்லை.

தான் அவனுக்கு வருத்தம் கொடுப்பது அவளுக்கு முள்ளால் கிள்ளி எடுக்கும் உணர்வைத் தந்து கொண்டிருப்பது உண்மை. இருந்தும் வருத்திக் கொண்டிருந்தாள். சற்றே பதன் நிலை மனத்தில் பட்ட போது, அவனை இயல்பாக்க ஏதோ சின்னதொரு சகாயம் செய்ய முயன்றாள்.

சைந்தவி சொன்னதைக் கேட்ட வினாடியில் வினித் இறுக்கம் தளர்ந்தான். சற்றே இலகுவானவனின் தோள்கள் சரிந்தன. கண்களை மூடிக் கொண்டான் ஒரு நிமிடம் வரை. அவனுக்குள்ளே யோசனைகள் சரம் தொடுத்தன.

பின்னர் ஒரு முடிவுடன் அங்கிருந்து எழுந்து சென்றான்.

அரை மணி நேரம் சென்றே திரும்பி வந்தான். அவனுடைய கைகளில் அவளுக்குப் பிடித்த பீட்சா வகை ஒன்றும் பாவ் பாஜ்ஜியும் வீற்றிருந்தன.

“சாப்பிடு மா.”

சொல்லிவிட்டுப் பாவ் பாஜ்ஜியைச் சாப்பிட ஆரம்பித்தான். அந்தப் பதார்த்தம் ருசிக்கவே இல்லை. இத்தனைக்கும் நல்ல மணத்துடன் சரியான மும்பை சுவையுடன் தயாரிக்கப்பட்டிருந்தது.

அவளும் பீட்சாவைச் சாப்பிட்டாள்… அணில்பிள்ளைக் கொரிப்புடன்!

நெஞ்சம், தான் நேசம் வைத்திருப்பவனுக்காகத் துடித்தது.

தன்னைத் தாக்கிய காதல் நோயின் வலி அவனுக்கும்… அவனுடைய அன்பாலும் அக்கறையாலும் தான் குழைந்து போய்; தற்போது அதனாலேயே தன்னுடைய இதயம் குலைந்து போய்…

எல்லாமும் அவனையும் தாக்குகின்றன. பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நண்பனை விரைவில் விடுதலை செய்ய வேண்டும். எண்ணங்களின் வலை பின்னல் அவளை ஆக்கிரமித்துக்கொண்டன.

உருளாமல் உருண்டு கொண்டிருந்த நிமிடங்களுக்கு, அவர்களுடைய உதட்டசைவுகளே மொழி தந்தன.

சகிக்க இயலாத மௌனக் கவ்வல் அவனைப் பேச வைத்தது.

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டு என்னை இம்சைப்படுத்தணும்னு தொடங்கி இருக்கேயில்ல?”

எப்பவும் மீசைக்குக் கீழே தவழும் வினித்தின் முறுவல் கசங்கி அடிவாங்கி இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே பேசினாள் சைந்தவி.

“நீ தான் எதையோ யோசிச்சு உளறிட்டு இருக்கே டா.”

தோழியைக் கூர்ந்து பார்த்தான். உள்ளமும் உதடுகளும் வேறாகிப் போயிருந்த அவளுடைய தோற்றம் அவனுக்குத் துல்லியமாய்ப் புலப்பட்டது. அவளின் புதிய நடவடிக்கைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் வேதனை மிகவும் வாட்டியது.

அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வினித் வேகமாகப் பேச ஆரம்பித்தான்.

“எதுக்கு இப்படிச் சரியா பேசாம ஏதோ போல இருக்கே சைவி? அன்னைக்கு என்னிடம் சரியாகிடுவேன்னு சொல்லிட்டு இப்போ என்னையும் வாட்டிட்டு இருக்க. எப்பவும் போல நாம பேசிப் பழகிட்டு நட்பா இருக்கக் கூடாதா?

மொபைல்லயும் பேசுறதைக் குறைச்சிட்ட. அப்படியே பேசினாலும் சரியாவே பேசுறது கிடையாது. சரி நேரில் சந்திச்சு பேசலாம்னு கேட்டேன். ஆனா பாரு, இதுவும் சொதப்பலாத் தான் போயிட்டு இருக்கு.
 

sudharavi

Administrator
Staff member
#20
இப்படி ஏனோதானோன்னு நடந்துக்கத் தான் ஹாஸ்டல்ல இருந்து கிளம்பி இவ்வளவு தூரம் வந்தியா? அங்கே இருந்து வந்து என் முன்னாலே இப்படிச் சங்கடப்பட்டு உட்கார்ந்து இருக்கிறதுக்கு, நீ வராமலே இருந்திருக்கலாம் சைவி.

ஏன்மா என்னை இப்படிக் கொல்லுற?”

சலிப்பும் கோபமுமாய் அவன் பேச, “நான் நல்லாத் தான் இருக்கேன் வினித். ஏதோ யோசிச்சிட்டு நீ சொன்னதை அப்போ கவனிக்காம விட்டுட்டேன். சாரி… மன்னிச்சு ப்ளீஸ்!” நிதானமாகச் சொன்னாள்.

“இந்த மன்னிப்புக் கேட்கிற பழக்கம் எதுக்குப் புதுசா… ஒப்புக்குச் சொல்லிட்டு இருக்கிறயா? ம்ம்…”

தன்னுடைய பார்வையைத் தவிர்ப்பதிலேயே அவள் மனத்தை மறைக்கப் பிராயத்தனப்படுவது புரிய, வினித் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டுச் சொன்னான்…

“எதையும் நினைச்சிட்டு இருக்காமல் ஆர்டர் பண்ணின இந்தப் பீட்சாவையாவது ஒழுங்கா சாப்பிட்டு முடி. இனி கொஞ்ச நாளைக்கு நாம பார்த்துக்க வேண்டாம். ஓகே?

எனக்கு உன்னை இப்படி வருத்தத்துடன் பார்க்க என்னவோ போல இருக்கு. உள்ளே குத்திட்டே இருக்கிற இம்சை. வெளியே கொடுமையான இந்த அவஸ்தை. எதிலோ பெரிசா சிக்கிட்ட மாதிரி நெஞ்சிலே கலக்கம்.

எதுவுமே சரியாகிடும்னு நினைக்கிற என்னை இந்த விசயம் ரொம்ப குழப்புது. உன்னை எப்படி ஹாண்டில் பண்ணன்னு புரியலை.”

ஆயாசம் தாக்க, இயலாதவனாக உணர்ந்தான். இரண்டு கைகளையும் உயர்த்தி, தலைமுடிக்குள் விரல்களைச் சொருகி, தலையை அழுந்த பற்றிக் கொண்டான் வினித்.

அவன் சொன்னதும் அந்தக் குரலும் சைந்தவியை மேலும் வருத்தம் கொள்ளச் செய்தது. ஆனாலும் சொன்னாள்…

“சரி வினித். நீ ஃபீல் பண்ணாதே. கொஞ்ச நாளைக்கு நாம பார்த்துக்க வேண்டாம்.”

பிரிவு அவளை நிலைப்படுத்தும் என்று ஏற்கெனவே நினைத்து வைத்தது தானே? மனத்தில் துயரம் ஊற்றெடுத்துத் துவம்சம் செய்தாலும், உறுதியான அவளுடைய முடிவில் முதல் படி… அதுவும் அவள் பிரியம் வைத்திருப்பவனையே சொல்ல வைத்துவிட்டாள்.

அடிபட்டுச் சிதைவுக்கு உள்ளான மனது துடித்தது அவனுக்குள்… இமைகளைச் சிமிட்ட மறந்தவனாக அவளை ஆழ்ந்து பார்த்தபடியே வினாடிகளைக் கரைத்தான்.

பிறகு மெல்லிய குரலில் பேசினான்.

“அஸ் யூ விஷ்! நீ சொல்கிற வரை நான் உன்னைச் சந்திக்க வரலை சைவி.”

உள்ளத்தின் பரிதவிப்பை வார்த்தைகள் வடிக்கவில்லை… அவனுடைய பார்வை சொன்னது!

“வினித்…”

அப்பரிதவிப்புத் தன்னைப் பாதித்தவளாக விளித்தாள்.

“நீ சாப்பிட்டு முடி சைவி. நாம போகலாம். நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன்.”

கலங்கிய கண்களை மறைக்க விலகிப் போகிறவனை வெறித்தாள். அவளுடைய கண்களும் கலங்கிப் போயின. கன்னம் தொட்ட கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள். மூக்கை உறிஞ்சியபடியே சாப்பிட்டு முடித்தாள்.

உணர்வுகளை வெளிக்காட்டக் கூடாது என்பதில் கவனமாக இருந்து இருந்து, அவனிடம் தன்னுடைய இயல்பு குணம் சுருள்வதை உணர்ந்தாள் சைந்தவி.

“இவ்வளவு ஆழமா உன்னை விரும்புறேன்னு இப்போ தான் புரிஞ்சது வினித். இந்த விருப்பம் சரியில்லை. இதுக்கு எந்த அர்த்தமும் இருக்கப் போறதில்லை… நினைக்க நினைக்க வேதனை ஏறிட்டே இருக்குடா. நான் இப்போ என்ன செய்ய இந்த ஒரு தலைக்காதலை வச்சிட்டு!”

விரக்தியை அதிகமாகவே உணரத் தொடங்கினாள்.

“வேற வேலை வாங்கிட்டுப் போயிடறேன்டா. உன்னையும் கஷ்டப்படுத்திட்டு, நம்ம ரெண்டு பேரோட நிம்மதியும் கெட்டு… இந்த நட்பும் காதலும் வேண்டாம். வேண்டவே வேண்டாம்!”

வேறு வேலை மாற்றிப் போக முடிவு செய்திருப்பதை வினித்திடம் நேரிடையாக இன்னும் சொல்லவில்லை. அவளாகவே புலம்பிக் கொண்டிருந்தாள்.

இரண்டு பேருக்கும் நல்லது என்று முடிவெடுத்து விட்டாள். அவனுடைய மனதும் விருப்பமும் இதில் கணக்கெடுக்கப் படவில்லை. இவள் தன்னுடைய காதலை வேண்டாம் என்று முடிவு செய்யலாம். அது சரி.

வினித் தன்னுடைய நட்பை விட்டுவிட வேண்டுமாம். இதை இவளாகவே எப்படி முடிவு செய்ய முடியும்?

‘இந்தப் பிரண்ட்ஷிப் வேணாம்னு அவன்கிட்ட சொல்லிப் பாரேன்! நீ வேணாம்னு சொன்னா அழி ரப்பரை வச்சி அழிச்சிடலாம்னு நினைச்சியா? லூசு பொண்ணு! அவனுடைய பிரண்ட்ஷிப்பும் ஆழமானது.’

அவளுடைய மனமே அவளிடம் வினித்திற்காகத் தர்க்கம் செய்துகொண்டிருந்தது.

முன்னும் பின்னும் யோசனை. எடுத்திருக்கும் முடிவைச் செயல்படுத்துவதில் முனைப்பு… அதனைத் தாங்கிக்கொண்டு நகர்வதில் நிரம்பத் தடுமாற்றம்.

ஆனாலும் சைந்தவி பின்வாங்கவில்லை. மனது ஒரு போக்கிலே பயணம் செய்ய முயன்றாலும், தன்னுடைய முயற்சியால் அதனைத் தோற்கடித்தாள்.

வினித்துடைய நிலை வேறாக நகர்ந்தது. சைந்தவி அவனுடைய நட்பு வட்டத்திலேயே தான் நிற்கிறாள். அலெக்ஸ் அவனிடம் சொன்ன மாதிரி ‘மாத்தி யோசி’ எண்ணத்தை அவனால் அணுக முடியவில்லை.

சைந்தவி இப்போது போடுற சீன்களெல்லாம் சகிக்கவில்லை. அவனுடைய கோபம் படை எடுக்கிறது. வருத்தம் அந்தக் கோபத்திற்கு அணை கட்டிக் கொண்டிருக்கிறது.

சென்ற சந்திப்பில் எடுத்திருக்கும் முடிவு இருவருக்கும் நல்லதாய்… வினித்தை ஆசுவாசப்படுத்தியது.
 
Status
Not open for further replies.