பயணங்கள் தொடரும் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சித்ரா தேவி அவர்கள் "பயணங்கள் தொடரும்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்.
 
#2
வணக்கம் தோழிகளே என்னுடைய கதையின் முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

பயணங்கள் தொடரும்….


கீதாஞ்சலி நெற்றியில் சிறிய கருப்பு பொட்டை ஒட்டியவள், அந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னை மீண்டும் சரிபார்த்துக் கொண்டாள்.

ஆம் மீண்டும் என்றால், குளித்து தயாராகி வந்த இந்த அரைமணி நேரத்தில் கீதாஞ்சலி பலமுறை, தான் சரியாக தயாராகி இருக்கிறோமோ என சரி பார்த்துக்கொண்டே இருந்தாள்.

இவள் செய்வதையே வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரிமா…

மதுரிமா, கீதாஞ்சலியின் செல்லத் தங்கை… கீதாவிற்கு பிறகு ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவள்…. அருண், கீதாவிற்கு இரண்டு வயது மூத்த சகோதரன்…

இது நாள் வரை நல்ல தோழனாகவும், தாய், தந்தையுமாகவும் இருந்தவன், இப்போ சில மாதங்களாக கீதாவிடம் சரியாக பேசுவதேக் கிடையாது.

கீதாவிற்கு வருத்தமாக இருந்தாலும், வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டாள். சின்னவள் தான் குதிப்பாள், எல்லாம் இந்த அண்ணியால் தான் என்று கூறுவாள்.

நந்தினி தான் இவர்களின் அண்ணி. அவளை அண்ணியாக தேர்ந்தெடுத்ததே இவர்கள் இருவரும் தான்….

ஆம் ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவர்களின் பெற்றோர் இறந்து விட்டார்கள்….. அவர்களோடு சேர்ந்து கீதாவின் வாழ்க்கையும் முடிந்தது….

கீதாவின் கல்லூரி காலம் முடிந்தவுடன், அவசரமாக திருமணம்…. இவள் ஜாதகத்தில் ஏதோ கிரகம் சரியில்லை… உடனே திருமணம் செய்ய வேண்டும், இல்லையென்றால் சன்னியாச வாழ்க்கை என்று ஜோசியர் கூற, உடனடியாக திருமணம் நடத்தப்பட்டது…. ஆனால் ஆரம்பத்த வேகத்த்திலே இவளது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது….

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் , ஏதோ ஒரு கோவிலுக்கு குடும்பத்தோடு சேர்ந்து செல்லும் போது, எதிரே வந்த இரண்டு சக்கர வாகனத்தில் இவர்களின் டிரைவர் மெதுவாக இடித்து விட்டார்.

எதிரே வந்தவரோ விடாமல் சண்டை போட, டிரைவரால் சமாளிக்க முடியாமல், மாமனும், மருமகனும் சமாதானம் செய்ய முயன்றார்கள்… ஆனால் எதிரே வந்தவரோ விடாமல் பிரச்சனை செய்தார்...
மணி ஆகி விட்டது என்று அவர்களை கூப்பிடுவதற்காக இறங்கிய இவர்களின் தாயும், சேர்ந்து எதிரே வந்த லாரியால் மோதப்பட்டு , அந்த இடத்திலே ஐவரும் இறந்தனர்.

காரில் இருந்ததால் இவர்கள் மூவர் மட்டும் உயிர் தப்பினர்‌.

ஒரு புறம் தன் கணவனையும், மறுபுறம் தன் தாய் தந்தையும் இழந்து பித்துப் பிடித்தாற் போல் இருந்த பெரிய தங்கையையும், கண் முன்னே நடந்த கோர விபத்தைப் பார்த்து மலங்க மலங்க விழித்த சிறிய தங்கையையும், தாயாய் நின்றுத் தாங்கி அவர்களை ஆளாக்கியவன் தான் அவர்களின் அண்ணன்.

முப்பது வயது வரை திருமணம் செய்யாமல், இவர்களுக்காகவே வாழ்ந்தவனை, மல்லுக்கட்டி சம்மதம் வாங்கி, திருமணம் ஏற்பாடுகளைச் செய்தனர். தரகர் மூலம் வந்த வரன் தான் நந்தினி. பார்த்தவுடனே இவர்கள் இருவருக்கும் பிடித்து விட்டது.

மதுமா என அவள் தோளை பிடித்து அசைத்தாள் கீதா….

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த மது திடுக்கிட்டு நிமிர கீதா அவளின் அருகில் நின்றிருந்தாள்.

என்ன அக்கா கூப்பிட்டிங்களா என மது வினவ…

அது இல்லை மதுமா, என்னையே பார்த்துக் கொண்டு இருந்தியே புடவை நல்லா இல்லையா?...

அய்யோ அக்கா நான் வேற ஏதோ நினைவில் இருந்துட்டேன். இந்த நீல நிற புடவையில் நீ எப்படி இருக்கிற தெரியுமா? தேவதை மாதிரி இருக்கிற கா …

ஆமாக்கா என்னாச்சு கண்ணாடி முன்னாடி இவ்வளவு நேரமா நின்னுட்டே இருக்க…

அது இன்னைக்கு இன்டர்வியூல, அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு டா, ட்ரஸ்ஸிங் சென்ஸ் எப்படி இருக்கு என்று வேற பார்ப்பாங்க… அது தான் நல்லாயிருக்கா என்று பார்த்தேன் டா.

அக்கா இன்டர்வியூ நீ நல்லா பண்ணுவ, எனக்கு நம்பிக்கை இருக்கு...

சரி நீ போக்கா, நானும் என்னோட ரூம்க்கு போய் ரெடியாகி விட்டு வரேன். இன்னைக்கு ஆஃபிஸ்க்கு சீக்கிரமாக வரச் சொன்னாங்க
என்று கூறிய மது...

ஆமாம் உனக்கு எத்தனை மணிக்கு
இன்டர்வியூ என வினவ ….

பதினொன்று மணிக்கு தான் மது, பொறுமையாக போனால் போதும் என்றாள் கீதா.

அண்ணா வராங்களா என மது வினவ…
தெரியலை கேட்கணும், இல்லை என்றால் ஆட்டோ பிடித்து போகணும் டா, சரி வா என்றவள் கிச்சனுக்குள் சென்றாள்.

நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேற்பட்டவர்கள்.
மூன்று பெரிய படுக்கையறை, அட்டாச் பாத்ரூம் வசதிகளுடன் உள்ளது. கிச்சன், டைனிங் ஹால் என சகல வசதிகளுடன் கூடிய வீடுதான் இவர்களுடையது…

பணத்திற்கு என்றுமே பிரச்சனை கிடையாது .
இவர்களின் தந்தை மூவரின் பேரிலும் பேங்கில் கணிசமாக பணம் போட்டு வைத்திருந்தார். அருணுக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம்…

சமையல் மட்டும் நந்தினி செய்வாள். மேல் வேலைக்கு ஆள் உண்டு.

அதனால் இவர்கள் இருவருக்கும் பெரியதாக வேலை கிடையாது...

கீதா கிச்சனுக்குள் சென்று அண்ணி செய்து வைத்ததை டேபிளில் அரேஞ்ச் செய்தாள்.

காலை சாப்பாடு அண்ணன் வேலைக்கு போவதற்கு முன்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடுவார்கள்.

கீதா மதுவைக் காணோம் என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அண்ணன், அண்ணி வந்து விட்டார்கள் என்றால், மது இல்லை என்றால் அதற்கு வேறு ஒரு வாக்குவாதம் வரும்….

ஏன் தான் சின்னக்குட்டி இப்படி பண்ணுதோ
என நினைத்துக் கொண்டு டென்ஷனோடு இருந்தாள் மது.

அருணும், நந்தினியும் ரூமிலிருந்து வெளியே வந்து, நந்து கீதா ரெடியாகி விட்டாளா இன்னைக்கு தான இன்டர்வியூ என வினவ…

அதெல்லாம் கீதா அண்ணி, கரெக்டா கிளம்பியிருப்பாங்க அருண். நீங்க வாங்க சாப்பிட என்றவள் , ஆனால் உங்கள் சின்னக்குட்டி தான் ரெடியாகி இருக்க மாட்டாள் என்று மதுவை பற்றி சரியாக கணித்தாள் நந்தினி .

அருண் வந்து சாப்பிட அமர்ந்தான்.
கீதா, மது எங்க இன்னும் வரவில்லையா என வினவ…

இதோ வந்துட்டேன் அண்ணா என்று கூறிக்கொண்டே அவளும் அமர்ந்துக் கொண்டாள்.

கீதாவும், நந்தினியும் அவர்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு அவர்களும் அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர்.
 
#3
கீதா இன்டர்வியூக்கு தயாரா என்று அருண் வினவ….

கிளம்பிட்டேன் அண்ணா, பதினொரு மணிக்கு போனால் போதும். நீங்கள் ட்ராப் பண்ணுறீங்களா அண்ணா எனத் தயங்கிக் கொண்டே கேட்டாள்….

சரி வா என்றவன், "நான் என் ஆபிசுக்கு போன் பண்ணி ஆஃப் டே லீவ் கேட்கிறேன்" என்றான் அருண்.

நந்து நீ எனக்கு லஞ்ச் பேக் பண்ண வேண்டாம் என….

சரி என தலையசைத்தவள், அருண் அண்ணிக்கு வேலை கிடைச்சவுடன், ஸ்கூட்டி வாங்கி கொடுத்துருங்க…. அவங்க யாரையும் எப்போதும் எதிர்பார்க்காமல் தனியாக போக அது தான் வசதி என்றாள்….

நந்தினி கூறியதை கேட்ட கீதாவின் கண் கலங்க , மெல்ல சமாளித்துக் கொண்டாள்.

மது தான், எதுக்கு அண்ணா இன்னொரு வண்டி, நானும் அந்த பக்கம் தான் போகனும்...
இன்னைக்கு நான் சீக்கிரம் போக வேண்டும். இல்லையென்றால் நானே ட்ராப் பண்ணிவிடுவேன் என்றாள்.

மது, நீ சும்மா இரு, பெரியவங்க எது செய்தாலும் அது நல்லதுக்கு தான் புரியுதா என்ற அருண், உனக்கு ஆஃபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு என்றால் நீ கிளம்பு என்றவன், பிறகு கீதாவைப் பார்த்து நீ போய் ரெடியாகு என்றான் அருண்.

*********************************
காரில் போகும் போது, அருகில் அமர்ந்து இருந்த கீதாவைப் பார்த்து, ஏன் டா ஸ்கூட்டியில் போக பயமா இருக்கா, இல்லை ஸதனியாக போக பயமா இருக்கா என வினவ ….

அதெல்லாம் ஒன்னும் இல்லைணா, என மெல்லிய குரலில் கூறினாள் கீதா.

இங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் தான் மா…
எந்த பயமும் கிடையாது …. உனக்கு ஆஃபிஸ்ல லேட்டானா எனக்கு ஃபோன் பண்ணு…. அண்ணா வந்து அழைச்சிட்டு போறேன் சரியா, என சின்னக்குழந்தைக்கு சொல்வது போல் அருண் கூற..

கீதாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது, அதை அடக்கிக் கொண்டு முதலில் வேலை கிடைக்கட்டும் அண்ணா, என்றாள்…

உன் திறமைக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் கீதா… உன் அண்ணி அதனால் தான் உன்னை கட்டாயப்படுத்தி வேலைக்கு போக சொன்னாள் என அருண் கூற, சரி அண்ணா என்றவள், அந்த நிகழ்ச்சியை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தாள்.

அண்ணன் திருமணம் முடிந்து விருந்து, மறுவீடு சடங்கு, உறவினர்கள் வீட்டு விருந்து எல்லாம் முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

மறுநாள் காலையில் கீதா வழக்கம் போல் கிச்சனுக்குள் சென்றுப் பார்த்தால், நந்தினி எல்லா வேலைகளையும் முடித்திருந்தாள்.
ஏன் அண்ணி நான் வந்து செய்வேன் இல்லை. நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க என்றாள் கீதா.

என் வீட்டு வேலை செய்ய எனக்கென்ன கஷ்டம்…. நீங்க போங்க அண்ணி நான் பார்த்துக்கொள்கிறேன் என நந்தினி கூறினாள்.

அப்புறம் உங்களுக்கு வீட்டில் இருக்க போரடிச்சா வேலைக்கு போங்க… படித்த படிப்பை வீணாக்க கூடாது…. உங்களோட சின்னவள் மது வேலைக்கு போகலையா? நானும் கொஞ்சம் நாளில் பொட்டிக் வைக்கலாம் என்று ஐடியா வைத்திருக்கிறேன்…. நீங்களும் சொந்த காலில் நில்லுங்க அண்ணி, எனக் கூற….
அவளின் அம்மாவோ, நீ சும்மா இரு நந்து , அவங்க அண்ணன் இருக்கும் போது, அவளுக்கு என்ன கவலை… நீ எதிலும் தலையிடாதே என்று கூறி மகளை கையோடு அழைத்துச் சென்று விட்டார்.
முதல் முறையாக தன் தாய், தந்தை இறந்த பிறகு அந்த வீட்டில் அன்னியமாக உணர்ந்தாள்.

கீதா என அருண் அழைக்க, பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள். ஆஃபிஸ் வந்துடுச்சு மா, ஆல் தி பெஸ்ட் என, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை படற… வரேன் அண்ணா எனக் கூறி உற்சாகத்துடன் அலுவலகத்தில் உள்ளே நுழைந்தாள்….


பயணங்கள் தொடரும்…..
 
#4
அத்தியாயம் -2

கீதாஞ்சலி, அந்த வானுயர்ந்த கட்டிடத்தை நிமிர்ந்துப் பார்த்து, ஒரு நிமிடம் திகைத்து, பின் தன்னை சமாளித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.


இவள் இன்டர்வியூக்கு வந்த நிறுவனமான ஈஸி சொல்யூஷன் ஐந்தாவது தளத்தில் இயங்கி வருகிறது.

கீதா முன்பே விசாரித்துத் தெரிந்துக் கொண்டதால், நேரே லிப்டில் ஏறி ஐந்தாவது தளத்திற்கு சென்று ரிஷப்ஷனில், இன்டர்வியூக்கு வந்திருப்பதாக தெரிவித்தாள்.

ரிஷப்ஷனில் நின்றிருந்தவள், அழகாக புன்னகைத்து," வெல்கம் மேம், ப்ளீஸ் வெயிட் இன் திஸ் சைட்" என்று கூறினாள்.

கீதா, அவள் கூறிய இடத்தைப் பார்த்து திகைத்து தான் போனாள். இன்டர்வ்யூ நடப்பதோ நான்கு கேண்டிடேட் தேர்வு செய்ய தான், வந்திருப்பதோ முப்பது பேருக்கு மேலாவது இருப்பார்கள்.

கடவுளே! எப்படியாவது இன்டர்வ்யூல செலக்ட் ஆக வேண்டும் என்று அவசர வேண்டுதலை, வைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அங்கே ஒருபுறம் அப்பொழுது தான் கல்லூரி முடித்து விட்டு வந்த இளைஞர், இளைஞிகள் பயமோ, பதட்டமோ இன்றி இலகுவாக அமர்ந்திருந்தனர்.

இன்னொரு புறமோ, அனுபவம் பெற்றவர்கள் தன்னம்பிக்கையோடு அமர்ந்திருந்தனர்.

இவள் ஒருத்தி தான் டென்ஷனோடு இருந்தாள். கீதா மெல்ல தன்னை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு சுற்றிப் பார்த்தாள்.

அவளுக்கு பின்புறம், ஓரமாக அமர்ந்து இருந்த நால்வரையும் பார்த்தவுடன், அவளுக்கு தன்னுடைய, கல்லூரி கால வாழ்க்கை ஞாபகம் வந்து விட்டது.

பெருமூச்சு விட்டுக் கொண்டே, அந்த நினைவுகளில் இருந்து வெளியே வருவதற்காக, கவனத்தை திசை திருப்பினாள்.அங்கிருந்த மேசையின் மேல் இருந்த புக்லெட்டை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

கம்பெனியின் வளர்ச்சி பற்றி எழுதி இருப்பதைப் பார்த்து பிரம்மித்து தான் போனாள் கீதா.

கடந்த நான்கு ஆண்டுகளில் கம்பெனி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.இங்கு நமக்கு வேலை கிடைத்தால், நல்ல எதிர்காலம் உண்டு,என எண்ணிய கீதா, மேலும் படிப்பதற்குள் இன்டர்வியூ ஆரம்பித்து விட்டதாக் கூறி, ஒவ்வொருவராக அழைக்க…. கீதாவோ தனது ஃபைலை எடுத்து வைத்து தயாராக இருந்தாள்.

கீதாவின் பெயரை அழைக்கவும், தைரியமாக எழுந்துச் சென்றாள்.

இன்டர்வ்யூ நடக்கும் அறையின் கதவைத் தட்டி விட்டு, அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்றாள்.

அங்கிருந்த மூவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, அவர்கள் அனுமதி அளித்தப் பின்பு நாற்காலியில் அமர்ந்தாள்.

அவர்களில் யார் எம். டி என தெரியாமல், மூவரையும் பொதுவாகப் பார்த்து தன்னைப் பற்றிய விவரங்களை கூறி விட்டு ஃபைலை நீட்டினாள்.

மூவரில் நடுவில் அமர்ந்திருந்தவர், தன்னை ஹெச்ஆர் மேனேஜர் என்று அறிமுகம் செய்துக் கொண்டார்.
மற்ற இருவரும் டீம் லீடர்ஸ் என்று அறிமுகம் செய்தார்.

பிறகு மூவரும் கேள்விக் கனைகளைத் தொடுத்தனர்.
எல்லாக் கேள்விகளுக்கும், தெளிவாக பதில் கூறினாள்.

இதற்கு முன்பு வேலை செய்த அனுபவம் இருக்கா? என மேனேஜர் வினவ…

இல்லை சார், ஆனால் பிராஜெக்ட் செய்த அனுபவம் இருக்கு சார்….

எனக்கு வேலை கிடைத்தால், என் திறமையை நிரூபிப்பேன் சார், என்று தன்னம்பிக்கையோடு கூற….

நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் திருப்தியான பதில் தான் கிடைத்தது,வெரி குட்...
உங்களுடைய மார்க், சர்டிபிகேட் அன்ட் உங்களுடைய பிராஜெக்ட் எல்லாமே திருப்தியா இருக்கு, பட் நீங்கள் ஸ்டடிஸ் கம்ப்ளீட் பண்ணி சிக்ஸ் இயர்ஸ் ஆச்சு, ஆனால் இவ்வளவு நாள் வேலைக்கு செல்லாதது தான் யோசனையாக இருக்கிறது எனறவர் ….

சிறிது நேர யோசனைக்கு பிறகு, கொஞ்சம் நேரம் வெளியே மீட்டிங் ஹாலில் வெயிட் பண்ணுங்க மிஸஸ். கீதாஞ்சலி குமார்.

அடுத்த கட்ட இன்டர்வியூ" எம்‌. டி யுடன் உங்களுடைய கலந்துரையாடல்".ஆல் தி பெஸ்ட் என்றார்.

வெளியே வந்த கீதாவிற்கு,ஏனோ தனக்கு வேண்டியவர் இங்கு இருப்பதாகவே தோன்றியது.

ரிஷப்ஷனில் விசாரித்து, மீட்டிங் ஹாலிற்கு சென்றாள்.

அங்கு இவளோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் இருந்தனர்.
 
#5
அங்கிருந்த பத்து பேரில், இரண்டு பேர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்து கீதாவும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

மற்றவர்களோ இவ்வளவு நேரம் ஏன் தான் தாமதம் செய்கிறார்களோ,என்று தங்களுக்குள்ளே சலசலத்துக் கொண்டிருந்தனர்.

பிறகு ஒவ்வொருவராக அழைக்க, உள்ளே சென்றனர். சிலபேர் குழப்பத்துடன் வெளியே சென்று விட்டனர். மூன்று பேர் மட்டும் வெளியே வந்து அமர்ந்திருந்தனர் .பிறகு கீதாவை, அழைக்க உள்ளே சென்றாள.

உள்ளே சென்ற கீதா, அங்கு அமர்ந்திருந்த நிரஞ்சனைப் பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

நிரஞ்சனோ, அப்பொழுதுதான் புதிதாக பார்ப்பது போல் அவளைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தி உட்காருங்க மிசஸ். கீதாஞ்சலிகுமார் என்றான். பிறகு " வெல்கம் டு அவர் ஃபேமிலி " என…

கீதாவோ, இன்னமும் அமராமல் திகைத்துப் போய் நின்றுக் கொண்டிருந்தாள். நிரஞ்சனோ எழுந்து போய் அவள் முன்னே கைகளை அசைத்து, ஹலோ மேடம் யு ஆர் அப்பாயிண்டெட்.
உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. அதைத்தான் வெல்கம் அவர் ஃபேமிலி என்று சொன்னேன்.வேறு ஒன்றும் இல்லை,நீங்கள் பயப்படவேண்டாம் மிஸஸ் கீதாஞ்சலிகுமார் என்றான்.

கீதாவோ இன்டர்வியூ, இல்லை ஃபைனல் இன்டர்வியூ என்று உளறிக் கொட்ட…. நிரஞ்சனோ அவள் முகத்தைப் பார்த்து நீங்கள் வெளியே இருக்கும் போதே தேர்வு செய்து விட்டோம்.

இப்போதிலிருந்து நீங்கள் எங்கள் கம்பெனியில் ஒருவர்.இப்பொழுது நீங்கள், வெளியே சென்று அமருங்கள், சிறிது நேரத்தில் உங்கள் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கையில் வந்து விடும். மற்ற விவரங்களை மேனேஜர் கூறுவார், என்றான்.

அவளோ அசையாமல் அவனைப் பார்த்து, ஏதோ கேட்கத் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளை அலட்சியம் செய்து இன்டர்காமை எடுத்து யாருக்கோ அழைத்துக்கொண்டே, சைகையால் வெளியே செல்லுமாறு கூறினான்.

கீதாவோ, அவனின் செய்கையால் காயப்பட்ட மனதுடன் வெளியேறினாள்.

ஒரு காலத்தில் அவளின் விழி அசைவுக்கே எல்லாவற்றையும் நிறைவேற்றுபவன்,இன்று விழிகளிலாலே அலட்சியம் செய்கிறான்.

நடத்தட்டும் , நடத்தட்டும் அவன் வெறுக்கவேண்டும் என்றுதானே நினைத்தோம். அது அப்படியே இருக்கட்டும்.மீண்டும் புதுக் கதை எழுத வேண்டாம்,என மனதிற்குள் எண்ணியவள்...

ரம்யாவை பற்றி பிறகு தெரிந்துகொள்வோம். இங்கு தானே வேலை செய்யப் போகிறோம் என நினைத்துக் கொண்டே வெளியேச் சென்று அமர்ந்தாள்.

ரம்யாவை பற்றி நினைத்தவுடன் அவள் முகத்தில் புன்னகை வந்து அமர்ந்தது.

அவள், ரம்யா மற்றும் வானதி மூவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.

கீதா மதுரையில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு மாறினாள். இப்பொழுது போலவே அப்பொழுதும் கீதா ரொம்ப அமைதி.

அவள் அருகில் அமர்ந்திருந்த வானதியோ படுசுட்டி... அவளுக்கு கீதாவை வம்பு இழுப்பது ரொம்பவேப் பிடிக்கும்.

கீதாவோ, அழுதுக் கொண்டே இருப்பாள்.
ரம்யா,தான் கீதாவை சமாதானம் செய்து வானதியைக் கண்டிப்பாள்.

இதே ஒரு விளையாட்டாக வானதி, கீதாவை வம்பு இழுத்து விட்டு ஓட…. ரம்யா, அவளைத் துரத்த என விளையாட்டாக இவர்கள் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்.

இந்த நட்பு பள்ளியில் இருந்து கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது …. பிறகு சூழ்நிலையால் பிரிய நேரிட்டது.

தனது தோழி ரம்யாவின், நட்புக்காக நிரஞ்சனோடு ஏற்பட்ட காதலை,கீதா விட்டுக் கொடுத்தாள். ஆம் நிரஞ்சனும், அவளும் இரண்டு வருடங்களாக காதலித்தனர்.
அன்று அவர்களை விதி பிரித்தது…. இன்றோ அவர்களை மீண்டும் இணைக்கக் காத்திருக்கிறது…

தொடரும்…...
 
#6
‌‌‌ அத்தியாயம்-3

கீதாஞ்சலியின் கையில் வேலைக்கான அப்பாயிண்மென்ட் ஆர்டர் படபடத்தது. ஆனால் அதற்குரிய மகிழ்ச்சி இல்லை. ஏனோ மனது ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமாகவும், மறுபக்கம் சஞ்சலமாகவும் இருந்ததது ….

அவள் யோசனையில் இருக்கும் போதே, கைப்பையில் இருந்த ஃபோன் அடித்தது….

யாரா இருக்கும் என்று யோசனையுடன் எடுத்து பார்த்தால், அண்ணன்….

தன்னை சரி செய்துக்கொண்டு, வரவழைத்த உற்சாகத்துடன் ஹலோ என…

அருணோ " ஏன் டா வேலைக் கிடைக்கவில்லையா? குரல் டல்லா இருக்கு…. என்று விட்டு, சரி டா நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கொள்ளலாம்" என..

அதெல்லாம் ஒன்னும் இல்லைணா, வேலை கிடைத்துவிட்டது.
நாளையிலிருந்து ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க, இப்பதான் வந்து சொன்னாங்க…

சரிடா,வீட்டுக்கு கிளம்பிட்டியா? இல்லையென்றால், வெயிட் பண்ணு வேலை முடிஞ்சிருச்சு நான் வந்து, அழைச்சிட்டு போறேன்‌.

ஓகே ணா‌,நான் வெயிட் பண்றேன்‌, என்றவள் ரிசப்ஷனில் காத்திருந்தாள்.

கீதா குழப்பமான மனநிலையில் இருந்தாள். ரம்யாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அருண் வந்து அழைக்க….
கீதா தன்னோடு பேசிக்கொண்டிருந்த ரிசப்ஷனிஸிடம், விடைபெற்றுக் கொண்டு, வேகமாக வெளியே வந்தாள்.
அங்கே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த அருணைப் பார்த்து அண்ணா என்று அழைக்க‌‌…

அருணோ" வாழ்த்துக்கள் டா என்று அவளை அணைத்து செல்லம் கொஞ்சினான். சூப்பர் டா எனக்கு தெரியும் உனக்கு வேலை கிடைக்கும் என்று…. இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும் என்றவன்,கையில் உள்ள ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பழங்களை அவள் கையில் கொடுத்தான்"
எதுக்கு அண்ணா, இவ்வளவு என…

உனக்கு புடிச்சது வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு மா…..சின்னக் குட்டி வேற வேலை கிடைச்சிருச்சு, ட்ரீட் எங்க என்று உன்னை கேட்கும் அதுக்குதான் என்றவன்…
சரி வா நாம வீட்டுக்கு சென்று அண்ணி, சின்னக் குட்டி,கிட்ட எல்லாம் சொல்லுவோம் எனக் கூறி அழைத்துச் சென்றான். அண்ணனின் உற்சாகத்தை பார்த்து அவளும் மகிழ்வுடன் சென்றாள்.
இதை கடின முகத்துடன் நிரஞ்சன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

**********************
நந்து, நந்து என அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த அருண் கீதாவுக்கு, வேலை கிடைத்துவிட்டது என்றான். நந்தினி, கீதாவிடம் கங்கிராட்ஸ் அண்ணி.
எனக்கு தெரியும் உங்களுக்கு வேலை கிடைக்குமென்று அதான், ஸ்வீட் செஞ்சிருக்கேன்…
இருங்க எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்றவள் சிறிய கிண்ணத்தில் கேசரி எடுத்துவந்து,அவளுக்கு ஊட்டி விட்டாள்‌.
கீதா தேங்க்ஸ் அண்ணி என்றாள்.

மதுவும் வர வீடு ஒரே கோலாகலமாக இருந்தது…
ரொம்ப நாளைக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டது….

அருண், கீதாவிடம்"நாளைக்கு நீ, மதுவோடு ஆபிசுக்கு போ…. ஈவினிங் நாம எல்லாரும் போய் உனக்கு வண்டி பார்ப்போம்,பிறகு ஹோட்டலுக்குப் போய் என்ஜாய் செய்வோம் என" கீதாவும் சரி என தலையாட்டினாள்

**********************
கீதா, காலையில் பரபரப்பாக ஆஃபீஸ் கிளம்ப…
மதுவோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை.

கீதாவோ மது, சீக்கிரம் டா… எனக்கு தாமதமா போனால் பிடிக்காது தெரியுமில்லையாட….

படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல், கா லாஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் என்று விட்டு இன்னும் உறங்க….

கீதாவிற்கு கோபம் வர, சரி மது நீ பொறுமையாக கிளம்பு…. நான் ஆட்டோவிலே போறேன் என்று கிளம்ப…

படக்கென்று எழுந்த மது சாரிக்கா.. கோபப்படாதே கா, இதோ ஐந்து நிமிடத்தில் தயாராகி விடுவேன் என்றாள்.

பெருமூச்சு விட்டுக் கொண்டே அண்ணி சொல்வது சரிதான் …. வண்டி வாங்கி தனியே செல்வது தான் சரி என எண்ணிக்கொண்டாள்.

எப்படியாவது நேரத்திற்கு அலுவலகத்துக்குச் சென்று விட்டால் பரவாயில்லை என்று கீதா நினைக்க….. அவளுக்கு அன்று சோதனை காலம் போல ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டது.
மது வண்டியை நிறுத்தியவுடன், தாமதமானதால் அவளிடம் கூட, சொல்லாமல் வேகமாக செல்ல‌‌...

அங்கு மேனேஜரிடம் பேசிக்கொண்டிருந்த நிரஞ்சன் இவளைப் பார்த்ததும் குற்றம்சாட்டும் பார்வை பார்த்துவிட்டு, பிறகு கடிகாரத்தையும் பார்த்தான்.
பிறகு உள்ளே சென்றவன், பியூனை விட்டு அவளை அழைத்தான். மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பியூன் வந்து எம்.டி அழைப்பதாகக் கூற இவள் பயந்துகொண்டே சென்றாள்.

எம்.டியின் அறைக் கதவைத் தட்டி விட்டு கீதாஞ்சலி உள்ளே நுழைந்தாள். அங்கு நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு,அவளை கூர்மையாகப் பார்த்து நீங்க நியூ ஜாயினியா? என

கீதா எஸ் ஸார் எனக் கூற…

எனக்கு நேரம் தவறினால் பிடிக்காது என்றான்.
இது பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங் மிசஸ் கீதாஞ்சலி குமார். நெக்ஸ்ட் டைம் இப்படி தாமதமானால், நீங்கள் வேறு வேலை தேடும் படி இருக்கும்…. இப்பொழுது நீங்கள் போய், உங்கள் வேலையை பாருங்கள் என ….

விட்டால், போதும் என்று வெளியே வந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவள், வெளியேறியதும் கண்களை மூடி பழைய கீதாஞ்சலியை நினைவுபடுத்தினான்.

அப்பொழுதும் அமைதியாக தான் இருப்பாள். ஆனால்,அவள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி இப்பொழுது இல்லையே என யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை அவளும் மகிழ்ச்சியாக இல்லையோ என அவளுக்காக வருத்தப்பட…. தன் தலையை உலுக்கி கொண்டு, இவர்களையெல்லாம் நம்பவேக்கூடாது என்று எண்ணிக்கொண்டு வேலையை பார்க்கத்
தொடங்கி விட்டான்.

வெளியே வந்த கீதாஞ்சலியை, மேனேஜர் மற்றும் டீம் லீடர் பிடித்துக் கொண்டனர். ஏன் மா,ரொம்ப கோபமாக பேசி விட்டாரா,நீ வருத்தப்படாதே மா என்றார் மேனஜர். அவருக்கு பெண்களைக் கண்டாலே ஆகவே ஆகாது.

காரணமே இல்லாமல் கடித்துக் குதறுவார்... நீ வேறு தாமதமாக வந்து வாங்கிக் கட்டிக் கொண்டாய்… என டீம் லீடர் கிண்டலாகக் கூற…

கீதாவோ, அவர்களிடம் ஒன்றும் கூறாமல், ஐந்து நிமிடம் தாமதமாக வந்த… தன்னையே நொந்துக் கொண்டாள்‌.

இனி தான் என்ன சொன்னாலும் இவர்களுக்கு புரியாது… முதல் கோணல் முற்றும் கோணல்... இனி நேரத்தோடு வந்து என்னுடைய பொறுப்பை, திறமையுடன் செய்து செயலில் தான் காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

மேனேஜரோ, நான் கம்பெனியில் சேர்ந்ததில் இருந்து இவர் இப்படி தான் இருக்கிறார். குடும்பமாக இருந்தால் பொறுமை வரும்… இவர் தான் தனிக்காட்டு ராஜாவாச்சே என…

கீதாவோ, அதிர்ந்து என்ன சார் சொல்றீங்க! அவருடைய அம்மா, அப்பா எங்கே சார், என…
அவங்க இறந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

அவரோட தங்கை யார் கூடவோ ஓடிப் போயிட்டதா, ஊரிலிருந்து வேலைக்கு வந்த சமையல் செய்யும் அம்மா, சொன்னாங்க…
அவங்க சொல்லி தான் அவருக்கு தங்கை இருக்கும் விஷயமே தெரியும்.
சாரோட அப்பா, அம்மா எப்பயாவது ஊரிலிருந்து வருவாங்க..
அப்படி ஊரில் இருந்து வரும்போது ஒரு முறை ஒரு லாரி மோதி அவங்க வந்த கார் நசுங்கி இறந்துவிட்டனர்.

சென்னைக்கு வரும் போது அவர்கள் தகவல் கூறாமல் கிளம்பி வந்ததால், சாருக்கு உடனே விஷயம் தெரியாமல், சற்றுத் தாமதமாக தான் தெரிய வந்தது.

அதிலிருந்தே அவர் ரொம்ப இறுகி போய் விட்டார்...யாரிடமும் அதிகம் பேசமாட்டார், என்றவர்…. சரி விடு மா, நமக்கு எதுக்கு ஊர் வம்பு…
இவங்க தான் உன்னோட டீம் லீடர் சுபத்ரா. மத்த டீடெயில்ஸ் எல்லாம் அவங்க சொல்லுவாங்க..
சரி நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள், என்று இருவரையும் அனுப்பினார்.

கீதாவோ, அவர் ரம்யாவை பற்றி சொன்னதிலே அதிர்ந்து நின்றாள்.

ரம்யா நிச்சயமாக ஓடிப் போயிருக்க மாட்டாள்..
ஏதோ தவறு நடந்து இருக்கிறது, என்று உள் மனசுக் கூற அப்படியே திகைத்து நிற்க..

சுபத்ரா தான் அவளை உலுக்கி, வாங்க கீதா என வெளியே அழைத்து வந்தாள்.

பயணங்கள் தொடரும்…...