நிலை மாறும் நியாயங்கள் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#21
அத்தியாயம் – 10

அவளை ஆபிசிற்கு அழைத்துச் செல்லும் முன் அங்கிருந்த அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கண்களை நேராகப் பார்த்து “சத்யா! உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா? நான் எது செய்தாலும் உன் நல்லதுக்கேன்னு நினைப்பியா?” என்றான் முகத்தைப் பார்த்தவண்ணம்.திடீரென்று அவன் அப்படி கேட்கவும் விழியை விரித்து அவனைப் பார்த்தவள் பெருமூச்சுடன் “உங்களை மட்டும் தான் நம்புவேன் இளா” என்றாள்.அந்த நிமிடம் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே சொல்ல முடியாது. இருவரும் பல நாள் பார்த்து பழகியது கிடையாது. மாறனின் மூலமே ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டிருந்தனர். இருவர் மனதிலும் அடுத்தவரின் மீது அளப்பரிய அன்பு இருக்கிறது. ஆனால் அதை வெளிபடுத்த காலமும், சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை. பார்க்காமலே தன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் ஒருவன் கிடைத்தது நிச்சயம் வரம் தான். அதிலும் அவனது ஆசைத்தம்பி தன்னாலும், தன் குடும்பத்தாலும் புத்தி சுவாதீனமின்றி மாறுவதற்கு காரணமான பின்பும் இத்தனை அன்பு எப்படி சாத்தியம் என்று புரியாமல் போனது.

அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் “சத்யா! எதையும் போட்டு மனசில் குழப்பிக்காதே! உன்னை என்னைக்கும் கைவிட மாட்டேன்னு நம்பு. நான் எது செய்தாலும் உன் நன்மைக்கே என்று புரிந்துகொள். எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை இழக்காதே” என்றான்.அவன் சொன்னதில் மிகவும் ஆறுதலாக உணர்ந்தவள் கண்கள் குளம் கட்ட “எப்படி இந்த மாதிரியொரு நம்பிக்கை என் மேல வந்தது என்று கேட்க மாட்டேன் இளா. மாறன் சொன்னாலும் இப்படியொரு காதலை பெறுவதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டக்காரி” என்றாள்.அவளது பேச்சில் அவனிதழில் மென்னகை வந்தமர்ந்து கொள்ள, மெல்ல அவள் காதில் “நம்ம காதலை உணருவதற்கான நேரம் நிறைய இருக்கு. அதற்கு முன்னே நமக்கு நிறைய வேலைகள் இருக்கு சத்யா” என்றவன் அவளிடம் சிலவற்றை சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டு அதன்பின்னரே அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.அவளை ஆபிசில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவன் அடுத்து செய்ய வேண்டியவைகளை யோசித்துக் கொண்டான். கீழ் வீட்டிலோ மாலை நடக்க வேண்டிய விழாவிற்கு தடபுடலாக ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. சத்யாவின் அக்கா ராதாவும் வந்திருக்க, சாவித்திரி தான் முன் நின்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். மங்கலம் வழக்கம் போல வேண்டா வெறுப்பாக அவர் சொன்னவற்றை செய்து கொண்டிருந்தார்.“இங்கே பாரு மங்களம். வரவங்க எனக்கு நெருங்கிய சொந்தம். அதனால மரியாதை குறைவா எதுவும் நடந்துச்சுன்னா சும்மா இருக்க மாட்டேன்” என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.ராதாவோ அவரின் தோளைப் பற்றிக் கொண்டு “நான் தான் இருக்கேன் இல்லம்மா. நான் பார்த்துகிறேன்” என்றாள் பெருமையாக.சாவித்திரி யோசனையுடன் ராதாவிடம் “அவ ஒண்ணும் பிரச்சனை பண்ண மாட்டா இல்ல?” என்றார் கேள்வியாக.“வாயிலேயே நாலு போட்டு ஒத்துக்க வச்சிடலாம்மா” என்றாள் ராதா.“ம்ம்...”என்று கூறிவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டார்.அவர்கள் பேசிய அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் செழியன். அவன் மனதிற்குள் மாலை நடக்க வேண்டியதற்கான கணக்குகள் போடப்பட்டுக் கொண்டிருந்தன.மாலை சொன்ன நேரத்திற்கு ஆபிசிலிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தவளை கண்டு ஒருவாறு நிம்மதி அடைந்தனர் சகுந்தலாவும், மங்களமும்.அவளை முகம் கழுவி வர சொல்லி, அவளிடம் இருந்த புடவையில் நல்லதாக ஒன்றை கட்டிக் கொள்ளும் படி கூறிவிட்டு அவளிருந்த அறை பக்கமே எட்டி பார்க்கவில்லை இருவரும். ராதா மட்டும் அறைக்குள் வந்தவள் சத்யாவின் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்து வைத்தாள். அவளிடம் பதட்டமோ, பயமோ எதுவுமில்லாமல் மிக அமைதியாக இருந்தாள். அதைக் கண்டு உள்ளுக்குள் சந்தேகம் எழ, “என்ன சத்யா? மாப்பிள்ளை யாரு என்ன எப்படின்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றாள்.அவளை நிமிர்ந்து பார்த்த சத்யா “வேண்டாம்” என்றாள்.அவள் அமைதியாக இருப்பது பிடிக்காமல் அவளை அழ வைத்துவிடும் நோக்கத்துடன் “உன்னை விட எப்படியும் பதினஞ்சு வயசு கூட இருக்கும் அவருக்கு. ஏற்கனவே கல்யாணம் ஆகி பொண்டாட்டி செத்து போச்சாம்” என்று கூறிவிட்டு அவள் முகத்தை கவனித்தாள்.அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அமர்ந்திருப்பதை பார்த்ததும் கடுப்பாகி “சரியான ஜடம் நீ” என்று கடுப்படித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.அந்நேரம் வாயில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியே வாயிலைப் பார்த்தாள். அங்கே ஒரு வயதான பெண்மணியும், அவர் கணவரும், ஒரு நாற்பதுகளில் உள்ள பெண்மணியும், அவர் குழந்தையும் இறங்க, காரின் முன் சீட்டிலிருந்து நல்ல வழுவழுவென்று சொட்டை தலையுடன் வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு இறங்கியவர் தான் மாப்பிள்ளை போல என்று எண்ணியவளுக்கு இதழ்கடையோரம் ஏளனப் புன்னகை வந்திருந்தது.செழியனும் மேலே இருந்து அவர்களை பார்த்த்துக் கொண்டு தான் இருந்தான். அனைவரும் உள்ளே சென்றமர்ந்ததும் சாவித்திரி அவர்களிடம் குசலம் விசாரித்து விட்டு, மங்களத்திடம் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், பெண்ணை பார்க்க தயாராக, ராதாவை அழைத்த சாவித்திரி சத்யாவை அழைத்து வருமாறு கூறினார்.
 

sudharavi

Administrator
Staff member
#22
அதே நேரம் மாடியிலிருந்து இறங்கிய செழியன் மெல்ல கீழே வந்து மங்களத்தின் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் வந்ததும் புருவத்தை சுருக்கி அவனைப் பார்த்த மங்களம் “என்ன வேணும்? நீ எதுக்கு இப்போ இங்கே வர?” என்றார்.சாவித்திரியோ “யாருப்பா நீ? திறந்த வீட்டுக்குள்ள எதுவோ நுழையிறது போல நீ பாட்டுக்கு உள்ள வர” என்றார் கடுப்போடு.அவனோ யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் நேரே சென்று சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தவன் அனைவரையும் அலட்சியமாக பார்த்தான்.மாப்பிள்ளை வீட்டினர் குழப்பத்துடன் அவனைப் பார்க்க, சாவித்திரிக்கோ அவனது அலட்சியம் கோபத்தை ஏற்படுத்தியது.வேகமாக நாற்காலியை விட்டு எழுந்தவர் “தம்பி! யார் நீங்க? எங்க வீட்டில் விசேஷம் நடக்குது. நீங்க எதுக்கு இங்கே வந்து நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கீங்க?” என்றார் ஆத்திரத்துடன்.தனது தாடையை அழுத்தமாக தடவிக் கொண்டு “இங்கே என்ன நடக்குது?” என்றான்.அவனை முறைத்து பார்த்த சகுந்தலா “நீ முதல்ல வெளியே போ” என்றார்.அவரை இளக்காரமாக பார்த்து விட்டு மங்களத்தை கையை காண்பித்து “அவங்க தானே இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க. நீங்க ஏன் ஆடுறீங்க?” என்றான்.அவனது பேச்சில் சுறுசுறுவென்று எழுந்த கோபத்துடன் “இங்கே பாருங்க தம்பி. இவங்க எங்க பெண்ணை பார்க்க வந்திருக்காங்க. அனாவசியமா குழப்பம் பண்ணாம கிளம்புங்க” என்றார் வரவழைத்துக் கொண்ட நிதானத்துடன்.அவர் சொன்னதும் திரும்பி மாப்பிள்ளையை பார்த்தவன் “நீ தான் மாப்பிள்ளையா? ஏண்டா உனக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான் கேட்குதா?” என்றான் கிண்டலாக.அவன் சொன்னதில் அதிர்ந்து போன மாப்பிள்ளை சாவித்திரியைப் பார்க்க, அவரோ பதறி போய் “ஏய்! என்ன பண்ற? நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்று கத்தினார்.அவரை நிமிர்ந்து பார்த்தவனின் இதழ்களில் ஒரு எள்ளல் தெரிந்தது.“போறேன்..போறேன்..என் பொண்டாட்டியை கூப்பிடுங்க கூட்டிட்டு போயிடுறேன்” என்றான் தெனாவெட்டாக.மங்களமோ அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, எவரையும் கண்டு கொள்ளாது நேரேஅவள் அறைக்குள் நுழைந்து கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தான்.சாவித்திரி அவனது செயலில் டென்ஷனாகி வேகமாக பாய்ந்து சத்யாவை பிடித்து இழுக்க முயல, அவளை தன் பக்கம் இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டவன் சகுந்தலாவை பார்த்து “எனக்கு ஒரு விஷயம் தெரியணுமே? முதல்ல நீங்க இந்த வீட்டுக்கு என்ன உறவு?” என்றான்.அதுவரை எதிலும் சம்மந்தமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மங்களம் அவனது கேள்வியில் அதிர்ந்து அவசரமாக சத்யாவின் கையைப் பற்றி இழுத்து “ஏய்! மரியாதையா உள்ளே போ!” என்றவர் அவன் பக்கம் திரும்பி “வெளில போ” என்றார்.அவரை கிண்டலாக பார்த்துவிட்டு சற்றே நகர்ந்து சத்யாவின் கையைப் பற்றி இழுத்து தன்னருகே கொண்டு வந்தவன் “என் பொண்டாட்டியையும் கூட்டிட்டு போறேன்” என்றான்.

அதில் அதிர்ந்து போன மங்களம் “யாருக்கு யார் பொண்டாட்டி?” என்றவர் அவள் பக்கம் திரும்பி “உன்னால அடங்கி இருக்க முடியாதாடி? ஒருத்தனை பிடிச்சு அவனை பைத்தியமாக்கி விரட்டி விட்டு அடுத்து இவனைப் பிடிச்சிருக்கியா?” என்று கேட்டு அவளை அடித்தார்.அவரின் கையை வேகமாக தட்டிவிட்டு ஒற்றை விரலை நீட்டி “என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசினா சும்மா விட மாட்டேன்” என்றான் மிரட்டலாக.மாப்பிள்ளை வீட்டின் முன்னாள் அவமானப்படுதுகிறானே என்று கோபத்தோடு ஆங்காரமாக அவன் முன்னே சென்று நின்ற சாவித்திரி “டேய்! மரியாதையா அவ மேல உள்ள கையை எடுத்திட்டு ஓடி போயிடு” என்றார் மிரட்டலாக.அவரை கேவலமாக பார்த்துவிட்டு “நீங்க யாருன்னு சொல்லுங்க முதல்ல? என்னை மாதிரி வாடகைக்கு இருக்கிறவங்க தானே? அப்புறம் ஏன் ஒதுங்கி நிற்காம ஆடுறீங்க?” என்றான்.அவனது கேள்வியில் ஆக்ரோஷம் அடைந்தவர் “ஏய்!” என்று கத்திவிட்டு “கல்யாணமாகாத பொண்ணு இருக்கிற வீட்டில் வந்து வம்பு பண்றியா?” என்றார்.டக்கென்று சத்யாவை தன் பக்கம் நகர்த்தி அவள் கழுத்தில் மறைந்திருந்த தாலியை எடுத்து வெளியே போட்டு விட்டு அவர் பக்கம் திரும்பியவன் “நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா எல்லோரையும் தூக்கி உள்ளே வச்சிடுவான் பரவாயில்லையா?” என்றான்.அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்து மூவருக்கும் பேரதிர்ச்சி. திருமணம் எப்போது நடந்தது என்று புரியாமல் திகைத்து நின்றனர். மங்களமோ சுதாரித்துக் கொண்டு “இதெல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம்” என்றவர் வேகமாக அவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி எறிய முயன்றார்.அப்போது உள்ளே வந்த சாரதாவும், சிவராமும் உள்ளே வந்து “நாங்க தான் அவங்க கல்யாணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டிருக்கோம்” என்றார்கள்.அவர்கள் வீட்டில் நடந்த கலவரத்தை கேட்டு தெருவில் இருந்த அனைவரும் அங்கே கூடி இருந்தனர். சத்யா எதையுமே பேசாமல் இளாவின் தோளின் பின்னே மறைந்து நின்று கொண்டாள்.மங்களத்திற்கு அவர்கள் சொன்னதை கேட்டதும் ஆத்திரம் எழ, “நீங்கெல்லாம் பெரிய மனுஷங்க தானா? ஊரான் வீட்டு பெண்ணுக்கு அவ அம்மாவுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்களே?” என்று கத்தினார்.சாரதா அவரை இகழ்ச்சியாக பார்த்து “இப்போ தான் நாங்க மனுஷத்தன்மையோட நடந்துகிட்டு இருக்கோம். சொந்த பொண்ணுன்னு பார்க்காம ஊருக்கு முன்னே உங்க பெண்ணோட கற்பை கேவலமா பேசி நாறடிச்சப்ப கூடி நின்னு நாங்க எல்லாம் வேடிக்கை மட்டும் தான் பார்த்தோம். அந்த பெண்ணோட குணத்தை தெரிஞ்ச எங்களுக்கு அவளுக்கு உதவ முடியாம போனதுல இருந்து ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் புழுங்கிகிட்டு இருந்தோம். இன்னைக்கு தான் நாங்க சரியா முடிவெடுத்திருக்கோம்” என்றார்.தெருவாசிகள் அனைவரும் தங்கள் வீட்டின் முன்னே கூடி நிற்பதை கண்ட சாவித்திரி சற்று உஷாராகி மங்களத்திடம் ஏதோ முணுமுணுக்க, அவரும் அதுவரை இருந்த ஆத்திரத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு “ஓடுகாலி சனியனுக்கு இனிமே இந்த வீட்டில் இடமில்லை” என்று கூறி வீட்டிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.சத்யாவின் அருகில் சென்ற சாரதா அவளது தலையை வருடி “நீ வாம்மா எங்க வீட்டுக்கு போகலாம்” என்றவர் செழியனிடம் திரும்பி “நீங்களும் வாங்க” என்று கூறிவிட்டு கேட்டைத் தாண்டி தெருவில் வந்து நின்றார்.அங்கிருந்தவர்களைப் பார்த்து “உங்க கிட்ட எல்லாம் ஒரே ஒரு விண்ணப்பம். இனி இந்தப் பெண்ணை பார்த்து யாரும் ஒரு வார்த்தை தப்பா பேசாதீங்க” என்றவர் சத்யாவை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்றார்.இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார். சத்யாவின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#23
அத்தியாயம் – 11அவர்களுக்கு ஒரு அறையை ஒதுக்கி கொடுத்து, தேவையான தனிமையும் கொடுத்துவிட்டு, தங்கள் வேலைகளில் முடங்கிக் கொண்டனர் சாரதாவும், சிவராமும்.கண்கள் குளம் கட்ட ஜன்னலோரம் நின்றிருந்தாள் சத்யா. தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாமல் சிலவற்றை கடக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்து அவளை பார்த்தவனுக்கு அவளின் மனவோட்டம் புரிந்தது. கதவை தாழ் போட்டுவிட்டு அவள் அருகே சென்றவன் சற்று நேரம் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.அவனது அருகாமை தந்த உணர்வில் மெல்ல அவன் புறம் திரும்பி “எனக்கு என்ன நடக்குது இளா? நான் என்ன பாவம் செஞ்சேன்? பிறந்ததில் இருந்து எந்த வகையான இன்பத்தையுமே அனுபவிக்காம வாழ்க்கையின் ஓட்டத்தில் என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று புரியாமல் ஓடிக் கொண்டே இருக்கிறேன் . உலகத்துல எல்லோருக்கும் கிடைக்கிற அந்த தாயன்பிற்கு கூட வழியில்லாமல் என் வாழ்க்கை புதிராகவே போய் கொண்டிருக்கிறதே ஏன் இளா?” என்றாள் அவன் முகம் பார்த்து.சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “ரொம்ப யோசிக்காதடா...நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் இனி உனக்கு நல்ல காலம் தான்.நான் இருக்கிறேன்” என்றான்.அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நான் எதுவுமே சொல்லல ஆனாலும் எந்த நம்பிக்கையில் என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க இளா? இவங்க எல்லோரும் சொல்கிற மாதிரி நான் மோசமானவளா இருந்து மாறனை பைத்தியமா சுத்த விட்டிருக்கும் போது எதுக்கு கல்யாணம் செஞ்சுகிட்டீங்க?” என்றாள் கண்ணீருடன்.இரு கைகளாலும் அவளது முகவாயைப் பற்றி நிமிர்த்தியவன் “மாறன் உன்னைப் பத்தி சொன்னதை வைத்து ஒவ்வொரு நிமிஷமும் உன்னை ஓடி வந்து பார்க்க மாட்டமான்னு தவிச்சுகிட்டு இருந்தேன் சத்யா. உன்னோட ஒவ்வொரு அசைவிலும் நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரிய வைத்திருக்கிறான். எனக்கு உன் மேல சந்தேகமோ, தவறான எண்ணமோ இல்லை. உலகத்துக்கு உன் மேல இருக்கிற தவறான பார்வையை மாற்றி தான் திருமணம் செய்து கொள்ளணும்னு நினைத்தேன். ஆனால் அதற்குள்ள இப்படியொரு சந்தர்ப்பம் வந்துடுச்சு” என்றான்.அவனது கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவள் “மாறன் என் வாழ்க்கையில் வந்தது வரமாக நினைக்கிறேன். அதுவரை என் வாழ்க்கையில் எதுவுமே இல்லேன்னு நினைத்து சுயபச்சாதாபத்தில் மூழ்கி கொண்டு இருந்தேன். என்னைக்கு எங்க வீட்டு மாடியில் குடி வந்தாரோ அன்னைக்கு நான் என்னுடைய கூட்டை விட்டு வெளியே வந்தேன்” என்றவளை இடைமறித்த செழியன் “உன்னை கஷ்டப்படுத்தி கிட்டு நீ எதையும் சொல்ல வேண்டாம் சத்யா” என்றான்.அவளோ எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை “மாறன் வந்தப்ப எங்கப்பா உயிரோட இருந்தார். அவர் இருந்ததும் இறந்ததும் எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியல. அவர் என்னைக்குமே எங்க கிட்ட ஒரு தகப்பனா நடந்து கிட்டது இல்லை. அம்மாவும் அப்படித்தான். என்னுடைய மன புழுக்கத்திற்கு வடிகாலா மொட்டை மாடியை தான் நினைப்பேன். அங்கே சென்று கொஞ்ச நேரம் இருந்த பின்னர் தான் எனக்கு எப்பவுமே மனசு லேசாகும். அப்படி ஒருநாள் நிற்கும் போது தான் மாறனை பார்த்தேன்.ஒரு சிலரை பார்த்த முதல் பார்வையிலேயே பிடிச்சு போயிடும். மாறனும் அப்படித்தான். மிக இயல்பா, நட்பாகவும், கண்ணியமான பார்வையோடவும் இருந்தவன் கிட்ட என்னை அறியாம பேச ஆரம்பித்தேன். சின்ன சின்ன ரசனைகளோடு வாழ்க்கையை எப்படி ரசிப்பது என்று கத்துக் கொடுத்தான். எங்கள் நட்பு உறுதியாகவும், ஆழமாகவும் போயிட்டு இருந்தது.என்றைக்கும் இல்லாம ஒரு நாள் மிகவும் யோசனையோட இருந்தவன் மெல்ல என் குடும்பத்தை பத்தி விசாரிச்சான். அவன் சாதரணமா கேட்கிறான் என்று நினைத்து எங்கப்பா, அம்மா, அக்காவை பத்தி சொன்னேன். அவன் முகத்தில் பலத்த யோசனை. உங்கப்பா எப்படிப்பட்டவர்னு கேட்டான். எனக்கு அந்தக் கேள்வி அப்போ புரியல. ஏன் கேட்கிறன்னு கேட்டதுக்கு அவன் கிட்ட இருந்து சரியான பதில் வரல” என்றவளின் கண்களில் அப்படியொரு வேதனையைக் கண்டான் செழியன்.அவளது வலியை உணர்ந்தவன் சற்றும் யோசிக்காமல் தன்னுடன் இறுக்கிக் கொண்டு “உன்னை வேதனைப்படுதிகிட்டு எந்த உண்மையையும் சொல்ல வேண்டாம் டா” என்று கூறி முதுகை வருடிக் கொடுத்தான்.அவனது அன்பு அவளை கூனி குறுக செய்ய லேசான செருமலுடன் மேலும் தன்னை அவனுடன் புதைத்துக் கொண்டவள் “எங்கப்பா மேல பெரிய அன்பு இல்லேன்னாலும், மாறன் ஏதோ அவரை சந்தேகப்படுறான்னு நினைச்சு எனக்கு அவன் மேல கோபமா வந்தது” என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு “எல்லோருக்கும் வருவது தானே டா” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
#24
அவன் மீது சாய்ந்து கொண்டவள் “அதுவரை என்னைப் பத்தி கவலைப்படாம இருந்தவங்க, திடீர்னு ஒருநாள் எங்கப்பா வந்து என்னை மாறன் கூட பேசக் கூடாதுன்னு சொன்னாங்க. அதிலேயும் கடுமையா திட்டி என்னை அழ வச்சாங்க. எனக்கு என்ன நடக்குதுன்னு புரியல. அதன் பிறகு எனக்கு மாடிக்கு போவதற்கு தடை விதிக்கப்பட்டது. மாறனும் என்னைப் பார்க்காமல், என்னிடம் பேசாமல் தவிச்சு போயிட்டான். எதுக்கு இப்படி பண்றாங்கன்னு ரெண்டு பேருக்குமே தெரியல. ஆனா அதுநாள் வரை அன்னியோனியமா இல்லாத அப்பாவும், அம்மாவும் சேர்ந்து சேர்ந்து ரகசியமா பேசிக்க ஆரம்பிச்சாங்க. ஏதோ சரியில்லேன்னு மட்டும் புரிஞ்சுது.இங்கே வந்த கொஞ்ச நாளிலேயே மாறனுக்கும், சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல புரிதல் இருந்தது. நான் ஆபிசிலிருந்து வரும் போது ஒருநாள் மாறன் எங்க ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தி வச்சான். அவளும் என் கூட நல்ல புரிதலோட தான் பழகினா. எங்கப்பா என்னை மிரட்டி வைத்த பிறகு எல்லாமே தலைகீழா மாற ஆரம்பிச்சுது.அதுநாள் வரை மேல் வீட்டில் குடித்தனம் இருந்த சாவித்திரி அம்மா ரொம்ப உரிமையோட எங்க வீட்டில் வந்து என்னையும், எங்கம்மாவையும் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சாங்க. அவங்க யார் நம்மள பேச என்று எங்கம்மா கிட்ட கேட்டதுக்கு எந்த பதிலும் கிடைக்கல. இப்படியே ஒரு மாதம் வரை பதட்டமா போயிட்டு இருந்தது. ஒரு நாள் எங்கம்மா சொந்தக்காரங்க வீட்டு விசேஷம்னு சொல்லிட்டு என்னை விட்டுட்டு கிளம்பி போயிட்டாங்க. அப்பாவும் நானும் மட்டும் தான் இருந்தோம்.நான் ஆபிஸ் போயிட்டு வந்த நேரம் அப்பா எங்கேயோ கிளம்பி போயிட்டாங்க. ரொம்ப நாளைக்குப் பிறகு கிடைத்த தனிமையை நினைத்து சந்தோஷத்துடன் அவசரமா காப்பியை குடிச்சிட்டு மாடிக்கு போனேன். நான் போய் கொஞ்ச நேரத்தில் மாறன் மாடிக்கு வந்தான். அவன் அங்கே என்னை எதிர்பார்க்கல. அவன் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். அதையும்ம் மீறி ஒரு பதட்டம் தெரிந்தது.வீட்டில் நடந்ததை எல்லாம் என் கிட்ட விசாரிச்சவன் அக்கம் பக்கம் பார்த்திட்டு என்கிட்டே முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகணும் ஆனா இங்கே வேண்டாம் என் வீட்டுக்கு வான்னு கூப்பிட்டான். நாங்க அத்தனை நட்பாக பழகி இருந்தாலும் அவன் வீட்டுக்குள்ள போனதில்லை. அதனால கொஞ்சம் தயங்கினேன். அதுக்கு அவன் சொன்னான் என்னால சில விஷயங்களை இங்கே சொல்ல முடியாது ஆனா அதை உன் கிட்ட சொல்லாமலும் இருக்க முடியல ப்ளீஸ் வான்னு கெஞ்சி கூப்பிட்டான்.அவன் மேல இருந்த நம்பிக்கையில் அவன் வீட்டுக்கு போனேன். ஹாலிலேயே நிற்க வைத்துவிட்டு, கதவை லேசாக சாத்திவிட்டு என் முன்னாடி வந்தவன் சற்றே தயங்கி தனக்கு தெரிந்த விவரத்தை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி என்பதை விட, அருவெறுப்பு தான் வந்தது. ஆனா அதையும் மீறி அவன் மேல கோபம் வந்தது. நீ எப்படி சொல்லலாம்னு சண்டை போட்டேன். உனக்கு இந்த மாதிரி எல்லாம் அசிங்கமா யோசிக்க தெரியுமான்னு அவனை கேவலமா திட்டிட்டு அங்கிருந்து வெளியே போகலாம்னு கதவை திறக்க முயற்சி பண்ண, அது வெளிப்பக்கம் தாழ் போட்டிருந்தது.அந்த நிமிடம் என் இதயம் அப்படியே நின்னுடுச்சு. அவனும் வேகமா கதவை திறக்க முயல, அது வெளிப்பக்கம் தாழ் போட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து பதறி போயிட்டான். யார் இதை செஞ்சிருப்பாங்கன்னு புரியல, ரெண்டு பேரும் கையறு நிலையில் இருந்தோம். அதற்குள்ள வெளில ஒரே சத்தம்.என் உடல் நடுங்க ஆரம்பித்தது என்று கூறியவளின் உடல் அப்போதும் நடுங்க ஆரம்பித்தது. அவளின் நிலையை உணர்ந்து கொண்ட செழியன் தோளோடு அணைத்துக் கொண்டு “நீ இப்போ என் மனைவி சத்யா. அதெல்லாம் கெட்ட கனவா நினைசிக்கோ” என்றான்.அவனது ஆறுதல் மொழியிலும் மாறாமல் அவள் மனம் தவிக்க அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “என்ன பண்றதுன்னு தெரியாம பயந்து போயிட்டேன் இளா. மாறனும் பாவம் தவிச்சு போயிட்டான். யாரோ கதவை திறக்க, ஊரே மாறன் வீட்டு வாயிலில் நின்றது. எங்கப்பா தான் எல்லோருக்கும் முன்னாடி நின்னார். அத்தனை பேர் பார்வையும் எங்க மேல அசிங்கமா ஊர்ந்து போச்சு. அந்த நிமிடம் செத்துட்டேன் இளா. மாறனும் திகைத்து போய் நின்னுட்டான்.கூடி நின்னவங்க எல்லாம் எங்களை பார்த்து காறி துப்பாத குறையாக பேச, எங்கப்பா வேகமா உள்ளே வந்து என் முடியைப் பிடிச்சு இழுத்திட்டு வெளியே வந்தார். அவரிடம் கெஞ்சினேன். அப்பா நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ள எதுவுமில்லேன்னு அழுதேன். அவர் காதில் வாங்கவே இல்ல. என்னை பிடித்து வெளியே தள்ளியவர் மாறனை கன்னம் கன்னமா அறைய ஆரம்பிச்சார். என்னால பொறுத்துக்க முடியாம கதறினேன். அவனை விட்டுடுங்க. அவன் நல்லவன்னு. ஆனா அவர் கேட்கல. எல்லோரும் எங்களை புழுவை பார்ப்பது போல பார்த்தாங்க.அங்கே நின்னு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டிருந்த சாவித்திரி அம்மா எல்லோர் கிட்டேயும் என்னைப் பத்தியும், மாறனை பத்தியும் தவறா சொல்ல ஆரம்பிச்சாங்க. மாறன் சொன்ன செய்தி என் மனசில் அப்போ தான் உறுத்த ஆரம்பிச்சது. அத்தனை பேர் நிற்கும் போது என்னை அவங்க அப்படி பேசினது பொறுக்க முடியாமல் அவங்களை முறைச்சிட்டு திட்ட ஆரம்பிச்சேன்.அதற்குள்ள தெருவாசிகள் எல்லாம் மாறன் கெஞ்சி கேட்டும் விடாம அவனை சட்டை கிழிய கிழிய அடிச்சு புரட்டி எடுத்தாங்க” என்று அவள் சொல்லும் போது அவனது உடல் தன்னை அறியாமல் இறுகியது. கண்கள் குளம் கட்டியது.நாங்க தப்பானவங்க இல்லன்னு அழுதான், கெஞ்சினான். அத்தனை பேர் முன்னும் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நின்னான். அவனை கல்லால அடிச்சு விரட்டாத குறையாக விரட்டினாங்க. அப்போ எங்கப்பா என்னை ஓங்கி அறைஞ்சு இனியாவது ஒழுக்கமா இருன்னு அதட்டினாங்க. மாறன் பட்ட கஷ்டமும், எனக்கு நடந்த அவமானமும் என்னைத் தாக்க, அதே வேகத்தில் அவரை பார்த்து நீங்க ஒழுக்கமானவரான்னு கேட்டுட்டேன். அதில் ஒரு நிமிடம் அதிர்ந்து போனவர் என் கண்ணில் தெரிந்த கடுமையில் அவர் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.அங்கிருந்த அத்தனை பேரையும் தள்ளிட்டு அவசரமாக கீழே இறங்கி ஓடி போனவர் தன்னறைக்குள் சென்று கதவை சாத்தி கிட்டார். பார்த்தவர்கள் எல்லாம் பெண் இப்படி அசிங்கபடுத்திட்டானு நினைச்சு தவறான முடிவுக்கு போறார்னு அவர் பின்னாடி போனாங்க. எனக்கு எந்த பதட்டமும் இல்லை. அவர் நிச்சயம் அந்த முடிவுக்கு போக மாட்டார்னு தெரியும். ஏன்னா அவர் ஒரு கோழை. எல்லோருக்கும் முன்பு என்னை மிரட்ட தான் இந்த முயற்சின்னு தெரிஞ்சு அமைதியா போய் நின்னேன்.

ரூமில் இருந்த விசிறியில் தூக்கு போட்டுக்க ஒரு வேஷ்டியை எடுத்து சுத்தி கட்டிட்டு ஜன்னல் வழியே நின்றிருந்த எல்லோரையும் பார்த்து என் பொண்ணுங்க என்னை அசிங்கபடுத்திட்டாங்க நான் வாழ விருப்படலன்னு சொல்லி கத்தினார். அதிலும் அவர் என்னை பார்த்த பார்வையில் என்னை கேள்வி கேட்டுடியான்னு கோபம் இருந்தது. தற்கொலை முயற்சி அவர் போடும் நாடகம்னு எனக்கு புரிஞ்சு போச்சு. எல்லோருக்கும் முன்பு கழுத்தில் துணியைப் போட்டு அவர்கள் கதவை வந்து தன்னை காப்பற்ற வைத்து என்னை பழி வாங்க வேண்டும் என்கிற வெறி தெரிந்தது. ஆனால் அவர் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைத்தார். எதிர்பாராத விதமாக கீழே இருந்த ஸ்டூல் நகர்ந்து விட, கழுத்தில் போட்ட முடிச்சு ஏடாகூடமாக சிக்கிக் கொள்ள, மூச்சு விட முடியாமல் தவித்து துடித்து நுரை தள்ளி இறந்து போனார். தான் நடத்திய நாடகத்தில் அவரே முக்கிய கதாபாத்திரமாக மாறி போனார்.அவள் பேசப்பேச கேட்டுக் கொண்டிருந்தவனின் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது. இப்படியும் ஒரு தகப்பனால் நடக்க முடியுமா? பெத்த பெண்ணையே ஊருக்கு முன்பு அசிங்கப்படுத்தி, அவளை பழிவாங்க தற்கொலை நாடகத்தை நடத்தி தானே அதில் பலியானதை என்ன சொல்ல?அன்றைய நிகழ்வுகளில் அவளது உடல் மேலும் நடுங்கியது.அவளை மேலும் தன்னுள் புதைத்துக் கொண்டவன் “இதெல்லாம் எதுக்கு செஞ்சார் சத்யா?” என்றான் கரகரப்பான குரலில்.தனது குடும்பத்தின் அழுக்கான பக்கங்களை அவனிடம் சொல்ல வேண்டுமே என்கிற அவமானத்துடன் “அவரின் கேவலமான வாழ்க்கையை மறைக்க தான் இளா. சாவித்திரி எங்கப்பாவோட தொடுப்பு. அவர்களின் தொடர்பை கண்டு பிடிசிட்டான்னு தான் மாறன் கூட பேசக் கூடாதுன்னு என்னை பிரிச்சு வச்சது. ஆனா அன்னைக்கு எல்லோரும் என்னை எவ்வளவு கேவலமா பேசினாங்க இளா. யாருமே என் பக்கம் நிக்கல. மாறனையும் அடிச்சு துவைச்சு அவன் முகமெல்லாம் ரத்தம். தன்னை உத்தம புத்திரனா காட்டிக்க பெத்த பெண்ணையே பணயம் வைத்தவர் இளா எங்கப்பா. நான் இதை எல்லாம் எப்படி சொல்லுவேன். அவருக்கு வேணா பெத்த பெண்ணோட வாழ்க்கையை அசிங்கபடுத்த முடியும். ஆனா என்னால நான் பிறக்க காரணமானவரை எப்படி விட்டுக் கொடுக்க முடியும். ஆனா இதில் நான் எதிர்பார்க்காதது எங்கம்மாவோட நடவடிக்கை. தன் வயிற்றில் பிறந்த மகளை ஊரே தவறா பேச, கணவனே காரணமா போயிட்டாருன்னு எந்த இடத்திலும் நினைக்கல. அவங்களும் அவர் செஞ்சதையே தான் திருப்பி செஞ்சாங்க. அதோட சாவித்திரியை எங்க வீட்டில் ஒருத்தியா ஏத்துகிட்டது தான் பெரும் கொடுமை” என்றவளின் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.அவள் சொன்னதை கேட்டு நடுங்குவது அவன் முறையாகி போனது. இப்படியும் மனிதர்களா? என்று யோசிக்க வைத்தது. மாறனுக்கு ஏன் இப்படி ஆனது என்று புரிந்து போனது. தவறே செய்யாத ஒருவன், மென்மையான மனம் படைத்த ஒருவனை ஊரே பார்க்க அடித்து, உதைத்து, அவனது கேரேக்டரை அசிங்கபடுத்தியதில் அவனது மனம் பிரண்டு போயிருக்கிறது. இவ்வளவையும் தாங்கிக் கொண்டு அந்த பாரத்தோடு இவள் எப்படி இருக்கிறாள் என்று மனைவியைக் கண்டு வேதனையடைந்தான்.பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நீ நான் உனக்கு

வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே சூறையமுதே கண்ணம்மா

 

sudharavi

Administrator
Staff member
#25
அத்தியாயம் – 12

சாரதா வீட்டிலிருந்து அன்று மாலையே தங்கள் வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் வாயிலை நெருங்கிய போதே வழிமறித்து மங்களம் மீண்டும் சண்டையிட்டு பார்த்தார். செழியன் எதற்கும் அசைந்து கொடுக்காது போகவே, வேறுவழியில்லாமல் தன் வீட்டிற்குள் சென்று புகுந்து கொண்டார்.அன்னை வந்து சண்டையிட்டதும் பயந்து போய் செழியனின் முதுகுக்குப் பின்னே மறைந்து கொண்டாள் சத்யா. அவளது தேகம் பழைய நினைவுகளை எண்ணியபடி நடுங்க ஆரம்பித்தது.அவளது நிலையை உணர்ந்து கொண்டவன் தோள் மீது கையைப் போட்டு தன்னோடு அணைத்தவாறு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். அவன் அழைத்துச் சென்று எங்கு அமர வைத்தானோ அங்கேயே செயலற்று வெகுநேரம் அமர்ந்திருந்தாள்.அவன் சென்று முகம் கழுவி இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்னே அமர்ந்தான்.“சத்யா! டீ கொண்டு வந்திருக்கேன் எடுத்துக்கோ” என்றான் சற்றே அதட்டலாக.அவனது குரலில் நிதானத்திற்கு வந்தவள் மெல்லிய நடுக்கத்துடன் டீயை எடுத்து அருந்த ஆரம்பித்தாள். அவளை பார்த்தபடியே தன்னுடையதை அருந்தி முடித்தவன் “சத்யா! என்னை கொஞ்சம் பார்” என்றான்.நடந்து முடிந்த நிகழ்வுகளின் தாக்கம் அவளிடம் இன்னும் மறையவில்லை. அவனிடம் அனைத்தையும் சொல்லி விட்டாலும், மீண்டும் மங்களம் சண்டை போட்டது அவளது வலியை கிளறி விட்டது. அதை மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் அவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.“சத்யா! நீ இப்போ என்னுடைய மனைவி! அதை நல்லா மனசில பதிய வச்சுக்கோ. உன்னை யாரும் தவறாக பேசவோ, திட்டவோ அனுமதிக்காதே. தைரியமாக திருப்பி பேசு” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கலக்கம் “அவங்க நம்மை வாழ விட மாட்டாங்க” என்றாள் பயத்துடன்.தனதிருக்கையில் இருந்து வேகமாக அவள் அருகில் சென்றமர்ந்தவன் அவளது முகவாயை நிமிர்த்தி “என்னை நம்பு சத்யா! அவங்களால என்னை எதுவும் செய்ய முடியாது. உன் கிட்ட நான் எதிர்பார்க்கிறது கொஞ்சம் தைரியம் மட்டுமே” என்றான் கண்களைப் பார்த்து.அவளோ அப்போதும் முகம் தெளியாமல் “மாறன் உங்க தம்பின்னு தெரிந்தால் இன்னும் நிலைமை மோசமா போயிடும்” என்றாள் கலக்கத்துடன்.அவளது பேச்சில் சற்றே கோபமடைந்தவன் “உனக்கு நான் மட்டுமே முக்கியம் சத்யா. மற்றவங்க எல்லாம் மூன்றாம் மனுஷங்க. மாறன் என் தம்பின்னு அவங்க கவலைப்பட்டா அது அவங்க பிரச்சனை. இது நம்ம வாழ்க்கை. அதோட நம்மை பற்றி பேச அவங்களுக்கு எந்த தகுதியும் இல்லை” என்றான் அழுத்தமாக.அவனது பேச்சில் முகம் தெளிந்தவள் “நாம இங்கிருந்து வேற எங்கேயாவது போயிடலாமா?” என்றாள் மெல்லிய குரலில்.அவளது பயத்தை உணர்ந்தவன் மென் சிரிப்புடன் “நமக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு கண்ணமா. அதை முடிச்சதும் இங்கிருந்து கிளம்பிடலாம்” என்றான்.அமைதியாக அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டவளை எழுப்பி, அவளது பொருட்களை அறையில் அடுக்கும் படி அனுப்பி வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.அப்போது வீட்டின் கதவு படபடவென்று வேகமாக தட்டப்பட்டது. நாற்காலியிலிருந்து எழுந்தவனுக்கு வெளியில் இருப்பவர்கள் யாரென்று புரிந்து போனது. அறையிலிருந்தவளோ பயத்துடன் வேகமாக ஓடி வந்து அவனை பார்த்தாள். அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு நிதானமாக சென்று கதவை திறந்தான்.அங்கு ராதாவும், சாவித்திரியும் கோபமாக நின்று கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் விழிகளை உருட்டிய சாவித்திரி “நீ முதல்ல இந்த வீட்டை காலி பண்ணு” என்றார் அதிகாரமாக.இருகைகளையும் கட்டியபடி அவரை பார்த்தவன் “அதை சொல்ல நீங்க யாரு?” என்றான் அழுத்தமாக.அவனது கேள்வி அவரின் தன்மானத்தை தூண்டிவிட, “மங்களத்துக்கு நான் சொந்தக்காரி. ஆம்பளை இல்லாத வீட்டுக்கு நான் காவல். உன்னை மாதிரி ஆட்களிடம் இருந்து காப்பாத்துறேன்” என்றார் ஆத்திரமாக.அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “அவங்க கேட்கட்டும் நான் பதில் சொல்லிக்கிறேன்” என்றான்.அதுவரை பொறுமையாக இருந்த ராதா “ஏய்! நான் அவங்க பொண்ணு. நான் சொல்றேன் சீக்கிரம் அவளை கூட்டிட்டு ஓடி போயிடு” என்றாள்.அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “பேசி முடிச்சிட்டீங்களா? எங்களுக்கு வேலை இருக்கு இடத்தை காலி பண்ணுங்க” என்றான்.அவன் தங்களை அலட்சியபடுதுவதும், கேவலமான பார்வையை வீசுவதை கண்டதும் பொங்கி எழுந்த ராதா “அடியே! என்ன புது ஆள் பிடிச்சதும் அவனை விட்டு எங்களை மிரட்டி பார்க்கிறியா?” என்று காட்டு கத்தலாக கத்தினாள் சத்யாவைப் பார்த்து.அவளின் பேச்சைக் கண்டு முகத்தை சுழித்தவன் திரும்பி சத்யாவை பார்க்க, அவளுக்கும் அவமானமாக இருந்தது. தனது உடன்பிறப்பான அவள் இப்படி பேசுவதை கேட்டு காதை மூடிக் கொண்டாள். அவள் திருப்பி எதுவும் சொல்லுவாள் என்று காத்திருந்தவன் அவளிடம் இருந்து எதிர்வினை வராது போக, ராதாவையும் சாவித்திரியையும் பார்த்தவன் “இங்கே பாருங்க! உங்க ரெண்டு பேர் மேலையும் இந்த நிமிஷம் என்னால கம்ப்ளைன்ட் கொடுக்க முடியும். தேவையில்லாம இங்கே வந்து குழப்பம் பண்றீங்கன்னு” என்றவன் மொபைலை கையில் எடுத்துவிட்டு அவர்களை பார்த்து “என்ன கொடுக்கவா?” என்றான் கோபமாக.
 

sudharavi

Administrator
Staff member
#26
அதில் கொஞ்சம் பயந்து போன ராதா சாவித்திரி கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு “அம்மா! இவங்க கிட்ட என்ன பேச்சு. நாளைக்கு பார்த்துக்கலாம் வாங்க” என்று கூறி அவரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாள்.அவர்கள் இருவரையும் அருவெறுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றவன் கதவை அடித்து சாத்திவிட்டு உள்ளே வந்தான்.அப்போதும் அதே இடத்தில் அதிர்ந்து போய் நின்றவளின் முன்பு சென்றவன் “எத்தனை நாளைக்கு இப்படியே அவங்க பேசுறதுக்கு பதில் பேசாம இருக்க போற சத்யா? உனக்கு தன்மானம் இருக்கா இல்லையா?” என்றான் கிண்டலாக.அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் சீற்றம் எழ “என்னை மாதிரி ஒரு சூழலில் வாழ்ந்தவங்களுக்கு தான் என் வேதனை புரியும்” என்றாள்.செழியனோ தனக்குள் சிரித்துக் கொண்டு “என் கிட்ட மட்டும் இந்த பாய்ச்சல் காட்டுற ஆனா அவங்களை எல்லாம் கண்டா வாயே திறக்க மாட்டேங்கிறியே” என்றான் நக்கலாக.அவனை நிமிர்ந்து பார்த்தவள் அழுத்தமாக அவன் முகத்தில் பார்வையை பதித்து “உரிமை உள்ளவங்க கிட்ட மட்டும் தான் நம்ம கோபதாபங்களை காட்ட முடியும். அதோட நம்மோட கோபத்தை காட்ட கூட அவங்க தகுதி உள்ளவங்களா இருக்கணும்” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.அவள் சொன்னதின் அர்த்தம் மிக லேட்டாக புரிய, அவசரமாக அவள் பின்னோடு சென்றவன் கப்போர்டில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவளின் பின்னே சென்று வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவளது தோள் வளைவில் முகத்தை வைத்துக் கொண்டு “என் மேல இருக்கிற உரிமையால தான் கோபத்தை காட்டுறியா செல்லம்” என்றான் காதோரம் குறுகுறுப்பை மூட்டி.துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த கை அப்படியே நிற்க, மெல்ல அப்படியே அவன் மீது சாய்ந்து கொண்டவள் “மாறன் உங்களைப் பற்றி சொன்னதிலிருந்து உங்களை மட்டுமே உரிமை உள்ளவங்களா நினைச்சு வாழ்ந்துகிட்டு இருந்தேன் இளா. உங்களுக்கும் என் மேல ஈர்ப்பு இருக்கு என்று மாறன் மூலியமா தெரிந்த பிறகு நீங்க மட்டும் தான் என் வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்” என்றாள்.முகம் பார்க்காமலே, நேரடியாக எதுவும் அறியாமலே ஒருவரால் இத்தனை காதலை கொடுக்க முடியுமா? இதோ! தன் மீது சாய்ந்திருக்கும் இவள் இத்தனை காதலை நெஞ்சில் சுமந்து கொண்டு தனக்காக காத்திருந்திருந்திருக்கிராளே என்று உள்ளம் நெகிழ்ந்தான்.அவளை தன் புறம் திருப்பியவன் “இப்படியொரு காதல் கிடைக்க நான் நிச்சயம் புண்ணியம் செய்திருக்கணும் கண்ணம்மா. மாறன் உன்னைப் பற்றி கூறியது முற்றிலும் உண்மை. இப்படியொரு தேவதையை மகளாக பெற அவர்கள் கொடுத்து வைத்திருக்கனும். ஆனால் உன்னுடைய பெருமை அவங்களுக்கு புரியலையே” என்று கூறி இறுக்கி அணைத்துக் கொண்டான்.அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டிருந்தவள் “எல்லோரும் அன்னைக்கு என்னை தவறா பேசினப்ப, நான் உங்களை தேடினேன் இளா. யார் யாரோ என்னையும், மாறனையும் அடிச்சாங்க இளா. அப்போ நீங்க என் பக்கத்தில் இல்லையேன்னு நினைச்சு அழுதேன். என்னென்னவோ வார்த்தைகளால எங்களை கேவலப்படுத்தினப்போ இந்த தோள்கள் இல்லை இளா. அன்னைக்கு அந்த இடத்தில் நீங்க இருந்திருந்தால் எனக்கு இந்த துன்பமே வந்திருக்காது. மாறனும் நன்றாக இருந்திருப்பான். நான் என் காதலை சொல்லக் கூட உங்களை தேடல. என் துன்பத்தில் தோள் கொடுக்க, நீங்க வேணும்னு நினைச்சேன் இளா” என்றாள் அவன் நெஞ்சை கண்ணீரால் நனைத்தபடி.அவனது கண்களும் கண்ணீரை சிந்த, தன்னோடு காற்று புகாத அளவிற்கு இறுக்கி அணைத்துக் கொண்டவன் “நான் வந்துட்டேன்டா கண்ணம்மா. இனி, உன்னையும், மாறனையும் எந்த துன்பமும் நெருங்காதபடி நான் பார்த்துகிறேன்” என்றான் அவள் உச்சிதனில் முத்தம் வைத்து.தங்களை மறந்து அப்படியே சற்று நேரம் நிற்க, மெல்ல அவனிடமிருந்து தனை விடுவித்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு, தலையை குனிந்தபடி கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.அவனுக்கும் அது புதிய சூழ்நிலை, சற்றே சிவந்த முகத்துடன் தலையை கோதிய வண்ணம் அங்கிருந்து ஹாலிற்கு சென்றான். இருவரும் தங்களின் காதலை சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், பார்க்காமலே அடுத்தவரின் உணர்வுகளை உணர்ந்தே இருந்தனர். ஆனால் காலமும், சூழ்நிலையும் அவர்களின் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு சடாரென்று கொண்டு சென்று விட்டது.அதற்கேற்றார் போல் அடுத்தடுத்த அதிர்வுகள் அவர்களை யோசிக்க விடாமல் செய்திருந்தது. இப்போது அவளது பேச்சு அனைத்தையும் தகர்த்து அவர்களை தங்களின் வாழ்க்கையைப் பற்றியும், காதலை பற்றியும் யோசிக்க வைத்தது.அவனிடமிருந்து விலகி சமையலறைக்குள் நுழைந்தவள் இரவு உணவிற்கு சமைக்க தயார் செய்ய அவளது மனமோ சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்விலும், அவனது அணைப்பிலுமே இருந்தது. மனதிலிருந்த தடுமாற்றத்தோடு வேலை செய்தவளின் இடையை சுற்றி வளைத்தது செழியனின் கைகள். அதில் சற்றே துள்ளி “ப்ளீஸ்! கையை எடுங்க!” என்றாள்.அவள் சொன்னதும் கள்ளச் சிரிப்புடன் மேலும் இறுக்கி அணைத்தவன் அவளது காதில் மெல்லிய முத்தமொன்றை வைத்து தன்னை நோக்கி திருப்பியவன் மேலும் பல முத்தங்களால் தனது காதலை அவளுக்கு உணர்த்தினான்.காற்று வெளியிடை கண்ணம்மா – நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் – அமுது

ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு

ஊறி ததும்பும் விழிகளும் ....
 

sudharavi

Administrator
Staff member
#27
அத்தியாயம் – 13

வெகுநாட்களுக்குப் பிறகு அயர்ந்து உறங்கி இருந்தவள் மெல்ல, எழ முயல இடையில் இருந்த கரம் அழுத்திப் பிடித்துக் கொண்டு அவளை எழ விடாமல் செய்தது.அவனது செயலில் கண்களை விரிய திறந்து தான் இருக்கும் இடத்தைப் பார்த்தவளின் மனம் தான் காண்பது கனவல்ல என்று ஊர்ஜிதப்படுத்தியது. ஒரே நாளில் தன் வாழ்வு மிகப் பெரிய மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.அவள் எழ முயன்றதில் இருந்தே அரைவாசி கண்ணை திறந்து அவளை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது மன நிலை புரிந்தது. வலுகட்டாயமாக தன்னருகே இழுத்துக் கொண்டவன் “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு சத்யா” என்றான் முதுகை வருடி கொடுத்தபடி.அவன் நெஞ்சில் மேலும் நன்றாக முகத்தை புதைத்துக் கொண்டவளின் கண்கள் கண்ணீரை சொரிய “எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யாரும் என்கிட்ட அன்பா ஒரு வார்த்தை பேசினது இல்ல இளா. சின்ன அணைப்பு, தலை வருடல், அன்பான வார்த்தைகள் எதையுமே கேட்டதில்லை. எல்லாமே கடமைக்காக மட்டுமே நடந்தது” என்றாள்.“எல்லாவற்றுக்குமே காரணங்கள் இருக்கு சத்யா. ஆனா இனிமே உனக்கு நான் இருக்கிறேன்” என்றான் மேலும் இறுக்கி அணைத்தபடி.“நீங்க இருப்பீங்க...நான் இருப்பேனா இப்படி மூச்சு விட முடியாம பிடிச்சுகிட்டா?” என்றாள் சிரிப்புடன்.அவளது இயல்பான குறும்பு பேச்சில் அதிர்ந்து பின் சிரிப்புடன் விடுவித்தவன் அவளது தலையில் தட்டி “எப்பவும் இப்படி சிரிப்புடனே இரு சத்யா” என்றான்.அவனிடமிருந்து விலகி குளியலறைக்குச் சென்றவள் குளித்து முடித்து, புது மலராக வெளியே வர, படுக்கையில் ஆனந்தமாக சயனித்துக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்து கண்களை சிமிட்ட, வெட்கப் புன்னகையுடன் ஒற்றை விரலை காட்டி மிரட்டிவிட்டு சமயலறைக்கு சென்று விட்டாள்.அவனும் எழுந்து குளிக்க சென்றுவிட, இருவருக்குமாக காப்பி டிபன் தயாரிக்க தொடங்கினாள். அங்கே மங்களத்தின் வீட்டிலோ காலையில் எழுந்ததில் இருந்து போராட்டம். சத்யாவை விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தவருக்கு தானே காப்பி போட்டு குடிக்க வேண்டிய எரிச்சல் எழுந்தது. அவளை மனதார திட்டிக் கொண்டே காப்பியை போட்டு குடிக்க, அது வாயில் வைக்க வழங்கவில்லை.நெஞ்சு முட்ட ஆத்திரம் எழ, “அந்த எடுபட்ட சிறுக்கியை எப்படியாவது அவன் கிட்ட இருந்து பிரிச்சு இழுத்திட்டு வந்துடனும்” என்று கருவிக் கொண்டார்.சாவித்திரியின் வீட்டில் உரிமையோடு படுத்திருந்த ராதா “மா! இவ அவனை எப்படிம்மா பிடிச்சா? நீங்க இருக்கும் போது எப்படி விட்டீங்க? நல்ல வசதியானவனா வேற இருப்பான் போல?” என்றாள் புகைச்சலுடன்.அவளது பிள்ளைக்கு காலை உணவை ஊட்டிக் கொண்டிருந்தவர் “வாடைகைக்கு தான் வந்தான். அதுக்குள்ள எப்படின்னு தான் புரியல ராதா” என்றார்.அவர்கள் மும்மரமாக பேசிக் கொண்டிருக்க, வீட்டின் வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, வேகமாக எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தாள்.காரிலிருந்து இரு பெண்கள் இறங்கி செழியன் வீட்டை நோக்கி செல்வதை பார்த்தவள் “மா! யாரோ ரெண்டு பொம்பளைங்க அவன் வீட்டுக்கு வராளுங்க” என்றாள்.உணவை கொடுத்து குழந்தையின் வாயை துடைத்து விட்டவர் “அவன் ஆத்தாளா இருக்குமோ? இவன் இவளை கட்டிகிட்டதை தெரிஞ்சு வந்திருப்பாளுங்களோ?” என்றார் யோசனையாக.அவர் முன்னே அமர்ந்தவள் “மா! இது தான் நல்ல சமயம்...அவன் அம்மா முன்னாடியே அவளை அசிங்கப்படுத்தி எல்லோரையும் ஓட விட்டுடலாம். அப்போ அந்தம்மா இவ்வளவு மோசமான பொண்ணு என் வீட்டு மருமகளான்னு தூக்கி எரிஞ்சிட்டு போயிடும்” என்றாள்.“இதுவும் நல்ல யோசனையா இருக்கே” என்றவர் “என் ராசாத்தி” என்று அவளுக்கு நெட்டி முறித்து கொண்டு “போ! போய் உங்க அம்மாளையும் அழைச்சிட்டு வா” என்றார்.அதே நேரம் செழியனின் வீட்டு வாசலில் நின்ற இரு பெண்களும் கதவு திறப்பதற்காக காத்திருக்க, அந்நேரம் எதிர் வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ராதா அவர்களை முறைத்து விட்டு கீழே இறங்கி சென்றாள்.

 

sudharavi

Administrator
Staff member
#28
வாயில் மணி அடிப்பதை கேட்டு கதவை திறந்தவள் அங்கே நின்றிருப்பவர்களை கண்டதும் மரியாதையுடன் நகர்ந்து “வாங்க அத்தை, வாங்க ஆண்ட்டி” என்றாள் புன்சிரிப்புடன்.அவளை பார்த்து மென்சிரிப்புடன் உள்ளே சென்றவர் சோபாவில் அமர்ந்து கொண்டு “செழியன் எழுந்திரிசிட்டானா சத்யா?” என்றார்.“குளிச்சிட்டு இருக்கார் அத்தை” என்றவளின் பார்வை புதிதாக வந்தவர் மீது பதிந்து விலகியது.அவளது பார்வையை புரிந்திருந்தாலும் அவளிடம் எதுவும் சொல்லாமல் “சரோ! நீ கொஞ்ச நேரம் அந்த அறையில் இரு” என்றவர் மருமகளிடம் திரும்பி “சரோவை அங்கே உட்கார வை சத்யா” என்றார்.அவர் யாராக இருக்கும் என்கிற யோசனையோடு அதை வெளியில் கேட்க முடியாமல் “வாங்க ஆண்ட்டி” என்றழைத்துக் கொண்டு இன்னொரு அறைக்கு சென்றாள்.அங்கே சென்றதும் அவரின் கைகள் அவளைப் பிடித்து லேசாக வருடிக் கொடுத்தது. அவரது கண்களில் கண்ணீரின் சாயல். ஏனோ அவரின் செயலில் அவளது நெஞ்சிலும் இனம் புரியாத உணர்வு எழுந்தது.அதற்குள் குளித்து முடித்து அறையை விட்டு வெளியே வந்தவன் அங்கு அன்னையை கண்டதும் “வந்துட்டீங்களா அம்மா?” என்றான்.“ம்ம்..வந்துட்டேன் செழியா...நீ சீக்கிரம் தயாராகு. நான் வரும் போது அந்த பொண்ணு கீழே ஓடுச்சு. கூடிய சீக்கிரம் பஞ்சாயத்துக்கு வருவாங்க” என்றார்.அவனது கண்கள் சத்யாவை தேட, அதை புரிந்து கொண்டவர் “சரோவை உள்ளே அழைச்சிட்டு போயிருக்காப்பா” என்றார் அவனுக்கு புரியும் வகையில் தலையசைத்து.யோசனையுடன் “ம்ம்..சரிம்மா” என்று திரும்பியவனை கலைத்தது கதவு தட்டப்படும் ஓசை.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சத்யாவிற்கும் கேட்க, சரோவை அங்கே அமர வைத்துவிட்டு வெளியே வர, செழியன் “போய் திற” என்றான்.வேகமாக சென்றவள் கதவை திறந்ததும் அங்கே நின்ற மூவரையும் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றாள்.அவர்களோ அவளை ஆத்திரமாக பார்த்துவிட்டு சாவித்திரி மட்டும் முன்னே “இந்தா தள்ளு! வழியை மறிச்சுக்கிட்டு” என்றவர் அவளை ஒரு கையால் நகர்த்தி விட்டு உள்ளே நுழைந்தார். மற்றவர்களும் அவரை தொடர்ந்தனர்.அதிர்ந்து போய் நின்றவள் அவர்கள் பின்னோடு சென்று ஓரமாக நிற்க, சாவித்திரி செழியனின் அம்மா ராஜலக்ஷ்மி முன்பு சென்று நின்று “என்னம்மா உங்களை பார்த்தா நல்ல குடும்பமா தெரியுது. ஆனா உங்க பையன் இந்த மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இருக்கான் கேட்க மாட்டீங்களா?” என்றார் இகழ்ச்சியாக.மகனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து நின்ற ராஜலக்ஷ்மி “நீங்க என் மருமகளுக்கு யாருங்க ?’ என்றார்.அந்த கேள்வியை மகனும் கேட்டிருக்க அதில் கடுப்பானவர் “நான் இந்த வீட்டில் பல வருஷமா குடி இருக்கேங்க. இந்த பொண்ணு இந்த வீட்டில் இருந்தவனோட அடிச்ச கூத்தை எல்லாம் பார்த்ததுனால சொல்றேன். இப்படியொரு பெண்ணை உங்க பையன் திருட்டு கல்யாணம் செஞ்சிட்டு வந்திருக்கான்” என்றார்.சாவித்திரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மங்களத்தின் பக்கம் பார்த்தவர் “நீங்க தானே அவளோட அம்மா. ஆனா இவங்க ஏன் இவ்வளவு பேசுறாங்க?” என்றார் கேலியாக.தன்னை அவமதித்து மங்களத்திடம் பேசுவதை கண்டதும் கொதித்து போன சாவித்திரி “என்ன மங்களம் பார்த்துகிட்டு சும்மா நிற்கிற” என்று தூண்டி விட்டார்.அதுவரை பொறுமையாக இருந்த மங்களம் “நான் வளர்த்த பொண்ணு தான். ஆனா இவளை பெண்ணா பெத்ததுக்கு கேவலபடுதிட்டா. இவளை மாதிரி ஒரு பொண்ணு ஒரு குடும்பத்துக்கு போறதெல்லாம் அசிங்கம்” என்றார் அருவெறுப்பாக முகத்தை வைத்தபடி.அவர்கள் பேசுவதை கேட்டு முகத்தில் ரத்தப் பசை இழந்து கண்கள் எந்த நேரம் கண்ணீரை சிந்துமோ என்று தயாராக இருக்க, கதவை பிடித்தபடி நின்றிருந்தாள். செழியனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.சாவித்திரியையும், மங்களத்தையும் பார்த்தவர் “என்னோட முழு சம்மதத்தோட நானே முன் நின்று நடத்தி வச்ச கல்யாணத்தை எப்படி திருட்டு கல்யாணம்னு சொல்றீங்க?” என்றார்.“என்னது! நீங்களே நடத்தி வச்சீங்களா?” என்று அதிர்ந்த ராதா ஆங்காரமாக “ஏங்க பெண்ணோட அம்மா கிட்ட கேட்கனும்னு தோணவே இல்லையா?” என்றாள் ஆத்திரமாக.அவளை கேவலமாக பார்த்தவர் “யார் சொன்னா? பெண்ணோட அம்மாவோட முழு சம்மதத்தோட தான் இந்த கல்யாணமும் நடந்தது” என்றார்.அவர் அப்படி சொன்னதும் இருவரும் மங்களத்திடம் பாய்ந்தார்கள் “நீயே அவளை விரட்டி விட்டுட்டு இப்போ டிராமா பண்றியா?”“இல்ல நான் சம்மதம் எல்லாம் கொடுக்கல. எனக்கு இவ கல்யாணம் பண்ணிக்க போறதே தெரியாது” என்று கத்தினார்.அங்கிருப்பவர்களை மறந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டு நின்றனர் மூவரும். ராஜலக்ஷ்மியும், செழியனும் கைகளை கட்டிக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யாவோ எந்த நேரம் மயங்கி சரிவோம் என்கிற நிலையில் இருந்தாள். சற்று நேரம் வரை அவர்கள் அடித்துக் கொண்டிருக்க, முதலில் சுதாரித்துக் கொண்ட சாவித்திரி “என்ன எங்களை குழப்ப பார்க்குறீங்களா?” என்றார் கோபமாக.கம்பீரமான புன்னகையுடன் “நான் தெளிவா தானே சொன்னேன்” என்றார்.“மங்களம் ஒரு நாளும் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க மாட்டா” என்றார் அழுத்தமாக.“தேவையில்லையே! சத்யாவோட அம்மா சம்மதம் கொடுத்துட்டாங்கன்னு தான் சொன்னேன். மங்களம் கொடுத்தாங்கன்னு சொல்லலையே” என்றார்.ராதா கடுப்பாகி “என்ன உளறுரீங்க? எங்கம்மா தானே சம்மதம் கொடுக்கணும்” என்றாள் ஆங்காரமாக.இதற்கு மேலும் அவர்களை அலைகிழிக்க விடாமல் “சரோ! இங்கே வா” என்றழைத்தார் ராஜலக்ஷ்மி.அதுவரை அறைக்குள் இருந்து அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவர் மெல்ல அடியெடுத்து ஹாலிற்குள் வந்தார்.அலட்சியமான பார்வையுடன் திரும்பி பார்க்க அங்கே வந்து கொண்டிருந்தவரை கண்டதும் சாவித்திரி, மங்களம் இருவருக்கும் இதயம் துடிப்பை நிறுத்தியது. இருவரின் விழிகளும் தெறித்து விழும் அளவிற்கு சரோவை பார்த்தனர்.முதலில் அதிர்ச்சி அடைந்து பின்னர் சுதாரித்துக் கொண்ட மங்களம் வேகமாக சரோவிடம் சென்று அவரது தோள்களைப் பற்றி “ஏய்! நீ எப்படி இங்கே வந்த? நீ சாகலையா?” என்று கேட்டு உலுக்கினார்.விரக்தியான பார்வையுடன் “நீயே உயிரோடு இருக்கும் போது நான் ஏன் சாகனும்?” என்றார் அழுத்தமாக.
 

sudharavi

Administrator
Staff member
#29
அத்தியாயம் – 14

சாவித்திரிக்கும் பேரதிர்ச்சி சரோவை பார்த்ததில். மங்களத்திடம் அவர் பேசியதை கண்டு டென்ஷனானவர் சரோவின் முன் சென்று நின்று “நீ எங்க வந்த?” என்று முறைத்தார்.சத்யாவோ என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைவரையும் பார்த்தபடி நின்றிருந்தாள். அன்றைய நாளின் ஆரம்பத்தில் இத்தனை அதிர்ச்சிகளா? குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவது இயற்க்கை ஆனால் இங்கு குடும்பமே குழப்பமாக இருப்பது? என்று எண்ணி கலங்கி போய் நின்றாள்.மங்களம் எப்படியாவது சரோவை அங்கிருந்து அப்புறபடுத்திவிட வேண்டும் என்று குதித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக சாவித்திரி கடுமையாக முறைத்து அவரது கைகளைப் பற்றி அந்த வீட்டிலிருந்து வெளியே தள்ள முயன்றார்.அதுவரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜலக்ஷ்மி யாரும் எதிர்க்கும் முன்னர் சாவித்திரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.அவர் அறைந்ததும் அதுவரை அங்கிருந்த நிலை மாறி ஒரு அமைதி சட்டென்று சூழ்ந்து கொண்டது. அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சாவித்திரியை பார்த்து “என்ன தைரியம் இருந்தா அவ மேல கையை வைப்ப? திங்குற ஒரு வேலை சோத்துக்காகவும், சொத்து சுகத்துக்காகவும் எதையும் செய்யத் தயங்காத நீயெல்லாம் அவ மேல கையை வைக்கிற. கொன்னுடுவேன்” என்றார் பத்ரகாளி போல நின்று.ஆனானப்பட்ட சாவித்திரிக்கே அறை விழுந்ததும் ராதாவும், மங்களமும் ஆடி போய் நின்றனர். அவர்களின் முன்னே சென்று நின்றவர் “உண்ட வீட்டுக்கே துரோகம் நினைக்கிற நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாதவ” என்று கடித்து துப்பினார்.செழியனுக்கு ஓரளவிற்கு அவர்களின் கதை தெரியுமென்றாலும் அன்னையின் கோபத்தின் அளவை பார்த்து நிறைய சம்பவங்கள் நடந்திருக்கும் போல என்று எண்ணிக் கொண்டு பார்த்திருந்தான்.

சத்யாவின் கையைப் பற்றி இழுத்து வந்து சாவித்திரியின் முன்னே நிறுத்தியவர் “இந்தக் குழந்தையை எப்படி உங்களால அசிங்கப்படுத்தி பார்க்க முடிஞ்சுது? நீ இன்னைக்கு சாப்பிடுற ஒவ்வொரு பருக்கையும் அவளால தானே? சரோ கிட்ட வேலை பார்த்தப்ப உங்களுக்கு வயிறார சோறு போட்டு மரியாதையா நடத்தினதுக்கு துரோகத்தை பரிசாக கொடுத்திருக்கீங்க” என்றார்.அவரையும், சாவித்திரியையும் மாறி மாறி பார்த்த சத்யா ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவரது கைகளைப் பற்றி “அத்தை! என்ன நடக்குது இங்கே? இவங்க என் அம்மா இல்லையா? புதுசா வந்தவங்க யார்? ப்ளீஸ்!” சொல்லுங்க” என்று அழ ஆரம்பித்தாள்.மருமகளின் பயந்த முகத்தை பார்த்தவர் தன்னருகே இழுத்துக் கொண்டு தோளோடு அணைத்தவர் “நீ இவங்க குழந்தை இல்லம்மா. சரோ தான் உன் அம்மா. இவங்க உன் அம்மா கிட்ட இருந்து உன்னை திருடிட்டு வந்துட்டாங்க” என்றார்.அவள் கேட்ட செய்தி காதுகளை அடைந்ததும் உடலெல்லாம் நடுங்க, அப்படியே அவர் மீதே மயங்கி சரிந்தாள். அதை உணர்ந்து கொண்ட செழியன் அவசரமாக அவளை தாங்கி தூக்கிச் சென்று சோபாவில் படுக்க வைத்தான். மேஜை மேலிருந்த தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்க, சற்று நேரத்தில் எழுந்தமர்ந்தவளுக்கு மீண்டும் அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர, ஓவென்று கதறி அழ ஆரம்பித்தாள்.அவளது அழுகை சரோவை பாதிக்க, மகளிடம் சென்றமர்ந்தவர் அவளை தன்னோடு கட்டிக் கொண்டார். அவரது கண்களிலும் கண்ணீர், அம்மாவும், மகளும் அத்தனை வருட பிரிவை கண்ணீரின் மூலம் தீர்த்துக் கொண்டனர்.செழியன் எழுந்து வந்து மங்களத்திடம் “அவளை தூக்கிட்டு வந்தீங்களே உங்களுக்கு வேண்டிய எல்லாம் அவளால தானே கிடைச்சுது. அதற்காகவாது அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கலாம் இல்ல” என்றான் எரிச்சலாக.அழுது கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து வந்து “நான் யார்? எதுக்கு இவங்க என்னை என் பெத்தவங்க கிட்ட இருந்து தூக்கிட்டு வந்தீங்க?” என்றாள் கோபமாக.அவளது கைகளைப் பற்றிக் கொண்ட ராஜி “நான் சொல்றேன் மா! தஞ்சாவூர் பக்கம் திட்டச்சேரின்னு ஒரு அழகான கிராமம். அங்கே பெரிய பண்ணையார் கருணாகரனுக்கும், சாமுண்டேஸ்வரிக்கும் பிறந்தவர் தான் உங்கப்பா சண்முகவேல். அந்த சுத்துவட்டாரத்தில் கருணாகர பண்ணையாரை தெரியாதவங்களே இருக்க முடியாது. தன் கிட்ட உதவின்னு கேட்டு வந்த மக்களுக்கு உதவுவதில் அவரை மிஞ்ச ஆளே இல்லை. அவர் பிள்ளையான சண்முகவேலும் அப்படியே. ஆனா கருணாகரன் ஆட்களை எடை போடுவதில் வல்லவர். சண்முகவேல் அப்பாவி. அவருடைய மனைவி தான் இதோ நிற்கிறாங்களே சரோஜா உங்கம்மா. கணவனுக்கேத்த மனைவி. பார்ப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று நம்புறவ.கருணாகரனும், சமுண்டேஸ்வரியும் இருந்தவரை அவர்கள் வைத்தது தான் சட்டம். சண்முகவேலும்,சரோஜாவும் அதை மீறியதே இல்லை. நீ பிறந்து ஒரு ஆறு மாதத்தில் இரண்டு பேருக்கும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உடல்நலம் சரியில்லாமல் இறந்து போயிட்டாங்க. அதற்கு பிறகு தான் இந்த சாவித்திரியும், அவ புருஷன் கல்யாணமும் உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க. உங்க அப்பாவோட அப்பாவித்தனத்தை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு மெல்ல அங்கே நம்பிக்கைகுரியவங்களா மாற ஆரம்பிச்சாங்க. சரோவும் இந்த சாவித்திரியை சொந்த சகோதரி மாதிரி நடத்த ஆரம்பிச்சா.நான் சரோவுடைய அண்ணன் கார்த்திகேயனின் மனைவி. உன்னோட மாமன் மனைவி. ஒரு முறை நாங்க ஊருக்கு போயிருந்தப்ப அங்கே இந்த சாவித்திரியும், கல்யாணமும் நடந்து கொள்ளும் முறையை பார்த்து அதிர்ந்து போனோம். உங்கப்பாவும், அம்மாவும் கிட்டத்தட்ட அவங்க பேச்சை கேட்கும் நிலைக்கு வந்திருந்தாங்க. நானும் என் கணவரும் இதை தடுக்கணும்னு நினைச்சோம். உங்கப்பா கிட்ட அவங்களை பத்தி பேசினோம். ஆனா நாங்க சொன்னதை உங்கப்பாவால ஏத்துக்க முடியல. அந்த சமயத்தில் தான் அந்த கல்யாணம் இதோ நிற்கிறாளே இவளை எங்கிருந்தோ இழுத்திட்டு வந்தான். அப்போவே இவ கையில இந்த குட்டி இருந்தா.
 

sudharavi

Administrator
Staff member
#30
அப்போ சாவித்திற்கும் கல்யாணத்துக்கும் பெரிய தகராறு வந்துச்சு. அதை வச்சு அவங்களை வீட்டை விட்டு வெளியேத்தினோம். அதோட பிரச்சனைகள் முடிஞ்சுது என்று நின்னைத்தது தான் எங்க தப்பு.கொஞ்ச நாள் வீட்டு பக்கமே வராம அவங்க பிரச்சினையிலே உழன்று கிட்டு இருந்தவங்க, மூணு பேருக்குள்ள என்ன பேச்சு வார்த்தை நடந்துதோ தெரியாது, எல்லோருமா சேர்ந்து மறுபடியும் உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க. சாவித்திரி உங்கம்மா கிட்ட கண்ணீர் விட்டு அழுது, என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு நீங்க தான் உதவனும்னு நாடகம் ஆடி இருக்கா. மங்களத்துக்கு குழந்தை இல்லேன்னா விரட்டி விட்டிருப்பேன் அவ வேற குழந்தையோட இருக்கிறதுனால என்னோட தங்கச்சியா நினைச்சுக்கிறேன் என்று நடிச்சு சரோவின் மனசை மாத்தி இருக்கா. அதை நம்பி இந்த குடும்பத்துக்கு வீட்டில் இடம் கொடுத்திட்டா.அது எவ்வளவு பெரிய முடிவுன்னு தெரியாம தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டு இருக்கா. இதெல்லாம் நடக்கிறப்ப உனக்கு இரண்டு வயசு. கொஞ்சம் கொஞ்சமா வீட்டு நிர்வாகம் முதற்கொண்டு இவங்க இரண்டு பேர் கையிலும் போக ஆரம்பிச்சாச்சு. அப்போ தான் உங்கப்பா நடப்பதை உணர ஆரம்பிச்சார். முதன்முதலா கல்யாணத்தை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்.அதில் சுதாரித்துக் கொண்டவங்க வெளியூர் ஆட்களை வைத்து ஒரு நாள் பஞ்சாயத்தில் தீர்த்து கட்டிடாங்க. இது யாருமே எதிர்பார்க்காதது. என்ன நடக்குது என்று யாரும் புரிந்து கொள்ளும் முன் உங்கப்பா உயிர் போயிடுச்சு. செய்தியை கேட்டு அடித்து பிடித்து நாங்க ஓடி வந்தப்ப உங்கம்மா பித்து பிடிச்சது போல இருந்தா. அங்கே முழு நாட்டமையும் இவளுங்க ரெண்டு பேரும் தான்.உங்க மாமாவுக்கு இவளுக நாட்டாமை பண்றதை பார்த்து செம கோபம் வந்துடுச்சு. அதனால காரியம் முடிகிற வரை பொறுமையா இருந்திட்டு மறுநாள் ஊர் பெரியவங்களை கூப்பிட்டு எல்லோர் முன்னாடியும் நாங்க தான் என் தங்கைக்கு காவல். அதனால இந்த குடும்பத்தை அங்கிருந்து வெளியேறனும்னு சொல்லிட்டாங்க. அதுல கல்யாணத்துக்கும், இவளுகளுக்கும் அதிர்ச்சி.எப்படியாவது அங்கேயே தங்கி அந்த சொத்துக்களை அனுபவிக்கனும்னு நினைச்சவங்க ஊர் பெரியவங்க காலில் விழுந்து கதறி நாங்க தான் சரோவுக்கு இத்தனை நாள் நல்லது பண்ணிட்டு இருந்தோம் எங்களை போக சொன்னா எப்படின்னு கதறினாங்க. ஆனா என் கணவர் இவங்களோட நடிப்பிற்கு இறங்கி வரல.ஊர் பெரியவங்களும் உரிமைப்பட்டவங்க இருக்கும் போது, அவங்க சொல்றதை தான் நீங்க கேட்கணும் நாளை காலையில நீங்க வீட்டை விட்டு போகணும்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. இதை முற்றிலுமாக எதிர்பார்க்காத கல்யாணமும் சாவித்திரியும் பழிவெறியோட என் கணவரை பார்த்தாங்க.அப்போ எனக்கு அது பெருசா தெரியல. எப்படியோ ஒழிஞ்சா போதும்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். ஆனா அன்னைக்கு ராத்திரி என் கணவர் சாப்பிட்டிட்டு திண்ணையில போய் உட்கார்ந்தார். கொஞ்ச நேரத்தில் அவருக்கு நெஞ்சடைக்க, விழிகள் மேலே செருக, “ராஜி! ராஜி” திணற ஆரம்பிச்சார்.நான் என்னன்னு பார்க்கும் போதே வாயில் நுரை தள்ள, அப்படியே மடங்கி கீழே சாய்ந்தார். அந்த நிமிஷமே உயிர் போயிடுச்சு. ஐயோன்னு! பதறி துடிச்சு கத்த ஆரம்பிச்சேன். ஊர் மக்கள் எல்லோரும் கூடிட்டாங்க. என் பிள்ளைகள் ரெண்டும் அப்பா அப்பான்னு அவர் மேல விழுந்து அழ ஆரம்பிச்சுது. யாரோ ஒருத்தர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போக, நானும் சரோவும் பிள்ளைகளை மறந்து அவங்க பின்னோடு போயிட்டோம். ஆனா அங்கே போனதுமே சொல்லிட்டாங்க உயிர் போய் அரை மணி நேரம் ஆகுதுன்னு.அழுது புரண்டு கண்ணீரோடு ராத்திரியே உடலை எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்தோம். நடந்த களேபரத்தில் யாரும் கல்யாணம் குடும்பத்தை பத்தி கவலைப்படல. ஊரே ஒப்பாரி வச்சுகிட்டு இருக்க, சரோ தான் முதலில் உன்னை காணலேன்னு தேட ஆரம்பிச்சா. அப்புறம் தான் கல்யாணம் குடும்பத்தையும் காணலைன்னு புரிஞ்சுது. வீடு முழுக்க தேடும் போது தான் தெரிஞ்சுது பீரோவில் இருந்த நகை நட்டு, காசு பணம் எல்லாம் களவு போயிருந்தது.அத்தனை நாள் வயிற்றுக்கு அன்னமிட்ட அந்த வீட்டிலேயே திருடி விட்டு, குழந்தையையும் தூக்கிட்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சு உன் அம்மா மயங்கி விழுந்தவ தான். காசு பணத்தை எடுத்ததை கூட பெரியதா நினைக்கல, ஆனா குழந்தையையும் தூக்கிட்டு போனதை தான் தாங்க முடியல. எங்கெங்கேயோ தேடினோம் கிடைக்கல. சரோ ஜடமா மாறி போயிட்டா. நானும் அவளோடவே அங்கேயே தங்கிட்டேன். எங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் அழிச்சிட்டு போன இவங்களை எங்கேன்னு தேட? கணவரை இழந்த இரண்டு பெண்களால எங்கே போய் தேட முடியும் சொல்லு சத்யா?” என்றார்.
 
Status
Not open for further replies.