நிலை மாறும் நியாயங்கள் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

புதிய கதையின் டீசரோடு வந்திருக்கிறேன்.......வாரத்தில் மூன்று நாட்கள் இந்த கதையின் அத்தியாயங்கள் பதிவிடப்படும்.......


வழமை போல் அன்றும் மொட்டை மாடிக்கு நிம்மதியை தேடிச் சென்றவள் அங்கிருந்த இதமான அமைதியை அனுபவித்துக் கொண்டிருந்தாள். இங்கு நிற்கும் இந்த நேரம் மட்டுமே அவளின் மனம் அமைதி கொள்ளும்.


மற்ற நேரங்களில் அவளை பெற்றவளே விஷம் தோய்ந்த வார்த்தைகளால் கொன்று கூறு போடுவார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோ அவளை பார்வையாலேயே நோகடிப்பர். வேலை செய்யும் இடத்திலோ முதுகுக்கு பின் அவளை பற்றிய விமர்சனங்களை வைத்து சிரித்து மகிழ்வர்.


மொத்தத்தில் அந்த மொட்டை மாடி மட்டுமே அவளுக்கு துணை. அவளுடைய இந்த நிலைக்கு காரணம் ஆனதும் இந்த மாடியே தான் என்றாலும் அங்கிருக்கும் தனிமையும், சூழலும் நடந்த அனைத்தையும் மறக்கடிக்க செய்யும்.


தனது யோசனையில் மூழ்கி இருந்தவளுக்கு தன்னை யாரோ உற்று நோக்குவது போல் தோன்ற, மெல்ல விழிகளை திருப்பியவளின் பார்வையில் அவன் விழுந்தான். அவனை கண்ட அந்த நிமிடம் அவளது மனம் விதிர்விதிர்த்து போனது.


அவனது பார்வையோ அவளை கூர்மையாக ஆராய்ந்து கொண்டிருந்தது. ஒரு காலை மடக்கி சுவற்றின் மீது சாய்ந்து நின்றவனின் பார்வையில் அவள் மீதான மரியாதை துளி கூட இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.


அவளோ சற்று நேரம் தன்னை மறந்து நின்றவள் சுதாரித்துக் கொண்டு “யார் நீங்க?” என்றாள் நிமிர்வுடன்.


அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன் “பரவாயில்லை நான் நினைச்சதை விட நல்லாவே இருக்க!” என்றான் ஏளனப் புன்னகையுடன்.

அவனது பேச்சில் கடுப்பானவள் “ஹலோ! யார் நீங்க?” என்றாள் சீற்றத்துடன்.


அவளை இகழ்ச்சியாக பார்த்து “நான் யாராக இருந்தால் என்ன? உனக்கு தேவை ஒரு ஆம்பிளை! இங்கே வரவங்களை வளைத்துப் பிடிக்கிறது தானே உன் வேலை” என்றான் கிண்டலாக.


அவனது வார்த்தையில் முகம் வெளுத்து இரத்தமிழந்து போனது. பேயை கண்டது போல் அவனைக் கண்டு கீழே ஓடினாள்.
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#2
அத்தியாயம் – 1


விடியலின் நேரம் தன் மேல் வீசிச் சென்ற குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி கண் மூடி நின்றிருந்தாள் சத்யா. பறவைகளின் ஒளியும், குளிர்ந்த காற்றும் அவளது மனதை இதமாக வருடிச் சென்று கொண்டிருந்தது. தன் வாழ்வில் நடந்த நடந்து கொண்டிருக்கும் எந்தவொரு சம்பவமும் அவளது மன தைரியத்தை குறைக்கவில்லை. மாறாக அவளுள் அசாதாரண அமைதியை மட்டுமே ஏற்படுத்தி இருந்தது.


சற்று நேரம் சுற்றி இருந்த காட்சிகளை அனுபவித்துவிட்டு, நேரமானதை உணர்ந்து மெல்ல படியில் இறங்கி கீழே வந்தாள்.


அவள் எதிர்பார்த்தது போல கண்களில் தீப்பிழம்பை வைத்துக் கொண்டு நின்றிருந்தார் அவளது அன்னை மங்களம்.


“வீடு அடங்கி இருக்க முடியாதாடி தட்டுவாணி சிறுக்கி! காலையிலேயே மொட்டை மாடியில நின்னு எவனை வளைக்க போன?” என்று விஷத்தை கக்கினார்.


அவளோ எதுவும் பேசாமல் நேரே சமயலறைக்கு சென்றாள். தனது கேள்விக்கு பதிலளிக்காமல் செல்பவளின் மீது ஆத்திரம் எழ “எதுக்குடி மாடிக்கு போன?” என்று மீண்டும் கத்தினார்.


அவளோ காப்பியை போட்டு அவர் முன்னே நீட்டினாள். அவளை கடுமையாக முறைத்தவர் “உன் கையால இதை குடிக்கிறதுக்கு விஷத்தை குடிக்கலாம்” என்றார்.


அவளோ ‘குடியேன் யார் வேண்டாம்னு சொன்னா’ என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டாள்.


அவளிடமிருந்து எந்த பதிலும் வராது போக அலுத்துப் போனவர் காப்பியை வாங்காமல் நின்றார். சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள் சமையலறை மேடை மீது வைத்துவிட்டு தனதறைக்கு சென்று விட்டாள்.


வேலைக்கு செல்வதற்கான ஆடையை எடுத்து வைத்துவிட்டு குளித்து முடித்து வெளியே வந்தவள் சமயலறைக்கு சென்று இருவருக்குமான உணவை சமைக்க ஆரம்பித்தாள். அவள் முகம் இறுகி போய் இருந்ததே தவிர எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தவில்லை.


காப்பியை ஆற அமர குடித்து முடித்த மங்களம் “நீ ஒன்னும் எனக்கு சமைச்சு வைக்க வேண்டாம். உன் கையால சாப்பிடுறதை விட நாண்டுகிட்டு சாவலாம்” என்றார்.


அவளோ ‘அப்படி ஒன்னும் தெரியலையே...நான் சம்பாதிக்கிற காசில, நான் சமைக்கிற சாப்பாட்டை தானே தினமும் சாப்பிடுற. அப்புறம் ஏன் சும்மா தினமும் இதுவொரு டயலாக்?’ என்று மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.


அவள் மனதில் ஓடுவதை புரிந்து கொண்டவர் அருகில் சென்று முடியைப் பற்றி “என்னடி! என் கையால தானே திங்குறேன்னு நினைக்கிறியா?” என்றார் விழிகளை உருட்டி.


அதற்கும் அவளது பதில் மௌனமே.


அவளது அந்த மௌனமே அவரை எரிச்சலடைய செய்தது.


“உடம்பு தெனவெடுத்து ஆடின ஆட்டத்துல அப்பனை முழுங்கியாச்சு. இப்படியே ஊமை கோட்டான் மாதிரி இருந்து என்னையும் கொண்டு சுடுகாட்டில் வச்சிடு” என்று உலுக்கினார்.


அவர் கைகளைத் தட்டிவிட்டு அறைக்கு சென்று ஹன்ட் பாகை எடுத்துவந்து டிபன் பாக்சை எடுத்து வைத்துவிட்டு தலையை வாரி சரி செய்து கொண்டு வந்து காலை உணவை தொடாமலே கிளம்பினாள்.


“நில்லுடி! சாபிட்டிட்டு கிளம்பு” என்றார் கோபமாக.


‘என் பசியெல்லாம் உனக்கு நியாபகம் இருக்காம்மா’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினாள்.


அவளை நாவெனும் சாட்டையால் சுழற்றி அடிக்கும் மங்களத்திற்கு அவளது அமைதியே வெறி ஏத்தும். பதிலுக்கு பதில் பேசினால் வார்த்தைகளால் அடித்து ஒடுக்கி விடலாம். ஆனால் தனக்குள் இறுக்கிக் கொண்டு உன்னால் முடிந்ததை பார் என்று சவால் விடுபவளை எண்ணி அவருக்கு தான் ரத்தம் கொதித்தது.


எப்படியாவது அவள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரையாவது பார்த்து விடும் வேகம் எழ, வாசலுக்கு சென்று “மனசை ஊர் மேய விடாம ஒழுங்கா வேலைக்கு போனமா வந்தமான்னு வந்து சேரு” என்றார் தெருவில் போகிறவர் வருபவர்களுக்கு எல்லாம் கேட்கும் வகையில்.


அவரது வார்த்தைகளின் தாக்கம் அவள் மனதில் அடித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்து ஏளனமாக உதட்டை இழுத்து பிடித்துவிட்டு சென்றவளைக் கண்டு ஆத்திரம் கொப்பளித்தது.


அவளையே சற்று நேரம் வெறித்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குள் சென்றார்.


தெருவில் நடந்து கொண்டிருந்தவளின் மனமோ நைந்து போயிருந்தது. பெற்றவளே இப்படி பேசும்போது மற்றவர்கள் தன்னை எந்த அளவிற்கு மதிப்பார்கள் என்றெண்ணிக் கொண்டே நடந்தாள். அப்போது ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த வீட்டு ஆண் இவளைக் கண்டதும் அவசரமாக மீண்டும் உள்ளே சென்றார். அங்கே அவர் மனைவி இவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். அதைக் கண்டதும் அனைத்தையும் மீறி அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.


மனித மனங்கள் எவ்வாறெல்லாம் வித்தியாசப்படுகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை பெற்ற அன்னையே மகளை தூற்றும் போது மற்றவர்கள் இப்படி நடந்து கொள்வதில் தவறில்லை என்றே எண்ணத் தோன்றியது.


சிந்தனையுடன் நடந்தவளை கலைத்தது சிவராம் அங்கிளின் குரல்.


“சத்யாம்மா! ஆண்ட்டி உன்னை உள்ளே வந்துட்டு போக சொல்றா” என்றழைத்தார்.


அவரை பார்த்ததும் தன்னை அறியாமல் அவள் இதழில் சிரிப்பு வந்தமர்ந்து கொண்டது.
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#3
“என்ன அங்கிள் காலை வேலை எல்லாம் முடிஞ்சுதா” என்று இயல்பாக கேட்டுக் கொண்டு கேட்டின் முன் நின்றாள்.


“அது இருக்கு ஏகப்பட்டது கண்ணா. உங்க ஆண்ட்டி சும்மா தானே இருக்கீங்கன்னு சொல்லி ஏதாவது வேலை கொடுத்திட்டே இருப்பா” என்றார் சிரிப்புடன்.


“ஹாஹா...நீங்க ஒன்னும் அலுத்துகிற மாதிரி இல்லையே...ஆண்ட்டி சொல்லிட்டா மறு பேச்சு எது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த சாரதா இருவரையும் முறைத்து சிவராமிடம் திரும்பியவர் “உங்க கிட்ட என்ன சொன்னேன்? குழந்தையை உள்ளே கூட்டிட்டு வர தானே சொன்னேன்.இங்கே வச்சு பேசிட்டு இருக்கீங்க” என்றார்.


“ஹையோ ஆண்ட்டி! எனக்கு ஏற்கனவே நேரமாச்சு. அங்கிள் கூப்பிட்டாங்கலேன்னு கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டு இருந்தேன்” என்றாள்.


அவரோ விடாப்பிடியாக அவளது கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்று டைனிங்கில் அமர வைத்து சாப்பாட்டை பரிமாறினார்.


அதில் அயர்ந்து போனவள் “ஆண்ட்டி! நான் சாப்பிட்டிட்டு வந்துட்டேன்” என்றாள் சங்கடத்துடன்.


அவளது சங்கடத்தை உணர்ந்தாலும் அவள் வயிற்றை நிரப்புவது தான் இப்போதைய தேவை என்பதால், வேறு எது பேசினாலும் மனதை காயப்படுத்தி விடக் கூடும் என்கிற காரணத்தினால் “ஒரு நாளைக்கு கூட சாப்பிட்டா தப்பில்லை சத்யா” என்றார்.


அவர்கள் விட மாட்டார்கள் என்று புரிந்து கொண்டவள் அமைதியாக அவர் வைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். உணவு உள்ளே இறங்க இறங்க வயிற்றின் சத்தம் அதிகமானது. இவ்வளவு பசி இருந்திருக்கிறது என்று அப்போது தான் உணர்ந்து கொண்டாள்.


அவளை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டிருந்த சாரதாவிற்கு மனம் கனத்துப் போனது. இந்த சிறு வயதில் எத்தனை கனவுகளுடன் வாழ வேண்டிய ஒரு குருத்து. அனைத்தையும் இழந்து ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? கடவுளின் மீதே குற்றத்தை சுமத்தினார். கீழே விழ இருந்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டவர் அவளுக்கு தண்ணீர் வைக்கிற சாக்கில் எழுந்து சென்று கண்களை துடைத்துக் கொண்டு வந்தார்.


சாப்பிட்டு முடித்து எழுந்தவளிடம் “சத்யாம்மா! நீ எக்காரணம் கொண்டும் எங்களை அந்நியமா நினைக்காதே. உனக்கு எப்போ எது தேவை என்றாலும் எங்க கிட்ட சொல்லலாம்” என்றார் சாரதா.


அப்போது அங்கே வந்த சிவராமன் “பாரு சத்யா இந்த அநியாயத்தை. நான் ஒரு காப்பி கூட கேட்டா அதுக்கு திட்டுறா. உன் கிட்ட இப்படி சொல்றா” என்று குறை சொன்னார் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.


அவரை முறைத்த சாரதா “நீங்க ஒரு நாளைக்கு எத்தனை காப்பி குடிக்கிறீங்க? என்னவோ நான் போட்டே குடுக்காத மாதிரி அவ கிட்ட குறை வேற” என்றார்.


அவர்கள் இருவரின் சண்டையையும் ரசித்தவளின் மனது தான் அந்த குடும்பத்தில் பிறந்திருக்க கூடாதா என்று ஏங்கியது. தனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை அமையாமல் போனது யார் குற்றம்? அனைத்தும் இருந்தும் யாருமில்லாத அனாதையாக நிற்பது யாரால்? தனது குறையை சொல்லி அழக் கூட ஆளில்லாமல் போனது விதியின் செயலா?


உடன் பிறந்தவள் என்று ஒருத்தி இருந்த போதும் தான் தன் சுகத்தை மட்டுமே எண்ணிக் கொண்டு தங்கையின் துக்கத்தையோ, உணர்வுகளையோ பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இல்லை.


ஒரு சிலருக்கு மட்டுமே சுற்றி உள்ள உறவுகள் அனைத்தும் தரும் உறவுகளாக அமையும். அது ஒரு வரம். அந்த வரம் தனக்கு இந்த ஜென்மத்தில் இல்லை என்று எண்ணி பெருமூச்சை விட்டுக் கொண்டு பேருந்து நிலையத்தில் நின்றாள்.


பஸ் வந்ததும் ஏறி அமர்ந்தவளின் நினைவுகள் பள்ளி வாழ்க்கையை எண்ணிப் பார்த்தது. அந்த வயதிற்குரிய துள்ளலுடன் சுற்றித் திரிந்தவளை மற்றவர்களின் வீடு மாதிரி இல்லை தங்கள் வீடு என்பதை உணர வைத்தது தோழி சுமதியின் வீடு.


ஒரு நாள் பள்ளியில் இருந்து சுமதியின் வீட்டிற்கு சென்றவளுக்கு அவர்கள் வீட்டில் நடந்தவற்றை கண்டு ஆச்சர்யமாக இருந்தது. சுமதி வீட்டினுள் நுழைந்ததுமே அவளது அன்னை இருவரையும் ஆசையாக வரவேற்று இருவருக்கும் வேண்டியதை கொடுத்து அன்பாக பேசினார். அதிலும் சுமதியை அவர் செல்லம் கொஞ்சியதை பார்த்து மனதினுள் ஏக்கமே எழுந்தது எனலாம்.


சுமதியின் வீட்டையும் தனது வீட்டையும் ஒப்பிட்டு பார்த்தாள். சுமதியின் அன்னை அவளுக்கு அன்புடன் அனைத்தும் செய்தார்கள் என்றால் அவளது அன்னை வீட்டினுள் நுழைந்ததுமே சமையல் வேலையை தலையில் கட்டி விடுவார். அவரிடம் பரிவையோ, பாசத்தையோ எதிர்பார்க்க முடியாது.


அவரின் நாக்கு தேள் கொடுக்கு போன்றது. எந்நேரமும் விஷத்தை மட்டுமே கக்கும். தந்தை செந்தாமரையோ அந்த வீட்டின் விருந்தாளி போல நடந்து கொள்வார். வேலைக்கு சென்று வருவதும், அந்த மாத வருமானத்தில் ஒரு பங்கை மனைவியிடம் தூக்கி கொடுப்பதோடு தன் கடமை முடிந்தது என்பது போல இருப்பார். ஒரு நாள் கூட அக்காவிடமோ, தன்னிடமோ அன்பாக பேசியோ, கொஞ்சியதாகவோ நினைவில் இல்லை.


அவர்கள் இருவரும் எப்படி ஒரே கூரையின் கீழ் இருந்தார்கள் என்று எண்ணி அதிசயித்தாள். ஒரு நிமிடம் கூட இருவரும் சந்தோஷமாக சிரித்துப் பேசியதில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தால் கடித்து குதறிக் கொள்வார்களே தவிர அன்பு என்ற ஒன்றுக்கு அங்கு இடமில்லை.


மொத்தத்தில் எங்கள் குடும்பம் மற்ற குடும்பம் போல் இல்லை. இதோ அப்பா இறந்த பின்னும் அப்படியே தான் தொடருகிறது என்று எண்ண சுழலில் சிக்குண்டு கிடந்தவளை கண்டக்டரின் விசில் சப்தம் நினைவிற்கு கொண்டு வந்தது.


தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கியவள் ஆபிஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இந்த வேலை மட்டும் இல்லா விட்டாள் வாழ்க்கை அவளுக்கு இன்னும் சிக்கலாகி இருக்கும். வேலை பார்க்கும் இடத்திலும் அவள் வாழ்வில் நடந்து விட்ட சம்பவங்களின் பாதிப்பு இருக்கிறது தான். ஆனால் அதை எல்லாம் தாண்டி தான் வாழ்ந்தாக வேண்டிய சூழ்நிலை.


இனி அவள் வாழ்வில் அந்த சம்பவத்தை யாரும் மறக்க விடப் போவதில்லை. யாரோ ஒருவர் வந்து குத்தி காட்டிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். அதனால் அதிலேயே வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.


அவ்வளவு எளிதாக அவளது வாழ்க்கையை விதி விட்டு விடுமா என்ன?


அதே நேரம் அவளது வீட்டின் முன்பு சிறிய ட்ரக் ஒன்று வந்து நின்றது. அதற்கு முன்பு காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய இளஞ்செழியன் நேரே சென்று சத்யாவின் வீட்டுக் கதவை தட்டினான்.


கதவை திறந்து கொண்டு வந்த அவள் அன்னை அவனைப் பார்த்ததும் “வந்துட்டீங்களா?” என்றவர் உள்ளே சென்று மாடி வீட்டு சாவியை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தார்.


அவன் எதுவும் பேசாமல் “நன்றி அம்மா” என்றவன் ட்ரக்கிலிருந்த ஆட்களிடம் பொருட்களை மாடிக்கு கொண்டு வரும் படி கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.


மாடிக்கு சென்று கதவை திறந்தவன் மெல்ல அந்த வீட்டினுள் நுழைந்தான். அவனது மனம் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த அந்த நொடி இறுகி போனது. மெல்ல ஒவ்வொரு இடத்தையும் பார்த்தவனுக்கு மனக் கண்ணில் அந்த உருவத்தின் உளறலும், புலம்பலும் வந்து போனது.


தன்னை அறியாமல் உடல் இறுக, விறைத்து நின்றவனை பொருள்களை கொண்டு வந்தவர்களின் சத்தம் கலைத்தது. கண்களை அழுந்த மூடித் திறந்தவன் தன்னை சுதாரித்துக் கொண்டு எங்கெங்கு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.


அனைத்தும் இறக்கப்பட்டு முடித்தவுடன் அவர்களுக்கு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவனுக்கு மூச்சு முட்டியது. தன்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது என்றாலும், தனது வேலை முடியும் வரை அங்கு தான் இருக்க வேண்டும் என்று அழுத்தி சொல்லிக் கொண்டான்.


ஜன்னலின் வழியே வீதியை பார்த்தவனின் விழிகள் இரைக்காக காத்திற்கும் சிறுத்தையின் தோற்றத்தை ஒத்திருந்தது.


கைகள் இறுகி மனதின் அழுத்தத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அடுத்தடுத்த மூச்சுகள் அவனது சுவாச குழல்களை தாக்கிக் கொண்டிருக்க, கண்கள் மேலும் மேலும் ரத்த சிவப்பாகிக் கொண்டிருந்தது.


மனமோ ‘முடிக்கிறேன்! நினைத்ததை முடிக்காமல் விட மாட்டேன்’ என்று உரு போட்டுக் கொண்டிருந்தது.

கதைக்கான கருத்துக்களை இந்தத் திரியில் பதியுங்கள்...

http://sudharavinovels.com/threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.916/
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#4
அத்தியாயம் – 2


மாலை வரை பொருட்களை அடுக்குவதில் ஈடுப்பட்டிருந்தவன் போன் அடிக்கவும் அவசரமாக சென்று எடுத்தான். அவனது அன்னை தான் அழைத்திருந்தார். சற்று நேரம் அவரிடம் பேசி விட்டு மீண்டும் வேலையில் ஈடுபட, மனமோ ஓனரின் பெண்ணை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியது.


ஓரளவிற்கு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு குளித்து விட்டு வந்தவன் புதிய டீ ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு ஹாலின் ஜன்னலருகே சென்றான். சற்று நேரம் மிதமான நடமாட்டத்துடன் இருந்த வீதியை பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் அவள் விழுந்தாள்.


காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு வந்தவளை நன்றாக ஆராய்ந்தான். கலைந்த தலையும், வாடி வதங்கிய முகமும், மிகச் சாதரணமான சேலையும், கழுத்தில் இருக்கிறதா இல்லையா என்கிற அளவில் ஒரு செயினும் அணிந்திருந்தாள். கைகளில் மெல்லிய வளையலும், சாதாரண கருப்பு பட்டை போட்ட வாட்சும் அணிந்திருந்தாள்.


அந்த முகத்தில் சோர்வை தாண்டி ஒரு சோகம் இருந்தது. ஓனர் வீட்டின் கதவை தட்டுவதை அறிந்து ‘இவளா நான் கேள்விப்பட்ட பெண்? இந்த முகமும், அவளது நிலையும் நான் கேள்விப்பட்டதற்கு நேர்மாறாக இருக்கிறதே’ என்று எண்ணியபடி சற்று நேரம் அங்கேயே நின்றான்.


கதவை திறந்ததுமே “ஏன் லேட்டு? இங்கே ஒருத்தி காப்பி தண்ணியில்லாம நாக்கு வறண்டு இருப்பான்னு தெரியாதா? ஆடி அசைஞ்சு தான் வருவியா?” என்று கடித்தார்.


சத்யாவோ பதிலே பேசாமல் பையை கொண்டு டைனிங்கில் வைத்துவிட்டு ஜக்கிளிருந்த தண்ணீரை அப்படியே கவிழ்த்துக் கொண்டாள். அதை முழுவதும் குடித்து முடித்த பிறகே சற்று முகம் தெளிந்து போனது.


“ஏய்! சீக்கிரம் போய் காப்பியை போடு” என்று விரட்டினார்.


அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்று முகம் கழுவி வந்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் காப்பி கலக்க ஆரம்பித்ததும் அவள் பின்னோடு வந்து நின்று கொண்ட மங்களம் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து “ஆபிசுக்கு தானே போயிட்டு வர? பின்னே ஏன் உன் சேலை இவ்வளவு கசங்கி இருக்கு?” என்றார் சந்தேகத்துடன்.


அவரது கேள்வியை கண்டு முகம் ரத்தப் பசையை இழந்தாலும் இறுக்கத்துடன் “தெரியாது” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு காப்பியை அவர் கையில் கொடுத்துவிட்டு தனது கப்பை எடுத்துக் கொண்டு கொல்லைபுறம் சென்றமர்ந்தாள்.


அவர்கள் பேசியதை எல்லாம் தனது சமையல் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு குழப்பமாக இருந்தது. இந்தப் பெண்ணிடம் இத்தனை அமைதியை எதிர்பார்க்கவில்லையே. ஒருவேளை அது வேறு பெண்ணாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் கொல்லையில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

கையிலிருந்த காப்பியை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள். எதற்கு இந்த உயிரை இழுத்துப் பிடித்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் அடிக்கடி எழுந்து மறைந்தது.குளிர்ந்த காற்று மேனியை தழுவிச் சென்றாலும் உள்ளுக்குள் இருந்த புழுக்கம் அவளை மூச்சு விட சிரமப்படுத்தியது.


சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் ஆறிப் போன காப்பியை அப்படியே கவிழ்த்துக் கொண்டாள். அந்நேரம் அங்கே வந்த மங்களம் “சத்யா! என்ன பண்ற இங்கே? எனக்கு நைட் சப்பாத்தி வேணும். போ! போய் பண்ணு. கூட காய்கறி கூட்டும் பண்ணிடு” என்றார்.


அவளோ வாயைத் திறந்து பதிலேதும் சொல்லாமல் “ம்ம்..” என்று விட்டு மீண்டும் இருளை வெறிக்க ஆரம்பித்தாள்.


அதில் கடுப்பான மங்களம் “என்னடி! நானும் சொல்லிட்டே இருக்கேன். அப்படியே உட்கார்ந்திருக்க...போ! இதுக்கெல்லாம் உடம்பு வணங்காதே உனக்கு” என்று கத்தினார்.


அலுப்புடன் எழுந்தவள் எதுவும் பேசாமல் நகர, “ஏய்! நில்லு! இன்னைக்கு அந்த சாரதா வீட்டுக்குப் போனியா?” என்றார் அதட்டலாக.


திரும்பி பார்க்காமல் நடந்து கொண்டே “ஆமாம்” என்று விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.


அவ்வளவு தான் மங்களம் மீண்டும் தன் ஆட்டத்தை துவங்கி விட்டார். நிறுத்தாமல் வாயில் வந்தபடி அவளை வசைபாடிக் கொண்டிருந்தார். அவளோ கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சப்பாத்திக்கு மாவை பிசைந்து, காய்கறிகளை அறிந்து கூட்டு செய்ய ஆரம்பித்திருந்தாள். மேலே நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு எந்த இடத்திலும் அவளது மறுப்பு குரல் கேட்கவில்லை. செழியனுக்கே மங்களத்தின் ஆட்டத்தைக் கண்டு அலுத்துப் போனது.இந்தம்மா என்ன இப்படி ஆடுது? ஆனா அவ ஒரு வார்த்தை கூட பேசாம இருக்கா? அவ்வளவு அழுத்தக்காரி போல...பார்ப்போம் நானா அவளான்னு...விட மாட்டேன்...அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீராவது வரணும் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.


மங்களத்திற்கு வேண்டிய உணவை செய்து கொடுத்து விட்டு மீண்டும் இருளில் சென்றமர்ந்தாள். அவளது மனம் பின்னோக்கி சென்றது. அமைதியான சூழலும், குளிர்ந்த காற்றும் அவளது நினைவலைகளை தூண்டி விட்டது.


குழந்தை பருவத்தில் அறியாத சில விஷயங்கள் குமரியானதும் புரிய ஆரம்பித்தது. பல குடும்பங்களில் இருந்த அன்பென்ற ஒன்று தங்கள் குடும்பத்தில் மருந்துக்கும் இல்லை என்பது. அக்கா செல்வியும் அப்படியே வாழப் பழகி இருந்தாள். இதில் சத்யா மட்டுமே அன்பிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்கிக் கொண்டிருந்தாள்.


தாய், தந்தையுடன் கைகளைப் பிடித்துக் கொண்டு குடும்பமாக வெளியில் செல்ல வேண்டும் என்கிற ஆசை மனதில் அதிகம் இருந்தது. அதிலும் பக்கத்து வீட்டில் புதிதாக வந்திருந்த லதா அவளது பெற்றோர்களுடன் அடிக்கடி வெளியில் செல்வதை பார்த்த பின்பு தானும் அப்படி செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டது.
 

sudharavi

Administrator
Staff member
#5
அந்த குமரிக்கு புரியவில்லை தங்கள் வீட்டில் அது நடக்காது என்று. அப்பா செந்தாமரைக்கு சம்பளம் வரும் நாள் அவரே கடைக்கு சென்று கறி எடுத்து வருவார். அதை பார்த்ததுமே நாவூறும். அம்மா உற்சாகமாக அதை தானே பார்த்து பார்த்து சமைப்பார்.


எப்போது கறிக் குழம்பு கிடைக்கும் என்று காத்திருக்க, செல்வியை அழைத்து ஒரு கையை கொடுத்து சமைக்க சொல்வார். பின்னர் சமையல் முடிந்ததும் தாயும், தந்தையும் அமர்ந்து கறிக் குழம்பை பிள்ளைகளை பார்க்க வைத்துக் கொண்டு ரசித்து சுவைத்து உண்பர். இவர்களுக்கு செல்வி செய்திருந்த அந்த காயும் சோறும் மட்டுமே.


ஆரம்ப நாட்களில் எதிர்பார்த்து ஏமாந்து நொந்து போய் பின்னர் அறையை விட்டு வெளியே வருவதை தவிர்த்து விடுவாள். அதுமட்டுமல்லாது வீட்டில் எந்த வேலைகள் இருந்தாலும் வெளியாட்களை வைத்து செய்யாமல் குழந்தைகளை வைத்தே செய்ய சொல்வார்கள். தோட்ட வேலை உட்பட. அப்படி ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் போது லதா அவளை பரிதாபமாக பார்ப்பது போலிருந்தது.


அதன் பின்னர் நான் எனக்குள் முடங்கிக் கொள்ள ஆரம்பித்தாள். எனது பேச்சை முடக்கிக் கொண்டு வாழப் பழகிக் கொண்டேன். ஆனால் செல்வியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தது. அம்மா அதை கண்டு கொள்ளவில்லையா இல்லை அறியாமலே இருந்தாரா என்று தெரியவில்லை. ஒருநாள் அவள் தெருமுனையில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்த ஆட்டோக்காரருடன் ஓடி விட்டாள். பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை.


அதன் பின்னர் இவளின் வாழ்க்கை மேலும் நரகமானது. எனக்கு கிடைத்த ஒன்றிரண்டு சலுகைகைகள் கூட முற்றிலுமாக நின்று போனது. எதுவும் வேண்டாம் படிப்பை கொடுத்தால் போதும் என்று ஊமையானாள்.


இவளின் தாய், தந்தை இருவருமே சொல்லிக் கொள்ளும் அளவில் நல்ல வேலையில் இருந்தனர். ஆனால் அவர்கள் பிள்ளைகளிடம் கூட ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்று புரியவே இல்லை. சொந்தபந்தங்கள் என்று யாரும் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் ஒரு டம்ளர் தண்ணீருடன் அவர்களை அனுப்பி வைத்துவிடுவார்கள்.


நல்ல சம்பளம், தனி வீடு, மாடியில் இரு போர்ஷன்களாக கட்டி வாடகைக்கு விட்டு அதிலும் வருமானம் என்று அனைத்தும் இருந்தது. ஆனால் சந்தோஷம் மட்டுமில்லை. பிள்ளைகளை பார்க்க வைத்து உண்பது என்ன மனநிலை என்றே புரியவில்லை. இதோ வேலையிலிருந்து வந்து சமைத்துக் கொடுத்திருக்கிறேன். நீ சாப்பிட்டியா என்று கேட்க மனமில்லை அந்த தாய்க்கு என்று சலித்துக் கொண்டாள்.


இப்படியொரு சலிப்பான வாழ்க்கையை ரசிக்கும் படி மாற்றியவன் மாறன். அவன் நினைவுகள் எழும் போதே இதழில் மென்னகை வந்தமர்ந்து கொண்டது. தனது ரசனையும், அவனது ரசனைகளும் எப்பொழுதும் ஒத்துப் போகும். அதிலும் பாரதியின் பாடல்களைப் பற்றி இருவரும் பேசினால் நேரம் போவதே தெரியாது.


அவன் வந்த பிறகே வாழ்க்கையில் பல மாற்றங்கள். பார்க்கும் அனைத்திலும் மனம் லயித்துப் போனது. ஒவ்வொரு சிறிய விஷயம் கூட ஆச்சர்யப்பட வைத்தது. இதுவல்லவோ வாழக்கை என்று எண்ண வைத்தது.


அதிலும் பாரதியின் பாடலை அவன் பாடும் போது அந்த குரலில் தெரியும் உணர்வுகள் அப்படியே கட்டிப் போட்டுவிடும். எத்தனை நாள் அவனை பாட சொல்லிவிட்டு மெய் மறந்து அமர்ந்திருக்கிறாள்.


தனது வாழ்வை மட்டுமல்ல அவனது வாழ்வை புரட்டி போட்ட அந்த சம்பவம் நடப்பதற்கு முன் தினம் அவன் பாடிய அந்த வெண்ணிலா பாடல் இன்னமும் காதோரத்தில் இசைத்துக் கொண்டே இருக்கிறது. அவனது குரலில் அத்தனை குழைவு இருக்கும்.


பல நாட்கள் அவனை எப்படி கேலி செய்திருக்கிறேன். உன்னை மணந்து கொள்ளப் போகிறவள் அதிர்ஷ்டக்காரியாடா என்று. ஆனால் அனைத்தும் ஒரே நாளில் முடிந்து போனது தான் பரிதாபம்.


என்னுடனான நட்பு அவனது வாழ்க்கையை சீரழித்து விட்டது . அந்த மென்மையான மனம் படைத்தவன் வாழ்வில் சந்திக்காத சோதனையை சந்தித்து மொத்தமாக உடைந்து போனான். அதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன்.


தனது நினைவுகளில் அவள் மூழ்கி இருக்க, இரவு உணவு வாங்க வெளியே சென்று வந்த செழியன் தன்னரைக்குச் செல்லாது மாடிப்படியின் சந்து வழியே வீட்டின் புறம் சென்றான். ஏனோ அவன் மனம் அவள் அங்கு தான் இருப்பாள் என்று கூறியது.


அவன் நினைத்த மாதிரியே அங்கிருந்த கல்லில் வடித்த சிற்பம் போல அமர்ந்திருந்தாள். எட்டி நின்றே அவளை கவனிக்க ஆரம்பித்தான்.


நினைவு சுழலிலிருந்து மீண்டவளின் இதழ்கள் பாரதியின் பாடலை பாடத் தொடங்கியது.


நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்

வல்லமை தாராயோ

என்று பாடிக் கொண்டிருந்தவள் மெல்ல விசும்ப ஆரம்பித்தாள்.


“என்னால தான் மாறன்...எல்லாமே என்னால தான். நீங்க என்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் வந்து கொஞ்ச நாளிலேயே வசந்தத்தை காட்டிட்டு என்னாலையே எல்லாத்தையும் இழந்துடீங்களே” என்று முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.


அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் விழ, உடலும் மனமும் இறுக அவளை வெறித்தபடி நின்றான்.

பிரெண்ட்ஸ்...பிழைகளை பொறுத்துக் கொள்ளுங்கள்....
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#6
அத்தியாயம் – 3வழமை போல் அன்றும் மொட்டை மாடிக்கு நிம்மதியை தேடிச் சென்றவள் அங்கிருந்த இதமான அமைதியை அனுபவித்துக் கொண்டிருந்தாள். இங்கு நிற்கும் இந்த நேரம் மட்டுமே அவளின் மனம் அமைதி கொள்ளும்.

மற்ற நேரங்களில் அவளை பெற்றவளே விஷம் தோய்ந்த வார்த்தைகளால் கொன்று கூறு போடுவார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோ அவளை பார்வையாலேயே நோகடிப்பார். வேலை செய்யும் இடத்திலோ முதுகுக்கு பின் அவளை பற்றிய விமர்சனங்களை வைத்து சிரித்து மகிழ்வர்.

மொத்தத்தில் அந்த மொட்டை மாடி மட்டுமே அவளுக்கு துணை. அவளுடைய இந்த நிலைக்கு காரணம் ஆனதும் இந்த மாடியே தான் என்றாலும் அங்கிருக்கும் தனிமையும், சூழலும் நடந்த அனைத்தையும் மறக்கடிக்க செய்யும்.

தனது யோசனையில் மூழ்கி இருந்தவளுக்கு தன்னை யாரோ உற்று நோக்குவது போல் தோன்ற, மெல்ல விழிகளை திருப்பியவளின் பார்வையில் அவன் விழுந்தான். அவனை கண்ட அந்த நிமிடம் அவளது மனம் விதிர்விதிர்த்து போனது.

அவனது பார்வையோ அவளை கூர்மையாக ஆராய்ந்து கொண்டிருந்தது. ஒரு காலை மடக்கி சுவற்றின் மீது சாய்ந்து நின்றவனின் பார்வையில் அவள் மீதான மரியாதை துளி கூட இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவளோ சற்று நேரம் தன்னை மறந்து நின்றவள் சுதாரித்துக் கொண்டு “யார் நீங்க?” என்றாள் நிமிர்வுடன்.

அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன் “பரவாயில்லை நான் நினைச்சதை விட நல்லாவே இருக்க!” என்றான் ஏளனப் புன்னகையுடன்.

அவனது பேச்சில் கடுப்பானவள் “ஹலோ! யார் நீங்க?” என்றாள் சீற்றத்துடன்.

அவளை இகழ்ச்சியாக பார்த்து “நான் யாராக இருந்தால் என்ன? உனக்கு தேவை ஒரு ஆம்பிளை! இங்கே வரவங்களை வளைத்துப் பிடிக்கிறது தானே உன் வேலை” என்றான் கிண்டலாக.

அவனது வார்த்தையில் முகம் வெளுத்து இரத்தமிழந்து போனது. பேயை கண்டது போல் அவனைக் கண்டு கீழே ஓடினாள்.அவன் பேசிய வார்த்தைகள் அம்புகளாய் இதயத்தை துளைத்தெடுக்க, என்ன பேசி விட்டான்...யாரோ எவனோ என்னைப் பற்றி இப்படி அவதூறு பேச அவனுக்கு யார் தைரியம் கொடுத்தது? என்ன தெரியும் என்னைப் பற்றி? என்ற கோபம் எழுந்தது.மாடியிலிருந்து மூச்சிரைக்க வந்து நின்றவளை விநோதமாக பார்த்து “எதுக்கு இப்படி நடுக்கூடத்தில் நிற்கிற?” என்றார் எரிச்சலாக.அவருக்கு பதில் சொல்லாமல் “யார் அவன்? நம்ம வீட்டு மாடியில நிற்கிறான்?” என்றாள் அழுத்தமான குரலுடன்.“ஒ...பார்த்துட்டியா? மாடி போர்ஷனுக்கு குடி வந்திருக்கான்” என்றார் அசட்டையாக.அதைக் கேட்டதும் அதிர்ந்து போனவள் “ஏன்மா? என்னை கேட்காம எதுக்கு இந்த மாதிரி ஆளுக்கு வாடைகைக்கு விடுறீங்க?” என்றாள் உச்சபட்ச எரிச்சலுடன்.அவளது கேள்வி அவருக்கு கோபத்தை வரவழைக்க “எதுக்கு கேட்கணும்? இது என் கணவர் சம்பாதிச்ச சொத்து. அதோட உனக்கும் இப்படி ஆளுங்க வந்தா வசதி தானே” என்றார் விஷத்தை வார்த்தையில் தடவி.“அம்மா! எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். நீ தான் என்னை பெத்தியா? இல்ல எங்கிருந்தாவது எடுத்திட்டு வந்தியா?” என்றாள் கண்ணீருடன்.“இந்த வயத்தில் தான் சுமந்தேன்னு சொல்லவே அருவெறுப்பா இருக்கு” என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டார்.ஒரு குழந்தைக்கு தன்னை பெற்றவள் உன்னை சுமந்ததே பாவம் என்று சொல்லிக் கேட்பது பெருந்துயரத்தையும், பல நூறு கத்திகளால் கூறு போடும் வலியையும் கொடுக்கும். அதை அந்த நிமிடம் அனுபவித்துக் கொண்டிருந்தாள் சத்யா.அவளது கண்களில் வழியும் கண்ணீரைத் தவிர்த்து ஒரு சின்ன விசும்பலோ, செருமலோ அவளிடம் ஏற்படவில்லை. ஏற்கனவே இறுகி இரும்பாகி இருந்தவளின் இதயத்தை மீண்டும் அந்த வார்த்தைகள் காயப்படுத்தி இருந்தாலும், இதயம் உள்ளுக்குள் மூச்சு விட துடித்துக் கொண்டிருந்தது.சற்று நேரம் அப்படியே நின்றவளை மங்களத்தின் குரல் கலைத்தது.“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்க போற? ஆபிசுக்கு கிளம்ப வேண்டாம்? போய் சமைக்கிற வேலையை பாரு” என்றார் அதட்டலாக.
 

sudharavi

Administrator
Staff member
#7
அவரை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் இருந்ததென்ன என்று தெரியவில்லை. கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். மனமோ இனி மாடிக்கும் போக முடியாது. இந்த வீட்டில் தனக்கென்று இருந்த ஒரு இடமும் பறி போனது என்றெண்ணிக் கொண்டது.அந்த கடவுளுக்கு தன் மேல் ஏன் இத்தனை கோபம் என்று புரியவில்லை. வாழ்க்கையின் சுகமான பகுதி என்று ஒன்றிருக்கிறது என்று அறியாமலே வைத்திருக்கிறானே. ஒவ்வொரு நாளும் நரக வேதனை. எத்தனை விதமான வார்த்தைகள், எத்தனை கேவலமான பார்வைகளை சந்திக்க வைத்து முள் படுக்கையில் வைத்திருக்கிறாரே. போன ஜென்மத்தில் யாருக்கோ அத்தனை பாவங்களை இழைத்திருக்கிறேன் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள்.அந்நேரம் எங்கோ ஒலித்த பாடல் அவளது மனதின் கோபத்தையும், சோர்வையும் போக்கியது.எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ

அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடை பேரும் நேரம் வரும் போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்விரக்தியான சிரிப்போடு வேலைகளை முடித்துக் கொண்டு குளிக்க சென்றாள்.அவள் குளிக்க சென்றிருந்த நேரம் வாயில் மணி ஒலிக்க, வேகமாக சென்று கதவை திறந்த மங்களம் அங்கு நின்றவனை பார்த்ததும் இவன் ஏன் இங்கே வந்திருக்கான் என்று பார்த்தார்.அவரைப் பார்த்ததும் “இங்கே பக்கத்துல பால் எங்கே கிடைக்கும்? கடை எங்க இருக்கு?”“அடுத்த தெருவில் இருக்கு தம்பி. ஆனா இந்த நேரத்துக்கு கிடைக்காது. உங்களுக்கு காப்பி எதுவும் வேணுமா?” என்றார் கரிசனமாக.அவரை ஒரு மாதிரியாக பார்த்தவன் ‘என்ன இந்தம்மா பெத்த பொண்ணு கிட்ட விஷத்தை கக்குது. என் கிட்ட என்னமா கரிசனம் காட்டுது’ என்று நினைத்துக் கொண்டு “இல்ல பரவாயில்லை” என்று நகர்ந்தான்.“தம்பி இருங்க!” என்றவர் குளித்து முடித்து ஆபிசிற்கு கிளம்பியபடி வந்தவளை நிறுத்தி “தம்பிக்கு காப்பி போட்டு கொடு” என்றார்.அவர் அப்படி சொல்வார் என்று எதிர்பார்க்காதவன் “இல்ல வேண்டாம்” என்று அவசரமாக கூறினான்.அவளோ அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றவள் “உங்களுக்கு வேணும்னா உங்க டெனன்ட்டுக்கு நீங்க போட்டு கொடுங்க” என்று கடுப்படித்துவிட்டு வேகமாக அறைக்குள் சென்று விட்டாள்.அதில் அவனது முகம் கோபத்தை பூசிக் கொண்டது. அவரிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான்.மங்களமோ “என்னடி வாய் ஓவரா நீளுது?” என்று கத்திக் கொண்டிருந்தார்.அவரின் கத்தலை கண்டு கொள்ளாமல் தனது லஞ்ச் பாக்சை எடுத்து கைப்பையில் எடுத்து வைத்து விட்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.கேட்டைத் தாண்டி சென்றவளின் பார்வை மாடி ஜன்னலின் மீது படிந்து விலகியது. அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளும் அவளது விழிகளை உரசிச் சென்றது.அந்த ஒரு நிமிடம் அவன் கண்களில் அவள் பார்த்தது என்ன மாதிரியான உணர்வு என்று புரியவில்லை. நிச்சயமாக குரோதமோ, கோபமோ எதுவுமில்லை. ஒரு நிமிடம் பரிதாபமாக இருந்தது போலிருந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அப்படி அவன் பார்த்தானா என்று தோன்றும் அளவிற்கு இருந்தது.எதையும் நினையாமல் வேகமாக பஸ் ஸ்டாண்டை நோக்கிச் சென்றாள். அவனோ அவள் சென்றதும் சோபாவில் சென்று விழுந்தான். தலை வின்வினென்று போட்டது. அப்படியே தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டான்.தான் பேசிய வார்த்தைகளை எண்ணி அவன் மனம் தவித்துப் போனது. யாராவது அவனிடம் நீ ஒரு நாள் ஒரு பெண்ணிடம் இது போல பேசி வைப்பாய் என்று சொல்லி இருந்தால் அவர்களை அறைந்திருப்பான். ஆனால் இன்று அவள் கண்ணில் அந்த நிமிடம் வந்து போன வலியைக் கண்டு மனம் விண்டு போனது.சில சூழல்கள் மனிதரின் மனங்களை கூட மாற்றி விடுகிறது. எப்படி இருந்த நான் இன்று எந்த சூழலில் வந்து நிற்கிறேன். இதற்கு காரணமானவர்களை சும்மா விடக் கூடாது. அதற்கு முதலில் அவள் மனம் திறக்க வேண்டும். அன்று நடந்தது என்ன என்பதை அவள் சொல்ல வேண்டும்.சுற்றி இருப்பவர்கள் அனைவரும் தவறாக பேசும் போது அவள் ஏன் அமைதியாக அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அன்று என்ன நடந்தது? பெற்ற தாயே மகளை பழி சொல்லும் போது மற்றவர்கள் அதை ஒத்துக் கொள்ளத் தானே செய்வார்கள்.அவளை பேச வைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி அவளது காயத்தை கீறி விட வேண்டும். உண்மை வெளி வர வேண்டும் என்றால் அதற்கு சில வழி முறைகளை கையாள்வதில் தவறில்லை என்று எண்ணிக் கொண்டு முகத்தை கழுவச் சென்றான்.ஆபிசிற்கு சென்றவளுக்கு அன்று அங்கும் நேரம் சரியில்லை.“சத்யா! வேலையில் கவனமில்லேன்னா சொல்லிடு. சும்மா நானும் ஆபிசுக்கு வந்தேன்னு கழுத்தை அறுத்துகிட்டு” என்று மேனேஜர் கத்தினார்.“சாரி சார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனது டேபிளுக்கு சென்றாள்.அலுவலகத்திலும் அவளுக்கு நட்பு வட்டம் எதுவும் இல்லை. முதல் காரணம் அவளது முகத்தில் தெரிந்த இறுக்கம். அடுத்து சாதாரண ஆடைகளை அணிந்து செல்வது. இயல்பாகவே பெண்களுக்கு அடுத்தவரை பற்றி புறம் பேசுவது மிகவும் பிடித்த ஒன்று. அதிலும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை பார்த்து விட்டால், அவளைப் பற்றி அறிந்து கொள்ளாமலே திமிர் பிடித்தவள் என்று முத்திரை குத்தி விடுவார்கள். இங்கும் அதே தான் நடந்தது.சற்று நேரம் வரை பொறுமையாக இழுத்துப் பிடித்து அமர்ந்தவளுக்கு ஒரு காப்பி குடித்தால் தேவலாம் என்று தோன்ற காண்டீனிற்கு சென்றாள். அங்கு இவளுக்கு முன்பு இரு பெண்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அவர்களை கண்டு கொள்ளாமல் காப்பியை வாங்கிக் கொண்டு தனியாக ஒரு டேபிளில் அமர்ந்தாள்.அவள் வந்து தங்களை கண்டு கொள்ளாமல் அமர்ந்ததைப் பார்த்தவர்கள் “செம திமிர் பிடிச்சவ...நானும் இந்த கம்பெனிக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகுது. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசினதில்லை” என்றாள் ஒருத்தி.இன்னொருத்தியோ “நான் மூணு வருஷமா இருக்கேண்டி. என் முகத்தை கூட நிமிர்ந்து பார்த்ததில்லை அவ. அதோட அவ டிரெஸ்ஸை பார்த்தியா. இங்கே நல்லா தானே சம்பளம் வாங்குறா? ஆனா என்னவோ ஒண்ணுமே இல்லாதவ மாதிரி போட்டுக்கிட்டு வரா” என்றாள்.அவர்கள் பேசியது ஒவ்வொன்றும் அவள் காதுகளில் விழுந்தது. அவள் மனமோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டது. உங்களுக்கெல்லாம் நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது பெண்களே. என்னைப் போல ஒரு சூழ்நிலையில் வாழ்பவளுக்கு மட்டுமே அதன் அழுத்தம் புரியும். இதுவரை என் மனநிலை பிறழாமல் இருப்பதே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டு காண்டீனிலிருந்து வெளியேறினாள்.அன்றைய நாள் முழுவதும் வேலை அவளை மற்றதை நினைக்க விடவில்லை. மாலை கிளம்பி வீட்டுக்கு வந்து வழக்கம் போல அன்னைக்கு அனைத்தையும் செய்து கொடுத்து விட்டு தனது புகலிடமான தோட்டத்தில் சென்றமர்ந்தாள்.அந்த இருளும் அந்தகாரமும் அவள் மனதிலிருந்த அழுத்தத்தை போக்கியது. தனது சமயலறையில் இருந்து தோட்டத்தைப் பார்த்தவன் அவள் அங்கிருப்பதை கண்டதும் சட்டென்று தோன்றிய முடிவுடன் மெல்ல கீழே இறங்கி வந்தான். பின்புறம் செல்லும் வழியில் சென்றவன் ஹாலிலிருந்த ஜன்னல் வழியே மங்களம் என்ன செய்கிறார் என்று அறிந்து கொண்டான். அவரோ டிவி சீரியலில் மூழ்கி இருந்தார்.மெல்ல அவளிருந்த இடத்திற்கு அருகே சென்றவன் சற்று நேரம் அவளை பார்த்தபடியே நின்றிருந்தான். பின்னர் அவள் அமர்ந்திருந்த கல்லில் அமரவும், அவனை கவனித்தவள் துள்ளி எழுந்து நின்று கொண்டாள்.கண்களில் கோபத்தோடு “நீங்க எங்கே இங்கே வந்தீங்க?” என்றாள்.கைகள் இரெண்டையும் கல்லில் வைத்துக் கொண்டு சாய்ந்தமர்ந்தவன் “செம நடிப்பு! ஆஸ்கரே கொடுக்கலாம். முன்னே பின்னே எவன் பக்கத்திலும் உட்கார்ந்ததே இல்லையா?” என்றான் நக்கலாக.அவனது கேள்வி ஆத்திரத்தை தூண்ட “உங்க வீடு மாடியில இருக்கு. இங்கே வர அனுமதி இல்லை உங்களுக்கு” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.அவனோ அவளை ஆராயும் பார்வை பார்த்து “ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான். உன்னைப் பத்தி ஊருக்கே தெரிஞ்சிருந்தும் வெட்கமே இல்லாம வெளியில நடமாடுற பாரு. அந்த தைரியத்தை பாராட்டத் தான் வேணும்” என்றான் கிண்டலாக.இருகைகளையும் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தவள் “யார் நீ? என்ன நினைத்து என் கிட்ட இப்படி எல்லாம் பேசுறேன்னு தெரியல. ஆனா ஒன்னு வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்திட்டேன். நீ எதை நினைக்கிறியோ அது என் கிட்ட நடக்காது” என்றாள் அழுத்தமான குரலில்.“நான் இருக்கும் வீட்டில் இருந்தவனை மயக்கி பைத்தியமாக்கி விரட்டியது போல என்னையும் முயற்சி பண்ணேன். நான் மயங்குறேன்னான்னு பார்ப்போம்” என்றான் கிண்டலாக.அவன் சொன்னதும் முகம் இறுக “மாறனைப் பத்தி பேச உனக்குத் தகுதி இல்லை” என்று ஒற்றை விரலை காட்டி மிரட்டினாள்.பட்டென்று எழுந்து அவளது விரலைப் பற்றிக் கொண்டவன் மேலும் அருகே நெருங்கி “என் தகுதி என்னவென்று என்னிடம் நெருங்கி முயற்சி செய்து தான் பாரேன்” என்றான் கண்கள் பளபளக்க.அவன் அருகே நெருங்கியதும் உடல் வெடவெடக்க நடுக்கத்துடன் “ஏய்! தள்ளி நில்லு!” என்றாள்.இறுக்கமான முகத்துடன் “உன்னிடம் பழகிய பாவத்திற்கு அவனை பைத்தியமா சுத்த வைத்துவிட்டு குற்ற உணர்வே இல்லாமல் எப்படி வாழ முடியுது” என்றான் கடுமை கூடிய குரலில்.அவனை ஒரு தள்ளு தள்ளி விட்டு “உனக்கு என்ன தெரியும் மாறனைப் பத்தி? வேண்டாம்! நான் மறக்க நினைப்பதை ஞாபகப்படுத்தாதே” என்றாள் கண்கள் சிவக்க.அவனோ மெல்ல அவள் அருகே சென்றவன் இடையில் கையைக் கொடுத்து தன்னருகே இழுத்து “நீ மாறனிடம் காட்டிய நெருக்கம் என்னிடமும் காட்ட வேண்டும். எனக்கு நீ வேண்டும்” என்றான் அவள் முகம் பார்த்து.அவனது செயலில் அதிர்ந்து போனவள் தன்னை அறியாமல் அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள். அடுத்த நிமிடம் அவனை தள்ளி விட்டு வீட்டிற்குள் ஓடி இருந்தாள்.அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் “சாரி சத்யா” என்றுரைத்தது.
 

sudharavi

Administrator
Staff member
#8
அத்தியாயம் – 4வெயிலின் தாகம் அன்று அதிகரித்து உடலில் இருந்த சக்தி எல்லாம் உறிஞ்சி எடுத்தது. சாதரணமாகவே சட்டென்று சோர்ந்து விடும் உடல் வாகை கொண்டவளுக்கு, அன்றைய வெயிலின் தாக்கம் மயங்கி விழும் அளவிற்கு கொண்டு சென்றது. அதிலும் பேருந்தில் கூட்டத்தின் நடுவே நசுங்கி, மூச்சு விடப் போராடி இறங்கி தள்ளாடிய நடையுடன் வீடு வந்து சேர்ந்தாள்.வாயில் கேட்டின் கதவை திறக்கும் போதே அங்கு கிடந்த செருப்புகளை கண்டு அயர்ந்து போனாள். எத்தனை சோர்வு இருந்தாலும் அடுத்து வந்த இரு நாட்கள் விடுமுறை என்பதால் சற்று ஓய்வெடுக்கலாம் என்றெண்ணிக் கொண்டு வந்திருந்தாள். ஆனால் வாசலில் கிடந்த செருப்புகள் அதற்கு ஒரு முட்டுக்கட்டையைப் போட்டது.வீட்டின் கதவு விரிய திறந்திருக்க, பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடும் சத்தம் கேட்டது. மெல்ல செருப்புகளை கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை வரவேற்றது ஹாலில் அமர்ந்திருந்த ராதாவின் இகழ்ச்சியான பார்வை. அவளைப் பார்த்தும் வா என்று அழைக்காமல் அறைக்குள் நுழைய முயன்றவளை தடுத்து நிறுத்தியது அவளது குரல்.“நில்லு! அக்கான்னு கொஞ்சமாவது மரியாதை இருக்கா? வான்னு சொன்னா குறைஞ்சா போயிடுவ?” என்று கத்தினாள்.திரும்பி நின்று ஒரு பார்வை பார்த்தவள் “அம்மா கூப்பிட்டாங்கள்ள அது போதும்” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.அந்நேரம் அங்கே வந்த மங்களம் “எதுக்கு இப்போ நடுவீட்டில் நின்னு கத்திகிட்டு இருக்க? ஏற்கனவே உன் புள்ளைங்க நை-நைன்னு சத்தம் போட்டுட்டு இருக்குங்க. இதுல நீ வேற” என்று கூறி எரிச்சலோடு சோபாவில் அமர்ந்தார்.

“அம்மா! அவங்க உன் பேரப் பசங்க!”“எது! நான் ஊரை கூட்டி சாப்பாடு போட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு. கண்ட பயலோட ஓடிட்டு என் பேரப் பசங்கன்னு சொல்லாதே” என்று எகிறினார்.“நீ ஒழுங்கான அம்மாவா இருந்தா நான் ஏன் ஓடப் போறேன்” என்று கத்தினாள்.இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, முகத்தை கழுவி ஆடையை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சத்யா. அன்னைக்கும், தனக்கும் காப்பியை கலந்து கொண்டவள் அவரிடம் சென்று கொடுத்தாள். அதைப் பார்த்த ராதா “கொண்டா அந்த காப்பியை” என்று அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றாள்.அவளிடமிருந்து சற்றே நகர்ந்து கொண்டவள் “இது எனக்குப் போட்டது” என்றாள்.“அப்போ எனக்கும் என் பசங்களுக்கும் சாப்பாடு போட மாட்டீங்களா?” என்றாள் கோவமாக.மங்களம் பதில் சொல்லும் முன்னே “இதென்ன புதுசா கேட்கிற? உனக்கு இங்கே வந்தா எப்போதும் மாடியில தானே எல்லாமே. உனக்கு வேண்டியவங்க அங்கே இருக்காங்க போ” என்று கூறி விட்டு விடுவிடுவென்று தோட்டத்திற்கு சென்று விட்டாள்.அவள் சொன்னதை கேட்டு கொதித்து போன ராதா “அம்மா! அவ சொல்லிட்டு போறதை பாருங்க” என்றாள்.மங்களம் பேசும் முன் ராதாவின் பிள்ளை ஓடி வந்து அவளது கால்களைப் பற்றிக் கொண்டு “மா! பாட்டி கூப்பிட்டாங்க” என்றான்.அதைக் கேட்டதும் அவளை எரிப்பது போல் பார்த்து விட்டு “சீக்கிரம் இடத்தை காலி பண்ணு” என்றார்.


தோட்டத்தில் அமர்ந்திருப்பவளின் காதுகளிலும் அவர்கள் பேசியது விழ, தன்னை அறியாமல் அவளது இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது.
அவளது இதயத்திலிருந்து ரணம் மெல்ல குருதியை கசிய விட ஆரம்பித்தது. எப்படி சில மனிதர்களால் எதுவுமே நடக்காத மாதிரி நடந்து கொள்ள முடிகிறது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள். அன்றைய நிகழ்வுகள் கண் முன்னே படமாக ஓட, முகம் சொல்ல முடியாத வேதனையை பிரதிபலித்தது.பிள்ளையை அழைத்துக் கொண்டு மேலே சென்ற ராதாவை அன்போடு வரவேற்றார் சாவித்திரி. செழியன் இருக்கும் வீட்டின் எதிர் போர்ஷன் அவருடையது.“வா கண்ணு! நான் தான் உன்னை கூட்டிட்டு வர சொன்னேன்” என்று அவளிடமிருந்து பிள்ளையை வாங்கிக் கொண்டார்.சாவதானமாக உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டவள் “மா! காப்பி கொடுங்க. தலை வலிக்குது. அந்த சத்யா சனியன் காப்பி கூட கொடுக்க மாட்டேனுட்டா” என்றாள்.பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டே சமையலறைக்குள் சென்றவர் “நீ ஏண்டா கண்டவ கிட்ட எல்லாம் கேட்கிற. மேலே வர வேண்டியது தானே. உனக்காக போண்டா போட்டு சட்னி அரைச்சு வச்சிருக்கேன்” என்றவர் அவள் கையில் அதைக் கொடுத்தார்.அதைக் கண்டதும் கண்கள் மலர வாங்கிக் கொண்டவள் சாப்பிட்டுக் கொண்டே “உங்க அன்பை ஏன் மா யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க” என்றாள்.“விடு கண்ணு! அந்த கழிசடைகளைப் பத்தி நீ பேசாதே. ரெண்டு நாளு நிம்மதியா இங்கே இருந்திட்டு போ. போகும் போது தம்பிக்கு பலகாரம் எல்லாம் செஞ்சு தரேன்” என்றார்.
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#9
“இல்லம்மா அப்படி எல்லாம் அவளை நிம்மதியா விட முடியாது. என்னைக் கண்டாலே அவ பார்வையில ஒரு கிண்டல் தெரியுது. நான் புள்ள குட்டியோட ஒழுங்கா குடித்தனம் பண்ணிட்டு இருக்கேன். ஆனா இவ...சும்மா விட மாட்டேன் அவளை” என்றாள் கோபத்தோடு.“நிச்சயமா கண்ணு! இந்த வயசில் இத்தனை அகங்காரம் கூடாது. உனக்கு என்னைக்கும் நான் துணை இருக்கேன். பேரப் பிள்ளைகளை இங்கேயே விடு. அதுங்களுக்கு அங்கே ஒன்னும் கொடுக்க மாட்டாளுங்க” என்றார்.“ம்ம்..”என்றவள் காப்பியை குடித்துவிட்டு “நான் கீழே போறேன். இவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வச்சிடுங்க அம்மா” என்று விட்டு வெளியே வந்தாள். அந்நேரம் தன் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த செழியன் ராதாவை பார்க்க, அவளும் இவனைப் பார்த்து விட்டு ‘புதுசா குடி வந்திருக்கீங்களா?” என்றாள்.“ம்ம்..ஆமா” என்றான்.“நான் உங்க ஓனர் பொண்ணு” என்றாள்.அவள் சொன்னதும் படியில் இறங்கிக் கொண்டிருந்தவனின் கால்கள் ஒரு நிமிடம் தயங்கி பின் நிதானித்தது.அவன் மனம் கணக்கு போட்டது. இவள் தான் மூத்தவள் போல. ஆட்டோகாரனுடன் ஓடியதாக கூறியது இவள் தான் போல என்றெண்ணிக் கொண்டான். மிக உரிமையாக அவள் இங்கு வந்திருப்பதை வைத்து மங்களம் அவளை சேர்த்துக் கொண்டார் என்றெண்ணினான்.அவன் வெளியே செல்ல, வீட்டிற்குள் நுழைந்த ராதா அன்னையின் முன் சென்று நின்றாள்.“மாடியில புது குடித்தனம் வந்திருக்காங்களா?”“ஆமாம்” என்றதுடன் முடித்துக் கொண்டார்.

“அவனுக்கு குடும்பம் இருக்கா?”“இல்ல தனியா தான் இருக்கான்”.“ஏன்மா நடந்தது எல்லாம் மறந்து போச்சா? மறுபடியும் இன்னொரு அசிங்கம் நடக்கணுமா?” என்று கத்தினாள்.அந்நேரம் இரவு உணவிற்கு தயார் செய்ய உள்ளே வந்தவளின் காதில் அந்த வார்த்தைகள் விழுந்தது. எப்போதும் போல துடைத்து வைத்த முகத்துடனே சமயலறைக்கு சென்றாள்.“இங்கே பாரு என் வீடு இதை யாருக்கு விடணும்னு முடிவு செய்ய வேண்டியது நான் தான்”.“மா! ஏற்கனவே நம்ம வீடு நாறி போயிருக்கு. இதுல இப்படி ஒருத்தனை மறுபடியும் குடி வச்சு அசிங்கப்படனுமா?”அனைத்தையும் கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டு இட்லி பானையை எடுத்து தட்டுகளில் எண்ணை தடவி, மாவை ஊற்றி வைத்துவிட்டு, மற்றொரு குக்கரில் சாம்பார் வைப்பதற்கு பருப்பை எடுத்து போட்டு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைத்துவிட்டு காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். ராதாவின் ஆட்டத்துக்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தவளைக் கண்டு அவளுக்கு கொதித்தது.அன்னையும் தன்னுடன் சேர்ந்து ஆடுவார் என்று எதிர்பார்த்தவளுக்கு அது நடக்காமல் போனதில் மேலும் கோபம் எழ, வேகமாக சமயலறைக்கு சென்று அவளது கையைப் பற்றி இழுத்து வந்து ஹாலில் நிறுத்தினாள்.அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காது தனது அழுத்தமான பாவனையுடன் நின்றவளைக் கண்டு ராதாவிற்கு உள்ளம் எரிந்தது.“மா! இவளால நாம பட்ட அசிங்கம் போதாதா? இன்னும் எதுக்கு ஒத்த ஆம்பளையை பார்த்து இங்கே குடி வச்சிருக்கீங்க?” என்றாள்.ராதாவால் தனது அன்றாட வேலைகள் தடைபட்டதில் கடுப்பில் இருந்தவர் அவளின் கேள்வியில் மேலும் எரிச்சலடைந்து “உன்னை மாதிரி எவன் கூடவாவது ஓடி போய் தொலைய மாட்டாளான்னு தான் குடி வச்சு பார்க்கிறேன்” என்று விட்டார்.இந்த பதிலை எதிர்பார்க்காதவள் “மா! அவளும் நானும் ஒண்ணா? நான் விரும்பினவன் கூட ஓடுனேன். அவன் கூட தான் வாழ்ந்து கிட்டு இருக்கேன். ஆனா இவ...அப்பா உயிரையே வாங்கிட்டு நிற்கிறாளே” என்றாள் ஆங்காரத்துடன்.இருவரையும் இறுகிய முகத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று எதிரே நின்றவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவளின் அழுத்தம் ராதாவிற்கு ஒருவித பயத்தை கொடுத்தது. ஆனால் அதையும் மீறி அந்த வீட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எல்லாவற்றையும் பேசி விட துடித்தாள்.மங்களமும் சத்யா ஏதாவது பேசுவாள் என்று பார்க்க அவளோ “முடிஞ்சுதா! நான் போய் சாம்பார் வைக்கணும்” என்று கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.கடைக்கு சென்று வந்தவனின் பார்வையில் அங்கு நடந்தவைகள் அனைத்தும் பட, அவளின் அழுத்தத்தையும் மனம் குறித்துக் கொண்டது. இந்த அழுத்தம் அவளுக்கு நல்லதல்ல. அவளை சுற்றி ஓநாய் கூட்டம் போல அனைவரும் கூடி கடித்து குதறிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் மீறி தனது உணர்வுகளை எந்த இடத்திலும் வெளிப்படுத்தாது தனக்குள்ளேயே முடங்கிக் கொண்டிருப்பவளை அதிலிருந்து வெளியில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டே படியருகே சென்றவன் அங்கிருந்தவரை பார்த்து ஒதுங்கி நின்றான்.அவரோ அவனைப் பார்க்காது “ராதா கண்ணு! நேரமாச்சு சாப்பிட வரலையா?” என்று சத்தமாக அழைத்தார்.அதுவரை ஆடிக் கொண்டிருந்தவள் அவரது குரல் கேட்டதும் “உன்னை காலையில வந்து பார்த்துகிறேன்” என்று கூறிவிட்டு வெளியில் வந்து “வந்துட்டேன் மா..வாங்க போவோம்” என்று அவரை அழைத்துக் கொண்டு மேலே சென்றாள்.அவர்கள் இருவரும் பேசிச் செல்வதை பார்த்தவனுக்கு குழப்பம் எழுந்தது. தன்னைப் போல் எதிர் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் தானே அவர். ஓனரின் பெண் ஏன் அவர் வீட்டில் சாப்பிட வேண்டும் என்கிற பல கேள்விகள் தலையை சுத்த, மெல்ல தோட்டத்திற்கு சென்று முதல் நாள் போல ஓரமாக நின்று கொண்டான்.அன்னைக்கு சாப்பாட்டை எடுத்துக் கொடுத்து விட்டு வந்து தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டாள். இரவின் குளுமையை மீறி, மனதின் புழுக்கம் அதிகமாக இருந்தது. அதிலும் ராதா பேசிச் சென்றது இதயத்தை குத்தூசி கொண்டு கிழித்திருந்தது. எத்தனை நாட்கள் இப்படி அடுத்தவரிடம் பேச்சு வாங்கியே காலத்தை கழிப்பது? இதற்க்கான விடை என்ன என்று அவளுக்கு புரியவில்லை?தன் மனதை, காயத்தை தன் பக்க நியாயத்தை புரிந்து கொள்ள எவருமில்லை. பிறந்ததிலிருந்து எதையுமே அனுபவித்தறியாத தனக்கு மாறன் நல்ல நண்பனாக அனைத்தையும் காட்டினான். அவனுடனான நாட்கள் அவள் வாழ்வின் வசந்தம்.எத்தனை மென்மையான பேச்சு அவனது. அவனது செயல்களில் அனைத்திலும் ஒரு ரசனை இருக்கும். வாழ்க்கையை ரசிக்க அவனிடம் தான் கற்றுக் கொண்டாள்.அவனது குரலில் பாரதியின் பாடல்களை ரசித்தது என்று ஒவ்வொன்று கண்முன்னே வந்து போனது.காக்கை சிறகினிலே நந்தலாலா

நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலாதன்னை மீறி பாடலை மெலிதாகப் பாட, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களும் கலங்கி இருந்தது. அவனது காதிலும் மாறன் அந்தப் பாடலை பாடுவது கேட்டது.
 

sudharavi

Administrator
Staff member
#10
அத்தியாயம் – 5

இரு நாட்கள் சூறாவளி வீசி ஓய்ந்தது போல வீடு அமைதியாக இருந்தது. விவரம் புரிந்த நாளில் இருந்து தான் தங்கி இருக்கும் ஒரு இடமாக மட்டுமே இந்த வீட்டைப் பார்த்திருக்கிறாள். வீடென்பது பல அழகான நினைவுகளையும், மனிதர்களிடையே அன்பையும், அரவணைப்பையும் கொடுக்க வேண்டும்.வெறும் கல்லையும், மண்ணையும் கொண்ட கட்டிடமாக மட்டுமே இருந்த இந்த வீட்டில் தனக்கென்று எந்த நினைவுகளும் இல்லை. அவளுக்கு இந்த வீடு கொடுத்ததெல்லாம் அவமானங்களும், ரணங்கள் மட்டுமே.செழியன் வந்ததில் இருந்து மாடிக்கு செல்வதும் நின்று போனது. தன் மேல் எந்த சாக்கை வைத்தாவது விழுந்து பிடுங்க தயாராக இருக்கும் அன்னைக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று தோட்டத்திலேயே முடங்கி போனாள்.அங்கிருக்கும் மரங்களையும், செடிகளையும் கேட்டால் அவை சொல்லும் அவளது சோகத்தை. தன் மனதிருப்பதை அவற்றிடம் மட்டுமே உணர்த்திக் கொண்டிருக்கிறாள். அந்த தோட்டமும் இல்லை என்றால் அவள் என்றோ பைத்தியகாரியாக சுற்றித் திரிந்திருப்பாள்.காலை வேலைகளை முடித்துக் கொண்டு தோட்டத்தில் துணிகளை காயப்போட்டு விட்டு திரும்பியவளின் பார்வையில் மாடி சமயலறையில் இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனைக் கண்டதும் முகம் ஒரு நிமிடம் இறுகி பின் பழைய நிலைக்குத் திரும்பியது.அன்று ஏனோ மங்களம் மிக அமைதியாக இருந்தார். அவர் அப்படி இருப்பது மிக அபூர்வம்.அந்த நாட்களில் சத்யாவின் மனம் சற்று உற்சாகமாக காணப்படும். அன்றும் அவ்வாறே தன் நிலையை மறந்து முகம் இறுக்கம் குறைந்து நிதானமாக சாப்பிட்டு நிம்மதியாக கிளம்பினாள்.ஆபிஸ் சென்று வேலையில் மூழ்கியவளை பியூன் வந்து சொன்ன செய்தி அதிசயிக்க வைத்தது. அவளை யாரோ பார்க்க வந்திருப்பதாக கூறினார். அனைத்தும் இருந்தும் அனாதையாக இருப்பவளுக்கு ஆபிசில் வந்து சந்திக்கும் அளவுக்கு யார் இருக்கிறார்கள் என்கிற யோசனையுடன் அவரின் பின்னே நடந்தாள்.அங்கே சென்று தனக்காக காத்திருந்தவனை பார்த்ததும் முகம் கடுமையாக மாறியது. எதுவும் பேசாமல் அவன் முன்னே சென்றவள் “யார் நீங்க? எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கீங்க?” என்றாள் எரிச்சலாக.“சத்யா! நாம இப்படியே பேசிட முடியாது. வெளில போய் பேசலாமா?”அவனை முறைத்தவள் “யாருங்க நீங்க? எங்க வீட்டில் குடி இருக்கீங்க. வீட்டு வாடகை பத்தி பேசணும்னா நீங்க அதை எங்கம்மா கிட்ட தான் பேசணும். தயவு செஞ்சு கிளம்புறீங்களா?” என்றாள் எரிச்சலாக.அவளை ஆழ்ந்து பார்த்தவன் “அதை தவிர நம்ம ரெண்டு பேருக்கும் எந்த தொடர்பும் இல்லையா சத்யா?” என்றவனை முறைத்து “இங்கே பாருங்க ரொம்ப தப்பா பேசிட்டு இருக்கீங்க. சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க” என்றாள் கோபமாக.நீண்ட மூச்சை இழுத்து விட்டவன் “ஒருவனை அசிங்கப்படுத்தி அவன் வாழ்க்கையை வீணாக்கிய உன் கிட்ட இருந்து வேற எதை எதிர்பார்க்க முடியும்” என்றான் விஷம் தோய்ந்த வார்த்தைகளால்.அந்த வார்த்தைகள் அவளது உடலை ஆட்டம் காண செய்ய, உடலில் இருந்த சக்தி எல்லாம் வடிந்தது போல் தோன்ற கண்கள் அதிர்ச்சியையும், கண்ணீரையும் வெளிப்படுத்தியது.“என்ன பார்க்கிற? உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கும் என்று நினைச்சு பேச வந்தேன் பாரு” என்று காய்ந்தான்.
 

sudharavi

Administrator
Staff member
#11
அவன் பேசியதெல்லாம் காதில் சென்றடையாமல் “நீங்க..உங்களுக்கு எப்படி?” என்று தயங்கினாள்.அவளை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு “அது தான் ஊருக்கே தெரியுதே. எனக்கு தெரிஞ்சதில் என்ன அதிசயம்?” என்றான்.அதிர்ச்சியில் அமர்ந்திருந்தவள் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “மா...மாறனை உங்களுக்கு தெரியுமா?” என்றாள் கலங்கிய கண்களுடன்.அவளை திரும்பி பார்த்து “இதை இங்கே பேசணுமா? போறவன் வரவன் எல்லாம் ஒரு மாதிரியா பார்த்திட்டு போறான்”.“இல்ல நான் போய் சொல்லிட்டு வரேன். நீங்க வெளில வெயிட் பண்ணுங்க” என்றாள்.“ம்ம்..” என்று விட்டு அங்கிருந்து வெளியேறினான்.ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் வெளியே வர, இருவரும் நடந்தே பக்கத்திலிருந்து ஹோட்டலுக்கு சென்றார்கள்.எதிரே அமர்ந்தவர்கள் சற்று நேரம் வரை பேசாமல் சூழலை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அவளுக்கோ அவனுக்கு மாறனை எப்படி தெரியும் என்று கேட்டுவிட ஆவல். ஆனால் அதைக் கேட்டு அதன் பின்னே உள்ளல கதைகளை எப்படி பேசுவது என்று தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.அவளாக பேசப் போவதில்லை என்பதை உணர்ந்தவன் “உன்னைப் பற்றி செவிவழி செய்திகளை கேள்வி பட்டபோது ஒரு பெண் இப்படி இருப்பாளா என்று தான் நினைத்தேன். ஆனால் நேரே பார்க்கும் போது நான் கேள்வி பட்டதில் தவறில்லைன்னு தோணுது” என்றான் தண்ணீரை அருந்தியபடி.அவன் பேசியதற்கு மறுப்பேதும் சொல்லாமல் கைகளைப் பிசைந்தபடி “உங்களுக்கு மாறனை எப்படி தெரியும்?” என்றாள்.அவளை கூர்ந்து பார்த்தவன் “உனக்கு வெட்கம் மானம் சூடு சுரணை எதுவுமே இல்லையா? அதெப்படி செய்றது எல்லாம் செஞ்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி அவனை பத்தி பேசுற?”அவனை நிமிர்ந்து பார்த்தவள் அதுவரை இருந்த கலக்கம் எல்லாம் மறைய “நீங்க இதை தான் பேசப் போறீங்கன்னா நான் கிளம்புறேன்” என்றாள்.அவளின் அந்த செயலில் சற்று சுதாரித்துக் கொண்டவன் “சரி உட்கார்...இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை” என்றான் எரிச்சலாக.மாறனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் அவளை அமர வைத்தது. அவன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.லேசாக தொண்டையை செருமி அவளை நிதானத்திற்கு கொண்டு வந்தவன் “மாறனுக்கும் உனக்கும் உள்ள உறவுக்கு என்ன பேர்?” என்றான்.“அது தான் ஊர் உலகமே ஒரு பெயர் வச்சிருக்கே. அதை தெரிஞ்சுகிட்டு தானே வந்திருக்கீங்க”.“நான் அதை கேட்கல. நீ சொல்லு”.“நான் மாறனை பற்றி பேசணும்னா உங்களுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்று எனக்கு தெரியனும்” என்றாள் அழுத்தமாக.“அவன் என் நண்பனோட தம்பி. அவன் மூலம் தான் உன்னைப் பற்றி தெரிந்தது” என்றான்.சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.“அவர் எப்படி இருக்கார்? எதுவும் பிரச்சனை இல்லையே?” என்றாள் தவிப்புடன்.அவளை கூர்ந்து பார்த்தவன் “எப்படி நல்லா இருக்க முடியும்? அவன் எவ்வளவு மென்மையானவன் தெரியுமா? அப்படிப்பட்டவனுக்கு நடந்த கொடுமை அவனை எப்படி நல்லா வச்சிருக்கும்? அதற்கு காரணமானவ நீ எப்போதும் போல நல்லா இருக்க” என்றான் கோபத்தோடு.மௌனமாக தலையைக் குனிந்து கொண்டவள் “ஆமாம் என்னால தான் அவனுக்கு இந்த நிலைமை. ஆனா எனக்கு இதை எப்படி சரி பண்றதுன்னு தெரியல” என்றவளின் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் துளிகள் மேஜையில் சிந்தியது.“அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு. அப்போ தான் அவனை அதிலிருந்து வெளில கொண்டு வர முடியும்”.பட்டென்று நிமிர்ந்தவள் “அதை கேட்காதீங்க...எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க. மாறனை பார்க்க உதவி பண்ணுங்க” என்றாள் அழுகையுடன் கூடிய குரலில்.கடுமையான முகத்துடன் “உன்னை அவன் அருகில் விடவே கூடாதுன்னு அவன் அண்ணன் கோபமா இருக்கான். என்னால அவன் கிட்ட பேச முடியாது” என்றான்.“ப்ளீஸ்! எப்படியாவது அவர் கிட்ட கேட்டு சொல்லுங்க” என்று கை கூப்பினாள்.“நான் அவன் கிட்ட பேசணும்னா அன்னைக்கு என்ன நடந்தது என்று தெரியனும். அதை நீ சொன்னா தான் என்னால பேச முடியும்” என்றான்.சற்று நேரம் தலையை குனிந்து அமர்ந்திருந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு “அவன் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும். என்னால எதையும் யார் கிட்டேயும் சொல்ல முடியாது” என்று கூறி விட்டு விடுவிடுவென்று எழுந்து சென்று விட்டாள்.அவள் அப்படி செய்வாள் என்று அறியாதவன் ஒரு நிமிடம் விக்கித்து அமர்ந்து விட்டான்.
 

sudharavi

Administrator
Staff member
#12
அத்தியாயம் – 6

ஆபிசில் சென்றமர்ந்த பின்பும் அவன் பேசிய வார்த்தைகளை எண்ணி மனம் குமைந்து போனாள். யாரோ ஒரு மூன்றாமவன் வந்து இழிவாக பேசும் அளவிற்கா தன் நிலைமை இருக்கிறது என்றெண்ணி கண்களை கரித்துக் கொண்டு வந்தது.அவனது வார்த்தைகளில் இருத்த வீரியம் இதயத்தை கீறி கூறு போட்டது. மாறனுக்கும் தனக்குமான உறவை ஏன் அனைவருமே இவ்வளவு கொச்சைபடுத்துகிறார்கள். அவனது இன்றைய நிலைக்கு தான் தான் காரணம் என்றாலும், தனக்கு அவன் மீதான அந்த அன்பு எப்பேற்பட்டது. அதை எப்படி அனைவருக்கும் புரிய வைப்பது.அவன் பேசிய வார்த்தைகளை எண்ணி எண்ணி அழுகை பொங்கி வர, வாஷ்ரூமிற்குள் சென்று அழுது தீர்த்து விட்டு முகத்தை திருத்திக் கொண்டு வந்தமர்ந்தாள். என்றுமில்லாத சோர்வு மனதை அழுத்தியது. பல்லக் கடித்துக் கொண்டு அன்றைய வேலைகளை முடித்தவள் மாலை வீட்டிற்கு சென்றாள்.செழியனோ அவளை காயப்படுத்தி பேசி விட்டு மனதிற்குள் நொந்து போய் அமர்ந்திருந்தான். ஆஅனால் அவள் மனம் திறக்க வேண்டும் என்றால் இதை தவிர வேறுவழியில்லை என்று புரிந்தது. அவளின் வரவிற்காக ஜன்னலோரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். கேட்டை திறந்து கொண்டு வந்தவளின் முகத்தில் தெரிந்த சோர்வும், வேதனையும் அவனையும் தாக்கியது.அவளது இந்த துயரம் மறைய வேண்டும் என்றால் நிச்சயம் அவள் நடந்ததை சொல்ல வேண்டும். அதற்க்கு தான் அதிரடியாக நடந்து கொண்டால் மட்டுமே அவள் வாய் திறப்பாள் என்று முடிவு செய்து கொண்டு, இரவு அவள் தோட்டத்திற்கு வரும் நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.அவள் வீட்டினுள் நுழைந்ததுமே காலையில் இருந்த அமைதியை விட்டு “சனியனே! வரும் போதே விடியா மூஞ்சி மாதிரி வரியே...சீக்கிரம் போய் கொஞ்சம் பக்கோடா போட்டு, காப்பியோட கொண்டு வா” என்றார் மங்களம்.சோர்வாக பையை மேஜை மேல் வைத்துவிட்டு, அவர் கேட்டதை செய்து கொடுத்த பின்னரே அறைக்குள் சென்றாள். அப்படியே படுத்து உறங்கலாமா என்று யோசித்தவளுக்கு, உறக்கம் கூட மறந்து போய் வருஷமாகிறது என்று தோன்றியது. இரவெல்லாம் ஒரு நிமிடம் கூட கண் மூடாமல் விட்டத்தை பார்த்த வண்ணம் படுத்திருக்கிறாள். தான் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரமாக மாறிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.சட்டென்று மூச்சு விட முடியாமல் எழுந்தவள் முகம் கழுவி வந்து காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றாள். மெல்லிய காற்று அவளுடலை தீண்டிச் செல்ல, அவளது மனமும் பழைய நினைவுகளைத் தேடி ஓடியது.முகம் தன்னையறியாமல் இதத்தை பூசிக் கொண்டது. முதன் முதலாக அவனை மாடியில் தான் சந்தித்தாள். அதிக உயரமில்லாமலும், மிக மெல்லிய உடல்வாகு கொண்டவனாக நின்று கொண்டிருந்தவனின் முகத்தில் அத்தனை மென்மை. தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் தெரிந்த கள்ளம் கபடமில்லாத சிரிப்பு இன்றும் மனதிற்கு இதமளிக்கிறது.“ஹாய் நான் மாறன். புதுசா குடி வந்திருக்கேன்” என்றவனின் இதழ்களில் மெல்லிய சிரிப்பு.தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, சிறிதும் புதியவரிடம் பேசும் தயக்கமில்லாமல் தனது எண்ணங்களை, ரசனைகளை அவன் பகிர்ந்து கொண்ட விதம் முதன் முதலாக தன்னை மறந்து குடும்ப சூழலை மறந்து மகிழ்வாக இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் மாடியில் பேசிக் கொண்டிருப்பது என்று என்னை கூட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தான். ஆனால் அவனுக்கு நான் செஞ்சது என்ன? என்று எண்ணியவளுக்கு முகம் சோபை இழந்து போனது.கையிருந்த காப்பி ஆறி போனதை கொட்டிவிட்டு உள்ளே எழுந்து சென்றாள். அதற்கடுத்த வேலைகள் அவளை இழுத்துக் கொள்ள, இரவிற்கான உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.மங்களம் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒலிக்கும் பாடல் அவளது கண்ணீரை தூண்டி விட்டது.எங்கிருந்தோ வந்தான் இடைசாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்...தனது அத்தனை துன்பங்களையும் தீர்த்தவனுக்கு நான் என்ன செய்து வைத்திருக்கிறேன். ஆண்டவா ஏன் என்னை இப்படியொரு நிலையில் வைத்திருக்கிறாய்? என்று மேடையின் ஓரம் வாய் மூடி அழுது விட்டாள்.அதற்குள் மங்களம் அழைத்து விட, கண்களைத் துடைத்துக் கொண்டு அவருக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்துவிட்டு தோட்டத்திற்கு ஓடி விட்டாள். கல்லில் அமர்ந்தவளின் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. அவளுக்காகவே காத்திருந்தவன் மெல்ல அருகில் நெருங்கி இருந்தான்.அவனைக் கண்டதும் அஞ்சி நடுங்கி எழுந்தவள் “ஏன் என்னை இப்படி படுத்துறீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்” என்றாள் கண்ணீருடன்.அவளது கையைப் பற்றி தன்னருகே இழுத்தவன் “உன்னால எப்படிடி கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் இருக்க முடியுது. ஒருத்தனை பைத்தியமா சுத்த விட்டுட்டு எப்படி இருக்க முடியுது?” என்றான் சீற்றத்துடன்.
 

sudharavi

Administrator
Staff member
#13
அவன் கைகளில் இருப்பதை மறந்து விழிகளில் அதிர்ச்சியுடன் வாயில் கை வைத்தவள் “மாறனுக்கு பைத்தியமா? என்ன..என்ன சொல்றீங்க?” என்றாள் கண்ணீர் வழிந்தோட.ஏண்டி? ஏன் அப்படி பண்ணின? அவன் என்ன செஞ்சான் உனக்கு?” என்றான் ஆங்காரத்துடன்.“இல்ல நீங்க பொய் சொல்றீங்க....மாறன் நிச்சயமா நல்லா இருப்பான்” என்றாள் கதறலுடன்.அவளது முழங்கையை இறுகப் பற்றி தன்னருகே இழுத்து “இதை பாரு” என்று தனது மொபைலில் ஒரு காட்சியை ஓட விட்டான்.அதில் மாறன் தலை எல்லாம் ஜடை பிடித்துப் போய் சட்டை எல்லாம் கிழித்துக் கொண்டு சுவரெல்லாம் சத்யா சத்யா என்று எழுதிக் கொண்டிருந்தான். சற்று நேரம் விட்டத்தை வெறிப்பதும், முகத்தை மூடி அழுவதும் “நாங்க அப்படி பழகல என்னை விடுங்க விடுங்க” என்று கதறி அழவும் செய்தான்.அதை பார்த்ததும் அதிர்ந்து செழியனின் முகத்தைப் பார்த்தவளின் கண்கள் தானாக கண்ணீரை பொழிய, “ஹையோ!” என்று முகத்தை மூடிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.“நீங்க இங்கே வந்திருக்கவே கூடாது மாறன். என்னை சந்திச்சிருக்கவே கூடாது. என்னால தான் எல்லாமே என்னால தான்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.அவனோ அவளை விடாமல் தூக்கி நிறுத்தி “இப்போ உனக்கு சந்தோஷமா? பார்த்தியா எப்படி இருந்தவன் உன்னால சட்டையை கிழிச்சுகிட்டு பைத்தியமா சுத்துறான். நீ எல்லாம் என்ன மனுஷிடி” என்று கீழே தள்ளி விட்டான்.“நீங்க சொல்றதெல்லாம் தப்பே இல்ல. என்னால தான் மாறனுக்கு இந்த கதி. எப்படி இருந்தவர் இந்த நிலைமையில் இருக்காரே” என்று பொங்கி அழுதாள்.அவள் முன்னே குனிந்து “அவன் நல்லா ஆகணும்னா அது உன் கையில் தாண்டி இருக்கு. நீ அன்னைக்கு என்ன நடந்தது என்று சொன்னா அவனை பழைய நிலைக்கு கொண்டு வந்துடலாம்” என்றான் முறைத்தபடி.அதுவரை கதறி அழுது கொண்டிருந்தவளின் அழுகை சுவிட்ச் போட்டது போல நின்று போனது.அவன் முன்னே கையெடுத்து கும்பிட்டவள் “எனக்கு மாறன் பழைய நிலைக்கு திரும்பனும். ஆனா என்னால நடந்த எதையும் யார் கிட்டேயும் சொல்ல முடியாது” என்றாள்.அவனுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது. அவளது கையைப் பற்றி முறுக்கி “உனக்கு மனசுன்னு ஒன்னு இருக்கா சொல்லு? உன் கண் முன்னாடியே எப்படி இருந்தவன் இன்னைக்கு இந்த நிலைமைக்கு மாறி இருக்கான். அதுக்கு காரணம் நீ. உன்னுடைய நலனில் அக்கறை உள்ளவனா இருந்தவனுக்கு இந்த நிலைமை வரும் போதும் நீ வாயை திறக்க மாட்டேன்னு சொன்னா நீ எல்லாம் உயிர் வாழறதே வேஸ்ட்” என்றான் ஆத்திரத்துடன்.கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீருடன் ‘ஆமாம் நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான். நானெல்லாம் உயிர் வாழறதே வேஸ்ட் தான். ஆனா மாறன் வாழனுங்க. எப்படியாவது அவனை சரி பண்ணிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள்.அவளை பார்த்து முகத்தை சுழித்தவன் “அப்போ நீ வாயைத் திறக்க போறதில்லை. உனக்கு உன் வாழ்க்கை உன் சுயநலம் தான் முக்கியம்” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.அவளோ அவன் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் “நீங்க என்ன வேணா சொல்லுங்க. ஆனா மாறனை எப்படியாவது சரி பண்ணிடுங்க. அதே மாதிரி நான் ஒரே ஒரு தடவை அவனை பார்க்கணும். ப்ளீஸ்” என்றாள் அழுகையுடன்.“அடி செருப்பால! இது வரை செஞ்சது போதாதுன்னு அவனை இன்னும் சித்ரவதை செய்ய நேரா பார்க்கனுமா?” என்றான் ஆங்காரத்துடன்.சட்டென்று அவன் கால்களை பற்றிக் கொண்டவள் “ப்ளீஸ்! உங்க கிட்ட கெஞ்சி கேட்கிறேன். அவனை பார்க்க மட்டும் அனுமதிங்க” என்றாள்.“முடியாது! நீ நடந்ததை சொல்றேன்னு சொல்லு...நான் ஏற்பாடு பண்றேன்”.அவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்னை விட நீங்க உங்க தம்பி மேல பாசம் வச்சிருப்பீங்கன்னு தெரியும் செழியன். நான் உங்களை முதல் நாள் பார்த்ததுமே நீங்க யார் என்று புரிந்து கொண்டேன். தயவு செய்து என் கோரிக்கையை நிறைவேற்றி கொடுங்க” என்றாள் கெஞ்சலாக.“சோ நான் யாருன்னு தெரிஞ்சும் உண்மையை சொல்லாம மறைக்கிற” என்று முறைத்தான்.அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனது பாரமானது. உங்களை இப்படி பட்ட சூழலிலா நான் பார்க்கணும் இளா. மாறன் உங்களை பற்றி சொல்லி உங்கள் மீதான அபிமானத்தை மனசுக்குள்ள வளர்த்து வச்சிருக்கேன். நீங்களும் நானும் சந்திக்கும் சூழல் எப்படி இருக்கணும்னு எப்படி எல்லாம் கனவு கண்டேன் ஆனா இன்னைக்கு நீங்களே என்னை மாறனோட இணைத்து பேசுவதை கேட்கும் சூழலில் நிற்கிறேன்.என் வாழ்க்கையில் எல்லாமே முடிஞ்சு போச்சு. இனி என் கனவுகள் எல்லாம் நனவாகும் என்கிற நம்பிக்கை இழந்தாச்சு. தயவு செய்து நீங்கள் இங்கிருந்து போயிடுங்க இளா. என்னுடைய துரதிருஷ்ட்டம் உங்களையும் பிடித்துக் கொள்ளும் முன் இங்கிருந்து போயிடுங்க என்று புலம்பிக் கொண்டாள்.அவனுமே அதே நினைவில் தான் இருந்தான். மாறன் மூலியமாக சத்யாவை அவனுக்கு தெரியும். பார்க்காமலே ஒருவரின் குணாதிசயத்தை வைத்து காதலிக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும் என்று சொல்லுவான். அப்படித்தான் அவன் மனதிலும் சத்யா நிறைந்திருந்தாள். ஆனால் விதி இருவரையும் இக்கட்டான சூழலில் நிறுத்தி வைத்திருக்கிறது.

 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#14
அத்தியாயம் – 7


தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே

பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணமா! மார்பு துடிக்குதடீ!

பார்த்த இடத்தில்ளெல்லாம் – உன்னைப் போலவே பாவை தெரியுதடீ!


செழியனிடம் சொல்ல முடியாமல் போராடி விட்டு வந்து படுத்தவளின் விழிகள் கண்ணீரை பொழிய, அது மெல்ல இறங்கி மேலாடையை நனைத்துக் கொண்டிருந்தது.“இந்த மாடி நம்ம ரசனைக்கு தீனி போடும் இடம் சத்யா. அதிலும் விடியலின் நேரம் அரை இருளில் பறவைகளின் கீச்சு குரலும், சாரல் காற்றும் நாலு சுவர்களுக்குள் கிடைக்காது” என்று கூறி பார்த்தான்.மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்தவள் “இந்த ரசனை, கொண்டாட்டம், மகிழ்ச்சி இதெல்லாம் சுகமானதொரு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு தான் மாறன். என்னைப் போல வாழ்வில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் தோணவே தோணாது” என்றாள்.ஒரு நிமிடம் அவன் கண்கள் தயங்கினாலும் மீண்டும் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் “மாற்றங்களை நாம தான் கொண்டு வரணும் சத்யா. உங்களுக்கு தினமும் காலையில் இங்கே வந்து நின்று அமைதியை ரசிக்க கூடிய மனதிருக்கு இல்லையா? அப்போ உங்க ரசனைகளை தூசு தட்டி எழுப்புங்க. வாழ்க்கையை கொண்டாட்டமா மாற்றிக் கொள்ளுங்கள்” என்றான்.மெல்லிய சிரிப்புடன் “நல்லா பேசுறீங்க” என்று விட்டு “எனக்கு நேரமாச்சு நான் கீழே போறேன்” என்று கிளம்பினாள்.முதல் பேச்சிலேயே அத்தனை உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் என்னுளே விதைத்து சென்றான். அன்று தன்னை மீறி பார்க்கும் ஒவ்வொன்றையும் ரசிக்க வைத்த பெருமை அவனையே சேரும்.பழைய நினைவுகளில் இருந்து மீண்டவளின் பார்வை சுற்றிக் கொண்டிருந்த பேனின் மீது சென்றது. அன்றைய நாளின் நிகழ்வு கண் முன்னே வந்து போனது. இரு கால்கள் முகத்தின் மீது மோதிச் சென்றது.அதற்கு மேல் மூச்சு விட முடியாமல் எழுந்தமர்ந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். மெல்ல எழுந்து ஹாலிற்கு சென்றவள் தண்ணீரை குடித்துவிட்டு வரும் போது பக்கத்து அறையில் எட்டிப் பார்க்க, மங்களம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.அவரின் வாழ்க்கையை எண்ணி ஒருபுறம் அதிசயமாக இருந்தது. யவர் மீதும் பாசம் காட்டாமல் ஒரு மனுஷியால் எப்படி இருக்க முடியும் என்று புரியவில்லை? பெற்ற பிள்ளைகள் ஆகட்டும், கணவனாகட்டும் யார் மீது பாசமில்லை, பற்றுமில்லை. அப்படி என்ன இந்த வாழ்க்கையில் இருந்து விட முடியும்? எதற்காக இப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை.மெல்ல தன் படுக்கையில் அமர்ந்தவளுக்கு மாறனின் உருவம் கண்முன்னே வந்து போனது. எப்படி இருந்தவன் மன நலம் பாதிக்கப்பட்டு சீரழிந்து கிடக்கிறானே. அவனை எப்படியாவது சரி செய்ய வேண்டும். ஆனால் செழியன் தன்னிடம் கேட்கும் உண்மையை உரைத்தால் மட்டுமே அவனை காப்பாற்ற முடியும். அதை தன்னால் சொல்லிவிட முடியுமா? என்ன தான் மாறன் மீது அன்பிருந்தாலும் தன்னால் அதை செழியனிடம் சொல்ல முடியாது என்றே தோன்றியது.நாளை சந்தியாவை சென்று பார்த்தால் என்ன என்று யோசித்தாள். அவள் தன்னை பார்க்க விரும்ப மாட்டாள் என்று தெரிந்தும் அங்கு செல்ல முடிவெடுத்துக் கொண்டாள். மாறனுக்கு தான் நிச்சயம் நல்லது செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.அதன்பின்னர் படுதததும் தன்னை மீறி உறக்கம் அவளை தழுவிக் கொண்டது. மனமோ ஒருவித அலைபுருதளுடனே இருந்தது.மறுநாள் காலை வேலைக்கு கிளம்பியவள் அங்கு சென்று அரை நாள் லீவ் எழுதி கொடுத்துவிட்டு சந்தியாவின் வீட்டிற்கு சென்றாள். அவளது வீட்டு வாயிலை அடைந்து மணி அடித்துவிட்டு நின்ற நேரம் உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது. அவள் தன்னைப் பார்த்ததும் எப்படி எதிர்கொள்வாள் என்று பயம் இருந்தது.அவள் நினைத்தது போல கதவை திறந்தது சந்தியாவே தான். சத்யாவை பார்த்ததும் அருவெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டவள் “இங்கே எதுக்கு வந்திருக்க? உன்னோட பேச எனக்கு விருப்பமில்லை” என்று கூறி கதவை அடைக்க முயன்றாள்.அவசரமாக அவளைத் தடுத்த சத்யா “ஒரு நிமிஷம் நில்லு சந்தியா. ப்ளீஸ்! எனக்காக இல்லேன்னாலும் மாறனுக்காக நான் சொல்றதை கேளு” என்றாள்.சட்டென்று நின்று அவளை கடுமையாக முறைத்து “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச உநாக்கு அனுமதி இல்லை...கண்டவனை பத்தி என் கிட்ட பேச உனக்கு வெட்கமா இல்லை?” என்றாள்.இரு கைகளையும் எடுத்து கும்பிட்டு “தயவு செய்து எங்களை நம்பு சந்தியா. மாறன் உன்னை உயிருக்கு உயிரா காதலிச்சான்...காதலிக்கிறான். நடந்த எதிலும் அவனுக்கு சம்மந்தம் இல்லை. சூழ்நிலை தான் அவனை குற்றவாளியா காட்டுது” என்றாள்.நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து ஒரு படி இறங்கி கீழே வந்து சத்யாவின் அருகில் வந்தவள் “உனக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு சுரணை எதுவுமே இல்லையா? அவனோட தொடர்பு வச்சுகிட்டு இன்னமும் அதை மறைக்க என்கிட்டே வந்து பேசுறியா?” என்றாள் முகத்தை சுளித்தபடி.


இது போன்ற பேச்சுகளை சமீப காலங்களில் நிறைய கேட்டாகி விட்டது என்றாலும் சந்தியாவின் வாயிலிருந்து கேட்கும் போது உடலெல்லாம் கூசிப் போனது. முகம் இறுகிப் போக “நீ என்னை நம்ப வேண்டாம் சந்தியா. நீ உயிருக்கு உயிரா நேசிச்சவனை நம்ப மாட்டியா?” என்றாள் கலங்கிய குரலில்.
 

sudharavi

Administrator
Staff member
#15
கோபத்தில் கனன்ற கண்களுடன் “போதும்! உன்னையும் அவனையும் நம்பி அவமானபட்டதெல்லாம் போதும். தயவு செஞ்சு இனி இங்கே வராதே. உன்னையும், அவனையும் சந்திச்சதை என் வாழ்க்கையிலிருந்து மறக்கணும்னு நினைக்கிறேன்” என்று கூறி கதவை ஓங்கி அடித்தாள்.அவளது பேச்சு முகத்தில் அறைந்தார் போலிருந்தது. பல முறை சந்தித்து பேசிய பின்னும் அவள் நம்ப மறுக்கிறாள். காதலித்தவன் மீது நம்பிக்கை இல்லையா? இல்லை என் மீது அவ்வளவு கேவலமான எண்ணமா என்று புரியவில்லை. லேசான தள்ளாட்டத்துடன் வெளியே வந்தவளின் எதிரே வந்து நின்றான் செழியன்.இருகைகளையும் கட்டிக் கொண்டு கடுமையாக அவளை முறைத்தபடி நின்றான். சந்தியா பேசியதை எல்லாம் அவன் கேட்டிருப்பானோ என்கிற சந்தேகத்துடன் அவனைப் பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் இருந்தே அனைத்தையும் கேட்டுவிட்டான் என்று புரிந்தது.சட்டென்று அவளது கையைப் பற்றி இழுத்துக் சென்றவன் அங்கு நின்றிருந்த காரில் அமர வைத்துவிட்டு தானும் மறுபக்கம் ஏறி அமர்ந்தான். சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான். சத்யாவிற்கு அவமானமாக இருந்தது. சந்தியா பேசியதை எல்லாம் கேட்டவன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான். அவனுக்கும் என் மீது சந்தேகம் இருக்குமோ என்றெண்ணி கூனி குறுகி போனாள்.தண்ணீர் பாட்டிலை அவள் கையில் வைத்து “குடி” என்றான் அழுத்தமாக.எதுவும் சொல்லாமல் பாட்டிலை கவிழ்த்தவளுக்கு அவ்வளவு தாகம் இருந்தது அப்போது தான் தெரிந்தது. பாட்டிலிலிருந்த தண்ணீர் முழுவதையும் குடித்த முடித்தவள் அவனிடம் பேச முடியாமல் வெளியே பார்வையை செலுத்தினாள்.“உனக்கு தன்மானமே இல்லையா? உன் மேல தப்பில்லேன்னா நேரடியா எல்லாத்தையும் சொல்லிட்டு நிமிர்ந்து நிற்கலாமில்ல. எதுக்கு கண்டவ கிட்டேயும் கெஞ்சனும்” என்றான் கடுப்புடன்.கலங்கிய கண்களுடன் அவனைத் திரும்பி பார்த்தவள் “அவ மாறனை நேசிச்சவ. அவ கிட்ட தழைஞ்சு போறதில் எனக்கு அவமானமில்லை” என்றாள்.கோபத்துடன் கூடிய விழிகளுடன் “உண்மையா நேசிச்சவங்களால நேசிச்சவனை விட்டுக் கொடுக்க முடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் அவனை சந்தேகப்பட மாட்டா” என்றான் அழுத்தமாக.அதுவரை அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க தயங்கிக் கொண்டிருந்தவளின் விழிகள் அவனது விழிகளுடன் கலக்க “நீங்க என்னை மனதார காதலிக்கலையா இளா?” என்றாள் உருகும் குரலில்.அவளது கேள்வியை எதிர்பார்க்காதவன் அதிர்ந்து பின் சட்டென்று சுதாரித்துக் கொண்டவன் அவளது விழிகளை நேராக நோக்கி “உன்னை நான் சந்தேகப்பட்டேன் என்று எப்போ சொன்னேன்?” என்றான்.“உங்க முதல்நாள் பேச்சு அதை தானே சொன்னது?” சோர்வான குரலில் சொல்லிவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள்.அவள் சொன்னதில் கோபம் கொண்டவன் அவளது முகத்தைப் பற்றி தன் பக்கம் திருப்பியவன் “உனக்கு என் வேதனை புரியுமாடி.ஒரு பக்கம் தம்பி மனநிலை பாதிக்கப்பட்டிருகான். அதே சமயம் நான் விரும்பியவளையும், அவனையும் சேர்த்து வச்சு ஊர் முழுக்க கதை பேசுறாங்க. என் தம்பியை சரி செய்து, உங்க மேல இருக்கிற கரையை துடைக்கனும்னு போராடிட்டு இருக்கேன். என்னைப் பார்த்து நான் உன்னை சந்தேகப்படுறேன்னு எப்படி நீ சொல்லலாம்?” என்றவனின் மூச்சு கோபத்தில் அனலாக வீசியது.கன்னங்களில் வழிந்த கண்ணீருடன் “உங்களை முதன்முதலாக பார்க்கும் போது என்னவெல்லாம் பேசணும்னு ஆயிரம் கனவு இருந்தது. ஆனா நீங்க என் கிட்ட பேசிய முதல் வார்த்தையே என்னை அடியோடு வீழ்த்திடுச்சு. வேண்டாங்க! விட்டுடுங்க! என்னால உங்க தம்பி வாழ்க்கை அழிஞ்சு போயிருக்கு. உங்க குடும்பத்து மேல விழுந்த கறையா நானிருக்கிறேன். என்னை விட்டுடுங்க. எப்படியாவது மாறனை சரி பண்ணி அவனுக்கும் நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுங்க” என்றவள் காரிலிருந்து இறங்க முயன்றாள்.அவளது கையைப் பற்றி தடுத்தவன் விழிகளில் அத்தனை ஆத்திரம் “அடிச்சு பல்லு கில்லெல்லாம் பேத்துடுவேன். என்ன தியாகம் பண்றியா? எனக்கு உன் தியாகம் எல்லாம் வேண்டாம். நடந்தது என்னன்னு நீ சொல்லணும். எனக்காக இல்லேன்னாலும் உன் மாறனுக்காக சொல்லணும். அப்புறம் என்ன சொன்ன? உன்னை சந்தேகபட்டேன்னா? அப்படி உன் மேல சந்தேகம் இருந்திருந்தா உன்னை பார்த்த அந்த நொடியே வெட்டிப் போட்டிருப்பேன்” என்றான் கண்களில் தார்மீக கோபத்தோடு.அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இது போதும் இளா...நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கிறேன் மாறனை பழையபடி மாத்தி காட்டுறேன். ஆனா என்னால எந்த உண்மையையும் சொல்ல முடியாது” என்றவளை அறைந்தால் என்ன என்று தோன்றியது செழியனுக்கு.“இங்கே பார் சத்யா! நான் மாறனுக்காக மட்டும் உன்னிடம் பேசல. உன்னுடைய பேர் ஊர் முழுவதும் கெட்டு இருக்கு. நீ வாயை திறந்தால் தான் நடந்த உண்மைகளை அறிந்தால் உன் மேல உள்ள கெட்ட அபிப்பிராயம் மாறும். அதற்கு தான் நான் கேட்கிறேன்” என்றான்.விரக்தியான சிரிப்போடு அவனைப் பார்த்து “உண்மை தெரிஞ்சிட்டா இத்தனை நாள் என்னை பேசிய வார்த்தைகள் எல்லாம் அழிஞ்சு போயிடுமா இளா? ஊரை விடுங்க...என்னை பெத்தவளே என்னை மட்டமா பேசும் போது மத்தவங்க பேசுவதை பற்றி நான் கவலைப்படல. தயவு செஞ்சு என்னை ஒரு தடவை மாறனை சந்திக்க விடுங்க. நான் பேசினால் நிச்சயம் அவனிடம் மாற்றம் வரும்” என்றாள்.அவளை ஆழ்ந்து பார்த்தவன் “எனக்கு மனைவியாக போகிறவளை இழிவாக பேச யாரையும் அனுமதிக்க மாட்டேன். அதுக்கு நீ வாயை திறக்கனும். திறப்ப! திறக்க வைப்பேன்” என்று கூறி காரை ஸ்டார்ட் செய்தான்.
 

sudharavi

Administrator
Staff member
#16
அத்தியாயம் – 8

அவனிடம் பேசி விட்டு வந்த பிறகு அவள் மனதில் சொல்ல முடியாதவொரு நிம்மதி. மாறன் சென்ற பிறகு தனக்கென்று யோசிப்பவர்கள் யாருமில்லாமல் தனிமையில் தவித்தவளுக்கு, செழியனின் வார்த்தைகள் இதமளித்தது.ஆனால் அவனிடம் தன்னால் நடந்த உண்மைகளை சொல்ல இயலுமா? அது தன் குடும்பத்திற்கு நேரும் அசிங்கம் அல்லவா? அறிந்தோ அறியாமலோ அனைத்து பழியும் தன் மேல் விழுந்து அதிலேயே வாழ பழகியாயிற்று...இனி, பழையவற்றை கிளறி அனைவருக்கும் உண்மைகளை சொல்ல வேண்டுமா? என்றெண்ணினாள். தனக்கு அந்த அதிகாரமிருக்கிறதா? என்று பலவாறு யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை மங்களத்தின் குரல் கலைத்தது.“சாப்பாடு ஆச்சா இல்லையா? எங்கே அவ?’ என்று நடு கூடத்தில் நின்று அதிகாரமாக கேட்டுக் கொண்டிருந்தார் சாவித்திரி.மங்களமோ கழுத்தை லேசாக திருப்பி “எதுக்கு இப்போ இங்கே வந்திருக்க?” என்றார் எரிச்சலுடன்.“எப்போ பாரு டீவியை பார்த்துகிட்டு இப்படியே உட்கார்ந்திருக்க போறியா? உள்ளே இருக்காளே ஒருத்தி அவளுக்கு ஆக வேண்டியதை பார்க்க வேண்டாமா?”.வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த கைகள் அப்படியே நிற்க, சத்யாவிற்கு உள்ளுக்குள் வெடவெடக்க ஆரம்பித்தது.“அது என்ன தேவைக்கு? இவ இழுத்து வச்சிருக்கிற ஏழரைக்கு எவன் கட்டிப்பான் ?” என்றார் ஏகத்தாளமாக.

மங்களத்தை முறைத்து “அதுக்காக அப்படியே விட்டுடுவியா? ஏற்கனவே ஒருத்தி ஓடி போய் தன் வழியை பார்த்துகிட்டா. இவ அப்படியும் போகாம உன் உசுரை எடுப்பா பரவாயில்லையா?” என்றார் எரிச்சலுடன்.அவர் பேசப்பேச உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்தது. கொஞ்ச கூட மனசாட்சியே இல்லாம இந்தம்மாவால் எப்படி இங்கே நின்று பேச முடிகிறது என்று ஆத்திரமடைந்தாள்.மங்களத்தின் முன் நின்று “இங்கே பார் மங்களம்! நான் சொல்றபடி செய். இவளை இப்படியே விட்டு வச்சா உனக்கு தான் அசிங்கம். எனக்கு தெரிஞ்ச ஒரு வரன் இருக்கு. அவங்க எதுவும் கேட்க மாட்டாங்க. பெண்ணை கட்டி கொடுத்தா போதும்” என்றார்.அதுவரை பொறுமையாக இருந்தவள் வேகமாக வெளியே வந்து “கொஞ்சம் நிறுத்துறீங்களா? எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாருங்க? எங்க வீட்டில் வந்து நின்னுகிட்டு எங்கம்மாவை விரட்டிகிட்டு இருக்கீங்க...வெளியே போறீங்களா?” என்று வாசலை நோக்கி கையைக் காட்டினாள்.இடுப்பில் கை வைத்து தெனாவெட்டாக அவளை பார்த்துவிட்டு மங்களத்தின் பக்கம் திரும்பியவர் “உன் பொண்ணு என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்றா போகவா?” என்றார்.அவரின் இறுக்கமான குரலில் மங்களம் சுதாரித்துக் கொண்டவர் “நாயே! நீ யாருடி அவங்கள வெளியே போக சொல்ல? ஒழுங்கா போய் சமைக்கிற வேலையை பாரு” என்று கத்தினார்.அவரின் முன்பு தன்னை அவ்வளவு கேவலமாக பேசுவதை விரும்பாதவள் “அம்மா! முதல்ல அவங்களை இங்கேருந்து போக சொல்லுங்க. நம்ம வீட்டுல நாட்டாமை பண்ண அவங்க யாரு?” என்றாள் அழுத்தமாக.தான் சொல்லியும் கேட்காதவளின் மீது ஆத்திரம் எழ வேகமாக சென்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் மங்களம் . அவளது முடியைப் பற்றி தன் பக்கம் இழுத்தவர் “ஒரு வார்த்தை பேசின கொன்னுடுவேன். உள்ளே போ!” என்று சமையல்கட்டு பக்கம் தள்ளி விட்டார்.அந்நேரம் எங்கோ சென்று விட்டு உள்ளே வந்து கொண்டிருந்தவனின் கண்களில் கீழே தள்ளப்பட்டு விழுந்தவள் பட்டாள். கை முஷ்டிகள் இறுக, தாடைகள் அழுத்தத்தை கொடுக்க, எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து நகர்ந்தான்.சத்யாவோ கண்கள் கலங்கினாலும் அதை காட்டிக் கொள்ளாது வலியில் சுருங்கிய முகத்துடன் எழுந்தவள் சாவித்திரியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டாள்.தன்னை மதிக்காமல் செல்லும் அவளை ஒரு பார்வை பார்த்த சாவித்திரி மங்களத்திடம் “இவ திமிர் பிடிச்சவ. ராதா மாதிரியில்ல. நான் சொல்றதை யோசி” என்று கூறி விட்டு வெளியேறினார்.நடந்தவைகளை எண்ணிக் கொண்டு மௌனமாக உணவை தயாரித்து மங்களத்துக்கு கொடுத்து விட்டு தோட்டத்துக்கு சென்றமர்ந்தாள். அவளின் வரவிற்காகவே காத்திருந்தவன் வேகமாக சென்று அருகில் அமர்ந்தான்.மனதிலிருந்த அழுத்தம் தாங்காமல் தன்னையறியாமலே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். தனது இடது கையாள் அவளது தோள்களில் கையைப் போட்டுக் கொண்டவன் “எதுக்காக சத்யா நீ உண்மைகளை மறைக்கணும்? யாருக்காக எல்லா பழியையும் உன் மேல போட்டுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்க?” என்றான்.“இளா! ப்ளீஸ்! நான் அமைதியை தேடி தான் இங்கே வரேன்”அவளது இளா என்கிற விளிப்பில் உள்ளம் நெகிழ்ந்தாலும் அவளது வேதனையை கண்டு தானும் வேதனையடைந்தான்.
 

sudharavi

Administrator
Staff member
#17
அவளை தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டவன் “கண்ணம்மா! உன் துயரங்களை தாங்கி தோள் கொடுக்க தான் நான் இருக்கேன். என்னை நம்பு. உனக்கான வாழ்க்கை இருக்கு” என்றான் ஆதரவாக.கன்னங்களில் கண்ணீர் வழிய “நான் சபிக்கப்பட்டவள் இளா. என் வாழ்க்கையில் எதையுமே அனுபவிச்சது இல்லை. எனக்கு எந்த நல்லதுமே நடந்தது இல்லை. என்னால மாறனுக்கும் கெடுதல் நடந்திருக்கு. ப்ளீஸ்! என்னை விட்டு போயிடுங்க. நான் உங்களுக்கு தகுதியில்லாதவ” என்றாள் அவன் முகம் பார்த்து.அவளது முகத்தை விரலால் நிமிர்த்தியவன் “உன்னைப் பற்றி மாறனின் வார்த்தைகளை வைத்தே காதலிக்க ஆரம்பித்தேன். மாறனுக்கு ஒருவரை கணிப்பதில் நல்ல திறமை உண்டு. முதல் பார்வையிலேயே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சொல்லி விடுவான், உன்னை பார்த்ததுமே என்னிடம் சொல்லிட்டான். அவள் ஒரு தேவதை. அவளுக்கு நீங்க தான் தகுதியானவன் என்று சொன்னான். அந்த நிமிடம் நீ இங்கே வந்து உட்கார்ந்துட்ட” என்று கூறி இதயத்தின் மீது அவளது கைகளைப் பிடித்து வைத்துக் கொண்டான்.மாறனைப் பற்றி கூறியதும் கன்னங்களில் கண்ணீர் வழிய, “ஒரு நல்ல நண்பனுக்கு நான் வாங்கி கொடுத்திருக்கும் பேர் என்ன? அவனை பைத்தியமா சுத்த விட்டிருக்கேனே” என்று கண்ணீர் விட்டாள்.அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் “முதல்ல இப்படி கண்ணீர் விடுறதை நிறுத்து சத்யா. எனக்கு ஒரு விஷயம் புரியல. மேலே இருக்க அந்தம்மா யார்? அவங்க என் உங்க வீட்டில் அதிக உரிமை எடுத்துகிறாங்க?” என்றான்.அவன் கேட்டதும் முகம் கன்றி போனவள் “அவங்க எங்க சொந்தகாரங்க” என்றாள்.அவளை கூர்மையாக பார்த்தவன் “சொந்தக்காரங்கன்னா உங்க வீட்டு விவகாரத்தில் தலையிடுகிற அளவுக்கு நெருக்கமா?” என்றான்.தலையை குனிந்து கொண்டவள் “அது அவங்களா எடுத்துகிட்ட உரிமை” என்றாள்.“உங்கம்மா ஏன் அவங்களை எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க?”“ப்ளீஸ்!” என்று அவனை நிமிர்ந்து பார்த்து “வேண்டாம் இளா! விட்டுடுங்க! என் தலைஎழுத்துபடி இப்படியே இருந்திட்டு போயிடுறேன்” என்றாள்.சட்டென்று அவளை விட்டு விலகியவன் கோபத்தில் அவளை எரிக்கும் படி பார்த்து “நீ ரொம்ப சுயநலம் பிடிச்சவ சத்யா. உனக்காக யோசிச்ச மாறனை பற்றி, உன்னை மனசுல சுமந்துகிட்டு இருக்கிற என்னைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அப்படி என்ன ரகசியத்தை கட்டி காப்பாத்துற நீ?” என்றான் எரிச்சலாக.“ஹையோ இளா! எனக்கும் மாறன் நிலைமையை நினைச்சு கவலையா இருக்கு. ஆனா நான்...வேண்டாம் விடுங்க” என்றாள்.அவனுக்கு அவ்வளவு கோபம் “இவ்வளவு தூரம் சொல்றேன் கொஞ்சம் கூட உனக்கு இரக்கமே இல்ல சத்யா. மாறன் உன்னைப் பத்தி சொன்னதெல்லாம் சரியில்ல. நீ பிடிவாதாகாரி. உனக்கு இரக்கமே இல்லாதவ...நீ மாறனை காப்பாத்துவேன்னு நினைச்சு வந்தேன் பாரு” என்று எகிறினான்.“நீங்க சொல்றதெல்லாம் சரி தான் இளா. நான் சுயலநலம் பிடிச்சவ தான். என்னை மன்னிச்சிடுங்க. நீங்க மாறனுக்கு நல்ல டாக்டர் கிட்ட காண்பிச்சு சரி பண்ணிடுங்க. தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க. உங்களுக்கு நான் வேண்டாம்” என்றாள் அழுகையுடன்.அவளது தோள்களைப் பற்றி குலுக்கியவன் “எவ்வளவு ஈஸியா சொல்லிட்ட என்னை விட்டு போயிடுங்கன்னு. நீ மனுஷியாடி? உன் மேல ஒருத்தன் இத்தனை பைத்தியமா இருக்கான். உன்னால இன்னொருத்தன் நிஜ பைத்தியமா இருக்கான். ஈவு இரக்கமே இல்லாத ராட்சசிடி நீ!” என்று அவளை உதறி தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டான்.கண்ணீருடன் அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
 

sudharavi

Administrator
Staff member
#18
அத்தியாயம் – 9

மறுநாள் முழுவதும் அவளை திரும்பியும் பார்க்காமல் அவளிருக்கும் திசை பக்கம் கூட எட்டி பார்க்காமல் இருந்தான். அவனது வரவை எண்ணி தோட்டத்தில் காத்திருந்தவளுக்கு அவனது முகத்திருப்பல் மனதை காயப்படுத்தியது.இன்று சரியாகி விடும் என்று தினமும் எதிர்பார்த்து ஒரு வாரத்திற்கு மேலானது. அவன் கொஞ்சமும் அசைந்தானில்லை. தன் மீதான அவனது அன்பான பார்வையை எண்ணி மனதிற்குள் ஏங்க ஆரம்பித்தாள். தனக்கு கிடைத்த ஒரே ஆதரவை தானே உதைத்து தள்ளி விட்டோமே என்றெண்ணி மனதிற்குள்ளேயே அழுதாள். ஒரு கட்டத்தில் அதுவும் நல்லது தான் என்று அதையும் ஏற்றுக் கொள்ள பழகி விட்டாள்.அவனும் அவள் தன்னை நாடி வருவாள் என்று எதிர்பார்த்திருக்க, அவளோ ஆரம்பத்தில் கஷ்டபட்டாலும் பின்னர் அதுவே நல்லது என்று ஒதுங்கியதை கண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான். இவளை இப்படியே விட்டால் எதுவுமே நடக்காது என்று புரிந்து போன பிறகு அவளை அதிரடியாக தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.அன்று காலையிலேயே மங்களம் ஆரம்பித்து விட்டார். ஆபிசிற்கு சற்று முன்னரே கிளம்ப வேண்டும் என்று அரக்கபரக்க கிளம்பிக் கொண்டிருந்தவளை பாடாய்படுத்தி வைத்தார். அது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அன்று சற்று அதிகமாகவே ஆடினார்.எதையோ பண்ணி தொலையட்டும் என்று மதியத்திற்கு வேண்டிய லஞ்ச் பாக்சை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பியவளை தடுத்து நிறுத்தியது அவரது குரல்.“சாயங்காலம் சீக்கிரம் வந்துடு. உன்னை பொண்ணு பார்க்க வராங்க” என்றார்.அவர் சொன்ன்னதை அரைகுறையாக காதில் வாங்கிக் கொண்டு செருப்பை மாட்டியவள் பெண் பார்க்க என்றதும் அதிர்ந்து “வாட்? பொண்ணு பார்க்கவா? நான் வர மாட்டேன்” என்றாள் அழுத்தமாக.கடுமையாக அவளை முறைத்தவர் “நீ வந்து தான் ஆகணும். எத்தனை நாளைக்கு என் முதுகில் உட்கார்ந்துகிட்டு கழுத்தறுக்க போற?” என்றார் எரிச்சலாக.“ஏன் நீங்களா எனக்கு சம்பாத்திச்சு சாப்பாடு போடுறீங்க? யாரை கேட்டு இந்த ஏற்பாட்டை பண்ணுனீங்க? எனக்கு இஷ்டமில்லை” என்று விட்டு வாயிலுக்கு சென்றவள் முன் நின்று வழியைமறித்து “நீ கண்டிப்பா வர இல்லேனா ஆபிசுக்கே வந்து இழுத்திட்டு வந்துடுவாங்க” என்றார்.மாடிப்படியில் நின்று இவர்களின் விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் இறுகி இருந்தது. அவனை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. பெண் பார்க்க வருவதை பற்றி அவன் அறிந்து கொண்டானே ஐயோ என்றிருந்தது. இதை எப்படி சமாளிக்க என்கிற வழி தெரியாமல் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினாள்.மனதிலிருந்த அழுத்தத்தை குறைக்க வேகம் வேகமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றாள். மங்களம் உள்ளே சென்றதும் அவசரமாக செழியன் வெளியேறி சத்யாவை பின் தொடர்ந்தான். அவள் சென்று நின்றதும் அவளருகில் சென்றவன் “சோ எவனோ ஒருத்தன் முன்னாடி போய் நிற்க போற” என்றான் எரிச்சலாக.அவனை திரும்பி முறைத்தவள் “ப்ளீஸ்! நானே நொந்து போயிருக்கேன். நீங்களும் என்னை டார்ச்சர் பண்ணாதீங்க” என்றாள்.அவளை திரும்பி முறைத்தவன் “என் கிட்ட உண்மையை சொல்வதை விட மற்ற எல்லாத்துக்கும் தயாராக இருக்க இல்லையா?” என்றான் கோபமாக.கண்கள் கலங்க அவனிடம் அதை காண்பித்துக் கொள்ளாமல் திரும்பிக் கொண்டவள் “ப்ளீஸ்! இளா! என்னை படுத்தாதீங்க” என்றாள்.அவளை கூர்ந்து பார்த்தவன் “நான் சொல்றதை கேளு. இன்னைக்கு நீ ஆபிசுக்கு போகாதே. என்னோட வா” என்றான்.அவனை திரும்பி பார்த்தவள் “இன்னைக்கு ஒரு நாள் பிரச்னையை சமாளிசிட்டா மற்ற நாள் என்ன பண்றது?” என்றாள் கடுப்பாக.அவனது முகம் கோபத்தில் சிவக்க “என் கிட்ட கேள்வி கேட்காம வா. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்” என்றான்.எதுவும் சொல்லாமல் சற்று நேரம் நின்றவள் பின்னர் “ம்ம்..சரி” என்றல்.உடனே ஓலா புக் செய்து அது வந்ததும் இருவரும் ஏறி அமர்ந்தார்கள். அவளும் எங்கு போகிறோம் என்று கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. அவனுடன் இருக்கும் அந்த நிமிடங்கள் அப்படியே நீண்டு விடாதா என்று தோன்றியது. தனக்கான அவனது அன்பை எண்ணி உள்ளுக்குள் நெகிழ்ந்து கொண்டிருந்தாள்.ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக இருந்த ஒரு வீட்டின் முன்பு நின்றது கார். மெதுவாக அந்த வீட்டைப் பார்த்தபடி இறங்கியவளுக்கு அவன் மீது பயம் வரவில்லை. மாறாக அது யார் வீடாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பார்த்தபடி நின்றிருந்தாள். காருக்கான பணத்தை கொடுத்து விட்டு “வா” என்றழைத்துவிட்டுகாம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.கதவருகே சென்று வாயில் மணியை அடிக்க, சற்று நேரம் கழித்து ஒரு வயதானவர் வந்து கதவை திறந்தார். செழியனை பார்த்ததும் “வாங்க தம்பி” என்று நகர்ந்து வழி விட்டார்.அவனின் பின்னே நின்றவளைக் கண்டதும் “வாம்மா” என்றார்.
 

sudharavi

Administrator
Staff member
#19
அவனை பின்தொடர்ந்தவள் ஹாலின் நடுவே சென்று அவன் நின்றதும் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றாள்.“இங்கே தான் மாறன் இருக்கான் சத்யா” என்றான் ஆழ்ந்த குரலில்.அவளோ அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என்ன சொல்றீங்க? மாறன் இங்கே இருக்காரா?” என்றாள் கலங்கிய கண்களுடன்.“ம்ம்..மேலே இருக்கான் வா” என்றவன் அந்த பெரியவரிடம் “தாத்தா குணா எங்கே இருக்கான் மாறன் ரூமிலையா?” என்று கேட்டான்.“ஆமாம் செழியா..அங்கே தான் இருக்கான்” என்றார்.அவரிடம் தலையசைத்துவிட்டு படியில் ஏறினான். அவனை தொடர்ந்து அவளும் சென்றாள். ஒரு கதவின் முன்னே நின்றவன் மெல்ல தட்ட, சிறிது நேரம் உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை. பின்னர் ஒருவரின் காலடியோசை கேட்க, திடீரென்று “நீ போகாதே என்னை விட்டு போகாதே” என்று அலறும் சத்தம் கேட்டது.செழியனின் முகம் இறுகி போயிருக்க, அவளோ பயத்துடன் அவன் அருகில் நெருங்கி நின்றிருந்தாள்.மறுபுறம் இருந்த குணா மாறனை சமாதானப்படுத்திவிட்டு கதவை திறந்தான். செழியனையும் அவளையும் பார்த்து விட்டு சற்றே நகர்ந்து வழி கொடுத்தான். செழியன் முன்னே செல்ல, அவன் முதுகுபுறம் மறைந்து கொண்டு மெல்ல உள்ளே எட்டி பார்த்தாள்.அங்கே மாறன் சட்டை எல்லாம் கிழிந்து தொங்கி கொண்டிருக்க, தலையை சொரிந்து கொண்டு சுவற்றில் ஏதோ எழுதி கொண்டிருந்தான்.அவனது நிலையைப் பார்த்ததும் தன்னை அறியாமல் கண்ணீர் கன்னங்களில் இறங்கி ஓட, வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.எழுதிக் கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்து செழியனைக் கண்டதும் ‘அண்ணா! வா! வந்துட்டியா? இங்கே பாரு” என்று அவனது கையைப் பற்றி அழைத்துச் சென்று சுவற்றில் தான் எழுதியதை காட்டினான்.அங்கே “மாறன், சந்தியா மற்றும் சத்யா என்று படம் போட்டு எழுதி வைத்திருந்தான்”. அதை பார்த்ததும் தன்னை மீறி அழுகையில் செருமி விட்டாள். அந்த சப்தம் கேட்டு செழியனின் முதுகின் பின்னே எட்டி பார்த்த மாறன் சத்யாவை கண்டதும் விழிகள் பல மடங்கு விரிய, சற்று நேரம் அப்படியே நின்றான்.அடுத்த நிமிடம் அவளைக் கண்டு சுவற்றோரம் ஒண்டிக் கொண்டு “நானில்லை! என்னை விட்டுடுங்க..நானும் அவளும் அப்படி பழகல” என்று கத்த ஆரம்பித்தான்.அதைக் கண்டு பதறி போனவள் வேகமாக அவன் அருகில் சென்றமர்ந்து “மாறன்! என்னைப் பாருங்க! உங்களை யாரும் எதுவும் சொல்லல. நீங்க நல்லவர் மாறன்...நான் உங்க தோழி சத்யா தான்” என்றாள் அழுகையுடன்.அவளது கையைப் பிடித்து தள்ளியவன் தலைமேல் கையை வைத்துக் கொண்டு “என்னை விட்டுடுங்க..அடிக்காதீங்க” என்று அலற ஆரம்பித்தான்.அவன் அப்படி நடந்து கொண்டதும் கண்ணீர் வழிய எழுந்து நின்றவளை பார்த்து பெருமூச்சுடன் “எப்படி வந்தவனை எப்படி திருப்பி அனுப்பி இருக்கீங்கன்னு புரியுதா சத்யா? இவனை பார்த்த பிறகாவது உனக்கு நடந்தவைகளை சொல்லனும்னு தோணுதா?” என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.மாறனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவன் விரல்களைப் பற்றிக் கொண்டாள்.

“மாறன் என்னைப் பாருங்க. நான் உங்க பிரெண்ட் சத்யா வந்திருக்கேன் பாருங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனை பாராதியார் பாடல்களை பாடி இருக்கோம் நினைவிருக்கா?” என்றாள் மெல்லிய குரலில்.அவளது மெல்லிய குரல் அவனுள் ஏதோ செய்ய, கத்துவதை விட்டு விட்டு அவளது விழிகளை நிமிர்ந்து பார்த்தான். அவள் பேசப்பேச அவனது பயம் மறைந்து அவனுள் அமைதி குடி கொண்டது. சிறு பிள்ளை போன்று தாயை பார்க்கும் பிள்ளையாக அவளது முகத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.செழியனுக்கு அவனது அந்த நடத்தையைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. சமீபகாலமாக யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தவன் ஒரு குழந்தை போல அவளது பேச்சில் மயங்கி அமர்ந்திருப்பதை கண்டு கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான்.“மாறன்! நான் சொல்றதை கேட்பீங்களா?” என்று கேட்டு அவன் முகத்தை பார்க்க, அவனோ விழியசையாது அவளை பார்த்து கொண்டிருந்தான்.அவன் முகத்தை பார்த்துக் கொண்டே “நீங்க என்னை முதன்முதலா பார்த்தப்ப பாடின பாரதியார் பாட்டு நினைவிருக்கா? நீங்க அந்தப் பாடலை பாடின பிறகு தான் அவற்றை எல்லாம் ரசிக்கவே ஆரம்பிச்சேன்” என்றாள்.காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் நிறங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலாஅவள் கூறி முடித்ததும் தன்னை மறந்து பாட ஆரம்பித்தான். அதைக் கண்டு இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவளது விரல்களை வருடியவன் “நான் உனக்கு பிரெண்ட் தான் சத்யா...எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்...என் சந்தியா என்னை விட்டு போயிட்டா” என்று அழ ஆரம்பித்தான்.அந்த நெகிழ்வான தருணத்தில் உள்ள்ளே வந்த குணா செழியனிடம் கையை கண்ணை காட்ட, மாறன் அருகில் மெல்ல அமர்ந்து அவனது புஜத்தில் தூக்க மருந்து உள்ள ஊசியை ஏற்றினர்...சற்று நேரத்தில் கண்கள் செருக அப்படியே கீழே படுத்தவனின் விரல்கள் சத்யாவின் கைகளை இறுக பற்றி இருந்தது.அவனிடமிருந்து கைகளை பிரித்துக் கொண்டு எழுந்து நின்றவளுக்கு மனம் பாரமாகி போனது. இவனை இப்படி பார்த்த பிறகும் தான் வாயை திறக்காமல் இருந்தால் தன்னை விட சுயநலவாதி யாருமில்லை என்றே தோன்றியது. அவளை கண்களாலேயே தன் பின்னே வர சொன்னவன், கீழே சென்று சோபாவில் அமர்ந்தான். அவர்களின் வரவிற்காக காத்திருந்த பெரியவர் இருவருக்கும் காப்பி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.சத்யாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. செழியனை பார்ப்பதும் கைகளை பிசைவதுமாக அமர்ந்திருந்தாள். அவளது நிலையை உணர்ந்து கொண்டவன் “சத்யா! காப்பியை குடி...இப்போ வேற எதையும் போட்டு மனசை குழப்பிக்காதே” என்றான்.உதடுகள் தன்னை மீறி துடிக்க, உடலில் ஒரு நடுக்கம் எழ அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் வலி “இளா! நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன். என்னால மாறனை இப்படி பார்க்க முடியல” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.அழுத்தமான பார்வையுடன் “சத்யா! நீ அமைதியா இரு! நீ எதுவும் சொல்ல வேண்டாம். எல்லா உண்மைகளும் தானே வரட்டும்...நீ முதல்ல காப்பியை குடி” என்றான்.அவளோ உதட்டை அழுந்தக் கடித்து அழுகையை அடக்க பெரும்பாடு பட்டவள் அதற்கு மீறியும் முடியாமல் விம்மலுடன் “நான் ஒரு பாவி இளா” என்றாள் முகத்தை மூடிக் கொண்டு அழுதபடி.அவளின் அழுகையை எதிர்பார்க்காதவன் அவசரமாக எழுந்து சென்று அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து அத்தனை நாள் மனதில் அழுத்தி வைத்திருந்த பாரம் முழுவதையும் அழுகையில் கரைத்தாள். அவளது முதுகை வருடிக் கொடுத்து “நீ எந்த தப்பும் செய்யல சத்யா...உனக்கு குற்ற உணர்ச்சி தேவையில்லை. மாறன் என்னை மாதிரி அழுத்தக்காரன் கிடையாது. அவன் மனசு பூவை விட மென்மையானது. அவனுக்கு கவிதையை ரசிக்க தான் தெரியுமே தவிர ரௌத்திரம் தெரியாது. அதனால தான் நடந்த நிகழ்வுகளால அவன் மனசு அதிகமா பாதிக்கப்பட்டிருக்கு. உன் மேல ஒரு தாய் கிட்ட வைக்க வேண்டிய பாசத்தை வச்சிருக்கான். அவனுக்கு இப்படியான பிறகு ஒரு நாள் கூட இந்த அமைதியை நாங்க பார்த்ததில்லை.. இன்னைக்கு அவன் உன்னை கண்டதும் ஒரு குழந்தை மாதிரி நடந்துகிட்டது ஆச்சர்யமா இருக்கு. எனக்கு நம்பிக்கை வந்துச்சு. நிச்சயமா அவன் சரியாகிடுவான் சத்யா” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
#20
அவளோ அழுகையை குறைக்காமல் “என்னால தானே எல்லாம்” என்று அழுது கரைந்தாள்.சட்டென்று அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் “என்னை பாரு சத்யா! நீ நடந்த எதற்கும் காரணமில்லை. அதை புரிஞ்சுக்கோ. நீ ஒரு சூழ்நிலை கைதி தான். இந்த பிரச்னையில் நீ எதுவுமே செய்யல என்பதை விட மாறனைப் போல நீயும் பாதிக்கப்பட்டவள் தான்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.அவளது விழிகளைப் பார்த்து சிரித்தவன் “இந்த முட்டை முழியை இன்னும் பெருசாக்கி என்னை முழுங்கிடுவ போல இருக்கு. பார்த்தது போதும் கிளம்பு. அங்கே உங்க வீட்டில் இந்நேரம் களேபரம் ஆகி இருக்கும்” என்றான்.அப்போது தான் நினைவுக்கு வந்தவள் “அச்சச்சோ! மறந்தே போயிட்டேனே” என்று பதறினாள்.அவளை முறைத்தவன் “என்ன அந்த மாப்பிள்ளையை பார்க்க அத்தனை ஆர்வமா?” என்றான் கடுப்பாக.கலங்கிய கண்களுடன் “இல்ல அம்மா ஆடுவாங்க” என்றாள்.அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் “நான் பார்த்துகிறேன் வா” என்று கூறி அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
 
Status
Not open for further replies.