தீரா காதல் நீயே!!!- கதை திரி

#2
ஹாய் பிரண்ட்ஸ்... போட்டியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. முதல் முயற்சியை வெற்றியடைய செய்ய உங்களின் ஆதரவை கருத்துக்கள் மூலம் எனக்கு அளியுங்கள்.

********************************

கதைக்கான முன்னோட்டம்:

தீராத காதல் நீயே..

நாயகன் : விதாந்த் வித்யூத்
நாயகி : சாராவதி"பாரதி காதலியே
கண்ணம்மா…
கண்ணம்மா…

தீராத காதல் நீயே
செல்லம்மா…
செல்லம்மா…

உன் மடியில் மயங்கி கிடந்து
என் மனதை தொலைக்கின்றேன்..

உன் விரல்கள் பிடித்து நடந்து
என் துயரம் துறக்கின்றேன்..

கண்ணம்மா…
கண்ணம்மா…

என் வாழ்வின் அர்த்தம் நீயே அம்மா…!!!!!"

*************************************

இளமை காலத்தை தொழிலில் தொலைத்தவன், இருபத்தியெட்டு வயதில் தான் தனது காதலுக்கான தேடலை தொடங்கியிருக்கின்றான்.

பல நாடுகளை வலம் வருபவன் நினைத்த நொடி பல அழகிகளை தனக்கு சொந்தமாக்கி கொண்டிருக்கலாம்… ஆனால், அதிலெல்லாம் அவனுக்கு உடன்பாடில்லை.. ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தீவிரமாக இருக்கின்றான். கல்லூரி நாட்களில் கூட எந்தவொரு பெண்ணையும் நட்பு என்கிற எல்லை கடந்து பார்த்திடாதவன், சில மாதங்களாக கண்ணில் படும் அனைத்து பெண்களையும் நிமிர்ந்து முகம் காண்கிறான். முகத்தில் எதையோ தேடி ஏமாந்து போகின்றான். தினமும் அவனை இம்சை செய்யும் விழிகளை தேடித்தேடி சோர்வடைகின்றான்.

தொழில் என்று மட்டும் சுற்றிக்கொண்டிருந்தவனை காதல் என்கிற பாதைக்கு இட்டுச்சென்றதும் அந்த விழிகள் தான். அவ்விழிகளைத் தாண்டி அவனுக்கு வேறெதுவும் தெரியாது.

தினமும் இரவில் உறக்கத்தில் இம்சை செய்யும் விழிகளையேத் தேடிக்கொண்டிருக்கின்றான்… விழகளைத் தாண்டி அவ்விழிகளுக்கு சொந்தக்காரி என்ன நிறமென்பது கூட விதாந்த்திற்கு தெரியாது. அவனை பொறுத்தவரை அந்த விழிகளைக் கொண்ட மங்கையே அவனின் மனைவி. கனவில் தோன்றுவது கற்பனையாகக் கூட இருக்கலாம். நிஜத்தில் இல்லாமலும் போகலாம்.

***********************************

சாராம்மா எப்படியாவது இங்கிருந்து போயிடும்மா...

அம்மா என்னம்மா சொல்றீங்க , நான் எப்போ வீட்டுக்கு வந்தாலும் என்னை துரத்துவதிலேயே இருக்கீங்களே.. ஏன் ம்மா..

தாயின் பதட்டமும் , பயமும் அவளுக்கு புரியவில்லை. தன் இரண்டாவது மகளின் வாழ்வையாவது நல்லவனொருவனின் கைகளில் ஒப்படைக்க வேண்டுமென்கிற தாயுள்ளம் நடக்கவிருப்பதை நினைத்து தவித்தது.

அய்யோ.. நீ முதலில் இங்கிருந்து சென்றுவிடேன்.

தன் மகளிடம் அந்த தாய் கையெடுத்து வணங்கி கெஞ்சினார்.

வாசலில் பேச்சு சத்தம் கேட்டு முடியாத நிலையிலும் வெளிவந்து யாரென்று பார்த்த சாராவின் அக்கா சந்தியாவிற்கு தன் தங்கையை கண்டதும் உயிரே நடுங்கியது. கண்கள் அச்சத்தில் விரிய, உடல் சில்லிட்டு போக தன் தங்கையை பற்றியவாறு.. அம்மு இங்கிருந்து கிளம்புடா என்றாள்.

சந்தியா சாராவிடம் பேசியபடி இருந்தாலும், அவளின் பார்வை வீட்டினுள்ளே இருந்தது.

வந்தவளை வாவென்று உள்ளே கூட அனுமதிக்காது எதற்கு இருவரும் போ, போ, என்கிறீர்கள். சாரா சலித்தவளாய் வாசல் திண்ணையில் அமர்ந்தாள்.

அது ஒன்றுமில்லை கண்ணு.. நாளைக்கு உனக்கு கல்யாணம். உனக்கொரு நல்லது நடக்கக்கூடாதுன்னு உன் அம்மாவும், அக்காவும் அதை கெடுக்க நினைக்கிறார்கள். வீட்டிற்குள்ளிருந்து வரும் தகர டப்பா குரலில் சந்தியாவும் தாய் மீனாவும் பயம் அப்பட்டமாக முகத்தில் தெரிய நின்றிருக்க.. சாரா தனக்கு கல்யாணம்மா என்று அதிர்ந்தாள்.

அடுத்த நொடி சாதாரணமாக மாப்பிள்ளை யார், என்ன பெயர், என்ன செய்கிறாரென்று மீனாவிடம் வினவினாள்.

மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது அவர் விழித்து நிற்க... நான் தான் மாப்பிள்ளையென, வீட்டிற்குள்ளிருந்து வந்தவன் மொழிந்தான். அவன் சந்தியாவின் கணவன்.

*******************************

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக காட்சியளித்தான் விதாந்த். அறையில் கமழ்ந்த நறுமணமும், கட்டிலில் பரவி கிடந்த மலர்களும் அன்றைய நாளில் அடுத்து என்ன நடக்கவிருக்கிறதென்பதை அவனுக்கு பறைசாற்றியது.

தனக்கெதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனுக்கு, தன் முகத்தின் மீது தானே உமிழ்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. தன்னைத் தானே வலிக்குமட்டும் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அறைந்தவன் ஓய்ந்து போனவனாய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். இருகரம் கொண்டு முகத்தை மூடியவன்.. தானொரு ஆண்மகன் என்பதையும் மறந்து கண்ணீர் வடித்தான். அவனின் இதயம் விம்மி துடித்தது.

கனவில் தடம் பதித்து இதயம் நுழைந்தவளையே கரம் பிடித்தும்.. தன் காதல் ஈடேறிய சந்தோஷம் அவனிடத்தில் துளியளவும் கிடையாது. பதிலாக மனம் முழுக்க குற்றவுணர்வே.. தானொரு தூய்மையான ஆண்மகன் இல்லையேயென வருந்தினான். எந்தளவிற்கு அவள் மீது காதல் கொண்டு பித்தாய் அவளைத் தேடி அலைந்தானோ, அதெல்லாம் அவன் செய்த செய்ததாக நினைக்கும் செயலால் ஒன்றுமில்லையென ஆனது. தன்னவளை உண்மையாக தான் நேசிக்கவில்லையோ, அப்படி நேசித்திருந்தால் கனவில் கூட அவளுக்கு துரோகம் இழைக்க முடிந்திருக்காதல்லவாயென மருகினான்.

இன்னும் சில நிமிடங்களில் பல கனவுகளோடு வாழ்க்கையின் முதல்படியை நோக்கி அறைக்குள் நுழைய இருப்பவளை எப்படி தவிர்ப்பதென பந்தையக் குதிரையின் வேகத்தில் விதுவின் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
 

Attachments

#3
ஹாய் பிரண்ட்ஸ்.....

எழுத்தாளரை பற்றி பத்து வரிகளுக்கு அறிமுகம் இருக்க வேண்டும் என்பது போட்டியின் விதிகளில் ஒன்று. ஆதலால் என்னைப்பற்றி சில வரிகள்...

என் பெயர் பிரியதர்ஷினி... சொல்லுகிற அளவிற்குபெரிய ஆளெல்லாம் கிடையாது. கதைகள் கேட்பதிலும் படிப்பதிலும் ஆர்வம் அதிகம். எவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டேன். அவ்வளவு முரட்டு ரீடராக இருந்த நான், எழுதும் ஆசை வந்து நான்கு முழு நாவல்கள் எழுதியிருக்கிறேன். என்னை இங்கு சில பேருக்கு பரீட்சியமாக இருக்கலாம். இருப்பினும் ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும் புது எழுத்தாளராகவே அறிமுகம் கொள்ள ஆசைப்படுகிறேன். ஏதோ கொஞ்சம் கவிதைகளும் எழுத வரும். என்னைப்பற்றி அவ்வளவுதான் நட்பூக்களே. எனது கதைக்கு நிறை குறைகள் யாவும் வரவேற்கப்படுகின்றன.
 
#4
தீராத காதல் நீயே…


அத்தியாயம் 1 :


பாரதி காதலியே
கண்ணம்மா…
கண்ணம்மா…

தீராத காதல் நீயே
செல்லம்மா…
செல்லம்மா…

உன் மடியில் மயங்கி கிடந்து
என் மனதை தொலைக்கின்றேன்..

உன் விரல்கள் பிடித்து நடந்து
என் துயரம் துறக்கின்றேன்..

கண்ணம்மா…
கண்ணம்மா…

என் வாழ்வின் அர்த்தம் நீயே அம்மா…!!!!!

உடலில் வியர்வை ஊற்றாய் சுரக்க த்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தவனின் வாய் தன்னையும் மறந்து தன்னவளை தன் வாழ்வின் சரி பதியாகப் போகும், யாரென்றேத் தெரியாதவளை நினைத்து உள்ளம் உருக பாடிக் கொண்டிருந்தது.

இப்பாடல் வரிகள் இதற்கு முன்பு அவன் கேட்டிருக்கின்றானா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது…. ஆனால், இளம் வயதாகிய அவனுக்கு தானும் ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டால் எப்படியிருக்குமென்று எண்ணும் போதெல்லாம் அவனின் மனம் இவ்வரிகளை நினைவு படுத்தும்.

அதில் பாரதி அவனாகவும் கண்ணம்மா அவனவளாகவும் தோன்றும்.

நீ எங்கிருக்கின்றாயோ…. தினமும் உன்னை காணும் ஆவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதடி… சீக்கிரம் என்னை வந்து சேர்ந்துவிடடி… அவனின் ஆழ்மனம் கூக்குரலிட்டது.

அவன் விதாந்த் வித்யூத்….

ஆணழகன்… கம்பீரம் என்ற சொல்லுக்கு இலக்கணம் அவன்.

அவனது நிறமே இதுவரை வெயில் என்பதையே கண்டதில்லை என்பதை பறைசாற்றும். பார்ப்போரை, வெள்ளாவியில் வெளுத்து எடுத்திருப்பார்களோ என்று எண்ண வைக்கும். வெளிநாட்டிலே வளர்ந்து அத்தகைய கலாச்சார பழக்கவழக்கங்களுக்கு பழகியிருந்தாலும் அக்மார்க் தமிழ் பையன். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கொள்கையை தன் தாய் தந்தையின் காதலில் கற்றுக்கொண்டான்.

பலதலைமுறைகளாய் சேர்த்த சொத்துக்களே பல யுகங்களுக்கு போதுமென்றிருக்க, அதனை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டிருக்கின்றான். அவனது குடும்பம் தடம் பதிக்காத துறையேயில்லை. பல நாடுகளில் பல கிளைகளை நிறுவி வெற்றிவாகை சூடியிருக்கும் தொழில் துறை ராஜ்ஜியத்தின் முடி சூடா மன்னன் அவன். இருப்பினும் அவன் யாருமற்ற பணக்கார அனாதை. அதற்காக ஒருபோதும் அவன் வருந்தியதில்லை. தனக்காக வருபவளையே மொத்தமாக நேசித்து அனைத்து உறவுகளையும் அவளுள் பார்க்க வேண்டுமெனக் காத்துகிடக்கின்றான்.

தந்தை இறப்பின் போது வீழ்ந்த தனது சாம்ராஜ்ஜியத்தை யாரின் உதவியுமின்றி தனி ஒருவனாக நிமிர்த்தி உயர்ந்து நின்றான். இளமை காலத்தை தொழிலில் தொலைத்தவன், இருபத்தியெட்டு வயதில் தான் தனது காதலுக்கான தேடலை தொடங்கியிருக்கின்றான்.

பல நாடுகளை வலம் வருபவன் நினைத்த நொடி பல அழகிகளை தனக்கு சொந்தமாக்கி கொண்டிருக்கலாம்… ஆனால், அதிலெல்லாம் அவனுக்கு உடன்பாடில்லை.. ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தீவிரமாக இருக்கின்றான். கல்லூரி நாட்களில் கூட எந்தவொரு பெண்ணையும் நட்பு என்கிற எல்லை கடந்து பார்த்திடாதவன், சில மாதங்களாக கண்ணில் படும் அனைத்து பெண்களையும் நிமிர்ந்து முகம் காண்கிறான். முகத்தில் எதையோ தேடி ஏமாந்து போகின்றான். தினமும் அவனை இம்சை செய்யும் விழிகளை தேடித்தேடி சோர்வடைகின்றான்.

தொழில் என்று மட்டும் சுற்றிக்கொண்டிருந்தவனை காதல் என்கிற பாதைக்கு இட்டுச்சென்றதும் அந்த விழிகள் தான். அவ்விழிகளைத் தாண்டி அவனுக்கு வேறெதுவும் தெரியாது. மீன் போன்று நீண்டிருக்கும் கூர் விழிகள், அதில் பளபளக்கும் அடர் கருநிற திராட்சை கருமணிகள், கன்னம் தொடும் நீண்ட இமை முடிகள்… விஜயனின் காண்டீபத்தோடு ஒப்பிடும், இயற்கையாகவே வலைந்திருக்கும் அழகிய புருவங்கள்.. வலது புற புருவத்தின் இறுதி கூர்மையில் தொக்கி நிற்கும் பொட்டு போன்ற கருமை நிற மச்சம் மேலும் அழகு சேர்த்தது.

தினமும் இரவில் உறக்கத்தில் இம்சை செய்யும் விழிகளையேத் தேடிக்கொண்டிருக்கின்றான்… விழகளைத் தாண்டி அவ்விழிகளுக்கு சொந்தக்காரி என்ன நிறமென்பது கூட விதாந்த்திற்கு தெரியாது. அவனை பொறுத்தவரை அந்த விழிகளைக் கொண்ட மங்கையே அவனின் மனைவி. கனவில் தோன்றுவது கற்பனையாகக் கூட இருக்கலாம். நிஜத்தில் இல்லாமலும் போகலாம். ஆனால், அவனை பொறுத்தவரை தன் கனவு விழிகளுக்கு சொந்தக்காரி விரைவில் தன்னை வந்து சேரப்போகின்றாள் என்கிற நம்பிக்கையில் தான் அவனின் ஒவ்வொரு நாள் காலை பொழுதும் புலர்கிறது.

எங்கு பார்த்தாலும் இம்சை செய்யும் விழிகளை நினைத்த நொடியில் இரும்பாய் இறுகியிருக்கும் அவனின் இதழில் புன்னகை அரும்பும். அதன் மாயம் அவனே அறியாத ஒன்று. தன் மீது வேண்டுமென விழும் பெண்களைக் கண்டு, பெண்களென்றாலே முகம் சுளிப்பவன்… இன்று ஒவ்வொரு பெண்களாய் உற்று நோக்குகின்றான். அவனவள் எங்கு வாசம் செய்கின்றாளோ. அவனின் மனத்திற்கே வெளிச்சம்.
தன்னவளை கண்டுவிட்டால், அவளிடம் தனது காதலை எப்படியெல்லாம் சொல்ல வேண்டும், அவளை தன் காதலால் எப்படியெல்லாம் மூழ்க வைக்க வேண்டுமென விதாந்த் காண்கிற கனவெல்லாம் கனவாகப் போகிறதென்பதை விதி நினைத்து பார்க்க, அவனோ தன் மொபைலின் அழைப்பினை ஏற்றான்.

எதிர்முனையில் தனது காரியதரிசி தீபக் கூறிய செய்தியில் விதாந்தின் முகம் இறுகியது.

ஐ வில் பீ தேர் இன் டென் மினிட்ஸ் என்றவன் குளியலறைக்குள் புகுந்தான்.

மழைத்தூறல் போல் கொட்டும் ஷவரின் அடியில் நின்றவனின் கோபத்தின் வெம்மை சில்லென்ற நீரினால் கூட அடித்து செல்லப்படவில்லை.

விதாந்தின் தந்தை கிருஷ்ணராஜன் தொழிலில் ஏற்பட்ட சரிவால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போக, லண்டனில் படித்துக்கொண்டிருந்த இருபத்தியோரு வயதே ஆன விது இந்தியாவிற்கு வந்து சேர்வதற்குள் அவனின் தாய் பார்வதிதேவியும் கணவனின் இறப்பு தாங்காது தன் மூச்சை நிறுத்திக்கொண்டார்.

உயிரற்ற தாய் தந்தையின் சடலத்தை பார்த்தவனின் கண்களில் கண்ணீருக்கு பதில் கோபமே ஊற்றெடுத்தது. என்னைத் தனியாக விட்டுச் சென்றவர்களுக்காக நான் ஏன் அழ வேண்டுமென உள்ளுக்குள் பாறையாகினான்.

அவனின் இறுகியத் தோற்றம் மனதை பாதித்துவிடுமோயென பயந்த, கிருஷ்ணனின் நண்பர் மற்றும் காரியதரிசியான மோகன் கொஞ்சமாவது அழுது உன் தக்கத்தை வெளிப்படுத்திக் கொள்ளப்பா என்றார்.

மோகனை வெறித்த பார்வை ஒன்றை பார்த்தவன்… இறப்பில் கூட சுயநலமாக என்னைவிட்டு சென்றவர்களுக்காக நான் ஏன் அங்கிள் அழ வேண்டுமென்றவன், மறுநாளே அலுவலகத்தில் புயல் போல் நுழைந்தான்.

மோகனிற்கு விதாந்தின் மனநிலை நன்கு புரிந்தது. பெற்றோரின் மீது உயிரையே வைத்திருப்பவனால் அவர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனாலே கடினமாகத் தன்னை மாற்றிக்கொண்டானென்று உணர்ந்தவர் தொழிலின் நடைமுறை சிக்கல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விளக்கமாக எடுத்துக் கூறினார்.

அனைத்தையும் கேட்டவன்… இப்போது நாம் உற்பத்தி செய்யும் உணவு பொருட்கள் துறையில் தானே பிரோப்ளேம்.. அப்புறம் எப்படி மற்ற தொழில்களும் முடக்கப்பட்டன என்று தனது சந்தேகத்தை முன் வைத்தான்.
 
#5
அது வந்து தம்பி… சார்…

முதலில் தம்பி என்று அழைத்தவர் பின் அவனின் பதவிக்கு மரியாதையளித்து சாரென்றதை கவனித்தான். இருப்பினும் அவர் சொல்ல வருவதை பொறுமையாகக் கேட்டான்.

நம் அனைத்து தொழில் பங்கீட்டையும் கிருஷ்ணன் இந்த உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தான் முதலீடு செய்திருந்தார் த..சார். நம் போர்ட் ஆப் டிரைக்டர்ஸ் இதில் பெரும் இழப்பீடு ஏற்படுமென்று சொல்லியும் தன் மீது கொண்ட நம்பிக்கையால் அவர் எடுத்த முடிவு தோல்வியடைந்ததால் தான் இந்நிலை. நாம் செய்யப்போகும் எனர்ஜி ட்ரிங்கின் பார்முலாவை எப்படியோ ஆள் வைத்து தெரிந்துகொண்ட வர்மா புட் ப்ரோடக்ட் நமக்கு முன்பே ரிலீஸ் செய்துவிட்டார்கள். இதுதான் பிரச்சினையின் மூலகாரணம்.

மோகன் சொல்லியதும்…. உடனே அனைத்து போர்ட் ஆப் டிரைகடர்சையும் நான் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றவன்… அப்படியே அந்த வர்மாவுக்கு போன் போட்டு கொடுத்துட்டு போங்க என்றான்.

சார்…. சிறுபிள்ளை விளையாட்டாக ஏதும் செய்துவிடக்கூடாதென்ற அச்சம் மோகனின் குரலில் தென்பட்டது. இருந்தும் அவன் சொன்னதை செய்தவர், எதிர்முனையில் ரிங் போகவும்.. ரிசீவரை அவனிடத்தில் கொடுத்துவிட்டு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்ய அறையைவிட்டு வெளியேறினார்.

அங்கிள்…..

கதவு வரை சென்றவர் விதாந்தின் அழைப்பில் திரும்பி பார்க்க, நீங்க என்னை தம்பியென்றே அழைக்கலாம்.. நீங்களும் எனக்கு அப்பா மாதிரிதானென்று கூறியவன் தொலைபேசியில் கவனமானான்.

மோகனும் அப்பா போலவே பிள்ளையுமென்று தனக்காகக் கூறிக்கொண்டு வெளியேறினார்.

ஹாய் மிஸ்டர். வர்மா….. அம் விதாந்த் கிருஷ்ணராஜ்.

அவனின் குரல் கம்பீரமாக ஒலித்தது. ஒரு நொடி வர்மாவே அந்தக் குரலில் அரண்டுபோனார்.

என்ன சின்ன பையா, நீ உன் அப்பன் பள்ளத்துல தள்ளிவிட்டு போன தொழிலை கையில் எடுத்திருக்கன்னு கேள்விப்பட்டேன்… என்ன என்னுடைய உதவி வேண்டுமா என்றான் நக்கலாக.

வர்மாவின் இகழ்ச்சி புரிந்தவன், அடுத்தவங்களுடைய உழைப்பைத் திருடி தான் எப்படி மேலே வர வேண்டுமென்ற மந்திரத்தை உங்களிடம் கற்றுக்கொள்ளவே இந்த சிறு பையன் தங்களை அழைத்தேன் என்றான் படுகிண்டலாக, அதில் கொதித்தெழுந்த வர்மா டேய் என்க…

காம் டவுன் மிஸ்டர் வர்மா… உங்களுக்கு வயசாகிடுச்சில்ல இப்படி கத்துனா பிபி வந்து ஹார்ட் அட்டாக் வந்திடப்போகுதென்றவன்.. ஒன்னுமில்லை, சும்மா உன்கிட்ட பேசணும் தோணுச்சு அதான் கால் பண்ணேன் என்றவனாக இணைப்பைத் துண்டித்தான். ஆனால் அவனுள் வர்மாவின் மீது கட்டுக்கடங்காத சினம் கனன்றது.

மெல்ல இருக்கையில் அமர்ந்து தன்னை நிலைப்படுத்தியவன் மீட்டிங் ஹாலை நோக்கி தனது நீண்ட எட்டுக்களை எடுத்து வைத்தான். உள்ளே நுழைந்தவன் அனைவருக்கும் நடுநாயகமாக நிற்கு, மோகன் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் அவனருகில் வந்தார்.

அறிமுகத்திற்கு இப்போது நேரமில்லை என்றவன்,

இன்னும் இருபது நாட்களில் நம் நிலையை நான் சரி செய்கிறேன். என் மீது நம்பிக்கையிருப்போர் இங்கு இந்த அறையில் இருக்கலாம். விதாந்தின் உறுதியான குரல் அங்கிருப்போரை எழுந்து செல்லாமல் தடை செய்தது.

தனது புது புராடக்டின் மூலம்.. இப்போது கண்டிருக்கும் வீழ்ச்சியை சரி செய்ய முடியுமென்றவன், லண்டனில் தான் படித்துக்கொண்டிருந்தாலும் அவ்வபோது அங்கிருக்கும் தங்களது ஏற்றுமதி உணவு பொருட்களை ரிசீவ் செய்யும் நிறுவனத்திற்கு சென்று வந்ததின் அடிப்படையில் அங்கிருக்கும் தலைசிறந்த சிஎப்’களை இங்கு வரவழைத்தான்.

அவரிகளின் மூலம்… குழந்தைகளுக்கான மிகவும் பிடித்தமான சாக்லேட்டில் புது பார்மூலா அடிப்படையில் எனர்ஜி சாக்லேட்டினை பதினைந்து நாட்களுக்குள் தயாரித்து, அடுத்த ஐந்து நாட்களில் நன்கு விளம்பரப்படுத்தி சேல்சினை அதிகரித்தான்.

ஒரு சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்கு எனர்ஜி கிடைப்பதுடன், அந்த சாக்லேட் தீங்கு விளைவிக்காத வகையில் நன்கு தரமானதாகவும் சுவை மிகுந்ததாகவும் இருந்ததால் நன்கு விற்பனையாகி உற்பத்தியும் பெருகியது. இதன் மூலம் முடங்கியிருந்த மற்ற தொழில்களையும் சரி செய்தான்.

அவனின் கூர்மையான அறிவு, உடனடியாக செயல்படும் அனைத்தையும் கண்டு மோகன் தன் கலக்கம் நீங்கினார். இனி விவி குரூப் ஆப் கம்பெனியை விது பார்த்துக்கொள்வானென்று. அவனின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக நின்றார். எந்தவொரு சூழ்நிலையிலும் விதுவின் முடிவு சரியாக இருக்குமென்று நம்பினார்.

தான் படிப்பை முடித்து வரும்வரை பொறுப்புகள் அனைத்தையும் மோகனின் கையில் ஒப்படைத்தவன், அடுத்த இரு தினங்களில் லண்டன் பறந்தான். லண்டனிலிருந்தபடியே கணினியின் மூலம் இங்கிருக்கும் அனைத்து தொழில்களையும் திறம்பட மேற்கொண்டான். படிப்பு முடிந்து மீண்டும் இந்தியா திரும்பியவனின் கைகளில் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்த மோகன் இனியும் உன் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது தம்பி, நான் முயற்சி செய்தாலும் என் வயது ஒத்து வராது என்றவர்… அவனுக்குத் துணையாக தன் மகனை காரியதரிசியாக விட்டுச் சென்றார். விது விஜயனாய் இருப்பின் அவனுக்கு நீ எந்நிலையிலும் உதவி செய்யும் தேரோட்டி கண்ணனாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். அதன்படி தீபக்கும் காரியதரிசி என்பதற்கும் மேலாக ஒரு நண்பனாக விதுவிற்கு அனைத்திலும் துணை நிற்கின்றான்.

அன்று ஆரம்பமாகிய வர்மாவின் பகை இன்று வரை ஒரு முடிவிற்கு வரவில்லை.

இன்றும் அவன் தான் வேலையாட்களுக்கிடையே தூண்டுதல் ஏற்படுத்தி பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கின்றான். அதில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்கள் மீது தாக்குதல் ஏற்பட்டதில் இரண்டு ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனாலே விதாந்த் நேரடியாக செல்ல வேண்டிய சூழல்.

அங்கு சென்று நிலைமையை சரி செய்து அடிபட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி செய்து விது வீட்டிற்கு வருவதற்கு இரவாகிவிட்டது. விதாந்த் தொழிலில் கால் வைத்ததிலிருந்து வர்மாவின் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் பல. விது நினைத்தால் ஒரு நிமிடத்தில் வர்மாவை மொத்தமாக வீழ்த்த முடியும். ஆனால், அடிபடும் பாம்பை எத்தனை முறை தான் மிதிப்பதென அமைதி காக்கின்றான். அவனின் பொறுமை எல்லை மீறும் போது வர்மா என்றொருவன் தொழில் வட்டத்தில் இருந்ததற்கான சுவடே இருக்கப்போவதில்லை.

நீ ஆடும் வரை ஆடென வேடிக்கை பார்க்கிறான் விதாந்த்.

அன்றைய நாளின் அலைச்சலினால் அலுவலகம் செல்லாமல் வீடு திரும்பியவன் தீபக்கிற்கு அழைத்து வேலைகளைப்பற்றி தெரிந்துகொண்டான். இரவு உணவை முடித்து மெத்தையில் விழுந்தவனின் சிந்தனையை மொத்தமாய் களவாடிச் சென்றது இரு கூர் விழிகள்.

மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல் அவ்விழிகளுக்குள் ஆழி பேரலையாய் உள்ளிழுக்கப்பட்டு ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான். அடுத்த நாள் நடக்கவிருக்கும் நல்லதே அவனை மாபெரும் தவற்றினை செய்ய வைக்கப்போகிறதென்பதை அறியாதவனாய் கனவுலகில் விழிகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றான்.

“கனவு… ஆசையின் திறவுகோல்…” மனதின் விருப்பம் தீரா கனவாக மாற்றம் பெரும்போது, காதலிலும் தோல்வியில்லை.
 
#7
தீராத காதல் நீயே 2 :

இரவு நேரம்... மரங்கள் யாவும் பின்னோக்கி நகர, ஜன்னலின் வழியே வாடைக்காற்று மேனியை தீண்ட, பேருந்தின் இருக்கையில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தவளின் முகம் சொல்ல முடியாத வேதனையை பிரதிபலித்தது. "கன்னம் தாண்டி உப்பு நீர் வழிந்தோடியது." இமை மூடிய விழிகளுக்குள் அன்று காலை நடந்ததை மெல்ல நினைவு கூர்ந்தாள்.

"சாராம்மா எப்படியாவது இங்கிருந்து போயிடும்மா..." அவளின் அன்னை பிரபா கலக்கமாக வீட்டிற்குள் கூட அனுமதியாது அவ்வாறு கூறினார்.

காலையில் தான் திருச்சியிலிருந்து, விழுப்புரம் அருகே இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியிருந்தாள் சாராவதி. முழுதாக நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் வந்திருக்கிறாள். விடுமுறைக்கு கூட அவள் இங்கு வருவதை பிரபா அனுமதித்தது கிடையாது. இப்போது கல்லூரி படிப்பும் முடிந்துவிட, வருகிறேனென்றால் வராதேயென்று தான் கூறுவாறென அறிந்து இறுதி தேர்வினை முடித்து.. அன்றைய தினமே பிரபாவிடம் தெரிவிக்காது ஊர் வந்து சேர்ந்தாள்.

அம்மா என்னம்மா சொல்றீங்க , நான் எப்போ வீட்டுக்கு வந்தாலும் என்னை துரத்துவதிலேயே இருக்கீங்களே.. ஏன் ம்மா..

தாயின் பதட்டமும் , பயமும் அவளுக்கு புரியவில்லை. தன் இரண்டாவது மகளின் வாழ்வையாவது நல்லவனொருவனின் கைகளில் ஒப்படைக்க வேண்டுமென்கிற தாயுள்ளம் நடக்கவிருப்பதை நினைத்து தவித்தது.

"அய்யோ.. நீ முதலில் இங்கிருந்து சென்றுவிடேன்."

தன் மகளிடம் அந்த தாய் கையெடுத்து வணங்கி கெஞ்சினார்.

வாசலில் பேச்சு சத்தம் கேட்டு முடியாத நிலையிலும் வெளிவந்து யாரென்று பார்த்த சாராவின் அக்கா சந்தியாவிற்கு தன் தங்கையை கண்டதும் உயிரே நடுங்கியது. கண்கள் அச்சத்தில் விரிய, உடல் சில்லிட்டு போக தன் தங்கையை பற்றியவாறு.. அம்மு இங்கிருந்து கிளம்புடா என்றாள்.

சந்தியா சாராவிடம் பேசியபடி இருந்தாலும், அவளின் பார்வை வீட்டினுள்ளே இருந்தது.

வந்தவளை வாவென்று உள்ளே கூட அனுமதிக்காது எதற்கு இருவரும் போ, போ, என்கிறீர்கள். சாரா சலித்தவளாய் வாசல் திண்ணையில் அமர்ந்தாள்.

அது ஒன்றுமில்லை கண்ணு.. நாளைக்கு உனக்கு கல்யாணம். உனக்கொரு நல்லது நடக்கக்கூடாதுன்னு உன் அம்மாவும், அக்காவும் அதை கெடுக்க நினைக்கிறார்கள். வீட்டிற்குள்ளிருந்து வரும் தகர டப்பா குரலில் சந்தியாவும் தாய் பிரபாவும் பயம் அப்பட்டமாக முகத்தில் தெரிய நின்றிருக்க.. சாரா தனக்கு கல்யாணமா என்று அதிர்ந்தாள்.

அடுத்த நொடி சாதாரணமாக மாப்பிள்ளை யார், என்ன பெயர், என்ன செய்கிறாரென்று பிரபாவிடம் வினவினாள்.

மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது அவர் விழித்து நிற்க... நான் தான் மாப்பிள்ளையென, வீட்டிற்குள்ளிருந்து வந்தவன் மொழிந்தான். அவன் சந்தியாவின் கணவன் வேல்பாண்டி.

சந்தியாவிற்கு ஒன்பது வருடங்கள் இளையவள் சாரா. அப்படி பார்க்கையில் சாராவிற்கும் வேலுவிற்கும் இடையில் 15 வருட வயது வித்தியாசம் இருக்கும்.

மனைவியென்று ஒருத்தி அருகிலேயே இருக்கும்போது ஒரு தலைமுறை கடந்த சிறு பெண்ணை மணக்க நினைக்கும் தன் அக்காவின் கணவன் வேலுவை ஏற இறங்க பார்த்தவள், சரி மாமா நீங்க ஆக வேண்டியதை பாருங்கள்... எனக்கு இக்கல்யாணத்திற்கு சம்மதமெனத் தெரிவித்தாள்.

மீனாவும், சந்தியாவும் அதிர்ச்சியில் கல்லென இறுகி நின்றனர்.

தனது வார்த்தைக்கு அடங்கிப் போகின்றவள் இல்லையே இவளென எண்ணிய வேலு... என்ன என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா எனக் கேட்டான்.

அவனின் சந்தேகத்தில், நொடியில் தடுமாறிய பார்வையினை மாற்றிய சாரா.. உங்களுக்கு கல்யாணமாகி 13 வருடங்களாகிறது. அக்காவிற்கு குழந்தை பிறக்குமென்கிற நம்பிக்கை எனக்குமில்லை. முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றால் மனைவியின் தங்கையை கட்டுவது நமது கிராமத்தில் ஒன்றும் புதிதில்லையே. நீங்கள் என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்றதுமே காரணம் இதுவாகத்தானிருக்குமென்று யூகித்து விட்டேன். அதனால் தான் அமைதியாக சம்மதம் சொன்னேனென்று சரளமாக பொய்யுரைத்தவள், வேலு அடுத்து ஏதேனும் கேட்டுவிடப் போகிறானென்று வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

பிரபாவிற்கு தன்னுடைய மகளின் வார்த்தைகள் புரியாவிட்டாலும்.. சந்தியா சாராவின் சூட்சூமத்தை கண்டு கொண்டாள்.

சாராவின் பதிலில் அவள் மீதெழுந்த சிறு சந்தேகமும் காணாமல் போக, உற்சாகமாக திருமண வேலைகளை கவனிக்க கிளம்பினான்.

அறைக்குள் வந்த சந்தியா, தங்கையை அணைத்து அழுது தீர்த்தாள். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து மாட்டிக்கிட்டியே சாரா, இப்போ இங்கிருந்து எப்படிம்மா தப்பிக்க போற பிரபா கவலையாகக் கேட்டார்.

அதனால் தானம்மா, எனக்கும் இதில் விருப்பம் இருப்பதைப்போல் பேசி.. அவனை திசை மாற்றியிருக்கின்றேன். இப்போது அவன் என்மீது கண்வைக்காமல் சற்று அசட்டையாக இருப்பான். இரவு அவன் உறங்கியதும் நான் ஊரை விட்டு கிளம்பி விடுகிறேன்.

அதற்குமேல் ஏதோ கூற வந்த சாராவின் வாயினை தன் கரம் கொண்டு பொத்திய சந்தியா... வேண்டாம்மா வேண்டாம், நீ எங்கே போறேன்னு எங்ககிட்ட சொல்லாதே.. நீ நல்லபடியா இருக்கியான்னு தெரிஞ்சிக்க நாங்க தொடர்பு கொண்டாலும் அந்தப்பாவி கண்டுபிடித்துவிடுவான் என்றாள். தனது அக்காவின் பாசத்தில் நெகிழ்ந்த சாரா நீங்கள் இருவரும் என்னுடன் வந்து விடுங்களென மன்றாடினாள்.

நான் இந்த வீட்டை விட்டு வெளியில் வந்தால், வேறெவனோ ஒருவனுடன் நான் ஓடிவிட்டதாக என் மானத்தை அவன் விற்றுவிடுவான் சாரா. அதனால் நீ மட்டும் போ, நீ இருக்குமிடம் வேண்டுமென்பதற்காக அவன் எங்களை எதுவும் செய்யமாட்டானென்ற சாரா தன் அன்னையை சமைக்கக் கூறினாள்.

வேலு வரும் நேரம் மூவரும் தத்தம் வேலைகளை செய்தபடி இயல்பாக இருப்பதைப்போல் காட்டிக் கொண்டனர்.

அன்றைய பொழுதினை மூவரும் நெட்டித்தள்ள இரவும் வந்து சேர்ந்தது. வீட்டிற்கு வந்த வேலு நாளை நடைபெறும் திருமணத்திற்கான முழு ஏற்பாட்டுடன் வந்திருந்தான். வந்தவன் நேராக சாராவின் அறைக்குள் நுழைய பதறிய பிரபா, அவள் தூங்கிவிட்டாளெனக் கூறி அவனை திசை மாற்றினார்.

எப்போதும் இரவு மது அருந்தாமல் உறங்காதவன்.. இன்று நல்லவனாக உணவை விழுங்கிவிட்டு சாராவின் அறை வாயிலில் கயிற்று கட்டிலைப் போட்டு படுத்துவிட்டான்.

நாமொன்று நினைத்து திட்டம் போட, இவனொன்று செய்கிறானே.. என்னுடைய இரண்டாவது பெண்ணின் வாழ்வும் இவன் கையில் தானாயென பிரபா சத்தமில்லாமல் அழுகையில் கரைந்தார்.

வேலு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்த சந்தியா, மெல்ல அறைக்குள் புகுந்து நீ இந்த அறையிலிருக்கும் பின் வாசல் வழியாக சென்றுவிடு சாராம்மா என்றாள்.

சரியென தலையாட்டிய சாரா கதவினைத் திறக்க, அங்கு ஓநாயின் வெறியுடன் வேலு நின்றிருந்தான்.

நீங்க, இப்படி எதாவது செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்டி... அதான் தூங்குவதை போல் சும்மா கண்ணை மூடி படுத்திருந்தேன் என்றவன் அந்நொடியே கையில் தாலியுடன் சாராவை நெருங்கினான்.

என்னசெய்வதென சிந்தித்த சாரா, நொடியில் சுதாரித்து வேலுவின் ஆண்மையில் தன்னுடைய பலம் கொண்டு தாக்க... சரியாக அந்நேரம் சந்தியாவும் வேலுவின் மண்டையை பின்பக்கமிருந்து கட்டையால் தாக்கினார்.

தலையில் ஏற்பட்ட அடியால் ரத்தம் வழிய தரையில் வேலு மயங்கி சரிந்தான்.

இதுதான் சமயமென்று மற்ற இருவரும் சாராவை வெளியேற்றினர். நீங்களும் என்னுடன் சந்துவிடுங்களென சாரா எவ்வளவோ கெஞ்சியும் மானத்திற்கு பயந்து சந்தியா வர மறுக்க, மூத்த மகளுக்கு பாதுகாப்பாய் தானிங்கிருந்துதான் ஆகவேண்டுமென்று கூறி பிரபாவும் மறுத்துவிட்டார்.

தன்னை காக்க.. தனது தாய் மற்றும் தாய் போன்ற சகோதரியின் வாழ்க்கையை பணயம் வைத்திருப்பதை நினைத்து கண்களில் பெருகிய விழிநீரை கூட துடைக்காது பேருந்தின் இருக்கையில் அமர்ந்திருந்தாள் சாராவதி.

"சாராவதி வாழ்வில் விதி அடுத்தென்ன வைத்துக் காத்திருக்கிறதோ."

சாராவிற்கு 10 வயதாக இருக்கும்போது சந்தியாவிற்கு திருமணம் நடந்துவிட்டது. தந்தையில்லாததால், தாயையும் தங்கையும் வேலுவின் சம்மதத்துடன் தன்னுடனே தங்க வைத்துக்கொண்டாள் சந்தியா. வேலுவிற்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலங்கள் மட்டுமே இருந்தன. பெற்றோர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஒருவர் பின் ஒருவர் இறந்தனர். வேலுவின் சித்தப்பாவின் மூலமாக அவனின் திருமணம் நடைபெற்றது. அத்தோடு அவர்களும் தங்களது கடமை முடிந்ததென ஒதுங்கிக்கொண்டனர். அதற்கு காரணம் வேலுவின் குணமே.

தினமும் பகல் இரவு பார்க்காது குடியில் மூழ்கியிருக்கும் வேலு மணம் முடித்து மூன்று மாதங்களுக்கு பிறகு தன்னுடைய சுயத்தை காட்ட ஆரம்பித்திருந்தான். தங்களுக்கு இருக்கும் ஒரே ஆண் துணை அவன்தானென எண்ணிய பெண்கள் இருவரும் வேலுவை பொறுத்துபோகக் கற்றுக்கொண்டனர். வேலுவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அவனையும், தங்களது வயிற்றினையும் பசியில்லாமல் பார்த்துக் கொண்டனர்.

குடியென்று மட்டும் அலைந்தவனின் பார்வை.. பூப்பெய்தி இளங்கன்றாய் வீட்டை வலம் வரும் சாராவின் மீது மோகமாய் படிவதைக் கண்டு சந்தியாவும், பிரபாவும் அதிர்ந்தனர்.

மகளாய் பார்க்க வேண்டியவளை தாராமாக்க நினைப்பது தவறென்று சந்தியா எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும்.. சாரா பள்ளி படிப்பினை முடித்ததும் அவளை என் மனைவியாக்கிக் கொள்வேன் என்பதில் வேலு தீவிரமாக இருந்தான்.

சாராவை திருமணம் செய்ய அவன் முன் வைத்த காரணம் சந்தியாவிற்கு குழந்தை உண்டாகாது என்கிற பெரும் பழி. இளம் வயது முதலே குடிக்கு அடிமையாகியவன், தன்னுடைய ஆண்மையையும் குடியினாலே இழந்திருந்தான். இந்த உண்மை அறிந்தும் தன் மீது பழி சுமத்துகிறானே பாவியென்று சந்தியாவால் மனதோடு மட்டுமே புலம்ப முடியும். மீறி அவள் நியாயம் பேசினால் மனைவியென்றும் பாராது தெருவில் சண்டையிழுத்து, அவளின் நடத்தையை பற்றி பல பேரிடம் புகார் வாசிப்பான். அதற்கு பயந்தே வேலுவின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காது கடந்து போக பழகியிருந்தாள் சந்தியா.
 
#8
சாராவின் பள்ளி படிப்பு முடிந்ததும் திருமணத்தில் வேலு தீவிரமாக இறங்க, அவனுக்குத் தெரியாமல்... தெரிந்தவர்கள் மூலம் சாராவை மிக கஷ்டப்பட்டு திருச்சியில் விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தாள் சந்தியா. சாராவிற்கு ஏனென்று புரியாவிட்டாலும் இவ்வளவு கஷ்டமான குடும்ப சூழ்நிலையிலும் தன்னை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கும் அக்காவிற்காக நன்றாக படித்தாள். சந்தியாவிற்கு தனது தங்கை திருச்சியில் படிக்கின்றாள் என்பதை தவிர மற்ற விவரங்கள் எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. வேலுவிற்கு பயந்து தங்கையின் இருப்பிடத்தை தான் உலறிவிட்டால் அவளின் வாழ்க்கை முடிந்து விடுமே என்கிற பயம். அந்த பயத்தினாலே தங்கையை பார்க்காது காதால் அவளின் நலன் மட்டுமறிந்து வாழ்ந்து வந்தாள்.

ஆனால், சிறுவயதிலிருந்தே பாதுகாத்த தன் தங்கை திடீரென வந்து வேலுவிடம் மாட்டிக்கொண்டதை இந்நொடி நினைத்தாலும் சந்தியாவிற்கு உடல் உதறியது.

வேலு மயக்கத்திலிருந்து எழுந்தால்..... என்கிற பயமே இரவெல்லாம் சந்தியா மற்றும் பிரபாவை நடுங்க வைத்தது.

நள்ளிரவு இரண்டு மணியளவில் சென்னை வந்து சேர்ந்த சாரா பேருந்து நிலைய இருக்கையிலேயே அடுத்து என்னவென்று யோசிக்க ஆரம்பித்தாள். அந்நேரத்திலும் மக்கள் கூட்டத்தால் சென்னை புறநகர் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது. அக்கூட்டத்தில் ஒருவர் கூட தனக்கென்றில்லையே என நினைத்தவளின் மனம் கனத்துப் போனது. ஒரு நாள் கூட அன்னை தங்கையுடன் தங்கி செல்லம் கொஞ்ச முடியாத தன் வாழ்க்கையை எண்ணி கண் கலங்கினாள்.

எவ்வளவு முயற்சித்தும் முந்தைய நாள் நிகழ்விலிருந்து சாராவால் மீள முடியவில்லை.

அடுத்து எங்கு செல்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. சாரா தான் பழகிய இடமான திருச்சிக்கே கூட சென்றிருக்கலாம். ஆனால், கல்லூரியின் இறுதி ஆண்டில் நடைபெற்ற கேம்பஸ் இன்டெர்வியூவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பெரிய கம்பெனியில் அவளுக்கு வேலை கிடைத்திருக்கிறது. தேர்வு முடிவிற்கு பிறகு வேலையில் சேருவதற்கான மின்னஞ்சல் நேர்முகத்தேர்வு முடிந்த அன்றே அனுப்பிவைத்தனர். அதற்காகவே சென்னை வந்தாள்.

இங்கு வந்த பிறகே அவளின் அறிவுக்கு எட்டியது, முடிவுகள் வர இருபது நாட்கள் உள்ளது என்பது...

*******************

சாரா கல்லூரி படிப்பு முடிந்து சொந்த ஊரில் கால்பதித்த அன்றைய காலை பொழுதில்....

உடற்பயிற்சிக்காக வீட்டை சுற்றி ஓடிய ஓட்டத்தை முடித்துக்கொண்டு... தோட்டத்து கல் மேடையில் ஆசுவாசமாக அமர்ந்தான் விதாந்த்.

அச்சமயம், அவனின் மொபைல் தனது இருப்பை தெரிவித்தது. அழைத்தது தீபக்.

சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தீபக்கின் ஒற்றை விளிப்பில் அவ்வளவு மகிழ்ச்சி துள்ளல் காணப்பட்டது.

தீபக்கின் உற்சாகம் அறிந்தும் விது அவனே சொல்லட்டுமென்று அமைதிகாத்தான். இரு நிமிட மௌனத்திற்கு பிறகு சார் இந்த வருட சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது உங்களுக்கு கிடைத்திருக்கிறதென்றான் தீபக்.

ஓகே.......

விதுவின் சரியென்ற ஒற்றை வார்த்தை பதிலில் காற்றிறங்கிய பாலூனாய் ஆனான் தீபக். இதற்கு கூட மகிழாமல் வேறெதற்குத்தான் மகிழ்வாரேன்று நொந்து கொண்டவன், மதியம் விருது வழங்கும் விழா மற்றும் அதற்கான பார்ட்டி இன்றிரவு ******* ஹோட்டலில் நடைபெருவதாகத் தெரிவித்தான்.

என்சார்பாக நீங்களே போய் வாருங்கள் தீபக் என்ற விது இணைப்பைத் துண்டித்திருந்தான்.

விதுவிற்கு இதுபோன்ற பார்டிகளில் விருப்பம் இருந்ததேயில்லை. இதுவரை இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு அவன் சென்றதுமில்லை. தாய் தந்தை இறப்பிற்கு பிறகு தன்னை மகிழ செய்யும் எந்தவொரு செயலையும் விது செய்தது இல்லை.

பெற்றோரின் இறப்பு "இதுவும் கடந்து போகும்" என்ற நிதர்சனத்தை அவனுக்கு உணர்த்தியிருந்தது. "இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை" என்பது விதுவின் நம்பிக்கை.

நேரம் இரவு ஒன்பது,

காலை அலுவலகம் வந்த விதுவை தீபக் கெஞ்சியே மதியம் நடைபெற்ற விருது விழாவிற்கும் இரவு பார்டிக்கும் வம்படியாக அழைத்து சென்றான். இதிலெல்லாம் விருப்பமில்லையென்றாலும், தீபக்கின் கெஞ்சுதலிற்காக சம்மதித்து வந்திருந்தான். இப்போது அவனிற்கு இருக்கும் ஒரே உறவு தீபக் மட்டுமே. முதலாளி தொழிலாளி என்று பழகினாலும் இருவருக்குள்ளும் சகோதர பாசம் தோன்றி வருடங்கள் பலவாயிற்று.. இருந்தும் இருவரும் இதுநாள் வரை வெளிக்காட்டிக்கொண்டதில்லை.

தீபக் என்ன கூறினாலும் அது சரியாக இருக்குமென்கிற நம்பிக்கை விதுவிடத்தில் உண்டு.

விது தீபக்கிற்கு எப்போதும் ஹீரோ வெர்ஷிப் தான். விதுவின் கம்பீரமான நடைக்கே தீபக் அடிமை. யாருமற்ற தனிமையில் வளர்ந்த விதுவின் மேல் தீபக்கிற்கு கூடுதல் பாசம். தங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாட்கள் விதுவை கோபக்காரன், திமிர் பிடித்தவனென்று யாராவது சொன்னாலே அவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவான். அப்படிப்பட்டவன், விது இவ்விருந்திற்கு வரவில்லையென்றால் பலர் வாய்க்கு அவனது பெயரே அவலாகிவிடும் என்பது அறிந்து.. அதிலிருந்து விதுவின் பெயரை காக்கவே அவனை கெஞ்சி கூட்டி வந்திருக்கின்றான்.

இன்னும் சற்று நேரத்தில் அங்கு நடக்கப்போகும் நிகழ்வினை முன்கூட்டியே அறிந்திருந்தால் தீபக் விதுவை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கமாட்டான்.

அறை முழுக்க வண்ண விளக்குகளும், பலதரப்பட்ட இசையும் ஒளி(லி)ர்ந்து கொண்டிருக்க.. நகரத்தின் முக்கிய தொழிலதிபர்களிலிருந்து, வளரும் மற்றும் தொழில் புதிதாய் அடியெடுத்து வைத்திருக்கும் அனைத்து தொழிலதிபர்களும் அங்கு கூடியிருந்தனர்.

ஆங்காங்கே வட்ட மேசையை சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தும்.. மூன்று அல்லது நான்கு பேராக நின்றபடியும் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆனால் விது இது எதையும் கண்டு கொள்ளவில்லை. தன்னிடம் பேச வந்தவர்களையும் சிறு பார்வையில் தள்ளி நிறுத்தினான்.

விருந்துக்கு வந்திருந்தோரின் பார்வை முழுவதும் விதுவே ஆட்சி செய்தான். இதுவரை யாருக்கும் முகம் காட்டிடாதவன், தீபக்கிற்காக இங்கு வந்து இளம் பெண்களுக்கு காட்சிப் பொருளானான்.

தன் மீது ஆர்வமாக படியும் பெண்களின் பார்வை எதையும் கண்டுக்கொள்ளாது, ஷாம்பையன் நிரம்பிய கோப்பையை கைகளில் ஏந்தியபடி மிடுக்குடன் தனக்காக ஒதுக்கப்பட்ட மேசைக்கு அருகிலிருக்கும் இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தான்.

முகத்தில் எந்தவொரு உணர்வையும் பிரதிபலிக்காது அமர்ந்திருந்த விதுவின் இதழில் தன்னவளை நினைத்து கீற்று போன்று புன்னகை அரும்பியது. ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பது போல் வாய் பிளந்து தீபக் பார்க்க,

ஏன்டா அப்படி பார்க்குற, இங்கிருக்கும் பெண்கள் தான் என்னை சைட் அடிக்கிறார்கள் என்றால் நீயும் ஏன்டா இப்படி பார்த்து வைக்கிறாய். விது தீபக்கிடம் சலித்துக் கொண்டான்.

அந்நேரம் அங்கிருந்தோர் அனைவரிடத்திலும் சிறு சலசலப்பு ஏற்பட, வர்மா தன்னுடைய மகளுடன் விருந்து நடைபெறும் அறைக்குள் நுழைந்தார்.

வர்மாவை பார்த்தும் விதுவின் இடத்தில் எந்தவொரு அசைவும் கிடையாது. தீபக் மட்டும் மரியாதை நிமித்தமாக கை குலுக்கினான். வர்மாவின் பக்கத்தில் அல்ட்ரா மாடர்னாக நின்றுந்த யுவதியின் பார்வை விதுவை மொத்தமாக விழுங்கியது. அவளின் அளவுக்கு அதிகமான ஒப்பணையும், அளவுக்கு குறைவான உடையும் தீபக்கினை முகம் சுளிக்க செய்தது. அவள் ஹாய்யென்று நீட்டிய கையை கூட குலுக்க பிடிக்காது கரம் குவித்து வணக்கம் என்றதோடு தீபக்கும் இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

விது தொழிலை கையினில் எடுக்கும் வரை.. வர்மாவிற்கே முதலிடம் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. ஆனால் விதுவின் முதல் அடியும்.. அவனின் வளர்ச்சியும் வர்மாவுக்கு தொடர்ந்து இரண்டாம் இடத்தையே பரிசாக அளித்து வருகிறது.

விதுவின் முதலிடத்தை பிடிப்பதற்கே வர்மா இன்றளவும் பல தொழில்முறை பிரச்சினைகளை விதுவிற்கு கொடுத்து வருகிறான். அதையெல்லாம் தூசு போல் தட்டிவிட்டு தன் பாதையில் மட்டுமே விது கவனமாக இருக்கின்றான்.

இறுதியாக தொழிலாளர்களிடையே ஏற்படுத்திய பிரச்சினை கூட அவருக்கு சாதகமாக அமையவில்லை. ஆதலால் இம்முறை தன் மகளை ஈடுபடுத்த நினைத்தவர் ஒரு திட்டமும் வகுத்தார். தனது மகளை விதுவிற்கு மணம் முடித்து வைத்து, விதுவின் அனைத்து தொழில்களிலும் தன்னுடைய மகளையும் பங்குதாரராக ஈடுபடுத்தி.. தானிழந்ததை தன் மகள் அடைய வேண்டுமென தீர்மானித்தார்.

அதன் முதல் படியாகவே தனது மகள் ஷில்பாவை இவ்விருந்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.

விருந்திற்கு வந்திருக்கும் பல இளம் பெண்களின் பார்வை விதுவின் மீதே சூழ்ந்திருந்தாலும் யாரும் அவனருகில் கூட செல்லவில்லை. அதற்கு காரணம், விதுவின் குணம் தெரிந்திருந்ததாலே.. பெண்களை பார்வையாலே எச்சரித்து எட்ட நிறுத்துவதும்.. உலக அழகியே முன் தோன்றினாலும் உணர்ச்சியற்ற பார்வையுடன் கடந்து சென்றுவிடுவான். இதனை அறிந்திடாத ஷில்பா சில நொடிகளில் விதுவினால் மூக்கு அறுபட போவதை வர்மாவும் அறிந்திருக்கவில்லை.

எப்பவும் தன்னை பார்வையாலே எரிக்கும் வர்மா.. இன்று தன்னுடைய மேசையில் அமர்ந்திருப்பது சந்தேகத்தை தோற்றுவித்தாலும் பூனைக்குட்டி வெளியே வந்துதானே ஆக வேண்டுமென அமைதி காத்தான்.

நிமிடங்கள் சில அமைதியில் கழிய....

வர்மா ஷில்பாவை தீபக்கிற்கு அறிமுகம் செய்வதைப்போன்று விதுவிற்கு அறிமுகப்படுத்தினார். அதையெல்லாம் எவ்வித உணர்வுகளையும் பிரதிபலிக்காது தனது தோரணையையும் மாற்றாது.. அருந்தாது பெயருக்காக கையினில் வைத்திருக்கும் ஷாம்பையன் குவலையிலேயே பார்வையை பதித்திருந்தான்.

விது வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துவதாக எண்ணிய வர்மா.. தனது காரியம் தான் பெரிதென பொறுமையை கடைபிடித்தார். இருப்பினும் தன்னுடைய பொறுமையின் அளவு அறிந்தவர், ஷில்பாவிடம் கண்ணால் சைகை செய்து அங்கிருந்து அகன்று தனது நண்பர்கள் குழுவிடம் சென்றுவிட்டார்.

இனி விதுவை தன் மகள் வழிக்கு கொண்டு வந்து விடுவாள் என்பது அவரின் எண்ணம்.

ஆனால் அவன் தான் நினைப்பதைப் போல் பெண்களிடம் மயங்கி விழும் சாதாரண ஆணல்ல.. விதாந்த் வித்யூத் என்பதை அறிந்திருக்கவில்லை.
 
#9
Super Super pa... Nice episode... Ava மாமா vuku ivala ரெண்டாம் தாரமாக கல்யாணம் pannikanum ஆசை ah அதுனால தான் avala வரவிடாமல் pannaga la ava அம்மா yum akka vum ithu theriyaamal வந்து maatikita.... அவன் கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் pannitaan... Night thappichi varathuku la போதும் nu pochi avana adichitaanugale கண்ணு vizhichaana ava அம்மா vayum akka vayum enna பண்ணுவா no... Velai சென்னை la so. Chennai vanthutaa..