Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
படைப்புகளால் அசத்தும் பாத்திர வியாபாரி!


பெ.ஸ்ரீனிவாசன்
படைப்பாளர்கள் எங்கிருந்து தோன்றுவார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர் களிடமிருந்து சிறந்த படைப்புகள் வெளிவரும். அதேசமயம், கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதரிடமிருந்தும், துப்பரவுப் பணி செய்பவரிடமிருந்தும், ஏன், பாலியல் தொழில் செய்தவரிடமிருந்தும்கூட நல்ல படைப்புகள் வெளியாகியுள்ளன. படைப்பாளர்களிடம் எந்த பேதமும் இருக்காது. அந்த வகையில், திருப்பூரில் பாத்திர வியாபாரி, தனது படைப்புகளால் அசத்திக் கொண்டிருக்கிறார்.
திருப்பூர் நகரம் பல தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றிய வரலாற்றையும், பெருமையையும் கொண்டது. முழுநேரமும் பரபரப்பாக இயங்கி வரும் இந்நகரில், ஒரு பாத்திர வியாபாரி படைப்பாளியாக மாறிய நிகழ்வும் உண்டு.
திருப்பூர் மேட்டுப்பாளையம் அருகே யுள்ள எஸ்.வி.காலனியைச் சேர்ந்தவர் காரமடை மகன் ஜோதி(58). தினமும் 50 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து, திருப்பூர் வீதிகளில் மிதிவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தமிழ் மற்றும் படைப்புலகின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், தனக்கிருந்த சூழ்நிலைத் தடைகளை மீறி `ஒரு சாமானியனின் கவிதை` என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது `ஒரு சாமானியனின் ஒருபக்க கதைகள்` என்ற பெயரில் 100 கதைகள் அடங்கிய தொகுப்பை எழுதிவருகிறார். திருப்பூரில் வீதிகளில் தனது கவிதை களை பாடல்களாக மாற்றிப் பாடியபடி, வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரிடம் பேசி னோம்.
"எங்களுக்கு பூர்வீகம் பல்லடம் அருகேயுள்ள மந்திரிபாளையம். வீட்டுச் சூழல் காரணமாக, பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, நெசவுத் தொழிலில் ஈடுபட்டேன். போதிய வருமானம் கிடைக் காத காரணத்தால் 1984-ம் ஆண்டிலிருந்து பாத்திர வியாபாரத்துக்கு மாறினேன். இப்போது வரை அதே தொழில் தொடர் கிறது. தினமும்ரூ.200 முதல் ரூ.400 வரை வருவாய் கிடைக்கிறது.
18 வயதில் காதல் கவிதை
பள்ளியில் படிக்கும் போது தமிழ் மற்றும் சரித்திரப் பாடங்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்புக்குமேல் படிக்கமுடியவில்லை. எனக்கு 18 வயது இருக்கும்போது ஒருதலைக் காதல் காரணமாக கவிதை எழுதத் தொடங்கினேன். எழுதும்கவிதைகளை பிறரிடம் காட்டி கருத்துகளைக் கேட்கும் பழக்கமும் எனக்கு இருந்தது.
நல்ல கவிதைகளை எழுதும்போது, பிறர் பாராட்டுவதுண்டு. அவ்வாறு ஆரம்பித்த எழுத்துப் பழக்கம், தற்போது சமூக விழிப்புணர்வுக் கதைகள் எழுதும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஒருகட்டத்தில் எனது கவிதைகளைப் பார்த்த, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர், சமூகம் சார்ந்த கருத்துகளை எழுதுமாறு அறிவுறுத்தினர். அதற்குப் பிறகு, நான் வசிக்கும் திருப்பூர், நாள்தோறும் சந்திக்கும் மக்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து கவிதைகள், கருத்துகள், கதைகளை எழுதத் தொடங்கினேன். ஜாதி மற்றும் வறுமை ஒழிப்பை மூலமாக வைத்தும், தொடர்ந்து எழுதிவருகிறேன். யாரேனும் விரும்பிக் கேட்டால், கோயில்கள் தொடர்பான பாடல்களையும் எழுதிக் கொடுக்கிறேன்.
எனது படைப்புகளைப் பார்த்து எழுப்பப்படும் கேள்விகள், எனது தேடலுக்கான தேவையை அதிகரிக்கின்றன. உழைப்புக்கு நடுவே கிடைக்கும் நேரத்தில், என் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு விடைகளைத் தேடுகிறேன்.
படைப்புலகில் நான் யாரையும் பார்த்து பொறாமை கொண்டதில்லை. பொறாமை கொண்டால் என்னிடம் சரக்கு இல்லை என்பதே அர்த்தம். எனது படைப்புகள் மூலமாக யாரிடமாவது, ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த எண்ணத்தில்தான், ஜாதி, வறுமை ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றார் உறுதியுடன்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ராட்சத பெண் சுறாவை நெருங்கி நேரலை செய்த நீர்மூழ்கி வீரர்கள்; ஹவாயில் சாகசம்


உலகத்திலேயே மிகவும் பெரிய ராட்சத சுறாவுக்கு அருகில் சென்று, உயிருடன் திரும்பியுள்ளனர் நீர்மூழ்கி வீரர்கள் குழுவினர். இந்த சாகச சம்பவம் ஹவாயில் நடந்துள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அடர் நீல (Deep Blue) சுறாவான இது, 20 அடி நீளமும் சுமார் 2.5 டன் எடையும் கொண்டது.
ஓஹு தெற்கு கடற்கரைப் பகுதியில் இறந்த திமிங்கலம் ஒன்றின் உடல் மிதந்தது. அதை நோக்கி ராட்சத சுறா வந்தபோது நீர்மூழ்கி வீரர்கள் அதைக் கண்டுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய நீர்மூழ்கி வீரர்களில் ஒருவர் ''ஓஷன் ராமெசா, புலி சுறாக்கள் திமிங்கலம் ஒன்றுக்கு அருகில் வந்தபோதுதான் ராட்சத சுறாவைப் பார்த்தோம்.
பெண் சுறா வந்தவுடன் மற்ற புலி சுறாக்கள் வேகமாகக் கலைந்து சென்றன. உடனே பெண் சுறா, படகின் மீது உரசியது.
ராட்சத வடிவில் அழகாக இருந்த பெண் சுறா, எங்களின் படகை உராய்வதற்கான இடமாகப் பயன்படுத்த விரும்பியது. நாங்கள் மெதுவாக அதன் அருகில் சென்றோம்; தொட்டுப் பார்த்தோம். நேரலையும் செய்தோம்.


அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது சென்ற நாங்கள், நாள் முழுவதும் பெண் சுறாவுடன் இருந்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


காஷ்மீரையும் அதன் கலாச்சாரத்தையும் வடிவமைப்பதற்குப் பங்காற்றிய பெண்களைக் கவுரப்படுத்தும் விதமாக காஷ்மீரிய பெண்கள் வடிவமைப்புக் கூட்டமைப்பின் (Kashmiri Women’s Design Collective) ஓவியர்கள் 2019-ம் ஆண்டுக்கான காலண்டரை வடிவமைத்திருக்கின்றனர்.
“காஷ்மீர் மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களுக்கு இது எங்களின் சிறிய அஞ்சலி. வரலாறு எப்போதும் பெண்களிடம் இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.
எங்கள் தூரிகையின் கோடுகளால் வரலாற்றுக்கு மறுவிளக்கம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கின்றனர் காஷ்மீரிய பெண்கள் வடிவமைப்புக் கூட்டமைப்பின் ஓவியர்கள்.


காஷ்மீரை ஆண்ட ராணிகள் தித்தா (கி.பி. 979 – 1003), கோட் ராணி (14-ம் நூற்றாண்டு), கவிஞர்கள் லால் தைத் என்ற பெயரால் அறியப்பட்ட லல்லேஷ்வரி (14-ம் நூற்றாண்டு), ஹப்பா காதூன் (1554 - 1609), ரூப் பவானி (17-ம் நூற்றாண்டு), அர்ணிமால் (18-ம் நூற்றாண்டு), பெண் கல்வியை முன்னெடுத்த ஆசிரியர் மிஸ் முரியல் மல்லின்சன் (20-ம் நூற்றாண்டு), புகழ்பெற்ற பாடகி ராஜ் பேகம் (20-ம் நூற்றாண்டு), கல்வித் துறையின் ஊழலை எதிர்த்துப் போராடிய அதிகாரி ஹனிஃபா சபு, லால் தைத் பெண்கள் மருத்துவமனை தொடங்கிய மருத்துவர் கிரிஜா தர், காஷ்மீர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக மீரஸ் மஹால் என்ற அருங்காட்சியகம் தொடங்கிய அத்திகா பானோ, பிரிவினையின்போது பெண்கள் கல்வி கற்க உதவிய அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கியானி மோகன் கவுர், எழுபது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் விவகாரத்தில் பேரிழப்பு, வேதனை, அநீதியை அனுபவித்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆகியோரின் ஓவியங்கள் இந்த காலண்டரின் பக்கங்களில் இடம்பிடித்திருக்கின்றன.
ஓவியர் ஒனைஸா த்ராபூ முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குப் பலதரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


கலை உலகில் ஆதர்சத் தம்பதியாக உலகம் முழுவதும் பல மாணவர்களை உருவாக்கிவருபவர்கள் சாந்தா தனஞ்செயன் - தனஞ்செயன். மியூசிக் அகாடமியின் பெருமைமிகு ‘நிருத்ய கலாநிதி’ விருதைப் பெற்றிருக்கிறார் சாந்தா தனஞ்செயன். கலைத் துறையில் இவரது அர்ப்பணிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. “இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுவதாக உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இந்த விருதைப் பெற்றார்” என்று தங்களின் அன்னியோன்யமான உறவைக் கோடிட்டுக் காட்டுகிறார் சாந்தா.
பரத நாட்டியம் தொடக்கத்தில் ஆலயத்தில் இறைவனுக் காக அர்ப் பணிக்கப்பட்ட கலையாக இருந்தது. ஆலயத்துக்கு வருகிற சாமானிய மக்களும் அதை ரசித்தனர். அதன்பின் அரசு தர்பார் களிலும் ஆடப்பட்டது. தற்போது சபாக்களில் மட்டுமே அரங் கேறும் கலையாக இருக்கிறது. சாமானிய மக்களிடமிருந்து பரத நாட்டியம் விலகிவிட்டதாக நினைக்கிறீர்களா?
சாமானிய மக்களிடமிருந்து பரத நாட்டியம் எப்போதும் விலகாமல்தான் இருக்கிறது. கோயிலில் ஆடினாலும் சரி, சபா மேடைகளில் ஆடினாலும் சரி எங்கு ஆடுவது என்பதைவிட எப்படி ஆடுகிறோம் என்பதே முக்கியம். நாட்டியம் பண்றவங்களுக்கு அது எங்கு நடந்தாலும் அது தெய்வாலயம்தான். வகுப்பில் ஆடினாலும் நான் கோயிலில் ஆடுவதுபோல் உணர்ந்துதான் ஆடுவேன்.
நடன சம்பிரதாயத்தில் பல மாற்றங்கள் வந்தாலும், அதன் அடிப்படை இறைவனை அடையும் வழியாகத்தான் பார்க்கிறேன். முச்சந்தியில் ஆடினாலும் கலையின் உன்னதம் வெளிப்பட வேண்டும். தெய்விகமாக நினைத்துச் செய்ய வேண்டிய கலை வடிவம் அது. எந்த இடத்தில் ஆடினாலும் அதன் தத்துவத்தில் மாற்றம் இல்லை.
எந்த ஆண்டிலிருந்து நீங்கள் இருவரும் ஒன்றாக மேடையில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தீர்கள்?
கலாஷேத்ராவில் ருக்மிணி தேவி அருண்டேலிடம் பரத நாட்டியம் கற்ற நாங்கள் அங்கேயே பல ஆண்டு கள் இருந்தோம். அதன்பின் ‘பரத கலாஞ்சலி’யை 1968-ல் தொடங்கினோம். அப்போது நான் கருவுற்றிருந்தேன். குழந்தை பிறந்தபின், 1969-ல் தனியாக நிகழ்ச்சிகள் நடத்தினோம். திருமண மேடைகளிலும் சுற்றுலாத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாய்ப்புக் கிடைத்தது.
நாரத கான சபாவில்கூட நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். அதன்பின் மியூசிக் அகாடமி போன்ற பல இடங்களிலும் நிகழ்ச்சிகளை அளித்தோம். இன்றுபோல் சபாக்களின் ஆதரவு பெரிதாக அன்றைக்கு இல்லாத நிலையிலும் மிகவும் மெதுவாக அதேநேரம் ஆணித்தரமாக எங்களின் நாட்டியத் தடத்தைப் பதித்தோம்.


நாயகன், நாயகி பாவங்களை அடியொற்றியே பரத நாட்டியம் எனும் கலை வடிவம் பெரும்பாலும் அரங்கேறிவருகிறது. காலத்துக் கேற்ற மாற்றம் ஒரு கலைக்குத் தேவைதானே?
கலை உணர்வோடு எந்த மாற்றத்தையும் புதுமை என்னும் வடிவத்தில் தரலாம். சாப்பாட்டில் மரபார்ந்த சமையல் உண்டு; புதுமையான வழிகளும் உண்டு. பெருங் காயத்தோடு சமைப்பது, வெங்காயம் இல்லாமல் சமைப்பது இப்படிப் பல ருசிகள் உண்டு. இதற்கு நாட்டியமும் விதிவிலக்கல்ல. அழகாக தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செய்பவர்களும் உண்டு.
ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காகப் புதுமைகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறவர்களும் உண்டு.
‘வள்ளி திருமணம்’ எல்லோரும் அறிந்த நாட்டிய நாடகம். நாங்கள் இருவரும் இணைந்து நிகழ்த்திய ‘ராமாயணம்’ நாட்டிய நாடகம் அந்த நாளில் புதுமையானதாக மதிக்கப்பட்டது. காரணம் அப்போதெல்லாம் ராமாயணம் என்றால் ராமரின் உடலில் வண்ணம் பூசுவது முதல் ராவணனுக்குப் பத்துத் தலைகளைக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால், நாங்கள் நடத்தியதில் கதாபாத்திரங்களுக்கேற்ற வேடம் போடாமல், இயல்பான நாட்டிய உடை அணிந்து நடனமாடினோம். இதற்கு ஆதரவு கிடைக்குமா என்று முதலில் தயங்கினோம். ஆனால், அதன்பின் அதுவே ஒரு டிரெண்டானது.
‘ஜங்கிள் புக்’ கதையை அமெரிக்காவின் ஒஹையோ டான்ஸ் பாலே குழுவுடன் இணைந்து நிகழ்த்தினோம். முழுக்க முழுக்க இசையை மட்டுமே ஆதாரமாகக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்திய பாணியில் நாங்கள் ஆடினோம். ‘ஜங்கிள் புக்’ நிகழ்ச்சியை இந்த ஆண்டு இந்தியாவின் பல இடங்களிலும் நிகழ்த்த இருக்கிறோம்.
அதற்கும் முன்பாக, சிதார் மேதை பண்டிட் ரவிஷங்கரின் கதைக்கு தனஞ்செயன் நாட்டிய வடிவம் கொடுத்தார். கனஷியாம் என்னும் மேதையின் பாதை, போதையால் எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. பண்டிட் ரவிஷங்கரின் தயாரிப்பில் இந்த நாட்டிய நாடகத்தை லண்டன் பர்மிங்ஹாம் மேடையில் நிகழ்த்தினோம். பின்னாளில், அந்த நாட்டிய நாடகம் நாரத கான சபாவிலும் அரங்கேறியது.
அதே போல் ‘அசோக சங்கமித்ரா’ என்னும் நாட்டிய நாடகத்தையும் மேடைகளில் நிகழ்த்தியிருக்கிறோம். இதெல்லாம் மேதைகளுடன் இணைந்து செய்த சில நிகழ்ச்சிகள். இவை உலகம் முழுவதும் எங்களை அறிமுகப்படுத்தின. அதேநேரம் நாயக, நாயகி பாவங்கள் இல்லாத பல புதுமைகளையும் இந்தப் படைப்புகள் தன்னியல்பாகக் கொண்டிருந்தன.
கலை கலைக்காக மட்டுமே என்பது சரியா?
கலை நம்மையும் உயர்த்த வேண்டும். ரசிகனையும் உயர்த்த வேண்டும். ‘பாவம்’, அபிநயம், ரசம் ஆகிய மூன்றும் கலையின் அங்கங்கள். ரசம் - இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வது. கலை உணர்வு ஒரு தொடர் சங்கிலி. ராமா கிருஷ்ணா கோவிந்தா ஆடினாலும் சரி, ‘ஜங்கிள் புக்’கிற்கு ஆடினாலும் சரி, அதில் கலையின் உன்னதம் வெளிப்பட வேண்டும்; அதுதான் முக்கியம். முக்கியமாக ரசிகர்களின் கலை உணர்வை உயர்த்த வேண்டும்.
நடனத்துக்கான வரவேற்பு குறைந்து வருகிறதே..
முக்கியமான விஷயம் இது. ‘தேவையைவிட உற்பத்தி அதிகம்’ என்பதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். சிலர் காசு கொடுத்து ஆடுகிறார்கள். காசு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கோயில்களிலேயே அரங்கேற்றங்களை நடத்தலாம். பரத கலாஞ்சலியிலேயே நாங்கள் சிறிய அளவில் அரங்கேற்றங்களை நடத்துகிறோம். நிறையப் பேர் திறமையோடு இருக்கின்றனர்.
நிறையப் பேர் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், எல்லாருமே மேடையில் ஆட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் வாத்தியாராகலாம். ஆராய்ச்சியாளர்களாக ஆகலாம். இதைச் சரியாகக் கணிப்பதற்கு ஒரு தேர்ந்த குருவால்தான் முடியும். நாங்கள் அப்படித்தான் செய்கிறோம்.
நடராஜரே கலைக்கான கடவுளாக இருக்கும்போது, ஆண் நடனக் கலைஞர்களுக்குப் பெரிதாக வரவேற்பில்லையே?
கலைக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. விருது வாங்கும்போதே நான் இதைத்தான் சொன்னேன். நான் இரண்டாவதாக இந்த விருதை வாங்குகிறேன் என்று சொன்னது, என்னுடைய கணவர் இதற்கு முன் விருது வாங்கியதைக் குறிப்பிட்டதன் மூலம் அவரில் பாதி நான், என்னில் பாதி அவர் என்பதைத்தான். ஆண் கலைஞர்களுக்கான வரவேற்பு இப்போது அதிகரித்து வருகிறது. மியூசிக் அகாடமியிலேயே நான்கு ஆண் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.


ஒரு தனியார் தொலைபேசி விளம்பரத்துக்காகப் பறந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஏதோ சின்ன விளம்பரப் படம் என்றுதான் நினைத்தோம். ஆனால், கோவாவுக்குச் சென்றபின்தான் புரிந்தது. அதைத் தொடர்ச்சியான ஒரு கதைபோல் வடிவமைத்திருந்தனர். அந்தத் துறையில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான புதிய அனுபவமாக அது இருந்தது. இரண்டு நாள் பயிற்சி கொடுத்திருந்தால் நான் பாராசெய்லிங் கற்றுக்கொண்டிருந்திருப்பேன்.
சில நொடிகள் காற்றில் பறந்த அனுபவமே அலாதியாக இருந்தது. அதைத் தொடர்ந்து ராஜீவ் மேனனின் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தில் நெடுமுடி வேணுவுக்கு மனைவியாக நடித்திருக்கிறேன். அதுவும் புதிய அனுபவமாக இருந்தது.
ஒரு குழந்தை நாட்டியத்தின் பால பாடத்தைத் தொடங்கும்போதே, அரங்கேற்றத்துக்கு நாள் குறிக்கும் பெற்றோர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அரங்கேற்றத்தை முன்னிறுத்தி மட்டுமே நாங்கள் குழந்தைகளைத் தயார்படுத்துவதில்லை. ஒரு நல்ல குடிமகனுக்கு நம்முடைய பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுப்பது தான் எங்கள் முக்கிய நோக்கமாக இருக்கும். நீங்கள் சொல்லும் மனப் பான்மையுடன் பெற்றோர்கள் இருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றே.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28


அன்றைய பணிகளை முடித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள். ஆசிரியர் கனகலட்சுமி வந்தவுடன் புத்தகத்தில் உயிர் எழுத்து, மெய்யெழுத்துகளை உச்சரித்துக்கொண்டேஎழுதத் தொடங்கினர்.
தாய் மொழிக்கு முக்கியத்துவம்
சென்னை ஷெனாய் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் முனைவர் கனகலட்சுமி. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ‘கசடறக் கற்க கற்பிக்க தமிழ் வாசிக்க எழுத 45 நாட்கள்’ புத்தகம் தமிழ் படிக்க, எழுதத் தெரியாத மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. அதேபோல் கணக்குப் பாடத்தை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும்வகையில் ‘கணக்கு கையேடு’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகங்களின் பயன்பாடு குறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வாக்கியங்களைப் பிழையில்லாமல் எழுதவும் சரளமாகப் படிக்கவும் செய்துள்ளனர். அதேபோல் இவரின் புத்தகங்களை வைத்துத் தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
“தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வளைவுக்கும் வரிவடிவங்களுக்கான ஒலி வடிவ முறை உண்டு. ஆனால், நாம் ஒலிவடிவங்களை மறந்ததன் விளைவு பிள்ளைகளுக்குத் தமிழை எழுதக் கற்றுத்தருவதற்குப் பதிலாக ஓவியம் போல் வரையவே கற்றுக்கொடுக்கிறோம். இது மாற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் இலங்கியங்களில் தமிழ் எழுத்துக்கள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதை ஆய்வுசெய்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன்” என்கிறார் கனகலட்சுமி.
தற்போது முதியோர் கல்விக்கு இந்தப் புத்தகம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான முன்னோட்ட வகுப்புகள் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் நடத்தப்பட்டுவருகிறது.
குழந்தைத் தொழிலாளர்களுக்கான முதல் பள்ளி
கனகலட்சுமியின் சொந்த ஊர் கோவில்பட்டி. பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை சராசரி மாணவியாகவே இருந்திருக்கிறார். அம்மா சுப்புலட்சுமி இறந்துவிட்ட நிலையில் அப்பாவின் கனவை நனவாக்கவே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்தார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், ஆசிரியர் பயிற்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். தனியார் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள கடுக்காய் வலசை கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றினார். மாணவர்களுக்குப் புரியும்வகையில் எளிமையாகக் கற்பித்ததால் போகலூர் ஒன்றியத்தின் ஆசிரியர் பயிற்றுநுர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார்.
இந்நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் உள்ள குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார். தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாகக் குழந்தைத் தொழிலாளர்களுக்கான பள்ளியை இவர் தொடங்கினார்.
உலக சாதனை
இவரது புத்தகத்தைக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எளிமையான முறையில் தமிழைக் கற்பிக்கும் முறை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் 1,56,170 அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழை வாசிக்கச் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்தியதற்காக அமெரிக்காவின் உலக சாதனை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவே தனக்கு வந்த பணி உயர்வையெல்லாம் தவிர்த்திருக்கிறார். “வாழ்வின் இறுதிவரை தமிழ் மொழிக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே லட்சியம்” என்கிறார் ஆசிரியை கனகலட்சுமி.கனகலட்சுமி