அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

தினம் ஒரு தகவல்

இந்தியாவிலேயே முதல் முறையாக சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்ற பெண் வழக்கறிஞர்: பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
திருப்பத்தூர்
இந்தியாவிலேயே முதல் முறையாக திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளார். அவருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிநேகா(34). இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சிநேகா சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழை சமீபத்தில் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பல்வேறு தரப்பினர் அவரை தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சிநேகாவின் கணவர் பார்த்திபராஜா ‘இந்து தமிழ்’ திசை நாளிதழுக்கு கூறும்போது," கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராட்டம் என கூறலாம். நாங்கள் இருவரும் சாதி, மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள். எங்களது திருமணம் கடந்த 2005-ம் ஆண்டு தாலி மறுப்பு, சடங்கு மறுப்புடன் தான் நடைபெற்றது. இந்த திருமண பந்தத்தின் மூலம் குடும்ப நலனுக்காக எங்கள் சொந்த நலனை விட்டு கொடுப்பது என்றும், சமூக நலனுக்கான குடும்ப நலனை விட்டு கொடுப்பது என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். எனது மனைவி குழந்தையாக பள்ளியில் சேரும்போது, சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்று, சட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.
எங்களுக்கு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம்,பவுத்தம் (புத்தர்) ஆகிய மதங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்துள்ளோம். எங்கள் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு பள்ளியில் சேர்த்துள்ளோம். இதன் மூலம் அரசு இட ஒதுக்கீடு கிடைக்காது என்பது தெரியும். இட ஒதுக்கீடு மீது அதிக நம்பிக்கை இருந்தாலும், சாதி, மதம் இல்லாமல் இருப்பது முக்கியமாக கருதினோம். அதன் அடிப்படையில் தான் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற கடந்த 10 ஆண்டுகளாக போராடி, தற்போது வெற்றி பெற்றுள்ளோம். ஆரம்பத்தில் இதுபோன்ற சான்றிதழ் கொடுக்க முடியாது எனக்கூறிய வருவாய்த் துறையினரிடம் பல்வேறு எடுத்துக்காட்டுகளை சமர்ப்பித்து சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிழை பெற்றுள்ளோம்" என்றார்.
இது குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, "சாதியை குறிப்பிடாமல் இதுவரை யாருக்கும் சான்றிதழ் வழங்கவில்லை. முதல் முறையாக வழக்கறிஞர் சிநேகாவுக்கு சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாணையில் இடம் உள்ளது. பல்வேறு அரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்ட பிறகே அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிநேகாவின் மூதாதையர்கள் சாதி,மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு ஆவணங்களை காட்டியுள்ளதால், அதன் அடிப்படையில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு சலுகைகள் அவருக்கு கிடைக்காது என்றாலும், இது போன்ற சான்றிதழ் வழங்க அரசாணையில் இடம் உள்ளது" என்றார்.
 
திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு: திருப்பாம்புரத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பகோணம்திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ராகு பகவானுக்கு நேற்று நடைபெற்ற மகா தீபாராதனை.

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள் ளம், திருப்பாம்புரம் கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திரு நாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் நாகவல்லி, நாககன்னி ஆகிய துணைவியருடன் மங்கள ராகுவாக, ராகு பகவான் அருள் பாலித்து வருகிறார். இங்கு, ராகு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற் றது. நேற்று மதியம் 1.24 மணிக்கு ராகு பகவான் கடக ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். முன்னதாக, கோயில் வளாகத்தில் நேற்று காலை பூர்ணாஹூதி, தொடர்ந்து புனித நீர் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, ராகு சன்னதியில் பால், மஞ்சள், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடத் தப்பட்டது. தொடர்ந்து, ராகு பெயர்ச் சியின்போது மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ரிஷபம், மிது னம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக் காரர்கள் பரிகார பூஜையில் பங் கேற்று வழிபட்டனர். பின்னர், நேற்று இரவு வெள்ளி சேஷ வாகனத்தில் ராகு பகவான் வீதியுலா நடைபெற் றது. 2-ம் கட்ட லட்சார்ச்சனை இன்று (பிப்.14) தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கேது பகவான் கும்ப ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது தலமான சவுந்திரநாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் நேற்று மதியம் விக்னேஷ்வர பூஜை, ராசி பரிகார சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கேது பகவானுக்கு பால், சந்தன அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.
திருப்பாம்புரம்
இதேபோல, தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு-கேது தல மான திருப்பாம்புரம் சேஷபுரீஸ் வரர் கோயிலில் பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி ராகு-கேது பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் 2.02 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, இன்று (பிப்.14) ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
 
மதுரைகூடங்குளம் அணுமின் நிலையம் | கோப்புப் படம்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய நிலம் வழங்கிய குடும்பங்களில் தலா ஒருவருக்கு அணுமின் நிலைய சி, டி பிரிவில் வேலைவாய்ப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அப்பாவு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைய நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவு வேலைகளில் முன்னுரிமை வழங்க 12.2.1999-ல் ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது.
இந்நிலையில், அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்தேர்வு தொடர்பாக கடந்த ஏப்.18-ல் அறிவிப்பாணை வெளியானது. அதில், நிலம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அறிவிப்பாணையை ரத்து செய்து, நிலம் வழங்கியவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்குப்பின்வந்த அறிவிப்பாணையை செயல்படுத்த உயர் நீதிமன்ற அமர்வு தடைஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அணுமின் நிலையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 3 மற்றும் 4-வது அணுஉலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் சி மற்றும் டி பிரிவில் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் சி, டி பணியாளர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "இடம் அளித்தவர்களுக்கு வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிலம் வழங்கியதற்கான சான்றிதழ், கல்விச் சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிப்.28-க்குள் அணுமின் நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எத்தனை பேர் தகுதியுடையவர்கள், நிராகரிக்கப்பட்டவை எத்தனை? ஏன்? என்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
 
என் இனிய இயந்திரா... கோவையில் அசத்தும் `ரோபோ சர்வர்’ஏம்பா சர்வர், தோசைக்கு சட்னி கேட்டு எவ்வளவு நேரமாச்சு. இப்பத்தான் தேங்காய் அரைச்சிக்கிட்டிருக்கீங்களா... இந்த ஹோட்டல்ல இதே தொல்லைப்பா. ஆர்டர் கொடுத்து அரை மணி நேரமாச்சு. இன்னும் சப்பாத்தி வரலை" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டாலும், போகும்போது சர்வர் மனம்குளிர ரூ.5, ரூ.10 டிப்ஸ் வைத்துச் செல்வோம். ஆனால், கோவையில் ஒரு ஹோட்டலில் இதற்கெல்லாம் தேவையே இருக்காது. ஆம். இந்த ஹோட்டலில் சர்வர் வேலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல, ரோபோக்கள்!
மனித அறிவின் உச்சம் ரோபோ. மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக, மனிதனால் உருவாக்கப்பட்டவை இயந்திரமனிதர்கள். தற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்களின் பயன்பாடுவந்துவிட்டது. மருத்துவம், ராணுவம், கட்டுமானம், தொழில் துறை என ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. `வேலை செய்வதுபோல நடித்து ஏமாற்றுவது, சம்பள உயர்வு கேட்டு ஸ்டிரைக் செய்வது, அடிக்கடி லீவு போடுவது' என எதுவும் ரோபோக்களிடம் இருக்காது. மேலும், மனிதர்களால் செய்ய முடியாத, செய்யத் தயங்கக் கூடிய வேலைகளையும் செய்யும் என்பதால் ரோபோக்களின் பயன்பாடு வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த வகையில், தற்போது
ஹோட்டல்களில் சர்வர் வேலை செய்யவும் வந்துவிட்டன ரோபோக்கள். கோவை அவிநாசி சாலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அருகேயுள்ள செந்தில் டவர்ஸ் முதல் மாடியில் கோவையில் முதல் ரோபோ உணவகமான `ரோபோ தீம் ரெஸ்டாரன்ட்`. செயல்படுகிறது
எப்போதும் புதுமைகளை அங்கீகரிப்பதில் முன்னிலை வகிக்கும் கோவை, ரோபோ உணவகத்துக்கும் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது. இந்த ரோபோ உணவகத்தின் பொதுமேலாளர் கைலாஷ் சுந்தரராஜனிடம் பேசினோம். "சென்னையில் 2012-ல் பி.இ. தகவல் தொழில்நுட்பம் முடித்தேன். சாஃப்ட்பேர் நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அதனால் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, கடைசியாக சோளிங்கநல்லூரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்டில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அதன் உரிமையாளர் வெங்கடேஷ் ராஜேந்திரன். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமென யோசித்துக் கொண்டே யிருந்தோம்.
அப்போதுதான், ரோபோ சர்வர் ஐடியா வந்தது. ஏற்கெனவே, ஜப்பான், சீனா, நேபாள், பங்களாதேஷ் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள ரெஸ்டாரன்டுகளில் ரோபோக்களை சர்வர்களாகப் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்த பின்னர், 2017 நவம்பரில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் ரோபோ டெஸ்டாரன்டைத் தொடங்கினோம். அங்கு 4 ரோபோக்களை சர்வர் பணியில் பயன்படுத்தினோம். பெரிய அளவுக்கு வரவேற்பு இருந்தது. கோவையைச் சேர்ந்த நிறைய பேர் தேடி வந்து, ரோபோக்கள் கையால் சாப்பிட்டார்கள்(?).
எனவே, கோவையிலும் ரோபோ ரெஸ்டாரன்டை தொடங்க முடிவு செய்து, கோவை அவிநாசி சாலையில் 2018 ஜூலை மாதம் `ரோபோ தீம் ரெஸ்டாரன்ட்` என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்டைத் தொடங்கினோம். இந்தியாவிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் இது அறிமுகமானது.
கோவை ரெஸ்டாரன்டில் ஒரே நேரத்தில் 140 பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும். இதற்காக, சீனா-ஜப்பான் தொழில்நுட்பத்தில் 8 ரோபோக்களை இறக்குமதி செய்தோம். இவை `சர்வீஸ் ரோபோ` வகையைச் சேர்ந்தவை. இவற்றை இயக்குவது, பராமரிப்பது தொடர்பாக 3 மாதங்கள் பயிற்சி பெற்றோம்.
ப்ளீஸ், டேக் யுவர் ஃபுட்...
ஒவ்வொரு டேபிளிலும் `டேப்லட்` இருக்கும். அதில் உணவு வகைகள், விலை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த டேப்லட் மூலம் உணவு ஆர்டர் கொடுத்தால், அது சமையல் அறையில் உள்ள கணினியில் தெரியும். உடனே அவர்கள் உணவை சமைத்து, அங்கே தயாராக நிறுத்தப்பட்டுள்ள ரோபோக்கள் ஏந்தியுள்ள தட்டில் வைப்பார்கள். குறிப்பிட்ட டேபிளின் எண்ணை அழுத்திவிட்டால், அந்த ரோபோ சரியாக அந்த டேபிளுக்குச் சென்று, `ப்ளீஸ், டேக் யுவர் ஃபுட்` என்று கூறும். நாம் அந்த உணவை எடுத்துக் கொண்ட பிறகு, தேங்க்யூ, ஐ வில் கெட் பேக் டூ மை வொர்க்' என்று கூறிவிட்டு, மீண்டும் சமையல் அறை பகுதிக்குச் சென்றுவிடும்.
ரோபோ கொண்டு வரும் உணவை நாமே எடுத்துப் பரிமாற தயக்கம் இருப்பின், அங்கு பணியில் இருக்கும் வழக்கமான சர்வர்கள், அவற்றை எடுத்து நமக்குப் பரிமாறுவார்கள். பெரும்பாலானோர் ரோபோ கொண்டுவரும் உணவை எடுத்து, தாங்களே பரிமாறிக் கொள்கின்றனர்" என்றார்.
காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், இரவு 7 முதல் 11 மணி வரையிலும் இந்த ரெஸ்டாரன்ட் செயல்படுகிறது. இந்த ரோபோக்களுக்கு உணவு மின்சாரம்தான். சர்வீஸ் நேரத்தைத் தவிர, மற்ற
ஓய்வு நேரங்களில் இந்த ரோபோக்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்யப்படுகிறது. சைனா,சின்லி, தேவாங், சங்ஹூ, சிச்சுவான், லீகுவான் என்றெல்லாம் இவற்றுக்குப் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன.
"இங்கு இந்தியன், சைனீஸ், தாய், தந்தூரி வகை உணவுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. முன்கூட்டியே புக் செய்துவிட்டால், டேபிள் ஒதுக்கிவிடுவோம். நிறைய குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் இங்கு வருகின்றனர். பிறந்த நாள் பார்ட்டி, ட்ரீட் என முன்கூட்டியே புக் செய்துவிட்டு, விழாவை சிறப்பாகக் கொண்டாடிக் கொள்கின்றனர்.
அண்மையில் சென்னை போரூரிலும் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளோம். அதிகவரவேற்பு உள்ளதால், தமிழகத்தில் வெவ்வேறுநகரங்களிலும் ரோபோரெஸ்டாரன்டுகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றும் கைலாஷ் தெரிவித்தார்.
அடிமை உழைப்பாளி...
`ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ்` என்ற செயற்கை அறிவுத் துறையின் வளர்ச்சி வெகு வேகமாய் உள்ளது. ரோபோ என்ற வார்த்தை செக் அல்லது லத்தீன் மொழியிலிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர். லத்தீன் மொழியில் லபோர் என்றால் அடிமை உழைப்பாளி என்று பொருள். காரல் கெப்பேக் என்ற செக் மொழி நாடகாசிரியர் 1921-ல் ஒரு நாடகத்தில் ‘ரோபோ’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். மனிதர்களால் காலம்காலமாக செய்யப்படும் கடின வேலைகளை, இலகுவாக செயவதற்காக சில இயந்திரங்களைப் பயன்படுத்தினர். அவையே ரோபோக்கள். இந்த துறை இயந்திர மனிதவியல் (ரோபோடிக்ஸ்) என்றழைக்கப்படுகிறது. நகராதவை, நகரக்கூடியவை என ரோபோக்கள் உண்டு. ரோபோக்களை உருவாக்குவதில் ஜப்பானியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இயந்திர மனிதன் அல்லது மனித உருகொண்ட தானியங்கி ரோபோக்கள் ஹியூமனாய்டு ரோபோ என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை உடல் பகுதியுடன், தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் குறிப்பிட்ட உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் தோல் தொழில்நுட்பத்துடன், மனிதரைப்போலவே தோற்றம்கொண்ட ரோபோக்களும் வந்துவிட்டன.
 
அம்பானி வீட்டில் அடுத்த திருமணம்: ரூ.1.5 லட்சத்தில் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ்- நெட்டிசன்கள் விமர்சனம்


உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இஷா அம்பானி - ஆனந்த் பிராமலின் பிரம்மாண்டத் திருமணத்தைத் தொடர்ந்து, இஷாவின் சகோதரர் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
அவரின் சிறுவயதுத் தோழிரும் வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஷ்லோகா மேத்தாவை ஆகாஷ் அம்பானி மணக்கிறார். இந்நிலையில் இருவரின் திருமண அழைப்பிதழ் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அழகிய இளஞ்சிவப்பு நிறப் பெட்டிக்குள் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேல்புறத்தில் சூரிய ஒளியில் தாமரைகள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்களுக்கு நடுவே ராதையும் கிருஷ்ணரும் இருக்கின்றனர். அதைத் திறந்தவுடன், மேல் பகுதியில் வெள்ளி ஃப்ரேமில் ராதா கிருஷ்ண படம் வைக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிறத்தில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் திறந்தவுடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்கங்கள் விரிகின்றன.
 
மதுபாலாவின் 86-வது பிறந்த தினம்: அழகிய ஓவியத்தில் மிளிரும் கூகுள் டூடுள்


பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86-வது பிறந்த தினத்தில் அவரை நினைவுகூரும் விதமாக ஓர் அழகிய ஓவியப் பாவையாக்கி இன்றைய கூகுள் டூடுள் கொண்டாடுகிறது.
மிகப்பெரிய இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனம், உலகில் மிகச் சிறந்த பிரமுகர்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அவ்வப்போது தனது ‘டூடுளை’ வித்தியாசமாக வடிவமைத்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் மர்லின் மன்றோ என்றழைக்கப்படும் மறைந்த பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓர் அற்பதமான ஓவியத்தை டூடுளாக கூகுள் வடிவமைத்துள்ளது. பெங்களூருவை பூர்வமாகக் கொண்ட முகமது சாஜித் என்ற ஓவியர் இன்றைய கூகுள் டூடுளில் தீட்டியுள்ளார்.


அவர் நடித்த படங்களிலேயே மிகவும் சிறந்த படங்களில் ஒன்றான முகல் ஏ ஆஸம் (1960) என்ற திரைப்படத்தில் அனார்கலியாக தோன்றிய நடித்த ஒரு நடனக் காட்சிதான் இன்றைய கூகுள் டூடுளில் நாம் காண்கிறோம்.
1933ல் டெல்லியில் பிறந்த மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் ஜெகன் பேகம் தெஹ்லவி. பின்னர் அவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. திரைப்பட உலகின் கடைக்கண் பார்வை கிடைக்கும்விதமாக அவர் வளர்ந்தது எல்லாம் பாம்பே டாக்கீஸ் பிலிம் ஸ்டூடியோவுக்கு அருகில்தான்.
மதுபாலா ஒரு குழந்தை நட்சத்திரமாகத்தான் முதன்முதலில் வெள்ளித்திரையில் தோன்றினார். அப்போது அவரது வயது 9. பேபி மும்தாஜ் என்ற பெயரில் அவர் நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் ''பசந்த்''. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீல் கமலில் ராஜ்கபூருடன் தோன்றினார்.
மதுபாலா, 1949 ஆம் ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்களில் நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான ''மஹால்'' திரைப்படம் வசூலை அள்ளித்தந்தது.
அடுத்த இருபதாண்டுகளில் மதுபாலா பாலிவுட்டின் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பெக்கசூர், படால், ஹவுரா பாலம், கலா பாணி, சால்டி கா நாம் காடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவரது படங்களிலேயே மணிமகுடமாகத் திகழ்ந்தது முகல்-ஏ-ஆஸம் திரைப்படம்.
சரித்திரப் படமான முகம் ஏ ஆஜம் திரைப்படத்தில் மதுபாலா அனார்க்கலியாக நடித்திருந்தார். ஒரு நாட்டியம் ஆடும் குடும்பத்தைச் சேர்ந்த அனார்க்கலி பேரரசர் அக்பரின் மகன் சலீம் மீது காதல் கொள்கிறாள். ஒரு காவியக் காதலாகவே இறுதியில் சோகத்தைத் தழுவி நிற்கும் கதையம்சம் கொண்டது.
இத்திரைப்படத்தில் சலீம் பாத்திரம் ஏற்றிருந்தவர் அன்றைய இளம் நாயகன் திலீம் குமார். இக்காதல் திரைப்படப் பணிகள் நிறைவு பெறுவதற்குள்ளாக இருவரும் உள்ளம்ஒன்றிய காதலர்களானார்கள். ஆனால் திரைப்படம்போலவே அவர்கள் காதலும் ஈடேறவில்லை என்பதுதான் நிஜம்.
முகல் ஏ ஆஜம் திரைப்படம் வெளியான ஆண்டில்தான் மதுபாலாவின் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரைக் கரம்பிடித்தவர் கிஷோர் குமார் எனும் புகழ்பெற்ற பாடகர். அவர்கள் ஒரு நல்ல மனமொத்த தம்பதிகளாக மதுபாலாவின் இறுதிக்காலம்வரை அன்போடு வாழ்ந்தனர்.


எனினும் மதுபாலா எனும் வெள்ளித்திரை வானின் நட்சத்திரம் வெகு குறுகிய காலமே ஒளிர்ந்து திடீரென ஒருநாள் உதிர்ந்தது. ஆம், இந்த உலகத்தில் அவர் வாழ்ந்தது 36 ஆண்டுகள் மட்டுமே. நீடித்த நோய் ஒன்றில் அவதியுற்று வந்த இளம் தாரகை ஒருநாள் தனது கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.
2008-ல் இந்திய அரசு வெள்ளித்திரை நாயகியின் மகத்தான கலைச்சேவையைக் கொண்டாடும்விதமாக அஞ்சல் தலை வெளியிட்டது.
 
அழும்' பாம்பு: விலங்கியலாளர் கண்டுபிடித்த புதியவகை பாம்பு


'அழும்' பாம்பு என்று அழைக்கப்படும் புதியவகைப் பாம்பு அருணாச்சலப் பிரதேசத்தின் லேபா-ராடா மாவட்டத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்தப் பாம்பு விஷமற்ற கீல்பேக் வகையைச் (ஆபத்தை விளைவிக்காத நீர்நிலைகளின் அருகே பெரும்பாலும் தவளைகளை உண்டு வாழும் பாம்பு வகை) சேர்ந்தவை. ஹெபியஸ் லேக்ரிமா என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படும் இப்பாம்பின் கண்டுபிடிப்பு குறித்து நியூஸிலாந்தைச் சேர்ந்த விலங்கின அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
இதன் பெயர்க்காரணம் குறித்து குவாஹத்தியைச் சேர்ந்த விலங்கியலாளரும் பாம்பைக் கண்டுபிடித்தவருமான ஜெயதித்யா புர்காயஸ்தா கூறும்போது, ''இந்த வகைப் பாம்பின் கருவிழிகளின் கீழ் கருப்பு நிறத்தில் கண்ணீர்த் துளிகள் உருண்டு விழுவது போல உள்ளது. அதுன் ஊடாக வெள்ளைக் கோடுகள் மேல் தாடையில் இருந்து தலைக்குப் பின்புறம் விரிந்துசெல்கின்றன.
இதனால் இதற்கு 'அழும்' பாம்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லேக்ரிமா என்றால் லத்தீன் மொழியில் கண்ணீர் என்று அர்த்தம்.
48.7 செ.மீ. நீளம் கொண்ட இந்தப் பாம்பை, பாசர் நகரத்தை ஒட்டிய வயல்வெளிகளில் இருந்து கண்டுபிடித்தேன். இதை ஹெபியஸ் பிரிவில் உள்ள 44 வகைப் பாம்புகளோடு ஒப்பிட்டோம். ஆனால் மற்றவகைப் பாம்புகளில் இருந்து இந்த அழும் பாம்பு பல்வேறு வகைகளில் மாறுபட்டிருந்தது.
குறிப்பிடத்தக்க வகையிலான தடிமன், நீளம், உடல் முழுவதும் குறுக்காக ஓடும் கோடுகள், ஒழுங்கற்ற அடர் தழும்புகள் ஆகியவை மற்ற பாம்புகளில் இருந்து இதை வேறுபடுத்தின. சிறீய மீன்கள், தலைப்பிரட்டைகள், தவளைகளை உட்கொண்டு இவை வாழ்கின்றன'' என்று தெரிவித்தார் ஜெயதித்யா.
 
விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதி: வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம்: டிராய் அறிவிப்பு
புதுடெல்லி
விரும்பும் சேனல்களைத் தேர்வு செய்வதில் கேபிள், டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதால், அவர்களுக்குக் கூடுதல் அவகாசத்தைத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வழங்கியுள்ளது.
அதன்படி, மார்ச் 31-ம்தேதி வரை விரும்பும் சேனல்களை நுகர்வோர்கள் தேர்வு செய்து அளிக்கலாம்.
டிராய் அறிக்கையின்படி, இதுவரை கேபிள் வாடிக்கையாளர்களில் 65 சதவீதம் பேர், டிடிஹெச் வாடிக்கையாளர்களில் 35 சதவீதம் பேர் விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால், நாட்டில் 10 கோடி கேபிள் வாடிக்கையாளர்களும், 6.7 கோடி டிடிஹெச் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களை, கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளில் தேர்வு செய்யும் புதிய முறையை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான கேபிள், டிடிஎச் சேவைகளை வழங்க சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், விருப்பமான சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதில் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

மேலும், வாடிக்கையாளர்களின் மொழி, அவர்கள் வாழும் பகுதி, விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான சேனல்களை கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். புதிய முறைக்கு வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலும், ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் திட்டத்தையே தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேபிள், டிடிஹெச் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு டிராய் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
ஆப்பிளுக்குப் பதிலாக ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசிய சுற்றுலாப் பயணி


சில நேரங்களில் நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும்; நடப்பது வேறாக இருக்கும். அத்தகைய சம்பவமொன்று சீனாவில் நடந்துள்ளது.
சுற்றுலாப் பயணி ஒருவர், ஆப்பிள் பழம் என நினைத்து தவறுதலாக ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் யான்செங் வனவிலங்குகள் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கரடிகளைப் பார்த்து நின்றுள்ளார். இரண்டு கரடிகளும் அவரை ஆர்வமாகப் பார்க்க, கையில் இருந்த ஆப்பிள் பழத்தைத் தூக்கி வீச எத்தனித்துள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக மற்றொரு கையில் இருந்த ஆப்பிள் ஐபோனைத் தூக்கி வீசிவிட்டார். ஐபோனை முகர்ந்து பார்த்த கரடி, அதை வாயில் கவ்விக்கொண்டு உள்ளே சென்றது.
எனினும் பூங்காவைச் சேர்ந்த ஊழியர், விலை உயர்ந்த ஐபோனை, மீட்டு சுற்றுலாப் பயணியிடம் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்


பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களும் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
பிஹார் மாநிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாக்கூர் ஆகியோர் வீர மரணமடைந்தனர்.
இந்நிலையில் பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு வீரர்களின் மகள்களைத் தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ''அவர்கள் இருவருக்கும் தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி வரை அளிக்கப்படும் பணம் இருவருக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும். மக்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தனிப்பட்ட வகையில் நான், வீரர் ஒருவரின் மகளுடைய கல்விச் செலவை ஏற்கிறேன். அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான செலவையும் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று இனாயத் கான் தெரிவித்துள்ளார்.
 
பெண்களைக் கண்காணிக்க மொபைல் ஆப்: சவுதி அரேபியாவுக்கு குவியும் கண்டனம்பெண்கள் எங்கே செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க செல்போன் செயலி ஒன்றை சவுதி அரேபியா உருவாக்கியுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி அரசு, தி ஆப்ஷர் (The Absher) என்ற இந்த அப்ளிகேஷன் பெண்கள், வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்குமே உதவியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றது.
இந்த அப்ளிகேஷன் அனைத்துவித ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் கிடைக்கிறது. இதன்மூலம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம் என சவுதி அரசு கூறுகின்றது.
ஆனால், விமர்சகர்களோ இந்த அப்ளிகேஷன் மூலம் சவுதி ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்கள், பெண் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள், வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்த ஆப் குறித்து தனக்குத் தெரியாது என்றும் விரைவில் அது என்னவென்று பரிசோதிக்கவுள்ளதாகவும் அமெரிக்க தேசியப் பொது வானொலியில் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரான் வைடன், ''அப்ஷர் ஆப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தூண்டுவதால் ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை தங்கள் இயங்குதளங்களில் இருந்து நீக்க வேண்டும்'' என்று வலியுறுத்துயுள்ளார்.
மொபைல் அப்ளிகேஷன்கள் மக்களின் சவுகரியத்துக்கானது என்ற அடிப்படை சேவை இலக்கையே இந்த ஆப் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சவுதியின் இந்தப் பிற்போக்குத்தனத்தை மட்டுமே அமெரிக்கா எதிர்க்கின்றது என்றும் இதில் அரசியல் ஏதுமில்லை என்றும் ரான் வைடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர் ஜமால் படுகொலையால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் சவுதிக்கு இந்த அப்ளிகேஷன் சர்ச்சை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான், சமூக பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அறியப்பட்டிருக்கும் சூழலில்தான் அங்கு மனித உரிமை ஆர்வலர்களும் பெண் உரிமை பிரச்சாரகர்களும் தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதோ? அவர்கள் வழக்கின் நிலை என்னவென்பதோ புரியாத புதிராகவே இருக்கின்றன.
 
இது விமான காபிவிமானத்தில் பறக்க பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறிவிடுவதில்லை. விமானத்துக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்குபவர்களின் ஏக்கத்தைப் போக்குவதற்காக எத்தியோப்பியாவில் ஒரு வசதி செய்திருக்கிறார்கள். என்ன வசதி என்று யோசிக்கிறீர்களா? ஒரு விமானத்தையே காபி ஷாப்பாக மாற்றிவிட்டார்கள். இதன் மூலம் விமானத்தில் பறக்க முடியாதவர்களின் ஆசையைத் தீர்த்துவருகிறார்கள்.
அது சரி, இவர்களுக்கு விமானம் எப்படிக் கிடைத்தது? ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஒரு விமான சேவை நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடமிருந்த விமானத்தை ஏலமிட்டது. அப்படி ஏலத்தில் விடப்பட்ட விமானத்தைத்தான் காபி ஷாப் கடைக்காரர்கள் வாங்கினார்கள். வாங்கிய உடனேயே விமானத்திலிருந்த இறக்கையைக் கழற்றிவிட்டு, 92 சக்கரங்கள் உடைய ஒரு பிரம்மாண்ட லாரி மூலம் ஓரோமியா என்ற இடத்துக்கு எடுத்துவந்தார்கள்.


அங்குதான் அவர்களது கடை இருக்கிறது. அங்கே வைத்து விமானத்தை காபி ஷாப்போல மாற்றினார்கள். ‘காக்பிட்’ எனப்படும் இடத்தை காபி தயாரிக்கும் இடமாக மாற்றினார்கள். விமானத்துக்குள் இருக்கை, மேஜை, அலங்காரங்கள் செய்து அதை முற்றிலும் மாற்றினார்கள். இங்கே வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு ஏர்ஹோஸ்டஸ் போல உடைகள் வழங்கப்பட்டன. எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் பார்த்தபோது, அது முழுமையான காபி ஷாப்பாக மாறியிருந்தது.
விமானத்துக்குள் இருப்பது போன்ற உணர்வுடன் சுடச்சுட காபியும் தரும் இந்த விமான காபி ஷாப் எத்தியோப் பியாவில் இப்போது பெரும் புகழ்பெற்றுவிட்டது. விமானப் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த காபி ஷாப்பைத் தேடிவருகிறார்களாம்.
 


ஆன்மாவை உலுக்கிய எழுத்து
அல்டா மெரினி, இத்தாலியின் நேசத்துக்குரிய எழுத்தாளர்; கவிஞர். இளம் வயதிலேயே எழுத்துலகின் அசைக்க முடியாத ஆளுமையாகப் போற்றப்பட்டவர். சிந்தனைச் செறிவுமிக்கக் கூர்மையான எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரது வாழ்க்கை 20 ஆண்டுக்கும் மேலாக மனநலக் காப்பகத்தில் கழிந்தது. அந்த வாழ்வு அவரது எழுத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மனத்தின் ஓட்டத்தையும் கட்டற்ற உணர்ச்சிப் பிரவாகத்தையும் தனித்துவ நடைகொண்ட எழுத்தில் அடக்கினார்.

எழுத்தின் மீதான அவரது பேரார்வமும் அவர் எழுத்தில் இருக்கும் உண்மையும் வாசிப்பவரின் ஆன்மாவை உலுக்கின. சக்திவாய்ந்த, தனித்துவ நோக்குகொண்ட எழுத்து அவருக்கு உலகெங்கும் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. ‘தி அதர் ட்ரூத், டைரி ஆஃப் எ டிராப் அவுட்’ எனும் கவிதை அவரது படைப்பின் உச்சம் எனக் கருதப்படுகிறது. நோபல் பரிசுக்காக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார். அவரது கவிதைக்காக ‘இத்தாலியன் ரிபப்ளிக்’ விருதைப் பெற்றார். அவரது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்ச் 21 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
மரங்களின் தாய்
தனக்குக் குழந்தையில்லை என்ற குறையை மறக்கச் சாலைகளில் மரக்கன்றுகளை நடத் தொடங்கிய திம்மக்காவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்துச் சிறப்பித்துள்ளது. பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டாத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 107 வயது முதியவரான இவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களில் ஒருவர். மரங்கள் தனக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவுகின்றன எனக் கூறும் திம்மக்கா ‘மரங்களின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.
தன் வாழ்நாள் முழுக்க பல்லாயிரக்கணக்கான மரக் கன்றுகளை ஒரே ஆளாக நட்டிருக்கிறார். 107 வயதிலும் உற்சாகம் குறையாமல் புதிய மரக் கன்றுகளை நடுகிறார். அமெரிக்கா வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கிளை ஒன்றுக்கு திம்மக்காவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மரங்களைத் தன் குழந்தைகளைப் போல் பார்த்துக்கொள்ளும் இவர், இயற்கை ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறார்.


ஏபெல் பரிசு பெற்ற முதல் பெண்
கணிதத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் ஏபெல் பரிசு, நோபல் பரிசுக்கு இணையானது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நார்வேயின் புகழ்பெற்ற கணிதமேதையான ‘நெய்ல்ஸ் ஹென்ரிக் ஏபெல்’ பெயரில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பரிசு, வகைக்கெழு சமன்பாட்டில் மேற்கொண்ட ஆய்வுக்காக கரேன் உல்லேபெக்குக்கு வழங்கப்பட்டது.
ஏபெல் வரலாற்றில் அந்தப் பரிசைப் பெறும் முதல் பெண் இவர். வடிவியல் பகுப்பாய்வு, பாதைக் கோட்பாடு ஆகியவற்றில் கரேன் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் கணிதத்தின் எல்லையை மாற்றி அமைத்து இருப்பதாக, ஏபெல் பரிசுக் குழுவின் தலைவர் ஹான்ஸ் முந்தே காஸ் தெரிவித்துள்ளார். 76 வயது கரேன், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
பின்னோக்கிச் செல்கிறோமா?
நிறைமாதக் கர்ப்பிணியான பொம்மி, பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகித் தனியாக வந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையிலிருந்த பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடலை மருத்துவர்கள் அகற்றினர். பொம்மிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழில்நுட்பமும் மருத்துவமும் உச்சத்தில் இருக்கும் இந்த நாளில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல; அவமானத்துக்கும் உரியது.
நோபலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பள்ளி மாணவி
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரெட்டா துன்பெர்க் (16) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம், உலக வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டி, ஸ்வீடன் நாடாளுமன்ற வாசலில் சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார். மேலும், உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து கிரெட்டா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாடினார். அது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வெள்ளி அன்றும் பள்ளிக்குச் செல்வதை விடுத்து, நாடாளுமன்ற வாசலில் உலக வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.
இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதைக் குறித்து கிரெட்டா கூறுகையில், “அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதைக் கவுரவமாகவும் ஆசியாகவும் கருதுகிறேன்” என்றார்.
 


இந்திய ஸ்குவாஷ் விளையாட்டைச் சர்வதேச அளவில் உயர்த்திப் பிடித்தவர் அவர். இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் முடிசூடா ராணி. உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த தன்னிகரற்ற வீராங்கனை. இத்தனைப் பெருமைகளையும் படைத்த அந்த வீராங்கனை, தீபிகா பள்ளிக்கல்.
கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட தீபிகா பள்ளிக்கல், சென்னையில் பிறந்தவர். அம்மா சூசன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடியவர். அம்மாபோல் தீபிகாவுக்கு கிரிக்கெட் மீதெல்லாம் ஆர்வம் பிறக்கவில்லை. ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அவர் வந்ததுகூட ஒரு விபத்துதான். பத்து வயதில் தோழி ஒருவர் மூலம் ஸ்குவாஷ் விளையாட்டு தீபிகாவுக்கு அறிமுகமானது. ஆனால், ஸ்குவாஷ் ராக்கெட்டைப் பிடித்த கையோடு, அடுத்த ஓராண்டில் தேசிய சாம்பியனாக தீபிகா உருவெடுத்ததெல்லாம் அதிசயம்!
தொழில்முறை ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையாக தீபிகா 2006-ல் அடியெடுத்துவைத்தார். தீபிகாவிடமிருந்த ஸ்குவாஷ் திறமை வெளிப்பட்டது 2008-ல்தான். சென்னை ஓபனில் தனது முழுத் திறமையையும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் தீபிகா.
அதே ஆண்டில் பிரிட்டிஷ் ஓபன் ஜூனியர் சாம்பியன் (இது விம்பிள்டன் ஜூனியருக்கு இணையானது) பிரிவிலும் பல சாதனைகளைப் படைத்தார். அதேவேளையில் தன்னை இன்னும் மெருகேற்றிக்கொள்வதற்காக எகிப்திலும் சில காலம் ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டார். பதின் பருவத்திலிருந்த தீபிகா, பெற்றோரைவிட்டுப் பிரிந்து பயிற்சியில் மூழ்கிக் கிடந்தார்.

பெருமையான தருணம்
ஒரு லட்சியத்தை அடைய விடாமுயற்சி வேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம் தீபிகா. ஸ்குவாஷில் ஜூனியர் அளவில் பெற்ற தொடர்ச்சியான வெற்றிகள், அவருக்குப் புதிய அடையாளத்தைத் தந்தன. 15 வயதுக்குட்பட்ட ஐரோப்பிய - ஆசிய ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபிகா பெற்றார். ஆனால், அதன் பின்னணியில் தீபிகாவின் பெரும் உழைப்பு உண்டு.
16 வயதில் அந்த வயதுக்கே உரிய விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்கு என எதிலும் தீபிகா ஈடுபாடு காட்டவில்லை. அவருடைய முழுக் கவனமும் ஸ்குவாஷ் மீது மட்டுமே குவிந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று எப்போதுமே பயிற்சியில் மூழ்கிக்கிடந்தார்.
வேண்டாம் சினிமா
ஃபேஷன் துறையிலும் தீபிகாவுக்கு ஈடுபாடு இருந்தது. தீபிகாவை ஸ்குவாஷ் விளையாட்டின் மரியா ஷரபோவா என அழைத்தவர்கள் ஏராளம்; இந்தியாவின் அழகுப் பொம்மை என்று வர்த்தணித்தவர்களும் அநேகர். அந்த வேளையில் அவருக்கு சினிமா அழைப்புகளும் வந்தன. அப்போது முடிவெடுப்பதில் தடுமாறும் வயதுதான் தீபிகாவுக்கு. ஆனால், தீர்க்கமாக முடிவெடுத்தார்.
“சினிமா எனக்குத் தேவையில்லை; ஸ்குவாஷ் விளையாட்டில் நம்பர் ஒன் வீராங்கனையாக வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய லட்சியம்” என்று வெளிப்படையாக அறிவித்து சினிமா அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.
தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வந்த தீபிகாவுக்கு வெற்றிகளும் குவியத் தொடங்கின. ஜெர்மன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், டச்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன், ஐரோப்பிய ஓபன் என ஜூனியர் நிலைகளில் பெரும் வெற்றிகளைப் பதிவுசெய்தார் தீபிகா. அதற்கு முன்புவரை ஆசியாவின் நம்பர் ஒன் ஜூனியர் ஸ்குவாஷ் வீராங்கனையாக மட்டுமே இருந்தார் தீபிகா.
தொடர் வெற்றிகளுக்குப் பிறகு 2012-ல் சர்வதேசத் தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டார். சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் கால் பதித்தார் தீபிகா. அந்த வகையில் ஸ்குவாஷில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.
நாட்டுக்காகப் பதக்கங்கள்
ஸ்குவாஷ் விளையாட்டில் மைல் கல் தருணத்தை அடைந்தபோதும், அந்தப் பெருமை தன்னுடைய தலைக்கு ஏறாமல் தொடர்ந்து விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். அது அவருக்கு இன்னும் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. சீனாவில் நடந்த மக்காவ் ஓபன் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரேச்சல் கிரின்ஹாமை வீழ்த்தி தீபிகா பட்டம் வென்றது அவருடைய திறமைக்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்தது. 2015-ம் ஆண்டில் கனடா ஓபனிலும் வெற்றி பெற்று அசத்தினார்.
வெறுமனே தொழில்முறைப் போட்டியாளராக மட்டுமல்லாமல், நாட்டுக்காகவும் பல்வேறு தொடர்களில் பங்கேற்று முத்திரை பதித்தவர் தீபிகா. 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர் போட்டியில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி, தங்கப் பதக்கத்தை தீபிகா வென்றார். இதேபோல 2014 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் அணி சார்பில் வெள்ளிப் பதக்கத்தையும் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தீபிகா வென்றார்.
கடந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஸ்னாவுடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாடு திரும்பினார். கடந்த ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.


ஒரே லட்சியம்
ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர்ச்சியாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தீபிகாவின் ஃபிட்னஸும் ஒரு முக்கியக் காரணம். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை ஸ்குவாஷ் பயிற்சியில்தான் கழிப்பார் தீபிகா. விளையாட்டில் அவர் காட்டும் வேகமும் துடிப்பும் அவரைச் சிறந்த ஷாட் மேக்கராக மாற்றின. இந்த விஷயத்தில் சக போட்டியாளர் ஜோஸ்னாவோடு தீபிகாவுக்கு ஆரோக்கியமான போட்டி நிலவியது.
பல சந்தப்பங்களில் இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்டும் விளையாடி இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும், விளையாட்டு என்ற அந்த எல்லையைத் தாண்டி சிறந்த நட்பையும் ஜோஸ்னாவுடன் தீபிகா கடைப்பிடித்தார்.
ஸ்குவாஷில் உச்சம்தொட்ட 2012-ம் ஆண்டில் தீபிகாவுக்கு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. கிரிக்கெட்டே பிடிக்காமல் இருந்த தீபிகா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை 2015-ல் காதல் மணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஸ்குவாஷில் இன்னொரு ரவுண்டு வரும் முயற்சியோடு தீவிரமாகக் களமாடிவருகிறார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள தீபிகாவுக்கு, ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் விளையாட்டு இல்லையே என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே உண்டு.
அந்தக் குறையைப் போக்கிக்கொள்ளச் சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே இந்த ஸ்குவாஷ் புயலின் தற்போதைய உயர்ந்த லட்சியம்.
 


கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை அனிதா. மாணவிகளுக்குச் சமூக அறிவியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர், சமூக நீதியைச் செயல்படுத்துவதற்குரிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார். இவர் தமிழக அரசின் குரூப் 1 தேர்வில் தமிழ்வழிக் கல்வி ஒதுக்கீட்டில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, துணை ஆட்சியர் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
அரசுத் துறையில் உயரிய பதவிக்குச் செல்ல வேண்டும் என்பது அனிதாவின் ஆசை. 2012-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை ஆசிரியருக்கான தேர்வை எழுதினார். அதில் இரண்டு மதிப்பெண்களில் வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனால், எப்படியும் ஆரிசியர் ஆகிவிடுவது என்ற தன் முயற்சியில் உறுதியாக இருந்தார்.
அந்த உறுதிதான் 2014-ல் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் அனிதாவை வெற்றிபெற வைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்த முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தார். அதே ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்கான தேர்விலும் முதல் நிலையில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தார்.
லட்சியப் பாதையில்
அரசுப் பணியில் சேர்ந்துவிடும் லட்சியத்தோடு இருந்த அனிதாவின் ஆர்வத்தை அவருடைய கணவர் அருள்காந்தராஜ் புரிந்துகொண்டார். ‘கோவில்பட்டி கல்விப் பயிலும் குழு’ நடத்திவந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும்படி அனிதாவிடம் சொன்னார். அனிதாவும் சில மாதங்கள் அங்கே பயிற்சிபெற்றார். ஆட்சிப் பணியில் இருந்த அதிகாரிகளும் கல்வியாளர்களும் அங்கே பயிற்சியளித்தனர். அனிதாவின் லட்சியம் வலுப்பெறத் தொடங்கியது.
2016-ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றார். தூத்துக்குடியில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் பயிற்சிபெற்றார். அப்போது அவருடைய மகள் எட்டு மாதக் குழந்தை. குழந்தையை அனிதாவின் கணவரும் மாமனார் மிக்கேல் வியாகப்பனும் கவனித்துக்கொண்டனர்.
வார இறுதி நாட்களில் பயிற்சிக்குச் சென்றுவந்த அனிதா, இதற்காக ஒரு மாதம் விடுப்பும் எடுத்துப் படித்துள்ளார். இதில், தமிழ்வழிக் கல்வி பொதுப்பிரிவில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து, தான் நினைத்த மாதிரியே துணை ஆட்சியர் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
கொள்கையில் உறுதி
அனிதாவின் தந்தை எம்.தர்மராஜ், தாய் டி.சண்முகக்கனி. இவர்களுக்கு எட்டயபுரம் சொந்த ஊர். அனிதாவின் சிறு வயதிலேயே அவருடைய தந்தை இறந்துவிட, அவரது படிப்புக்கு சித்தப்பா பஞ்சவர்ணம் உதவியிருக்கிறார். 10, 12-ம் வகுப்புகளில் பள்ளி அளவில் அனிதா முதலிடம் பெற்றார்.
அப்போது ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அனிதாவுக்கு மேல் படிப்பில் ஆர்வம் இருந்தாலும், எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது, அதற்குத் தேவையான செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் வீட்டில் இருந்தார். முதல் மாணவியாகத் திகழ்ந்தபோது போற்றிய சுற்றத்தார், மேல்படிப்பில் சேராமல் வீட்டிலேயே இருந்த அனிதாவைத் தூற்றினர்.
இந்தப் பெண்ணின் எதிர்காலம் முடிந்துவிட்டது என்று தன் காதுபடவே பேசியவர்களை அனிதா கண்டுகொள்ளவில்லை. தனக்குள் வகுத்துக்கொண்ட லட்சியம் அவரைப் பக்குவப்படுத்தியிருந்தது. எதையும் நினைத்து மறுகிக்கிடக்காமல் தன் பகுதியில் உள்ள மாரியப்ப தர்மவித்யாசாலை நடுநிலைப்பள்ளியில் தற்காலிகப் பணியில் சேர்ந்தார். அனிதா பட்டப் படிப்பைப் படிக்க அங்கிருந்த ஆசிரியர் ரெஜினால்டு சேவியர் உந்துதலாக இருந்துள்ளார்.

மாணவிகளுக்கு ஆலோசனை
அண்ணாமலை பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., எம்.ஏ., வரலாறு படித்தார். இந்திரா காந்தி தேசிய தொலைநிலைக் கல்வியில் பி.எட்., படிப்பை முடித்தார். படிப்புச் செலவுக்கு அனிதாவின் சித்தப்பா உதவியிருக்கிறார். “எங்க அம்மா தீப்பெட்டி கம்பெனியில வேலை செய்தாங்க. அவங்க வாங்கிட்டு வரும் வருமானத்திலும் நான் பகுதி நேரமாக டியூஷன் எடுத்ததால் கிடைத்த பணத்தையும் வைத்து படிப்புச் செலவைச் சமாளிக்க முடிந்தது.
கஷ்டப்படுற குடும்பத்தில் இருந்து வரும் மாணவிகள் பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்புச் செலவுகளை நினைத்தே சோர்ந்துவிடுகின்றனர். இதனால், நான் வகுப்பு எடுக்கும்போது, அரசு சலுகைகள் பற்றி மாணவிகளுக்கு எடுத்துச் சொல்வேன். நான் இப்படிச் சொல்வது என் வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே போய்ச்சேரும். ஆனால், அரசு உயர் பதவியில் இருந்தால் கஷ்டப்படும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துச்செல்லலாம் என நினைத்தேன்.
அதுதான் என்னை ஆர்வத்துடன் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகச் செய்தது. முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். குடும்பச் சூழல் ஒரு தடையில்லை. அரசுப் பள்ளிக்கு நிகரான பள்ளி இங்கு எதுவுமில்லை” என்று சொல்லும் அனிதா, அந்த வார்த்தைகளுக்கு அவரே சாட்சியாகவும் விளங்குகிறார்.
தான் ஏற்கவிருக்கும் பணியில் கல்வி, கிராம மேம்பாடு, கிராமப்புறப் பெண் குழந்தைகளின் மேம்பாடு, சுகாதாரம் போன்றவற்றுக்கு முதலிடம் கொடுக்கவிருப்பதாகச் சொல்கிறார் அனிதா. பொறுப்பையும் சமூகநீதியையும் உணர்ந்தவர்களுக்குத் தரப்படும் பதவி, அதற்கான நியாயத்தை நிச்சயம் செய்யும்.
 
பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரத்தின் தொடர்ச்சியாக வழக்கம்போலவே பலரும் அறிவுரைகளையும் ஆலோசனையையும் வாரி வழங்கத் தவறவில்லை. பெரும்பாலானவை பெண்களை நோக்கி, பெண்களின் ‘பாதுகாப்புக்காக’ உதிர்க்கப்பட்ட முத்துக்கள்.
பெண்ணின் உடலைக் களமாக்கி வன்முறை நிகழ்த்தப்படும்போதெல்லாம், பெண்களின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுக்கப் படுகின்றன. அவர்கள் புழங்கும் வெளியை இறுக்கிப் பிடித்துச் சுருக்கத் தொடங்குவோம். இப்போதும் அதுவே நடந்துவருகிறது.
யாரையும் நம்பாதே, அறிமுகமில்லாத நபர்களை நம்பி வெளியே போகாதே, ஆண்களிடம் பேசாதே, ஃபேஸ்புக் கணக்கை மூடிவிடு, வாட்ஸ் அப்பை முடக்கிவிடு, ஸ்மார்ட் போனைக் கண்டால் பயந்து ஒதுங்கு - என முடிவில்லாமல் நீள்கிறது அந்தப் பட்டியல். எல்லாமே பெண்களின் தற்காப்புக்காகத்தான் என்று அதற்கு விளக்கமும் சொல்லப்படுகிறது.
பெண்களை இப்படி முடங்கச் சொல்லும் யாரும், அவர்கள் மீது வன்முறையை நிகழ்த்துகிற ஆண்களுக்கு எந்த அறிவுரையையும் சொல்வதில்லை. ஆண்கள் கண்ணியமாக நடந்துகொள்ளும் சமூகத்தில் பெண்ணின் தற்காப்புக்கு என்ன தேவை?
பாதிக்கப்பட்ட பெண்கள்?
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்புடைய செய்திகளில், ‘பாதிக்கப்பட்ட’ பெண்கள் என்ற சொல் தவறாமல் இடம்பெறுகிறது. ‘பாதிக்கப்பட்ட’ என்பதை என்ன பொருளில் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் எதை இழந்து பாதிப்புக்குள்ளானார்கள்? காலம் காலமாக இந்தச் சமூகம் பெண்கள் மீது ஏற்றிவைத்திருக்கும் கற்பு, மானம், கண்ணியம், குடும்ப கவுரவும் போன்றவற்றையா இழந்தனர்?
அதனால்தான் அவர்கள் ‘பாதிக்கப்பட்ட’ பெண்கள் ஆகிறார்களா? அப்படியென்றால் அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண்கள் அனைவரும் மாபெரும் சாகசத்தைச் செய்த வீரர்களா? அவர்களைப் பற்றிய முன்குறிப்புகளோ-பெயரடைகளோ (Adjective) எந்தச் செய்தியிலும் இல்லையே. அவர்களின் பராக்கிரமத்தைக் குறிப்பிடத் தகுந்த சொற்கள் மொழிகளில் இல்லையா?
அமுக்கப்படும் குரல்
நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கும் பொள்ளாச்சி கொடூரத்துக்கு மாநில அளவிலேயே போதிய கவனம் ஏற்படாதபோது, தேசிய அளவிலான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா? அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் முழங்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் அநீதி இழைக்கப்பட்ட பெண்களின் குரல் பொள்ளாச்சியைத் தாண்டி ஒலிக்குமா என்பதும் சந்தேகமே.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு எனப் பாராட்டத்தகுந்த அம்சங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வெளியிட்டிருக்கும் கட்சிகள்கூட பொள்ளாச்சி கொடூரம் குறித்துப் போதிய அக்கறை செலுத்தவில்லை.
எது கண்ணியம்?
“ஏன் அந்தப் பெண்கள் ஆரம்பத்திலேயே இதைப் பற்றித் தங்கள் வீட்டில் சொல்ல வில்லை?” என்று கேட்கிற பலரும், தங்கள் வீட்டுப் பெண் இப்படியொரு சம்பவம் தனக்கு நடந்ததாகச் சொன்னால் எப்படி அணுகு வோம் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். “ஊர், பேர் தெரியாதவனை நம்பி, நீ ஏன் சென்றாய்?” என்பதுதான், அந்தப் பெண்களிடம் முதல் கேள்வி யாகக் கேட்கப்பட்டிருக்கும்.
தீங்கிழைக்கப் பட்டவரையே குற்றவாளியாக்கும் திறமை நம் சமூகத்திடம் கொட்டிக் கிடக்கிறது. அதுதான், ‘பெண்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று மாநில மகளிர் ஆணையத் தலைவியையே சொல்லவைக்கிறது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை எது கண்ணியம் என்பதே சரியாக வகைப்படுத்தப்படவில்லை.
ஒரு பெண் தனக்கு விருப்பமான நபருடன் பழகுவதால் குறைந்துவிடுகிற கண்ணியம், அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தை அவளுடைய அனுமதியில்லாமல் பொதுவெளியில் காட்சிப் படுத்தும் ஆணின் செயலால் மேன்மையடைகிறதா? இல்லை நம் சமூகத்தில் ஆணுக்குக் கண்ணியத் தேவை ஏதுமில்லையா? ஆணாகப் பிறந்ததே அரும்பெரும் கண்ணியச் செயலா?
நான்கு பேரில் ஒருவர்
இதில் கவனிக்கத்தகுந்த இன்னொரு கோணமும் இருக்கிறது. நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற பயத்தாலும்தான் அந்தப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்லவில்லை. அவர்களை அச்சுறுத்திய அந்த நான்கு பேரில் நாமும் அடக்கம். எப்போதும் பிறரது செயல்பாடுகளைக் குறிப்பாகப் பெண்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதையும் கலாச்சாரக் காவல் புரிவதையுமே பலரும் முழுநேர வேலையாக வைத்திருக்கிறோம்.
கல்லூரி முடித்துவிட்டு ஒரு பெண் தாமதமாக வீடு திரும்பினால் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைவிட, சுற்றியிருப்பவர்கள்தாம் அதிக ஆர்வத்துடன் விசாரிப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, அந்தரங்க வீடியோக்களில் இடம்பெற்ற பெண்ணை அவ்வளவு எளிதாக இச்சமூகம் விட்டு வைப்பதில்லை.
பார்வையால் கொன்றுவிட்டு, வார்த்தைகளால் கூறுபோட்டுவிடத் துடிக்கிறது. அந்தப் பெண்களைப் பற்றிப் பேசிப்பேசியே அவர்களை உருக்குலைத்துவிடுவதில் போய் முடிகிறது.
‘என் வீட்டுப் பொண்ணா இருந்தா வெட்டிப் போட்டிருப்பேன். பொண்ணை வளர்த்திருக்கற லட்சணத்தைப் பாரு’ என்று பெண்ணைப் பெற்றவர்களைப் பார்த்துக் கொக்கரிக்கும் பலரும் பெண்களை வஞ்சித்து, குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண் களின் பெற்றோரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. போனால் போகிறதென்று யாருக்கும் வலிக்காமல் இரண்டொரு சொல் வீசப்படுகிறது. சாண் பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஆண் பிள்ளை என்றுதானே இச்சமூகம் போற்றுகிறது.
அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நியாயம் கிடைத்துவிடும், அந்தப் பெண்களின் அடையாளம் காக்கப்படும், துயரிலிருந்து மீண்டு எழ அந்தப் பெண்களுக்கு வழிவகை செய்துதரப்படும், குற்றமிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவிடும், அந்தத் தண்டனைதான் குற்றம் புரிய நினைக்கிறவர்களைத் தடுக்கும் என்பது போன்ற பகல் கனவுகளுக்கு நாம் பழகிவிட்டோம்.
அதேபோல் எது நடந்தாலும் களப் போராளிகளோ பெண்ணிய அமைப்புகளோ பார்த்துக்கொள்வார்கள் எனப் பொதுச் சமூகம் ஒதுங்கிக்கொள்கிறது. நம்முடைய அதிகபட்ச செயல்பாடு, பாதுகாப்பான இடத்தில் நின்றுகொண்டு கருத்துக் களமாடுவதாகவே இருக்கிறது.


இதையும் கடந்து வருவோம்
ஆணையும் பெண்ணையும் சமமாக வளர்ப்போம் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டுமே எந்தப் பலனும் விளைந்துவிடப் போவதில்லை. ஆண் மையச் சிந்தனையிலிருந்து ஆண்களோடு பெண்களும் சேர்ந்தே வெளிவரும்போதுதான் சமத்துவ வளர்ப்பு சாத்தியப்படும். அது இல்லாதபோது பெண்கள், ஆண்கள் நுகர வேண்டிய பண்டங்களாக மட்டுமே நடத்தப்படுவார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்கான அத்தனை சாத்தியங்களை யும் இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படியான சமூகத்தில் நம் வீட்டுப் பெண்களை அடங்கி இரு, ஒடுங்கி இரு எனக் கண்டிப்பதைவிட எந்தச் சூழலையும் எதிர்கொள்ள அவர்களைப் பழக்குவதுதான் இன்றைய அவசியத் தேவை. நெருக்கடியான சூழலை எதிர் கொள்வதற்கான மனோதிடம் முதலில் நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்டுக்கொள்வோம்.
பெண்ணின் உடலில்தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது என்ற மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அப்படியொரு தெளிவு இருந்திருந்தால் வீடியோவைக் காட்டி மிரட்டப்பட்டபோதே, அந்தப் பெண்கள் துணிந்து அனைத்தையும் தங்கள் குடும்பத் திடம் சொல்லியிருப்பார்கள்.
ஆனால், நம் சமூகம் அப்படிப்பட்ட பரந்துபட்ட பார்வையோடு குழந்தைகளை வளர்ப்பதில்லை. உடலில்தான் மானம் இருக்கிறது; ‘மானம் போனால் எல்லாமே போச்சு' என்ற பிற்போக்குச் சிந்தனையை ஊற்றி வளர்க்கிறது. அதிலிருந்துதான் குற்றங்கள் தொடங்குகின்றன.
சமூகத்துக்குக் கொடுத்த பதிலடி
அறிவுரை சொல்வது எளிது; அந்த நிலையில் இருப்பவர்களுக்குத்தானே அந்த வேதனை புரியும் என்பதெல்லாம் கட்டுக்கதை. அதை ஏன் வேதனையாக நினைக்க வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி. டேனிஷ் பெண் பத்திரிகையாளர் எம்மா ஹோல்டன், தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை அப்படித்தான் கடந்துவந்தார். அவரது நிர்வாணப் படங்களை யாரோ சிலர் திருடி, இணையத்தில் உலவவிட்டனர்.
அவற்றுக்குக் கீழே கொச்சையான கருத்துகளைப் பதிவிட்டனர். எம்மாவும் முதலில் உடைந்துதான் போனார். ஆனால், தன் பங்கு எதுவுமே இல்லாத அந்தச் செயலுக்குத் தான் ஏன் வருந்த வேண்டும் என நினைத்தார். தொழில்முறை பெண் புகைப்படக் கலைஞரை அழைத்தார்.
ஆண்களின் கண்களுக்கு விருந்தாக இல்லாமல் பெண்ணின் வலியைப் பேசும் விதத்தில் தன்னை நிர்வாணமாகப் படமெடுக்கச் சொன்னார். அவற்றை அவரே இணையத்தில் பதிவிட்டார். தன்னுடலைக் கொத்தித் தின்ற சமூகத்துக்குத் தன் செயல்மூலம் பதிலடி கொடுத்தார் எம்மா. இது நடந்து மூன்று ஆண்டுகளாகின்றன.
ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் பெண்கள் தங்கள் அந்தரங்கத்தை ஆண்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த நம்பிக்கையை ஆண்கள் சிதைத்தால் அது ஆண்களின் குற்றமே தவிர, பெண்கள் அதனால் குற்றவுணர்வுக்கு ஆளாகத் தேவையே இல்லை. இதைப் பெண்கள் மட்டுமல்ல; பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமல்ல; ஆண்களும் ஆண்களைப் பெற்றவர்களும் உணர வேண்டும்.
 
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை இன்று நீந்தி கடக்கும் தேனி தனியார் பள்ளி மாணவர்
தேனியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஆர். ஜெய் ஜஸ்வந்த் சுமார் 30 கி.மீ தூரம் கொண்ட தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்தி கடற் பகுதியை இன்று நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார்.
தேனி மாவட்டம் அல்லி நகரைச் சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஆர். ஜெய் ஜஸ்வந்த் (10). நீச்சல் வீரரான இவர் 2016-ம் ஆண்டிலிருந்து மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மாணவர் ஜெய் ஜஸ்வந்த் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை இன்று (வியாழக்கிழமை) நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார்.
இதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் மாணவர் ஆர். ஜெய் ஜஸ்வந்த், அவருடன் மீனவர்கள் மற்றும் பயிற்சியாளர் எம். விஜயக்குமார் ஆகியோர் நேற்று மதியம் தலைமன்னாருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இன்று அதிகாலை இலங்கை யிலுள்ள தலைமன்னாரில் இருந்து நீந்தத் தொடங்கி இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான 30 கி.மீ. தூர பாக். ஜலசந்தி கடலை நீந்தி இன்று பிற்பகல் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இதற்காக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளார். இந்தச் சாதனையை செய்தால் மிகக் குறைந்த வயதில் பாக். ஜலசந்தி கடலை நீந்திக் கடந்தவர் என்ற சாதனையைப் படைக்க முடியும்.
 


பேராவூரணி அருகே தெற்குக்காட்டில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார் டாக்டர் ஒருவர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெரிய தெற்குக்காட்டில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவர் டாக்டர் து.நீலகண்டன். பிரபல எலும்பு முறிவு மருத்துவரான இவர், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். இவரது மனைவி புவனேஸ்வரி, தன் கணவரின் கனவை நனவாக்க ஒத்துழைப்பு தந்தார். புவனேஸ்வரியின் மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்தில் பள்ளி வகுப்பறையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிவடைந்து சீரமைக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளியைத் தத்தெடுத்து, சீரமைக்கப்பட்ட வகுப்பறையை திறந்துவைத்த டாக்டர் நீலகண்டன், ரூ.2 லட்சம் செலவில் மாணவர்களுக்காக ஸ்மார்ட் கிளாஸ், மேஜைகள், நாற்காலிகள், வகுப்பறைக்கு டைல்ஸ், நூலகத்தில் புத்தகங்களை வைக்க அலமாரி, கணினி ஆகியவற்றை வழங்கினார். வரும் ஆண்டுகளில் இதர வகுப்பறைகளை சீரமைத்துத் தருவதாக அவர் தெரிவித்தார்.
திறப்பு விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வீரம்மாள் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, துர்காதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஆசிரியர் செ.ராமநாதன் நன்றி கூறினார்.
 

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் பயன்படுத்திய துப்பாக்கி சுமார் ரூ.55 லட்சத்துக்கு லண்டனில் ஏலம் விடப்பட்டது.
18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து மைசூர் மண்ணிலிருந்து குரல் கொடுத்த தீரமிக்க ஆட்சியாளர் இவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில் 1799-ல் நடைபெற்ற போரின்போது இவர் மாண்டார்.
இவர் பயன்படுத்திய பொருட்கள் ஆங்கிலேய பிரபுக்கள், அதிகாரிகளால் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்தின் பெர்க்சையர் மாகாணத்திலுள்ள ஒரு தம்பதியர் தங்களது பழைய வீட்டை சுத்தம் செய்தபோது அதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய துப்பாக்கி, வாள் உள்ளிட்ட 8 அரிய வகை கலைப்பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தார். இவற்றை லண்டனிலுள்ள ஆன்டனி கிரிப் ஆர்ம்ஸ் அண்ட் ஆர்மர் ஆக் ஷன் எனப்படும் ஏல நிறுவனத்திடம் அவர்கள் ஒப் படைத்தனர்.
இந்நிலையில் அந்த பொருட்கள் அண்மையில் ஏலம் விடப்பட்டன. இதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வெள்ளிப் பூண் போட்ட துப்பாக்கி 60 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.55 லட்சமாகும். 20 போர் பிளின்ட்லாக் என்ற வகையிலான துப்பாக்கியாகும் அது.
மைசூர் அருகேயுள்ள ஸ்ரீரங்கப் பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்பு கொல்லப்பட்டார். அப்போது மைசூரும், ஸ்ரீரங்கப்பட்டணமும் சூறையாடப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தப் பொருட்கள் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
 
வங்க தேசத்தின் நவீனச் சிற்பக் கலையின் முன்னோடி நோவீரா அஹமத். மேற்கத்திய நாகரிகமும் நாட்டுப்புறக் கலையும் புத்த மத தத்துவமும் இணைந்து உருவானவையே அவரது சிற்ப வடிவங்கள். அவை பெண்களின் வாழ்வையும் அனுபவத்தையும் பிரதிபலித்தன. 1939-ல் கங்கையின் மிகப் பெரும் சதுப்புநிலக் காட்டில், கடல் நண்டு வேட்டைக்கு அவர் குடும்பம் சென்றபோது நோவீரா அஹமத் பிறந்தார்.

களிமண்ணில் வீடுகளையும் பொம்மைகளையும் உருவாக்கிய தாயைப் பார்த்து, சிறுவயதிலேயே சிற்பக் கலையின் மீது காதல் கொண்டார். அவருக்கு மணம் முடித்து வைக்கத் தந்தை முயன்றபோது, அதை உறுதியாக மறுத்து, சிற்பக் கலைஞராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் துணிவுடன் தொடங்கினார்.
லண்டனில் உள்ள ‘காம்பெர்வெல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்டி’ல் சிற்ப வடிவமைப்பு பற்றிப் படித்து, 1955-ல் பட்டம் பெற்றார். அதன்பின் ஆஸ்திரியாவின் வியன்னா, இத்தாலியின் புளோரன்ஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணித்து, சிற்பக் கலையை மெருகேற்றிக்கொண்டார். 1960-ல் inner gaze எனும் சிற்பக் கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞரானார்.
1952-ல் நடந்த மொழிப் போராட்டத்தின் நினைவாக வங்க தேசத்தில் எழுப்பப்பட்டு இருக்கும் ஷாஹித் மினாரை வடிவமைத்து உருவாக்கியவர் இவரே. வங்கதேசத்தின் மிகப்பெரும் விருதான ‘Ekushey Padak’ விருதைப் பெற்ற இரண்டாவது வங்கதேசத்தவரும் இவரே. அவரது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்ச் 29 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
உயிரைப் பறிக்கின்றனவா ரத்த வங்கிகள்?
தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சீனியர் மருத்துவர்கள், மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு உட்பட்ட ரத்த வங்கிகள் முறையாகப் பராமரிக்கப்படாத ரத்தத்துக்கு நல்ல நிலையில் உள்ள ரத்தம் எனச் சான்று வழங்கியிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
முறையாகப் பராமரிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதால் தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 15 பெண்கள் உயிரிழந்து இருப்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதற்குக் காரணமான ரத்த வங்கியின் அதிகாரிகளான மருத்துவர் எம். சந்திரசேகர், மருத்துவர் நாராயணசாமி, மருத்துவர் சுகந்தா ஆகியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது. இப்போது கெட்டுப்போன ரத்தத்தால் 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இனியாவது அரசு விழித்துக்கொள்ளுமா?


ஆடைப் பற்றாக்குறையால் தடைபட்ட விண்வெளிப் பயணம்
பெண் விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஆனி மெக்கிளேன் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே சென்று மின்கலங்களைப் பொருத்த வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு அந்த விண்வெளி வீராங்கனைகள் அணிகிற நடுத்தர அளவிலான விண்வெளி உடைகள் இரண்டு தேவைப்பட்டன. ஆனால், இருந்ததோ ஒன்றுதான். எனவே, ஆண் விண்வெளி வீரர் நிக் ஹேக்கோடு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கோச் மட்டும் வெளியேறி இந்தப் பணியைச் செய்திருக்கிறார்.
மெக்கிளேனால் பயன்படுத்தப்பட்ட விண்வெளி உடையை அணிந்துகொண்டு கோச், ஹேக்கோடு கடந்த வாரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லை என வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாசா ரத்து செய்திருப்பது வருந்தத்தக்கதே.
இன்னும் ஓர் உயிரா?
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்தச் சிறுமி, வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் காணாமல் போனார்.
குழந்தையைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துறையும் உறவினர்களும் இணைந்து குழந்தையைத் தேடிவந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் தன் வீட்டருகே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இன்னும் இப்படி எத்தனை சிறுமிகளைப் பலிகொடுக்கப் போகிறோமோ?

எண்ணமும் சொல்லும்: ராதாரவியின் குடும்பப் பெண்களை நினைத்து வருந்துகிறேன்.
ராதாரவியின் ஆணாதிக்கமும் வக்கிரமும் நிறைந்த பேச்சைக் காட்டிலும் மேலான அதிர்ச்சியை அங்கிருந்த பார்வையாளர்களின் உற்சாகமான கைதட்டல் ஏற்படுத்தியது. உங்களுடைய கைதட்டல் ராதாரவி போன்ற பேச்சாளர்களுக்கு, நகைச்சுவை என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக வக்கிர எண்ணங்களைக் கொட்டும் துணிவை அளிக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
விகார மனங்கொண்ட மனிதர்களின் இழிவான பேச்சை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள். என்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த ராதாரவியை விசாரிக்க நடிகர் சங்கம் குழு அமைக்க வேண்டும். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும்.
திரைப்படத்தில் வாய்ப்புக் கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாகப் பேசி பிரபலமடையும் ராதாரவிக்கு, அவருடைய தாயும் ஒரு பெண்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தொடர்ச்சியாக மேடைகளில் நடிகைகளைப் பற்றி இழிவாகப் பேசும் ராதரவியின் குடும்பப் பெண்கள் மீது பச்சாதாபப்படுகிறேன்.
கடவுள் கொடுத்த வரத்தால் திரையுலகில் எனக்குச் சிறப்பான இடம் கிடைத்துள்ளது. சீதையாகவும் கடவுளாகவும் தோழியாகவும் காதலியாகவும் மனைவியாகவும் நான் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் இனியாவது நடவடிக்கை எடுக்குமா?
- நயன்தாரா, நடிகை.