அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

தினம் ஒரு தகவல்

தமிழகத்தில் குளிர் அலை; எத்தனை நாள் நீடிக்கும்? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம்
சென்னைதமிழகத்தில் தற்போது வீசி வரும் கடுமையான குளிர் அலை எத்தனை நாள் நீடிக்கும் என தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது வட இந்தியாவில் நிலவும் குளிர் அலையை ஈர்க்கிறது. குளிர் அலையை ஒடிசா வழியாக வங்க கடலோர பகுதி வழியாக வேகமாக ஈர்க்கிறது. இதனால் தமிழக கடலோரப்பகுதிகளிலும் தொடர்ந்து குளிர் அலையை ஈர்த்து வருகிறது. இந்தியாவின் மையப்பகுதியில் ‘ஆண்டி சைக்கிலோன்’ எனப்படும் எதிர் நிகழ்வு இருப்பதால் இந்த நிலை காணப்படுகிறது.


இதனால் தமிழகத்தில் கடலில் பனிப்பொழிவுடன் கூடுதலாக குளிர் அலையும் சேர்ந்து வீசுகிறது. இதன் காரணமாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடுமையான குளிர் வீசுகிறது. வரும் 4-ம் தேதி வரை இந்த நிலை காணப்படலாம். தாய்லாந்து அருகே மற்றொரு புயல் சின்னம் உருவாகி அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதற்கும் தமிழகத்துக்கும் தொடர்பு இல்லை. அதனால் தமிழகத்தில் மழை ஏதும் இருக்காது. எனினும் அந்த புயலின் போக்கை பொறுத்து தமிழகத்தில் நிலவும் குளிர் அலையின் போக்கு இருக்கும். ஜனவரி 4-ம் தேதி தான் தாய்லாந்தில் புயல் சின்னம் வலுப்பெறும். எனவே தமிழகத்தில் அதுவரை குளிர் அலை வீசவே வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் வழியாக குளிர் அலை ஈர்க்கப்படுவதை காட்டும் படம்

செயற்கைகோள் படம்
 
ஓவியக் கூடமாகும் உடல்!


உடல் பாகங்களில் ஆசை ஆசையாகத் தீட்டிக்கொள்ளும் டாட்டூகளையே விஞ்சிவிட்டன ‘பாடி ஆர்ட்’ எனப்படும் உடல் ஓவியக் கலை. ஒட்டுமொத்த உடலையும் வண்ணமயமான ஓவியக் கூடமாக்கி அசத்துகிறார்கள் இந்தக் காலத்து இளையோர். பார்ப்பதற்கு டாட்டூபோலவே இருந்தாலும், இது டாட்டூ வகையைச் சேர்ந்தது அல்ல. தற்காலிகமாக மட்டுமே உடல் ஓவியம் இருக்கும் என்பதால், இளையோர் மத்தியில் இதன் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உடல் ஓவியக் கலை வளர்ந்துவருவதால், வெளிநாடுகளில் ஓவியர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது. மனதுக்குப் பிடித்த ஓவியங்கள் தொடங்கி விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொள்வோர் எண்ணிக்கையும் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
உடல் ஓவியத்துக்கு ஆதரவு இருப்பதுபோலவே எதிர்ப்பும் இருக்கிறது. உடலைத் திரைச் சீலையாக்கிப் பல வண்ணக் குவியல்களை உடலில் கொட்டுவதால் தோல் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால், உடல் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகியலைப் படைப்பது என்று உலகம் முழுவதும் உடல் ஓவியக் கலை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது.
 
83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

கடந்த ஆண்டு முனிஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்காக விடிவிடிய மட்டன் பிரியாணி சமைக்கப்பட்ட காட்சி

கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி பிரசாதமாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், பக்தர்கள் பிரியாணிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுக்காவில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி நடக்கிறது. மதுரையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், விருதுநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் வடக்கம்பட்டி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி பிரசாதமாக வரும் 25-ம் தேதி வழங்கப்படும்.
வடக்கம்பட்டி கிராமத்தில் 3 நாட்கள் முனியாண்டி சாமி கோயிலில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவில் 2 ஆயிரம் கிலோ அரிசி, ஆட்டிறைச்சி பிரியாணியாக இரவு பகலாகச் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பரிமாறப்படும்.
இதுகுறித்து கோயிலின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் என். முனீஸ்வரன் கூறுகையில், ''திருவிழா அன்று 50க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரங்களில் இரவு முழுவதும் பிரியாணி சமைக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்கு படைக்கப்படும். அதன்பின் காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு காலை உணவாகப் பிரியாணி வழங்கப்படும்.
பிரியாணியை காலை உணவாகச் சாப்பிடுவதே தனிச்சிறப்புதான். எந்த விதமான வேறுபாடும் இன்றி இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிடலாம். பாத்திரங்களில் வாங்கிச் செல்லலாம். அன்றைய தினம் அனைத்து வயதினரும் அமர்ந்து இங்கு சாப்பிடுவதைக் காணலாம். மக்கள் மட்டுமல்ல, முனியாண்டி சாமியே பிரியாணிப் பிரியர். கடந்த ஆண்டு நாங்கள் 200 ஆடுகள், 250 சேவல்கள், 1,800 கிலோ அரிசி ஆகியவை சேர்த்து பிரியாணி செய்தோம். இந்த ஆண்டு இதைக் காட்டிலும் அதிகரிக்கும்.
வடக்கம்பட்டியில் உள்ள அனைத்து மக்களும் பிரியாணிப் பிரியர்கள். மதுரையில் உள்ள ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடந்த 70களில் தொடங்கப்பட்டது. இந்தக் கடையின் பெயரில் தென்னிந்தியா முழுவதும் ஆயிரம் கடைகள் இருக்கின்றன. முதன் முதலாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் சுப்பா நாயுடு என்பவர் தொடங்கினார். அவரின் முயற்சியால் இந்தத் திருவிழா நடந்து வருகிறது.
அதன்பின் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் எனப் பலரும் முனியாண்டி விலாஸ் கடையைத் தொடங்கினார்கள். மதுரை என்ற அடைமொழியோடு தொடங்கி நடத்திவருவதால், அனைவரும் சேர்ந்து இந்தத் திருவிழாவை நடத்துகிறோம்''.
இவ்வாறு முனீஸ்வரன் தெரிவித்தார்.
 
காணும் பொங்கல்; கடற்கரைக் கூட்ட நெரிசலில் கணவர்கள் காணாமல் போன விநோத சம்பவம்

காணும்பொங்கல்

காணும் பொங்கலன்று கடற்கரையில் கூடும் கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க போலீஸார் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் போலீஸாரே எதிர்பாராத வண்ணம் கணவர்கள் காணாமல் போன விநோத சம்பவம் நடந்தது.
காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் விசேஷமான ஒரு பண்டிகை. சென்னையைப் பொறுத்தவரை பொதுமக்கள் முக்கியமாக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் கூடுவார்கள். குழந்தைகளுடன் சந்தோஷமாக கடற்கரைக்கு வரும் சில குடும்பத்தினர் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு தேடுவது வழக்கமான நிகழ்வாக இருந்தது.
இதைத் தடுக்க போலீஸார் குழந்தைகள் கையில் பெற்றோரின் தொடர்பு எண்ணை எழுதி பட்டையை அனுப்பும் முறையைக் கொண்டு வந்ததால் குழந்தைகள் காணாமல் போவதும், அதை தேடிக் கண்டுபிடிக்க நேர விரயமும் பெருமளவில் குறைந்துபோனது.
போலீஸார் காணாமல் போன குழந்தைகளை மீட்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நேற்று காணும் பொங்கலுக்கு குடும்பத்துடன் வந்த சில கணவன்மார்களும் காணாமல் போனது போலீஸார் மத்தியில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
நேற்று காணும்பொங்கலை ஒட்டி மெரினாவில் ஏறத்தாழ ஒரு லட்சம்பேர் வந்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க கையில் பட்டை அணிவித்து அனுப்பியதால் 25 குழந்தைகள் மட்டுமே காணாமல் போய் அவர்கள் விரைவில் மீட்கப்பட்டனர். எவ்வித அசம்பாவிதாமும் நிகழாவண்ணம் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாட்டை சிறப்பாகச் செய்திருந்தனர்.
மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஜனத்திரளில் போலீஸாரே எதிர்பாராத சில நிகழ்வுகள் நடந்தன. பாதுகாப்புக்காக 30க்கும் மேற்பட்ட கண்ட்ரோல் ரூம் பூத்துகளை அமைத்துப் பணியில் இருந்தனர். அப்போது பல பூத்துகளில் பெண்கள் அழுதுகொண்டே தங்கள் கணவரைக் காணவில்லை என வந்து புகார் அளித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் போன் செய்யுங்கள் என்று கூற இருவரில் ஒருவரிடம் செல்போன் இல்லாமல் இருப்பதும், அல்லது டவர் இல்லாமல் இருப்பதும், சுவிட்ச் ஆப் ஆகியிருப்பதும் தெரியவந்தது.
போலீஸார் பூத் அமைத்துள்ளதால் அடையாளத்தைச் சொல்லி எப்படியும் கணவரை அழைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் வர போலீஸார் அவர்களிடம் அவர்களது கணவர் அடையாளம், பெயர், சட்டை கலர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு மைக்கில் அழைத்தனர். அதற்குப் பிறகு இருவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.
குழந்தைகள் காணாமல் போகும் புகார்கள்தான் எப்போதும் வரும். ஆனால் இந்த முறை கணவர்கள் காணாமல் போன புகாரும் வந்தது போலீஸாரிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி உள்ளது. இதற்கு எப்படி தீர்வு காண்பது என போலீஸாரிடையே குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக நகைச்சுவையுடன் பேசிக்கொண்டனர். இதனிடையே காணாமல் போன 7 கணவர்களையும் கண்டுபிடித்து போலீஸார் ஒப்படைத்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
100 ஆண்டுகளாக பொங்கலைத் தவிர்க்கும் கிராமம்; விழிப்புணர்வுக்காக 17 ஆண்டுகளாகப் பொங்கலிடும் 'தனி மனிதர்'

நாமக்கல்மாட்டுப்பொங்கல் கொண்டாடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள்.

நாமக்கல் அருகே கடந்த 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையைத் தவிர்த்து வரும் கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் 17 ஆண்டுகளாக தனி மனிதராக பொங்கல் வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகை தவிர்க்கப்பட்டு வருகிறது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இக்கிராமத்தில் பொங்கல் பண்டிகையைத் தவிர்க்க காரணம் என்ன என்ற கேள்விக்கு கிராம மக்கள் கூறும் பதில் மக்களிடம் பண்டிகை குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதைக் காட்டியது.
பண்டிகை உற்சாகம்
சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். உழவுத்தொழிலில் பிரதானமானது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடிய இக்கிராம மக்கள் தற்போது பொங்கல் பண்டிகையை வெறுப்பதோடு, கிராமங்களில் பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் வெள்ளையடித்து, உழவுத் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கால்நடைகளுக்குப் பொங்கலிட்டு வணங்குவதையும் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, "கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் முன்னோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அப்போது சாமிக்கு வைக்கப்பட்ட பொங்கலை நாய் சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதிய எங்கள் முன்னோர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையைத் தவிர்த்தனர். மேலும், பொங்கலைத் தவிர்த்த மறு ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் கிராமத்தில் உள்ள கால்நடைகள் இறந்தன. தொடர்ந்து இதுபோல நடந்து வரும் சம்பவங்கள் நடந்ததால், பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்த்து விட்டோம். அதேவேளையில் கிராமக் கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறோம்" என்றனர்.
தன்னம்பிக்கை ஆசிரியர்
எனினும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான இளங்கோ என்பவர் மக்களிடம் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை கடந்த 16 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை வழக்கம் போல இளங்கோ மட்டும் கொண்டாடினார். இவரது கொண்டாட்டத்தில் அவரது உறவினர்கள் ஒருசிலரைத் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
இதுகுறித்து இளங்கோ கூறும்போது, "பொங்கல் பண்டிகை கொண்டாட மக்களை வலியுறுத்தி வருகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகிறேன். இந்த ஆண்டும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினேன். ஆனால், கிராம மக்கள் யாரும் வரவில்லை. இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு வரும் வரை நான் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவேன்" என்றார்.
 
படைப்புகளால் அசத்தும் பாத்திர வியாபாரி!


பெ.ஸ்ரீனிவாசன்
படைப்பாளர்கள் எங்கிருந்து தோன்றுவார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர் களிடமிருந்து சிறந்த படைப்புகள் வெளிவரும். அதேசமயம், கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதரிடமிருந்தும், துப்பரவுப் பணி செய்பவரிடமிருந்தும், ஏன், பாலியல் தொழில் செய்தவரிடமிருந்தும்கூட நல்ல படைப்புகள் வெளியாகியுள்ளன. படைப்பாளர்களிடம் எந்த பேதமும் இருக்காது. அந்த வகையில், திருப்பூரில் பாத்திர வியாபாரி, தனது படைப்புகளால் அசத்திக் கொண்டிருக்கிறார்.
திருப்பூர் நகரம் பல தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றிய வரலாற்றையும், பெருமையையும் கொண்டது. முழுநேரமும் பரபரப்பாக இயங்கி வரும் இந்நகரில், ஒரு பாத்திர வியாபாரி படைப்பாளியாக மாறிய நிகழ்வும் உண்டு.
திருப்பூர் மேட்டுப்பாளையம் அருகே யுள்ள எஸ்.வி.காலனியைச் சேர்ந்தவர் காரமடை மகன் ஜோதி(58). தினமும் 50 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து, திருப்பூர் வீதிகளில் மிதிவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தமிழ் மற்றும் படைப்புலகின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், தனக்கிருந்த சூழ்நிலைத் தடைகளை மீறி `ஒரு சாமானியனின் கவிதை` என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது `ஒரு சாமானியனின் ஒருபக்க கதைகள்` என்ற பெயரில் 100 கதைகள் அடங்கிய தொகுப்பை எழுதிவருகிறார். திருப்பூரில் வீதிகளில் தனது கவிதை களை பாடல்களாக மாற்றிப் பாடியபடி, வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரிடம் பேசி னோம்.
"எங்களுக்கு பூர்வீகம் பல்லடம் அருகேயுள்ள மந்திரிபாளையம். வீட்டுச் சூழல் காரணமாக, பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, நெசவுத் தொழிலில் ஈடுபட்டேன். போதிய வருமானம் கிடைக் காத காரணத்தால் 1984-ம் ஆண்டிலிருந்து பாத்திர வியாபாரத்துக்கு மாறினேன். இப்போது வரை அதே தொழில் தொடர் கிறது. தினமும்ரூ.200 முதல் ரூ.400 வரை வருவாய் கிடைக்கிறது.
18 வயதில் காதல் கவிதை
பள்ளியில் படிக்கும் போது தமிழ் மற்றும் சரித்திரப் பாடங்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்புக்குமேல் படிக்கமுடியவில்லை. எனக்கு 18 வயது இருக்கும்போது ஒருதலைக் காதல் காரணமாக கவிதை எழுதத் தொடங்கினேன். எழுதும்கவிதைகளை பிறரிடம் காட்டி கருத்துகளைக் கேட்கும் பழக்கமும் எனக்கு இருந்தது.
நல்ல கவிதைகளை எழுதும்போது, பிறர் பாராட்டுவதுண்டு. அவ்வாறு ஆரம்பித்த எழுத்துப் பழக்கம், தற்போது சமூக விழிப்புணர்வுக் கதைகள் எழுதும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஒருகட்டத்தில் எனது கவிதைகளைப் பார்த்த, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர், சமூகம் சார்ந்த கருத்துகளை எழுதுமாறு அறிவுறுத்தினர். அதற்குப் பிறகு, நான் வசிக்கும் திருப்பூர், நாள்தோறும் சந்திக்கும் மக்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து கவிதைகள், கருத்துகள், கதைகளை எழுதத் தொடங்கினேன். ஜாதி மற்றும் வறுமை ஒழிப்பை மூலமாக வைத்தும், தொடர்ந்து எழுதிவருகிறேன். யாரேனும் விரும்பிக் கேட்டால், கோயில்கள் தொடர்பான பாடல்களையும் எழுதிக் கொடுக்கிறேன்.
எனது படைப்புகளைப் பார்த்து எழுப்பப்படும் கேள்விகள், எனது தேடலுக்கான தேவையை அதிகரிக்கின்றன. உழைப்புக்கு நடுவே கிடைக்கும் நேரத்தில், என் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு விடைகளைத் தேடுகிறேன்.
படைப்புலகில் நான் யாரையும் பார்த்து பொறாமை கொண்டதில்லை. பொறாமை கொண்டால் என்னிடம் சரக்கு இல்லை என்பதே அர்த்தம். எனது படைப்புகள் மூலமாக யாரிடமாவது, ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த எண்ணத்தில்தான், ஜாதி, வறுமை ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றார் உறுதியுடன்.
 
ராட்சத பெண் சுறாவை நெருங்கி நேரலை செய்த நீர்மூழ்கி வீரர்கள்; ஹவாயில் சாகசம்


உலகத்திலேயே மிகவும் பெரிய ராட்சத சுறாவுக்கு அருகில் சென்று, உயிருடன் திரும்பியுள்ளனர் நீர்மூழ்கி வீரர்கள் குழுவினர். இந்த சாகச சம்பவம் ஹவாயில் நடந்துள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அடர் நீல (Deep Blue) சுறாவான இது, 20 அடி நீளமும் சுமார் 2.5 டன் எடையும் கொண்டது.
ஓஹு தெற்கு கடற்கரைப் பகுதியில் இறந்த திமிங்கலம் ஒன்றின் உடல் மிதந்தது. அதை நோக்கி ராட்சத சுறா வந்தபோது நீர்மூழ்கி வீரர்கள் அதைக் கண்டுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய நீர்மூழ்கி வீரர்களில் ஒருவர் ''ஓஷன் ராமெசா, புலி சுறாக்கள் திமிங்கலம் ஒன்றுக்கு அருகில் வந்தபோதுதான் ராட்சத சுறாவைப் பார்த்தோம்.
பெண் சுறா வந்தவுடன் மற்ற புலி சுறாக்கள் வேகமாகக் கலைந்து சென்றன. உடனே பெண் சுறா, படகின் மீது உரசியது.
ராட்சத வடிவில் அழகாக இருந்த பெண் சுறா, எங்களின் படகை உராய்வதற்கான இடமாகப் பயன்படுத்த விரும்பியது. நாங்கள் மெதுவாக அதன் அருகில் சென்றோம்; தொட்டுப் பார்த்தோம். நேரலையும் செய்தோம்.


அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது சென்ற நாங்கள், நாள் முழுவதும் பெண் சுறாவுடன் இருந்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 


காஷ்மீரையும் அதன் கலாச்சாரத்தையும் வடிவமைப்பதற்குப் பங்காற்றிய பெண்களைக் கவுரப்படுத்தும் விதமாக காஷ்மீரிய பெண்கள் வடிவமைப்புக் கூட்டமைப்பின் (Kashmiri Women’s Design Collective) ஓவியர்கள் 2019-ம் ஆண்டுக்கான காலண்டரை வடிவமைத்திருக்கின்றனர்.
“காஷ்மீர் மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களுக்கு இது எங்களின் சிறிய அஞ்சலி. வரலாறு எப்போதும் பெண்களிடம் இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.
எங்கள் தூரிகையின் கோடுகளால் வரலாற்றுக்கு மறுவிளக்கம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கின்றனர் காஷ்மீரிய பெண்கள் வடிவமைப்புக் கூட்டமைப்பின் ஓவியர்கள்.


காஷ்மீரை ஆண்ட ராணிகள் தித்தா (கி.பி. 979 – 1003), கோட் ராணி (14-ம் நூற்றாண்டு), கவிஞர்கள் லால் தைத் என்ற பெயரால் அறியப்பட்ட லல்லேஷ்வரி (14-ம் நூற்றாண்டு), ஹப்பா காதூன் (1554 - 1609), ரூப் பவானி (17-ம் நூற்றாண்டு), அர்ணிமால் (18-ம் நூற்றாண்டு), பெண் கல்வியை முன்னெடுத்த ஆசிரியர் மிஸ் முரியல் மல்லின்சன் (20-ம் நூற்றாண்டு), புகழ்பெற்ற பாடகி ராஜ் பேகம் (20-ம் நூற்றாண்டு), கல்வித் துறையின் ஊழலை எதிர்த்துப் போராடிய அதிகாரி ஹனிஃபா சபு, லால் தைத் பெண்கள் மருத்துவமனை தொடங்கிய மருத்துவர் கிரிஜா தர், காஷ்மீர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக மீரஸ் மஹால் என்ற அருங்காட்சியகம் தொடங்கிய அத்திகா பானோ, பிரிவினையின்போது பெண்கள் கல்வி கற்க உதவிய அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கியானி மோகன் கவுர், எழுபது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் விவகாரத்தில் பேரிழப்பு, வேதனை, அநீதியை அனுபவித்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆகியோரின் ஓவியங்கள் இந்த காலண்டரின் பக்கங்களில் இடம்பிடித்திருக்கின்றன.
ஓவியர் ஒனைஸா த்ராபூ முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குப் பலதரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
 


கலை உலகில் ஆதர்சத் தம்பதியாக உலகம் முழுவதும் பல மாணவர்களை உருவாக்கிவருபவர்கள் சாந்தா தனஞ்செயன் - தனஞ்செயன். மியூசிக் அகாடமியின் பெருமைமிகு ‘நிருத்ய கலாநிதி’ விருதைப் பெற்றிருக்கிறார் சாந்தா தனஞ்செயன். கலைத் துறையில் இவரது அர்ப்பணிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. “இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுவதாக உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இந்த விருதைப் பெற்றார்” என்று தங்களின் அன்னியோன்யமான உறவைக் கோடிட்டுக் காட்டுகிறார் சாந்தா.
பரத நாட்டியம் தொடக்கத்தில் ஆலயத்தில் இறைவனுக் காக அர்ப் பணிக்கப்பட்ட கலையாக இருந்தது. ஆலயத்துக்கு வருகிற சாமானிய மக்களும் அதை ரசித்தனர். அதன்பின் அரசு தர்பார் களிலும் ஆடப்பட்டது. தற்போது சபாக்களில் மட்டுமே அரங் கேறும் கலையாக இருக்கிறது. சாமானிய மக்களிடமிருந்து பரத நாட்டியம் விலகிவிட்டதாக நினைக்கிறீர்களா?
சாமானிய மக்களிடமிருந்து பரத நாட்டியம் எப்போதும் விலகாமல்தான் இருக்கிறது. கோயிலில் ஆடினாலும் சரி, சபா மேடைகளில் ஆடினாலும் சரி எங்கு ஆடுவது என்பதைவிட எப்படி ஆடுகிறோம் என்பதே முக்கியம். நாட்டியம் பண்றவங்களுக்கு அது எங்கு நடந்தாலும் அது தெய்வாலயம்தான். வகுப்பில் ஆடினாலும் நான் கோயிலில் ஆடுவதுபோல் உணர்ந்துதான் ஆடுவேன்.
நடன சம்பிரதாயத்தில் பல மாற்றங்கள் வந்தாலும், அதன் அடிப்படை இறைவனை அடையும் வழியாகத்தான் பார்க்கிறேன். முச்சந்தியில் ஆடினாலும் கலையின் உன்னதம் வெளிப்பட வேண்டும். தெய்விகமாக நினைத்துச் செய்ய வேண்டிய கலை வடிவம் அது. எந்த இடத்தில் ஆடினாலும் அதன் தத்துவத்தில் மாற்றம் இல்லை.
எந்த ஆண்டிலிருந்து நீங்கள் இருவரும் ஒன்றாக மேடையில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தீர்கள்?
கலாஷேத்ராவில் ருக்மிணி தேவி அருண்டேலிடம் பரத நாட்டியம் கற்ற நாங்கள் அங்கேயே பல ஆண்டு கள் இருந்தோம். அதன்பின் ‘பரத கலாஞ்சலி’யை 1968-ல் தொடங்கினோம். அப்போது நான் கருவுற்றிருந்தேன். குழந்தை பிறந்தபின், 1969-ல் தனியாக நிகழ்ச்சிகள் நடத்தினோம். திருமண மேடைகளிலும் சுற்றுலாத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாய்ப்புக் கிடைத்தது.
நாரத கான சபாவில்கூட நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். அதன்பின் மியூசிக் அகாடமி போன்ற பல இடங்களிலும் நிகழ்ச்சிகளை அளித்தோம். இன்றுபோல் சபாக்களின் ஆதரவு பெரிதாக அன்றைக்கு இல்லாத நிலையிலும் மிகவும் மெதுவாக அதேநேரம் ஆணித்தரமாக எங்களின் நாட்டியத் தடத்தைப் பதித்தோம்.


நாயகன், நாயகி பாவங்களை அடியொற்றியே பரத நாட்டியம் எனும் கலை வடிவம் பெரும்பாலும் அரங்கேறிவருகிறது. காலத்துக் கேற்ற மாற்றம் ஒரு கலைக்குத் தேவைதானே?
கலை உணர்வோடு எந்த மாற்றத்தையும் புதுமை என்னும் வடிவத்தில் தரலாம். சாப்பாட்டில் மரபார்ந்த சமையல் உண்டு; புதுமையான வழிகளும் உண்டு. பெருங் காயத்தோடு சமைப்பது, வெங்காயம் இல்லாமல் சமைப்பது இப்படிப் பல ருசிகள் உண்டு. இதற்கு நாட்டியமும் விதிவிலக்கல்ல. அழகாக தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செய்பவர்களும் உண்டு.
ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காகப் புதுமைகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறவர்களும் உண்டு.
‘வள்ளி திருமணம்’ எல்லோரும் அறிந்த நாட்டிய நாடகம். நாங்கள் இருவரும் இணைந்து நிகழ்த்திய ‘ராமாயணம்’ நாட்டிய நாடகம் அந்த நாளில் புதுமையானதாக மதிக்கப்பட்டது. காரணம் அப்போதெல்லாம் ராமாயணம் என்றால் ராமரின் உடலில் வண்ணம் பூசுவது முதல் ராவணனுக்குப் பத்துத் தலைகளைக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால், நாங்கள் நடத்தியதில் கதாபாத்திரங்களுக்கேற்ற வேடம் போடாமல், இயல்பான நாட்டிய உடை அணிந்து நடனமாடினோம். இதற்கு ஆதரவு கிடைக்குமா என்று முதலில் தயங்கினோம். ஆனால், அதன்பின் அதுவே ஒரு டிரெண்டானது.
‘ஜங்கிள் புக்’ கதையை அமெரிக்காவின் ஒஹையோ டான்ஸ் பாலே குழுவுடன் இணைந்து நிகழ்த்தினோம். முழுக்க முழுக்க இசையை மட்டுமே ஆதாரமாகக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்திய பாணியில் நாங்கள் ஆடினோம். ‘ஜங்கிள் புக்’ நிகழ்ச்சியை இந்த ஆண்டு இந்தியாவின் பல இடங்களிலும் நிகழ்த்த இருக்கிறோம்.
அதற்கும் முன்பாக, சிதார் மேதை பண்டிட் ரவிஷங்கரின் கதைக்கு தனஞ்செயன் நாட்டிய வடிவம் கொடுத்தார். கனஷியாம் என்னும் மேதையின் பாதை, போதையால் எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. பண்டிட் ரவிஷங்கரின் தயாரிப்பில் இந்த நாட்டிய நாடகத்தை லண்டன் பர்மிங்ஹாம் மேடையில் நிகழ்த்தினோம். பின்னாளில், அந்த நாட்டிய நாடகம் நாரத கான சபாவிலும் அரங்கேறியது.
அதே போல் ‘அசோக சங்கமித்ரா’ என்னும் நாட்டிய நாடகத்தையும் மேடைகளில் நிகழ்த்தியிருக்கிறோம். இதெல்லாம் மேதைகளுடன் இணைந்து செய்த சில நிகழ்ச்சிகள். இவை உலகம் முழுவதும் எங்களை அறிமுகப்படுத்தின. அதேநேரம் நாயக, நாயகி பாவங்கள் இல்லாத பல புதுமைகளையும் இந்தப் படைப்புகள் தன்னியல்பாகக் கொண்டிருந்தன.
கலை கலைக்காக மட்டுமே என்பது சரியா?
கலை நம்மையும் உயர்த்த வேண்டும். ரசிகனையும் உயர்த்த வேண்டும். ‘பாவம்’, அபிநயம், ரசம் ஆகிய மூன்றும் கலையின் அங்கங்கள். ரசம் - இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வது. கலை உணர்வு ஒரு தொடர் சங்கிலி. ராமா கிருஷ்ணா கோவிந்தா ஆடினாலும் சரி, ‘ஜங்கிள் புக்’கிற்கு ஆடினாலும் சரி, அதில் கலையின் உன்னதம் வெளிப்பட வேண்டும்; அதுதான் முக்கியம். முக்கியமாக ரசிகர்களின் கலை உணர்வை உயர்த்த வேண்டும்.
நடனத்துக்கான வரவேற்பு குறைந்து வருகிறதே..
முக்கியமான விஷயம் இது. ‘தேவையைவிட உற்பத்தி அதிகம்’ என்பதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். சிலர் காசு கொடுத்து ஆடுகிறார்கள். காசு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கோயில்களிலேயே அரங்கேற்றங்களை நடத்தலாம். பரத கலாஞ்சலியிலேயே நாங்கள் சிறிய அளவில் அரங்கேற்றங்களை நடத்துகிறோம். நிறையப் பேர் திறமையோடு இருக்கின்றனர்.
நிறையப் பேர் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், எல்லாருமே மேடையில் ஆட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் வாத்தியாராகலாம். ஆராய்ச்சியாளர்களாக ஆகலாம். இதைச் சரியாகக் கணிப்பதற்கு ஒரு தேர்ந்த குருவால்தான் முடியும். நாங்கள் அப்படித்தான் செய்கிறோம்.
நடராஜரே கலைக்கான கடவுளாக இருக்கும்போது, ஆண் நடனக் கலைஞர்களுக்குப் பெரிதாக வரவேற்பில்லையே?
கலைக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. விருது வாங்கும்போதே நான் இதைத்தான் சொன்னேன். நான் இரண்டாவதாக இந்த விருதை வாங்குகிறேன் என்று சொன்னது, என்னுடைய கணவர் இதற்கு முன் விருது வாங்கியதைக் குறிப்பிட்டதன் மூலம் அவரில் பாதி நான், என்னில் பாதி அவர் என்பதைத்தான். ஆண் கலைஞர்களுக்கான வரவேற்பு இப்போது அதிகரித்து வருகிறது. மியூசிக் அகாடமியிலேயே நான்கு ஆண் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.


ஒரு தனியார் தொலைபேசி விளம்பரத்துக்காகப் பறந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஏதோ சின்ன விளம்பரப் படம் என்றுதான் நினைத்தோம். ஆனால், கோவாவுக்குச் சென்றபின்தான் புரிந்தது. அதைத் தொடர்ச்சியான ஒரு கதைபோல் வடிவமைத்திருந்தனர். அந்தத் துறையில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான புதிய அனுபவமாக அது இருந்தது. இரண்டு நாள் பயிற்சி கொடுத்திருந்தால் நான் பாராசெய்லிங் கற்றுக்கொண்டிருந்திருப்பேன்.
சில நொடிகள் காற்றில் பறந்த அனுபவமே அலாதியாக இருந்தது. அதைத் தொடர்ந்து ராஜீவ் மேனனின் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தில் நெடுமுடி வேணுவுக்கு மனைவியாக நடித்திருக்கிறேன். அதுவும் புதிய அனுபவமாக இருந்தது.
ஒரு குழந்தை நாட்டியத்தின் பால பாடத்தைத் தொடங்கும்போதே, அரங்கேற்றத்துக்கு நாள் குறிக்கும் பெற்றோர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அரங்கேற்றத்தை முன்னிறுத்தி மட்டுமே நாங்கள் குழந்தைகளைத் தயார்படுத்துவதில்லை. ஒரு நல்ல குடிமகனுக்கு நம்முடைய பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுப்பது தான் எங்கள் முக்கிய நோக்கமாக இருக்கும். நீங்கள் சொல்லும் மனப் பான்மையுடன் பெற்றோர்கள் இருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றே.
 


அன்றைய பணிகளை முடித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள். ஆசிரியர் கனகலட்சுமி வந்தவுடன் புத்தகத்தில் உயிர் எழுத்து, மெய்யெழுத்துகளை உச்சரித்துக்கொண்டேஎழுதத் தொடங்கினர்.
தாய் மொழிக்கு முக்கியத்துவம்
சென்னை ஷெனாய் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் முனைவர் கனகலட்சுமி. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ‘கசடறக் கற்க கற்பிக்க தமிழ் வாசிக்க எழுத 45 நாட்கள்’ புத்தகம் தமிழ் படிக்க, எழுதத் தெரியாத மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. அதேபோல் கணக்குப் பாடத்தை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும்வகையில் ‘கணக்கு கையேடு’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகங்களின் பயன்பாடு குறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வாக்கியங்களைப் பிழையில்லாமல் எழுதவும் சரளமாகப் படிக்கவும் செய்துள்ளனர். அதேபோல் இவரின் புத்தகங்களை வைத்துத் தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
“தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வளைவுக்கும் வரிவடிவங்களுக்கான ஒலி வடிவ முறை உண்டு. ஆனால், நாம் ஒலிவடிவங்களை மறந்ததன் விளைவு பிள்ளைகளுக்குத் தமிழை எழுதக் கற்றுத்தருவதற்குப் பதிலாக ஓவியம் போல் வரையவே கற்றுக்கொடுக்கிறோம். இது மாற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் இலங்கியங்களில் தமிழ் எழுத்துக்கள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதை ஆய்வுசெய்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன்” என்கிறார் கனகலட்சுமி.
தற்போது முதியோர் கல்விக்கு இந்தப் புத்தகம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான முன்னோட்ட வகுப்புகள் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் நடத்தப்பட்டுவருகிறது.
குழந்தைத் தொழிலாளர்களுக்கான முதல் பள்ளி
கனகலட்சுமியின் சொந்த ஊர் கோவில்பட்டி. பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை சராசரி மாணவியாகவே இருந்திருக்கிறார். அம்மா சுப்புலட்சுமி இறந்துவிட்ட நிலையில் அப்பாவின் கனவை நனவாக்கவே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்தார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், ஆசிரியர் பயிற்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். தனியார் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள கடுக்காய் வலசை கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றினார். மாணவர்களுக்குப் புரியும்வகையில் எளிமையாகக் கற்பித்ததால் போகலூர் ஒன்றியத்தின் ஆசிரியர் பயிற்றுநுர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார்.
இந்நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் உள்ள குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார். தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாகக் குழந்தைத் தொழிலாளர்களுக்கான பள்ளியை இவர் தொடங்கினார்.
உலக சாதனை
இவரது புத்தகத்தைக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எளிமையான முறையில் தமிழைக் கற்பிக்கும் முறை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் 1,56,170 அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழை வாசிக்கச் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்தியதற்காக அமெரிக்காவின் உலக சாதனை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவே தனக்கு வந்த பணி உயர்வையெல்லாம் தவிர்த்திருக்கிறார். “வாழ்வின் இறுதிவரை தமிழ் மொழிக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே லட்சியம்” என்கிறார் ஆசிரியை கனகலட்சுமி.கனகலட்சுமி
 
7 நாட்கள்; 7 நிறங்களில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்; 7 டர்பன்கள் - வைரலாகும் இந்தியத் தொழிலதிபர்


லண்டனில் வசிக்கும் இந்தியா வம்சாவளியான ரூபன் சிங் என்னும் சீக்கியத் தொழிலதிபர், 7 நாள் ரோல்ஸ்ராய்ஸ் சேலஞ்ச் மூலம் பிரபலமாகியுள்ளார். இதில் ஒவ்வொரு நாளும் தனது டர்பனின் நிறத்துக்கு ஏற்றவாறு ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணிப்பார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.
லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் ரூபன் சிங், ஆடம்பரக் கார்கள் குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸின் மீது அலாதியான ஆர்வம் கொண்டவர். 42 வயதான இவர், 7 நாட்களும் 7 நிறங்களைக் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 2000-ம் ஆண்டு 'த சன்டே டைம்ஸ்' பத்திரிகை, ரூபன் சிங்குக்கு சுமார் 738 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவரை ’பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்றும் புகழாரம் சூட்டியது.
இந்நிலையில் தற்போது ’நகை கலெக்‌ஷன்’ என்ற பெயரில் மாணிக்கம், மரகதம், நீலம் ஆகியவற்றின் நிறங்களில் மேலும் புதிதாக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார் ரூபன் சிங்.
சீக்கியக் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள ரூபன், ''கடவுளின் அருளால்தான் இது சாத்தியமானது'' என்று தெரிவித்துள்ளார்.
 
உலக சுற்றுலாவுக்காக நிதி திரட்ட 4 மாதக் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாகசம் செய்த கொடூரம்: தம்பதி கைதுஉலகச் சுற்றுலா செல்வதற்காக நிதி திரட்டும்பொருட்டு, தங்களின் 4 மாதப் பெண் குழந்தையை ஆபத்தான முறையில் தூக்கி வீசி சாசகம் செய்த ரஷ்யத் தம்பதி மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயது ஆண் மற்றும் அவரின் 27 வயது மனைவி ஆகிய இருவரும் கோலாலம்பூரில் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஃபேஸ்புக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, 90 விநாடி வீடியோ ஒன்று வைரலானது. அதில் ப்ளூ ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை டி-ஷர்ட் அணிந்த மனிதர் ஒருவர், தனது கால்களுக்குக் கீழேயும் தலைக்கு மேலேயும் கைக்குழந்தையை தூக்கித் தூக்கிப் போட்டு விளையாடினார். பின்னணியில் ஏதோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த ஆணின் மனைவி கீழே தரையில் அமர்ந்திருந்தார். அவரின் கையில், ''உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு நிதி தேவை'' என்று எழுதப்பட்டிருந்த பதாகை இருந்தது.
ஏராளமான மக்கள் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கூட்டத்தில் இருந்து ஆண் குரல் ஒன்று, ''இது முட்டாள்தனமான ஒன்று. இப்படி நீங்கள் செய்யக்கூடாது'' என்று ஒலித்தது.
இந்நிலையில் வைரலான வீடியோவைக் கொண்டு மலேசிய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ரஷ்யத் தம்பதியைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய கோலாலம்பூர் காவல்துறை தலைவர் மஸ்லான் லசீம், ''திங்கட்கிழமை அன்று அவர்களைக் கைது செய்தோம். 4 மாதப் பெண் குழந்தையைக் கொடுமைப்படுத்தியது தொடர்பாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.
 
பருவ நிலை மாற்றம்: இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் - எச்சரிக்கும் புதிய அறிக்கை


பருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என்று சமீபத்தில் வந்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
International Centre for Integrated Mountain Development ஆசிரியர்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, ”தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது இவ்வாறே தொடர்ந்தால் இமய மலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும் நிலை ஏற்படும்.
மேலும் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால் இமய மலை பிராந்தியத்தை சுற்றி உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் பருவ நிலை மாற்றம் சார்ந்து மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள இருக்கின்றன. இதனவிளைவு மிகத் தீவிரமாக உள்ளது. இது கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை அளித்த ஆசிரியர்களில் ஒருவரான பிலிப்பஸ் வெஸ்டர் கூறும்போது, ”பருவ நிலை மாற்றத்தை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவை. நாம் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்.
நம்மால் இதனை தடுக்க முடியும் என்று நான் கருதுகிறேன். நாம் அன்றாட வேலை காரணமாக நாம் இதுபோன்ற கதைகளை கேட்க தயாராக இல்லை. நம்மிடம் தொழில் நுட்பம் உள்ளது. நம்மால் பசுமை இல்ல வாயுகளின்(Green House Gases) வெளியேற்றத்தை குறைக்க முடியும். இதனை தடுக்க நாட்களோ, வருடங்களோ இல்லை. நாம் இன்றிலிருந்து செயலாற்ற வேண்டும் ” என்றார்.
 
இன்றும் நிகழும் பெண்ணுறுப்புச் சிதைவு வன்முறை..! என்ன செய்ய வேண்டும்? #EndFGMன்று (பிப்ரவரி 6) பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான சர்வதேச தினம். ஆசிய நாடுகளில் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்காத சொல்லாடல் இது. என்றாலும், இங்கே நிகழும் பாலியல் வன்புணர்வுகளுக்கு நிகராக ஆப்பிரிக்கப் பெண்களுக்கு சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வரும் கொடூரம். 8 அல்லது 10 வயதுச் சிறுமியை மிட்டாயோ அல்லது விருப்பமான ஏதோவொரு பொருளையோ கொடுப்பதாக ஆசைகாட்டி, ஓர் இருட்டு அறைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அழைத்துச் செல்பவர் அந்தச் சிறுமி அதிகம் நம்பும் அவரின் அம்மா அல்லது பாட்டியாக இருப்பார். உள்ளே முன்பின் பரிச்சயம் இல்லாத ஒரு நபர் பிறப்புறுப்பின் சதைகளைக் கத்தி அல்லது பிளேடு கொண்டு அறுத்துவிட்டு, சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் சிறிய இடைவெளிவிட்டு இழுத்துத் தைத்து விடுவார்கள். அது, அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிகழும்வரை அவரின் தூய்மையைப் பாதுகாக்க ஆப்பிரிக்கர்களால் பின்பற்றப்பட்ட மூடச்சடங்கு.
சிறுமிகளின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் அளவுக்கு வன்மம் நிறைந்த செயல் ஏன் நிகழ்கிறது? ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும் சுதந்திரம்கூடப் பறிக்கப்படும் அளவுக்கு அந்தப் பிஞ்சு உச்சகட்ட வலியை உணர வேண்டுமா? இதற்குக் காரணம் சடங்கும் சம்பிரதாயமும் மட்டும்தானா? இல்லை, சடங்கு என்ற பெயரால் வெறியாட்டமாடிய ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே.``பிறப்புக்குரிய உறுப்பு வெட்டி எடுக்கப்படுவதை உணர்ந்தேன். மொன்னையான பிளேடு முன்னும், பின்னும் என் தசையினூடே சென்றுவரும் சத்தம் கேட்டபடியிருந்தது. யாரோ உங்கள் தொடையிலிருந்து தசையைத் துண்டாக அறுத்தெடுப்பதுபோல அல்லது உங்கள் கையை வெட்டியெடுப்பது போல இருந்தது அந்தவலி. தவிர, இது உங்கள் உடம்பில் மிக முக்கியமான உணர்ச்சிபூர்வமான பகுதி”
சோமாலியாவில் பிறந்து வளர்ந்த நடிகையும் சமூகச் செயற்பாட்டாளருமான வாரிஸ் டைரி, தன் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட அனுபவத்தை மேற்கண்டவாறு விவரிக்கிறார். தன் 5 வயதிலேயே பிறப்புறுப்புச் சிதைப்பை அனுபவித்த அவர், 13 வயதில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பின்னர், வாழ்க்கையில் கடுமையான உழைப்புக்குப் பிறகு அவர் அடைந்த உயரங்கள், ஒவ்வொரு முறையும் தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக அவர் அளித்த பதிலடியாகும். வீட்டிலிருந்து வாரிஸ் வெளியேறினாலும் அவர் போன்ற எண்ணற்ற பெண்களுக்கு அத்தகைய விடுதலை கிடைக்கவில்லை. ஒருநாள் தனக்கு நடந்த அநீதியை உலகில் எல்லோருக்கும் அறிவித்தார். தன் வலியை எப்படியெல்லாம் விவரிக்க இயலுமோ அப்படியெல்லாம் விவரித்தார். பின்னர், தன் சுயசரிதை நூலான `Desert flower’ புத்தகத்திலும் அதுகுறித்து எழுதினார். இந்தப் புத்தகத்தை `பாலைவனப் பூ’ எனும் தலைப்பில் எழுத்தாளர் அர்ஷியா தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
வாரிஸ் டைரியின் கதை உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சடங்கின் பெயரால் இப்படியொரு வெறிச்செயல் நிகழ்த்தப்படுவதை உலகம் அறிந்துகொண்டது. அவருடைய சுயசரிதை திரைப்படமாகவும் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது.
இன்று #MeToo இயக்கத்திற்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் போன்று, வாரிஸ் கடும் விமர்சனங்களைச் சந்தித்தார். பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்விதத்தில் `வாரிஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார். பின்னர் அது `டெசர்ட் ஃபவுண்டேஷன்’ ஆனது. இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸுக்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பை அளித்துக் கௌரவித்தது.


வாரிஸ் டைரி என்ற ஒரு பெண்மணி, தன் வலியை வெளியே சொன்னதால், பெண்ணுறுப்பு சிதைவிலிருந்து பல சிறுமிகள் காப்பாற்றப்பட்டார்கள். இருந்தாலும், இந்த விவகாரத்தில் போதிய விழிப்புஉணர்வு, உலகளவில் இன்றும் இல்லை என்பதே நிதர்சனம்.
பிறப்புறுப்பு தைக்கப்பட்ட நிலையிலேயே வாழப் பழகிவிடும் பெண்களுக்குத் திருமணம் நடைபெறும்போதுதான், அந்தத் தையல் பிரிக்கப்படுகிறது. அதுவரை அந்தத் தையல் அந்தத் பெண்ணின் கற்பை அவளது புனிதத்தைப் பாதுகாப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதாவது, ஐந்து வயதுச் சிறுமியாக இருக்கும் காலகட்டத்திலிருந்தே பெண்ணின் மீது கற்பு என்னும் பிம்பம் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்.
இந்தத் தருணத்தில்தான் தந்தை பெரியாரின் சொற்கள் எவ்வளவு வலிமையானவை எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ``கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது ஏன் ஆண்களுக்கு இல்லை? ஏன் எந்த இலக்கிய புராணங்களும் ஆணின் கற்பைச் சோதிக்கவில்லை அல்லது கொண்டாடவில்லை?” என்று அவர் எழுப்பிய கேள்வி இன்றும் பதில் அளிக்கப்படாமலேயே தட்டிக்கழிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையில் பெண்ணுறுப்புச் சிதைவு நடந்தாலும்ஆசியாவிலும் ஆங்காங்கே அதுபோன்ற கொடூரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் இந்த வழக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த இருபாலரும் நல்ல கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. `கல்வியறிவற்ற பழங்குடியின மக்களால் மட்டும் நடத்தப்படும் சடங்கு அல்ல' என்பதற்கு இது ஒரு சான்று. இந்தியாவில்கூட இப்படி ஒரு கொடுமையான சடங்கு பின்பற்றப்படுவதை, பத்திரிகையாளர் ஆரீஃபா ஜோஹாரி போன்றவர்களால் இந்த உலகம் அறிந்து கொண்டது. அவர்களால் அது சாத்தியமானது. இதையடுத்து, கடந்த வருடம் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிராக வலுவான கண்டனங்களைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பெண்ணுறுப்பைச் சிதைப்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையாகக் கருதப்படும் எனவும் அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபை பெண் உறுப்புச் சிதைவை 2012-ம் ஆண்டு நவம்பர் 27-ல் தடை செய்த பிறகுதான், போஹ்ரா மக்களில் இந்த வன்செயல் கண்டறியப்பட்டது. உறுப்புச் சிதைவு கொடுஞ்செயல் என உணரப்படாமல் இன்னமும் நடைமுறையில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இது தெரியப்படுத்துகிறது. எந்தவொரு சட்டமும் நடைமுறையில் சாத்தியப்பட வேண்டுமெனில், அதுகுறித்த போதிய அளவு விழிப்புஉணர்வும் பிரசாரமும் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் இதுபோன்ற கொடுமையிலிருந்து ஒரு பெண்ணையாவது காப்பாற்ற முடியும். என்றாலும், அதை மனித உரிமைகளை நம்பும் அனைவரும் முன் நின்று செய்யவேண்டியது அவசியம்.
 
ஐஸ்கிரீமை நாக்கால் சாப்பிட கூடாது : பெண்களுக்கு துருக்கி விதித்த புதிய விதிமுறை


துருக்கியில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
துருக்கியில் உள்ள பக்சிலர் மாவட்டதில் மாநகராட்சி அமைப்பு ஒன்று, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு மாதம் பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வாரத்துக்கு 2 மணி நேரம் நடைபெறுகிறது.
இந்தப பயிற்சி வகுப்பில் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ள விதிமுறைகள்தான் தற்போது துருக்கியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த பயிற்சி வகுப்பில் பெண்கள் நாக்கால் ஐஸ்கிரீமை சாப்பிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம்.
இதனைத் தான் தற்போது சமூக ஊடகங்களில் அந்த நாட்டு பெண்கள் ஐஸ்கிரீமை இனி நாம் உருகிய பின் தான் சாப்பிட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது மிகவும் ஆபத்தான போக்கு பெண்கள் ஐஸ்கிரீமை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூற இவர்கள் யார்? நாங்கள் எப்படி இருகிறோமோ அப்படியே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று துருக்கி பெண்கள் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
கடல்நாயின் கழிவில் இருந்த பென்-டிரைவ்... அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!
நியூஸிலாந்து நாட்டில், அவ்வப்போது நீர்நில வாழ் உயிரினமான கடல்நாய்களின் (seal) கழிவுகளை எடுத்து சோதனை செய்வது வழக்கம். இந்த விலங்குகளின் உடல்நலம் சீராக இருக்கிறதா, இவை என்ன உணவை எடுத்துக்கொண்டிருக்கின்றன போன்றவற்றைத் தெரிந்துகொண்டு, அவற்றைக் கண்காணிக்க இச்சோதனையைச் செய்வார்கள். இப்படித்தான், சமீபத்தில் leopard seal இனத்தைச் சேர்ந்த ஒரு கடல்நாயின் கழிவு சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.

இந்தக் கடல் நாயின் கழிவில் ஒரு பென்-டிரைவ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பென்-டிரைவ் முழுதாக இயங்கும் நிலையில் இருந்தது இன்னொரு ஆச்சர்யம். அதில் ஒரு தாய் தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்றும், கடல் நாய்களின் புகைப்படங்களும் இருந்துள்ளன. இதன் உரிமையாளர் யாரென்று இன்னும் கண்டறியப்படவில்லை. இதை ஓர் உடல்நிலை சரியில்லாத leopard seal-லின் கழிவில் இருந்து கண்டறிந்ததாகச் சோதனைசெய்த கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.இது ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும், மறுபுறம் பெரும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இப்படி அன்டார்டிகாவை நெருங்கியுள்ள பகுதியில் வாழும் கடல்வாழ் விலங்குகளில், இப்படி பிளாஸ்டிக் பொருள்கள் கண்டறியபடுவது மிகவும் கவலை அளிப்பதாக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர். கடல்களில் பிளாஸ்டிக் என்பது இன்று சிறிய மீன்களில் தொடங்கி திமிங்கிலங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
 
ஆரோக்கியத்துக்கு அச்சு வெல்லம்!வெல்லம்... முன்பெல்லாம் எல்லோர் வீடுகளிலும் வெல்லம் பயன்பாடு தினமும் இருக்கும். வெள்ளை சர்க்கரையின் வருகைக்குப் பிறகு வெல்லத்தின் மவுசு கொஞ்சம் குறைந்தாலும், ஆரோக்கியத்தை நாடுவோர் வெல்லத்துக்கே முன்னுரிமை கொடுத்தனர்.அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் வெல்லத்தின் சுவை அலாதியானது. கடந்த சில ஆண்டுகளாக வெல்லத்தின் பயன்பாடு குறைந்திருந்த போதிலும், அண்மைக் காலமாக மீண்டும் மக்கள் வெல்லம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் அதிக அளவில் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த வெல்ல உற்பத்தியாளர் ஆர்.நடராஜன் கூறும்போது, "பொத்தனுார், பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதை மையப்படுத்தி, வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. உருண்டை, அச்சு வெல்லம் 30 கிலோ மூட்டைகளாக கட்டப்பட்டு, பிலிக்கல்பாளையம் வெல்ல ஏல மண்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு, தேவையைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் வெல்ல மண்டி கூடும். பின்னர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களுக்கும் வெல்லம் அனுப்பிவைக்கப்படுகிறது.
இயற்கையான முறையில், தரமாக தயாரிக்கப்படும் ப.வேலூர் வெல்லத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதேசமயம், வெல்லம் தயாரிப்பில் கலப்படம் உள்ளதாகக் கூறப்படும் புகாரும் உண்மைதான். அதிக லாபத்துக்காக சிலர் 90 சதவீதம் வெள்ளைச் சர்க்கரையும், 10 சதவீதம் கரும்பு பாலும் சேர்த்து வெல்லம் தயாரிக்கின்றனர். சிலர் ரசாயன உரத்தையும் கலந்துவிடுகின்றனர். சிலரது செயல்பாடுகளால், நேர்மையாக தொழில் செய்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல, காவிரி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகளால், அந்த தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும்போது மண்ணின் தன்மை மாறிவிடுகிறது. இங்கு விளைவிக்கப்படும் கரும்பில் எடுக்கப்படும் சாறும் தரம் குறைந்ததாக உள்ளது. அதிக விளைச்சலுக்காக யூரியாவைப் பயன்படுத்தும்போது, கரும்புச் சாறில் போதிய சர்க்கரை இருப்பதில்லை. சிலர் வெல்லத்தை உருண்டையாக பிடிப்பதற்காக சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்துவதால், உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாண வேண்டும். அதேசமயம், வெல்ல உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கி, கலப்படமின்றி வெல்லம் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ப.வேலுார் பகுதியில் 200 வெல்ல தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் 150 மட்டுமே தற்போது செயல்படுகின்றன. கலப்பட பிரச்சினையால் பல ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது சீசன் இல்லாததால், பிலிக்கல்பாளையம் வெல்ல மண்டிக்கு வரத்து பாதியாக குறைந்துள்ளது. ரேஷன் கடைகளில் சர்க்கரை வழங்குவதுபோல, வெல்லமும் விற்பனை செய்ய வேண்டும். முதல்கட்டமாக, ரேஷன்கார்டுகளுக்கு வழங்கப்படும் சர்க்கரையில், பாதியை வெல்லமாக வழங்க வேண்டும். இதனால், வெல்லத்துக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். கரும்பு விவசாயமும் செழிக்கும்" என்றார்.
நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆ.புஷ்பராஜ் கூறும்போது, "வெல்லத்தில் 92 சதவீதம் இனிப்பு சுவை இருக்க வேண்டும். இதற்கு குறைந்தால், அது தரமற்ற வெல்லமாகும். இனிப்பை அதிகரிப்பதற்காக வெள்ளைச் சர்க்கரையை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர். இது தவறு என்பதால், தொடர் ஆய்வு மேற்கொண்டு, 76 மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 20 பேர் மீது வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருப்பா இருந்தா அது ‘டூப்ளிகேட்’:
"கரும்பு பாலை காய்ச்சி, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வெல்லம் காவி நிறத்தில் இருக்கும். இதுதான் கலப்படமற்ற வெல்லம். வெல்லம் கருப்பு நிறமாக இருக்க, சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. இது உடலுக்கு கேடு தரும்" என்கின்றனர் வெல்ல உற்பத்தியாளர்கள்.
 
திருச்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டியை அடுத்த கருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதற்காக தினமும் 3 முறை தனியாக மணி அடித்து ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
மனித உடலில் பெரியவர் களுக்கு 50 முதல் 60 சதவீத மும், குழந்தைகளுக்கு 70 முதல் 75 சதவீதமும் தண்ணீர் நிறைந் துள்ளது. உடல் உறுப்புகள் சீராக செயல்பட தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டுமென மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பெற்றோர்களோ, ஆசிரியர்களோ கட்டாயப்படுத்தினால் தான் குழந்தைகள் தண்ணீரை அருந்துவார்கள். தண்ணீர் அருந்தாததன் காரணமாக உடல் உறுப்புகள் சீராக செயல்படாமல், சிறுநீரகம் உள்ளிட்ட பாதிப்புகள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன.
எனவே, தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவம் குறித்து பள்ளியில் தினமும் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் வலியுறுத்தி வந்தார் கருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ்.
மாணவர்கள் தண்ணீரை அருந்த வைக்க சக ஆசிரியர் களுடன் கலந்தாலோசித்து, வகுப்பறையிலேயே மாணவர்கள் தண்ணீர் அருந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து, இப்பள்ளியின் தலைமையாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: இந்த பள்ளியில் கருங்குளம், பாம்பாட்டி பட்டி, மண்பத்தை, மணியாரம்பட்டி, வையம்பட்டி, செக்கனம், அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 6 முதல் பிளஸ் 2 வரையில் 647 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 27 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாணவ, மாணவிகள் பெரும் பாலான நேரத்தை பள்ளியில்தான் செலவிடுகின்றனர். ஆனால், அந்த நேரத்தில் இயற்கை உபாதைக்காக எழுந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் தாகம் எடுத்தால் கூட தண்ணீரை அருந்துவதில்லை. குறிப்பாக மாணவிகள் சரியாக தண்ணீர் அருந்துவதில்லை.
எனவே, தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தி, தினமும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வருவதைக் கட்டாயமாக்கி, அதை வகுப்பறையில் உரிய இடைவெளியில் குடிக்க வேண்டுமென அறிவுறுத்தினோம். அதற்கென பள்ளி வேலைநேரத்தில் காலை 10.30 மணி, பகல் 12.50 மணி, பிற்பகல் 2.10 மணி என 3 முறை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக தனியாக மணியை ஒலிக்கச் செய்கிறோம். அந்த நேரத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீரை வகுப்பில் உள்ள ஆசிரியர் முன்னிலையிலேயே தேவையான அளவுக்கு குடித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக இந்த முறையை கடைப்பிடித்து வருகிறோம். தற்போது மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் தண்ணீரை கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எவர்சில்வர் பாட்டில்களை வழங்க முடியுமா என்றும் யோசித்து வருகிறோம்.
பள்ளியில் பாழடைந்து கிடந்த ஒரு அறையை தூய்மை செய்து, அதை நூலகமாக மாற்றியுள்ளோம். அங்கு நாளிதழ்கள் மற்றும் நூல்களை வைத்துள்ளோம். மாணவ, மாணவிகள் ஓய்வு நேரத்தில் வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்து வருகிறோம் என்றார்.
இந்த பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால், தற்போது டேங்கர் லாரியில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்துத் தந்தால் அது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
 
ஆனைகட்டியில் காரை அடித்து நொறுக்கிய யானை நூலிழையில் உயிர் தப்பிய நபர்
கோவை
ஆனைகட்டி-கோவை சாலையில் நின்றுகொண்டிருந்த காரை, ஒற்றை யானை தாக்கியதில் கார் பலத்த சேதமடைந்தது. அதில் பயணித்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார்.
கோவை அன்னூர் சாலை, சக்தி சாய் நகரைச் சேர்ந்தவர் ஜி.செல்வராஜ். இவர் பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு ஆனைகட்டி வழியாக கோவை நோக்கி காரில் வந்துள்ளார். தூமனூர் பிரிவு அருகே இரவு 9.15 மணியளவில், சாலையோர புதரில் இருந்து ஏதோ சப்தம் கேட்கவே காரை நிறுத்தியுள்ளார். அப்போது, புதருக்குள் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை கார் அருகே நின்றுள்ளது. யானையை பார்த்த செல்வராஜ், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டார். பின்னர், காரின் முகப்பு பகுதி மற்றும் கண்ணாடியை நொறுக்கிய யானை, சாலையை கடந்து சென்றுள்ளது. இந்த தாக்குதலால் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. யானை கடந்தவுடன், காரைவிட்டு வெளியேறிய செல்வராஜ், அவ்வழியாக வந்த ஒரு வேனில் ஏறி கோவை வந்து, இங்கிருந்து பேருந்து மூலம் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் கூறும்போது, “யானையால் தாக்கப்பட்ட கார் சம்பவ இடத்திலேயே நேற்று இருந்தது. முதலில் எவ்வாறு கார் சேதமடைந்தது என யாருக்கும் புலப்படவில்லை. பின்னர், இன்று (நேற்று) காலை செல்வராஜின் மகன் வனத்துறையை தொடர்புகொண்டு, காரை அப்புறப் படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டபோதுதான் யானை தாக்கியது தெரியவந்தது. ஆனால், சிலர் கார் மோதி யானை காயமடைந்ததாகவும், காயமைடைந்த யானையை வனத்துறையினர் தேடி வருவதாகவும் சமூக வலைதளங் களில் தவறான தகவலை பரப்பிவிட்டனர்” என்றார்.
 
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் மறுபிறவி எடுக்கும் பட்டுப்போன ஆலமரம்: அனுபவத்தைப் பயன்படுத்தி உயிரூட்டிய முன்னாள் வேளாண் துறை அமைச்சர்
திருச்சி
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பட்டுப்போன பழமையான ஆலமரத்தை திசு வளர்ப்பு முறையில் மீட்டெடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி யின் மையப்பகுதியில் 75 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்தது. இது, மாணவர்கள் கூடும் இடமாக மட்டுமின்றி, கல்லூரிக்கு வரும் முக்கியத் தலைவர்கள் உரையாற்றும் இட மாகவும் ஒரு காலத்தில் விளங் கியது. கல்லூரியின் அடை யாளமாக திகழ்ந்த இந்த மரத்தின் பெரும்பாலான கிளைகள், கடந்த 2017-ல் அடித்த சூறைக்காற்றில் உடைந்து விழுந்தன. இதையடுத்து, இதை மீண்டும் வளர்த்தெடுக்க முன்னாள் மாண வர் சங்கத்தினரும், முன்னாள் பேராசிரியர்கள் சங்கத்தினரும் முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி, வேளாண் கல்லூரி களின் பேராசிரியர்கள், வேளாண் துறை அதிகாரிகள் அந்த ஆலமரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ‘கேனோடெர்மா' எனப்படும் உயிர்க்கொல்லி பூஞ்சானத்தால் மரத்தின் உட்பகுதிகள் பாதிக்கப் பட்டிருந்ததும், மரத்தின் கிளை களை இயந்திர ரம்பம் கொண்டு அறுத்து அகற்றியிருந்ததால் வெப் பத்தின் காரணமாக மரம் முழு வதும் பட்டுப்போனதும் தெரியவந்தது.
இதையடுத்து, மரத்தின் 6 அடி உயரத்தை மட்டும் வைத்து, சிற்பக் கலைஞர்களின் உதவியுடன் அதனை நினைவுச் சின்னமாக வடிவமைக்க முடிவு செய்தனர்.
இதையறிந்த திருச்சியைச் சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஈ.வெ.ரா கல்லூரிக்குச் சென்று, அந்த ஆலமரத்தை பார்வை யிட்டார். பின்னர் தனது விவசாய அனுபவத்தை பயன்படுத்தி, திசு வளர்ப்பு முறையில் ஆலமரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்பலனாக பட்டுப்போன நிலையில் இருந்த ஆலமரத்தின் மீது தற்போது சுமார் 3 அடி உயரத்துக்கு இலைகள் துளிர்விட்டு வளர்ந்துள்ளன.
உயிர் கொடுத்த விழுதுகள்
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: இக்கல்லூரியின் அடையாளச் சின்னமாக இருந்த ஆலமரத்தை அகற்ற மனமில்லாமல், அதனை நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கு முன்னாள் மாணவர்களும், முன்னாள் பேராசிரியர்களும் முயற்சி மேற்கொண்டது குறித்த செய்தியை ‘இந்து தமிழ்’ நாளிதழில் படித்தேன். எனது விவசாய அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கு ஏதாவது செய்ய முடியும் என தோன்றியது. உடனே அங்கு சென்று, ஆலமரத்தை பார்த்த போது பெரிய மரம் முற்றிலும் பட்டுப்போய் இருந்தது. ஆனால், அதற்கு அருகில் இருந்த 2 விழுதுகளை வைக்கோல் பிரி சுற்றி வைத்திருந்ததால், அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உயிர் இருந்தது. அதிலிருந்து திசுக்களை எடுத்துச் சென்று, எனது விவசாய பண்ணையில் வைத்து திசு வளர்ப்பு முறையின்படி 3 ஆலமரக்கன்றுகளை உருவாக்கி னோம். சுமார் அரை அடி உயரம் வளர்ந்த பிறகு, அவற்றை எடுத்துச் சென்று பட்டுப்போன ஆலமரத்தின் மேல் பகுதியில் துளைகளை ஏற்படுத்தி அவற்றில் நட்டு வைத்தோம்.
ஆலமரக் கன்றுகள் நன்கு வளரும் வகையில், அதற்கேற்ற சத்துக்களுடன்கூடிய இயற்கை உரத்தை எனது பண்ணையிலேயே தயாரித்து, அவற்றுக்கு இட்டு வந்தோம். மேலும் சீரான அளவில் சூரிய ஒளி, காற்று செல்லும் வகையில் ஆலமரத்தைச் சுற்றிலும் பசுமை நிற குடில் ஏற்படுத்தினோம். கடந்த 3 மாதங்களாக தமிழ்த் துறைத் தலைவர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் அவற்றை தொடர்ந்து பராமரித்து வந்த நிலையில், தற்போது அவை பட்ட மரத்துடன் இணைந்து நன்றாக துளிர்த்து வளரத் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக மரத்தின் மேல் பகுதியிலிருந்து, கீழ்பகுதி வரை பெரிய துளை ஏற்படுத்தி, அதனுள் மண் மற்றும் இயற்கை உரங்களை இட்டு, அவற்றின் வாயிலாக புதிய கன்றுகளின் வேரை பூமிக்குள் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் பழைய மரமும், புதிய மரமும் இணைந்திருக்கும் என்றார்.