சூரசம்ஹாரம் - கதை திரி

Anuya

Well-known member
#26
அத்தியாயம் 10

அன்று வேலுவிற்கு பிறந்தநாள்.கடந்த இரண்டு வருடங்களாக வேலுவின் வீட்டில், செந்திலும் காவ்யாவும் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த வருடம்?
கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் செந்திலோ இப்போது டிடியிடம் வேலையில் பிஸியாக இருந்தான்.அதுவுமன்றி இந்த விஷயம் பழனிக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.அவரிடம் காவ்யா மாட்டுகிறாளோ இல்லையோ வள்ளி சிக்கி சின்னாபின்னமாகிவிடுவார். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, மனைவியிடம் கோபத்தில் குதிக்கும் ஆண்கள், அவர்களின் மகள்களிடம் மட்டும் எப்போதும் அடக்கியே வாசிக்கின்றனர்.இங்கு காவ்யாவின் வீட்டிலும் அதே மாயம்தான்!
பழனியின் பேச்சைக் கேட்காது காவ்யா ஏதாவது செய்தால் கூட அவளை நேரிடையாக திட்டாது வள்ளியைதான் மனிதர் வாணலியில் போட்டு வறுத்தெடுப்பார். தன்னால் பாவம் அவர் ஏன் தந்தையிடம் மாட்டிக்கொண்டு அல்லாடவேண்டும் என அன்னையின் மேல் கொண்ட கருணையால் இந்தமுறை பிறந்தநாள் கொண்டாட்டத்தை வேலுவின் வீட்டில் இல்லாமல் வேறு எங்காவது வைத்துக்கொள்வோமா என்று கேட்கவே செந்திலை அன்று வரச் சொல்லியிருந்தாள்.அவளிடம் விஷயத்தை அறிந்ததும் ஒரு நல்ல ஏற்பாட்டை செய்துவிட்டு போன் பண்ணுவதாக சொல்லி சென்றவன், சொன்னதை போலவே சூப்பரான இடத்தைப் பிடித்து அங்கு கொண்டாட்டத்திற்கான அனைத்தையும் செய்து விட்டான். அங்குதான் இப்போது வந்திருக்கிறாள் இவள்.


இவள் இங்குவரும் போது வெளியில் நின்றுகொண்டிருந்த செந்தில்,ஒரு அவசர வேலை வந்துவிட்டதால் அதை முடித்து, அரைமணிநேரத்தில் திரும்பிவிடுவதாக சொல்லி வேகமாக எங்கோ சென்றான். அவன் கொடுத்த சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றவள், அப்படியே பிரம்மித்துப்போய் நின்றுவிட்டாள்.


ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருந்த அந்த காட்டேஜ் டிடிக்கு சொந்தனது. வெளி ஊரிலிருந்து வரும் கட்சியின் பெரிய தலைகள் தங்குவதற்காக இந்த காட்டேஜை கட்டியிருந்தார். அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் அறையை போல சகலவசதிகளையும் கொண்டிருந்தது. அவரிடம் செந்தில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே இதன் சாவியை அவனிடம் கொடுத்து விட்டார்.


அன்று காவ்யா வேறொரு இடம் பார்க்க வேண்டுமென சொன்னதும் இந்த காட்டேஜின் நினைவுதான் செந்திலுக்கு வந்தது.இவன் என்ன செய்தாலும் கேட்க யாருமில்லை என்ற அளவிற்கு டிடியிடம் இவனுக்கு செல்வாக்கு இருந்தாலும் அவரிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு இந்த இடத்தைப் பற்றி காவ்யாவிடம் கூறி இங்கு வரவைத்தான்.

வேலுவிற்கும் இந்த இடத்தின் அட்ரஸை அனுப்பினான்.

காட்டேஜின் அழகை அங்குலமங்குலமாக ரசித்துக்கொண்டு சுற்றி வந்தவளுக்கு காலையில் இங்குவரும்போது வீட்டில் நடந்தவை நினைவிற்கு வந்தது.


என்ன சொல்லி வெளியே கிளம்பலாமென வெகு நேரமாய் முழித்துக் கொண்டிருந்தளுக்கு திவ்யா தெய்வமாய் உதவிக்கு வந்தாள்.அவளின் கல்லூரியில் நடக்க இருக்கும் ஒரு விழாவிற்காக புதிதாக புடவை எடுக்கவேண்டுமென சொன்னவள் அதற்கு இவளை துணைக்கழைத்தாள்.


அப்படியே அவளே தந்தையிடம் பணமும் பர்மிஷனும் வாங்கினாள்.இதில் எங்கேயும் காவ்யாவின் தலை தெரியாதிருக்கவே பழனியும் எந்த சந்தேகமும்படாது சின்ன மகளுக்கு அனுமதியோடு நிறைய பணமும் கொடுத்தார்.இருவரும் புறப்படும் நேரத்தில் அவர்,


“திவிம்மா! அக்காக்கும் அப்படியே நாலு நல்ல புடவை எடுத்துக்கோங்க. கல்யாணம் கூடிவர பொண்ணுக்கு கண்ணுக்கு அழகா துணிமணிங்க இருக்க வேணாமா?” என்றார். அதைக் கேட்டவள் அவரை ஒரு முறை முறைக்க ஏதோ முக்கிய வேலை இருப்பதாக வள்ளியிடம் அவசரமாக சொல்லிவிட்டு வேகமாக வெளியே கிளம்பினார். இதைப்பார்த்து வள்ளி சிரிக்க, அவருடன் மகள்களும் சேர்ந்துக் கொண்டனர்.


தந்தை புறப்பட காத்திருந்த காவ்யா, கடையிலிருந்து அப்படியே செந்தில் சொன்ன இடத்திற்கு சென்று வேலுவின் பிறந்தநாளை கொண்டாடப் போவதாக தாயிடம் சொன்னாள். இதைக் கேட்ட திவ்யா தானும் அவளோடு வருவதாக அடம் பிடிக்க, சரி அவளையும் அழைத்து செல்வதாக வள்ளியிடம் சொல்லி சகோதரிகள் இருவரும் கடைக்கு கிளம்பினர்.


அங்கு திவ்யாவிற்கு வேண்டியதை வாங்கியவள், மாமனுக்கு என்ன வாங்குவது என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்ததால் தனக்காக எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.அப்போதுதான் அவளுக்கு தந்தை சொன்னது நினைவிற்கு வந்தது.’ கல்யாண பொண்ணுக்கு எடுத்தா என்ன... பையனுக்கு எடுத்தா என்ன?’ என நினைத்தவள், நல்ல காஸ்ட்லியான சட்டை ஒன்றை தன் மாமனுக்காக வாங்கினாள்.


கடையைவிட்டு வெளியே வரும்போது திவ்யாவிற்கு அவளின் தோழியிடமிருந்து,’நம்ம ஹீரோ படத்திற்கு என்கிட்டே டிக்கெட் இருக்கு. வருகிறாயா?’ என அழைப்பு வந்தது. அதைக்கேட்டதும் அக்கா, மாமா, பிறந்தநாள்,கொண்டாட்டம்... இவை அனைத்தையும் மறந்தவள்,.படம் முடிந்து இவள் வரும்வரை வீட்டிற்கு செல்லக்கூடாது, எப்படி வந்தோமோ அப்படி ஒன்றாக சேர்ந்துதான் போகவேண்டும் என இவளிடம் கன்டிஷன் போட்டுவிட்டு அங்கிருந்து சிட்டென பறந்தாள்.


தங்கையின் செயலை நினைத்து சிரித்துக்கொண்டு மணியைப் பார்த்தவள், .’இதோ வரேன்னு சொல்லிட்டு போனவனையும் காணோம்.பர்த்டே பேபியையும் காணோம்.என்னை இங்க தனியா உட்காரவச்சிட்டு என்னங்கடா பண்றீங்க?’ என கொந்தளிக்க, அது காதில் விழுந்ததை போல அங்கே வேலு பிரசன்னமானான்.. வேகமாக வந்துக் கொண்டிருந்தவனின் கையில் துணிப்பை ஒன்று இருந்தது.


“வந்து ரொம்ப நேரம் ஆச்சா காவி? எங்க செந்திலைக் காணோம்?ரொம்ப நேரமா நீ இங்க தனியாவா இருக்க!” என படபடத்தவனுக்கு பதிலளிக்காமல் அவன் முன் தன் வலதுக் கையை நீட்டி,
:ஹாப்பி பர்த்டே பேபி!” என்றாள் குதூகலக்குரலில்.அந்த பேபியில் முகம் சுளித்தவன்,” என்னது பேபியா?” என்றான்.


“ஆமாம்! இன்னைக்கு நீங்கதானே பர்த்டே பேபி!” என்றாள் குறும்பாய்.
“ஒழுங்கு மரியாதையா மாமான்னு கூப்பிடு காவி.அது என்ன பேபி, பாபின்னு” என கடுகடுத்தவனை நக்கலாய் பார்த்தவள்,


“இதுக்குதான் நாலு எழுத்து படிச்சியிருக்கனும். படிக்காத மக்கு மன்னாந்தைக்கு ட்ரேன்ட்,பேஷன் இதெல்லாம் எங்க தெரிய போகுது?” என்றாள்.


“யாருடி! யாரு மக்கு? நானா?” எனக் கேட்டவன் அவளின் கன்னத்தை கிள்ள, அதற்கு அவள், “விடு மாமா. வலிக்குது... விடு மாமா! உண்மையை சொன்னா ஏன் மாமா கோவிச்சிக்கிற” எனச் சிணுங்கினாள்.


“ஆரம்பிச்சாச்சா? என்னக்கா இன்னைக்காவது மாமாவை வம்பிழுக்காம சும்மா இருக்க மாட்டியா?” எனக் கேட்டவனின் கைகளில் பெரிய அட்டைபெட்டி இருந்தது.


“டேய் செந்தில்! என்னடா இது இவ்வளவு பெரிய பாக்ஸ்? என்ன இருக்கு உள்ள. இதை வாங்கதான் வெளிய போனியா?” என காவ்யா அடுக்கிய கேள்விகளுக்கு,
“கேக் காவி-க்கா. இந்தமுறை மாமா பர்த்டேவை ஸ்பெஷல்லா கொண்டாடறோம் இல்ல... அதுக்குதான் இந்த பெரிய கேக். அப்புறம் இதைப் பாரு.


ஃபார்ட்டி எய்ட் மெகாபிக்ஷேல் கேமரா போன். இன்னைக்கு உன்னையும் மாமாவையும் டிஸைன் டிஸைனா போட்டோ எடுத்து தள்ளப்போறேன்.

இதை என் பிரெண்ட் கிட்டயிருந்து வாங்கதான் அவசரமா போனேன்” என பதிலளித்தவன் தன் கைகளில் இருந்த செல்லை காட்டினான்.


அடுத்த ஒருமணி நேரம் எப்படி போனது என்பது தெரியாத வகையில் ஒரே ஆட்டமும் பாட்டமுமாக பிறந்தநாளை கொண்டாடி தீர்த்தனர். அவர்களின் கொண்டாட்டங்கள் அனைத்தும் நினைவு பெட்டகத்தை போன்று போனில் சேமித்து வைக்கபட்டது.தாங்கள் எடுத்த போட்டோக்களை வேலுவும் காவ்யாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது டிடியிடமிருந்து அவசரமாக வரசொல்லி செந்திலுக்கு அழைப்பு வந்தது. அவன் அப்படியே போட்டடதை போட்டபடி விட்டு கிளம்பிக்கொண்டே
“மாமா! நீங்க மெதுவா இங்க இருந்து கிளம்புங்க.எனக்காக காத்திருக்க வேணாம். நான் காட்டேஜின் சாவியை நைட் உங்க வீட்டுக்கு வந்து வாங்கிக்கறேன்” என சொல்லி சென்றான்.“டேய்.... இந்த போன்டா?” என்ற வேலுவின் குரலுக்கு,
“அதையும் நைட் வாங்கிக்கறேன்” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனின் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது.“அடப்பாவி! என்ன பாஸ்ட்டா போறான்? அவன் உங்களை பார்க்க வரும்போது இப்படி வேகமா போக கூடாதுன்னு சொல்லி கொஞ்சம் கண்டிச்சி வைங்க மாமா” போனவனையே பார்த்துக்கொண்டு சொன்னாள்.


“அவன் போய் அரைமணிநேரம் ஆச்சு-டி. இன்னும் அங்கேயே என்ன பார்வை? பக்கத்துல இருக்கும் மாமனை கொஞ்சம் கவனி” என்றவன் அவளை தன் கைகளில் வளைத்தான்.


“எப்படி மாமா கவனிக்கனும்.நீயே சொல்லு. சிறப்பா செய்துடலாம்” என்றவள் அவனின் தோள்களில் சாய்ந்தாள்.


“எல்லாத்தையும் நானே சொல்லனுமா? என்னோட கிஃப்ட் எங்க?”


“டேய் மாமா! அதான் சட்டை தந்தேனே. அது எவ்ளோ காஸ்ட்லி தெரியுமா? நான் கூட கேக் வெட்டும்போது போடுன்னு சொன்னதுக்கு அப்புறம் ஒரு நாள் போடறேன்னு சொன்னியே.
மறந்துட்டியா...”“அது எப்பவும் கொடுக்கற கிஃப்ட். இன்னைக்கு உன் தம்பி அவன் சார்புல ரொம்ப ஸ்பெஷல்லா ஏற்பாடெல்லாம் பண்ணிட்டான். உன்கிட்டயிருந்து ஸ்பெஷல் ஏதுமில்லையா காவி?” கேட்டவனின் குரலில் தாபம் எட்டிப் பார்த்ததோ!


“ம்ம்ம்... ஸ்பெஷல் வேணுமா? ரொம்ப ஸ்பெஷல்லா எங்க அப்பாகிட்டயிருந்து வாங்கிதரட்டுமா மாமா?” கேட்டவள் கையிலிருந்த போனை அங்கிருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


அவளின் கைகளை எட்டிப் பிடித்தவன்,”சரி நீ கொடுக்காட்டி என்ன? நான் தரேன்.வாங்கிக்கோ” என அவளை நெருங்க, வேலுவின் இந்த புதிய முகத்தை ஆச்சரியமாய் பார்த்தாள் காவ்யா.


இவள் என்னதான் நெருங்கி வம்பிழுத்தாலும் எப்போதும் ஒரு கட்டுப்பாட்டுடன் இருப்பவன் இன்று கொஞ்சம் இளகியிருப்பதாக முதலில் இருந்தே அவளுக்கு தோன்றியது. தன் எண்ணம் சரியே என்பதைப்போல அவன் இப்படி நடக்கவும்,”என்ன... என்ன மாமா?” என திக்கினாள்.


“என்ன-டி தைரியமெல்லாம் வாயில தானா? கொஞ்சம் கிட்ட வந்ததும் இப்படி நடுங்கற!”


“ம்ம்ம்... விவேகானந்தர் திடீர்னு நித்யானந்தாவா மாறினா என்னாச்சோ ஏதாச்சோன்னு ஒரு பயம் வரத்தானே செய்யும்”


“மவளே! எல்லாத்துக்கும் பதிலை கொடுக்கும் இந்த வாயை...” என இழுத்தவன் அவளின் இதழ்களை சிறையெடுத்தான்.சிறையெடுத்தவன் சிறைப்படதுதான் அங்கு நடந்த அதிசயம்!


தயக்கத்தில் தொடங்கிய தேடல் மயக்கத்தின் வாயிலில் நின்று கொண்டு சொர்க்கத்தின் வாசலை தேடத்தொடங்கிய நேரம்,

மயக்கத்திலிருந்து முதலில் தெளிந்த வேலு தன் கைகளில் பூமாலையாய் துவண்டுக்கிடந்தவளின் முகத்தை மென்மையாக தூக்கி தன்னை பார்க்கவைத்தான்.அப்போதும் திறக்காது மூடியிருந்த விழிகளில் அழுந்த அச்சாரத்தை தந்தவன்,”காவி!” என கரகரத்த குரலில் அழைத்தான்.


மாமனின் குரலுக்கு கண் மலர்ந்தவளைப் பார்த்து,”இப்ப நான் ஒன்னு கொடுப்பேன்.அதை மறுக்காம வாங்கிக்கனும்?” என்றான் மெல்லிய குரலில்.


‘என்னது... மறுபடியுமா!’ என அதிர்ந்தவளை குறும்புப் பார்வை பார்த்தவன் அங்கிருந்த பையில் அவளுக்காக வாங்கிவந்த சேலையை எடுத்து கொடுத்தான்.அதைப் பார்த்தவளின் கண்கள் ஆனந்தத்தில் மின்னியது.அவள் இவனுக்காக வாங்கிய சட்டையின் கலரில், அந்த புடவை இருந்தது. அதை ஆசையாய் வருடிக்கொண்டிருந்தவளின் காதில், “என்ன கட்டிகிறியா?” என்றான் மயக்கும் குரலில்.


எதைக் கேட்கிறானென இவள் புரியாத பார்வை பார்த்ததும்,”என்னை இல்லமா.புடவையை கேட்டேன்” என்றான் பொல்லாத சிரிப்பை சிந்தி.


அதற்கு “ரெண்டையும் கட்டிக்க நான் ரெடி... நீங்க ரெடியா?” என கேட்டவள், புடவையை கையில் எடுத்துக்கொண்டு எங்கே போவதென சுற்றிப்பார்க்க, ”இங்கயே கட்டு.நான் வேணும்னா கண்ணை மூடிக்கறேன்” என்றவனின் குசும்புக் குரலுக்கு,

“உனக்கு ஓகேன்னா எனக்கு ஒன்னுமில்ல மாமா!” என்றவள் அதிரடியாய் காரியத்தில் இறங்கினாள்.
அவளின் அடாவடியின் முன் எப்போதும்போல் இப்போதும் தோற்றுப்போன வேலு,”சும்மாவே நீ ஒரு மார்க்கமாதான் சுத்துவ.இன்னைக்கு ரொம்ப ஓவரா தான்-டி போற.கல்யாணம் வரைக்கும் என்னை கன்னிப் பையனா இருக்கவிடமாட்டியா நீ?” என்றவன் வெளியே சென்றான்.கார்த்திகை மாதத்தின் குளிர்காற்று அவனை வரவேற்கும் விதமாக மேனியை தழுவி சென்றது. இன்று என்னமோ சூரிய பகவானும் இவனைப்போன்று உல்லாச மனநிலையில்தான் இருந்திருப்பாரோ? அதனால்தான் தன் வழக்கமான நேரத்திற்கு முன்பே மனையாளை காண மனைக்கு ஓடிவிட்டார். தோள் கொடுக்கும் உற்றத்தோழனாய் நண்பன் விட்டு சென்ற பணியை தொடர வந்த வாயு பகவான்,தன்னுடைய சொத்தான இளங்காற்றை மக்கள்மனம் குளிர அள்ளி வீசிகொண்டிருந்தார் அந்த பொன்மாலை பொழுதில்.


தினமும் சந்தித்துக் கொண்டிருந்தவளை சிலகாலமாக பார்ப்பது அரிதாகிப் போனதாலோ என்னமோ இன்று வேலுவிற்கு அவளின் அருகாமை அதிகமாக தேவைப்பட்டது.அவளை தன் கைவளைவிலேயே வைத்திருக்க வேண்டுமென்ற ஆசை அணைபோடமுடியாத அளவிற்கு அலைபாய்ந்தது.


வெளியே வந்தும் அவனின் மனமும் உடலும் கட்டுக்குள் நிற்க மறுத்து, துணை வேண்டுமென திமிறிக் கொண்டிருந்தது.அதற்கு துணைபோன அவனின் மனசாட்சியும்,’டேய்! அவ உன்னுடைய பொண்டாட்டி-டா.அவ மேல உனக்கு இல்லாதா உரிமையா? சம்மந்தப்பட்டவங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா ஆசைப்பட்டபடி இருக்கறதுல என்ன தப்பு?’ என சொல்லி இவனின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டது.


சில சமயம் மூளையின் பேச்சை மனம் கேட்காது. பல சமயம் மனதின் பேச்சை மூளை கேட்காது.அதேபோல சிலபல சமயங்களில் இவ்விரண்டின் பேச்சையும் உடல் கேட்காது. அதைபோன்ற நிலையில்தான் இங்கு வேலுவும் இருந்தான்.


கதவு திறக்கும் சத்தம்கேட்டு திரும்பியவனின் கண்களுக்கு விருந்தான உருவம், தூண்டிவிடப்பட்ட உணர்ச்சிகளுக்கு தூபம் போடுவதைப் போல இருந்தது.எப்போதும் அழகாய் இருப்பவள் இன்று ஏனோ அதியழகாய் தெரிந்தாள்.மனதின் மயக்கம் விழிகளில் வழிய அவளைப் பார்த்திருந்தவனின் ஆண்மை, அவளின் அழகையாள துடித்தது.


ஒருவருக்காக மற்றவர் வாங்கித்தந்த ஆடையை ஆசையாசையாக அணிந்துக்கொண்டவர்கள், தனிமையின் இனிமையின்பால் ஈர்க்கப்பட்டு ஆனந்தமாக தங்களின் வாழ்க்கையை தொடங்கினர்.அவர்களுக்கு இது தவறாக தெரியவில்லை.ஆனால் முறையின்றி நடக்கும் அனைத்தும் சிக்கலைத்தான் உண்டு பண்ணுமென அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.


இங்கு இருவர் சேர்ந்து செய்த செயலுக்கு ஒருவர் மட்டும் பொறுப்பாக போகும் காலம் விரைவில் வரப்போகிறது என்பதை இவர்கள் அறிவார்களா? அப்போது, இன்று இங்கு நடந்தவைகளுக்கு நான் சாட்சியம் கூறுவேன் என சொல்வதை போல செந்தில் கொண்டுவந்த செல்போன் அங்கு நடந்தேறிய அனைத்தையும் பதிவு செய்துக் கொண்டிருந்தது.
 

Anuya

Well-known member
#27
அத்தியாயம் 11

வீட்டிற்கு வந்த தேவாரத்திடம்,”அவசரம்னு தானே கால் பண்ணேன்.அதுக்கு அப்படி எரிஞ்சி விழறீங்க?’ என குற்றம்சாட்டும் குரலில் சொன்னாள் வாசுகி
“நான் வேலை விஷயமா வெளிய போகும்போது போன் பண்ணாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாதா?” என கடுகடுத்தவன் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.அவனுக்கு உணவை பாரிமாறிக்கொண்டே, “நான் என்ன உங்ககிட்ட கொஞ்சவா போன் பண்ணேன். எங்க ஸ்கூல் டீச்சர் ஒருத்தங்க அவங்க மகனைப்பற்றி உங்க கிட்ட பேசனும்னு சொன்னாங்க. அவங்க ரொம்ப மரியாதையானவங்க.என்னைவிட வயசுல பெரியவங்க. இதுவரைக்கும் யார்கிட்டயும் உதவின்னு கேட்டதில்லை.இன்னைக்கு என்கிட்ட அப்படி கேட்கவும்தான் கால் பண்ணேன். இல்லன்னா எனக்கு என்ன வேண்டுதலா... உங்ககிட்ட வாங்கிக் கட்டிக்க” என முணுமுணுத்துக்கொண்டு தண்ணீரை டம்ளரில் ஊற்றினாள்.


அவள் சொல்வதில் இருந்த உண்மை சட்னியில் இருந்த உரைப்பை காட்டிலும் அதிகமாக உரைக்க, வாயில் இருந்த இட்லியை விழுங்கியவன், “ஓகே... ஸாரி. எப்பவும் கால் பண்ணாதவ, இன்னைக்கு பண்ணதும் பிள்ளைங்களுக்குதான் என்னவோ ஏதோன்னு கொஞ்சம் டென்ஷனாகிட்டேன். அதான் உன்கிட்ட அப்படி பேசிட்டேன். சாரிம்மா” என்றான் மன்னிப்பு கேட்கும் குரலில்.


கணவனின் விளக்கம் கேட்டு கோபத்தை விட்டொழித்த வாசுகி, ”அப்ப நாளைக்கு அவங்களை உங்ககிட்ட பேச சொல்லட்டா” என ஆர்வமாய் கேட்டாள்.


“நாளைக்கா...என்ன ரொம்ப முக்கியமான விஷயமா?” கேட்டவன் சட்னியில் இட்லியை நன்றாக குளிப்பாட்டி வாயினுள் தள்ளினான்.


“என்னன்னு எனக்கு தெரியல.ஏதோ அவங்க பையனைப்பத்தி உங்ககிட்ட பேசனும்னு சொன்னாங்க” என்றவள் இன்னும் இரண்டு இட்லிகளை அவன் தட்டில் வைத்தாள்.


“ஓஓஒ... என்ன ஏதாவது ரெகமெண்டேஷனா?” என சலிப்பாய் கேட்டவனின் கையில் ஒரு அடியை வைத்த வாசுகி,


“அவங்க வசதியானவங்கதான். அவங்களே நாலு பேருக்கு படிக்க ஸ்பான்சர் பண்றாங்க.அவங்க எதுக்கு உங்ககிட்ட வந்து நிக்கனும்” என்றாள் வீராப்பாய்.


“அப்படியா! சரி...சரி! பெரிய ஆளுங்கதான் உன்னோட பிரெண்ட். நான் இல்லைன்னு சொல்லல.அதுக்குவேற நீ மல்லுக்கு நிக்காத தாயே!” என்று சொல்லிக்கொண்டு கை கழுவி வந்தவன்,


“நாளைக்கு நான் பிஸி. காலையில் கூட சீக்கிரமே கிளம்பிடுவேன். உங்க பிரெண்டுக்கு ரொம்ப அவசரம்னா என்னோட ஸ்டேஷன் நம்பர்க்கு கால் பண்ண சொல்லு.அந்த போன் ரைட்டர் கிட்டதான் இருக்கும்.அவர் பார்த்துப்பார். என்னோட பர்சனல் நம்பர்ல தான் பேசனும்னா... அது நாளை மறுநாள்தான் முடியும்” என்றவன் சார்ஜரில் போட்டிருந்த லேப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டு,


“வாசு! எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நீ பசங்களோட படுத்துக்கோ” என்றான்.


எப்போதும் நடக்கும் கூத்துதான் இது என்பதால் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத வாசுகி, “வீட்டுக்கு வந்தும் வேலைய கட்டிட்டு அழறதே உங்க பொழப்பா போச்சு!” என புலம்பிக்கொண்டு பிள்ளைகளோடு படுக்க சென்றாள்.


இப்போது இந்த இடத்தில் இவளுக்கு பதில் நம்ம தல மட்டும் இருந்தால்... “அய்யோ... சார் உங்க கடமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு!’ என மெய்சிலிர்த்திருப்பார் என நினைத்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த சிரிப்பினோடு தன்னறைக்குள் நுழைந்து அங்கிருந்த டேபிளின் மேல் மடிக்கணினியை வைத்தான்.


செந்திலின் வீட்டிலிருந்து கொண்டுவந்த செல்போனைகளையும் பென்ட்ரைவ்யையும் தன் வர்த்தியிலிருந்து எடுத்து வந்து அதையும் அதனருகே வைத்துவிட்டு சிறிது நேரம் கண் மூடி அமைதியாக அமர்ந்தவனுக்கு செந்திலின் வீட்டில் நடந்தவைகள் நினைவில் மிதந்து வந்தது.


செந்தில் விஷயமாக விசாரணைக்கு சென்ற இடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் கூறிய தகவல்களால் ஏற்கனவே குழம்பியிருந்த தேவாரம் கடைசியில் அவனின் பீரோவில் இருந்த பணக்கட்டுக்களை கண்டு திகைத்து நின்றான்..


“சார்... இதெல்லாம் டிடி சாரோட பணமா இருக்குமா? இவனை நம்பி அவர் கொடுத்ததை அவருக்கு தெரியாம சுருட்டிட்டானா? இப்ப இது அவருக்கு தெரிந்துப் போச்சுன்னுதான் தலைமறைவாயிட்டானா? இந்த பணம் பத்தி தெரிஞ்சிக்கத்தான் அவனை இவர் தேடராரோ?” என இவனின் பின் நின்றுக்கொண்டிருந்த திரு, தன் அறிவுக்கு எட்டிய கேள்விகளை மடமடவென கேட்டான்.


திரு கேட்டக் கேள்விகளை மீண்டும் ஒருமுறை மனதில் ஓட்டிப் பார்த்த தேவாரம், ”ஹும்... அப்படியா இருக்கும்? இங்க இருக்கும் பணம் மிஞ்சிமிஞ்சி போன ஒரு ரெண்டு லட்சம் இருக்குமா? இது செந்திலுக்கு வேணும்னா பெரிய அம்மவுண்டா இருக்கலாம்.ஆனா டிடிக்கு? இதுக்கு போய் ஏன் அவர் கம்ப்ளெயின்ட் எல்லாம் கொடுத்து மெனக்கெடனும்? ம்ம்ம்... இதுல வேற ஏதோ இருக்கறாப் போல எனக்கு தோணுதே” என்றவன் தாடையை தேய்த்துக்கொண்டு அது என்னவாகாயிருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தான்.


தேவாரம் இப்படி சொன்னதும்தான் திருவிற்கு பாபுவின் வீட்டில் கேட்ட உரையாடலை இன்னும் தேவாரத்திடம் சொல்லவில்லை என்பது நியாபகத்திற்கு வந்தது.அதை அவன் இப்போது பகிர்ந்ததும்,


“இதுதான், இதேதான் தல. இங்க வந்ததிலிருந்து இப்படிப்பட்ட பேச்சுகள்தான் அதிகமா காதில் விழுது.அதனாலதான் என்னால பணத்தோட டிடியையும் செந்திலையும் முடிச்சிப்போட்டு பார்க்கமுடியல. வேற ஏதோ... ஒன்னு இருக்கு.அது என்னன்னு நாளைக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்” என நம்பிக்கையை கூறியவன் அங்கிருந்த செல்போன் மற்றும் பென்ட்ரைவ்களை எடுத்துக் கொண்டான்.


“தல! இப்போதைக்கு டிடிக்கு நாம எதையும் சொல்ல வேண்டாம்.நான் நைட் இந்த ரெண்டிலும் அப்படி என்னதான் அந்த பையன் வச்சிருக்கான்னு செக் பண்ணிட்டு அவர்கிட்ட என்ன சொல்றதுன்னு நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றவன் அந்த வீட்டிலிருந்து வேகமாக வெளியே வந்தான்.


இவர்கள் இருவரும் பாபுவின் வீட்டைக் கடக்கும்போது வீட்டின் மூடிய கதவுக்கருகிலிருந்து யாரோ அவசரமாக நகர்வதைப் போல அரவம் கேட்டது. அதை பார்த்த தேவாரம் திருவிடம் கண்ணசைக்க,அவன் அந்த வீட்டின் கதவுகளை தட்டினான்.அதுவரை அங்கு எரிந்துக் கொண்டிருந்த ட்யுப்லைட் அவசரமாக அணைக்கப்பட்டு, இரவு விளக்கு போடப்பட்டது.இவையெல்லாம் முடிந்த அடுத்த வினாடி திறக்கப்பட்ட கதவுகளின் பின் நின்றிருந்த வரா உறக்கம் சுமந்த விழிகளில் இவர்களைப் பார்த்து,


“என்ன சார்...?” எனக் கேட்டு வெளிப்படையாக ஒரு கொட்டாவியை வெளியேற்றினாள்.


இதை பார்த்து தேவாரம் சூப்பரா நடிக்குது இந்த பொண்ணு என எண்ண, திருவோ,“ஒன்னுமில்ல.எங்க வேலை முடிஞ்சாச்சு.நாங்க கிளம்பறோம்.எங்க வண்டி சாவி உங்க வீட்டில் மறந்து வச்சிட்டோம் .அதை எடுக்கனும்.


அப்படியே பாபுகிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்” என சொல்லி வீட்டினுள் நுழைய முயற்சிக்க,
அதை தடுக்கும் வகையில், “அவரு... அவர் மாத்திரை போட்டு தூங்கிட்டாங்க ஸார்.அவரை டிஸ்டர்ப் பண்ண வேணாமே...” என்றதோடு உள்ளே ஓடிசென்று அவர்களின் சாவியை கொண்டுவந்து நீட்டினாள்.அவள் பொய் சொல்கிறாள் என்பதை நிருபிப்பதைபோல இரவுவிளக்கின் மஞ்சள் ஒளியின் உபயத்தால் கட்டிலில் அமர்ந்திருந்த உருவத்தின் நிழல் எதிர் சுவற்றில் விழுந்துக் கொண்டிருந்தது.இதை கவனித்த தேவாரம்,


“சரிம்மா நாங்க வரோம்” என சொல்லி திருவோடு அங்கிருந்து விரைந்தான்.
“சார்... சார்! அந்த பொண்ணு பொய் சொல்லுது சார். பாபு இவ்வளவு சீக்கிரமாவா தூங்கியிருப்பான்?”என ஆச்சரியமாய் கேட்ட திருவிடம்,.“ஆமாம் தல. அந்த பையன் தூங்கல. அவன் கட்டில உட்கார்த்திருந்தான்!” என்றான் தேவாரம்.


“ஆங்... இது எப்படி சார் உங்களுக்கு தெரியும்? நீங்க மாய மந்திரம் ஏதாவது படிச்சியிருக்கீங்களா சார்?” என ஆர்வமாய்க் கேட்டவனுக்கு,


“இதுக்கு எதுக்கு மந்திரமெல்லாம் படிக்கனும்! ட்யுப்லைட்டை ஆஃப் செய்து, மண்டைய மறைச்ச அந்த பொண்ணு கொண்டைய மறைக்காம விட்டுடுச்சு. அந்த ஜீரோவாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் பாபு உட்கார்ந்திற்கும் நிழல் எதிர் சுவற்றில் தெரிந்தது தல” என அசால்ட்டாய் பதிலளித்தான்.


இதைக் கேட்டு அப்படியே மெய்மறந்து நின்ற திரு,”சார்... நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்!” என்றான்.

பெருமாளை கண்முன்னே பார்த்த ஆண்டாளின் பரவசத்தோடு தேவாரத்தை பார்த்துக்கொண்டு அப்படியே நின்றான்.


“ஆரம்பிச்சாச்சா! உங்க இம்சையை தாங்கமுடியல தல. என் பொண்டாட்டி கூட இப்படி என்னை பார்க்கமாட்டா!” என சலித்துக்கொண்டவன்,
“மணி என்ன இப்ப?” எனக் கேட்டுக்கொண்டே கைக்கடிக்காரத்தை பார்த்து,”ஓகே தல. உங்களை ஸ்டேஷன்ல விட்டுட்டு நான் அப்படியே வீட்டுக்கு போறேன்.நீங்களும் கிளம்புங்க.

நாளைக்கு காலையில ஸ்டேஷன் வந்ததும் அடுத்து என்ன செய்யலாம்னு சொல்றேன்” என்று வண்டியைக் கிளம்பினான்.


’அங்க தலை என்னை பார்த்து விட்ட லுக்கை மட்டும் அவங்க வீட்டம்மா பார்த்திருக்கனும்... எங்க ரெண்டுபேரையும் வேற மாதிரின்னு கன்ஃபார்மே பண்ணியிருப்பாங்க!’ என இப்போது எண்ணியவனின் புன்னகை இன்னும் விரிந்தது.


தேவாரம் எடுத்துவந்த மூன்று செல்போன்களில் அப்படி ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை. இரண்டு போன்கள் ஏதும் இல்லாது காலியாக இருந்தது. எதுக்கு இந்த பையன் வெட்டியா இந்த போன்களை வச்சிட்டு இருக்கான்... யோசித்துக்கொண்டு அடுத்ததை எடுத்தான். அதில் ஐயா,


செந்தில், பாபு, கண்ணன் என்ற பெயர்களோடு எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அது ரிப்பேர் செய்து தருவதாக சொல்லி, செந்தில் வாங்கி வந்த மாயாண்டியினுடைய செல்போன் என்பது தேவாரத்திற்கு புரிந்துவிட்டது.


அடுத்து ஒரு பென்ட்ரைவ்வை எடுத்தவன் அதை அவனின் லேப்டாப்பில் போட்டதும் பெண்களின் பெயர்களில் இருந்த ஃபோல்டர்கள் பளிச்சிட்டது. இவன் எதுக்கு இத்தனை பொண்ணுங்க பெயரில் ஃபோல்டர்கள் வச்சியிருக்கான்... என எண்ணியவன், முதலில் இருந்ததை திறந்தான்.


அவ்வளவுதான்... அதில் இருந்த வீடியோவை பார்த்த தேவாரம் அதிர்ச்சியில் அப்படியே நிலைக்குலைந்து சிலையாக சமைந்துவிட்டான்.


காலையில் டிடியின் அலுவலகத்தில் பார்த்த அவரின் மனைவி அந்த வீடியோவில் இருந்தார். அவரின் அனைத்து அந்தரங்க நடவடிக்கைகளும் அதில் பதிவாகியிருந்தது.அவரோடு டிடி இருந்த காட்சிகளும் அதில் இருந்தது.
அடுத்தடுத்து இருந்த ஃபோல்டர்களிலும் பெண்களின் வீடியோக்களே இருந்தது. சிலவற்றில் இருந்த பெண்களை இதே பகுதியில் பார்த்ததைப் போல தேவாரத்திற்கு தோன்றியது.
அருணா,வரா போன்றோர்களும் அதில் இருந்தனர்.கண்ணன்-அருணா,பாபு-வரா இவர்களின் புதிரான நடவடிக்கைகளுக்கான காரணம் இப்போது தெளிவாக தேவாரத்திற்கு தெரிந்து போனது. மனைவியின் மானத்தை காக்க கண்ணன் அப்படி நட்ந்துக்கொண்டான் என்றால்... அந்த வரா ஏன் அப்படி சொன்னாள்? அவளுக்கு செந்திலின் உண்மை முகம் தெரியவில்லையா! அது எப்படி...? பாபுவிற்கு அவனைப்பற்றி புரிந்திருக்கும்போது இவளுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போகும்? என யோசித்தவனுக்கு கிடைத்த பதிலில் மனம் திக்கென்றானது. ஒரு கணவனாய் பாபுவின் மேல் பரிதாபமும் பச்சாதாபமும் பெருக்கெடுத்தது.


எப்படி முடிந்தது அவனால்? இந்த வீடியோக்களை பார்க்கும்போது அனைத்துமே அவர்களுக்கு தெரியாமல் பதியப்பட்டவைகளாக இருந்தது. செந்திலுக்கு எப்படி சாத்தியப்பட்டது? டிடி வீட்டில் அவன் சொந்த வீட்டைப்போல உலா வருவான் என்று தெரியும்.


ஆனாலும் குளியலறை படுக்கையறை இங்கெல்லாம் சென்று எப்படி வீடியோ எடுக்க முடியும்? எல்லா இடத்திலும் கேமரா வைத்திருந்தானா?அப்படி என்றால்.. இத்தனை பேரின் வீட்டிலுமா கேமரா வைத்திருக்க முடியும்? மற்றவர்கள் எல்லாம் எப்படி இவனை உள்ளே விட்டார்கள்!
அனைத்தையும் அவனின் செல்போனில் எடுத்தானோ என்ற சந்தேகம் வந்த போது,செல்போன் கடை வைத்திருக்கும் அவனின் நண்பனை பற்றி மாயாண்டி கூறியது நினைவிற்கு வந்தது. அவனின் துணைக்கொண்டு இதையெல்லாம் செய்திருப்பானோ... என பரபரத்த தேவாரம், விடிந்ததும் முதலில் அந்த பையனின் செல்போன்கடைக்கு சென்று விசாரிக்க வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டான்.செந்தில் காணவில்லை என டிடி சொன்னதுமே அவனின் செல் எண்ணைக் கண்ட்ரோல் ரூமில் கொடுத்து ட்ரேஸ் செய்ய சொன்னான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த எண் ஞாயிறு அன்று மதியத்தில் இருந்து அணைத்து வைக்கப்பட்டதாக தகவல் வந்தது. கடைசியில் அதன் சிக்னல் எங்கு காட்டியது என்று கேட்டதற்கு அவனின் வீடு இருந்த பகுதியைத்தான் அது காட்டியது என்ற தகவல் கிடைத்தது. அப்போது முக்கியமாக தெரியாதது இப்போது வில்லங்கமாகப்பட்டது.


டிடிதான் அவனை ஏதாவது செய்திருப்பாரோ... என தேவாரத்திற்கு முதலில் டிடியின் மேல்தான் சந்தேகம் எழுந்தது. எப்படியும் இந்த வீடியோவைக் காட்டி செந்தில் அவரிடம் பணம் ஏதாவது கேட்டு மிரட்டியிருப்பான் என்பது நிச்சயம். அதனால் அவரே அவனை ஏதாவது செய்துவிட்டாரா என நினைத்தவனுக்கு, அப்படி செய்தவர் ஏன் வீணாக இவனிடம் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்து தானாக வந்து சிக்க வேண்டும்? என்ற எண்ணம் பின்னோடு வந்தது.


இல்லை... அவரால் அவனுக்கு எந்த ஆபத்தும் விளைந்திருக்காது. அவன்தான் அவரை இந்த வீடியோக்களை காட்டி மிரட்டியிருக்க வேண்டும். அவனின் தேவை அவரிடமிருந்து பணமாக இருந்திருக்காது. வேறு ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று அவனின் உள்மனம் சொல்லியது.அது என்ன...
டிடியால் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லா பட்சத்தில்,அவனால் பாதிக்கப்பட்ட வேறு யாரவது அவனை அந்த இடத்தில் மறைத்து வைத்திருப்பார்களா... அல்லது புதைத்து வைத்திருக்கிறார்களா... என யோசித்தவனின் சந்தேக வட்டத்திற்குள் அடுத்து கண்ணன், பாபு இருவரும் வந்தார்கள்.அவர்களில் பாபுவால் ஒன்றும் முடியாது என ஒதுக்கி தள்ளியவனுக்கு கண்ணனாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது என்றே தோன்றியது.அப்போது யார்தான் என்னதான் செய்திருப்பார்கள்... யோசிக்க யோசிக்க தேவாரத்திற்கு மண்டை வெடிப்பதைபோல இருந்தது.

யாரையும் நம்பி வீட்டில் விடக்கூடாது என்ற பாடத்தை டிடிக்கு மட்டுமல்ல அனைவருக்குமே செந்தில் சொன்னதாகவே தேவாரத்திற்கு தோன்றியது. எத்தனை பேரின் அன்பையும் நம்பிக்கையும் இவன் துஷ்பிரயோகம் செய்திருக்கிறான் என்பதை எண்ணும்போது செந்தில் மேல் கொலைவெறியே வந்தது.


டிடியின் மனைவி செந்திலை பற்றி பேசியது இவனின் நினைவிற்கு வந்து, அப்படி மகனைப்போல பாசம் வைத்தவர்களுக்கு துரோகம் செய்ய அவனால் எப்படி முடிந்தது என ஆச்சரியமாக இருந்தது. டிடிக்கு இந்த உண்மை தெரிந்த போது அவர் எப்படி துடிதுடித்திருப்பார் என யோசித்தவனுக்கு உறக்கம் கண்களை விட்டு வெகு தூரம் சென்றிருந்தது.
 

Anuya

Well-known member
#29
அத்தியாயம் 12

வேலுவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவிட்டு அவனோடு வண்டியில் ஊருக்கு வெளியே இருந்த பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கினாள் காவ்யா. தோழியோடு சினிமாவிற்கு சென்ற திவ்யா படம்முடிந்ததும் இங்குவந்து விடுவதாகவும் இங்கிருந்து இருவரும் சேர்ந்து வீட்டிற்கு செல்லலாமென்றும் சொன்னதால் காவ்யா அவளுக்காக அங்கு காத்திருந்தாள்.


நேரம்தான் சென்று கொண்டிருந்ததே தவிர திவ்யா வந்தபாடாய் காணவில்லை. இவள் பத்துநிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்தால், அவள் ‘பத்தே நிமிஷம்’ என்ற பதிலையே சலிக்காமல் மூன்று தடவை சொல்லி விட்டாள். ’இந்த எருமைக்கு இன்னுமா சினிமா முடியல.இந்த குட்டி குரங்கால நான் அப்பாகிட்ட இன்னைக்கு செம்மையா மாட்டப் போறேன்’ என மனதினுள் மருகிக்கொண்டிருந்தவள், பக்கத்தில் ஒருவன் தன்னையே கவலையான முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை கவனிக்கத் தவறினாள்.


அங்கிருந்து கிளம்பியதிலிருந்தே காவ்யா வேலுவிடம் அவ்வளவாக ஏதும் பேசவில்லை. இங்குவந்து காத்திருந்த இந்த அரைமணி நேரத்தில் கூட இவனிடம் ஏதும் பேசவில்லை. பேச என்ன இவன் பக்கம் கூட திரும்பாமல் அவளின் பார்வை வேறெங்கோ இருப்பதை கண்டவனுக்கு மனதில் கலக்கம் தோன்றியது.அப்படி நடந்துக்கொண்டதால் தன்னை வெறுத்துவிட்டாளோ என அச்சம் கொண்டவன்,


“காவி! உனக்கு என்மேல கோபமெல்லாம் ஒன்னும் இல்லல்ல” என தயங்கிய குரலில் கேட்டான்.


தங்கையை எதிர்பார்த்திருந்தவளின் கவனத்தில் இப்போதும் அவனின் தயக்கம் விழவில்லை.பார்வையை பாதையில் இருந்து திருப்பாது,”என்ன கோபம்?” என்றாள்.


வார்த்தைக்கு நான்கு மாமா போடுபவள் இப்போது மொட்டையாக கேட்டதுமன்றி, தன் பக்கம் கூட திரும்பாததால் மனதில் அடிவாங்கியவன், “என்னை பார்க்க கூட வெறுப்பா இருக்கா காவி?” என்றான் துக்கம் தொண்டையை அடைக்கும் குரலில்.


இப்போதுதான் அவனை சரியாக பார்த்த காவ்யா அவனின் கலங்கிய முகத்தைக் கண்டு, ”என்ன மாமா! என்ன ஆச்சு? எதுக்கு இப்படி என்னமோ மாதிரி பேசற” எனக் கேட்டாள் பதட்டமாய்.


“எனக்கு என்ன ஆச்சு! நான் நல்லாத்தான் இருக்கேன்.உனக்குத்தான்... நீதான் வேறமாதிரி இருக்க. ரொம்ப நேரமா கண்டுக்காம என்னை, நீ அவாய்ட் பண்ற”


இதைக் கேட்டவள், அவனை கோபமாக முறைத்துவைத்தாள்.அதற்கும் அவன் மசியாது அப்படியே நிற்கவும், அதில் எரிச்சலடைந்தவள், “மாமா... எதுக்கு இப்ப இப்படி போஸ் கொடுக்கற?” என்றாள்.


“நான் பண்ணது தப்புதான் காவி. எவ்வளவோ என்னை கண்ட்ரோல் பண்ணிக்க ட்ரை பண்ணேன்.ஆனா.. என்னால முடியல காவி. தப்புதான் காவி. கல்யாணத்துக்கு முன்னாடியே நான் அப்படி நடந்துகிட்டது ரொம்ப பெரிய தப்புதான். அதுக்காக... அதுக்காக நீ என்னை வெறுத்திடுவியா காவி?” பரிதாபமாக கேட்டான்.


அவனின் மனக்கலக்கம் எதனால் என்பது இப்போது காவ்யாவுக்கு புரிந்து போனது.அவளே நெருங்கி பழகினாலும் கண்ணியம் காப்பவன் இன்று கரை மீறியதை அவனாலேயே தாங்கிக்கொள்ள முடிவில்லை. தன்னை மீறி தவறிழைத்த நல்லவனின் மனசாட்சி இப்படித்தான் அவனை உள்ளிருந்துக் கொள்ளும்.அவன் செய்த தவறின் குறுகுறுப்பே இந்த பேச்சுக்கெல்லாம் காரணம் என்பதை இவள் புரிந்துக் கொண்டாள்.


இவனை இப்படியே விட்டால் இன்னும் ஓடிந்துப்போவன், இதிலிருந்து இவனை வெளியே கொண்டுவர வேண்டுமென எண்ணியவள், ”என்னமோ நீ மட்டும் தனியா எதையோ சாதிச்சிட்டா மாதிரி பேசற! என்னோட சம்மதம் இல்லாம உன்னால என்னப் பண்ணியிருக்க முடியும் மாமா?” என அழுத்தமாய்க் கேட்டாள்.


அவளின் இந்த கேள்வியில் கொஞ்சம் தெளிந்தவன், ”உனக்கு... உனக்கு என்மேல கோபம் வருத்தம் ஏதுமில்ல தானே காவி” அவளின் கைகளை தாவிப் பிடித்துக்கொண்டு கேட்டான்.


“எதுக்கு மாமா இருக்கனும்?”


இதுதான் அவனின் காவி! அப்பாடி... கொஞ்ச நேரத்தில் என்னனென்னமோ நினைக்க வைத்துவிட்டு இப்போது வக்கனையாய் கேள்வி கேட்பவளை முறைத்தவன்,”அப்புறம் ஏன்-டி ரொம்ப நேரமா என்கிட்டே பேசாம, என்னை பார்க்காம எங்கேயோ பார்த்துட்டு இருந்த.நான் எப்படி தவிச்சி போயிட்டேன் தெரியுமா?” என்றவனின் குரல் சிறிது நேரமாக அவன் பட்டபாட்டை வெளிப்படுத்தியது. அதை உணர்ந்தவள் இவனிடமெல்லாம் ஆறுதலாக பேசினால் வேலைக்காகாது என நினைத்து,


“ம்ம்ம்... சொல்ல மாட்ட நீ. உன்னோட மாமா என்ன, என் மாமனை போல தங்கமான ராசாவா? அது சரியான தகர டப்பால்ல! காலையில வந்தவங்க இன்னும் வீட்டுக்கு போகலன்னா... இந்நேரத்துக்கு எங்க அம்மாவை போட்டு பாடாப்படுத்தி எடுத்துட்டு இருப்பார். பாவம் எங்க அம்மா. அவர்கிட்ட இந்நேரம் தனியா சிக்கியிருப்பாங்க. இப்படி எதை பத்தியும் கொஞ்சம் கூட கவலைப்படாம இந்த திவ்யா கழுதை எங்க சுத்துதுன்னு நான் யோசிச்சிட்டு இருந்தா... உன்னை சைட்டடிக்கலைன்னு குறையா போச்சு உனக்கு!” என நொடித்துக்கொண்டாள்.


இதைக்கேட்டு உற்சாகமாய் சிரித்தவன் அவளின் அருகில் இன்னும் நெருங்கி, ”இந்த பேச்சைக் கேட்காமதான் இவ்வளவு நேரம் என்னவோபோல இருந்தது காவி” என ஆத்மார்த்தமாய் சொன்னான்.

அப்போது சிறிது தூரத்தில் திவ்யா வருவது தெரியவும் காவ்யா வேலுவை கிளம்ப சொன்னாள். அப்போது அவளின் இரண்டு கைகளை இன்னும் இறுக்கி பிடித்துக் கொண்டவன் அவளின் கண்களையே ஆழப்பார்த்து,”நிஜமா உனக்கு ஒன்னும் வருத்தமில்லையே” என்றான்.


“இல்ல மாமா! இன்னும் நான் எப்படி சொன்னா நீ என்னை நம்புவ?”


“நம்பாம இல்ல காவி. என்னன்னு தெரியல. மனசு கிடந்தது தவிக்குது. உன்னை இப்படியே என் கூட கூட்டிட்டு போகனும்னு ரொம்ப தோணுது காவி. இன்னைக்கு என்னமோ என்னைவிட்டு உன்னை போகவிடவே மனசு வரல காவி” என்றான் குரல் தழுதழுக்க.


“என்ன மாமா? ஏன் இப்படி நடந்துக்கற? என்ன ஆச்சு?இன்னைக்கு நீ சரி இல்ல மாமா” என்றவள் அவனின் தோள்களை பற்றினாள்.


“என்னை விட்டுகுடுத்துடமாட்ட இல்ல காவி!” என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்ததென இவளுக்கு புரியவில்லை.


அவனின் இந்த கேள்வியில் அதிர்ந்து போன காவ்யா, “என்ன மாமா? ஏன் இப்படி கேட்கற? எப்பவும் நீ இப்படி எல்லாம் பேசமாட்டியே...” என கலக்கமாய் அவனைப் பார்த்தாள்.
எதற்கும் கலங்காதவள் இன்று தனக்காக கலங்கியதை பார்த்தவன்,


”ஒன்னுமில்லடி. சும்மா ஏதோ கேட்கனும்னு தோணுச்சு. அதான்... ” என்றவன் மெல்லிய சிரிப்பொன்றை சிந்தினான்.


அதைப் பார்த்தும் திருப்தியடையாதவள்,“நான் வேணும்னா இப்படியே உன்கூட வந்துடட்டா மாமா?” என பரிதவிப்புடன் கேட்டாள்.


அவளைக் காதல் பொங்க பார்த்தவன்,“வேணாம்டி. வேணாம். எங்க அம்மா பண்ணதையே உங்க அப்பாவால தாங்கிக்க முடியல.அதையே நீயும் செய்தா... பாவம் மனுஷன் நொந்துடுவார்.அவரே உன்னை எனக்கு கட்டிக் கொடுப்பார் காவி. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்ப நீ வீட்டுக்கு போ. வீணா அவர்கிட்ட வாயாடிட்டு இருக்காம ஒழுங்கா இரு. நான் ரெண்டு மூனு நாள்ல மாமிகிட்ட மாமாவோட நிலவரத்தை விசாரிச்சிட்டு பொண்ணு கேட்டு வரேன்” என சொன்னபோது திவ்யா அவர்களின் அருகில் வந்தாள்.


“யாரை மாமா என்னைத்தானே பொண்ணு கேட்டு வரப்போறீங்க?” என அவள் கேட்க, “அடிக்கழுதை! உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா? நைட் உன் சாப்பாட்டுல விஷம் வைக்கிறேன் இருடி மவளே!” என காவ்யா கத்த அவர்களை பார்த்து மனம் விட்டு சிரித்தான் வேலு.அதுதான் அவன் கடைசியாக ஆனந்தமாக சிரித்தது!
அன்று வேலுவுடன் காவ்யாவை சேர்த்து பார்த்த பழனியின் பங்காளி ஒருவன்,


அதை உடனே அவரிடம் போட்டுக் கொடுத்துவிட்டான் .அன்றிலிருந்து காவ்யாவிற்கு வீட்டில் கெடுபிடி அதிகமானது.அந்த நிகழ்விற்கு பின் அவர் அந்த வீட்டில் இருந்த யாரையும் நம்பத் தயாராயில்லை.காவ்யாவை வெளியே எங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை.


மகள் தன் பேச்சைக்கேட்டு நடப்பாள் என்ற எண்ணம் இவருக்கு இல்லை. ஆனால் வேலு இவரின் சொல்லை மீறமாட்டான் என்ற நம்பிக்கை மலையளவு இருந்தது. அன்று பெண் கேட்டு வந்தவனை திருப்பியனுப்பிய பிறகு, இனிமேல் அவர்களின் திருமணத்திற்கு தன்னுடைய சம்மதத்தை பெறாமல் அவன் காவ்யாவை தனியே எங்கும் சந்திக்கமாட்டான் என உறுதியாய் எண்ணிக்கொண்டிருந்தவரை பிறந்தநாள் அன்று நடந்த அவர்களின் சந்திப்பு உடைத்துப் போட்டது.


தன்னை மதிக்காமல் அவன் மகளை தினமும் தனியே சந்தித்துவருவதாக தவறாக எண்ணியவர்,அவனுக்கு வீம்பாக காவ்யாவிற்கு அவசரமாக தங்கள் சொந்தத்தில் மாப்பிளையை தேடினார்.இதை வள்ளியின் மூலம் அறிந்த வேலு மீண்டும் மாமனிடம் பெண்கேட்டு வந்தான்.


இம்முறையும் பழனி, அவனை அவமதித்து பெண் தர மறுத்தார். போனமுறை போல வேலு அவரிடம் மல்லுக்கு நிற்காமல் அமைதியாக இருக்க, இம்முறை காவ்யா அவனுக்கும் சேர்த்து ஆடி தீர்த்துவிட்டாள். அவனுடன் இப்போதே செல்லபோவதாக இவள் குதிக்க, அவளை தனக்கெதிராக ஏற்றிவிட்டு வேலு வேடிக்கை பார்ப்பதாக பழனி குதிக்க... அப்பாவையும் மகளையும் அடக்கமுடியாமல் வள்ளி திண்டாடிப்போனார். இதைப் பார்த்த வேலு, இன்னொருநாள் வருவதாக சொல்லி அங்கிருந்து சென்றான்.


இப்படியே அந்த வாரத்தில் இரண்டு மூன்று முறை நடந்தது.ஒவ்வொரு முறையும் வேலு தழைந்து வரவர பழனியின் வீராப்பு வலுவடைந்துக் கொண்டே வந்தது.


செந்திலின் நண்பன் சுதீர், வேலை செய்து வந்த கடை பெயருக்குத்தான் செல்கடை. ஆனால் அதில் வேறுமாதிரியான வேலைகள்தான் அதிகம் நடந்தது. சுதீருக்கு கணினி பற்றிய அறிவு அதிகமாக இருந்தது.

அதை மூலதனமாக கொண்டே அவன் அந்த கடையில் சேர்ந்தான்.
பெரிய வீட்டு பிள்ளைகள் சிறிது காலம் உபயோகித்து தூக்கிபோடும் புது மாடல் போன்களை அந்த கடையில் குறைந்த விலையில் விற்றனர். அப்படி அங்கு விற்கப்பட்ட போன்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அவர்களே இலவசமாக அதை சரி செய்தும் தந்ததால் அந்தக் கடை கல்லூரியில் படிக்கும், வேலைக்குப்போகும் இளவயதினரிடம் மிகப் பிரபலம்.அப்படி விற்கப்படும் போன்களின் கேமராக்கள் சுதீரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.இதுதான் அவனுக்கு அங்கு கொடுத்திருக்கும் வேலை.அவன் ஒரு செயலியை அந்த போனில் தரவிறக்கம் செய்தால் போதும். அந்த போன் வாங்கியவனின் கையில் இருந்தாலும், இவன் கடையில் இருந்துக்கொண்டே அதில் உள்ள கேமராவை இயக்கமுடியும். இப்போதிருக்கும் தலைமுறைதான் போனில்லாமல் இருப்பதில்லையே. எங்கு சென்றாலும் அவர்களின் கையில் போன் இருக்க, அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் இவனால் கண்காணிக்கப்பட்டது.


அப்படிதான் போனை உபயோகிப்பவர்களின் படுக்கையறை குளியலறை வரை இவனால் செல்ல முடிந்தது. அனைத்தையும் இங்கிருந்துக்கொண்டு தன்னுடைய கணினியில் பதிவு செய்தவன்,அதை எடிட் செய்து பக்கவாக தயாரித்ததும் அந்த வீடியோக்களை இதற்கென இருக்கும் வலைதளத்தில் வெளியிட்டு அவனின் முதலாளி பணத்தை அள்ளினான். இப்படித்தான் அவனிடம் போன் வாங்கிய நிறைய பெண்கள்,

தங்களுக்கு தெரியாமலேயே கண்ட கண்ட இணையதளத்தில் உலாவந்துக் கொண்டிருந்தனர்.
அப்படி தயார் செய்யப்பட்ட போனைத்தான் பிறந்த நாள் அன்று செந்தில் சுதீரிடம் சொல்லமால் எடுத்து வந்திருந்தான். மறுநாள் அதை அவனிடம் கொடுத்தவன் அதிலிருந்த போட்டோக்களை தனியே ஒரு பென்ட்ரைவில் போட்டுத்தர சொன்னான்.அப்படி அந்த போனை நொண்டிப் பார்க்கும் போதுதான் சுதீருக்கு, வேலுவும் காவ்யாவும் சேர்ந்திருந்த வீடியோ கண்ணில் சிக்கியது.காவ்யாவை இவனுக்கு முன்பே தெரியும்.இதுவரை பெண்கள் குளிப்பது, உடைமாற்றுவது, உறக்கத்தில் அப்படி இப்படி இருப்பது... இப்படிப்பட்ட வீடியோக்களைதான் வலைதளங்களில் இவர்கள் பதிவிட்டது. ஆனால் இப்படி ஒன்றை இதுவரை அவனுமே பார்த்ததில்லை. முதலில் அதை பார்த்தவனுக்கு குளிர் ஜுரம் வருவதை போலிருந்தது.உடனே அந்த வீடியோவை அழிக்கவே முதலில் அவன் எண்ணினான்.


ஆனால் அவனின் பேராசை அவனை அப்படி செய்யவிடவில்லை.பதிவில் இருக்கும் பெண்ணின் முகத்தை மறைத்து இதை வெளியிட்டால் என்ன... என்று எண்ணியவன், செந்திலின் அக்காதான் காவ்யா என தெரிந்தும், சிறிது நேரத்திற்கெல்லாம் அதை செய்தே விட்டான்
சில வருடங்களாக அங்கு வேலை செய்ததின் பலனாக அவனுக்கும் அப்படிப்பட்ட வலைதளங்களும் அதன் வாடிக்கையாளர்களும் பழக்கமாகியிருந்தனர்.அவர்களுக்கென தனியாக ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பும் இருந்தது.அதில் இருந்த ஒரு பெரும் பணக்காரனிடம் இவனுக்கு நல்ல பழக்கம். அவனுக்கு தனியாக அந்த வீடியோவை அனுப்பினால் அவன் ஸ்பெஷலாக இவனை கவனிப்பானென எண்ணி அவனுக்கு இதை அனுப்பினான்.அடுத்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் அந்த பணக்கார வீட்டு கன்று, முகம் மறைத்து திரையில் வந்த பெண்ணை இவனிடம் ஒரு மணி நேரத்திற்கு அனுப்பினால் லட்ச ரூபாய் தருவதாக சொல்லி,பல்லிளித்துக் கொண்டுவந்து நின்றது.