சூரசம்ஹாரம் - கதை திரி

Anuya

Well-known member
#16
அத்தியாயம் 5:

தண்டபாணி தன் வேலையாட்களுக்கு தன்னிடத்திலேயே வசிக்க வீடுகட்டிக் கொடுத்திருந்தார்.. ஒரே காம்பவுண்டுக்குள் அடுத்தடுத்திருந்த போர்ஷன்களில் அவர்கள் குடியிருந்தனர்.


தேவாரமும் திருவும் அந்த குடியிருப்பின் காம்பவுண்டு கேட்டை திறந்து உள்ளே சென்று அந்த வீட்டை நோட்டம் இட்டுக்கொண்டே யாராவது வருகிறார்களா என நாலாபக்கமும் பார்வையை வீசினர். இரண்டு கிரவுண்ட் அளவில் அந்த இடம் விஸ்தாரமாக இருந்தது. ஒரு வீட்டில் என்னென்ன மரங்கள் இருக்கலாமோ அத்தனை மரங்களும் அங்கே இருந்தது. கேட் திறக்கும் சத்தம் கேட்டு தன் வீட்டினுள் இருந்து வெளியே வந்த மாயாண்டி காக்கி உடையில் இருவர் அங்கிருப்பதை பார்த்ததும் அதிர்ந்து அங்கேயே நின்றான்.


தங்களைக் கண்டதும் அவன் ஜெர்க்கானதை, இது போலீஸை பார்த்ததும் சாதாரண மனிதன் தரும் ரியாக்ஷன் என புரிந்துக் கொண்ட அவ்விருவரும் ஒரு நமுட்டு சிரிப்பை தங்களுக்குள் பரிமாறி, அவனின் அச்சத்தை போக்க அவனருகில் செல்ல அடியெடுத்து வைத்தனர்..


“சார்..! இங்கேயே இருங்க. நீங்க எவ்வளவு பெரிய ஆளு! நீங்க போய் அவன் கிட்ட போறதா? நாம வந்த விஷயத்தை சொல்லி, செந்திலை பற்றி நீங்க கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லனும், அப்படி இல்லாம ஏதாவது பொய் பேசினா... லாடம் தான்னு கொஞ்சம் மிரட்டி, அவனை இங்க கூட்டிட்டு வரேன் சார்!” என்று சொன்ன கையோடு வேகமாக சென்றான் திருவாசகம்.அதை பார்த்த தேவாரம்,


“இந்த தலையோட லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு! நான் என்னமோ கமிஷ்னர் மாதிரி இவர் பண்ற பில்டப் இருக்கே...” என எண்ணி திருவின் அட்டகாசத்தை ரசித்துக் கொண்டான்.


மாயாண்டியிடம் சென்ற திரு, முகத்தில் கடுமையை சேர்த்து, ஏதேதோ சொல்வதையும் அதற்கு அவன் மண்டையை மண்டையை ஆட்டுவதையும் ஒரு சுவாரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்த தேவாரம் அவர்கள் தன்னை நோக்கி திரும்பவும் கம்பீரத்தை முகத்தில் கொண்டுவந்து திருவைப் பார்த்தான்.


’நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீங்க உங்களின் வேலையை தொடங்கலாம்!’ எனும் விதமாக திரு தலையசைத்தான். இப்படியாக... அண்ணலும் நோக்க அவனின் அடிமையும் நோக்கிய காட்சி அங்கே அரங்கேறியது.


“நீ எத்தனை வருஷமா இங்க வேலைக்கு இருக்க?” எனக் கேட்ட தேவாரத்தின் தோரணையில் முதலில் மிரண்ட மாயாண்டி,


“பத்து வருஷமா இங்க இருக்கேனுங்க. நான் நம்ம ஐயாவோட ஊருதாங்க. எனக்கு புள்ளகுட்டிங்க ஏதுமில்லைங்க.பத்து வருஷம் முன்னாடி என் பொஞ்சாதிய ஏதோ பெரிய நோய் காவு வாங்கிட்டுதுங்க.அந்த நேரத்துல எங்க ஊருக்கு வந்த ஐயா துணைக்கு யாருமில்லாம நீ ஏன்டா இங்க தனியா இருக்கன்னு என்னை அவரோட கூட்டியாந்துட்டாருங்க..அப்போ புடிச்சி நான் இங்க தானுங்க கிடக்கேன் .ஐயா வீட்டுல தோட்ட வேலை செய்யறேனுங்க. எனக்கு சோறுபோட்டு இருக்க இடம் கொடுத்து மேலுக்கு சுகமில்லைன்னா மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து ஐயா தானுங்க கவனிச்சிக்கிறார்.தர்ம மகராசனுங்க எங்க ஐயா” என இத்தனை நாள் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை இல்லாமல் தண்டபாணிக்கு பிரச்சாரம் செய்தான்.


‘அரசியல்ல இருந்தாலும் டிடி உண்மையிலேயே கொஞ்சம் நல்லவர் போல!’ எண்ணிய தேவாரம் மற்ற வேலையாட்களை பற்றி மாயாண்டியிடம் விசாரித்தான். டிடி வீட்டில் மொத்தம் ஆறு வேலையாட்கள் இருப்பதாக சொன்ன மாயாண்டி அவர்களை பற்றி விவரங்களை சொல்ல தொடங்கினான்.


“நானும் ராமுவும்... அதாங்க நம்ம வாட்ச்மேன் ராமுவைதாங்க சொல்றேன். நாங்க ரெண்டு பேரும் ஒன்டிக்கட்டைங்க. ஒன்னா ஒரே வீட்டுல இருக்கறோம்ங்க. இதோ நடு சென்டர்ல இங்கன இருக்கற வீடு நம்மோடதுங்க. அந்த ராமு என்னைய போல இல்லைங்க. அவன் சரியான முசுடு ஆசாமிங்க. வாய தொறக்கவே வாய்தா கேட்பானுங்க.இப்ப ட்யூட்டில இருக்கானுங்க. சத்த நேரத்துக்கு முன்னாடிதானுங்க அவன் போனான்.” என்று சொல்லிக்கொண்டே தன் வலக்கையை முழம் நீளத்திற்கு நீட்டி,


“அதோ.. அந்தான கடகோடியில இருக்கிற வீட்டுல இன்னொரு வாட்ச்மேனு அவர் சம்சாரம் புள்ளகுட்டியோட இருக்காருங்க. இப்பதான் ராமு அங்கன ட்யூட்டிக்கு போய் இவரை அனுப்பினானுங்க. நம்ம கண்ணன்... அதாங்க நம்ம இன்னொரு வாட்ச்மேனு, அவரு ஆளுதான் பார்க்க ஜெயஜான்டியா இருப்பாருங்க. ஆனா பாருங்க மனுஷன் ரொம்ப சாதுங்க. பயந்த சுபாவமுங்க. அவருக்கு எப்படி எங்க ஐயா வாட்ச்மேன் வேலை கொடுத்தாருன்னே தெரியலைங்க.ஹாஹா...” தான் சொல்லிய ஹாஸ்யத்திற்கு ஒரு வெடி சிரிப்பை வெடித்த மாயாண்டி,


“இங்கிட்டு இந்த மூலையில இருக்கற வீட்டுல பத்மா தங்கச்சி இருக்குதுங்க. அதுவும் அந்த வீட்டுல தனியா தானுங்க இருக்கு. பொண்டாட்டி போனதும் புள்ளகுட்டி இல்லாத நான்தான் தனியா இருக்கேன்னு பார்த்தா அதுவும் இந்த ராமு பயலும் புள்ளைங்க இருந்தும் பாவமுங்க தனியா தானுங்க இங்க இருக்காங்க. ஐயா வீட்டுல சமையல் தங்கச்சி தானுங்க. அம்புட்டு ருசியா அது சமைக்குமுங்க. மேல இருக்கிற ரெண்டு போர்ஷனுல செந்தில் தம்பியும், நம்ம வராவும் இருக்காங்க...” என சொல்லிக்கொண்டு இருக்கும் போது,


“வரா... அது யாரு?அவங்க ஏன் இங்க இருக்காங்க?” என ஆர்வக்கோளாறில் மாயாண்டியின் தோளில் கையை போட்டு ஒரு நண்பனிடம் பேசுவதைப் போல திரு கேட்டான்.


தனியாக பேசிய போது தன்னிடம் கண்டிப்புடன் பேசியவர் இப்போது இப்படி கேட்டதும் உற்சாகமான மாயாண்டி,“வரலக்ஷ்மி தான் சார் வரா. நாங்க அதை அப்படித்தான் கூப்பிடுவோம்.பாவம் சார் அது. சின்ன வயசு புள்ள சார். அதுக்கு போய் கடவுள் ஏன் இப்படியொரு கஷ்டத்தை கொடுத்தானோ தெரியல” என புலம்பினான்.


“அப்படி என்ன கஷ்டத்தை அவங்க அனுபவிக்கிறாங்க?” என ஆவலாய் சஸ்பென்ஸ் பொறுக்கமுடியாத திரு, மாயாண்டியை இன்னும் நெருங்கி கேட்டான்.


‘வந்த இடத்தில் வேலையை பார்க்காமல் கதை கேட்டுக்கொண்டிருக்கிறாயா?’ என்ற தேவாரத்தின் பார்வையில் திரு கப்சிப்பென்று அமைதியாக, இதை எல்லாம் கவனிக்காத மாயாண்டியோ போலீஸ் தோஸ்த்து கிடைத்த சந்தோஷத்தில் விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர்ந்தான்.


“வராவோட புருஷனுக்கு கட்டடம் கட்ற கம்பனியில பெயின்ட் அடிக்கிற வேலைங்க. அவரோட போறாத காலம் போன வருசம் நாலாவது மாடியில தொங்கிட்டு பெயின்ட் அடிக்கும்போது கயிறு அறுந்து அங்கிருந்து கீழ விழுந்து அவருக்கு காலுல பலமான அடிங்க. நல்லா நின்னாதானேங்க பெயின்ட் அடிக்கமுடியும்.பாவம் இந்த மனுஷனால அதுதான் முடியாம போச்சே.அதனால அவரோட வேலையும் போச்சு.”


“இன்னும் ஒரு வருஷத்துக்கு அது என்னமோ சொல்றாங்களே... பிசியோவாமே அது செய்யனுமாம். அப்ப தான் பழைய நிலைமைக்கு அவரால வரமுடியுமாம். சீக்காளி புருஷனை வச்சிகிட்டு கைக்குழந்தையோட அந்த வரா பொண்ணு படாதபாடு படுதுங்க. அது குடும்பத்துக்கும் வைத்தியத்துக்கும் எங்க ஐயா நிறைய செலவு பண்றார். புண்ணியவானுங்க எங்க ஐயா.அவர் நல்ல மனசுக்கு அவர் நூறு வருஷம் நல்லா இருக்கனுமுங்க” என்ற மாயாண்டியின் பேச்சில் கிராமத்தின் கள்ளம்கபடமில்லா வெள்ளைமனம் பிரதிபலித்தது.


வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கணவனுக்காகவும் செலவு செய்யும் நல்ல மனம் படைத்த தண்டபாணியிடம் தவறு இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்ற எண்ணம் தேவாரத்திற்கு வலுப்பெற்றது.ஆனால்... ‘சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் அவர் சொன்னதற்கு அர்த்தம்...? அப்போது செந்திலிடம் தான் தவறோ... அவன் இவரின் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டானா? கணக்கில் வராத பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டியவனை பிடிக்க, டிடி நம் உதவியை நாடினாரா?’ தீவிரமாக யோசித்த தேவாரம்,


“இங்க இருக்கும் எல்லோரையும் பத்தி சொன்ன நீ, ஏன் செந்திலை பத்தி சொல்லவேயில்லை? அவன் ஆள் எப்படி மாயாண்டி?” கேட்டதும்,


“ஐயா... அந்த தம்பி கர்ண பிரபுங்க! எங்க ஐயாக்கு பொறந்திருக்க வேண்டிய புள்ளைங்க அது. அவரை போலவே தங்கமான மனசு” என்றான்.


இதைக் கேட்டதும், இவன் என்ன எல்லோரையும் நல்லவன்னு சொல்றான்? அந்த அளவுக்கா உலகம் திருந்திவிட்டது!’ என சந்தேகமாய் தேவாரம் திருவை பார்க்க அவனின் முகத்திலும் அதே குழப்பம் இருந்தது.


“அது எப்படி சார் தர்மருக்கு கர்ணன் புள்ளையா பிறக்கமுடியும்? டிடியை தர்மபிரபுன்னும், செந்தில் பையனை கர்ணன்னும் சொன்னா அங்க உறவு முறை ஒதைக்குதே...!” என தன் தலையாய சந்தேகத்தை கேட்ட திருவை அக்னிபார்வை பார்த்த தேவாரம்,


“செந்தில் உங்ககிட்ட எல்லாம் நல்லா பேசுவானா? எப்படி பழகுவான்?” என மாயாண்டியிடம் கேட்டான்.


“அந்த தம்பி ரொம்ப அமைதிங்க. சத்தமா கூட பேசதெரியாத அப்பிராணிங்க. அது. இங்க வரதும் தெரியாது, போறதும் தெரியாது. குடும்பம் இல்லாம வேலு, பத்மா நாங்க மூனு பேரும் தனியா இருக்கறதால எங்க மேல அதுக்கு அம்புட்டு அக்கறைங்க. அதுவும் என்மேல உசிரா இருக்குமுங்க அந்த தம்பி. வேலை முடிச்சி வீட்டுக்கு வந்தா என்னை பார்க்காம மேல ஏறாதுங்க. என்னைய அப்பா... அப்பான்னு கூப்பிடுமுங்க. இந்த மூனு நாளா அதை காணாம எனக்கு என்னவோ போல இருக்கு சார். எங்க ஐயாகிட்ட கூட சொல்லாம அப்படி எங்க சார் அந்த தம்பி போயிருக்கும்?” என இவன் கேட்ட கேள்விக்கு,


“அதை தெரிஞ்சிக்கத்தான் எங்க சார் உன்கிட்ட விசாரிச்சிட்டு இருக்கார்” என்றான் திரு ஒரு நமுட்டு சிரிப்புடன்.


“ஐயோ... சார் நான் அந்த தம்பிய எங்கேயும் அனுப்பல சார்.அது எங்க போயிருக்குன்னு எனக்கு எதுவும் சத்தியமா தெரியாது சார்” என கைகால்கள் நடுங்க மாயாண்டி பதற,.


அதை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிய தேவாரம், ”சனிக்கிழமை வேலைக்கு வந்தவன் அதன் பிறகு அங்கு வரலைன்னு உங்க ஐயா சொன்னாங்க. அன்னைக்கு நைட் செந்தில் இங்க இருந்தானா? இல்ல அன்னைக்கு வீட்டுக்கு அவன் வரலையா?”எனக் கேட்டான்.


“அன்னைக்கு இராப்பொழுது தம்பி இங்கன தான் இருந்துச்சு சார். ஐயா வீட்டில் இருந்து வந்து அதோட வீட்டுக்கு மேல போனதை நான் பார்த்தேன். மறுநாள் காலைல நான் ஆறு மணிக்கு வேலைக்கு கிளம்பும்போது கூட அது வீட்டுல லைட் எரிஞ்சிட்டுதான் இருந்தது சார்”


“அவனை பார்க்க யாரவது இங்க வருவாங்களா?”


“இல்ல சார்.அப்படி யாரும் இதுவரைக்கும் வந்ததில்ல”


“அவங்க அம்மா கூடவா வரமாட்டாங்க?”


“இல்ல சார் அவங்க இங்க வந்ததே இல்ல.தம்பி தான் அவங்களை பார்க்க போகும்.அந்தம்மா இங்க வந்ததே இல்ல சார்!’


“ஓஒஒ... அவங்க ஏன் இவன் கூட இல்லைன்னு உங்ககிட்ட ஏதாவது சொன்னானா?”


“ஹும் சொல்லுச்சு சார். கொஞ்சம் தூரத்தில் தம்பியோட அப்பா கட்டின பெரிய வீடு இருக்காம். இதுகூட வந்திருக்க சொல்லி இந்த தம்பி எவ்வளவோ வற்புறுத்தியும் அந்தம்மா அவங்க கணவன் கட்டின வீட்டில்தான் இருப்பேன்னு சொல்லிட்டாங்களாம்.”


“ஹோ ஹோ... அப்படியா! பரவாயில்ல மாயாண்டி. செந்திலை பத்தி எல்லா விஷயத்தையும் தெரிந்து வச்சிருக்க” என தேவாரம் சிலாகித்ததும் உச்சி குளிர்ந்துபோனவன்,


“ஹிஹிஹி.... தம்பி நமக்கு அம்புட்டு க்ளோசுங்க. எல்லாத்தையும் என்கிட்டே சொல்லும்” என்றான் பெருமையாக.


“ம்ம்ம்... பெரிய ஆளுதான் நீ. அப்ப இவன் ஏன் அவங்க அம்மா கூட இருக்காம இங்க தங்கறான்? இதைபத்தியும் உன்கிட்ட ஏதாவது சொல்லியிருப்பானே...?” என தேவாரம் இழுத்ததும்,


“ஆமாம் சார்! என்கிட்டே ஒருவாட்டி அதைபத்தி சொல்லி வருத்தப்பட்டுச்சி. எங்க அம்மாக்கு நான் நல்லா படிச்சி பெரிய ஆளா வரனும்னு ரொம்ப ஆசை.ஆனா எனக்குதான் படிப்பு வரலையே. நான் என்ன பண்ணறது? இப்படி நான் எடுபிடி வேலை செய்றது அவங்களுக்கு பிடிக்கல.அதான் அவங்க கூட இருந்து இன்னும் கஷ்டப்படுத்தாம தனியா இங்க தங்கிக்கறேன்னு தம்பி சொல்லிச்சி சார். தங்கமான மனசு சார் அந்த புள்ளக்கு” என்றான் மாயாண்டி. இவனுக்கு டிடியின் மேல் எந்த அளவிற்கு அபிமானம் இருக்கிறதோ அதே அளவிற்கு செந்திலின் மேலும் இருந்தது.அது அவனின் வார்த்தைகளில் பிரதிபலித்தது.


‘என்னடா இது! காணாம போனவனும் நல்லவனா இருக்கான், காணோம்னு சொன்னவனும் ரொம்ப நல்லவனா இருக்கான் இப்படி இருந்தா நான் எப்படி அடுத்த ஸ்டெப்பை எடுத்துவைக்கிறது?’ என தேவாரம் மண்டை காய்ந்து போனான்.


அப்போது இவர்கள் நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு எதிரே இருந்த போர்ஷனில் ஒரு உருவம் இவர்களை நோட்டமிட்டு கொண்டிருந்தது. இவன் பார்வை அந்த பக்கம் திரும்பும் போது அது தன் தலையை உள்ளே இழுத்துக்கொண்டது. இப்படி பல முறை நடந்தது. அந்த வீட்டில் இன்னொரு வாட்ச்மேன் குடும்பத்தோடு இருப்பதாக மாயாண்டி சொன்னது தேவாரத்தின் நினைவில் இருந்தது.சிறிது நேரமாகவே அங்கே நிழலாடுவதை இவன் பார்த்தாலும் போலீஸின் மேல் சாதாரண மக்களுக்கு இருக்கும் பயத்தால் வெளியே வருவதற்கு கிளம்பியவர்கள் தங்களை இங்கு பார்த்ததும் வெளியே வராமல், தாங்கள் சென்ற பிறகு வரலாமென்ற எண்ணத்தில் மறைந்திருந்து பார்ப்பதாக முதலில் எண்ணினான்.


ஆனால் அடிக்கடி நடந்த அந்த நிழலின் நோட்டத்தில் ஏதோ புதிர் மறைந்திருப்பதாக இவனின் போலீஸ் மூளை நோட்டிபிகேஷன் கொடுத்ததை ஏற்ற தேவாரம் குடிக்க தண்ணீர் கேட்டு மாயாண்டியை அங்கிருந்து அகற்றினான். அவன் அந்த பக்கம் நகர்ந்ததும் நிழல் நின்றிருந்த போர்ஷன் பக்கம் விரைந்தான் தேவாரம்.


“மரியாதையா நான் சொல்றதை கேட்டு உள்ளவே கிட. இல்லை... நான் அதை சொல்றேன் இதை சொல்றேன்னு வெளிய தலை காட்டினா வெட்டி பலி போட்ருவேன் ஜாக்கிரதை!”


“முடியாதுங்க! இனியும் உங்க பேச்சை கேட்க என்னால முடியாது. தானா வர வாய்ப்பை விட நான் என்ன லூசா?”


“ஆமாம்டி! லூசேதான் நீயி! அதுவும் சரியான அரை லூசு. அறிவு கெட்டவளே! வெளிய காலை எடுத்து வச்சின்னா கொன்னேப்புடுவேன் பார்த்துக்க!”


“செத்தாலும் எல்லாத்தையும் சொல்லிட்டே நான் சாகறேங்க!”


“நீ செத்து ஒழிஞ்சா ஒழிடி. அதனால எனக்கென்ன வந்தது.ஆனா என் புள்ளைங்களோட எதிர்காலம்!”


“தப்பு செய்தவனே நெஞ்ச நிமித்திகிட்டு சுத்திட்டு இருக்கும் போது இவங்களுக்கு என்னங்க குறை வரப்போகுது?”


“உலகம் புரியாம பேசாதடி லூசுபய மவளே...!”


இந்த சம்பாஷனைகளை கேட்ட தேவாரம் ஒன்றும் புரியாது திகைத்து நின்றான்.
 

Anuya

Well-known member
#18
அத்தியாயம் 6:


ஆயிற்று! செந்தில் வேலுவிடம் வேலைக்கு வந்து வருடம் ஒன்று ஆயிற்று.அவன் பல வேலைகளை கற்று அதில் தேர்ந்தானே ஒழிய படிப்பில் தேறவேயில்லை.அன்னையின் வற்புறுத்தலுக்கும் அக்காவின் கெஞ்சலுக்கும் கட்டுப்பட்டு வேண்டாவெறுப்பாக பத்தாம் வகுப்பு தேர்வை மீண்டுமொருமுறை எழுதியவன் அதிலும் தேர்ச்சி பெறவில்லை.இம்முறை பாகீரதிக்கே மனம் விட்டுப்போனது.’எத்தனை தடவை எழுதினாலும் இவன் பாஸாக போறதில்ல..வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்ற வாக்கை காப்பாத்த பிறந்திருக்கான்!’ என எண்ணி மனம் நொந்தார்.


அத்தையின் மனவருத்தத்தை அறிந்த வேலு, “செந்திலுக்கு படிப்பு தான் வரலையே தவிர மத்த திறமை எல்லாம் நல்லா இருக்கு அத்தை!அதை வச்சி இன்னும் கொஞ்ச வருஷத்தில் அவன் நல்லா வருவான் பாருங்க. என்னமா பேசறான்... அவனாலதான் எனக்கு ரெண்டு பெரிய கம்பனிங்களுக்கு வாட்டர்கேன் போடற ஆர்டர் கிடச்சது அத்தை.யார்கிட்ட எப்படி பேசனும்னு அவனுக்கு நல்லா தெரியுது.”


“எவ்வளவு பிரச்சனைன்னாலும் என்னை போல பாஞ்சிகிட்டு போகாம பொறுமையா பேசி எதிரில் இருக்கவங்களை வசியப்படுத்திடறான். நேக்கா பேசி காரியத்தை சாதிக்கறதில் கில்லாடி அத்தை அவன்.எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல அவன் பெரிய ஆளாகிடுவான்” என அவரை ஆறுதல் படுத்தினான்.


இவன் சொல்வதும் உண்மைதான். செந்திலுக்கு வாய்ஜாலம் நன்றாக வாய்த்திருந்தது. இப்போதெல்லாம் அருகில் இருக்கும் கம்பெனிகளில் ஆர்டர் பிடிப்பதற்கு செந்திலை தான் வேலு அனுப்பினான்.


அதுவுமில்லாமல் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய தலைகளின் வீட்டிற்கு வாட்டர்கேன் சப்ளை செய்யும் பொறுப்பையும் அவனிடமே ஒப்படைத்தான்.அப்படி செல்கையில் அவர்களிடம் பணிவாக நடந்து இவனும் நல்லபெயரை வாங்கியிருந்தான்.

இப்படிதான் இவனுக்கு டிடியின் குடும்பத்தோடு பழக்கம் ஏற்பட்டது.முதலில் தண்ணீர் கேன் போட வீட்டிற்குள் நுழைந்தவன், வாட்டர் ப்ளான்டில் வேலையில்லாத சமயத்தில் அவ்வீட்டின் எடுபிடியாக சிறிது நாட்களிலேயே மாறியிருந்தான்.

அதிகம் படிக்காத டிடியின் மனைவி புதிதாக வந்துள்ள ஏசி,ப்ரிஜ்,செல்போன்,கார் இப்படி எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் இவனின் ஆலோசனைப்படி வாங்கும் அளவிற்கு இவனிடம் நம்பிக்கை கொண்டிருந்தார்.செந்தில் சிறிது சிறிதாக தன்னுடைய இருப்பை அவ்வீட்டில் நிலைப்படுத்திக்கொண்டிருந்தான்.


முதலில் வேலை அதிகமாக இருக்கும் சமயத்தில் எப்போதாவது வேலுவோடு அவனின் வீட்டில் தங்கிய செந்தில், படிப்பு விஷயத்தில் தாயிடம் விளைந்த மனக்கசப்பினால் இப்போது நிரந்தரமாக அவனுடனே தாங்கிக்கொண்டான்.

அவனை தங்கள் வீட்டிற்கு வரும்படி முதலில் வற்புறுத்திய பாகீரதி, மகன் அதை காதில் போட்டுக்கொள்ளாது போகவே வேலுவோடு தானே இருக்கிறான் என அவரும் மனதை தேற்றிக்கொண்டார்.


வேலுவிடம் வேலைக்கென செந்தில் வந்து ஒருவருடத்திற்கு மேலாகி விட்ட போதும் அவனுக்கென்று இதுவரை சம்பளம் என்ற ஒன்றை இவன் தந்ததில்லை. இப்போது செந்தில் வேலுவோடு இருப்பதால் அவனின் அனைத்து தேவைகளையும் கவனித்துக்கொண்டதோடு அடிக்கடி ஏதாவது வாங்கிக்கொள் என கொஞ்சம் பணம் தருவான். அதற்குமேல் இவன் வேறொன்றும் தந்ததில்லை.


செந்திலுக்கு பதினெட்டு வயதானதும் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்து, அவனுக்கென தனியாக புது பைக் வாங்கித்தர எண்ணியவன், அதன் பொருட்டு செந்திலிடம் எந்த பைக் வேண்டுமென கேட்டான்.அதற்கு பைக் எல்லாம் வேண்டாமென சொன்னவன் தனக்கு புது செல்போன் வேண்டுமென்றான்.


விலையுயர்ந்த புதுமாடல் செல்போன்களை வாங்குவதும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு வேறொரு மாடல் வந்ததும் இதை தூக்கிபோடுவதும் பணக்கார வீட்டுபிள்ளைகளின் வாடிக்கை.அப்படி அவர்கள் தூக்கிபோடும் போன்களை விற்பதற்காகவே நிறைய கடைகள் சைனாபஜாரில் உண்டு.அந்த கடைகளில் ஒன்றில்தான்,

செந்திலை போலவே படிப்பில் நாட்டமில்லாத அவனின் நண்பன் வேலைக்கு இருந்தான்.
அங்கு விலையுயர்ந்த செல்போன் ஒன்று விற்பனைக்கு வந்திருப்பாதகவும்,


செந்திலுக்காக முதலாளியிடம் பேசி, குறைந்த விலையில் அதை வாங்கி தருவதாகவும் நண்பன் இவனிடம் சொன்னான்.அதை வேலுவிடம் சொல்லி, அவன் கூறிய விலையையும் சொன்னான். செந்தில் சொன்ன மாடலின் உண்மை விலையை விட அவர்கள் சொன்ன விலை மிகவும் குறைவாக இருப்பதால் வேலுவும் அந்த போனை அவனுக்கு வாங்கித்தருவதாக வாக்களித்தான்.


செந்திலுக்கு புதுபோன் வாங்கித்தரப்போவதை அத்தையிடம் வேலு சொல்ல, அதற்கு அவர் அவ்வளவு காஸ்ட்லியான போன் இவனுக்கு வாங்கித்தர வேண்டாமென மறுத்தார்.முதலில் இருந்தே படி...படியென உயிரை வாங்கும் தாயின் மேல் இருந்த கோபத்தினால் அவரிடமிருந்து சிறிது ஒதுங்கியிருந்தவன்,
இப்போது அவர் இப்படி சொன்னதும் முற்றிலுமாக அவரிடமிருந்து விலகத் தொடங்கினான்.‘தானும் செய்யமாட்டாங்க, செய்யறவங்களையும் செய்ய விடமாட்டாங்க’ என எண்ணியவன் தாயின் மேல் இருந்த கோபத்தை வெறுப்பாக மாற்றிக் கொண்டான்.இனி அவர் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது என்ற உறுதி எடுத்துக்கொண்டான்.


யாரை பிடித்தால் தான் நினைத்தது நடக்கும் என்பதை அறிந்த செந்தில் அவளை தன் துணைக்கு அழைத்தான். அவளும் இப்போது செய்யப்போகும் இந்த செயல் தங்களின் வாழ்க்கையையே மாற்றப்போகிறது என்பதையறியாது தம்பிக்கு துணைப்போனாள். அதனால் .ஒரு வழியாக செந்தில் அவனுக்கு பிடித்த போனை வாங்கிவிட்டான்.


தம்பியை பார்க்க எப்போதும் வரும் நேரத்திற்கு வந்த காவ்யா அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வேலுவை தேடிக்கொண்டு அவனிருக்குமிடம் வந்தாள். அவளின் வருகையை தொலைவில் இருந்தே பார்த்தவனுக்கு அப்படி ஒரு நிம்மதி மனதில் தோன்றியது.


காலையில் நடந்ததிற்கான பிரதிபலிப்பாக அவளின் தந்தை ஏதாவது சொல்லியிருக்க கூடுமோ என ஐயப்பட்டவன்,அதற்கான அறிகுறி ஏதும் அந்த அடுத்தது காட்டும் பளிங்கு முகத்தில் தெரிகிறதா என அவசரமாய் தேடினான்.அப்படி ஒன்றும் அங்கே தென்படாததால் நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். இனி அவளாக ‘என்ன நடந்தது?’ எனக்கேட்கும் வரை எதையும் தானாக சொல்லகூடாது என முடிவெடுத்து, புதிதாக வாங்கிய புல்லட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.


காவ்யா அங்குவந்து பத்துநிமிடத்திற்கு மேலாகியும் அவனிடம் ஏதும் பேசாது அமைதியாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள்.அவளின் இந்த அமைதிக்கு காரணம் காலையில் நடந்த நிகழ்வாக இருக்குமோ என நினைத்தவனின் மனம் மீண்டும் கலவரமானது.அவளின் இந்த மௌனம் இவனை ஏதோ செய்ய, அவளை இயல்பாக்க எண்ணியவன்,


“என்ன மேடம்!! வந்து இவ்வளவு நேரம் ஆச்சு. ஒன்னும் பேசாம அமைதியா இருக்கீங்க! உலக அதிசயமாயில்ல இருக்கு. என்னோட புது புல்லட் பார்த்து வாயடைச்சி போயிட்டீங்களா? இருக்கும்... இருக்கும். இப்படி ஒரு புல்லட்டை இவ்வளவு நாள்ல கண்ணால கூட பார்த்திருக்கமாட்ட. தொட்டுப் பார்க்கனும்னு ஆசை இருந்தா தாராளமா வந்து தொட்டு பாரு.
நான் ஒன்னும் காசு கேட்கமாட்டேன்” என்றான் நக்கலாக.அவனின் இந்த நையாண்டியில் ஆத்திரம் கொண்டவள், சொல்லவந்த விஷயத்தை மறந்து அவனிடம் சண்டைக்கு நின்றாள்.


“சரியான அல்பை மாமா நீ! நாங்க எல்லாம் எல்கேஜி படிக்கும் போதே புல்லட்டில் போனவங்க. எங்கிட்டயேவா! நீதான் புதுசா இதை பார்க்கற. அதனால நீயே அதை நல்லா தொட்டு தடவிட்டு இரு!” என சிலிர்த்துக்கொண்டு வந்தவளை பார்த்தவனுக்கு எதிர்ப்பார்த்தது நடந்துவிட்ட ஆனந்தம் முகத்தில் தாண்டவமாடியது.


“ஓஓஒ... அப்படிங்களா மேடம்! நீங்க இந்த புல்லட்டில் எல்கேஜி படிக்கும் போதே போனீங்களா? அடங்குடி. ரொம்பதான் ஓவரா ஆடற. இந்த மாடல் சேல்ஸ்க்கு வந்தே ஆறுமாசம் தான் ஆகுது”


“ஐய லூசு மாமா! புல்லட்ல போனேன்னு சொன்னேனே தவிர இந்த மாடல்ல போனேன்னா சொன்னேன்?”


“அப்படி வரியா நீ! அப்ப அந்த குறையும் தான் உனக்கெதுக்கு? வா இதிலும் ஒரு ரவுண்டு போலாம்” என்றவன் வண்டியில் அமர்ந்து,தன் பின் அவளை அமர கண்களால் சொன்னான். அதை பார்த்தவள்,


“நானெல்லாம் எட்டாவது படிக்கும்போதே பைக் ஒட்டினவள். என்னை போய் பின்னால உக்கார சொல்ற. நகரு... நீ பின்னால நகரு. நான் ஓட்டறேன்” என்றாள் அதட்டலாக.


“அடியேய்... இது உன்னோட ஸ்கூட்டி இல்லடி. கியர் இருக்கும் புல்லட்டுடி”


“அதெல்லாம் எங்களுக்கு நல்லா தெரியும். நீ வாயமூடிட்டு இருக்க முடிந்தா என் பின்னாடி உக்காரு. இல்லன்னா அங்க ஓரமா உக்காந்து என்னை வேடிக்கை பாரு!” என தெனாவட்டாய் சொன்னவளை ரசித்தவன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பின்நோக்கி நகர்ந்தான்.


‘நான் கேட்டதும் இவன் எங்க தரவா போறான்’ என அசால்டாய் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவனின் இந்த செயல் வயிற்றில் புளியை கரைத்தது.


’ஐயையோ... இந்த மாமா என்ன இப்படி பொசுக்குன்னு பின்னாடி போயிடிச்சு. நான் எப்படி இந்த பூதத்தை ஓட்டுவேன்? இது என்னை போல நாலு மடங்கா இல்ல இருக்கு!இதில் ஏறி உட்கார்ந்தா என்னோட காலு அந்தரத்தில் இல்ல மிதக்கும்’ நினைத்தவளுக்கு பயத்தில் உடல் சிலிர்த்தது. அப்படியும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது,


“உன்னோட புது வண்டியில பர்ஸ்ட் டைம் உட்கார போறேன்.அதுக்கு நாள் நட்சத்திரம் எல்லாம் பார்க்கனும் மாமா.இன்னைக்கு நாள் நல்லாயில்ல. அதனால... இப்ப வேணாம். இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றவள் கிடுகிடுவென்று அங்கிருந்து ஓடி சென்று அலுவலகத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினாள்.


அவளின் செயல்களை பார்த்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தவன், ”எட்டாவதுல பைக் ரேஸ்க்கு போனவங்க எங்க காணோம்?” எனக்கேட்டுக்கொண்டு அங்குமிங்கும் தேடினான்.


அவனின் கேள்விக்கு தன் இடப்பக்க தாடையை தோளில் இடித்து, ஒரு தலை திருப்பலை பதிலாக தந்தவள், “நிஜமா நான் இந்த வண்டியை சூப்பரா ஓட்டுவேன்.ஒரு நல்ல நாள்ல உன்னைய பின்னாடி உட்கார வச்சி ஒட்டிக்காட்றேன் பாரு, அப்ப தெரியும் நான் யாருன்னு! என்றாள் அப்போதும் தன் கெத்தை விடாது.


“ம்ம்ம்... நீ சொன்னதை அப்படியே நம்பிட்டேன் காவி! சரி அதை அப்ப பார்த்துக்கலாம்.இப்ப என்கூட வா.நாம ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்” என ஆசையாக அழைத்தான்.


தான் சொன்னதை நம்பாது கேலி செய்பவனின் மேல் கோபம் கொண்டவள்,”இருபது வருஷத்துக்கு முந்தியே இதை வச்சிருந்தவரோட பொண்ணு நான். என்கிட்டே வந்து பையாஸ்கோப் கட்டாதே நீயி. நான் ஒன்னும் உன்னோட வண்டியில உக்கார அலையல போ!” என முறுக்கிகொண்டாள்.


இவ்வளவு நேரம் அவளையும் அவளின் கோபத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவன், தந்தையை பற்றி அவள் பேசியதும் முகம் மாறினான். காலையில் நடந்த விஷயம் இவ்வளவு நேரமாய் இவன் மனதை உறுத்திக்கொண்டிருக்க, இவள் இப்போது அவளின் தந்தையை உயர்த்தி பேசவும்,இவளுக்கு தன்னைவிட அப்பாதான் முக்கியமோ என்ற எண்ணம் தோன்ற அதில் கடுப்பானவன்,


“ஆமாம்டி. உங்கப்பா பெரிய பண்ணையாருதான்.நீ பண்ணையாரு வீட்டு பொண்ணுதான்.நீங்க எல்லாம் பெரிய இடம்தான். நான் இல்லைன்னு சொன்னேனா? இப்ப எதுக்கு இங்கவந்து உங்கப்பா பெருமையை பேசிட்டு இருக்க?” அவளிடம் கடுகடுத்தான்.


அவனின் எண்ணப்போக்கு புரியாதவளோ, “இருக்கு பேசறேன். அதுக்கு இப்ப என்னங்கற?” காலாட்டிக்கொண்டே விளையாட்டாய் கேட்டாள்.


“அப்ப என்கிட்டே அப்படி ஏதுமில்லைன்னு குத்திக்காட்டறியா?” எனக் கேட்டான் ஒரு கூர்மையான பார்வையை அவளிடம் செலுத்தி.
அவன் இப்படி கேட்டதும் உஷாரானவள், ”என்னை பத்தி உனக்கு தெரியாதா மாமா?” என்றாள் அவனின் கூர்பார்வையை தன் நேர்பார்வையில் தாங்கி. அதில் கொஞ்சம் மனம் தெளிந்தவன்,“நான் வேணும்னு அப்படி பண்ணல காவி. அங்க இருந்த சூழ்நிலை என்னை அப்படி உங்க அப்பாகிட்ட பேச வச்சிட்டது” என சம்மந்தமில்லா ஒன்றை கலங்கிய குரலில் சொன்னான். இதுவே காலையில் நடந்ததை பற்றிய குழப்பத்தில் இவன் இருக்கிறான் என்பதை அவளுக்கு கூறியது.


“நான் உன்கிட்ட ஏதாவது அதைபத்தி கேட்டேனா மாமா?”
“இல்ல.. நீ எதையும் கேட்கலைன்னாலும் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லனுமில்ல” என்றவன் காலையில் தனக்கும் தன் மாமனுக்கும் நடந்த வாக்குவாதத்தை பற்றி சொல்லத்தொடங்கினான்.இவர்கள் வசிக்கும் இடத்தில் சமீபகாலமாக மினரல் வாட்டர் பிளான்ட்டின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்ததால் அப்பகுதியில் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதாக புகார்கள் அடிக்கடி எழுந்த வண்ணமிருந்தது. பெரும்பாலும் அங்கிருந்த ஆலைகள் அனைத்தும் வேலு மற்றும் அவனின் நண்பர்களின் ஆலைகளாகவே இருந்தது. அந்த ஆலைகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டி, அங்கு பெரிய ஆளாகவும் அதே நேரத்தில் வேலுவின் சொந்தமாகவும் இருக்கும் பழனியிடம் அப்பகுதி மக்கள் உதவி கேட்டு வந்தனர்.


அதற்கு அவரும் ‘வேலு தானே அங்கே பெரிய ஆள். அவன் நான் சொன்னால் கண்டிப்பாக கேட்பான்’ என எண்ணிக்கொண்டு இதை பற்றி அவனிடம் பேசுவதாக வாக்களித்தார். முதலிலேயே மரியாதையாக நடந்துக்கொள்ளும் தங்கை மகன்,இப்போது மகளை வேண்டி தன்னிடம் வரவேண்டிய இந்த நேரத்தில் தான் கேட்கும் எதையும் மறுக்கமாட்டான் என்ற மிதப்பில் மருமகனிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை மற்றவர்களிடம் காட்ட, தனக்கு தெரிந்த நாலு ஆட்களுடன் படை சூழ அவனிடம் சென்றார்.


பழனியப்பன் தாங்கள் வந்த காரணத்தை வேலுவிடம் சொன்னதும், முதலில் பொறுமையாக சுற்றுவட்டாரத்தில் தண்ணீரின் தேவை அதிகம் இருப்பதால் ஆலைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என பணிவாக சொன்னான்.அதை ஏற்காத பழனி அவனிடம் வாக்குவாதத்தில் இறங்க, சிறிது நேரம் பொறுத்து பார்த்த வேலு இறுதியில் பொங்கி விட்டான்.


“நான் என்ன கோலா கம்பனிக்கா தண்ணி சப்ளை பண்றேன். நம்ம ஜனங்களுக்கு குடிக்கத்தானே தண்ணிய சுத்தப்படுத்தி அனுப்பறேன்.

ஏரி,ஆறு,குளம்,குட்டை இங்க எல்லாம் மழை தண்ணிய சேர்த்து வச்சியிருந்தா இந்த நிலைமை நமக்கு ஏன் வரப்போகுது? அங்க எல்லாம் குடிக்க கூட தண்ணி கிடைக்காம போனதால தானே நிலத்தடி நீரை உரிஞ்சி அதை சுத்தப்படுத்தி குடிச்சிட்டு இருக்கோம்.அதையும் செய்யக்கூடாதுன்னா அப்ப எதை குடிக்கறது? ஜனங்களுக்கு ஒழுங்கா குடிதண்ணி கொடுக்காத அரசாங்கத்துக்கிட்ட போய் கேள்வி கேட்காம எங்க பொழப்பை ஏன் கெடுக்கறீங்க?”


தான் இவ்வளவு தூரம் சொல்லியதற்காகவாவது கண்டிப்பாக உங்களுக்காக நான் என்னால முடிந்ததை செய்யறேன்னு வேலு சொல்வான் என ஏகத்திற்கும் எதிர்பார்த்த பழனி, மருமகனின் இந்த ஆக்ரோஷமான பேச்சில் வாயடைத்து போய் நின்றார்.


நாலு பெரிய மனிதர்கள் முன்பு தன்னை மதியாது எதிர்த்து பேசிவிட்டதாக கோபம் கொண்ட பழனி “நேத்து பெஞ்ச மழையில முளைச்ச காளான் கிட்ட எல்லாம் பேசவந்த என் புத்திய செருப்பால அடிச்சிக்கனும்” என கத்திக்கொண்டு அங்கிருந்து விசுக்கென்று கிளம்பி விட்டார்.


“நான் உங்க அப்பாவை அவமதிக்கனும்னு எதையுமே செய்யல காவி.அவர் கேட்டதை செய்யமுடியாத என்னோட சூழ்நிலை உனக்கு புரியுது இல்ல” என தவிப்புடன் கேட்டவனை பார்த்த காவ்யா,


“உன்னோட நிலைமை எனக்கு நல்லா புரியுது மாமா.எங்க அப்பா ஒரு அவசரகுடுக்கைன்னு தெரிஞ்ச விஷயம் தானே மாமா. தன் மாப்பிள்ளை கிட்ட தனக்கு இருக்கும் பவரை மத்தவங்ககிட்ட காட்டி ஸீன் போடலாம்னு வந்தவரை நீ மதிக்கலைன்னு அவருக்கு உன்மேல கோபம். மத்தபடி பெருசா ஒன்னுமில்ல.கொஞ்சம் நாள் போனா எல்லாம் சரியாயிடும். நீ அதை விட்டுத்தள்ளு மாமா” என ஆறுதல்படுத்தினாள்.


“அவர் இதை பத்தி வீட்டுல ஒன்னுமே சொல்லலையா?” என ஆர்வமாய் கேட்டவனுக்கு,


“உன்னோட ஓட்டவாய் மாமாகிட்ட ரொம்பதான் ஓவரா எதிர்பார்க்கற நீ!” பதிலளித்தாள்.

“ப்ச்சு... எப்பபாரு கிண்டல் தானா உனக்கு. சொல்லு. அப்படி என்ன சொன்னாங்க மாமா. என்னைய திட்டினாங்களா? உன்னை ஏதாவது சொன்னாங்களா?“ என பரபரத்தான்.


“அதெல்லாம் பேஷா நடந்தது. வந்ததும் கொஞ்ச நேரம் பொதுவா காச்மூச்சுன்னு கத்தினாங்க. அம்மாகிட்ட என்னமோ சொல்லி எகிறனாங்க. அப்புறம் என்கிட்டே வந்து நீ காணற கனவெல்லாம் என்னைக்கும் நடக்காது.

இப்போவே எல்லாத்தையும் அழிச்சிடு. என் உசுரு இருக்கறவரைக்கும் அந்த மரியாதை தெரியாதவனை இந்த வீட்டுக்குள்ள நான் விடவே மாட்டேன். நீயும் இனி அவனை போய் பார்க்கற வேலைய வச்சிக்காதேன்னு சொன்னாங்க” என்றவளை அதிர்ந்துபோய் பார்த்தவன்,


“அப்ப உன்னை எனக்கு கட்டித்தர மாட்டாரா?” எனக் கேட்டான் பரிதாபமாய்.


“அப்படி எங்க அவரு சொன்னாரு!”
“இப்ப தானடி நீ சொன்ன” என எரிச்சலாய் கேட்டவனுக்கு,“நான் எங்க அப்படி சொன்னேன்? அவர் வீட்டுகுள்ள உன்னைய விடமாட்டேன்னு சொன்னதா தானே நான் சொன்னேன்” என்றாள் குறும்பு சிரிப்புடன்.


“காவி.... மனுஷனோட நிலைமை புரியாம என்ன பேச்சு இது?” என பல்லைகடித்தவனை அசால்ட்டாய் ஒரு பார்வை பார்த்தவள்,


“உன்னை பார்க்க போகக்கூடாதுன்னு கூடத்தான் சொன்னார்.அதுக்காக நான் அதை அப்படியே கேட்டுட்டு அங்கேவா கிடந்தேன். இப்ப இங்க வரல? அவர் பேசறதை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு... போ மாமா போய் வேலைய பாரு” என்றாள் கூலாக.


விஷயத்தின் வீரியம் புரியாது பேசுபவளை பார்த்தவன், “எதுல விளையாடறதுன்னு விவஸ்தையில்லாம போச்சுடி உனக்கு. .இன்னைக்கு உன்னைய உங்க அப்பா இங்க வரவிடுவாரோ என்னமோன்னு நான் காலையில இருந்து தவிச்சிட்டு இருந்தது உனக்கு எங்கடி தெரியும்? உங்க அப்பா சரியான பிடிவாதம் பிடிச்ச ஆளு ஆச்சே. மத்தவங்க பிரச்சனைக்கு நான் சொன்னதை மனசுல வச்சிக்கிட்டு என்னோட வாழ்க்கையை அவர் பலிவாங்கிடுவாரோன்னு நான் படும் கவலை உன் கண்ணுக்கு தெரியலையா? அவர் சொன்னதை நான் கேட்காததால உன்னை எனக்கு கட்டிக் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு நான் இங்க வேதனையில இருக்கேன். நீ என்னமோ விளையாடிட்டு இருக்க” என்றான் ஆதங்கமாய்.


இவளுக்கும் அவனின் தவிப்பு,கவலை,பயம் எல்லாம் புரிந்தேதான் இருந்தது. ஒரு சாதாரண விஷயத்திற்கு போய் இவன் இப்படி நடந்துக்கொள்வதற்கு தன் மேலுள்ள காதல்தான் காரணம் என்பதும் தெரிந்துதான் இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேல் தன்னை மீறி அப்படி என்ன நடந்துவிடும் என்ற தைரியம் மலையளவிற்கு இருந்தாதால் தந்தையை எண்ணி அஞ்சாமல் இயல்பாக இருந்தாள். ஆனால் சூழ்நிலையும் சந்தர்பமும் ஒன்று கூடினால்... எல்லாம் கைமீறி போகக்கூடும் என்பதை பாவம் இந்த இளமொட்டு அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை!
 

Anuya

Well-known member
#19
அத்தியாயம் 7:

தான் கேட்ட சம்பாஷனைகள் தன் தேடலுக்கு தொடர்புடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் தேவாரத்திற்கு தோன்றிய நேரத்தில் திரு,”சார்!” என குரல் கொடுத்து உள்ளே சென்ற மாயாண்டி வந்துகொண்டிருப்பதாக சைகையில் சொன்னான்.


“மன்னிச்சிக்கோங்க சார்.கேன்ல தண்ணி இல்ல.அதனால புது கேன் போட்டு தண்ணி கொண்டாற கொஞ்சம் நேரம் ஆகிடிச்சு” என்றவன் தேவாரத்திடம் தண்ணீர் சொம்பை கொடுத்தான்.


“மாயாண்டி! வேலைக்கு போகாம நீ என்ன இந்த நேரத்தில் வீட்டுல இருக்க?இன்னைக்கு லீவா?” என தேவாரம் கேட்டதற்கு,


“”இல்லங்க சார். நான் பார்க்கறது தோட்டவேலை தானுங்களே... அதெல்லாம் சாயங்காலம் பொழுதோடவே முடிச்சிடுவேனுங்க. இராப்பொழுது சமையலுக்கு ஏதாவது காய்கறி வேணும்னு பத்மா தங்கச்சி கேட்டா வாங்கியாந்து தருவேனுங்க.அப்படி ஏதும் வேலை இல்லன்னா இராசாப்பாட்டுக்கு போறவரை வீட்டுக்கு வந்து விழுந்து கிடப்பேனுங்க.அந்த சமயத்தில்தான் செந்தில் தம்பி வந்து என்கிட்டே பேசிட்டு இருக்கும்.அப்ப நான் அப்படியே கண்ணசந்தாலும் அது இங்கயே என் காவலுக்கு இருக்குமுங்க.ரொம்ப தங்கமான புள்ளைங்க அது” என்றான்.


‘இவன் என்ன வாயை திறந்தாலே செந்தில் புகழை பாடறான்!’ என எண்ணிய திரு,”நீ என்ன மாயாண்டி அந்த பையனை இம்புட்டு தூக்கிவச்சி பேசற. ஒரு வயசு பிள்ளை அவன் வயசு பிள்ளைங்க கூட கூட்டு சேராம உன்கூட சிநேகிதம் பிடிச்சான்னு கேட்க அதிசயமாயில்ல இருக்கு!” எனக் கேட்டான்.


“அந்த பிள்ளைக்கு தோஸ்த்துன்னு இங்க யாரும் இல்லைங்க.அதுக்கு நானும் செல்லு கடையில வேலைக்கு இருக்கும் ஒரு பையனும்தான் சினேகிதம்னு அடிக்கடி சொல்லும். அந்த பையன்கிட்டயிருந்து எனக்கு கூட போன் ஒன்னை வாங்கி கொடுத்துச்சுங்க.அதுக்கு காசு கூட என்கிட்ட வாங்கல.பொழைக்க தெரியாத புள்ளைங்க. அந்த போனு பாக்க புது போனாட்டம் சும்மா சோக்கா இருந்ததுங்க.நான்தான் துப்புகேட்டு போய் அதை கெடுத்துபுட்டேன்.சரி பண்ணித்தரேன்னு அதை வாங்கிட்டு போன தம்பியதானுங்க காணோம்” என்றான் சோகமாய்.


“உன்கிட்டயிருந்து எப்ப போனை வாங்கிட்டு போனான்?” என தேவாரம் கேட்டதற்கு,
“போன சனிக்கிழமை காலையில வாங்கிட்டு போச்சுங்க. நாளைக்கு கடை லீவு, திங்ககிழமை உங்க போனை சரிபண்ணியாந்திடறேன்னு சொல்லுச்சுங்க. ஆனா அதை காணோமுங்க” என்றான் கவலையாக மாயாண்டி..


“ஞாயிறு அன்னைக்கு அவன் இங்க தான் இருந்தானா?”


“காலையில இங்க இருந்துச்சான்னு எனக்கு தெரியாதுங்க.நான் வெள்ளனவே வேலைக்கு போயிடுவேனுங்க.அன்னைக்கு சாயங்காலத்துல இருந்து அது ரூமுல லைட் எரியலைங்க”


“ஓஓஒ...” என சொல்லி தாடையை தேய்த்துக்கொண்டு சுற்றுபுறத்தை தன் பார்வையால் ஒரு முறை வலம் வந்த தேவாரம்,”இப்ப வேலைகாரங்கள்ல நீ மட்டும் தான் வீட்டுல இருக்கியா... இல்ல வேற யாரவது இருக்காங்களா” எனக் கேட்டான்.


“நம்ம கண்ணன்... வீட்டுல தாங்க இருக்கு.

அதாங்க அந்தான கடகோடியில இருக்கிற வீட்டுல இன்னொரு வாட்ச்மேனு இருக்கறதா சொன்னனே சார் அவன்தானுங்க. அப்புறம்... வரா பொண்ணு அதோட குழந்தைக்கு என்னமோ மேலுக்கு முடியலைன்னு இன்னைக்கு சீக்கிரமே வந்துடுச்சுங்க.அதுவும் மேலதான் இருக்கும்.நம்ம பத்மா தங்கச்சி அங்க பெரிய வீட்டுல சமையல்ல இருக்குமுங்க. நான் வேணும்னா கண்ணனை கூட்டியாறட்டுங்களா சார்!” என மாயாண்டி கேட்டான்.


“இல்ல. வேணாம் மாயாண்டி..நானே பார்த்துக்கறேன்” என்ற தேவாரம் கண்ணனின் வீட்டை நோக்கி நடந்தான்.அதை பார்த்த திரு அவனை முந்தியடித்துக்கொண்டு முன் சென்று கண்ணனின் வீட்டு கதவை தட்டினான்.

சத்தம் கேட்டு வெளியே வந்த உருவத்தை பார்த்தவன் வாயை பிளந்து கொண்டு நின்றான்.


‘கடோத்கஜன்,பீமன்,கும்பகர்ணன்... இவர்களின் வாரிசாக்கும் நான்!’ என பறைசாற்றும் தோற்றத்தில் இருந்தவன், வேகமாக காற்றடித்தால் பறந்துவிடும் நிலையில் இருக்கும் திருவை பார்த்ததும் மிரண்டுபோய், “என்ன சார்?” என கேட்டான் நடுங்கும் குரலில்.


‘இந்த யூனிஃபார்ம் மட்டுமில்லேன்னா என்னைப் பார்த்து காலாவதியான தந்தியை இன்னும் இவன் அடிச்சிட்டு இருப்பானா? ‘ஆள்பாதி ஆடைபாதி’ நம்ம விஷயத்துல சரியாதான் வர்க்அவுட் ஆகுது.இந்த மலையை என்னைப் பார்த்து மிரளவைத்த என்னோட காக்கிசட்டையே... ‘ஐ லவ் யூ டார்லிங்!’ எனக் கொஞ்சி தன் வர்த்தியை தடவி கொண்டிருந்தவனை பார்த்த தேவாரம், ”தல! வந்தவிஷயத்தை கவனிக்காம அங்க என்ன லவ் பிரப்போசல் ஓட்டறீங்க?” எனக் கேட்டான்.


எப்போதும் போல இப்போதும் அவனின் மைண்ட்வாய்ஸை சரியாக கேட்ச் பிடித்த தேவாரத்தின் திறமையை கண்டு வியந்த திரு, காக்கிசட்டையின் மேல் இருந்த காதல் பார்வையை பிடுங்கி, தன்னருகில் இருக்கும் காவல்காரனின் மேல் வீசினான்.


இதை பார்த்த தேவாரம், ‘கர்மம்டா சாமி! இந்த மனுஷன் போன ஜென்மத்தில் என்னை ஒருதலை காதல் பண்ணி ஃபெயிலியரா போயிருக்கும் போல.அதான் விட்டகுறை தொட்டகுறையா தொடறது’ என மனதினுள் நொந்தவன், தாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்பதை கண்ணனிடம் சொன்னான்.


“சார்... எனக்கு அந்த பையன்கிட்ட அவ்வளவா பழக்கம் இல்லைங்க. எங்க வீட்டம்மாவும் இங்க யாருகிட்டயும் அதிகமா பேசாது.அது ரொம்ப கூச்ச சுபாவம். நான் வேலைக்கு போனபிறகு, தான் உண்டு தன் வேலை உண்டுன்னு வீட்டுகுள்ள இருக்கும்” என இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,


”வணக்கம் சார்! நான் அருணா.இவரோட வைஃப். எனக்கு தெரிந்ததை நான் உங்ககிட்ட சொல்லலாமா சார்!” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு முப்பதை நெருங்ககூடிய வயதிலிருந்த ஒருத்தி இவர்களின் முன் உதயமானாள். அவளின் பிசிறற்ற குரல், தவறு செய்யாதவர்களிடம் இருக்கும் நேர்கொண்ட பார்வை,உடல்மொழியில் தெரிந்த நேர்மையின் கம்பீரம் இதற்கும் சிறிது நேரம் முன்பு கண்ணன் சொன்ன கூச்ச சுபாவத்திற்கும் கிஞ்சிதமும் பொருத்தமில்லை.


அருணா இப்படி அதிரடியாக வெளியே வருவாள் என்று எதிர்பார்க்காத கண்ணன் திகைத்துப்போய் அப்படியே சமைந்து நின்றான். அவனின் அதிர்ச்சியை மனதில் குறித்துக்கொண்ட தேவாரம்,


“வணக்கம்மா! சொல்லுங்க...தாராளமா சொல்லுங்கம்மா. விசாரணைக்கு போலீஸ் வந்தா அரண்டுபோய் நமக்கெதுக்கு வம்புனு மக்கள் ஒதுங்கும் துரதிஷ்டவசமாக சூழ்நிலை தான் இன்னும் இந்த நாட்டில் நிலவுது.ஆனா நீங்க அப்படி இல்லாம துணிச்சலா உங்களுக்கு தெரிந்ததை சொல்ல வந்தது ரொம்ப பெரிய விஷயம். போலீஸ்காரங்களும் சாதாரண மனுஷங்கதான். எங்களைப்பார்த்து பயப்படாம தைரியமா உங்களுக்கு தெரிந்த தகவல்களை என்கிட்டே சொல்லலாம்.உங்க பாதுகாப்புக்கு நான் பொறுப்பு” என்றான்.


“உண்மையை சொல்றதுக்கு எதுக்கு சார் பயம்? இங்க முக்காவாசிபேர் எது நடந்தாலும் சகிச்சிட்டு பொறுத்துப் போறதாலதான் சார் அக்கிரமம் தலைவிரித்தாடுது” என கணவனை கண்ணால் எரித்துக்கொண்டே பேசினாள்.


மனைவியின் பேச்சிலும் பார்வையிலும் வீசிய அனலைவிட அதிக உஷ்ணத்தை தன் விழிகளில் தாங்கிய கண்ணன், ”ஆம்பளைங்க பேசிட்டு இருக்கும் போது உனக்கு என்ன வேலை இங்க?போ... உள்ள போய் உன் வேலைய பாரு” கர்ஜித்தான்.
தங்களை பார்த்ததும் அப்படி பம்மியவன் இப்போது இப்படி ஆங்காரமாய் கத்தியதை தேவாரம் சந்தேகமாய் பார்த்ததும், “அவ சரியான லூசு சார்! நாலு எழுத்து படிச்சிட்டோம்னு திமிருல சுத்தறவ. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு தெரியாத தத்தி கழுதை சார்.இது பேச்சை நீங்க பெருசா எடுத்துக்காதீங்க” என கெஞ்சினான்.


முதலில் தங்களிடம் பயந்து, பின் மனைவியிடம் பாய்ந்து, மீண்டும் தங்களிடம் பணியும் கண்ணனின் நடவடிக்கைகள் அனைத்தும் திருவிற்கு, அந்நியனை நியாபகப்படுத்தியது. இவனிடம் ஏதோ சரியில்லை என எண்ணியவன் தன் எண்ணம் சரியா என தேவாரத்தை பார்த்தான். அவனும் நீ நினைத்தது சரியென பொருள்படும்படி தலையாட்டவும் ‘சார் கூட சேர்ந்து நானும் திறமைசாலி ஆகிட்டேன் டோய்’ என குஷியானான்.


“இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டம் கண்ணன்! செந்திலை பற்றி உனக்கு ஏதும் தெரியாதுன்னு நீ சொல்லிட்ட. ஆனா இவங்க ஏதோ தெரியும்னு சொல்றாங்க. அதைபத்தி சாதாரணமா ஒரு ரெண்டு மூனு கேள்வி அவங்ககிட்ட இங்க உன் முன்னாடிதான் கேட்கபோறேன். அதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன்? அவங்களை விசாரணைக்கு இப்ப ஸ்டேஷனுக்கு கூட்டி போறேன்னா சொன்னேன்? நான் நினைச்சா அப்படி கூட செய்யலாம் தெரியுமா?” என்றான் மிரட்டல் குரலில்.


இதை கேட்டதும் சப்தநாடியும் கண்ணனுக்கு அடங்கிப்போனது. போச்சு... எல்லாம் போச்சு! மானம் மரியாதை எல்லாம் இப்ப போகப்போகுது.இவ இப்ப வாயை திறந்தா நான் நாண்டுகிட்டு சாகனும். பாவி... பாவி! நான் அவ்வளவு சொல்லியும் ஆம்பளையாட்டம் எகிறிகிட்டு வராளே...

இப்ப என்ன பண்ணுவேன்.எந்த முகத்தை வச்சிட்டு இனி வெளிய தலைக் காட்டுவேன்’ என தவித்தவனின் கண்கள் கலங்கியது.
இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அருணாவின் நிலை இருதலைகொள்ளி எறும்பாக மாறியது.சிலகாலமாக நடந்துக்கொண்டிருப்பதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவர கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள துடித்துக்கொண்டிருந்தவள் கணவனின் தவிப்பை பார்த்து அடங்கிப்போனாள்.நினைத்ததை சொல்லமுடியாத போதும் அதில் ஒரு துளியையாவது சொல்லிவிட முடிவெடுத்தாள்.


“கேளுங்க சார். நீங்க என்ன கேட்டாலும் எனக்கு தெரிந்த உண்மையை மறைக்காம சொல்றேன்” என்றாள் தேவாரத்தை பார்த்து.
“காணாம போன அந்த செந்தில் எப்படி?உங்ககிட்ட எல்லாம் அவன் எப்படி பழகுவான்?”


“அவன் ஒரு சரியான பொறுக்கி சார்! ஆரம்பத்தில் நான் அவனை தம்பியா நினைச்சிதான் பழகினேன். ஆனா அவன்... நல்ல சாவே வராது சார் அவனுக்கு. இந்த கையால அவனுக்கு எத்தனை தடவை சோறு போட்டிருக்கேன் சார். அந்த நன்றி இல்லாம...பாவிப்பய. மோசமான விஷ ஜந்து சார் அவன். கூட பழகினவங்க குடியை கெடுக்கும் கொடும்பாவி சார் அவன்.

அவனெல்லாம் நல்லாவே இருக்கமாட்டான்.இந்நேரத்துக்கு அவன் தண்ணிலாரிலையோ மணல்லாரிலையோ அடிபட்டு உருக்குலைந்து போயிருப்பான் சார். காணாம போனவன் அப்படியே தொலைஞ்சி போகட்டும். அவனை எதுக்கு சார் தேடறீங்க?அவன் இல்லைன்னு இங்க யார் அழறாங்க.பாவிப்பய. அவன் அப்படியே புழுத்துதான் சார் போவான்”


கண்களில் ஒருவித வெறியுடன் பேய் பிடித்தவளை போல கத்தியவளை பார்த்து அங்கிருந்தவர்கள் திகைத்து போய் நின்றனர்.ஆங்காரமாய் அவள் பேசத்தொடங்கியதும் அவளை அடக்க கண்ணன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின.அவள் அவனின் கைகளுக்கு கட்டுப்படாமல் திமிறிக்கொண்டு தான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லிவிட்டே ஓய்ந்தாள்.


அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அங்கு நிசப்தமே நிலவியது.ஆர்ப்பாட்டமாய் ஆடியவள் அடங்கி அப்படியே ஓர் ஓரமாய் நின்றாள்.கண்ணன் குனிந்த தலையை நிமிர்த்தாது அவளின் அருகில் நின்றிருந்தான்.அவளின் இந்த கொந்தளிப்பு எதற்கு என கேட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த தேவாரம்,


“எதை வச்சிம்மா நீ அவன் மேல இவ்வளவு குறை சொல்ற! நான் இதுவரை விசாரிச்சவரைக்கும் அவனை எல்லோரும் நல்லவன்னு தானே சொல்றாங்க...” என இழுக்கும் போதே
“யாரு... யாரு சார் நல்லவன்?அவனா? அவனா சார் நல்லவன்! நல்ல பாம்பு நல்லதுன்னு சொன்னாக்கூட நான் நம்புவேன்.ஆனா அவனை... அவனை போய் நல்லவன்னு சொல்றீங்களே சார்.அந்த நல்லவன் பண்ண காரியம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா சார்?” என மீண்டும் ஆக்ரோஷாமாய் தொடங்கினாள்.


அருணாவிடம் தேவாரம் கேள்வி கேட்டதும் பதறிக்கொண்டு நிமிர்ந்தவன், அவள் பேசத்தொடங்கியதும் சாஷ்டாங்கமாய் தேவாரத்தின் காலில் விழுந்து தன் இரு கைகளில் இறுக்கமாக அவனின் கால்களை கட்டிக்கொண்டு,


“சார்... சார்! இவ பைத்தியம் சார். நிஜமாவே பைத்தியம்தான் சார். ரெண்டாவது பிரவசத்தப்ப பிபி அதிகமாகி கொஞ்சம் மூளை கலங்கிடிச்சி சார் இவளுக்கு. அப்பயிருந்து அடிக்கடி இப்படிதான் சம்மந்தமில்லாம எதையாவது பேசுவா.அப்புறம் கையில கிடைப்பதை எல்லாம் எடுத்து வீசுவா.இதெல்லாம் வெளிய தெரிந்தா எனக்கு அசிங்கம்னுதான் சார் அவளை பேச வேணாம்னு சொன்னேன்.ப்ளீஸ்... சார் அவகிட்ட இனி எதையும் கேட்காதீங்க சார்.அவ ஒன்னுகிடக்க ஒன்னு உளறுவா.அவ சொன்னது எல்லாம் உண்மையில்லைங்க சார். அந்த பையன்கிட்ட நாங்க யாரும் அவ்வளவா பேசியதில்ல சார்.ப்ளீஸ்... சார்! ப்ளீஸ்... எங்களை இத்தோட விட்டுடுங்க சார்” கதறினான்.


கணவனின் செயலை அருணா அருவருப்பாய் பார்த்துக்கொண்டிருக்க, திருவோ திகைத்துபோய் நின்றிருந்தான்.அவ்வளவு பெரிய உருவம் வேரறுந்த மரம் போல தேவாரத்தின் கால்களில் விழுந்துகிடப்பதை பார்பதற்கு ஐயோவேன இருந்தது இவனுக்கு.
செந்திலை பற்றி ஏதோ பெரிய விஷயம் இந்த ஜோடிக்கு தெரியும் என்பது இவர்களின் நடவடிக்கையில் புரிந்துப்போனது.’அவ்வளவுதான்... ஒன்னும் இல்லாமலே எங்க சார் புகுந்து விளையாடுவார்.இப்ப லட்டாட்டம் துப்பு சிக்கியிருக்கு. விடுவாரா என்ன! அப்பாடா...இன்னையோட இந்த கேஸு ஒருமுடிவுக்கு வந்துடும்.இனிதான் எங்க சாரின் ஆட்டம் ஆரம்பம்’ என திரு மனதில் நினைத்ததற்கு மாறான ஒன்றை செய்தான் தேவாரம்.


காலில் விழுந்து கிடந்தவனை குனிந்து தூக்கியவன்,”முதல்ல எழுந்திருங்க கண்ணன்.இந்த கால்ல விழற பழக்கத்தை நாம எப்ப விட்டு தொலையறமோ அப்பதான் உருப்படுவோம்.ம்ம்ம்... எழுந்திருங்க” என அதட்டினான்.


கண்ணன் எழுந்ததும் அவனின் கைகளை பிடித்துக்கொண்டு, “இப்ப என்ன உங்க வைஃப்க்கு மனநிலை சரியில்ல.அதனால அவங்ககிட்ட நான் எதையும் கேட்க கூடாது.அவங்க முதலில் சொன்னதை நான் பெருசா எடுத்துக்க கூடாது.அவ்வளவு தானே? அதுக்கு எதுக்கு இப்படி சீரியஸ்ஸா பிகேவ் பண்றீங்க! விடுங்க... நான் எதையும் கேட்கல.அவங்க ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க” சொன்னவன்,


“தல... நாம கிளம்பலாம்” என்று அங்கிருந்து வெளியே வந்தான்.இவனின் இந்த செயல் அங்கிருந்த மூவரையும் வெவ்வேறு விதமாக தாக்கியது.பிறரின் முன்பு அசிங்கப்பட்டு கூனிக்குறுகி நிற்கவேண்டிய நிலையில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டதை நம்பமுடியாத அதிர்ச்சியில் கண்ணன் நின்றிருக்க, மூழ்கப்போகிறவளின் கையில் கிடைத்த கட்டை மரமும் உடைந்து போன அவல நிலையில் அருணா இருந்தாள்.
திருவோ... தேவாரத்தின் இந்த நடவடிக்கையால் என்ன நடக்கிறது எனத்தெரியாது குழம்பிப்போய் அவனை பின் தொடர்ந்தான்.


கண்ணனின் இல்லத்திலிருந்து வெளியே வரும்வரை பொறுமைகாத்தது போதுமென எண்ணியவன்,”சார்... என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க.அந்த அம்மாக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு சார்...” என சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு பெண் அவர்களை அவசரமாக நெருங்கி,.


“சார்! நான் வரா சார். ஐயா வீட்டில் வேலைக்கு இருக்கேன் சார். இங்கதான் மேல குடியிருக்கேன் சார். பாப்பாக்கு பிஸ்கட் வாங்க கடைக்கு போகும் போது மாயாண்டி அப்பா, நீங்க செந்திலை பத்தி விசாரிக்க வந்திருக்கறதா சொன்னாரு சார். அதான் கடைக்கு கூட போகாம இங்க ஓடிவந்தேன்.என்ன சார் என்ன ஆச்சு அவனுக்கு? அவனைபத்தி ஏதாவது தெரிந்ததா சார்.ரொம்ப நல்ல பையன் சார்.அடக்க ஒடுக்கமானவன்.யார் வம்புக்கும் போகமாட்டான். தேவையில்லாம யார்கிட்டயும் பேசமாட்டான்.எங்க வீட்டுக்காரருக்கு கொஞ்சம் உடம்பு முடியாது. அவன்தான் சார் எனக்கு எல்லாவிதத்திலும் எல்லா உதவியும் செய்திருக்கான்.அவனை எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்க சார்” என படபடவென பொரிந்தாள்.


இதைக் கேட்டுக்கொண்டிருந்த இருவரின் தலை முதுகுபுறமாக ஒருமுறை சுழண்டு திரும்பியது.