சுழலில் சிக்கிய பூந்தளிரே - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ரம்யா சந்திரன் அவர்கள் "சுழலில் சிக்கிய பூந்தளிரே" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.
 
Last edited:
#2
சுழலில் சிக்கிய பூந்தளிரே...1
அதிகாலை ஐந்து மணி....
ஆர்ப்பாட்டமில்லாத அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிக அளவு சத்தத்தில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது....


கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

பாடலின் சத்தம் காதினை கிழித்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் போர்வைக்குள் சுருண்டு இருந்தால் , அவள்....
சில மணித்துளி நேரங்களுக்குப் பிறகு அவள் மேல் ஏதோ கனமான பொருள் ஒன்று வந்து விழுந்திட பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்... தன் மீது விழுந்த பொருள் என்னவாக இருக்கும் என்று தேடியவளுக்கு, அவள் அருகில் கிடந்த துடைப்பக்கட்டை
' நான் தான் உன் மேல் விழுந்தேன்' என்பது போல அவளைப் பார்த்து கேலி செய்வது போல் தெரிந்தது ..
அதே நேரம் சற்று பயத்துடன் விழிகளை துடைப்பத்தின் மீது இருந்து திருப்பி கதவின் அருகில் பார்க்க அங்கே உச்சகட்ட கோபத்தில் அவளை முறைத்தவாறு நின்றிருந்தார் , பரிமளா....

அவரது கோபம் முகமே சொல்லியது இன்று அவளுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று...
'வெள்ளிக்கிழமை அதுவுமா தொடப்பக்கட்டையிலேயே அடி வாங்கி விட்டோமே 'என்று உள்ளுக்குள் கலங்கியவள் வெளியில் பயந்துடன் அவரது முகத்தை பார்த்து,
'' மன்னிச்சிடுங்க அத்தை.. அசதியில கொஞ்சம் அதிகமாகவே தூங்கிட்டேன் " என்று அவள் வார்த்தையை முழுதாக முடிக்கும் முன்பே,

"ஏண்டி உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இருக்காதா?? ..அதெப்புடி டி இன்னொருத்தவங்க வீட்டில வந்து உக்காந்துகிட்டு தண்டச் சோறு சாப்டுகிட்டு இருக்கோமேன்னு என்று கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லாமல் இப்படி சூரியன் வர்ற வரைக்கும் இழுத்து போத்திகிட்டு தூங்கிட்டு இருக்கவ‌... அப்புறம் வீட்டு வேலைகளை எல்லாம் யாரு செய்றது...அங்க முடியாம கொடக்கிறாளே உங்க அம்மா....அவளா வந்து செய்வா??.. சொல்லுடி
ஏதோ போனபோகுதுன்னு என் புருசனோட தங்கச்சி , தங்கச்சியோட புள்ளைன்னு ஓசி சோறு போட்டா.... உனக்கு ரொம்ப ஏத்தமா போச்சா?? " என்று காலையிலேயே வார்த்தைகளால் அவளை நோகடிக்க...
சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தவள்,
" மன்னிச்சிடுங்க அத்த....நேத்தெல்லாம் வேலை தேடி அலைஞ்சதுனால கொஞ்சம் டயர்டா இருந்துச்சு.. அதனால தான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல...
இதோ பத்து நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துர்றேன்.. நீங்க போய் ஹால்ல உட்காருங்க ...அத்த
நா வந்து டீ போட்டுத் தர்றேன்.." என்று பவ்வியமாக பேசிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள், பவதாரணி.....


சொன்னது போல் குளித்து முடித்து அழகான மஞ்சள் நிறத்தில் சிவப்பு வண்ண பூக்கள் பூத்திருந்த சுடிதாரை அணிந்து கொண்டு கீழே வந்தவள்
பூஜை அறையில் நுழைந்து….
சாமி படங்களுக்கு மலர்களை தூவி….ஆரத்தி காட்டியவள்….
மனமுருகிக் கடவுளை வணங்கினாள்……

பின்பு சமையலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் தேவையானதை செய்து முடித்தாள்...கூடத்தில் அமர்ந்திருந்த தன் அத்தைக்கு
டீயைக் கொடுத்தவள், கையில் வைத்திருந்த டிரேயோடு தன் தாய் இருந்த அறைக்குள் நுழைந்தாள்....
விழிகளில் வழியும் கண்ணீரோடு படுத்த படுக்கையாகக் கிடந்தார், பவதாரணியின் தாய் வைதேகி....
காலையில் தன் மகளுக்கு கிடைத்த வார்த்தைப் பரிசின் விளைவால், அவரது கண்ணில் கண்ணீர்....
பக்கவாதம் வந்ததால் நடக்க இயலாமல் படுத்த படுக்கையாக கிடந்த வைதேகி தனக்குத் தேவைப்படும் எல்லாத்துக்கும் மற்றவரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்....
கையில் இருந்த டிரேயை டேபிளில் வைத்துவிட்டு தாய்க்கு தேவையான காலை கடன்களை செய்து முடித்தவள்....
தாய்க்கு பல் துலக்கி , வாய் கொப்பளிக்க வைத்து.. அவருக்கு மெதுமெதுவாக பாலையும் புகட்டினாள்.... கண்களில் கண்ணீரோடு தன் மகளின் முகத்தை பார்த்த வைதேகிக்கு நெஞ்சம் கனத்துப் போனது... வாழ வேண்டிய வயதில் இந்த வீட்டிற்கு ஓடி உழைத்துக் கொட்டும் தன் மகளுக்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே !!!..என்று நெஞ்சில் எழுந்த வலியோடு மகளின் முகத்தை அவர் பார்த்துக் கொண்டிருக்க ,தாயின் முகத்தை வைத்தே அவரது மனநிலையை அறிந்த பவதாரணி மெதுவாக தாயின் விழிகளில் இருந்த கண்ணீரை துடைத்து விட்டாள்...

" கடவுள்னு ஒருத்தர் இருக்கார்.. ம்மா ..எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் என்னால சமாளிக்க முடியும்.‌ நீங்க எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காதீங்க.." என்றவள் அந்த அறையிலிருந்து வெளியேறினாள்....
இவ்வளவு நேரம் மனதில் இருந்த தைரியம் ஏனோ இப்போது இருந்த இடம் காணாமல் போனது..‌ படியில் ஏறிய போது....
ஒவ்வொரு படியாக ஏறி தன் அறைக்கு முன்னால் வந்து நின்றவள் அவளது அறைக்கு எதிரில் இருந்த அறையை வெறித்தவாறு நின்று விட்டாள்,
அந்த அறையில் யாரும் இல்லை. ஆனால் அந்த அறைக்குச் சொந்தக்காரன் இந்த வீட்டை விட்டு சென்று ஐந்து வருடங்கள் கடந்து இருந்தது,... காரணம் இவர்கள் இருவரும்..
தன்னால் தானே குடும்பத்தை விட்டு அவன் பிரிந்திருக்கிறான் என்று தோன்றினாலும் ஏதோ தன் தாய் மாமாவின் பேச்சை மீறி இந்த வீட்டை விட்டு செல்ல இருவருக்கும் மனம் வரவில்லை... அதனால் தான் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இருவரும் பொறுத்துக் கொள்கிறார்கள்.. அந்த அறைக்கு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தவள்,

" சைலு காபி கொண்டு வந்திருக்கேன்" என்றாள் மெல்லிய குரலில்...
உடனே...

" அங்க வச்சிட்டு வெளியே
போடி" என்ற வார்த்தைகள்
தாரணியின்‌ காதில் விழ இது எப்போதும் நடப்பதுதானே என்று நினைத்தவாறு அறையிலிருந்து வெளியேறினாள்...
ஆனால் தன்னை விட இரண்டு வயது சின்ன பெண் தன்னை மரியாதை குறைவாக பேசியதை எண்ணி சற்றே கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு தன்னிடமிருந்த ஓடிச்சென்ற தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் தேவையான சமையலை சமைக்க ஆரம்பித்தாள்.....

அது சற்றே வசதி படைத்த பெரிய வீடு தான்……
கீழே பேரிய ஹால்….வலது பக்கம் பூஜை அறை….இடது பக்கம்
சமையலறை..‌அதை ஒட்டினாற் போல்,ஒரு படுக்கையறை…..
அதை போன்று வலது புறமும் ஒரு படுக்கையறை…..வலது பக்கம், முதல் தளத்திற்கு செல்வதற்கான படிக்கட்டுகள்.‌….
வலது புற அறை….தாரணியின் அத்தை , மாமா அறை….
சமையலறைக்கு அடுத்து இருந்த அறையில் , அவளது தாய்
வைதேகி இருந்தார்…..
முதல் தளத்தில் இடது புறம் இருந்த முதல் அறை தாரணியுடையது….
அதற்கு அடுத்து ஒரு அறை உள்ளது….
அதே போன்று வலது புறமும் இரண்டு அறைகள்….உள்ளன..சமைத்து முடித்தவள் தன் தாய்க்கு தேவையான உணவை ஊட்டி விட்டு அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்து கொடுத்தவள்....
அத்தையிடம் சொல்லிக்கொண்டு இன்றும் ஒரு நேர்முகத்தேர்வுக்கு கிளம்பிவிட்டாள்....
இது வரை வாழ்க்கையில் துன்பத்தையே கண்டவளுக்கு மீண்டுமொரு எதிர்பாராத வேதனையைத் தர காத்துக்கொண்டிருந்தது விதி...!!...

ஒரு ஆட்டோ பிடித்து நேர்முகத் தேர்வுக்குத் தான் செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு முன்னால் வந்து இறங்கினாள்... எட்டுத் தளங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் அவ்வளவு பெரிய அலுவலகமாக அது இருந்தது....
பொன்னிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த அதன் பெயரை இதழ் விரித்து வாசித்தாள், ஏகே குரூப் ஆஃப் கம்பெனிஸ்..

ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் தான் வந்திருக்கும் தகவலை தெரிவித்தவள், அவர்கள் நான்காவது தளத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது என்று சொல்ல..... நான்காவது தளத்திற்கு படிக்கட்டின் வழியாக ஏறிச் சென்றாள்....
அந்த தளத்தின் உள்ளே நுழைந்தபோது கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்தார்கள்... அவர்களுள் ஒருவராய் இவளும் சென்று அமர்ந்து கொண்டாள்.....
தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவாறு சிசிடிவி கேமராவை பார்த்து கொண்டிருந்த அவனின் விழிகளில் விழுந்தாள், அவள் சட்டென்று இதழில் தோன்றிய குரூர புன்னகையோடு,
" நான் விரிச்ச வலையில கண்டிப்பா நீ மாட்டுவடி.... என்றான் அவன்.....

சிறிதளவு மகிழ்ச்சியை மட்டும் கண்ணில் காட்டி தீராத சோகத்துக்கு பெண்ணவளை தள்ளிய விதி....
மீண்டுமொரு பாதாளச் சிறைக்குள் அவளைத் தள்ளிவிட தன் ஆட்டத்தை துவங்கியிருந்தது.......பெண்ணவள்
விதியின் சதியில் சிக்குவாளா??
இல்லை மதியால் விதியை வெல்வாளா??..... கேள்விக்கான விடையுடன் அடுத்த பகுதியில்.....
 
#3
சுழலில் சிக்கிய பூந்தளிரே..2

காலை பத்து மணி அளவில் நேர்முகத்தேர்வு துவங்கியது....
தாரணியின் முறை வருவதற்குள் அவளைப் பற்றி சிறு விளக்கம்....
பவதாரணியின் சொந்த ஊர், குளித்தலை தாளுக்காவில் உள்ள லாலாபேட்டை.....
காவிரித்தாயின் கரையோரம் அமைந்துள்ள இவ்வூரானது செழுமையாக காட்சியளிக்கும்....
செல்வம் _ வைதேகி தம்பதிகளுக்குப் பிறந்த ஒற்றைப் பெண் பிள்ளை
தான் பவதாரணி....
தாய் தந்தையற்ற செல்வம் அடிக்கடி வேலை நிமித்தமாக உப்பிடமங்கலத்திற்க்குச் செல்வார்.......
அங்கே சிறிய அளவில் தேங்காய்
மட்டைகளை உரித்து நாராக மாற்றி...‌கயிறாக திரிக்கும் தொழிலை செய்து வந்தார், வைதேகியின் அண்ணன் பரமசிவம்....
இவர்களது தாய் தந்தையர் ஒரு வெடி விபத்தில் இறந்து விட,
பதினெட்டு வயதில் பதிமூன்று வயது தங்கைக்கு தாய், தந்தையாய் மாறினார், பரமசிவம்.....
வேலை நிமித்தமாக சந்தித்துக் கொண்ட செல்வமும், பரமசிவமும் நண்பர்களாக மாறினர்.......
அன்று துவங்கிய இருவரின் நட்பும் பிரிவின்றி வலுப்பெற்று வளர்ந்தது...
இருபத்தியெட்டு வயதில் பரமசிவத்தின் வளர்ச்சியைக் கண்டு, தானே வலிய வந்து தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார், பரிமளாவின் தந்தை
நாகராஜன்.....
ஊரறிய கோலாகலமாகத் திருமணம் நடந்தது....
இருபத்தி மூன்று வயது பூர்த்தியாகிய தங்கை திருமணம் செய்ய காத்திருக்க ....தமயன் திருமணம் செய்தது, ஊராரின் வாய்க்கு அவல் ஆகிப்போனது....
படித்து முடித்ததும் தமயனது அலுவலகத்திலேயே கணக்கு வழக்கை பார்ப்பது, மேற்பார்வையிடுவதுமான பணிகளை செய்து கொண்டிருந்தாள் , வைதேகி... அவ்வபோது அங்கு வந்து செல்லும் செல்வத்தின் பார்வை பெண்ணவளைத் தீண்டிச் சென்றிடும்.....அவளும் அவனை
ஓரவிழியால் ஒருமுறையேனும் கண்டு விடுவாள்........

காலையிலிருந்து மாலை வரை அண்ணனது அலுவலகத்தில் வேலை செய்பவள் , களைத்துப் போய் மாலை வீட்டிற்குச் சென்றதும், அங்கே அண்ணி என்ற பெயரில் வீட்டிற்கு வந்த மகராசி அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லி வைதேகியை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள்....
இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில் பரிமளா கருத்தரித்திருந்தாள்....
பரிமளாவின் தந்தை சற்றே செழிப்புடன் இருந்தமையால் மகாராணி போல் வாழ்ந்த பரிமளாவுக்கு இங்கே வீட்டு வேலை செய்வது சற்று முடியாத காரியம் என்பதால் அனைத்து வேலைகளையும் வைதேகியின் தலையில் கட்டிவிடுவார்.....
மசக்கை வேறு பரிமளாவைப் பாடாய் படுத்த ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து அண்ணியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார் வைதேகி.... ஏழாம் மாதம் வளைகாப்பு செய்து தன் மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார் நாகராஜன்... இதற்கிடையில் இன்னும் வைதேகிக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்று அரசல்புரசலாக ஊரார் பரமசிவத்திடம் கேட்க,

" மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் " என்பதோடு முடித்துக் கொண்டார் ...
அவருக்கும் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ஆசைதான்.. ஆனால் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் தானே திருமணம் செய்து வைக்க முடியும்... ஏனோ தன் கூடவே இருக்கும் தன் நண்பனின் நினைவு அவருக்கு வரவில்லை போல.....
பத்தாவது மாதத்தில் அழகிய ஆண் மகவை ஈன்றெடுத்தாள் பரிமளா...மேலும் மூன்று மாதங்கள் தன் மகளை வீட்டில் இருக்க வைத்துவிட்டு சற்று உடல் நலம் தேறியதற்குப்பிறகு உப்பிடமங்கலத்திற்கு அனுப்பிவைத்தார், நாகராஜன்....
வந்து ஒரு வாரம் கடந்த நிலையில்.....
பரிமளாவின் நடவடிக்கைகள் மாறத் துவங்கியது....
வீட்டுக்குள் தன் கணவன் நுழையும் போதே வைதேகியின் மேல் ஏகப்பட்ட புகார்களை தன் கணவனிடம் சொல்லத் துவங்கினாள், பரிமளா ...
" வீட்டில் ஒரு வேலை செய்வதில்லை, குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி என்னையே எல்லா வேலையும் செய்ய வைக்கிறாள்" என்று புகார் மேல் புகார் சொல்ல ...ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன பரமசிவம் கோபத்தில் வைதேகியை அடிக்க கை ஓங்கி விட்டார் ...
அதேநேரம் உள்ளே நுழைந்த செல்வத்தின் கண்ணில் அந்தக் காட்சி பட்டுவிட சட்டென்று நண்பனின் அருகில் நெருங்கி அவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி,
" சொந்த தங்கச்சியா இருந்தாலும் தோளுக்கு மேல் வளர்ந்த பொண்ண அடிக்கிறது நல்லால்ல சிவம்....எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசு " என்று சொல்ல...
அவர்களுக்கு இடையில் குறுக்கே புகுந்த பரிமளா,
" எங்க வீட்டு பொண்ண நாங்க அடிக்கிறோம், கொல்றோம், என்னமோ பண்றோம்... அத மூணாவது மனுஷனான நீங்க
வந்து தட்டிக் கேட்கணும்னு அவசியமில்லை" என்ற வார்த்தைகளை விட சட்டென்று செல்வத்திற்கு முகம் வாடிவிட்டது... நண்பனுக்காக பேசவும் முடியாமல் , மனைவியை அதட்டி பேசவும் முடியாமல் பரிதவித்த பரமசிவம் ஏதோ பேச வாய் திறக்க... சட்டென்று அந்த வார்த்தைகளை உதிர்த்து இருந்தார் செல்வம்.....

" சிவம் எனக்கு உன் தங்கச்சியை பிடிச்சிருக்கு ..நான் அவள நல்லா பாத்துக்குவேன்னு ஓ மனசுல பட்டா, எனக்கு கல்யாணம் பண்ணி குடு" என்றார்...
' இவ்வளவு நாட்கள் அருகில் இருந்தும் தன் நண்பனுக்கு தன் தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தனக்கு தோன்றவில்லை...
இவனை விடவா ஒரு நல்ல மாப்பிள்ளையை என் தங்கைக்கு நான் பாத்திட முடியும்...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பரமசிவம் தயக்கத்தோடு தங்கையின் முகம் பார்க்க அவளது முகத்தில் தெரிந்த மலர்ச்சியே அவளுக்கு விருப்பம் என்று சொல்லாமல் சொல்லிட... அடுத்துவந்த முகூர்த்தத்தில் தன்னால் ஆன நகைகளை அதிக அளவில் தங்கைக்கு போட்டு நல்லபடியாக திருமணம் முடித்து தன் நண்பன் செல்வதோடு தன் தங்கையை லாலாபேட்டை அனுப்பி வைத்தார்....
அதன்பிறகுதான் பரிமளாவுக்கு வேலை பலு அதிகமாகியது.. குழந்தையையும் கவனித்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் செய்ய ரொம்பவே சிரமப்பட்டு போனார்...
வைதேகி இருக்கும் வரை தெரியவில்லை, இல்லாதபோது அவள் இல்லாமல் போய்விட்டாலே என நொந்து கொண்டார்....
இப்படியே இரண்டு வருடங்கள் கடந்து விட இதோ பரிமளா பரமசிவம் மகனின் இரண்டாவது பிறந்த நாளினைக் கொண்டாடுவதற்காக தன் மனைவியோடு வந்திருந்தார், செல்வம்.....
அவர்களுக்குத் திருமணமாகி இரு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் வைதேகி கருத்தரிக்கவில்லை... அரசல்புரசலாக ஊரில் உள்ளவர்கள் அதைக் கேட்டாலும், அதற்கு தகுந்த பதில் அளித்த செல்வம் தன் மனைவியின் மேல் அன்பை கொட்டிக் கொட்டி அவளை மகாராணி போல் பார்த்துக்கொண்டார் ....
பிறந்தநாள் விழாவின்போது ஆசையாக தன் அண்ணன் மகனைத் தூக்க வந்த வைதேகியைத் தடுத்து நிறுத்திய பரிமளா ,
" குழந்தை பெற தகுதி இல்லாத
நீயெல்லாம் ஏ பையனை தொடாதே.." என்று வார்த்தைகளால் சாடிட....
உள்ளம் நொந்து போன வைதேகி தன் கணவனோடு அந்த நிமிடமே கிளம்பிவிட்டார்...
வீட்டிற்கு வந்தவள் தன் கணவனின் நெஞ்சில் புதைந்து அழுகையில் கரைந்திட , அவளுக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைத்தார், செல்வம்... மறுநாள் ஏதோ வேலையாக கிளம்பிக் கொண்டிருந்த செல்வம் தன் மனைவியை தேட சோர்வாக அறையிலிருந்து வெளியே வந்த வைதேகி மயங்கிச் சரிவதைக் கண்ட செல்வம்...ஓடிச் சென்று தாங்கிக்கொண்டார்... பதறியவர், அருகில் இருந்த மருத்துவமனையில் வைதேகியை சேர்த்திட மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு வைதேகி கருவுற்று இருப்பதாக சொன்னார்கள்‌...
கணவன் மனைவி இருவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்...
உடனே இந்தச் செய்தியை தாய்மாமனான பரமசிவத்துக்கு தெரிவித்திட உடனே கிளம்பிவிட்டார் , பரமசிவம் ...
தான் தாய் மாமனான சந்தோசத்தில் தங்கைக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு தங்கையின் இல்லம் வந்தவர் தங்கையை உச்சிமுகர்ந்து தான் வாங்கி வந்ததை கொடுத்து விட்டு பத்திரமாக இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றார் ...ஏழாம் மாதத்தில் தன் மனைவிக்கு தானே அனைவரையும் அழைத்து முன்நின்று வளைபூட்டு விழாவை வெகு சிறப்பாக நடத்தி முடித்திருந்தார் செல்வம்...
தாய் வீட்டு சீதனத்தை குறைவில்லாமல் செய்தார் ,
பரமசிவம்...

வேண்டாவெறுப்பாக அங்கே வந்திருந்த பரிமளா தனியாக நின்று நடப்பதை கவனித்தாரே ஒழிய தாயில்லா பெண்ணுக்குத் தாய் ஸ்தானத்திலிருந்து தான் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை..‌.
அப்போதுதான் அவர்களின் புதல்வனுக்கு மூன்று வயது நிரம்பியிருக்க.. எட்டு வைத்து வைதேகி அருகில் சென்றவனை கைகளில் ஏந்தி கன்னத்தில் இதழ் பதித்த வைதேகி ...அவனை தன் மடியில் அமர வைத்துக் கொள்ள...
அந்த பிஞ்சுக்குழந்தை தன்
பிஞ்சுகா கரங்களால் வைதேகியின் மேடிட்ட வயிற்றினை தடவி விட்டவாறே,

" பாப்பா எப்ப வரும் அத்த‌.." என்று இதழ் பிரித்து மழலைக் குரலில் வினவிட..

" சீக்கிரமே பாப்பா வந்துடுவா டா தங்கம் .." என்று வைதேகி சொன்னார்... அதன் பிறகு தன் வீட்டிற்கு தன் தங்கையை அழைத்துச் செல்கிறேன் என்று பரமசிவம் கேட்டதற்கு தன் மனைவிக்கு தானே தாயாய் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார், செல்லம் ஏனென்றால் அவருக்கு தெரியும் அங்கே சென்றால் தன் மனைவியை தான் பரிமளா கஷ்டப்படுவார் என்று அதனால்தான் அனுப்பவில்லை...
மனதில் எழுந்த வலியோடு தன் மனைவி, மகனை அழைத்துக் கொண்டு பரமசிவம் கிளம்பி விட்டார்....

நாட்கள் அதன் போக்கில் நகர பத்தாவது மாத இறுதியில் ஒரு அழகிய பெண் மகவை ஈன்றெடுத்தாள், வைதேகி.‌. தனக்கு மகள் பிறந்து விட்ட சந்தோஷத்தில் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டார் செல்வம்... அதன் பிறகு இந்த நல்ல செய்தியை பரமசிவத்துக்கு தெரிவித்துவிட தாய்மாமன் பங்கிற்காக தங்கச் சங்கிலியோடு வந்துவிட்டார் ...
மருத்துவமனையில் குழந்தையின் கழுத்தில் தங்கச் சங்கிலியை போட்டவர் ரோஜாப்பூ கலரில் இருந்த பெண் மகவை தன் கைகளில் ஏந்தி ஆசை தீரக் கொஞ்சி விட்டு கிளம்பினார்...
அவர்கள் தங்கள் மகளுக்கு பவதாரணி என்று பெயரிட்டு ஒரு இளவரசி போன்றே வளர்த்தனர்... பவதாரணி பெயருக்கு ஏற்றார் போல் இந்த தரணியை ஆளக்கூடிய இளவரசியை ஒத்த தோற்றத்தோடு வலம் வந்தாள்... சுற்றியிருக்கும் அனைவரையும் தன் பேச்சால் கவர்ந்து விடுபவள், தன் குறும்பாலும், சுட்டித் தனத்தாலும் எளிதில் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விடுவாள்....
அதே போன்று பவதாரணி பிறந்து இரு வருடங்களுக்கு பிறகு பரமசிவம் பரிமளா தம்பதிகளுக்கு ஒரு பெண் மகவு பிறந்தது .‌அதற்கு சைலஜா என்று பெயரிட்டு இருந்தனர்...


அனைவரது வாழ்வும் நன்றாக தான் சென்றுகொண்டிருந்தது.... இதோ பவதாரணி 12ஆம் வகுப்பை முடித்து விட்டாள் ...
இனி கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது தான் விடுதியில் தங்கி படித்துக் கொள்கிறேன் என்று சொன்னாள்...
ஏனோ பெற்றோர்களுக்கும் அதுவே சரியென்று தோன்றிட நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்த பவதாரணிக்கு கரூரில் மிகப்பெரிய பெண்கள் கல்லூரியில் இடம் கிடைத்து இருந்தது ...கல்லூரிக்குச் சென்ற அவளுக்கு தேவையானவற்றை செய்து முடித்துவிட்டு லாலாபேட்டை க்கு வந்தனர்...
இன்னும் ஒரு வார காலத்தில் கல்லூரியில் சென்று சேரவேண்டும் என்ற நிலையில் தான் பிறந்து வளர்ந்த ஊரினை ஒருமுறை சுற்றி வந்த பவதாரணி ஆசைதீர காவிரி ஆற்றில் குளித்து முடித்து வீட்டிற்கு வந்தாள்...
ஏனோ அன்றிரவு அனைவருக்கும் மனம் காரணமின்றி சஞ்சலப்பட்டது.... அனைவரும் உணவு உண்டு விட்டு தூங்கிவிட நடுஇரவில் விழித்த பவதாரணி எதர்ச்சியாக வீட்டிற்கு வெளியே வர அந்த நேரத்தில்தான் காவிரி தாயானவள் கொந்தளித்து கோபத்தோடு தன்னிடம் இருந்த நீரை எல்லாம் வாரி கரையோரம் இருந்த மக்களின் மீது தெளித்து கொண்டிருந்தாள்......
திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்
கரையோரம் இருந்த இவர்களது வீடும் வெள்ளத்தில் மூழ்கி ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது.... இரவெல்லாம் வெள்ளம் அதிகமாக இருந்ததால் யார் யார் எங்கே எங்கே இருக்கிறார்கள் என்பதை கூட கண்டுபிடிக்க இயலவில்லை... மறுநாள் நண்பகல் வேளையில் பவதாரணியையும், வைதேகியையுய் மீட்புக்குழுவினர் மீட்டு கரை சேர்த்தனர் ..நல்லவேளையாக இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை.....
ஆனால் செல்வத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை...

இயற்கையின் ஆர்ப்பாட்டத்தில்
நிம்மதியோடு மகிழ்ச்சியும் தண்ணீரோடு சென்று விட....
இனி பெண்ணவளின் வாழ்வு???

 
#4
சுழலில் சிக்கிய பூந்தளிரே..3

மேலும் ஒரு நாள் கழிந்து இருந்த நிலையில் செல்வத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வர பரமசிவம் சென்று அது செல்வம் தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டு வந்தார்.. தன் தங்கை மற்றும் தங்கை மகளிடம் எவ்வாறு இந்த உண்மையை சொல்வது என்று தயங்கியவாறு அவர் வீட்டிற்குள் நுழைய ஏற்கனவே அருகிலிருந்த வீட்டில் இருந்து அலைபேசி வாயிலாக அந்த செய்தி இங்கே வந்தடைந்திருந்தது...
தன் கணவன் இறந்த செய்தி கேட்டு அந்த நிமிடத்திலேயே வைதேகிக்கு பக்கவாதம் கண்டுவிட்டது ...
அவர் படுத்த படுக்கையாகி விட்டார்.......
தந்தை இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளவே தாரணியால் முடியவில்லை.. மனம் கனத்துப் போனது, எதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல் சுயநினைவு அற்றவளாய் எங்கயோ வெறித்த பார்வை பார்த்தவாறு அமர்ந்து விட்டாள் ‌...
பக்கவாதத்தில் படுத்துவிட்ட தங்கையைக் கவனிப்பதா இல்லை துக்கத்தில் துவண்டுபோய் அமர்ந்திருக்கும் தங்கை மகளை கவனிப்பதா என தெரியாமல் பரமசிவம் துவண்டு போனார்....
இப்படி துவண்டுபோய் இருக்கும் பெண்ணை விடுதியில் சேர்த்து கல்லூரியில் படிக்க வைக்க பரமசிவத்திற்கு மனது வரவில்லை...தன்
வீட்டிலிருந்தே தாரணி கல்லூரிக்குச் சென்று வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்....
அப்போது பரமசிவத்தின் மகன் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.....
அவரது மகள் பதினொன்றாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்தாள்......

ஏதோ விருந்தாளியாக இரண்டு நாட்கள் இருப்பதுக்கும் காலம் முழுவதும் அங்கேயே இருப்பதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது என்று தாரணிக்கும் அவளது தாய்க்கும் தெரியும் ..இருந்தாலும் பரமசிவத்தின் பேச்சை தட்ட முடியாது, அவர்கள் அங்கேயே தங்கிக் கொள்ள ஆரம்பித்தனர்....
வயசுப்பெண் இருக்கும் வீட்டில் தன் பையன் இருந்தால் வெளியில் இருப்பவர்கள் தவறாக பேசக் கூடும் என்று நினைத்த பரமசிவம் தன் மகனை விடுதியில் தங்கி படித்துக் கொள்ள சொன்னார்.... பரிமளாவின் வளர்ப்பில் வளர்ந்த அவனுக்கு தன் அத்தையும் அவர் மகளும் இங்கு இருப்பதில் துளிகூட விருப்பம் இல்லை...
என்னால் போக முடியாது என்று அவன் பிரச்சனை செய்ய கோவத்தில் தன் மகனை அடித்து விட்டார்‌, பரமசிவம்.....
பிறந்ததிலிருந்தே தன்னை எவரும் அடிக்காமல் அந்த வீட்டில் இளவரசனாக வளர்ந்தவனை யாரோ ஒருத்திக்காக தன் தந்தை தன்னை அடித்த கோபத்தில்,
"" இனிமே இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன்"" என்று சொல்லி சென்றுவிட்டான்.. இதோ ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது, இளங்கலை, முதுகலை படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல நினைக்கிறாள் தாரணி ...
இதற்கு இடையில் கல்லூரி செல்லும் ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு தன் தாயையும் கவனித்து விட்டு தான் செல்வாள்....
தன் அத்தை என்னதான் கடுஞ் சொற்கள் சொன்னாலும் மாமாவிற்காக பொறுத்துக் கொள்வாள் தாரணி......

இன்று.....

ஒவ்வொருவராக நேர்முகத்தேர்விற்கு அந்த அக்றையினுள் செல்வதும் பிறகு சிறிது நேரத்திலேயே சோர்ந்துபோன முகத்தோடு வெளியே வருவதுமாக இருந்தனர்....நேரம் பதினொன்றை கடந்ததற்குப் பிறகு தாரணியின் பெயர் அழைக்கப்பட்டது, எழுந்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் கையில் இருந்த
கோப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அந்த அறையின் அருகில் சென்றவள்... கதவை இருமுறை தட்டினாள்...

" உள்ளே வாங்க"" என்ற அனுமதிக் குரல் வந்ததுக்கு பின்பு உள்ளே நுழைந்தாள்.....
அந்த அறையின் உள்ளே நுழைந்த அவளின் கண்களில் முதலில் பட்டது, இருக்கையில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பெண்ணவளை கண்களால் எடை போட்டு அமர்ந்திருந்த அவன் தான்..
மஞ்சள் நிறச் சுடிதாரில் இடுப்பிற்கு கீழ் இருந்த கருங்கூந்தலை பின்னலிட்டு இருந்த பெண்ணவள்....அதை முன்னால் போட்டிருக்க...
மை தீட்டப்படாத அகன்ற பெரிய கண்களில் சற்றே கலக்கத்தோடு அவன் முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவள் , தன் கோப்பை அவன் முன்னால் நீட்டினாள்... அவள் நீட்டிய சோப்பை வாங்கி சரி பார்த்து கொண்டவன், சில பல கேள்விகளை கேட்க ஒவ்வொரு கேள்விக்கும் அசராமல் பதில் அளித்தால் பெண்ணவள்......
அவளது பதிலில் இவன்தான் ஆடிப்போய் விட்டான்...
பின்பு ஒரு சில நிமிடங்கள் அவளை வெளியே காத்திருக்கச் சொன்னவன், அவளுக்கு பணியில் சேர்வதற்கான
பணி நியமன ஆணையுடன் இன்னும் சில தகவல்களை சேர்த்து அச்சிட்ட தாளைக் கொண்டு வரச்சொன்ன் ....
அதே போன்று, கொண்டு வந்ததும் அவளை உள்ளே அழைத்தவன் அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் சொன்னான்‌...அவளும் படித்து பார்த்து விட்டு கையெழுத்து போட்டாள்.....அங்கேயே நின்றிருந்த ஜிஎம்மை வெளியில் அனுப்பியதற்கு பிறகு நிறுத்தி நிதானமாக தன் முன்னால் அமர்ந்திருந்த அவளை ஒருவித குரூரத்தோடு பார்த்தவன் தன் முன்னால் இருந்த தன்னுடைய நேம் போர்டைத் திருப்பி அவள் பார்க்குமாறு வைத்தான்,
ஆதித்ய குமார்...என்ற பெயர் பலகையை படித்த பவதாரணி அதிர்ச்சியுடன் எதிரில் இருந்தவனின் முகத்தை பார்க்க அவனோ இதழில் ஏளன புன்னகையோடு,
" என்னோட கம்பெனிக்கு உன்ன வெல்கம் பண்றேன் , மிஸ்.பவதாரணி செல்வம்..."

""அத்..தான்.... அத்தான் இது உங்க கம்பெனியா??? "" என்ற பவதாரணி அதிர்ச்சியோடு கேட்க இருக்கையிலிருந்து எழுந்தவனின் முகத்தில் இருந்த புன்னகை நொடியில் காணாமல் போயிருந்தது....
"" இந்த கம்பெனி என்னோடது தான்... அதே மாதிரி இப்ப நீ அப்பாயின்ட் ஆய்ருக்கிற பிஏ போஸ்ட்டிங்‌‌..அதுவும் எனக்குதான்..இந்த நிமிஷத்துல இருந்து நீ என்னுடைய பிஏ....‌......இட்ஸ் கிளியர்...அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இந்த வேலை பிடிக்கலைன்னா உன்னால உடனே போக முடியாது.. அதை எல்லாத்தையும் தெளிவா நீ படிச்சு பார்த்து தான் கையெழுத்து போட்டு இருக்க... அதனால உன்னால இப்பவே இந்த வேலையை விட்டு போக முடியாது.. அட்லீஸ்ட் ஆறு மாசமாவது நீ இங்க வேலை செஞ்சுதான் ஆகணும்....நாளைக்கு காலைல இருந்து நீ டியூட்டில ஜாயின் பண்ணிக்கலாம் இப்ப நீ போகலாம், மிஸ் பவதாரணி""" என்றான் அழுத்தமாக....

இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமலேயே அவன் அலுவலகத்தில் இருந்து வெளியேறினால் , பவதாரணி....
அவள் சென்றதும் தன் இருக்கையில் கண் மூடி சாய்ந்திருந்தவனின் அருகில் வந்து நின்றான், ஒருவன்...
ஆள் அரவம் உணர்ந்து விழித்திருந்த பார்த்த ஆதித்யா எதிரில் தன்னை முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து புன்னகைத்தவன்,
"" வாடா நல்லவரே!!... இவ்வளவு நேரம் நடந்த அத்தனையும் பாத்திட்டு இருந்திருப்ப... இப்ப என்ன என்னை திட்றதுக்கு வந்தியா!!"" என்று கேட்டான்..

"" நீ பன்றது ரொம்ப தப்பு டா...
என்ன தான் இருந்தாலும் அந்த பொண்ணு ஒ அத்தப் பொண்ணு தானே... எதுக்கு தேவையில்லாம அந்த புள்ளை மேல இவ்வளவு வன்மம்... பாவண்டா அந்த பொண்ணு பாக்க ரொம்ப இன்னசென்ட்டா தெரியுது.. நீ ஏதாவது எக்குத்தப்பா பண்ணி அந்த பொண்ணோட வாழ்க்கையே ஸ்பாயில் ஆயிட்டா என்னடா பண்றது.."""


"" ப்ப்ச்ச்...எப்ப பாத்தாலும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசாத வினோத் ..எனக்கு கோவம் கோவமா வருது ..அவளால தாண்டா நான் எங்க வீட்டை விட்டு வெளியே வந்தேன்...எங்க அப்பா மொத மொதல்லா என்ன அடிச்சாரு.. இன்ன வரைக்கும் எங்க அப்பா அம்மா தங்கச்சிய பிரிஞ்சிருக்கேன்.. அதுக்கெல்லாம் காரணம் இவ தானே!!.. இவளும் இவளோட அம்மாவும் எங்க வீட்டுக்கு வராம இருந்திருந்தா எங்களுக்குள்ள பிரச்சினையே வந்திருக்காது டா....நானும் வீட்ட விட்டு வந்திருக்க மாட்டேன்..""""" ஏண்டா அப்பா அம்மா தங்கச்சி இருக்க நீயே இப்படி நினைக்கிறியே!!.. அப்பா அம்மா மட்டும் தான் அந்த பொண்ணுக்கு இருந்தாங்க... அப்பா இறந்துட்டாரு, தன்னந் தனியா நின்னவங்களை எப்படி உங்க அப்பா தனியா விட முடியும், சொல்லு பாக்கலாம்... என்ன தான் இருந்தாலும் சொந்த தங்கச்சியாச்சே டா...நாளைக்கு ஓ தங்கச்சிக்கு இந்த நெலம வந்தா இப்புடி தான் நடு ரோட்ல விட்டுட்டு வருவியா??..மாட்ட தானே...உனக்கு உன் தங்கச்சி பெருசுனா... உங்க அப்பாவுக்கு அவரோட தங்கச்சி பெருசுடா....
அதனாலதான வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.. அதே மாதிரி அவர் சொல்றது நியாயம் தானே .ஒரு வயசு பையன் இருக்க வீட்டுல முறைப் பொண்ண கொண்டு வந்து தங்க வைக்க மாட்டாங்க.. ஊர்ல இருக்கிறவங்க நாலுபேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க..அதை மனசுல வச்சுக்கிட்டு தான் கொஞ்ச நாள் வெளியே தங்கி படிக்க சொன்னாரு, வேற எதுவும் சொல்லலையே ..
அதுக்கு ஏன்டா நீ ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்ண....""""" ப்ப்ச்ச் ..தெரிஞ்சு பேசுறியா தெரியாமல் பேசுறியான்னு தெரியல வினோத்.. அது என் வீடு என் குடும்பம் மத்தவங்களுக்காக அத விட்டுட்டு நான் வெளியே வரணும்னு அவசியம் கிடையாது.. அவளுக்காக எப்படி அப்ப என்ன போய் வெளியே தங்கி படிக்க சொல்லலாம்.. எதா இருந்தாலும் நான்தான் முடிவு பண்ணுவேன். அதே அவளுக்காக வேற யாரும் ஏ வாழ்க்கையில முடிவெடுக்குறது எனக்கு பிடிக்காது.. அதனால் தான் நானே டிசைட் பண்ணி வீட்டை விட்டு வெளியே வந்தேன்...."""

"" சரிடா உன் வாழ்கைல நீ தான் எல்லாத்தையும் டிசைட் பண்ணுவ ஒத்துக்குறேன்.. இப்ப அந்த பொண்ணுனால தானே நீ வீட்டை விட்டு வெளியே வந்து நல்லா படிச்சு ...ஓன் பிசினஸ் ஆரம்பிச்ச....இப்ப நல்ல நெலமைல இருக்குற ..
அப்புடி பாத்தா அந்த பொண்ணுக்கு தான் நீ தேங்க்ஸ் சொல்லணும்‌. எதுக்கு அந்த பொண்ண பழி வாங்க நினைக்கிற...."""

"" புத்தர் மாதிரி எனக்கு உபதேசம் பண்ணாத வினோத் ..வேறு எந்த விஷயத்துலயும் நீ சொல்றத நா கேட்பேன்...ஆனா இதுல கேக்க முடியாது... நா முடிவெடுத்தது முடிவெடுத்தது தான்.. இதுக்கு மேல அவ படுற கஷ்டத்தைப் பார்த்து கண்டிப்பா நான் சந்தோசப்படத்தான் போறேன்.‌"""என்றவன் தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேற... ஒரு பெண்ணின் மீது இந்தளவுக்கு வன்மத்தை வாரி இறைத்து விட்டு செல்பவனை நினைத்து வினோத்திற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது... அதே நேரம் தாரணியை நினைத்துப் பாவமாகவும் இருந்தது......
 
#5
சுழலில் சிக்கிய பூந்தளிரே...4

நேர்முகத் தேர்வை முடித்தோடு மட்டுமன்று கையில் வேலையோடு வீட்டிற்கு கிளம்பினால் பவதாரணி....
ஐந்து வருடத்திற்கு முன்பு அவள் கண்ட ஆதிக்கும் இப்போது இருக்கும் ஆதிக்கும் மலையளவு வித்தியாசத்தை உணர்ந்தாள்...
இருந்தும் வருடங்கள் கடந்து , அவனைக் கண்களால் கண்டதிலேயே
பெண்ணவளுக்கு உள்ளம் நிறைந்து போனது......
அவனை அறிந்து கொண்டதில் அவள் தன்னிலை மறந்திருக்க,
ஆடவனவன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த ஏதோ ஒன்று அவளின் மனதில் பயத்தை விதைத்தது.......
அந்த பயம் எதனால் என்பதை பெண்ணவள் உணர்ந்திருந்தால், எதிர்வரும் வினைகளை தடுத்திருக்கலாம்....


தவறென்று தெரிந்தும்
தயக்கமின்றி
தாரகையவளை
தண்டித்திட துணியும்
ஆண்மகனின்...
பிடியில்....
தவறேதும்
இழைத்திடாத
அன்றில்
மலர்மேனியாள்
தன் வாழ்வை
இழப்பாளா????
இல்லை....
மனதில்
நிறைந்திருப்பவனின்
வாழ்வில் அன்பை
நிறைப்பாளா???..

இனிமேல் மீண்டும் அலுவலகத்திற்கு தினமும் வரவேண்டும் என்ற காரணத்தினால் ஆட்டோவை விடுத்து பஸ்ஸில் செல்வதற்கு முடிவெடுத்து அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் நின்று இருந்தால், தாரணி...
தன் கையில் கட்டப்பட்டிருந்த கை கடிகாரத்தை பார்க்க அதுவோ மணி மூன்று என்று காட்டியது... இந்த வேளையில் பேருந்து இருக்குமா ?? என்ற யோசனையோடு அவள் நின்றிருக்க, அவளை உரசினார் போல் வந்து நின்றது ஒரு ஆட்டோ...யோசனையில் நின்று இருந்தவளின் முன்பு ஆட்டோ ஒன்று வந்து நிற்கவும் சற்று பயந்தவளாய் நிமிர்ந்து பார்த்த தாரணி...இதழ் விரித்து கேள்வி கேட்கும் முன்பே ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி வந்தான்...அவன்

"" அட வேணுங்களா!!!.. எங்க போகனும்னு சொல்லுங்க... கொண்டு போய் விடுறேன் !!""என்று அவன் கேட்க.... தாரணியோ ஆட்டோ வேண்டாம் என்று தலையசைத்து,.

"" நான் போய்க்கிறேன் எனக்கு ஆட்டோ வேணாங்க.."" என்றாள்

"" என்னங்க... வேலை முடிஞ்சு யாரும் வரல போல.. நீங்க மட்டும்தான் ஒண்டியா நின்னுகிட்டு இருக்கீங்க...பஸ் வர்றதுக்கு எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும் ...நீங்க எங்க போகனும்னு சொன்னா நாங்கொண்டு போய் விடுறேனுங்க"'' என்று பேசிக்கொண்டே செல்ல... தாரணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..

"" அதான் நானே போய்கிறேன்னு சொல்றேன்ல.. எதுக்கு தேவையில்லாம என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.. போங்க ஆட்டோ தேவைப்படுறவங்களுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க.. தேவையில்லாதவங்ககிட்ட பேசி அவங்க உங்களோட ஆட்டோவுல வரணும்னு வற்புறுத்தாதீங்க..."'" என்று சற்று எரிச்சலுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிரில் நின்றவனின் பார்வை நாலாபுறமும் சுழல ஆரம்பித்தது.....

மூணு மணி என்பதால் அலுவலகம் முடிந்து எவரும் வெளிவரவில்லை.. அதே போன்று அருகில் இருக்கும் பள்ளியில் இருந்தும் எவரும் வெளிவரவில்லை.. சொல்லப்போனால் சற்று ஆள் அரவமின்றி தான் காணப்பட்டது, அந்த இடம் ..மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் கையை பிடிக்கச் சென்றான் , அவன்... எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் காலில் கிடந்த காலனியைக் கழட்டி அவனது கன்னத்தில் அடித்து இருந்தால், தாரணி....


""" ச்சீ....பொறுக்கி...கொன்னுடுவேன் ஞாபகம் வச்சுக்கோ.. பேசிட்டு இருக்கும்போதே எதுக்குடா எங்கையோ புடிக்க வர்றே... மத்த பொண்ணுங்க மாதிரி என்னயும் நினைச்சிட்டியா??....தொட்டு பேசற வேள வச்சுக்கிட்ட கொன்னுடுவேன் பாத்துக்க... ஆளயும் மூஞ்சியும் பாரு.. பொறுக்கி""" என்றவள் மீண்டும் அவனது செயலுக்கு கண்ணத்தில் தன் கையாலும் ஒரு பரிசை கொடுத்து விட்டு சற்று தள்ளி நின்றிருக்க அதே நேரம் அவள் வீட்டிற்கு செல்வதற்கான பேருந்து வந்தது....
அவனது முகத்தை திரும்பியும் பாராமல் தாரணி பேருந்தில் ஏறியதும் பேருந்து கிளம்பியது... செல்லும் அவளையே அடிவாங்கிய கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நின்ற நிலையில் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான், அவன்...
அவனது தோள்பட்டையில் ஒரு சில நிமிடங்களில் ஏதோ கரம் பதிய பின்னால் திரும்பிப் பார்க்க அவனை பார்த்து புன்னகைத்தவாறு , நின்றிருந்தான், மற்றொருவன்....

"" என்ன மாப்பிள இன்னைக்கு மொத மொத ஒரு பொண்ணுகிட்ட செருப்பால அடி வாங்கியிருக்க...என்ன சங்கதி""'


""" ப்ப்ச்ச் இன்னா மச்சான் பண்றது.... பொண்ணு பாக்க அழகா இருந்தா....ஏதோ பேசனும்னு தோனுச்சு அதான் பேசிப் பாத்தேன்... நோ ரெஸ்பான்ஸ்...அவ கைல ஏதோ பூச்சி ஊருச்சு டா...அத தட்டி விடத்தான் அவ கைய புடிக்கப் போனேன்...ஆனா அவ என்ன தப்பா நெனச்சு செருப்பால அடிச்சிட்டா.... பாத்துக்கலாம் விடு டா,இன்னைக்கு தப்பிச்சுட்டா , இன்னொரு நாளு மாட்டாமலா போயிருவா....!!..அன்னைக்கு வட்டியும் முதலுமா திருப்பி தந்தர்றேன்.."" என்று தன் கன்னத்தை தடவியவாறே சொன்னவனை பார்த்து அருகில் நின்றவனுக்கு பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது....


""டேய் குமாரு ஏதோ அந்த பொண்ணு தெரியாம அடிச்சுடுச்சு... அதுக்காக நீ உன் வேலையை காட்டிடாத...
இப்ப தான் ஜெயிலுக்கு போகாம வெளியே வந்து நிம்மதியா இருக்கோம்...... மறுபடியும் ஏதாவது பண்ணி உள்ள போயிடாத...நீ இல்லாதப்ப இங்க இருக்க பயலுகளுக்கு எல்லாம் துளிர் விட்டுப்போய்டுச்சு... அவங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு வசூல் பண்ணிக்கிட்டு அலையறாங்க ..மறுபடியும் நீ உள்ள போய்ட்டா அவங்க கொடிதான் இங்க பறக்கும்.. நான் சொல்றது உனக்கு புரியுதா.!!! இல்லையா....!!'""

""" இங்க பாரு திலீப் நீ சொல்றது எனக்கு நல்லா புரியுது... இதுவரைக்கும் நான் எந்த பொண்ணு கிட்டயாவது பேசி நீ பாத்திருக்கியா??""


'" இல்லையே ....நீ இதுக்கு முன்னாடி ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு அலஞ்ச போதும் சரி, கட்ட பஞ்சாயத்து பண்ணும் போதும் சரி பொண்ணுங்கள கண்டாவே ரெண்டு அடி தள்ளி நின்னு தான் பேசுவ... அப்படி இருந்தவன் , இன்னைக்கு ஒரு பொண்ணு கிட்ட பேசுறத பாத்ததும் எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு ..அதான் தள்ளி நின்னு பாத்துக்கிட்டு இருந்தேன்... ஆமா !!!..நீ ஏ அந்த பொண்ணு கிட்ட போயி பேசுன.."""

""" அது வேற ஒன்னும் இல்ல டா.. இந்த பொண்ண இதுக்கு முன்னாடி நான் ஏற்கனவே பாத்துக்குறேன் ....இவள ஏ வாழ்க்கையில மறக்கவே முடியாது...இவள மறுபடியும் நா பாப்பேன்னு நெனச்சு கூட பாத்ததில்ல....."""

"" இதுக்கு முன்னாடி இந்த பொண்ண இந்த ஊருல நா பாத்தது இல்ல மச்சான்....ஒருவேளை இந்த புள்ள ஊருக்கு புதுசோ!! என்னவோ!!.."""

"" ம்ம்ம்....நீ சொல்றதும் சரிதான்....இவ வேற ஊருன்னு நெனைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா இப்ப பாத்தா இங்க தா சுத்திக்கிட்டே இருக்குது....இந்த விஷியம் எனக்கு தெரியாம போயிடுச்சு.... நமக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனுன், செட்டிலாகனும்னு எண்ணம் வருதுடா......
ம்ம்... வயசு வேற ஏறிக்கிட்டே போகுது.. இப்பவே இருபத்தி அஞ்சு ஆச்சு ...நமக்கு என்ன அப்பன், ஆத்தாவா இருக்காங்க பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுறதுக்கு... நம்மளே பாத்து கட்டிக்க வேண்டியதுதான்.. இந்த பொண்ண கட்டினா நல்லா இருக்கும்னு தோணுச்சு..‌..
அதனாலதான் பேச்சுக் கொடுத்து எந்த ஏரியான்னு விசாரிக்கலான்னு நெனச்சேன்...‌ம்ஹீம் ஒன்னுத்தையும் கண்டுபிடிக்க முடியல...முன்னபின்ன பொண்ணுங்க கிட்ட பேசி பழகிருந்தா .... அவங்கிட்ட தள்ளி நின்னு பேசணும் ..அவுங்க அனுமதி இல்லாம கைய தொடக்கூடாதுன்னு தெரிஞ்சுருக்கும்....நமக்குத்தான் அந்த பழக்கமே இல்லையே!!!.. கைய புடிக்கப் போனதுக்கே பட்டுனு அடிச்சுட்டா... ம்ம். பரவாயில்லை விடுடா ..விடுடா.. என்ன இருந்தாலும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு மருமகளாக வரப்போறப் பொண்ணு..அவ தானே அடிச்சுட்டு போறா!!!.. விடு பாத்துக்கலாம்..""" என்று ரசனையோடு பேசிக் கொண்டிருந்தவனை விழிகள் விரித்து ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தான் திலீப்....

""" பார்ரா நீ இப்படி எல்லாம் கூட பேசுவியா!!!.. ஆச்சரியமா
இருக்கே"""


""" அது என்னமோ அந்த பொண்ண பார்த்தா மட்டும் அப்படி தோணுது டா... ..சரி விடு பார்ப்போம் ..இனிமே இந்த ஏரியாவில நானே ஆட்டோ ஓட்டுறேன் ...எனக்கு பதிலா எவனையாவது இந்த ரூட்டுல இருந்து வேற ரூட்டுக்கு மாத்தி விடு..."" என்றவாறு தன் ஆட்டோவில் ஏறி சிட்டாக பறந்து விட்டான் குமார் என்ற அக்ஷய குமார்......

அக்ஷய் குமார் இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போது அவனது பெற்றோரிடமிருந்து கயவர்களால் கடத்தி வரப்பட்டு சென்னையில் அனாதையாக விடப்பட்ட குழந்தை...
குழந்தையாக இருந்த அவனை திருட்டுத் தொழில் புரிபவர்கள் எடுத்து வளர்த்திட அவர்களின் தொழிலையே தன் தொழிலாக மாற்றிக் கொண்டான்... ஆரம்பத்தில் பிட்பாக்கெட் திருடுதல் மற்றவர்களிடமிருந்து செயினை வழிப்பறி செய்தல் போன்ற சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவன்...
தன் 15வது வயதில் தன்னை அடிக்க வந்த ஒரு பெரியவரின் கையை உடைத்து விட்டு முதன்முதலாக சிறைவாசம் கண்டான்.... சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அவளை சேர்த்திட அங்கிருந்து கொண்டு படிக்கும் பிள்ளைகளை கண்டு ஏனோ அவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் திரும்பியது... உள்ளே இருக்கும் வரை தன்னால் முயன்றவரை படிக்க ஆரம்பித்தான்... அதன் பிறகு
வெளியே வந்தவன் எங்கே சென்றான் என்று எவருக்கும் தெரியவில்லை...

-தன்னுடைய 22 வதுவயதில் மீண்டும் சென்னைக்கு நுழைந்திட..... அவனை வளர்த்தவர்கள் மீண்டும் அந்த புதை குழிக்குள் அவனை தள்ள நினைத்தனர்... வேறு வழி இல்லாமல் திருடுவதை மட்டும் விட்டுவிட்டு கட்ட பஞ்சாயத்துக்கு மட்டும் செல்வான்.. அவனது 24வது வயதில் யாரையோக் காப்பாற்ற மீண்டும் அவன் அடித்ததில் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டது....அதன் பிறகு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது அவனுக்கு... அதன் பிறகு தன் சொந்த உழைப்பால் ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி இதோ இன்றுவரை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான்‌.. அவன் அடிதடியை மறந்து நல்ல மனிதனாக வாழ நினைத்தாலும் முன்பு அவன் செய்த தொழிலை நினைத்து அவனை காண்பவர்கள் பயந்து நடுங்கி ஒடுங்கத் துவங்கினர்....

எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் அவனது மனதிலும் அன்பு காதல் எனும் உணர்வுகள் முளைப்பது இயல்புதானே !!.. இதோ இன்று அது தாரணியின் தயவால் அக்ஷ்ய் குமாரின் மனதிலும் விதையாய் தூவப்பட்டுவிட்டது... அது வளர்ந்து மரமாகி பூ வைத்து மணம் பரப்பி டுமா???... இல்லை முளையிலேயே கருகிப்போய்விடுமா ???..
காலத்தின் கையில் பதில்....