Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சுசீந்தரம் தல வரலாறு - நித்யா காசி | SudhaRaviNovels

சுசீந்தரம் தல வரலாறு - நித்யா காசி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
சுசீந்திரம் தல வரலாறு....

79_big.jpg


இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே முன்னொரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இது அடர்ந்த வனம் நிறைந்த பகுதியாக இருந்தது . இந்த வனத்தில் ஒரு பகுதியில், ஆஸ்ரமம் அமைத்து அத்திரி மகரிஷி தன்னுடைய தர்மபத்தினியான, அனுசூயாதேவி உடன் வாழ்ந்து வந்தார்.

அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணிய சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, ஆகிய மும்மூர்த்திகளும் அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில், துறவிகள் போல் வேடமணிந்து ஆசிரமத்திற்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சைக் கேட்டனர். உடனே அனுசூயா தேவி தன் கணவனின் பாத தீர்த்த சக்தியினால், அறுசுவை உணவுகளை தயாரித்தாள், துறவிகளை, ஆசனம் அமைத்து அமரச்செய்தாள். விருந்து பரிமாற வந்தபோது, துறவிகள் மூவரும் எழுந்து விட்டனர். நான் என்ன தவறு செய்துவிட்டேன், என்று தேவியானவள் அழுதுகொண்டே கேட்டாள். அதற்கு, துறவிகள் மழை இல்லாத காரணத்தினால் ஒரு மண்டலம் உணவு இல்லாமல் வருந்திய நாங்கள் உணவு உண்ண வேண்டுமென்றால், அதற்கு ஒரு நோன்பு உண்டு அந்த நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக் கூடாது என்றனர். மேலும் நீங்கள் பிறந்த மேனியுடன் அன்னம் பரிமாறினால் உணவை உண்ணுவோம் என்றதும், திடுக்கிட்ட அனுசூயாதேவி, கணவனே கண்கண்ட கடவுள் என்றும், கற்பினை நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையை முனிவர் கூறியவாறே அமுது படைப்பேன். என்று நினைத்துக் கொண்டு தன் கணவர் காலை கழுவி வைத்திருந்த தீர்த்தத்தை கையிலெடுத்து கணவனை மனதில் தியானித்துக் கொண்டு, இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவார் என்று கூறி அத்துறவிகளின் தலையில் தெளித்தார். ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில் செய்யும் மும்மூர்த்திகளும் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் ஆனார்கள்.


பின்பு தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து உணவு ஊட்டினாள் அனுசூயாதேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதை கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும், ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறும், இவர்களை மன்னித்து சுய உருவை அடைய வைக்குமாறும், அனுசூயாதேவியிடம் வேண்டிக்கொள்ள , அனுசூயா தேவியானவள் மூன்று குழந்தைகளுக்கும் சுய உருவை அளித்தாள் . அப்போது திரும்பி வந்த அத்திரி மகரிஷி அனுசூயா தேவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளின் காட்சியை பெற்றார். மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த இடம் இத்தலத்திலுள்ள கொன்றை மரத்தடியில் ஆகும். பின்பு மும்மூர்த்திகளும் சிவன் (தாணு) விஷ்ணு(மால்) பிரம்மா (அயன்) என்ற பெயரில் இங்கு எழுந்தருளினார்கள்.

அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்திற்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலம் இதுவே. இந்திரன் இங்கு வந்து விமோசனம் பெற்றதால் கோரம் ஆகிய உடல் தூய்மையாகவும், அழகாகவும் மாறினான். 'சுசி' என்றால் தூய்மை என்று பொருள். இவ்விடம் சுசீந்திரம், சுசி+ இந்திரன் = சுசீந்திரம். என்பது மருவி, சுசீந்திரம் என்று அழைக்கப்படுகிறது. தாணுமாலயன் கோயில், 5400 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள கோபுரம் நூற்றி முப்பத்தி நாலரை அடி உயரம் கொண்டது. ராஜ கோபுரம் ஏழு நிலைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது . கோபுரத்தை முதலில் வணங்கி விட்டு உள்ளே சென்றால் 12 அடி உயரம் உள்ள நந்தியின் சிலையைக் காணலாம். கைலாசநாதர், அய்யனார், சிதம்பரேஸ்வரர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். அலங்கார மண்டபத்தில் உள்ள தூணில் பெண் வடிவ விநாயகர் வீற்றிருக்கிறார். நீலகண்ட விநாயகர் முன்பு உள்ள வசந்த மண்டபத்தின் கூரையில் 12 ராசிகளும், நவ கிரகங்களும் உள்ளன. வசந்த மண்டபத்தின் ஒரு தூணில், காலபைரவர் சிற்பம் உள்ளது. வடக்கு பகுதியில் ராமர் சன்னதி உள்ளது. இதில் ராமரும் சீதையும் வீற்றிருக்கின்றனர். வாயிலில் லக்ஷ்மணரும் ஆஞ்சநேயரும் நிற்கின்றனர். இந்தப் பிரகாரத்தில் சங்கீத தூண்கள் உள்ளது. இதில் உள்ள தூண்களை ஒவ்வொன்றாக தட்டினால் இதிலிருந்து,( sa, re, ga, ma ,pa ,da ,ni ) ச,ரி,க,ம,ப,த,நி. என்ற ஓசை எழும்பும். இதன் அருகில் சுப்பிரமணியன், கால பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.



தாணுமாலயன் சுவாமியின் கருவறையில், அர்த்த ஜாம பூஜைக்கான பூஜை பொருட்களை வைத்துவிடுவார்கள், மாலை நேர பூஜை செய்த அர்ச்சகர் மறுநாள் காலை பூஜை செய்ய வரக் கூடாது. என்னும் நியதி இங்கு உள்ளது. அர்த்த ஜாமத்தில் இந்திரனும் மற்ற தேவர்களும் இங்கு வந்து ஒவ்வொரு நாளும் தாணுமாலயனுக்கு பூஜை செய்வார்கள் முன்தினம் வைத்து பூஜை பொருள்கள் அனைத்தும் மாறுதல் அடைந்து இருக்கும். 'அகம் கண்டதை புறம் கூறேன்' என்று சத்தியம் செய்து கொண்டுதான் கோயிலின் வாசலை திறப்பார்கள். தாணுமாலய சுவாமியின், லிங்க வடிவில் கட்டப்பட்டுள்ள தங்க கவசத்தில், சுவாமியின் திருமுகம் அதன் மேல்புறம் 14 சந்திர பிறைகளும், அதன்மேல் ஆதிசேஷனும் காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு தென்புறம் விஷ்ணு சன்னதியும் ,செண்பகராமன் மண்டபமும் உள்ளன. இங்குள்ள 32 தூண்களிலும் கண்ணை கவரும் அழகு சிற்பங்களை காணலாம். விஷ்ணு சன்னதியில் எம்பெருமான் 8 அடி உயரத்தில் நின்றவாறு காட்சியளிக்கிறார். கருவறைக்குப் பின்னால் உள்ள பிரகாரத்தில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார் . அருகில் மூடு விநாயகர், துர்க்கை அம்மன் சங்கரநாராயணர் , சண்டிகேஸ்வரர், நடராஜர் சன்னதிகள் உள்ளன. இங்கு செப்பு சிலை வடிவாக அம்மன் காட்சி தருகிறாள் .



மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது கண்டெடுத்த அனுமன் சிலை 18 அடி உயரம் உடையது. வெற்றிலை, வட மாலை, வெண்ணெய் சாத்தி இவரை வேண்டி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு, நாகர்கோவில் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ளது நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் அமைந்துள்ளது .

-நித்யாகாசி.