சினிமா செய்திகள்

#41
பேட்ட'தான் என்னுடைய நிஜமான கம்பேக்: சிம்ரன் பேட்டி
பேட்ட' படத்தில் உங்களின் லுக் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. உங்கள் இளமைக்கான ரகசியம் என்ன?
ஃபிட்டாக இருப்பதுதான் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய பரிசு. டயட், யோகா, ஃபிட்னஸ் மூலம் இப்படி இருக்கிறேன். ரஜினி சாருடன் பணியாற்றியதும் இதற்கான காரணமாக இருக்கலாம். சிரிக்கிறார்...
திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருந்தீர்கள். திடீரென ரஜினி ஹீரோயின் ஆகிவிட்டீர்கள். எப்படி இது நடந்தது?
'பேட்ட'தான் என்னை மீண்டும் இங்கே கொண்டு வந்தது. இதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கும், ரஜினி சாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
கடந்த சில வருடங்களாகவே அங்குமிங்கும் நடித்துக் கொண்டிருந்தேன். என்ன மாதிரியான படங்களைத் தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் நான் எப்படி, எந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதை நண்பர்கள் வழிகாட்டினர்.
எதனால் 'பேட்ட' படத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
நிறைய காரணங்கள். படம் கையை விட்டுப் போவது குறித்து யோசிக்கக்கூட முடியவில்லை. இளம் தலைமுறை இயக்குநர்களில் நான் ஃபாலோ செய்பவர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். வெவ்வேறு வகைமைப் படங்களை இயக்கியவர். ஒரு நடிகரிடம் இருந்து எதை வாங்கவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.
தீவிர ரஜினி ரசிகராக இருந்தாலும் படப்பிடிப்பில் இயக்குநர்- நடிகர் உறவைச் சிறப்பாகக் கையாண்டு படத்தை எடுத்திருக்கிறார்.
ரஜினியுடன் படப்பிடிப்பில் முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது?
நான் நீண்ட நாட்களாகவே ரஜினி ரசிகை. அவரைப் போல நடக்கவும், ஸ்டைலாகக் கண்ணாடியை மாட்டவும் எக்கச்சக்க தடவைகள் முயற்சித்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிங்கின்போது என்னுடைய டயலாக்குகளைப் பேச மறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால், ரஜினி சார், படப்பிடிப்பில் அனைத்தும் அமைதியாக நடப்பதை உறுதிப்படுத்தினார். மக்களை மகிழ்விக்கவே நாம் நடிக்கிறோம் என்பதை சொல்லிக்கொண்டே இருந்தார்.
'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா நடித்த வேடத்துக்கு நீங்கள்தான் தேர்வு செய்யப்பட்டீர்கள் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. எதனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைத் தவிர்த்தீர்கள்?
அதற்குப் பின்னால் ஓர் அழகான காரணம் இருக்கிறது. 'சந்திரமுகி' படப்பிடிப்பில் 3 நாட்கள் கலந்துகொண்டேன். நான்காவது நாள் நான் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அந்தக் காரணம்தான் படத்திலிருந்து என்னை விலக வைத்தது.
90களில் தமிழ் சினிமாவை நீங்களும் ஜோதிகாவும் ஆட்சி செய்தீர்கள். விஜய், அஜித், சூர்யா மற்றும் கமல்ஹாசனோடு நடித்திருக்கிறீர்கள். அந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திரும்பிப் பார்த்தால், மகிழ்ச்சியாக இருக்கிறது. குறுகிய காலகட்டத்தில் நிறைய பணிபுரிந்திருக்கிறேன். ரசிகர்களின் மனதில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.
கர்ப்பமாக இருந்ததால் சந்திரமுகி படத்தைவிட்டு வெளியேறினீர்கள். திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் முன்னணி ஹீரோக்களாக நடிக்கும்போது, பெண்களுக்கு அந்த வாய்ப்பு கடினமாக்கப்படுகிறதா?
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள்தான் ஏராளமான விஷயங்களை பேலன்ஸ் செய்கிறார்கள். அஜித், விஜய் இருவரும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் தந்தையும் கூட. அவர்களின் வளர்ச்சிக்குப் பின்னால், இருவரின் மனைவிகள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
டிவி சேனல்களைத் திருப்பும்போது 90களில் சூப்பர் ஹிட்டான உங்களின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அப்போதெல்லாம் என்ன தோன்றும்?
நானா இப்படி நடித்திருக்கிறேன் என்று என்னாலேயே நம்ப முடியாது. நாள் முழுக்க படப்பிடிப்பில் இருந்திருக்கிறேன். அப்போது திரை உலகில்தான் முழுக்க முழுக்க இருந்தேன். என்னுடைய குடும்பத்தோடோ, நண்பர்களுடனோ நேரம் செலவிடவோ, பண்டிகைகளைக் கொண்டாடவோ முடியாது.
ஆனால் இன்று அப்படி இல்லை. 'என் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்' என்பேன். இப்போது படங்கள் நடிக்கும்போது குடும்பத்துக்கு எனத் திட்டமிட்டு தனித்தனியாக நேரம் ஒதுக்குவேன்.
உங்களின் நடிப்பில் வெளியாகி, மீண்டும் மீண்டும் உங்களைப் பார்க்கத் தூண்டும் படங்கள் ஏதாவது?
'வாலி', 'பிரியமானவளே', 'கன்னத்தில் முத்தமிட்டால்'. 'யூத்' படத்தில் இருந்து 'ஆல் தோட்ட பூபதி' பாடல்.. இவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்ப்பேன்.
 
#42
சிம்பு ஜோடியாக ராஷி கண்ணா?

சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.
சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘மாநாடு’. வி ஹவுஸ் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அடுத்த மாதம் (பிப்ரவரி) மூன்றாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்தப் படத்துக்காகத் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள இருக்கிறார் சிம்பு. இதற்காக 28 நாட்கள் பாங்காக்கில் தங்கியிருந்து, கற்றுக்கொள்ள இருக்கிறார்.
‘மாநாடு’ படத்தில், சிம்பு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான ‘அடங்க மறு’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர்.
தற்போது, சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில், கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் ரிலீஸான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் இது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.
 
#43
கோலிசோடா 2’வைத் தொடர்ந்து கெளதம் மேனன் நடிக்கும் படம்

‘கோலிசோடா 2’வைத் தொடர்ந்து துல்கர் சல்மான் படத்தில் நடிக்கிறார் கெளதம் மேனன்.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கரின் 25-வது படம் இது. அறிமுக இயக்குநரான தேசிங் பெரியசாமி, இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ரீத்து வர்மா, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
விஜய் டிவி ரக்‌ஷன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு, மசாலா காஃபி’ இசைக்குழு இசையமைக்கிறது. ‘உறியடி’ படத்துக்காக 3 பாடல்களை உருவாக்கிக் கொடுத்த இக்குழு, பிஜோய் நம்பியார் இயக்கிய ‘சோலோ’ படத்திலும் பணிபுரிந்திருக்கிறது.
புனே, கோவா, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படம், ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லாவிதமான எமோஷன்களும் இக்கதையில் உள்ளன.
இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், பிரதாப்.
சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள கெளதம் மேனன், ‘கோலிசோடா 2’ படத்தில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நடிக்க இருப்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
#44
ரசிகர் மன்றத்தினருக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை; நீக்கப்பட்டவர்களை ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் சேர்க்காதீங்க!
சென்னைமக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து உடனே நீக்கிவிடுங்கள். எக்காரணம் கொண்டும் குரூப்பில் சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு, ரஜினிகாந்த் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை, வாட்ஸ் அப் குரூப்பில் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ் அப் குழுக்கள் என்று இருக்கின்றன. அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ் அப் குழுக்களில் அவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக குரூப்பில் இருக்கவேண்டும். பிற மாவட்ட உறுப்பினர்களை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது. வாட்ஸ் அப் குரூப்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்க்கவேண்டும்.
அதேபோல், மனதுக்குத் தோன்றுகிற பெயர்களில் எல்லாம் வாட்ஸ் அப் குரூப்கள் சேர்க்காமல், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரிலேயே வாட்ஸ் அப் குரூப்கள் இருக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
#45
பேட்ட’ ரஜினி சாருடைய படம்: விஜய்சேதுபதி


’பேட்ட’ ரஜினி சாருடைய படம் என்று அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய சிறு பேட்டியை வெளியிட்டு வருகிறது.
இதில் 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி பேட்டியின் கேள்வியும் பதிலும்:
'பேட்ட' படப்பிடிப்பின் போது நடந்த முக்கியமான தருணங்கள்?
நானும் ரஜினி சாரும் கேரவனில் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.
மறுபடியும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த கேள்வியே என்னிடம் கேட்கக்கூடாது என்று நினைக்கிறேன். நானும் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பணிபுரிவது என்பது முடி வெட்டுவது போன்றது. கார்த்திக் எப்போதும் என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருப்பார். எங்களுக்குள் எத்தனை முறை கருத்து வேறுபாடு வந்தாலும் அதையெல்லாம் தாண்டி எங்களுக்கு இடையில் அன்பு இருந்து கொண்டே இருக்கும். அவருக்கு மிகப்பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன்.
’பேட்ட’ படத்தை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியுமா?
ரஜினி சார் படம்
 
#46
பேட்ட' படத்தில் ரஜினியின் இன்னொரு வெர்ஷன் வேற லெவல்ல இருக்கும்: பாபி சிம்ஹா


'பேட்ட' படத்தில் ரஜினியின் இன்னொரு வெர்ஷன் வேற லெவல்ல இருக்கும் என்று பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய சிறு பேட்டியை வெளியிட்டு வருகிறது.
இதில் 'பேட்ட' படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள பாபி சிம்ஹாவின் பேட்டியின் கேள்வியும் பதிலும்:
ரஜினியுடன் ஒன்றாக நடித்த அனுபவம்?
இதைவிட பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்ல. தலைவர் கூட நான் பிரேம்ல இருக்குறது பெரிய சந்தோஷம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி. கடவுளுக்கும் நன்றி.
’பேட்ட’ ரஜினி பற்றி?
நீங்க படம் பார்க்கும்போது தெரியும். படம் நிச்சயமா வேற மாதிரி இருக்கும். தலைவரோட இன்னொரு வெர்ஷன் வேற லெவல்ல இருக்கும். அவர் கூட நிற்கும்போதே ஒரு மாதிரியான பயம் இருக்கும்.
ஒரு ரஜினி ரசிகனாக எப்படி உணர்கிறீர்கள்?
எப்போதுமே நான் ரஜினி ரசிகன்தான். எப்போதெல்லாம் அவரை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் நான் ஒரு ரஜினி ரசிகனாகத்தான் உணர்வேன்.
 
#47
பேட்ட' பற்றி ஒரு வார்த்தை? - கார்த்திக் சுப்பராஜ் பதில்


'பேட்ட' பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள் என்பதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிலளித்துள்ளார்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடைய சிறு பேட்டியை வெளியிட்டு வருகிறது.
இதில் 'பேட்ட' படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ் பேட்டியின் கேள்வியும் பதிலும்:
'பேட்ட' படம் ரஜினி ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட படமாக இருக்கும்?
இது ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர்களால் எடுக்கப்பட்ட படம்.
ரஜினியுடனான தருணங்கள் பற்றி?
நிறைய இருக்கிறது. அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டு போய் பேசுவேன். சிறந்த தருணம் என்றால் கதையை கேட்ட 2 நிமிடத்தில் ’இந்த படம் நாம்தான் பண்றோம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அந்த தருணம் என்னால் மறக்க முடியாதது.
'பேட்ட' பற்றி ஒரு வார்த்தை?
’தலைவரிசம்’
 
#48


எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு.
பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நியாபகம் வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்று உங்களைப் பற்றி கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. ஆனால், அதை அடையாளம் கண்டு கொள்கிறேன். உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. அதுதான் உங்களை வளர்த்து உயரத்துக் கொண்டு செல்கிறது.
ஆனால், ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும்” என்றார்.
விஜய் சேதுபதி தற்போது ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
#49


'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'நிமிர்', 'Mr. சந்திரமெளலி', 'சீதக்காதி', 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
இன்று (மார்ச் 27), அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம் பெறவேண்டும் என்று திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.
 
#50


நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியுள்ளது விஜய் டிவி.
‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய கே.எம்.சர்ஜுன், நயன்தாராவை வைத்து ‘ஐரா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.
படத்தின் தலைப்பான ‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். நாளை (மார்ச் 28) படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், ‘ஐரா’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது. ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக நயன்தாரா படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளது அமேசான் ப்ரைம் வீடியோ.
 
#51


சுந்தர்.சி படத்துக்காக நடைபெற்ற படப்பிடிப்பில் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனயில் சிகிச்சை கொடுக்கப்பட்டது.
'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். தமன்னா நாயகியாக நடித்து வரும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பைக் சண்டைக்காட்சி ஒன்றை சண்டை இயக்குநர் அன்பறிவு இயக்கத்தில் படமாக்கி வந்தார்கள். அப்போது பைக்கில் விஷால் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. இடது கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சின்ன காயம் தானா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா அல்லது விஷால் இந்தியா திரும்புகிறாரா என்பது விரைவில் தெரியவரும். இது தொடர்பாக விசாரித்த போது, "விஷால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்" என்று தெரிவித்தனர். ஆனால், படக்குழுவினர் இன்னும் எதையும் உறுதிப்படுத்தவில்லை.