அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

சித்திரை போட்டி திரை விமர்சனம் !

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் நட்புக்களே!

இங்கு சித்திரை போட்டிக்கான திரை விமர்சனங்களை பதிவிடலாம். உங்களின் விமர்சன மழையில் நனைய காத்திருக்கிறோம்.
 

Shenba

Administrator
Staff member
#2
எனது பார்வையில் பாகுபலி

பிரம்மாண்டம்! பாகுபலி 1 பார்த்த போது, எனக்குத் தோன்றிய கருத்து அது மட்டுமே.

ஆனால், அதன்பிறகு முதல் பாகத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை.
பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி, பிரம்மாண்ட அரண்மனை, பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள். படத்தின் ஒவ்வொரு இணுக்கிலும் பிரம்மாண்டத்தைக் கையாண்டிருந்தனர்.


தெலுங்குப் படமென்றாலே எல்லாமே லாஜிக் மீறிய காட்சிகளாக இருக்கும் என்பதை நன்கு அறிந்தவள்தான். ஆனால், அந்த லாஜிக் மீறல்களையும் இரசிக்கும்படி எடுக்கப்பட்டிருந்ததே இயக்குனர் எஸ்.எஸ் இராஜ மௌலியின் திறமை.

ஹீரோவிற்குக் கொடுத்திருந்த அதே அளவிற்கு வலுவான ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை.
ரம்யாகிருஷ்ணன். இராஜ மாதாவாகவே நம் கண்முன்னே நடமாடினார். பெற்ற மகனுக்கு நிகராக வளர்ப்பு மகனுக்கும் பாலூட்டி, சீராட்டி வளர்த்தவர்.


இரண்டாம் பாகத்தில் ஒரு தாய்க்கே உண்டான குண இயல்புடன் தான் நடந்துகொண்டதாகப் பட்டது. இருந்தாலும், மனத்தில் சிறு குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது. பாகுபலியை, அவர் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், இதே பாகுபலியின் அன்னையாக அவர் இருந்து பல்வாள்தேவனைக் கொல்ல நினைத்திருந்தால் என் மனம் ஆறியிருக்குமோ என்னவோ!

பிங்களத் தேவராக நாசர் அருமையான நடிப்பைக் கொடுத்திருந்தார். என்றாவது உன் அன்னையைக் கொல்ல நினைத்திருக்கிறாயா! என்று கேட்கும் இடத்தில் நம்மையும் சற்று மிரள வைத்திருக்கிறார். ஆனால், கடைசியில் அவரை மட்டும் உயிருடன் விட்டுவைத்திருக்க காரணம் என்ன?

கட்டப்பா! சத்யராஜின் நடிப்பிற்கு மற்றுமொரு சான்று. முதல் பாதியில் அடிமைக் காவலனாக வருபவர், இரண்டாம் பாகத்தில் கதாநாயகனின் தோழனைப் போல உடனே இருந்து பல இடங்களில் சிரிக்கவும், இரசிக்கவும் வைத்திருக்கிறார்.

பல்வாள்தேவன்! ராணாவின் அற்புதமான நடிப்பால், உயிர் பெற்ற பாத்திரம். காளையை அடக்கும் காட்சியிலேயே மனதில் நின்றுவிட்டார்.

அவந்திகா! தமன்னாவை அந்தக் கதாபாத்திரத்தில் பார்க்கச் சற்றுச் சிரிப்பாகக் கூட இருந்தது. அவ்வளவு துணிச்சலும், வீரமும் கொண்ட பெண். சிறு அசைவையும் உணர்ந்துகொண்டு சாமர்த்தியத்தைக் கையாளுபவள் தான் தேடிக்கொண்டிருப்பவன் மரத்தின் மீது வருவது கூட தெரியாமல் காத்திருப்பதெல்லாம் சற்று லாஜிக் மீறிய காட்சிகள் தான்.

தேவசேனா! அறிமுகக் காட்சியில் ஹய்யோ! அழகு அனுஷ்காவை, இப்படிக் காட்டிவிட்டார்களே என்று முதல் பாகத்தில் பெரும் ஏமாற்றம் தான். ஆனால், இரண்டாம் பாகத்தில் அதை நிவர்த்தி செய்துவிட்டார் இயக்குனர்.

‘அழகிகளே பொறாமை கொள்ளும் பேரழகி!’ என்று சிவகாமி சொல்வதைப் போல அவ்வளவு அழகு. இரண்டாம் பாகத்தின் முதல் பாதிப் படம் செல்வதே தெரியாமல் மெல்லிய காதல் இழையோட அருமையாக இருந்தது.

பாகுபலியின் வீரத்திற்கு ஏற்றார் போல, வீரமும், துணிச்சலும் கொண்ட பெண்ணாக பிரமாதப்படுத்தியிருந்தார். எப்போதுமே அனுஷ்காவின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். இதிலும் அவர் சற்றும் நம்மை ஏமாற்றவில்லை.

கடைசிக் காட்சியில் அனுஷ்காவிற்கு இரண்டு வரியிலாவது டயலாக் வைத்திருக்கலாம். எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. முன்பாதியில் வீரமும், விவேகமும் நிறைந்த பெண்ணாக வந்தவரது கதாபாத்திரம் கடைசியில் அரைகுறையாக முடித்தது போல இருந்தது.

பாகுபலி! பெறாத அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாக இருந்து, அவராலேயே இறந்து போகும் பரிதாபத்திற்குரியவன். அவன் நம்பியவர்களாலேயே முதுகில் குத்தப்படுகிறான். காதலிக்குக் கொடுத்த வாக்கிற்காக வளர்த்த அன்னையின் பாசத்தையும், நம்பிக்கையையும் இழக்கிறான்.

அரச பதவியைத் துறக்கிறான். அன்னையின் பாசத்திற்காக காத்திருக்கிறான். தங்களது சந்தோஷமான தாம்பத்தியத்திற்கு அத்தாட்சியாக பிறக்கும் மகனைக் காணாமலேயே இறக்கிறான். மொத்தத்தில் அடுத்தவர்களது உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் இடையில் அல்லாடி உயிர் துறக்கிறான்.

பிரபாஸின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல். எல்லோருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த, நிலைநாட்ட வாய்ப்பு கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.

இதையே அடுத்ததடுத்த படங்களுக்கு ஒரு அளவுகோலாக மற்றவர்கள் எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

இயக்குனர் இராஜ மௌலி மற்றும் அவரது குழுவினரது ஐந்தாண்டு கால உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.

ஐந்து வருடமாக தூக்கத்திலும், அவர் இந்தப் படத்தைப் பற்றியே நினைத்திருந்திருப்பார். அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தக் கேள்வியை அவரைக் கேட்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
:)


கீரவாணியின் இசை, படத்தின் பிரம்மாண்டத்திற்கு கூடுதல் பலம்.

மதன் கார்க்கியின் வசனங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இருந்தன.

ரோகிணி, சுதீப், போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் சிறிது நேரமே வந்தாலும், நம் மனத்தைக் கொள்ளைக் கொண்டுவிட்டனர்.

குறிப்பாக, பட்டாபிஷேக சீன், மாஸ்!

பாகுபலி என்றும் நம் மனத்தில்!
 
Last edited by a moderator:
#3
எனது வழியில் பிங்க்

பிங்க்


நாட்டின் இன்றைய நிலைக்கு அனைவரும் கண்டிட வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் இது...

3 பெண்களை மையமாக வைத்து, அவர்கள் சந்திக்கும் பிரச்சனையினால் ஏற்படும் விளைவுகளை வைத்து,அதிலிருந்து அவர்கள் வெளிவரும் விதத்தைக் குறித்த ஒரு சித்திரம் இது.

படத்தின் ஆரம்பத்தில் மூன்று இளைஞர்கள் மருத்துவமனையை நோக்கி ஓடும் பொழுது ஐயோ என்னவாயிற்று என்று எண்ணத் தோன்றுகிறது. அதில் ராஜீவ் என்பவனுக்கு ஏற்படும் இரத்த இழப்பின் காரணமாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்கிறார்கள்.


அதே நேரத்தில் இம்மூன்று இளம்பெண்களும் தாங்கள் தனித்து வாழும் அபார்ட்மெண்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.இப்பதட்டத்திலும் ஃபரிதாபாத்தை காட்சியமைத்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. இப்பெண்களில் மினால் ஓட்டத்திற்கு செல்லும் நேரங்களில் தீபக் என்னும் முதிய வழக்கறிஞர் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது தோன்றும் உணர்வு எழுத்தில் வடிக்க முடியாதது...

ராஜ்வீர் மற்றும் அவனது நண்பர்கள் மினார், ஆண்ட்ரியா ,ஃபாலக் இவர்களை பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்ததன் விளைவாக ஆண்ட்ரியா தன்னுடைய வேலையை இழந்து விடுவாள். இதற்குப் பின் வடிவமைக்கப்பட்ட காட்சிகள் தான் கதையின் முக்கிய அமைப்பை நம் கண்முன்னே நிறுத்துகிறது .

ராஜ்வீர் பெண்டிரை வேசி இனப்பெண்கள் என்று குற்றம் சு மதம் தி பின்னர் தீபக் மூலமாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு காட்சிகள் மனநிறைவைத் தருகின்றன. இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் "பெண்கள் நோ என்றால் நோ என்பதுதான் அர்த்தம்", அதனையும் மீறி அவர்களை உறவுகொள்ள வற்புறுத்துவது குற்றமாகும்.

வழக்கு காட்சிகளை கண்டிட தீபக் ஆக அமிதாப்பச்சன் வாதிடும் வார்த்தைகளைக் கேட்டிட இப்படத்தை கண்டு மகிழுங்கள்.

"no means no"
 
#4
Taare Zameen Par

மாதாவின் மணி வயிற்றில் உதித்திடும் மழலை ஒவ்வொன்றும் மறைத்து வைக்கப்பட்ட திறமைகளுடன் இப்பூமியில் அவதரிக்கிறது...

அத்திறமையை கண்டறிந்து வெளிக்கொணரும் முன்னர் அக்குழந்தை எதிர்கொள்ளும் அவமானங்கள், பேச்சுக்கள் இவை அனைத்தையும் சித்திரமாக தீட்டிய இப்படத்தின் இயக்குனர் மிகவும் ஆழமான கருத்தை பெற்றோர்க்கு போதித்துள்ளார்.

இஷான் கற்றலில் பின்தங்கியுள்ள ஒரு 8 வயது சிறுவன்.அவன் பள்ளியில் ஏற்படும் குறை கூறும் படலத்தின் காரணமாக உறைவிடப் பள்ளியில் பெற்றோரால் சேர்க்கப்படுகின்றான். அங்கு டீச்சராக வரும் ராம்னால் இஷான் டிஸ்லெக்ஸியா உள்ளவன் என அறியப்படுகிறது.

அவனைக் குறித்து அவனது பெற்றோரிடம் பேச வரும் ராம் இஷான் வரைந்த ஓவியங்களையும், அதிலிருக்கும் நுணுக்கங்களையும் பார்த்து வியந்து பள்ளிக்கு திரும்பிய பின்னர் அவனது வகுப்பறையின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். தானும் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவன் என்று உரைத்து இஷானுக்கும் உனக்கு டிஸ்லெக்ஸியா உள்ளது என்று கூறி அவனுடைய திறமையை மெருகு ஏற்றுகிறார்...

இறுதியில் நடைபெறும் ஓவியப் போட்டியில் இஷானை வரைந்த ராம் இரண்டாம் இடத்தையும், குருவை மிஞ்சிய சிஷ்யனாக இஷான் முதல் இடத்தையும் பெறுகின்றனர். பள்ளி இறுதி தேர்வுகள் முடிவில் இஷானை அழைத்துச் செல்ல வரும் பெற்றோருக்கு இனிய அதிர்ச்சி அவனது ஆசிரியர்கள் தருகின்றார்கள். கற்றல் குறைபாடு உள்ளவன் என்று கூறப்பட்டவன் கற்றலில் சிறந்து விளங்குகின்றான் என்ற ஒரு சான்றிதழை ஆசிரியர் வாய்மொழியாக கேட்டவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இறுதியாக பெற்றோருடன் காரில் ஏறும் முன்பாக இஷான் ஓடிவந்து ராமை அணைத்துக் கொள்ளும் காட்சி இன்றளவும் கண்முன்னே நிழலாடுகின்றது.