சப்தஸ்வரங்கள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"சப்தஸ்வரங்கள்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார் ஷஜனி அருந்த்ராஜா......
 
#2
சப்தஸ்வரங்கள்

முன்னோட்டம் - 01

வெங்கட் அந்த காம்ப்ளக்ஸ் கட்டிடத்திற்குள் வேகமாக நுழைந்தான் காவல் அதிகாரி போல் தளங்களை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்த நபரிடம் "ஃபுட் கோர்ட் எங்கே இருக்கு???" என்று வினவினான்.
அந்த நபர் வழிகாட்டிய தளத்திற்கு செல்லும்போதே அவனது பாக்கெட்டில் இருந்த செல்போன் இனிமையாக வயலின் இசை எழுப்பியது. மின்னி மின்னி மறைந்த எழுத்துக்கள் "ப்ரதிக் கோலிங்" என்று கூற அவசரமாக அழைப்பை ஏற்று "என்னடா ஆச்சு க்ளையன்ட் மீட்டிங்ல இப்படி பண்ணி வச்சிருக்கீங்க??" என்றான்.
அவன் வெங்கட்டின் கேள்விக்கு பதில் கூறாமல் "ஜூஸ் ஸ்டால் பக்கம் வா" என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான். அதுவரை பதட்டத்தில் துடித்த இதயம் இப்போது கோபமாக துடிக்க வேர்த்து வழிய ஸ்டாலுக்குள் நுழைந்த வெங்கட்டுக்கு அங்கு சாவகாசமாக க்ரேப் ஜூஸ் குடிக்கும் நண்பனை பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.
"டேய் அதிகப்பிரசங்கி ஏன்டா இப்படி லொள்ளு பிடிச்ச வேலை பாக்குற ஒரு கிளைன்ட் மீட்டிங் ஒழுங்கா அட்டன்ட் பண்ண முடியாதா முக்கியமான கம்பெனியோட பிஸ்னஸ் டீல் கோடிக்கணக்குல லாபம் பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை சொதப்பிட்டு வந்து கூலா கூல்ட்ரிங்ஸ் குடிக்கிற கொழுப்புடா உனக்கு!!!!"
"வெங்கட் காம் டவுன் ப்ளீஸ்..."
மிக மிக மென்மையான அந்த பதிலில் அதுவரை கடுகாய் பொரிந்து கொண்டிருந்த வெங்கட் அவனை ஒரு இயலாமையான பார்வை பார்த்து விட்டு தொப்பென அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவன் அந்த ஜூஸை குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன் மீண்டும் தொடங்கினான் ஆனால் இந்த தடவை வெங்கட்டின் இலக்கு ப்ரத்திக்காக இருந்தது.
" ஏன்டா மர மண்டை நீயாவது கிளையன்ட்ட சமாதானப்படுத்தி டீல ஓகே பண்ணி இருக்கலாமே
வெறும் மூன்றே மூன்று கம்பெனியை வச்சு எப்படிடா பிசினஸ் பண்றது நம்ப முன்னேற வேணும்னா நம்மளுடைய சில அனாவசிய கொள்கைகளை தளர்த்திக் கொள்வதில் தப்பில்லை.." அதுவரை நண்பனின் கோபத்தை ரசித்து கொண்டிருந்த ஸ்வராக்கின் சிவந்தமுகம் அவனின் முறைப்பாட்டில் இரத்த நிறமாகியது.
"எதுடா அனாவசிய கொள்கை என் வாழ்க்கையில நான் பின்பற்றுற கொள்கை இது ஒன்றுதான் இந்தக் கொள்கையை எந்த ஒரு காரணத்திற்காகவும் மாத்திக்க மாட்டேன் நான் செத்தாலும் மாத்திக்க மாட்டேன்" குரலில் இருந்த மென்மை காணாமல் போய் கடினம் குடியேற கடித்த பற்களுக்கிடையில் ஸ்வராக் வெங்கட்டை எச்சரித்தான்.
அமர்ந்திருந்தாலும் மற்ற இருவரையும் விட ஸ்வராக் உயரமாக இருந்தான் இதில் அந்த உயரத்திற்கு அவன் நெஞ்சை நிமிர்த்தி பேசும்போது ப்ரதிக்கிற்கு ஒரு நிமிடம் உடல் சிலிர்த்தது.
என்னதான் மூன்று பேரும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் என்றாலும் ஸ்வராக்கும் வெங்கட்டும் மிகச் சிறிய வயதிலிருந்தே ஒன்றாக இருந்து பழகுபவர்கள் அவர்களுக்குள் ஒரு கருத்து வேறுபாட்டை உயிர் நண்பனாக ப்ரதிக்கால் அனுமதிக்க முடியவில்லை எனவே இந்த பஞ்சாயத்துக்கு அவனே தீர்ப்பு கூறும் படியாகியது.
"சரிடா சண்டைய விடுங்கடா இன்று ஸ்வராக்கால் மிஸ்ஸான ஒரு கம்பெனிக்கு பதிலா இன்னும் இரண்டு கம்பெனி அவன் பிடிச்சு கொடுக்கணும் அப்ப ஓகே தானே ஸ்வராக்!!" நண்பர்களை கைத்தட்டி அழைத்து ப்ரதிக் இப்படி வினவ ஸ்வராக் உடனே மண்டையை ஒப்புதலாக ஆட்டினான். வெங்கட்டின் முகத்தில் ஒரு தெளிவும் இல்லாததை பார்த்து அவன் தோளில் தட்டியவன் "வெங்கட் நீயும் கேட்டுக்கோ மீட்டிங் சொதப்பினதுக்கு முழு காரணமும் ஸ்வராக் கிடையாதுடா".
"என்னதான் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும் நம்ம கைய விட்டு போனது மிகப்பெரிய ஒப்பந்தம் நான் கூலாக லேட்டாகும் என்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்" என்ற வெங்கட் கோவமாக கண்ணாடி வழியே தெரிந்த மெயின் ரோட்டை வெறித்துப் பார்த்தான்.
என்னடா இது!!! என்று சலித்து போய் ப்ரதிக் பார்க்க அவ்வளவு நேரம் நண்பர்களின் வாடிய முகத்தை கண்டு எதுவும் சொல்லாமல் இருந்த ஸ்வராக் திடீரென "எதுக்கு கூலாக லேட் பண்ணனும் உன்னை உடனே கூல் பண்றேன் பாரு" என்று எழும்பி ஸ்டால் பக்கமாகச் சென்றான்.
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த வெங்கட்டை அழைத்த ப்ரதிக் "மச்சான் மேல எந்த தப்பும் இல்லடா அந்த லேடி மேனேஜர் தான் ரொம்ப வழிஞ்சாங்க அதுதான் ஸ்வராக் வேணாண்டா இப்படிப் பட்டவங்களோட பிசினஸ் பண்ண முடியாது கிளம்பலாம்னு சொல்லிட்டான் அவனை பத்தி உனக்கு தெரியாதா சும்மா பொண்ணுங்க பேச வந்தாலே சாமியாடுவான் அந்த லேடி மெரிட் பர்சன் பட் அவங்க பேசுன பேச்சு டீலே நாசமாப் போச்சு...." நடந்த சம்பவத்தை விளக்கிக் கொண்டிருந்த ப்ரதிக் எப்போதும் போல ரைமிங்கில் முடிக்க அவன் தலையில் தட்டிய வெங்கட் "பேச்சு போச்சுனு ஏண்டா இப்படி மூவி மேனியாக் மாதிரி பேசுற சகிக்கல." என்றான்.
சிரிப்புடன் "ஆமாண்டா நேத்து பார்த்த படத்துல வந்த டயலாக்க தான் அடிச்சு விட்டேன் எப்படிடா கண்டுபிடிச்ச??"
"டேய்ய் சொங்கி நேத்து நானும் உன் கூட அந்த படத்துக்கு தான் வந்தேன் ஞாபகமில்லை"
"ஓஓஓஓ நீயும் வந்தல்ல மறந்துட்டேன்... "
"நீ எப்படி மறக்காம இருப்ப நீ எங்களையா பார்த்த முன் சீட்டுல இருந்த கேம்பஸ் பொண்ணுங்கள தானே பார்த்த கடவுளே ஊர்ல எத்தனையோ ப்ரெண்ட்ஸ் இருக்கவங்க எல்லாரும் நல்லாருக்காங்க ஆனா எனக்கு ரெண்டே ரெண்டு ப்ரெண்ட்ஸ கொடுத்துருக்க பாரு ரெண்டும் ரெண்டு ரகம்
ஒருத்தன பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாத்தனும்
இன்னொருத்தன் கிட்ட இருந்து பொண்ணுங்களை காப்பாத்தனும்!!!"
"சும்மாவாடா உனக்கு வெங்கடேஸ்னு பேர் வைச்சிருக்காங்க நீ காக்கும் கடவுள்டா!!!!"
"அடேடே பாவி காரணப்பெயர் வைக்கிறியா உன்னை.... என்று எழுந்த வெங்கட் ஆஆஆஆ...ஊ...ஊ... என அலற அவன் தலையோடு கூல்ரிங்கை ஊற்றிய ஸ்வராக்கும் அதை பார்த்த ப்ரதிக்கும் அந்த ஜூஸ் ஸ்டால் மொத்தமும் அதிர சிரித்தனர்.
 
#3
சப்தஸ்வரங்கள்

முன்னோட்டம் - 0 2

சப்தவியின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அம்மம்மாவின் மடியில் தலை சாய்த்திருந்த வாணியின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. படுக்கையறை வாசலில் குறுகி படுத்திருந்த தமிழ்மணியின் விழிகளும் அருவியென பொழிய எப்போதும் அவர்கள் அனைவரையும் கலாட்டா செய்து லூட்டி அடிக்கும் பல்லவி கூட சுவருடன் ஒட்டி கலங்கி நி ன்றாள்.

ஆனால் இத்தனை கண்ணீருக்கும் காரணகர்த்தாவான சப்தவியின் விழிகளில் ஒரு சொட்டு நீரில்லை உணர்ச்சிகளை துடைத்துப் போட்டு விட்டு வரண்ட பார்வை பார்த்தபடி அவள் அமர்ந்திருந்த கோலம் ஒரு தவசியை போலிருந்தது. அவளிடம் ஒரு அசைவுமில்லா விட்டாலும் ஜன்னலூடாக அவள் குழல் கலைத்த காற்று அவளது ஆடையை அசைக்க சற்று முன் தமிழ்மணி அவள் கால்களில் இழுத்த சூட்டுக் காயத்தில் பாவாடை படுகிறது. அந்த தீப்புண்ணின் எரிச்சலும் வலியும் கூட அவளை அசைக்கவில்லை.

அவ்வளவு நேரம் அவளை விட்டு பார்வையை அகற்றாமல் இருந்த அம்ம்மாவிற்கு அவளது மனோதிடம் அச்சத்தை விதைத்தது. ஒரு பதின்மூன்று வயது பெண்ணிடம் இவ்வளவு தீர்க்கத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. பெற்ற தாயிடம் கூட இறங்கி போகாத அவளது குணம் அவளது எதிர்காலத்தை சிதைத்து விடும்.
அன்று மட்டுமல்லாமல் அடுத்து வந்த நாளும் அவளது நிலையில் எந்த மாற்றமும் இல்லை அன்ன ஆகாரமின்றி மகள் வாடுவது தாங்காமல் தமிழ்மணி அழுதே கரைய ஒரு முடிவுடன் சாமியறைக்குள் நுழைந்த அம்மம்மா திரும்பி வரும் போது சப்தவியுடன் வெளியில் வந்தார். அவளை குளிக்க அனுப்பி வைத்தவர் நேராக தமிழ்மணியிடம் சென்று நிலவரத்தை விளக்கி பொறுமையாக இருக்கும் படி அறிவுறுத்தினார்.

அவரின் வார்த்தைகளால் ஓய்ந்த கண்ணீர் மகளின் "அம்மா" என்ற அழைப்பில் மீ்ண்டும் ஊற்றெடுக்க அவளை கட்டி கொண்டு "இனிமேல் இப்படி செய்யாதடா" என
அவர் கண்களை துடைத்த சப்தவி "செய்ய மாட்டேன்மா" என்றாள்.
மகளின் அந்த ஒரு வார்த்தையே திருவார்த்தை என ஏற்று அகமகிழ்ந்த குடும்பம் இயல்புக்கு திரும்பியது.

மாலையில் சப்தவியை காண வந்த தோழிகளுக்கு அவளது மென்னகை ஆறுதல் அளிக்க வாணி அவளை கட்டிக் கொண்டு அழுதே விட்டாள்.

"ஏண்டி அப்படி பண்ண அதென்ன தலை கால் புரியாத கோபம் உனக்கு ஒரு டீச்சரை கை நீட்டி அடிச்சிட்டியே யாருக்கும் தெரியாம இருக்க வேண்டிய விஷயம் உன்னால முழு ஸ்கூலுக்கும் தெரிஞ்சு போச்சு கவிதாவ ஸ்கூல விட்டு விலக்கி அவ பேரண்ட்ஸ் கூட்டிட்டு போய்ட்டாங்க. எட்வின் சேர் ஊரை விட்டே போய்ட்டாரு".

"ஊரை விட்டு தானே போனான் அவன எல்லாம் உலகத்தை விட்டே அனுப்பனும்" அவளால் விளைந்த வினையை பற்றி கூறிக் கொண்டிருந்த வாணிக்கு தோழியின் பதிலை விட அவளின் கண்ணில் தெரிந்த ரவுத்திரம் பயத்தை கொடுத்தது.

"என்னடி இது வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்துல ஏறுது!!.." என்ற பல்லவி மெதுவாக எழுந்து வாணியின் பக்கமாக வந்து நின்றாள் "உனக்கு பேய் புடிச்சிருக்கா ஏன் இப்படி நடந்து கொள்ற???.. எவ்வளவு அமைதியான பொண்ணு நீ ஏன் இப்படி ஆண் என்ற வார்த்தையை கேட்டாலே காளியாகுற???.."

"ஆமா நான் காளி தான் பத்ரகாளி" என உக்கிரமானவள் ஆண்!! ஆண்!! ஆண்?? என்று வெவ்வேறு தொனியில் சொல்லிப் பார்த்தவள் அருவெறுப்பான ஒரு பாவனை முகத்தில் படர "அவனும் இரத்தமும் சதையும் இருக்க ஜீவன் தானே இன்னொரு ஜீவன அதுவும் ஒரு பெண்ணை எப்படி கீழ்த்தரமா நடத்தலாம் ஆண் ஒன்னும் ஆண்டவன் இல்லையே என்ன சொன்ன நீ யாருக்கும் தெரியக்கூடாத விஷயம் என்னால முழு ஸ்கூலுக்கும் தெரிஞ்சு போச்சா தெரிஞ்சா என்னடி தப்பு கல்வி கற்று குடுக்கிற ஆசான் கடவுளுக்கு சமன் அந்த சின்ன பொண்ணு கிட்ட அவர் அசிங்கமா பேசினத கேட்டும் சும்மா இருக்க சொல்லுறியா?? ச்ச்சீ... ஈனப்பிறவி.!!!"

"அவர் பண்ணது தப்பு தான் அதுக்காக அவர கை நீட்டி அடிப்பியா??? " பல்லவி கேட்ட கேள்விக்கு சப்தவியிடம் ஒரு முறைப்பு தான் பதிலாக கிடைத்தது.

ஆத்தி என்ன முறைக்கிறா அடுத்து நம்ம செவுல் தான் கிழியப் போகுது பல்லவி அறையின் ஓரமாக பம்ம சப்தவி வாணியின் கைகளை பற்றி கொண்டாள்.
"வாணி நான் எந்த தப்பும் பண்ணல உன்னோட கேள்வி புரியுது இந்த தப்பு நேற்று முன்தினம் நடந்து இருந்தா நானும் நீ சொல்லுற மாதிரி பிரின்சிபால் கிட்ட தான் கம்ப்ளைண்ட் பண்ணி இருப்பேன். ஆனால் இப்ப அப்படி கிடையாது ஏன்னா நான் அந்த அளவுக்கு ஆண்களை வெறுக்கிறேன். என் வாழ்க்கையில இனி எந்த உறவாகவும் ஆணுக்கு இடம் இல்லை அதையும் மீறி ஒரு ஆண் என் வட்டத்துக்குள்ள வந்தா அங்க ஒரு உயிர் தான் இருக்கும். அது யாருடைய உயிர்னு கடவுளுக்கு தான் வெளிச்சம்... " அழுத்தமான குரலில் சப்தவி கூறியவற்றை கேட்ட தோழிகள் மிரட்சியுடன் பார்க்க அதுவரை அவர்களது உரையாடலை மறைமுகமாக கேட்டிருந்த இரு செவிகளுக்குரியவர் அவளது கடைசி முடிவில் விக்கித்துப் போனார்.
 
#4
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் : 0 1

சிறு புள்ளியிலிருந்து உதயசூரியன் எழும்பியது. அந்த காலை வேளையில் ஒவ்வொரு நிமிடங்களையும் கொழும்பின் நகரவாசிகள் பரபரப்பாக கடந்திட நகரின் மத்தியில் இருந்த சிறு தோட்ட பிரதேசத்தில் எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்த மூன்று பெண் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.

அதில் முதல் வீட்டுக்குள் நாம் நுழையும் சமயம் பூஜை அறையில் ஓரத்திலிருந்த ஒலிபெருக்கியில் கந்த சஷ்டி கவசம் பாடியது சமையலறையை தாண்டி வந்த இட்லி அவிக்கும் கதகதப்பு வரவேற்பறையை நிறைத்திட வீடெங்கும் கமழும் சாம்பிராணி புகையை தாண்டி கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்த அந்தப் பெண் குழந்தை முகம் எங்கும் பிரகாசிக்க
"அம்மா" என்று அழைத்தது
போட்டது போட்டபடியே சமையலறையை விட்டு வரவேற்பரை நோக்கி ஓடிவந்த தமிழ் மணி தன் மகளிடம்
"என்னம்மா" என்றார்

"இன்னைக்கு கடைசி பரிட்சை என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா"
என்று அவர் கால்களைத் தொட்டு வணங்கிய நமது முதல் ஹீரோயின் சப்தவிக்கு இன்றைக்கு உயர்தர பரீட்சையின் கடைசி நாள் பரிட்சை.
அவளை மனதார வாழ்த்தி அவளது கண்ணம் தொட்டு தன் இதழ்களில் ஒற்றிக் கொண்ட தமிழ்மணி அப்பொழுதுதான் பின்பக்க கொடியில் துணிகளை உலர்த்திவிட்டு உள்ளே நுழைந்த தனது தாயாரை அழைத்து
"அம்மா நம்ம சப்தவி இன்னைக்கு கடைசி பரீட்சை எழுதப் போறா ஆசீர்வாதம் பண்ணி அனுப்புங்க" என்றார்
பேத்தி காலில் விழும் முன்பே அவளது தோள்களை தொட்டு தூக்கியபடி அவளை மெதுவாக அணைத்துக்கொண்டு
"நீ கண்டிப்பா பாஸ் பண்ணிடுவம்மா" என்றிட அப்பொழுது ஒரு குரல் இடை வெட்டியது.

"அப்ப நா என்னோட ரிசல்ட்ஸ் என்னாகும் அம்மம்மா?
அதுதான் நம்ம அடுத்த ஹீரோயின் பல்லவி, மிஸ் வாயாடி வாலு வானரம்
"அடடா சப்தவி வா வா வந்து என் கால்ல விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கு அப்ப தான் பாஸ் பண்ணுவ" என்று மிரட்ட
"உன் கால்ல விழுந்து நான் எப்படிடி பாஸ் பண்ண முடியும் இன்னைக்கு கர்நாடக சங்கீத பரீட்சை வேணும்னா நீங்க ரெண்டு பேரும் என் கால்ல விழுங்க பாவம் பார்த்து கொஞ்சமா பேப்பர் காட்டறேன்" என்று இடுப்பில் கைவைத்து சப்தவி பழிப்பு காட்டிட

அப்பொழுதுதான் அங்கு வந்து நின்ற மூன்றாவது ஜீவனையே அனைவரும் பார்த்தனர் அதான் நம்ம த்ர்ட் ஹீரோயின் வாணி என்கிற மதுரவாணி.
"ஏண்டி பார் இவ நம்பளுக்கு பேப்பர் காட்டுவதற்கு இவ கால்ல நாம விழனுமாம் மாட்டேன்னு சொல்லு வேணும்னா அதுக்கு பதிலா இந்த கைய காலா நினைச்சு ஹேன்ட் ஷேக் வேணா பண்ணிக்கொள்ளலாம் ப்ளீஸ்!!"
தடாலடியாக பிளேட்டை திருப்பி போட்டு சப்தவியின் கைகளைப் பற்றி வேகமாக குலுக்க பல்லவியின் குறும்பில் வீடே சிரிப்பில் நிறைளீஸ்


மேலும் கலகலப்புடன் காலை உணவை முடித்துக்கொண்டு மூன்று தோழிகளும் பள்ளியை நோக்கிப் புறப்பட்டனர் ஆகஸ்ட் மாதம் ஆதலால் பஸ்ஸில் கூட்டம் இல்லை பரீட்சைக்கு கிளம்பி வந்த மாணவர்களையும் சில உத்தியோகத்தர்களையும் தவிர சனம் அவ்வளவாக இல்லாததால் தோழிகளுக்கு பின் பக்க இருக்கையில் அருகருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது

வழக்கம்போல அமர்ந்தவுடனே பல்லவி கண்ணை மூடி தூங்க தொடங்கிவிட அதுவரை பேசாமல் வந்த தோழியை "வாணி" என்று அழைத்தாள் சப்தவி.
"ஏன்டி ஒரு மாதிரி இருக்க??"
"இல்ல இன்னைக்கு கடைசி பரிட்சை இதுக்கப்புறம் நண்பர்களை பார்க்க முடியாது இல்லையா அதுதான் கவலையா இருக்கு" .
"ஆமாடி எனக்கும் புரியுது கவலையாத்தான் இருக்கு ஆனா இது எல்லாம் கடந்து போனா தானே நம்ம லட்சியங்களை அடையலாம் சீக்கிரமா படிச்சு முடிச்சு அப்பா அம்மாவை நல்லபடியா பார்த்துக்க வேணாமா?".
" புரியுதுப்பா! அப்புறம் உனக்கு இன்னிக்கி கஷ்டமே இல்லை கர்நாடக சங்கீத பாடம் ரொம்ப சுலபமா பாஸ் பண்ணிடுவியே எங்களுடைய நிலைமை தான் திண்டாட்டமா இருக்கும்".
"அடடா நான் படிச்சத எழுத போறேன் அவ்வளவு தானே எழுத்துப் பரீட்சையில் நான் பாஸ் பண்ணிடுவேன் ஆனால் பிராக்டிகல் எக்ஸாம்ல நீ தான் டாப் (top) என் குரல் வளம் பத்திதான் உனக்கு தெரியுமே!!!"

"போதும்டி ரொம்ப நடிக்காத நீ பாடும் போது நான் கேட்டதே இல்லையா குளிக்கும் போது எவ்வளவு இனிமையாக பாடுற ஸ்கூல்ல வேணும்னே ஹஸ்க்கி குரல்ல முணுமுணுக்கிறாய் நம்ம செட்ல பேர்ல இசையை வச்சிக்கிட்டு பல்லவிக்கு சரணத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பாடுறது நம்ம குட்டி கழுதைதான் ஆஆ......" அழகாக பேசிக்கொண்டே போனவள் திடீரென்று அலற என்னவென்று திரும்பிப்பார்த்தால் பல்லவி அவள் கன்னத்தைக் கிள்ளி கொண்டிருந்தாள்.

"யாருடி குட்டி கழுத??"
"ஆமா ஆமா தப்பா சொல்லிட்டேன் மன்னிச்சிரு மன்னிச்சிரு" வாணியின் அழு குரலில் கெத்தாக தலையசைத்த பல்லவி
சப்தவியின் நமுட்டுச் சிரிப்பில் என்னடி?? என்று பார்க்க
" நீ குட்டி கழுத இல்லையாம் பெரிய கழுதையாம்" சப்தவி அபிநயித்து காட்டினாள். மறுபடியும் வாணியை அடிக்கத் தேடிய பல்லவி அவள் இறங்க தயாராக படிக்கட்டருகே நிற்பதை பார்த்து கையை ஓங்கி அடிங்க!!! என்று மிரட்டினாள்.
இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பில்இறங்கி கொண்ட மூவரும் மெதுவாக அன்றைய நாள் பற்றி சலசலத்தவாறு பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர்.
 
#5
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் : 0 2


அந்தப் பாடசாலையின் எல்லா பகுதிகளும் அது ஒரு அரச பாடசாலை என்பதற்கு சான்றாக சிதிலமாக காட்சி அளித்தது. பரீட்சை நடக்கும் மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த மூன்று தோழிகளும் எதிரில் வந்த வகுப்புத் தோழி சுகிர்தாவை பார்த்து காலை வணக்கம் கூறினர், அவள் முகம் வழக்கத்துக்கு மாறாக சிவந்து போய் கண்ணீர் சுவடுகள் தெரிய கண்ணிமைகள் தடித்து வாட்டமாக இருந்தது


இன்றைய கடைசி நாள் பரிட்சை முடிந்ததும் அவள் நாளையே அவளது தந்தை வசிக்கும் இந்தியாவுக்கு பயணப்படுகிறாள் அங்கேயே உயர் கல்வி வேலை திருமணம் என்று அவளது எதிர்காலத்தை பற்றிய திட்டங்கள் ஏற்கனவே அவரது குடும்பத்தாரால் முடிவு செய்யப்பட்டிருந்தது பிறந்த ஊர் வாழ்ந்த இடம் படித்த பாடசாலை கூட படித்த நண்பர்கள் அனைவரையும் விட்டுப் பிரிவது அவளுக்கு மிகுந்த வேதனையான தருணமாக அமைந்து இருந்தது நேற்றிலிருந்து நண்பர்களை பிரிய முடியாமல் அழுது கொண்டே இருக்கின்றாள்

உயிர் தோழிகளை அருகிலிருந்து பார்க்க கூடிய சந்தர்ப்பம் இருந்தும் படித்த பாடசாலையை கடந்து போகும் போதும் வரும் போதும் பார்க்க கூடிய வாய்ப்புகள் இருந்தும் கூட வாணியால் இந்த நிலைமையை சமாளிக்க முடியாது உள்ளது போல் சுகிர்தாவுக்கு இவற்றை நிரந்தரமாக பிரிவது தாங்கொணாத வேதனையைத் தந்தது
நேற்றைய நாளை விட இன்று அவளது மனம் வெகுவாக வேதனை கொள்வதை நண்பிகளால் உணரமுடிந்தது அவளுக்கு ஆறுதல் கூறுவதும் பரீட்சைக்கு தயாராகுவதுமாக அன்றைய பொழுது ஓடிக்கொண்டிருந்தது

இனி பரிட்சை இல்லை!!! பள்ளிக்கூடம் இல்லை !!!ஆசிரியர்கள் இல்லை !!!பாடங்கள் இல்லை!!!!
பள்ளி மாணவர்கள் பரீட்சை முடிந்ததும் மகிழ்வாக புத்தகங்களை கிழிப்பதும் எறிவதுமாக கூச்சலிட்டு கும்மாளமிட்டு ஆரவாரப் படுத்தினர். ஒரு சில மாணவர்கள் ஆசிரியர்களை தேடிப்போய் நன்றி கூறினர் வாழ்த்துக்கள் பறிமாறினர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றனர்

நமது மூவர் குழுவும் அவ்வாறே ஆசிரியர்களிடமும் அதிபரிடமும் விடைபெற்று பாடசாலையில் அவர்களது மனம் கவர்ந்த இடங்களை மறுபடியும் ஒருமுறை பார்த்து மகிழ்ந்து சுகிர்தாவிடம் விடை பெறுவதற்காக அவளைத் தேடிச் சென்றனர்
அவர்கள் அவளைத் தேடி வந்த நேரம் சுகிர்தா பரீட்சை மண்டபத்தில் அவளது மேசை மீது தலை சாய்த்து அழுதுகொண்டிருந்தாள்
"சுகி!!.." என்ற பல்லவியின் அழைப்பில் தலை நிமிர்ந்து பார்த்தவள் அவர்களை கண்டவுடன் மீண்டும் கண்ணீர் விட்டாள் .

"ஏய் என்னப்பா இது?? இதோ இருக்க இந்தியாவுக்கு தானே போகிறாய் இதுக்குப் போய் அழலாமா"

" சேம் சேம் பப்பி சேம் தயவுசெஞ்சு நீ எல்லாம் பல்லவியுடைய ப்ரெண்டுனு சொல்லாத காண்டு ஆகுது எனக்கு மட்டும் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சது இந்தியா என்ன இங்கிலாந்துக்கு பறந்து போயிருவேன் நம்ம இஷ்டத்துக்கு படிச்சி வேலை பார்த்து கல்யாணம் பண்ணி சுதந்திரமாக வாழுவேன் நீயும்தான் இருக்கியே எப்ப பார்த்தாலும் மகாவலிகங்கை மாதிரி கண்ணுல இருந்து ஊத்திக்கிட்டு இருக்க இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது முன்னேற வழிய பார்க்கணும்".

"சும்மா இருடி இவ வேற அவளை இன்னும் கஷ்டப்படுத்தி கொண்டு இங்கே பாரு சுகிர்தா உன்னுடைய அப்பா அம்மா உன்னுடைய நல்லதுக்காக தான் சொல்லுவாங்க அது நல்லபடியா பயன்படுத்தி உன்னோட வாழ்க்கையில் முன்னேறி வருவது உன் கையில தான் இருக்கு"

வாணி சுகியின் கைகளை பற்றி
" சப்தவி சொல்றது சரியானது" என்றிட
" ஜால்ரா ஜால்ரா சிங்சிக்கா"

இதுவரை தோழிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுகிர்தா வாணியின் பேச்சுக்கு பல்லவி ஜிங் சிக்கா போடவும் பலமாக சிரித்துவிட்டாள்.

" என்ன எப்பயும் மறந்துற மாட்டீங்களே???"

நண்பியின் கேள்விக்கு பதிலை மூன்று தோழிகளும் அவளை இறுக்கி அணைத்து ஆறுதலாக முதுகை தட்டிக் கொடுத்து கூறினர்.
சுகிர்தாவை அழைத்துச் செல்ல வந்திருந்த அவரது தாயார் அவர்களிடம் கண்டிப்பாக அவர்களும் ஏர்போர்ட்டுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திட மூன்று தோழிகளும் வீட்டில் பேசி முடிவு எடுப்பதாக கூறி விடைபெற்று பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.

கைகளை ஆட்டியபடியே தத்தமது வீட்டுக்குள் நுழைந்த நண்பர்களை விட்டு தனது வீட்டுக்குள் நுழைந்த சப்தவி "அம்மா" என்று கூறிக்கொண்டே அவரை தேடிட பூஜை அறையில் அமர்ந்திருந்த அவளது பாட்டி "அம்மா இல்லடா வெளியில கொஞ்சம் போயிருக்காங்க" என்றுவிட்டு இன்னைக்கு பரீட்சை எப்படி எழுதின? என்ற கேள்வியைத் தொடுத்தார்

"எக்ஸாம் சூப்பரா எழுதி இருக்கேன் இதில் எப்படியும் என்பது மார்க்ஸ் தேறும்" என்று விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்துமுடித்து தலையை துவட்டி கொண்டே வெளியே வந்த சப்தவியின் கண்களில் முதலில் பட்டது அம்மா கைகளில் இருந்த புத்தம்புதிய சுடிதார் செட்கள் தான்

"என்னம்மா இது புது பிசினஸா??"

"இல்லடா இது உங்க மூணு பேருக்கும் என்னோட புதிய பரிசு

"எதுக்குமா இப்ப வீண்செலவு மறுபடியும் மேல்படிப்பு தொடங்க வரைக்கும் வீட்டுல இருக்க போறோம் இதுல புதுத்துணி என்னத்துக்கு"

" அதில்லம்மா இன்னைக்கு நீ உங்க பிரண்ட வழி அனுப்புவதற்காக ஏர்போர்ட் போறிங்க இல்லையா அப்ப போட்டுட்டு போறதுக்கு நல்லதா ஒரு துணி வேணாமா அதான் மூணு பேருக்கும் டிரஸ் வாங்கி இருக்கேன்

அதோட இன்னிக்கு கிளம்பி போற சுகிர்தாவுக்கும் புது டிரஸ் வாங்கி இருக்கேன் நம்ம ஞாபகார்த்தமாக அவகிட்ட இந்த பரிசுப்பொருள கொடுத்து விடுங்கள்"

" அம்மா நாங்க வாறதா சொல்லவே இல்ல அம்மா"

"அதுதான் அம்மா பர்மிஷன் கொடுத்து விட்டேனே மூணு பேரும் போயிட்டு வாங்க நான் எல்லார்கிட்டயும் சொல்லி கொள்கிறேன்."

"ரொம்ப நன்றி அம்மா"

" சரி சரி நன்றி எல்லாம் இருக்கட்டும் உங்கள் மூன்று பேருக்கும் எதெது வேணும்னு சொல்லுங்க"

"எப்படியும் நீங்க கலர் பார்த்து தான் வாங்கி இருக்கீங்க நீங்களே மூணு பேருக்கும் பிரிச்சு கொடுங்க"

"அப்படின்னா உன்னோட சந்தன கலர்க்கு எடுப்பா இந்த குங்கும கலர் சுடிதார் அதே டிசைன்ல பல்லவிக்கு இளநீலமும் வாணிக்கு கிளிப்பச்சையும் சுகிர்தாவுக்கு இந்த வயலட் கலர் இப்ப சொல்லு எப்படி அம்மாவோட செலக்சன்?".

மனக்கண்முன் மூவரையும் நினைத்துக்கொண்டு பொருத்தமாக கலர் தெரிவு செய்த அம்மாவின் கேள்விக்கு கன்னத்தில் முத்தமிட்டு பதிலுரைத்த சப்தவி சுடிதாருடன் குதித்துக்கொண்டு அறைக்குள் ஓடினாள்.

மாலை 4 மணிக்கு தோழிகள் மூவரும் குடும்பத்தினரிடம் விடைபெற்று சுகிர்தாவின் குடும்பத்துடன் ஏர்போர்ட்டுக்கு சென்றனர், செல்லும் வழியெல்லாம் வருத்தத்துடன் பேசிக்கொண்டு வந்த தோழியை வாணியும் சப்தவியும் ஆறுதல் படுத்திக் கொண்டே வர பல்லவி சூழ்நிலையை இதமாக மாற்ற கலகலப்பாக பேசியவாறே வந்தாள்.

முடிந்த அளவு தோழியின் மனவாட்டத்தை மாற்றுவதற்கு முயன்ற மூன்று தோழிகளும் திரும்பி வரும்போது தாங்களே கனத்த மனத்துடன் வரப் போவதை அறியாமல் அந்த மாலை வேளையில் தோழி உடனான கடைசி தருணத்தை அனுபவித்து பயணப்பட்டனர்.
 
#6
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் : 0 3

அடிக்கடி ஏதாவது விபத்துக்கள் குண்டுவெடிப்புகள் பாரிய அனர்த்தங்கள் நிகழ்வதால் இலங்கை ஏர்போர்ட் பரபரப்பாகவும் அதீத பாதுகாப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயங்களில் இரண்டாவது வலயத்திலேயே வாகனத்தை விட்டு இறங்கி அனைவரும் தேசிய அடையாள அட்டையை காட்டிய பின்பே மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இது தான் முதல் முறை என்பதால் தடுமாற்றமாக இருந்த பொழுதிலும் சுகிர்தாவின் குடும்பத்தினருடன் இணைந்து தங்கள் தேசிய அடையாள அட்டைகளை காட்டிய பின்பு தோழிகள் மூவரும் ஏர் போர்ட்டுக்குள் நுழைந்தனர்.

மிதமான ஏசியுடன் பல்வேறு அங்காடிகளையும் ஏர்போர்ட்டின் உட்புறத்தையும் கண்டு ரசித்தவாறு தோழிகள் சுகிர்தாவுடன் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர்தோழிகளின் அறிவுரைகளையும் அவர்களின் ஆறுதல் பேச்சையும் பல்லவியின் கலகலப்பையும் ரசித்தவாறு அமர்ந்திருந்த சுகிர்தா அவளது விமானத்திற்கான அறிவிப்பை கேட்டதும் மீண்டும் பொலபொலவென கண்ணீர் விட அதுவரை அவளது குறும்பால் விமான நிலையத்தயே இரண்டாக்கிக்கொண்டிருந்த பல்லவிக்கூட அழுது விட்டாள்.

தோழியை மறுபடியும் ஆறுதல் படுத்தி விமானத்திற்காக அவள் உள்ளே செல்லும்வரை கையை ஆட்டி நின்ற மூவரும் மீண்டும் அவளை காணும் நாளுக்காகவும் அவளது வளமான எதிர்காலத்துக்காகவும் வேண்டிக் கொண்டனர்.

பின்பு கண்ணீரை துடைத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்

சுகிர்தாவின் குடும்பம் அவர்கள் மறுபடியும் வீடு செல்வதற்காக ஏற்படுத்திக் கொடுத்திருந்த வாகனத்தின் சாரதிக்கு வாணி அழைக்கும் போது தான் அவன் அவர்களை கடந்து சென்றான்.

நல்ல உயரமாக சிவந்த நிறத்துடன் ஏதோ உயர்ரக நறுமணம் அவனிடமிருந்து வீசியது

"வெளிநாட்டுக்காரன் போல" என்று நினைக்கும்போதே அவன் தமிழில் பேசுவது கேட்டது
" பயங்கர மோசமான நாடுப்பா இது"
யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தான்.
யாரிடம் ஆயினும் தனது தாய் நாட்டை தரக்குறைவாகப் பேசும் போது பல்லவிக்கு ரத்தம் கொதிக்க அது வரை நேற்று பார்த்த வால்போஸ்டரின் மாடலுடன் அவனை ஒப்பிட்டு பார்த்திருந்தவள்

"வெளியில தான் வாசம் உள்ளுக்கு சுத்த மோசம்".
என்று ரைமிங்கில் திட்டி விட்டாள்

அவன் வந்து அவர்கள் முன் நின்றதிலிருந்தே பல்லவி ஜொள்ளு விட்டதை முறைத்த படி இருந்த சப்தவி அவனின் பேச்சில் அவள் முகம் சுருக்கியதும் பின் கோபமாக திட்டியதும் சத்தமாக சிரித்து விட்டாள்.

அதுவரை அலைபேசியில் பிசியாக பேசிக்கொண்டிருந்த வாணி இந்த சிரிப்பு சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அவள் உடனே அந்த புதியவனும் திரும்பிப் பார்த்தான். பார்த்தான் என்பதைவிட முறைத்தான் என்று சொன்னால் இந்த சிச்சுவேஷனுக்கு பொருந்தும்


அவனுக்கு கேட்டு விட்டது என தோழிகளுக்கு புரிந்தது கொஞ்சம் தள்ளி நின்ற வாணிக்கு நடந்தது முழுதாக புரியாவிடினும் பல்லவியின் திருட்டு முழியில் அவர்கள் பக்கம் தான் தப்பு என நொடியில் புரிந்தது

என்னதான் கோபத்தில் பேசினாலும் புதியவனின் கூரிய பார்வையில் பல்லவிக்கு உடல் சிலிர்த்து விட்டது. அந்த நிலைமைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வாணி கூட அவனது பார்வையில் கலங்கி நிற்க சத்தமாக சிரித்த சப்தவியோ கலங்காமல் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்

அவளது பார்வையை ஒருவித அலட்சியத்துடன் எதிர்கொண்ட அந்த புதியவன் "திமிரு புடிச்சவ பார்க்குறத பாரு " என்று மனதுக்குள் ஏளனமாக கூறிக் கொண்டான்.
இதற்கிடையில் அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டுகொண்ட வாணி தோழியை காப்பாற்றும் நோக்கோடு

"மன்னிச்சிடுங்க சார் ஏதோ விளையாட்டுக்கு சொல்லிட்டா" என்று மன்னிப்பு கேட்க

அவன் ஆங்கிலத்தில் "நீ எதற்கு மன்னிப்பு கேட்கிற உன் தோழிகளை கேட்கச் சொல்லு" என பல்லவியையும் குற்றவாளியாக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னான்.

அவனது ஸ்டைலான ஆங்கிலத்தை ரசித்துக்கொண்டிருந்த பல்லவி அவளையும் குற்றவாளி லிஸ்டில் சேர்த்து அவன் மன்னிப்பு கேட்க சொன்ன தோரணையில் சப்தவியின் பின்னே ஒளிந்து கொண்டு

"காப்பாத்துடி"
என அதுவரை அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சப்தவி முதல் முறையாக வாயை திறந்து

"எதுக்கு உன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்"
என அதிரடியாக கேட்க அவளைத் தவிர அங்கு நின்ற மற்ற மூவரும் திகைத்து விழித்தனர்.

வாணி "சப்தவி" என அதட்ட

பல்லவி "அடிப்பாவி" என அலற

அந்த இரு பெண்களையும் ஓவர்டேக் செய்து கொண்டு ஒலித்தது அந்த புதியவனின் குரல்

" யூ இடியட் என்ன தைரியம் இருந்தா மரியாதை இல்லாம பேசுவ நேத்து முளைத்த கத்தரிக்காய் மாதிரி கையும் காலையும் வச்சுக்கிட்டு இந்த சைஸ்ல இவ்வளவு வாயா உனக்கு ஒழுங்கா மன்னிப்பு கேளுடி"

"யாரப்பாத்து டா டி சொன்ன"

"என்னது டா வா" பல்லவி
அதிர்ச்சியாக வாணி சப்தவியின் கரத்தைப் பற்றி இழுத்தாள்

"மறுபடியும் சொல்றேன் ஒழுங்கா மன்னிப்பு கேட்டுட்டு ஓடிப் போயிடு இல்ல அப்படியே அறைஞ்சுடுவேன்"

ஏற்கனவே சிவந்த அவன் முகம் ரத்த நிறமாக புதியவன் சப்தவியை நெருங்க போகும் போது வாணி குறுக்கே வந்து கையெடுத்து கும்பிட்டு
"சார் ப்ளீஸ் விடுங்க நான் அவள கண்டிக்கிறேன் "
என்று கெஞ்சும் குரலில் வேண்டும்போது சப்தவி ஏதோ சொல்ல வந்தாள்.

அவள் வாயைத் திறந்தாலே ஏதாவது ஏழரையை கூட்டி விடுவாள் என்று பயந்து அவள் வாய் பொத்தி பல்லவி பின்னே இழுத்து செல்ல முயலும் போது

"ஸ்வராக்"
என்று ஒரு குரல் கேட்டது.

ஸ்வராக் அந்த இளைஞனின் குரலை கேட்டு திரும்பிப் பார்க்க வாணி அந்த குரலை அடையாளம் கண்டு கொண்டு மெதுவாக புதியவனின் தலையை தாண்டி எட்டிப்பார்த்தாள்.

இப்போது திகைத்தது அந்த இளைஞனின் முகம்

"வாணி நீ எங்க இங்கே இங்கே என்ன பிரச்சனை நடக்குது ஸ்வராக் நீங்க இப்ப வெளிய வந்தீங்க எப்ப உங்க பிளைட் லேன்ட் ஆகியது???"

"ஹலோ வெங்கட் என்னோட பிளைட் சீக்கிரமாவே லேண்ட் ஆகிவிட்டது உங்களுக்கு சிரமம் வேணாம்னு நான் வெளியில வந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்" என கூறிக்கொண்டிருக்கும் போதே "

"அப்போ இங்க என்ன பிரச்சனை?? என வினவினான் வெங்கட்.

"அது அது வந்து.... என வாணி இழுக்க அவள் தோழிகளை காப்பாற்ற முயல்வதாக எண்ணி கொண்ட ஸ்வராக்

"ஏய் என்ன இழுவை ஒழுங்கா என்ன நடந்துச்சுன்னு சொல்லு!!என மிரட்ட

அவனது மிரட்டலில் வெங்கட்டை பார்த்து காப்பாற்று என்று கலங்கிய கண்களால் வாணி கெஞ்சினாள்.

" ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........ஸ்வராக் அவளை ஏன் மிரட்டுற என்ன மதுரவாணி இந்த தடவை எந்த ப்ரெண்டு பிரச்சனை பண்ணா? இன்னைக்கு யாருக்கு பதிலா நீ மன்னிப்பு கேட்டுட்டு இருக்க."

என்று இது வழக்கமாக நடப்பது தான் எனும் சாதாரண தொணியில் கேள்வி கேட்க வாணி தலையை குனிந்து கொண்டாள்.

இதற்குள் எதையோ இனம் கண்டு கொண்ட பாவனையில் முகத்தில் ஒரு விசித்திர புன்னகை ஸ்வராக்கிடம் தோன்ற அவ்வளவு நேரம் பல்லவியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சப்தவி அந்த நொடியில் அவனின் முகத்தை பார்த்து பிரமித்து போய் நிற்க தனக்குள் அதுவரை இருந்த வெம்மை சட்டென கரைந்து போக ஒரு மெல்லிய குளிர் தன்னை அரவணைப்பதை போல் உணர்ந்தாள்.

19 வயதில் இந்த மாதிரி கிறுக்குத்தனங்கள் தோன்றுவது இயற்கையென அதை புறந்தள்ளிவிட்டு மறுபடியும் அவனை கோபமாக முறைக்க முயல அதே நொடியில் அவளை எடை போடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஸ்வராக் அவளின் பிரமித்த முகத்தையும் அந்த கண்களில் ஷணத்தில் வந்தமர்ந்த கோபத்தையும் ரசித்து பின் அந்த ரசனையை அவசரமாக அழிக்க பல்லவியின் "வெங்கட் சார்" என்ற அழைப்பில் இருவரும் கவனத்தை திருப்பி பார்த்தனர்.

அவன் வெங்கடேஷ் சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் என்ற முதலுதவி வகுப்பின் ஆசிரியர் பல்லவிக்கு அந்த மாதிரி பிரத்தியேக வகுப்புகளில் ஆர்வம் இல்லை

சப்தவிக்கு ஆண் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புக்களின் மேல் விருப்பம் இல்லை

இதெல்லாம் வாணியின் பிரிவுகள்
சினிமாவில் காட்டும் மழைக் காட்சியில் நனைந்து கொண்டிருக்கும் நாய்க்கு அரவணைத்து பிஸ்கட் போடும் ஹீரோயினின் பிரதி தான் நம் வாணி.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது பிடித்தமானதாக இருந்தாலும் சப்தவிக்கு அதை வகுப்பின் மூலம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லை முக்கியமாக ஆண் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகளில் கற்பதில் விருப்பமில்லை

இவர்களில் மிக மோசம் பல்லவிதான் அவளுக்கு முக்கியமான பாடங்களை கற்கும் நேரத்திலேயே தூக்கம் வந்துவிடும் இதில் பிரத்தியேக வகுப்புக்கு எங்கே செல்வது!!!

ஆனால் தோழியை தனியாக வகுப்புக்கு அனுப்புவதில் இருவருக்கும் விருப்பமில்லை முக்கியமாக சப்தவிக்கு அதனால் வகுப்பறை வாசலிலேயே இருவரும் காவல் இருப்பர்

வழக்கம்போல பல்லவி தூணில் சாய்ந்து தூங்க சப்தவி ஏதாவது புத்தகத்தில் முகத்தை நுழைத்துக்கொண்டு இருப்பாள்

ஏர்போர்ட்டின் வெளியே வெங்கடேஷை கண்ட மூவரும் அவர் எப்படி இங்கே வந்தார்
இந்த ஸ்வராக் யார் என யோசித்துக் கொண்டிருந்தனர்.
 
#7
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் : 0 4

ஸ்வராக்கை அழைத்துச் செல்ல வந்திருந்த வெங்கட்டுக்கு அந்த நேரத்தில் மாணவிகள் மூவரையும் கண்டு முதலில் என்னவோ என்று நினைத்தாலும் பின்பு சுகிர்தா இன்று இந்தியாவுக்கு பயணம் ஆவது நினைவில் வந்திட அவளை பற்றி விசாரித்தான்

"அவள் கிளம்பி விட்டாள் சார்" என்று பல்லவி பதில் கூறிட

"அப்படின்னா நீங்க எப்படி இங்க இருந்து போவீங்க?? நான் உங்களை டிராப் பண்ணட்டா!!!"

கேள்வி பொதுவாக இருந்தாலும் பார்வை வாணியை தொட இதற்கு தோழிகள் பதில் கூறுவதற்கு முதல்

சப்தவி "எங்களுக்கு கார் இருக்கு" என்று பதில் கூறினாள்

பதில் வெங்கட்டுக்காக இருந்தாலும் பார்வை ஸ்வராக்கை துளைத்திட்டது.

ஓஓ.... அந்த பதிலில் வெங்கட்டின் முகம் அப்பட்டமாய் ஏமாற்றத்தை காட்ட அதை இரு கண்கள் விநோதமாக பார்த்தது.

"ஆமாண்டா பெரிய பிஎம்டபிள்யூ கார் வச்சிருக்காங்க அதுல ஸ்மூத்தா போவாங்க நீ வாடா நாம கிளம்பலாம் ஆனா அதுக்கு முதல்ல உன் வானரக் கூட்டத்தை என் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு இல்லன்னா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவாங்க".


"எதுக்குடா மன்னிப்பு இங்கே என்னதான் நடந்தது"

"இந்தா நிக்கிறாங்களே இந்த ரூப சுந்தரி இவங்க என்னப்பத்தி மொக்க கமென்ட் அடிக்க அதுக்கு இந்த சொப்பன சுந்தரி பேய் மாதிரி சிரிக்கிறா டா .......
என்னவோ ஜோக் ஆஃப் த இயர் கேட்ட மாதிரி என்னா சிரிப்பு!!!
இவள் அடிச்ச கமெண்ட்ட கூட மன்னித்து விடலாம் ஆனால் அதற்கு இவள் சிரிச்ச சிரிப்ப தான் மச்சான் என்னால தாங்க முடியல
பொண்ணா இது பிசாசு!!! அராத்து!!! பஜாரி!!!"

அவன் பயங்கரமாக திட்டிக் கொண்டே செல்ல

" ஸ்வராக் ஏண்டா இப்படி பேசுற சின்ன பொண்ணுங்கடா"

"அத தான் நானும் சொல்றேன் சின்ன பொண்ணுங்க மரியாதையா பேசிருக்கனும்"

"ப்ளீஸ் மன்னிச்சிருங்க சார்"

இப்போது பல்லவியும் சேர்ந்து பணிவுடன் மன்னிப்புக் கேட்டாள்

அவர்களுக்கு இங்கு இருந்து கிளம்பினால் போதுமென்று ஆகி விட்டது சப்தவி கல்போல இறுகிப் போய் நின்றாள்.

யார் கேட்டாலும் இந்த ராங்கி கேட்கமாட்டா போலவே இவளை இப்படியே விட்டு விட மனசு வரமாட்டேங்குது பெருசா எதாவது செஞ்சுட்டு போகணும் என்று மனசுக்குள் நினைத்து கொண்ட ஸ்வராக் .

அவனையும் வாணியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்ற வெங்கட்டின் தோள் மேல் கையை போட்டு அவனை அருகில் இழுத்து காதோடு ஏதோ உரையாடி விட்டு
சத்தமாக

"அப்பவே நினைச்சேன் இதுங்க பேப்பர் கரெக்சன் தான் பண்ணனுமா

சந்தோசம் நல்லபடியா பாஸ் பண்ண வச்சிர வேண்டியதுதான் ஏன்மா நீ என்ன கலைப்பிரிவு மாணவியா ஆனாலும் நீ ரொம்ப பாவம் யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு பேசனும் அவசரப்பட்டு வாய விட்டுட்டு அனுபவிக்க போற இரு எல்லா பேப்பர்லயும் முட்டை முட்டையா போடுறேன்"

என்று ஏளனத்தை அள்ளித் தெளித்த குரலில் தோளை குலுக்கியவாறு கூறிக் கொண்டே அவள் முகத்தில் எதும் உணர்ச்சி தெரிகிறதா என ஆராய

அவன் தேடலை கண்டு கொண்ட சப்தவி
"ஆசை தோசை இந்த பூச்சாண்டி எல்லாம் வேற யார் கிட்டயாவது ட்ரை பண்ணு மேன் என்று கண்களால் ஸ்வராக்கை உறுத்து விட்டு

" ஏன் முட்டை போட நீ கோழியா?? " என வினவினாள்

அவளது நக்கலில் ஸ்வராக் பல்லை கடிக்க அவள் கண்டு கொள்ளாமல்
தோழிகளை இழுத்து கொண்டு நடையை கட்டினாள்.

இதுவரை சுற்றுப்புறத்தை உணராமல் மதுரவாணியிடம் லயித்திருந்த வெங்கட் வாணியை சப்தவி இழுத்து செல்லும் போது திடுக்கிட்டு

"டேய்ய் அவங்க போறாங்கடா என்னடா ஆச்சு இங்க.!!! என்று பதற

அவன் "போகட்டும் விடுடா" என்றான் அசிரத்தையாக.

அருகில் இருந்த லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு நண்பனையும் இழுத்துக்கொண்டு வண்டிக்கு செல்லும்போது அவன் மனம் முழுவதிலும் அலட்சியம் மட்டுமே நிறைந்திருந்தது.


"திமிர்!!! உடம்பெல்லாம் பயங்கர திமிர்!!! அவனது முயற்சியை அவள் கண்டு கொண்டு உறுத்து பார்த்தது அவனை கடுப்பாக்கியது.


இந்தப் பக்கம் தோழிகளை அழைத்துக்கொண்டு சென்ற சப்தவியின் மனம் முழுவதும் கோபமும் வெறுப்பும் மண்டிக்கிடந்தது.

"முட்டை போடுவானாம் முட்டை சரியான கூமுட்டை"

வீடு வந்து சேர்ந்த பின்பு உணவை முடித்து விட்டு கட்டிலில் விழுந்த சப்தவியின் எண்ணங்களை ஸ்வராக் ஆக்கிரமிக்க முயல அவனை பலவந்தமாகக் மனதிலிருந்து விலக்கியவள்

தனது தாயின் கடந்த காலங்களை நினைவு கொண்டு வேறு எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு தூங்கிப் போக

அவளைப்போலவே அவனது எண்ணங்களிலும் சப்தவியின் பிரமித்த முகம் ஒருநொடி வந்து போய் அவனது கட்டுப்பாட்டை தளர்த்த முயற்சித்தது

பற்களைக் கடித்துக்கொண்டு

"இடியட் நீ எவ்வளவு முயற்சி பண்ணாலும் என்னை சாய்க்க முடியாது"

என தனக்குத் தானே கூறிக் கொண்டவன் சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்

அவர்களைப் போலவே அந்த இரவு நேரத்தில் இன்னும் மூன்று ஜீவன்கள் தூங்காமல் வேறு வேறு காரணங்களுக்காக விழித்துக்கொண்டு போராடி பிறகு போராட்டம் உதவாது தூங்கிப் போகின்றனர்


பல்லவிக்கு அன்றைய இரவு நேர சாப்பாடு கிடைக்கவில்லை அத்தையின் கைங்கரியம் என்று தெரிந்தது

கண்ணீர்விட்ட தாயை திட்ட மனம் வராமல் பசியோடு படுத்து போராடி பின்பு தூங்கிப் போக

அவளது பக்கத்து வீட்டில் தனது அறையில் படுத்திருந்த வாணிக்கு குற்ற உணர்வில் தூக்கம் வரவில்லை.


" எத்தனை நாள் இதேமாதிரி ஒளித்து மறைத்து வைப்பது நண்பர்களுக்கு தான் செய்யும் துரோகத்தை அவர்கள் அறிந்து கொண்டால் அதன் பின் அவளது நட்பின் நிலைமை என்னவாக இருக்கும்

அவளை மட்டுமே ஆதாரமாக எண்ணி வாழும் பெற்றோரின் நிலை என்ன???
அவள் கலைவாணியின் மகளாகவே இருக்கப் போகிறாளா அல்லது கோகிலவாணியின் தங்கை என நிரூபிக்கப் போகிறாளா!!!"

கேள்விகளின் சுமையை தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய படுத்திருந்தால் வாணி.

அந்த பெரிய பங்களாவின் தனி அறையில் கட்டிலில் அமர்ந்து மடியில் வைத்திருந்த புத்தகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கட்டின் மனம் முழுவதிலும் வாணியின் முகமே நிறைந்திருந்தது

கடைசிநாள் பரிட்சைக்கு வந்த அவளை காண முடியாமல் தான் தவித்ததும் அன்று இரவே அவளை மீண்டும் காணக்கிடைத்ததும் இது தெய்வ சங்கல்பம் போல தோன்ற வாணியை பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போனான்.
 
#8
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் :0 5

அந்த பொன் மாலை நேரத்தில் பறவைகளின் வேகமான கூடு திரும்பலை ரசித்தபடி இடையை தாண்டி படர்ந்து ஈரம் சொட்டிய கூந்தலை விரித்து விட்டு பால்கனியில் இருக்கும் ஈசி சேரில் அமர்ந்து அவன் வரவை எதிர் நோக்கி இருந்தாள் சப்தவி

பால்கனியில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை ரோஜா செடிகளில் மொட்டுக்களும் பூக்களும் மாலை காற்றுக்கு அசைந்தாடி கொண்டிருந்தன

நேரம் அதன் பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க மாலை கவிழ்ந்து இரவு தொடங்கிவிட்டது அவனைத்தான் இன்னும் காணவில்லை,

அவள் அணிந்திருந்த வெண்ணிற சுடிதாரின் துப்பட்டா காற்றில் பறக்க அங்குமிங்கும் உலவி களைத்தவள் பால்கனியில் அமர்ந்தவாறு ஜன்னல் ஊடாக தெரிந்த கடிகாரத்தை வெறிப்பதும் வாசலை எட்டிப் பார்ப்பதும் ஆக தவித்துக் கொண்டிருந்தாள்.


ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தின் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமத்தை சீர் செய்து கொண்டு மனதுக்குள்


"வரட்டும் இன்னைக்கு!! வீட்டுல ஒருத்தி தனியா தவிக்கிறா என்ற நினைப்பே இல்லாமல் எப்ப பார்த்தாலும் லேட்டா வாரது அப்படி என்னதான் ஆபீஸ் வேலையோ!!! "

மனதோடு அவனிடம் உரையாடிக்கொண்டிருந்த நொடியில் அவன் பின்னிருந்து அணைக்க திடுக்கிட்டுத் திரும்பியவள்

அவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து கூச்சமூட்டியதால் வெட்கத்துடன் அவனை நிமிர்ந்துப் பார்த்திட ஸ்வராக் சட்டென்று சப்தவியின் இதழ்களை சிறை செய்கின்றான்.


" அம்மாமாமாமா............... என்று அலறியபடி எழுந்த சப்தவிக்கு வேர்த்து கொட்டியது.

"என்ன கண்ணா கனவு கண்டியா??.."

பக்கத்தில் வந்து அம்மா கேட்கும் வரை உடல் நடுக்கத்தோடு சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தவள்

கடிகாரத்தில் அதிகாலை மூன்று மணி என்ற நேரத்தை பார்த்ததும் விக்கித்துப்போய் தாயிடம்

"அம்மா அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமா????..."

"ஆமாண்டா ஏன் கேட்குற!!!

"இல்லம்மா சும்மாதான்"...

"சப்தவி தண்ணி குடிச்சிட்டு தூங்குமா!!..."

"சரிமா.."

மீண்டும் படுக்கையில் சாய்ந்தவாறு கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அதன்பிறகு தூங்காமல் கொட்ட கொட்ட விழித்து இருந்தாள்.


"ஐயையோ என்ன மோசமான கனவு இது!! இந்த மாதிரி எத்தனை கனவு

டேய் கொடுக்கா ஏன்டா இப்படி இம்சை பண்ற இந்த 3 வருஷத்துல அவனை என்ன பண்ணியும் மறக்க முடியலையே!!
இனிமே நீ என் கனவுல வந்து பாரு கண்ணு முழி இரண்டையும் தோண்டிருவேன்."

புசுபுசுவென்று மூச்சு விட்டப்படி ஸ்வராக்குக்கு மனதில் டோஸ் விட்டவள் அப்படியே தூங்கிப் போனாள்.

உறக்கமும் விழிப்புமாக புரண்ட நேரமெல்லாம் அந்நியனாய் உருமாறி அவனுக்கு கருட புராண தண்டனைகளாய் தந்து
அரைகுறை தூக்கத்தில் விழித்து எழுந்தவளின் காதுக்கு இனிமையாக கேட்டது வாணி பாடும் கந்த சஷ்டி கவசம் அவளுடன் இணைந்து அம்மா, அம்மம்மா, பல்லவி மூவரும் பாடிக்கொண்டிருந்தனர்.

சிவந்த கண்களோடு வரவேற்பறைக்கு வந்தவள் புதுமையாக அவர்களோடு இணைந்து பல்லவி பக்தி பரவசத்தோடு பாடுவது எதனால் என்று மூளையைக் கசக்கி யோசித்தாள்

அவளது சிந்தனை புரிந்ததோ என்னவோ அவளை திரும்பிப் பார்த்த பல்லவி

இன்று இன்டர்வியூ!! இன்னும் என்ன செய்கிறாய் நீதான் லேட்..


என சைகையால் சொல்ல அதற்கு மேல் அங்கு நிற்க சப்தவி என்ன லூசா?? சிட்டாக பாத்ரூமுக்குள் பறந்து விட்டாள்.


( என்ன கதை சம்பந்தம் இல்லாம போகிறாப் போலிருக்கா...?

சாரி அன்பர்களே ஓப்பனிங்குல
மூன்று வருடங்களுக்கு பிறகு அப்படினு போட மறந்துட்டேன்

அட ஆமாங்க சுகிர்தாவ அனுப்பிட்டு வீட்டுக்கு வந்த நம்ம சப்தவி,வாணி,பல்லவி வாழ்க்கையில மூனு வருஷங்க இப்படி சீக்கிரம் ஓடி போயிட்டதால அடுத்த அத்தியாயத்தில் ஒரு சின்ன பிளாஸ்பேக்!!!!

என்னோட சேர்ந்து எல்லோரும் அப்படியே மேல பாருங்க......)
 
#9
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் : 0 6

உயர்தரப் பரீட்சையில் நம் தோழிகள் மூவரும் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அரச பல்கலைகழகத்துக்கு தெரிவாகி விட்டனர்.

அவர் அவர்களுக்கு பிடித்த துறைகளில் மேற்படிப்பை தொடர முடிவெடுத்துள்ளதாக பெற்றவர்களிடம் கூறி அனுமதி வாங்கி சந்தோஷமாக பல்கலைகழகத்தில் நுழைந்தவர்களுக்கு அவ்வளவாக அதிர்ஷ்டம் இருக்கவில்லை போல அவர்களின் மகிழ்ச்சியின் ஆயுள்காலம் இரண்டு வருடம் மட்டுமே இருந்தது.


இலங்கையில் அரசியல் நிலவரங்கள் காரணமாக அரச பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வருடமாக எந்த பாடங்களும் நடக்கவில்லை

ஒவ்வொரு நாளும் இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்போடு மூவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதும் பின்பு பாடங்கள் எதுவும் நடக்காமல் அங்கே மரத்தடியில் அமர்ந்து இருந்து ஏமாற்றத்துடன் திரும்புவதுமாக காலம் தான் கரைந்தது.


பள்ளி நாட்களிலேயே உயர்கல்வி பற்றி அளவில்லாத கற்பனைகளோடு இருந்ததால் இந்த நிகழ்காலம் நரகமாக இருக்க எதிர்காலம் கேள்விக்குறியானது.

இவர்களை போலவே நல்ல பெறுபேறுகளை பெற்று வாழ்வில் முன்னேறி விட முயன்று கொண்டிருந்த பல ஏழை மாணவர்களுக்கு இந்த நிலவரத்தால் பெரும் இன்னல்கள் ஏற்பட்டன

பல பேர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு கிடைத்த வேலைகளில் சேர்ந்து குடும்பத்திற்கு உழைத்தனர்

இன்னும் சில வசதியான மாணவர்கள் பிரைவேட் ஆக தங்கள் மேற்படிப்பை தொடர்ந்தனர்

மறுபடியும் அரச பல்கலைக்கழகம் திறக்கும் வரை காத்திருக்கலாம் என்று முடிவெடுத்த மூன்று தோழியரும் வீட்டுக்கே திரும்ப

அம்மூவரும் மூன்று விதமாக பாதிக்கப்பட்டதன் விளைவுதான் இந்த மேற்படிப்பு நிறுத்தமும் வேலை தேடலும்,


தமிழ்மணி எவ்வளவோ எடுத்துக்கூறியும் தோழிகளை விட்டுவிட்டு பிரைவேட் ஆக படிக்க மறுத்துவிட்டாள் சப்தவி

அவள் பிரைவேட்டாக படிப்பதற்காக தாய் இன்னும் மேல் அதிக நேரம் உழைக்க வேண்டும் அந்த கஷ்டம் அவருக்கு வேண்டாம் என்ற உண்மை காரணத்தை அவள் வெளியே சொல்லவில்லை

தமிழ்மணியை போலவே வாணியின் தகப்பனார் சந்திரசேகரனும் இன்னும் அதிக நேரம் உழைத்து மகளை படிக்க வைப்பதாக கூறினார்

ஆனால் வாணியும் மறுத்துவிட்டாள்

அவளுக்கு தந்தை கடினமாக உழைப்பது வருத்தமாக இருந்தாலும் அவள் வெளியே சொல்லாமல் மறைத்த காரணம் "சில்வா" என்ற கடன்காரனின் தொல்லை

மூத்த மகள் கோகிலவாணியால் பெற்றோர் கலைவாணியும் சந்திரசேகரனும் கடனுக்கு மேல் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது ஆபத்பாந்தவனாக நுழைந்தவன் தான் "சில்வா".


அந்த மாத வட்டி கடன்களை முழுவதுமாக அடைத்தவன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தந்து விடுங்கள் என்று கூறிவிட்டு இப்போது வட்டிக்கு மேல் வட்டி வாங்கிக் கொண்டு அவர்களை கொன்று கொண்டிருக்கிறான்.

ஏற்கனவே பிரச்சனைகளால் குடும்பம் தடுமாறிக் கொண்டிருப்பதை அறிந்த வாணி

நல்லபடியாக படித்து அரசாங்க வேலைக்கு சென்று குடும்பத்தை நிலைகொள்ள செய்யலாம் என்று நினைத்து இருக்கும்போதுதான் அரசாங்க பல்கலைக்கழக பிரச்சனையால் அவள் வீட்டில் தங்க நேர்ந்ததும் சில்வா பெற்றோரிடம் சொல்வதை கேட்டதும்

அவனின் வியாபாரம் இப்போது அவர்கள் வீட்டு முற்றத்தில் தான் நடக்கிறது.

இப்போதெல்லாம் சில்வா அடிக்கடி வாணியின் வீட்டுக்கு வருகிறான் பெற்றவரை மிரட்டுவதும் உருட்டுவதுமாக இருப்பவன் வாணியை காணும்போதெல்லாம் அதிகமாக குழைகின்றான்.

அவனின் அருவருப்பான பார்வையையும் சீண்டலான பேச்சையும் கேட்பதை விட எங்கேயாவது வெளியே சென்று வேலை பார்த்து அவனிடமிருந்து தப்புவதோடு குடும்பத்தையும் காப்பாற்றுவது தான் வாணியின் நோக்கம்.

பல்லவிக்கு மேல்படிப்பு படிப்பது மிகப்பெரிய கனவு

ஆரம்பத்திலிருந்தே அவளது பெற்றோர் கோடிஸ்வரனும் சுபத்திராவும் மேற்படிப்பு வேண்டாமென்றும் வேலைக்கு சென்று குடும்பத்திற்கு உதவும் படியும் கேட்டுக் கொண்டிருந்தனர்

ஏதோ தமிழ் மணியால் தான் அவள் இவ்வளவு தூரம் படிப்பதே இப்போது அதற்கும் முட்டுக்கட்டை விழுந்து விடவே அவள் வேலைக்கு செல்வது கட்டாயம் ஆகிவிட்டது.

"வேறு வழியில்லை ரீ ஓபனிங் வரைக்கும்"

என தம்மை தாமே சமாதானப்படுத்தி இதோ மூன்று பேரும் தயாராகி குடும்பத்திடம் விடை பெற்று வேலைக்கு இன்டர்வியூ நடக்கும் இடத்திற்கு வந்து அமர்ந்து இருக்கின்றனர்.

( இனி நிகழ்காலத்துக்கு வாருங்கள் போகலாம்)
 
#10
சப்தஸ்வரங்கள்

அத்தியாயம் : 0 7


அது ஒரு பிரைவேட் கால் சென்டர். இலங்கையின் மிக முக்கியமான நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கஸ்டமர் கால்களை ஆன்சர் பண்ணுவதற்காக நிறுவப்பட்டிருந்தது.

24 மணி நேரமும் கஷ்டமர்களின் கால்களை ஏற்று அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதே அங்கு இருக்கும் பணியாளர்களின் முக்கிய கடமை.

கடந்த மூன்று ஆண்டுகளில் சிறந்த சேவைக்கான இலங்கையில் பல முக்கிய விருதுகளை அந்த நிறுவனம் பெற்றிருந்தது குறைந்த சம்பளமே ரூபாய் இருபத்தைந்தாயிரம் ஆக வழங்கப்பட பல இளைஞர்களும் யுவதிகளும் பகுதி நேர வேலையாகவும் முழு நேர வேலையாகவும் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர்.


பல்லவிக்கு தெரிந்த ஒருவர் மூலமே இங்கு வேலை காலியாக இருப்பது அவர்களுக்குத் தெரிந்தது. இப்படியே நல்லபடியாக இன்டர்வியூவை பாஸ் பண்ணி விட்டால் வேலை உறுதியாக கிடைத்துவிடும்.


முதலில் அறைக்கு சென்று வந்த பல்லவி வாயெல்லாம் பல்லாக கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள் அவளுக்கு அடுத்ததாக சப்தவி உள்ளே நுழைந்தாள்.


ஏற்கனவே உள்ளே சென்று வந்த மதுரவாணி வேலை கிடைத்து விட்டதாக மட்டுமே கூறினாள்.

ஆங்கில எழுத்து வரிசைப்படி அனுமதி அளிக்கப்பட்டதால் தோழிகளில் சப்தவி இறுதியாகவே அறையை அடைய அங்கே உள்ளே அமர்ந்திருந்த நபரை கண்டதும் அவளுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது.


பல முறை மனதுக்குள் ஆண் நபர்கள் இருந்தால் சகஜமாக இருக்க வேண்டும் என்ற மனப்பாடம் செய்த மந்திரத்தை மீண்டும் ஒரு முறை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டே கஷ்டப்பட்டு நேற்றெல்லாம் படித்த பொது அறிவு கேள்விகளை நினைவுகூர்ந்தவள் அறையை சுற்றி நோட்டமிட அவள் முதலில் கண்டது ஒரு வயதான நபரைத்தான்

மேசை மீது இருந்த அவளது சுய விபரக் கோவையை படிப்பதும் மடிகணிணியில் டைப் செய்வதுமாக பிஸியாக இருந்தார்.


அவருக்கு அடுத்த மூன்று இருக்கைகளும் காலியாக இருப்பதை கண்டு தயக்கத்துடன்

"எக்ஸ்கியூஸ் மீ மே ஐ கம்மிங்"
என்று வினவ

அவர் பதில் கூறுவதற்கு முன் அறையின் பக்கவாட்டிலிருந்து

"ப்ளீஸ் சிட் டவுன்"

என்று ஒரு அழுத்தமான குரல் அவள் காதுகளில் விழுந்தது. அந்த குரலை மறக்கமுடியாமலோ அல்லது அந்த குரலுக்குரியவனை மறக்கமுடியாமலோ கண நேரம் திகைத்து அவனை நேருக்கு நேர் பார்த்தவள் பின்பு எதுவும் கூறாமல் விறுவிறு என்று அறையை விட்டு வெளியே வந்து விட்டாள்.

அறைக்குள் ஒலித்த சிரிப்பொலியையும் பின்னோடு அவளை அழைத்துக் கொண்டு ஓடிவந்த வெங்கட்டையும் அவள் திரும்பியும் பார்க்கவில்லை.


எப்படியோ நேராக வரவேற்பறைக்கு வந்தவள் அங்கே காத்திருந்த தோழிகளை கண்ட பின்பே இன்று இங்கே வந்ததற்கான காரணத்தையும் தன்னைவிட தோழிகளுக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்பதையும் உணர்ந்து மௌனமாக நிற்க

அவள் மனநிலையை உணர்ந்தாற் போல அவள் அருகே வந்த வாணி

"இந்த வேலை இல்லாட்டி பரவாயில்லைப்பா வேற வேலை தேடிக்கொள்ளலாம்" என்று கூறினாள்.

வாணியின்
குடும்ப பிரச்சனையை அறிந்திருந்த சப்தவிக்கு தோழியின் நல்ல மனதுக்கு தன்னால் உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது

அவளைப்போலவே சப்தவியை அழைத்துச் செல்ல வந்திருந்த வெங்கட்டுக்கு வாணியின் இந்த வார்த்தைகள் கூரான கல்லால் இதயத்தை அடித்தது போலிருந்தது. அவளை பார்க்காமல் கஷ்டப்பட்ட காலம் போய் இனி தினமும் பார்க்கலாம் என குதூகலித்த மனதுக்கு இந்த வேதனை கொடுமையாக இருந்திட அவன் அதற்கு மேல் நிற்காமல் திரும்பி சென்று விட்டான்.

கதவை திறந்து கொண்டு வெளியிலிருந்து உள்ளே வந்த பல்லவி

"என்னடி உனக்கும் வேலை கிடைத்து விட்டதா?? நான் வீட்ல எல்லாத்துக்கும் சொல்லிட்டேன் அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் இனிமேல் ஆச்சு என் இஷ்டம்போல சாப்பிடலாம், தூங்கலாம், ஏன்னா நான் சம்பாதிக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்"


ஒரு சிறு குழந்தைபோல் துள்ள
தோழிகளுக்கு இன்னும் கஷ்டமாகி விட்டது

அதுவரை வாணியின் மனதை கஷ்டப்படுத்துவது பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருந்த சப்தவி பல்லவியிடம் எப்படி இது பற்றி பேசுவேன் என்று யோசிக்க

அவளது அமைதியைக் குலைத்தது அவனின் குரல்.


"என்னம்மா கண்ணு எப்படி இருக்க??? அன்னைக்கு என்னவோ மாரியாத்தா மேல வந்த மாதிரி அந்த ஆட்டம் ஆடின இன்னைக்கு என்ன கண்டதும் பின்னங்கால் பிடரியில் பட ஓடுற!! இந்த ஓட்டத்தை ஒலிம்பிக்கில் ஓடினா தங்கம் உறுதி செல்லம்!!!

பேசாம நீ ஸ்போர்ட்ஸ் சைட்ல ட்ரை பண்ணு அப்புறம் இந்த பயம் இருக்குல்ல இந்த பயம்!!! எப்பயும் என்னை பார்த்தா இருக்கணும் புரிஞ்சதா???
என்று நக்கல் குரலில் அவளை ஸ்வராக் கலாய்த்தான்.


அதுவரை என்ன சொல்லி பல்லவியையும் வீட்டையும் சமாதானப்படுத்துவது என்றும் தோழிகளின் எதிர்காலத்திற்கு தன்னால் பிரச்சனையோ என்றும் தனக்குள் வருந்திக் கொண்டிருந்தவள் அவனின் உசுப்பேற்றும் குரலில் பொங்கி எழுந்து விட்டாள்.


" ஹலோ உங்கள மாதிரி உலகத்திற்கு தண்டமா இருக்கவங்களே சௌக்கியமா இருக்கும்போது நாங்க எல்லாம் நல்லாத்தான் இருப்போம் அப்புறம் என்ன உங்கமேல பயமா?? யாருக்கு எனக்கா??? மிஸ்டர் ஓவரா எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க!!

இது உங்க கம்பெனினு தெரிஞ்சிருந்தா நான் இன்டர்வியூ வந்திருக்கவே மாட்டேன் தலையெழுத்து!! இங்க வேலை செய்றவன் தான் இந்த உலகத்திலேயே மிகப் பெரிய முட்டாள்!!!"
"ஏய் என்னடி கொழுப்பா ஒழுங்கா இன்டர்வியூ அட்டன்ட் பண்ணி வேலை செய்ய துப்பில்லை மேடம்க்கு வாய் மட்டும் வங்காள விரிகுடாவ விட பெருசா இருக்கு!! "


"ஏய் நீ ரொம்ப பண்ணுற"


"நீ ரொம்ப பேசுற!! அம்மணிக்கு வாய்ஜாலம் மட்டும் தான் போல செயல்ல ஒன்னும் கிழிக்க மாட்டிங்க இல்லை... ச்ச்சோ இதெல்லாம் அட்டு பீஸ் வேலைக்கு ஆவாதுனு நான் சொன்னேன் இந்த லூசு மேனேஜர் தான் ஸ்கூல் டாப்பர் கேம்பஸ் ரேங்கும் டாப்னு பில்டப் பண்ணி என் டைம வேஸ்ட் பண்ணிருச்சு

இதெல்லாம் கஸ்டமர் கால்ஸ ஆன்சர் பண்ணி ஹலோ சொல்லி பிரச்சனைய கேட்டு சொல்யூசன கண்டுபிடிச்சு ஷப்ப்பாபா... இப்பவே கண்ணை கட்டுதே!!! நான் கடைய சாத்திட்டு நடைய கட்ட வேண்டியது தான் எம்மா தயவு செஞ்சு நீ இப்பவே கிளம்பி போயிரு நீ வேலைக்கு வேண்டாம்!!."


அவள் ஏற்கனவே முடிவெடுத்து இருந்ததுதான் இருந்தாலும் அவன் சொல்லி என்ன தனக்கு வேலை இல்லாமல் போவது என்று அவள் முகத்தில் கோபம் முகாமிட்டது.

"நீங்க எப்படி இன்டர்வியூ பண்ணாம என்னை வேண்டாம் என்று சொல்லுவீங்க இன்டர்வியூ பண்ணுங்க இந்த வேலைக்கான தகுதி எனக்கு இல்லைனா நானே வேண்டாம்னு கிளம்பிடுவேன்"
என்று அவள் விரைத்த படியே கூற

இப்போது பல்லவி நடப்பது எதுவும் புரியாமல் புலம்பியவாறு
"என்ன இங்கே நடக்குது?? என்றாள்.

வாணிக்கு அவள் பதிலில் பெரிய ஆச்சரியம் எல்லாம் இல்லை ஒரு விஷயத்தை செய்யாதே என்றால் செய்து காட்டுவது தான் சப்தவியின் குணம் அதையும் சொல்வது ஒரு ஆண் என்றால் அதை பத்து மடங்காக செய்வாள்

பொதுவாக அவளிடம் ஒரு காரியத்தை சாதிக்க இப்படி எதிராக பேசுவது தோழிகளின் வழக்கம் ஆனால் அந்த உத்தியை இந்த புதியவன் அவளை பார்க்கும் இரண்டாவது சந்தர்ப்பத்திலேயே சரியாக பிரயோகித்தது தான் பெரிய ஆச்சரியம்


என்ன தான் தோழிக்காக வேலையை வேண்டாமென்றாலும் சில்வாவை பற்றிய பயம் அவளுக்குள் இருந்தது
இந்த வேலையின் அவசியம் அப்படி


தோளை குலுக்கி விட்டு ஸ்வராக் முன்னே செல்ல சப்தவி இறுக்கமாக அவனை தொடர்ந்தாள்.தொய்ந்து போய் அமர்ந்த வாணிக்கு அருகே அமர்ந்த பல்லவி அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.