சந்திரபவனம் - கதை திரி

Anuya

Well-known member
Apr 30, 2019
261
128
63
அத்தியாயம்-4

அந்த விஸ்தாரமான வரவேற்பறையை கண்களால் துழாவிக் கொண்டே கம்பீரமாக நடந்தார் பத்மாவதி.

அந்நேரம் தில்லையும், சந்திராவும் மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தனர். பார்வையை சுழற்றி அந்த மாளிகையின் ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து முடித்த பின்னர் படியில் இறங்கி வந்தவர்கள் மீது நிலைத்தது.

தில்லையின் பார்வையும் பத்மாவதியின் பார்வையும் உரசிக் கொண்டன. அடுத்து சந்திராவின் மீது பார்வையை செலுத்தியவரின் உதடுகளில் இகழ்ச்சி புன்னகை. அதே சமயம் அவளை கூர்மையாக ஆராயவும் தவறவில்லை.

‘வாங்க’ என்று அழைக்காமல் தலையசைத்து அவரின் வருகைக்கு ஒப்புதல் அளித்தார் தில்லை.

அதை கண்டு கொள்ளாமால் “இவ்வளவு பெரிய மாளிகையில் என் பெண்ணோட புகைப்படத்திற்கு கூட இடமில்லையா?” என்றார் சற்றே கடினமாக.

அதற்குள் வீட்டினர் அனைவரும் அங்கு குழுமி இருக்க, அவரின் வருகையை எவரும் ரசிக்கவில்லை என்றாலும் தங்களால் முடியாததை பத்மாவதி நடத்திக் காட்டுவார் என்பதால் ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தனர்.

“இந்த அரண்மனையின் வாரிசின் புகைப்படத்திற்கு கூட இடமில்லை என்பதை மறந்து வீட்டீர்கள் சம்மந்தி” என்றார் இடக்காக.

“அது தான் ஏன்? இறந்தவர்களின் போட்டோவிற்கு கூட இடமில்லாமல் போக என்ன காரணம்?”

‘ஆஹா! கிழவி வந்தவுடனேயே ஆரம்பிச்சிடுச்சு’ என்றெண்ணி தாத்தாவைப் பார்த்தான் அஸ்வின்.

மௌனமாக சோபாவில் அமர்ந்தவர் “பல வருடங்களுக்குப் பிறகு இங்கே வந்திருக்கீங்க...முதல்ல உட்காருங்க” என்றார்.

அவரின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவர் “இத்தனை வருடங்களா துக்கத்தோட இருந்ததில் சில விஷயங்கள் மறந்து போயிருந்தது. சில கேள்விகளுக்கு விடை காணவே இங்கே வந்திருக்கேன்” என்றார் கூர்மையாக ஆராய்ந்தபடி.

நீண்ட பெருமூச்சுடன் “சிலவற்றை அப்படியே விடுவது தான் அனைவருக்கும் நலம்” என்றார்.

அவரின் இந்த பதில் பத்மாவதியின் இதழ்களில் ஏளன புன்னகையை வரவழைத்தது.

“யாருக்கு?”

அவரின் கேள்வியை கண்டு கொள்ளாமல் “சந்திரா! சம்மந்திக்கு காபி கொண்டு வா” என்றார்.

அவர் சொன்னதும் அங்கிருந்து நகர்ந்தவளை பத்மாவின் குரல் நிறுத்தியது.

“இந்தப் பெண் யார்? இவளை உங்களுக்குப் பதிலா பொறுப்பேற்க சொல்லி இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்” என்றார்.

அவர் நேரடியாக அப்படிக் கேட்டதும் சிதம்பரமும், நளினாவும் உற்சாகமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அப்படி கேளுங்க சம்மந்தி...யாரோ ஒருத்திக்கு நம்ம பரம்பரை தொழில்களை விட்டுக் கொடுக்கலாமா?” என்றார் நளினா.

“நாங்க கேட்டா அண்ணனிடம் பதில் வராது. உங்களுக்காவது பதில் வருதான்னு பார்ப்பபோம்” என்றார் சிதம்பரம்.

பத்மாவதியை நிமிர்ந்து பார்த்த தில்லை புன்னகையுடன் “உங்களுக்கும் இந்த அரண்மனைக்கும் என்ன சம்மந்தம்? உங்க பெண்ணும், மாப்பிள்ளையும் போன பிறகு இங்கே உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?”

அந்தக் கேள்வியில் வெகுண்டெழுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீட்டினருக்கு ஏமாற்றத்தை கொடுத்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சந்திராவின் பக்கம் திரும்பி “ஜூஸ் வேண்டாம்மா நீ இங்கே வா!” என்றவர் “சொல்லு! நீ யார்? உனக்கும் இந்த அரண்மனைக்கும் என்ன தொடர்பு?” என்றார் அசால்ட்டாக.

இறுகிய முகத்தோடு தில்லையை திரும்பி பார்த்து விட்டு “ஐயோவோட பி.ஏ மற்றும் அவருக்கு வீட்டிலும் உதவியாக இருக்கிறேன். அது தான் எனக்கும் இந்த அரண்மனைக்கும் உள்ள தொடர்பு” என்றாள்.

“அது மட்டும் போதாதே கம்பனியின் நிர்வாக பொறுப்பில் அமர, அதற்கு மேலும் ஏதோவொன்று இருந்தால் தான் நீ அதில் உட்கார முடியும். அது என்னன்னு சொல்லு?” என்றார் அழுத்தமாக.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த தில்லை வேகமாக எழுந்து “போதும் சம்மந்தியம்மா! இதோட நிறுத்துங்க! சந்திராவை கேள்வி கேட்கும் அதிகாரம் உங்களுக்கில்லை. உங்களோட எல்லைக்குள் நின்றால் தான் உங்களுக்கு மரியாதை” என்றவர் “சந்திரா! கிளம்பு போகலாம்” என்று கூறி விட்டு விறுவிறுவென்று வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து சந்திராவும் அங்கிருந்து வெளியேறினாள்.

செல்பவர்களையே கவனித்துக் கொண்டிருந்த பத்மாவதியின் நெற்றியில் சிந்தனை முடிச்சுகள். தில்லையின் நடவடிக்கையின் பின்னே மர்மங்கள் நிறைந்திருக்கிறது. சந்திரா யார்? அவளுக்கும் இந்த அரண்மனைக்கும் என்ன தொடர்பு? இவர்கள் கூறுவது போல் தில்லைக்கும், அவளுக்கும் தப்பான உறவிருக்க சாத்தியமில்லை. அவளின் பின்னே மறைந்திருக்கும் மர்மம் என்ன? என்று பல கேள்விகள் எழுந்து மறைந்தது.

தில்லை அங்கிருந்து சென்றதும் பத்மாவின் அருகில் சென்ற நளினா “பார்த்தீங்களா சம்மந்தி? இந்த அண்ணனுக்கு இப்படி புத்தி போகனுமா?” என்று புலம்பினார்.

அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு “நீங்கல்லாம் எதுக்கு இந்த அரண்மனையில் இருக்கீங்க? அவர் தான் சொத்துக்கெல்லாம் உரிமையானவர் என்றாலும் வாரிசு இல்லாத போது உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு இல்லையா? அப்போ ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?” என்றார் அதிகாரமாக.

“எங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கிறது இல்லை. இதுல நாங்க எப்படி கேள்வி கேட்பது?” என்றார் சிதம்பரம் கடுப்பாக.

அவர்களை எல்லாம் கூர்மையாக பார்த்து “இங்கே நிறைய விஷயங்கள் ரகசியமாகவே இருக்கு. எங்க மாப்பிள்ளை பெண்ணோட சாவில் சந்தேகம் இருக்கு. அதற்கான விடையே இன்னும் கிடைக்கல. இதுல இந்த பெண்ணோட அதிகாரம் இங்கே கொடிகட்டி பறக்குது. எந்த கேள்வியும் கேட்காமல் எதுக்கு இங்க இருக்கீங்க?” என்றார் எரிச்சலாக.

அவரின் கேள்வியில் கூனிகுறுகிய சிதம்பரம் “உங்க உதவி இருந்தா இதெல்லாம் தடுத்திடுவோம் சம்மந்தி” என்றார்.

அனைவரும் ஒட்டுமொத்தமாக “ஆமாம் நீங்க உதவினா அவளை இங்கிருந்து துரத்திடலாம்” என்றனர்.

அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சற்றே யோசித்தவர் “சரி! நான் இங்கே வருவது கஷ்டம். வெளியில் இருந்து தான் சில வேலைகளை செய்யணும். அதுக்கு இங்கே நடப்பவற்றை சொல்லனும். யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் காயை நகர்த்தனும்”என்றார்.

“கண்டிப்பா இங்கே நடக்கிறதை நாங்க சொல்றோம். நீங்க அவளை விரட்டினா போதும்” என்றார் நளினா.

“ம்ம்..” என்றவர் அங்குமிங்கும் நடந்து சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்த அனைவரிடமும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை கொடுத்து அதை பின்பற்ற சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவரின் பின்னே வேகமாக சென்ற அஸ்வின் “இத்தனை நாள் இங்கே வராம இருந்து இப்போ எப்படி சரியான நேரத்திற்கு வந்திருக்கீங்க?” என்றான்.

மெல்லிய புன்னகையுடன் “விஷயங்கள் கை மீறி போயிட்டிருக்குன்னு கேள்விப்பட்டு தான் வந்தேன்” என்றார்.

அதில் ஆச்சர்யமடைந்தவன் “இங்கே நடப்பது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்றான்.

மர்ம புன்னகை ஒன்றை சிந்தியவர் “இங்கிருக்கும் சின்ன தூசு கூட எனக்கு செய்தி சொல்லும்” என்று கூறி காரில் ஏறி அமர்ந்தார்.

அதைக் கேட்டு குழப்பத்தோடு “அப்போ எதுக்கு எங்களை சொல்ல சொல்றீங்க?” என்றான்.

“உங்க பெரிய தாத்தா சாதாரண ஆள் இல்லை. என்னோட ஆட்கள் இங்கிருப்பதை அறிந்தவர் தான். அவர்களால் முடியாததை உங்களை வைத்து செய்ய தான் கேட்கிறேன்” என்றார்.

“நீங்க சொல்வதை பார்க்கும் போது இங்கே மிகப் பெரிய சம்பவம் ஒன்று நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. இந்த சொத்துக்காக இல்லை என்றாலும் அதை அறிந்து கொள்ள நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றான்.

“ம்ம்” என்றுரைத்து விட்டு வெளியேறினார்.

யோசனையுடன் காரையே பார்த்துக் கொண்டிருந்தவனின் தோள்களில் தட்டிய சிதம்பரம் “என்ன சொல்றா?” என்றார்.

“வெரி டேஞ்சரஸ் லேடி தாத்தா” என்றான்.

“ஆமாம்...நமக்கு நம்ம காரியம் முடிகிற வரை இவளை யூஸ் பண்ணிக்குவோம். ஆனா மிக கவனமா இருக்கணும்” என்றார்.

“எஸ் ” என்று கூறியவனின் விழிகளில் சிந்தனை.

அதே நேரம் தனதறையில் அமர்ந்திருந்த உமாவின் கைகளில் ஒரு புகைப்படம் இருந்தது. அதை பார்த்து கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்தாள்.

எல்லாம் என்னால் தானே? நடந்த அனர்த்தங்கள் அனைத்திற்கும் நானே காரணமாகிவிட்டேனே. தெரியாமல் செய்தது தான் என்றாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நானே தான் என்று கூறிக் கொண்டு முகம் மூடி அழ ஆரம்பித்தாள். எல்லோருடைய வாழ்க்கையும் இப்படி அல்பாயுசில் முடிவதற்கு நான் செய்த ஒன்று தானே காரணம் என்று தலையணையில் விழுந்து கதறினாள். அப்போது சந்திராவின் முகம் கண்முன்னே வந்து போக நாளை அவள் கை நீட்டி நீதான் என்று சொல்லி விட்டால் அங்கேயே விழுந்து செத்து விடுவேன் என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது கதவு தட்டப்பட அவசரமாக எழுந்து கையிலிருந்த புகைப்படத்தை மறைத்து வைத்து விட்டு, கண்களை துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள்.

அங்கே சங்கரமூர்த்தி நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் ஆசுவாசம் அடைந்தவள் “வாங்கப்பா” என்றழைத்து விட்டு அறைக்குள் சென்றாள்.

அவளை ஆராய்ந்து கொண்டே உள்ளே வந்தவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு “என்னம்மா உங்கக்கா ஞாபகமா?” என்றார்.

“ம்ம்..” என்று கூறி தலையை குனிந்து கொண்டாள்.

“எத்தனை வருஷத்திற்கு குற்றவாளியா உன்னையே நினைச்சுப்ப? அவர்களின் விதி அப்படி நடந்திருக்கு. எல்லாத்தையும் மறந்திட்டு நடக்க வேண்டியவைகளை பாரும்மா” என்றார் ஆதரவாக.

அவரை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அத்தனை வேதனை.

“எப்படிப்பா மறக்க முடியும்? ஏதோவொரு விதத்தில் அவர்களின் வாழ்க்கை சரியாகி இருந்தா மறக்கலாம். ஆனா நடந்தது அத்தனையும் எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்ட பிறகு ஒவ்வொரு நாள் இரவும் கண்ணில் உறக்கமில்லைப்பா” என்றாள் கன்னங்களில் கண்ணீர் வழிய.

மகளின் வேதனை புரிய, அவரது மனமும் சோர்ந்து போனது. ஒரு மகளின் வாழ்வு தான் முடிந்து போனதென்றால் உயிருடன் இருக்கும் மகளுக்கு தினம் தினம் வேதனையைக் கொடுத்த ஆண்டவனை நிந்தித்தார்.

“மறந்து தான் ஆகணும் உமா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. உன்னால பாஸ்கரும் வேதனைபடுறார். முடிந்து போனது நம்ம மூணு பேருக்கு மட்டும் தான் தெரியும். அது நம்மோடவே போகட்டும்” என்றார்.

மறுப்பாக தலையசைத்து “எதுவுமே முடியலப்பா. நடந்த அனைத்திற்கும் ஆதாரம் என் கண்முன்னே வந்து நின்னதை பார்த்திட்டு தான் வந்திருக்கேன்” என்றாள் கண்ணீருடன்.

“தெரியும்மா! சில விஷயங்களை கேள்விப்பட்ட போது இதை நான் யூகிச்சிட்டேன். ஆனா தில்லை எல்லாவற்றையும் சரி பண்ணுவார். அவர் வழியில் விட்டா எதுவுமே வெளியில் வராமல் நடந்த அனைத்திற்கும் நியாயம் கிடைக்கும்படி செஞ்சிடுவார். நீ மட்டும் அமைதியா இரு” என்றார்.

“எப்படிப்பா? அம்மா விட மாட்டாங்களே...இப்போவே கிளம்பி அங்கே தான் போயிருப்பாங்க. ஒரு முடிவோட தான் வந்த மாதிரி இருக்கு. ஆனா நிச்சயமா உண்மைகள் வெளிப்படும் போது அம்மாவால தாங்க முடியாதுப்பா”.

கண்களை அழுந்த மூடித் திறந்தவர் “அதனால தான் இத்தனை வருஷமா தடுத்து வச்சிருந்தேன். ஆனா இப்போ என்னால தடுக்க முடியல. விதி அப்படித்தான்னு இருந்தா யாரால என்ன செய்ய முடியும். ஆனா நீ மட்டும் கலங்காம இரு” என்றார் ஆறுதலாக.

தந்தையின் பேச்சில் மனம் ஆறுதலடைந்தாலும் பழைய ஞாபகங்கள் பாடாய்ப்படுத்தியது.

சந்திராவிடம் மனம் மன்னிப்பு கேட்டது. இன்றைய உன் நிலைமைக்கு நானும் ஒரு காரணம் என்கிற எண்ணம் எழுந்து மறைந்தது.

ஏங்கும் என்னவனின் நினைவுகளில்

விழி நீரோடு விலகுகின்றேன்

மனதோடு உறவாடி உயிரானவனே

உள்ளத்தால் உறவாடும் முன்னே

உடலோடு உறவாடி என்னுயிரை

பிரித்தானே! விதியாலே விலகி

நின்றோம் காலம் பதில் சொல்லுமோ?

கண் மூடி நின்றவளின் காதுகளில் பாடல் ஒலிக்க கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட ஆரம்பித்தது.
 

Anuya

Well-known member
Apr 30, 2019
261
128
63
அத்தியாயம் – 5

அலுவலகத்தில் தனதறையில் சினம் கொண்ட சிறுத்தை போல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் ஆதித்யா. அவனது எண்ணம் முழுவதும் அரண்மனைக்கு சென்ற பாட்டியிடமே இருந்தது.

அங்கு என்ன நடந்திருக்கும்? பாட்டி அங்கிருந்த சூழலை எவ்வாறு கையாண்டார் என்பதை அறிந்து கொள்ள தவித்துக் கொண்டிருந்தான். அந்நேரம் அறைக் கதவு திறக்கப்பட்டு சிந்தனையுடன் கூடிய முகத்தோடு நாற்காலியில் சென்று அமர்ந்தார் பத்மாவதி.

அவரின் முகத்தை பார்த்துக் கொண்டே முன்னே சென்று நின்றவன் எதுவும் பேசவில்லை. தனது சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தவர் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

சிறிது நேரம் பொறுத்திருந்தவன் “பாட்டி!” என்றழைத்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவர் “நான் எதிர்பார்க்கல ஆதி” என்றார்.

“எதை எதிர்பார்க்கல பாட்டி? அங்கே என்ன நடந்தது?”

“இவ்வளவு சின்ன பெண்ணை எதிர்பார்க்கல. அவளுக்கு இருக்கும் ஆதரவை எதிர்பார்க்கல. அவளோட முகம் எனக்கு பரிச்சயமான முகமா இருக்கு ”.

அதைக் கேட்டதும் “காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கூட்டம். பெரியவருக்கு புத்தி பேதலிச்சு போயிருக்கு” என்றான் வெறுப்பாக.

மறுப்பாக தலையசைத்து “நீங்க எல்லாரும் தப்பான பாதையில் யோசிக்கிறீங்க. பெரியவர் அப்படி சபலப்படுகிறவர் கிடையாது. அந்த பெண்ணுக்கு பின் ஏதோ மர்மம் இருக்கு. அதை பெரியவர் மறைக்கிறார்” என்றார்.

“வாட் ? மர்மமா? அப்படி என்ன இருக்கும். எனக்கென்னவோ நீங்க தேவையில்லாம யோசிக்கிறீங்கன்னு தோணுது பாட்டி”..

“இல்ல ஆதி. நான் சொல்கிற மாதிரி யோசித்து பார் சரியா வரும்”.

“சரி அப்படியே இருந்தாலும் வெளியே இருந்து நம்மால எப்படி கண்டு பிடிக்க முடியும்?”

“கண்டுபிடிக்கணும்! இதில் என் மகள் வாழ்க்கையின் ரகசியங்கள் அடங்கியிருக்கு. இத்தனை வருடங்களாக அவளோட இழப்பை நினைத்து ஒதுங்கி இருந்துட்டேன். இனியும் அப்படி இருக்க கூடாது. அவளோட வாழ்க்கையில் நடந்தது என்னன்னு நிச்சயமா நாம தெரிஞ்சுக்கணும்”.

“ஏன் பாட்டி பெரியம்மா அரண்மனையில் நல்லாத்தானே வாழ்ந்தாங்க. அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லையே?”

மகளைப் பற்றிக் கேட்டதும் பத்மாவதியின் முகத்தில் அத்தனை பெருமிதம்.

“ராணி மாதிரி இருந்தா. ஒரு பெண்ணுக்கு கணவனோட மொத்த அன்பும் கிடைத்தால் சொர்க்கம். என் மகளுக்கு அது கிடைத்தது. மாப்பிள்ளை அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்”.

அவரை யோசனையுடன் பார்த்தவன் “அப்புறம் ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம் வரணும்?” என்றான்.

“என் பொண்ணு வாழ்ந்த அரண்மனையில் அவளுடைய படம் ஒன்று கூட மாட்டப்படல. அதே மாதிரி அந்த அரண்மனையின் வாரிசு எங்க மாப்பிள்ளையின் படமும் அங்கே இல்ல. வாரிசே இல்லாத சொத்திற்கு அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தொழிலின் அதிகாரத்தை கொடுக்காம யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுக்கிறாங்க. அதே மாதிரி அரண்மனை வாரிசின் மரணத்தை அதிகமா வெளியில் தெரியாம மறைத்து சீக்கிரமா காரியங்களை முடித்தாங்க. இது எல்லாம் தான் என்னோட சந்தேகத்திற்கு காரணம்”.

தாடையை தேய்த்துக் கொண்டவன் “இதுல நாம இறங்குவதை விட என் நண்பன் மூலியமா கண்டுபிடிக்கலாம் பாட்டி” என்றான்.

“வேண்டாம் ஆதி ! நம்ம குடும்ப ரகசியங்கள் மூன்றாம் மனிதருக்கு தெரிவதை நான் விரும்பல”.

“எனக்கு தெரியும் பாட்டி. ஆனா இதுக்கு சரியான ஆள் அவன் தான். அவன் மூலியமா எதுவும் வெளியே வராது. அவனும் சாதாரண ஆள் கிடையாது”.

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு “சரி! ஆனா நான் அவனைப் பார்த்து பேசணும்” என்றார்.

“அதுக்கு முன்னே அவனை ஒத்துக்க வைக்கணும். நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்”.

“ம்ம்...உங்கம்மாவுக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம்டா. அவ பூஞ்சை மனசு உள்ளளவ. ரொம்ப வருத்தப்படுவா” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அவர் சென்றதும் பேசியவைகளை எல்லாம் சிந்தித்தபடி ஜன்னலோரம் நின்றவனின் விரல்கள் அலைபேசியின் தொடுதிரையை வருடியது. உதடுகளோ ‘விஷ்ணு’ என்று உச்சரித்தது. உன்னை ஏமாற்றி சென்றவளை பழி வாங்க உனக்கு இப்போ கடவுளே வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார். நீ சரியா அதை உபயோகப்படுத்திக்கணும் என்று கூறிக் கொண்டு அவனது எண்களை அழுத்தினான்.

அந்தப் பக்கம் எடுத்தவன் கரகரப்புடன் “சொல்லுடா இப்போ தான் என் ஞாபகம் வந்திருக்கா?” என்றான் அழுத்தமாக.

“இப்போ தான் நேரம் வந்திருக்கு விஷ்ணு”

“ம்ம்...அவளை பார்த்தியா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“ம்ம்”

“எப்படி இருக்கா?”

“உன்னை ஏமாற்றிவிட்டு ஒரு கிழவனோட வை... இருக்கா” என்று கூறி முடிக்கும் முன் அந்தப் பக்கம் சிலீர் என்று கண்ணாடி உடைந்து சிதறியது.

“பார்த்து பேசு ஆதி...யாரைப் பற்றி என்ன பேசுற?” என்று சீறினான்.

“உண்மையை சொன்னேன் விஷ்ணு”.

தன முன்னிருந்த டேபிளை ஓங்கி குத்தியவன் “வேண்டாம் ஆதி! அவ அப்படிப்பட்டவ இல்ல”.

“அதை விடு விஷ்ணு! உனக்கு நான் இப்போ போன் பண்ணியது எதற்கு என்று சொல்றேன். நீ இங்கே வரவேண்டி இருக்கு” என்றவன் அங்கிருக்கும் சூழ்நிலையை கூறினான்.

நெற்றி முடிச்சுகளை நெருடிக் கொண்டு “இது உன் குடும்ப விவகாரம் ஆதி. நான் இதில் நுழைவது நன்றாக இருக்காது” என்றான்.

“என்னை விட உனக்கு தான் முக்கியம் விஷ்ணு. அங்கே அரணமனையில் இருப்பது தி கிரேட் விஷ்ணு வர்மனை அழ வைத்த சந்திரவதனா” என்றான் அழுத்தமாக.

அவன் சொன்னதைக் கேட்டு தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று “அவளா!” என்றவன் ஒரு நிமிடம் கண் மூடி நின்றான்.

“வரேன்! அவளை சந்திக்க வரேன்!” என்றான் உதய்பூர் இளவரசன் விஷ்ணு வர்மன்.

அதைக் கேட்டதும் ஆதியின் இதழ்களில் மெல்லிய புன்னகை “வரணும்! உன்னை ஒதுக்கியவளை கேள்வி கேட்கணும் விஷ்ணு”.

அவனோ பழைய நினைவுகளில் சிக்குண்டு முகம் இளகி கண்கள் மயக்கத்திலிருந்தது.

“ம்ம்..” என்று கூறி அலைபேசியை அணைத்து விட்டு மறு கையால் சிகையை கோதினான். அவனது மனம் அலைபாய ஆரம்பித்தது. அவளது மதிமுகம் இமைகளில் மோதியது. திடீரென்று அந்த அறையே இறுக்கமானது போல் உணர்ந்தான். அவசரமாக அறையை விட்டு வெளியேறியவன் அரண்மனை தோட்டத்திற்கு சென்றான். இதமான தென்றல் அவனது நினைவுகளை மீட்டத் தொடங்கியது.

சந்திரவதனா அவனுள் அழுத்தமாக அமர்ந்து வருடங்களாகிறது. தனக்கு மட்டும் தான் அவள் மீது அளவில்லாத காதல் என்று எண்ணி இருந்தான். அவளது கண்களில் அவன் மீதான காதலை என்று கண்டானோ அன்று உணர்ந்து கொண்டான் இந்த ஜென்மம் அவளோடு தான் என்று.

ஆனால் என்ன நடந்ததென்பதை உணரும் முன்பே அவள் பிரிந்து சென்றிருந்தாள். நிச்சயமாக அவள் மீது கோபமில்லை! அவளின் பிரிவின் பின்னே உள்ள காரரணம் என்ன என்று அறிந்து கொள்ள நினைத்தான். அதற்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டே சென்றிருந்தாள். எக்காரணம் கொண்டும் தன்னை தொடரக் கூடாது என்று சத்தியம் வாங்கி விட்டே சென்றிருந்தாள்.

பகல் முழுவதும் வேலையில் மூழ்கி அனைத்தையும் மறந்திருப்பான். இரவில் அவளை மட்டுமே நினைத்திருப்பான். நேரடியாக தொடரவில்லை என்றாலும் அவளை தொடர்ந்து கொண்டு தானிருந்தான். ஏதோ ஒரு சந்தர்பத்தில் அவளிடம் சென்று விட வேண்டும் என்று காத்திருந்தான். ஆதியின் மூலம் இன்று நடந்து விட்டது.

‘நமக்கான உறவை புதுப்பிக்க வருகிறேன் வதனா. இந்த முறை உன்னால் என்னை மறுக்கவே முடியாது. விட மாட்டேன்! உன் மீதான கரைகளை துடைத்து என் மனைவியாக இந்த அரண்மனையின் ராணியாக அழைத்து வருவேன்’ என்று எண்ணி ஒரு முறை அரண்மனையை பார்த்துக் கொண்டான்.

அதே நேரம் சந்திராவிடம் பத்மாவதியைப் பற்றி கூறி கொண்டிருந்தார் தில்லை.

“அவங்க கிட்ட கவனமா இருக்கணும் சந்திரா. ஒவ்வொரு வார்த்தைகளும் அளந்து தான் பேசணும். நம்ம வார்த்தைகளை வைத்தே நம்மை அடக்கும் சக்தியை கொண்டவங்க” என்றார்.

அவளோ சிந்தனையுடன் “ஐயா!” என்று தயக்கமாக அழைத்து “இத்தனை பேரை எதிர்த்துகிட்டு எனக்கு எதுக்கு இந்த பதவியை கொடுக்குறீங்க? வேண்டாம் ஐயா! உங்க குடும்பத்தாருக்கு கொடுங்க” என்றாள் கெஞ்சலாக.

அவளின் இந்த குணம் அவரை அசைத்து பார்த்தது. இமைக்காமல் அவளையே பார்த்திருந்தவர் “இந்த குணம் பல பேருக்கு இல்லாததால தான் நிறைய சிக்கல்கள் ஏற்படுது” என்றவர் கண் மூடி நாற்காலியில் சாய்ந்து விட்டார்.

அவரையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஜன்னலோரம் நின்றவளின் மனதில் ஆயிரம் கேள்விகள். வாழ்க்கையைத் தேடி ஓடிக் கொண்டிருந்தவளை தில்லையின் வரவு தடுத்தது. தனக்கு எதற்காக இத்தனை பெரிய அங்கீகாரத்தை கொடுக்க நினைக்கிறார்? உறவுகளை இழந்த அநாதையாக சுற்றிக் கொண்டிருந்தவளின் வாழ்வு ஒரே நொடியில் மாறி விட்டது.

சிறு வயது முதலே யாருடைய ஆதரவிலோ படித்து வளர்ந்து குடும்பம் என்னும் கூடு கிடைக்காமல் அதற்காக ஏங்கி வாழ்ந்தவளின் வாழ்வில் அவனது வரவு குற்றால சாரலாக வீசியது. ஆனால் அதுவும் ஒரே நாளில் ஊரை விட்டே ஓடும் அளவிற்கு துரத்தியது. இனி, தன வாழ்வில் ஓட்டம் மட்டுமே என்று எண்ணியவளை தில்லையின் வரவு வரமா சாபமா என்று புரியாத இடத்திற்கு கொண்டு சென்றது.

அவரது குடும்பத்து ஆட்கள் பேசுவதை கேட்ட முதல் நாள் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்றே எண்ணினாள். ஆனால் ஏனோ பெரியவரின் பாசம் போக விடாமல் தடுத்தது. அவருக்கு ஏதோவொரு சோகம் அழுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டாள். தான் அதற்கான மருந்து என்று அவர் கருதுவதை உணர்ந்து கொண்டாள். அதனாலேயே அங்கிருந்து செல்லாமல் அனைத்தையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருக்கிறாள்.

பல்வேறு சிந்தனைகளுடன் நின்றவளை தில்லை அழைத்தார்.

“சந்திராம்மா! இனிமே தனியா எங்கேயும் போகாதே. அப்படி போகணும்னா சொல்லு நான் காவலுக்கு ஆள் அனுப்புறேன்” என்றார்.

அவருக்கான மாத்திரையை எடுத்துக் கொண்டு அருகே சென்றவள் “எனக்கு எதுக்குங்க பாதுகாப்பு? எதுவுமே இல்லாத என்னை யார் என்ன செஞ்சிட போறாங்க?” என்றாள்.

அதைக் கேட்டு “இல்லம்மா! உனக்காக இல்லேன்னாலும் உனக்கு கொடுக்க போகிற பதவிக்காக துரத்துவாங்க. அதனால மிக கவனமா இருக்கணும்” என்றார்.

“சரிங்கையா”

அலைப்பேசியை எடுத்து வீராவை அழைத்து “உடனே என் ரூமுக்கு வா வீரா” என்றார்.

“நான் போகவா ஐயா?”

“நீ இரு”

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவனைக் கண்டு நடுங்கினாள் சந்திரா.

சுமாரான உயரத்துடன் கர்லா கட்டை சுற்றிய கைகளும், உருண்டு திரண்ட தேகமும், பல வெட்டுகளை தாங்கிய முகத்தோடு வந்து நின்றவனை பயத்தோடு பார்த்தாள்.

“ஐயா”

“வா வீரா...உனக்கு வேலை வந்துடுச்சு அது தான் வர சொன்னேன்”.

“சொல்லுங்கையா”

“இனிமே சந்திராவை நிழல் போல தொடரனும். அவ எங்கேயும் தனியா போக கூடாது”.

“சரிங்கையா”

“எந்த நேரத்தில் எப்படி ஆபத்து வரும்னு தெரியாது. மிக கவனமா இருக்கணும்” என்றார் அழுத்தமான குரலில்.

“சரிங்கையா”

“வீட்டில் யார் எது கேட்டாலும் உன் பதில் மௌனமாக மட்டுமே இருக்கணும் வீரா. புரிந்ததா?” என்றார்.

அவரின் பேச்சில் இருந்த விஷயத்தை புரிந்து கொண்டவன் “நிச்சயமா ஐயா...என்னை வெட்டிப் போட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றான்.

இவர்களின் பேச்சில் குழம்பி போனவள் ‘இவங்க என்ன பேசுறாங்க? வீராவிடம் குடும்பத்தினர் என்ன கேட்பாங்க? என்னைப் பற்றி என்றால் இவங்களுக்கே முழு விவரம் தெரியாது. அப்போ எதை மறைக்க சொல்றாங்க? ஒருவேளை விசாரித்து இருப்பாங்களோ?’ என்று பல்வேறாக யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்.

அவளின் சிந்தனை செல்லும் பாதையை புரிந்து கொண்ட தில்லை “சந்திரா! கம்பனி வேலைகளை பார்க்கலாமா?” என்றார்.

குழப்பத்துடன் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

பெற்றவன் செய்த பாவத்தில்

பிள்ளைக்கு பல பெயர்கள்

அன்னையின் அன்பை பெறாது

குடும்பமெனும் கூட்டுக்குள் வாழாது

வாழ்வென்னும் ஓட்டத்தில்

விடையறியா வினாவைத் தேடி

ஓடிக் கொண்டிருக்கிறாள்!
 

Malli

New member
May 2, 2019
13
2
3
Santhiravukku kathala Vishnu varaddum. paaddi puththisaali parththavudan purinthu kondu vaddaar ini..
 
  • Like
Reactions: Anuya

Anuya

Well-known member
Apr 30, 2019
261
128
63
அத்தியாயம்- 6

இருவரும் தங்களது சிந்தனையில் மூழ்கியபடியே வேலையை செய்து கொண்டிருந்தனர். தில்லை அவளுக்கு பொறுப்புகளை ஒப்புவிக்கும் நாளை தேர்ந்தெடுத்து அதற்கான வேளையில் மும்மரமானார்.

திடீரென்று நினைவு வந்தது போல் “அம்மாடி சந்திரா! உனக்கு முக்கியமான செய்தி ஒன்றை சொல்ல மறந்துட்டேன்” என்றார்.

அவரை நிமிர்ந்து பார்த்தவள் “என்னங்கையா?” என்றாள்.

“இந்த சொத்துகளுக்கு நான் தான் பொறுப்பு என்றாலும் என்னுடைய பங்காளிகளின் சம்மதம் இல்லாமல் எந்த முடிவும் பண்ணிட முடியாது” என்றார்.

அதைக் கேட்டதுமே அவளது முகத்தில் அத்தனை நிம்மதி.

“நல்லதுங்க ஐயா! அவங்க முடிவு செய்யட்டும் எனக்கு இந்த பொறுப்பு கொடுக்கலாமா வேண்டாம் என்று” என்றாள்.

கண்கள் கனிய அவளைப் பார்த்தவர் “அவங்களுக்கு செய்தி தெரிவித்து அவங்க முன்னிலையில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் அவ்வளவு தான். முடிவெடுக்கிற அதிகாரம் என் கையில் தான் மா”.

“அவங்க மறுத்தால்?”

“ஆட்சேபனையை தெரிவிக்கலாம். ஆனால் இறுதி முடிவு என்னுடையது தான்”.

“உங்க பங்காளிகள் யாருங்க ஐயா?”

கண்களை மூடி அழுந்த திறந்தவர் “பத்மாவதி அம்மாவுடைய இரெண்டாவது பெண்ணும் அவங்க மாப்பிள்ளையும் தான். அவங்க பேரன் ஆதித்யா தான் வாரிசு. அவன் தான் வருவான்” என்றார்.

“ஒ...அவங்க பேரனா அப்போ கவனமா இருக்கணும் இல்லையா?” என்றாள் புன்சிரிப்புடன்.

“அவன் நல்ல பையன்மா. அவங்க பாட்டி மாதிரி இல்ல”.

“சரிங்கைய்யா பார்த்துக்கலாம். உங்க முடிவில் உறுதியா இருக்கும் போது நான் நிச்சயமா நல்லவிதமா ஒத்துழைக்கிறேன்”.

அவளை அருகே அழைத்தவர் தலையை வருடி “நல்லா இருக்கனும்மா...நல்லா இருப்பே” என்றவரது கண்கள் கலங்கியதோ என்று யோசிக்கும் முன் முகம் பழைய நிலைக்கு திரும்பியது..

பெரியவர் இத்தனை நாட்களில் இப்படி கலங்கியதில்லை. எதையுமே வெளிக்காட்டாத முகம். இன்று லேசாக கலங்கியதை கண்டு மனதிற்குள் சலனமடைந்தாள். தன்னை பார்க்கும் போதெல்லாம் அவரது பார்வையில் ஏதோவொரு தவிப்பு தெரிகிறது. அது என்ன என்று இதுவரை புரிந்ததில்லை.அதைப் பற்றி சிறிது நேரம் எண்ணிக் கொண்டிருந்து விட்டு பெருமூச்சுடன் தன் பணியை கவனிக்கலானாள்.

ஆதியின் அறையில் அமர்ந்திருந்த பத்மாவதி “என்ன ஆதி உன் நண்பன் கிட்ட பேசிட்டியா? என்ன சொல்றான்? நமக்கு நேரம் அதிகமில்லை” என்றார்.

“பேசிட்டேன் பாட்டி. அவன் முதலில் தயங்கினான். ஆனா ஒத்துகிட்டான். பெரியவரோட அறிவிப்பை வைத்து அவன் இங்கு வரும் நாளை முடிவு செய்யணும்”.

“அவனை நம்பலாமா? உன்னோட தொழிலில் அவனுக்கு பங்கு கொடுக்கிற...நம்பகமான ஆள் தானா?”

“பாட்டி அவன் யார் தெரியுமா? உதய்பூர் சமஸ்த்தானத்தின் ஒரே வாரிசு”.

“ஒ...அப்போ சரி. ஆனா எக்காரணம் கொண்டும் அவளை தொழிலின் வாரிசாக்க ஒத்துக்க கூடாது. முடிந்த வரையில் தடுக்கணும்”.

அவரின் இறுகிய முகத்தையும் பதட்டத்தையும் கண்டு எழுந்து வந்து தோளோடு அனைத்துக் கொண்டவன் “நான் பார்த்துகிறேன் பாட்டி. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்றான்.

“ம்ம்...நான் வர முடியாதில்லையா அதனால தான் யோசிக்கிறேன். உன் மேல நம்பிக்கை இருக்கு ஆதி. ஆனா அந்த பெரியவர் மேல நம்பிக்கை இல்ல. அவர் நினைத்ததை செய்ய எப்படி வேணும்னாலும் யோசிப்பார்” என்றார்.

“பெரியவரை சமாளிக்க விஷ்ணு இருக்கான் பாட்டி. பார்த்துக்கலாம் விடுங்க. நீங்க போய் அம்மாவோட நேரத்தை செலவிடுங்க. நீங்க நினைத்ததை முடித்து காட்டுறோம்”.

“சரிடா!” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

அன்றைய நாள் அனைவரின் மனதிலும் பதட்டத்தை கொடுத்திருந்தது. இரவு உணவின் போது பெரியவர் அனைவரிடமும் சந்திரா பதவியேற்கும் தேதியை அறிவித்தார். அனைவரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தனர்.

சிதம்பரம் மட்டும் அஸ்வினையும், மகேஷையும் சாப்பிட்டதும் தோட்டத்திற்கு வருமாறு பணிந்தார். சந்திராவோ வழமை போல் எவர் முகத்தையும் பாராது தலையை குனிந்தவாறு உணவை முடித்துக் கொண்டு தன்னறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.

பெரியவரும் சென்று விட மற்றவர்களும் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு அறைக்குள் அடைந்தனர். எல்லோரும் சென்று விட்டனரா என்று அறிந்து கொண்டு சிதம்பரமும் மற்ற இருவரும் தோட்டத்திற்கு சென்றனர். அங்கிருந்த கல்லில் சிதம்பரம் அமர்ந்து விட,, அவரின் எதிரே நின்ற அஸ்வினும், மகேஷும் கோபத்தோடு அவரை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்ன பண்ண போறோம் தாத்தா?” என்றான் மகேஷ்.

தொடையை தட்டி “இவ்வளவு சீக்கிரம் எங்கண்ணன் முடிவெடுப்பார்னு நினைக்கல மகேஷ்” என்றார்.

“அதை விடுங்க...இதை தடுக்க என்ன செய்யறது? அதை சொல்லுங்க?” என்றான் எரிச்சலுடன்.

சுற்றி முற்றி பார்த்துவிட்டு “மெதுவா பேசு அஸ்வின். அண்ணன் எங்கே வேணா ஆள் வச்சிருப்பார்” என்றார்.

அதைக் கேட்டு “உங்கண்ணன் புராணம் பாடவா வந்தோம் இங்கே” என்று எரிந்து விழுந்தான்.

இயலாமை கூடிய குரலில் “என்னை என்னடா பண்ண சொல்ற? சின்ன வயசிலிருந்து அண்ணன் பேச்சை கேட்டே வளர்ந்திருக்கேன். இங்கே எனக்குன்னு எந்த அதிகாரமும் இல்ல, மரியாதையும் இல்லை” என்றார் சோர்வான குரலில்.

“அது தான் தெரியுமே...அவ பதவி ஏற்பதை தடுக்க என்ன செய்யலாம்? இங்கிருந்து தூக்கிடலாமா? எனக்கு தெரிந்த ஆட்கள் இருக்காங்க அவங்களை வைத்து முடிச்சிடவா?” என்றான்.

“கரெக்ட் அப்படியே பண்ணிடலாம் அஸ்வின் ” என்றான் மகேஷ்.

“டேய்! அதெல்லாம் வேண்டாம்டா. ஆட்களை விட்டு அவளை மிரட்டி இங்கிருந்து ஓட விட்டுடுங்க அது போதும்” என்றார்.

“அதுக்கு அவ தனியா மாட்டணுமே. பெருசு அவளை அடைக்காக்கிற மாதிரி காக்குதே என்ன செய்ய?”

“அதை நானும் நளினாவும் பார்த்துக்கிறோம். நீ அவனுங்க கிட்ட பேசி முடிச்சிடு. அவனுங்க மிரட்டுற மிரட்டலில் துண்டை காணும் துணியைக் காணும்னு ஓடனும்” என்றார் வெறுப்பாக.

அஸ்வினும், மகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “பண்ணிடலாம்” என்றனர்.

அந்த திருப்தியில் “சரி நான் படுக்கப் போறேன். வாங்க” என்றவரிடம் “நாங்க கொஞ்ச நேரம் பேசிட்டு போறோம் அப்பா. நீங்க போங்க” என்றான் அஸ்வின்.

அவர்களை சந்தேகத்தோடு பார்த்து “டேய்! எனக்கு தெரியாம எதுவும் செஞ்சிடாதீங்க. அண்ணனை சாதரணமா எடை போட்டுடாதீங்க” என்றவரை கொலைவெறியுடன் பார்த்து “தாத்தா! கிளம்புங்க!” என்று பல்லைக் கடித்தான் அஸ்வின்.

அவர் அங்கிருந்து சென்றதும் மகேஷிடம் திரும்பிய அஸ்வின் “என்ன செஞ்சிடலாமா மகேஷ்? தாத்தா தேவையில்லாம பயப்படுறார். அவளை விரட்டுவதை விட முடிக்கிறது தான் மேல். நமக்கு வருங்காலத்தில் எந்த தொந்திரவும் இருக்க கூடாது” என்றான்.

சிந்தனையுடன் “முடிச்சிடலாம் அஸ்வின்” என்று ஒத்துக் கொண்டான்.

அதன்பிறகு இருவரும் தங்களுக்குள் மெல்லிய குரலில் திட்டத்தை பற்றி அலசி ஆராய்ந்து முடிவெடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

இது எதையுமே அறியாது பால்கனியில் அமர்ந்து நிலவிடம் பேசிக் கொண்டிருந்தாள் வதனா.அன்று நடந்தவைகள் மனதில் நிறைய குழப்பத்தை தந்திருந்தாலும் அதையும் மீறி மனம் அமைதியாகவே இருந்தது. நிலவை பார்த்தவளின் கண்களுக்கு அதில் அவன் முகம் வந்து நின்றது. அதைக் கண்டதும் முகத்தில் அத்தனை மலர்ச்சி. ஏனோ அவனது நினைவுகள் அன்று அதிகம் எழுந்து மறைந்தது.

அவனுடனான நாட்கள் ஞாபக அடுக்களில் விஸ்வரூபமெடுத்து கண்முன்னே வந்து போனது. அவனது இதழ் பதிந்த விரல்களை வருடிக் கொடுத்து அவனது அருகாமையை அதிகம் நாடினாள். தனது எண்ணங்களுக்கு உயிரில்லை என்றபோதும் அன்று ஏனோ அவனை சுற்றி சுற்றியே ஓடியது. தன்னை எண்ணியே சோர்ந்து போனாள். தாய், தந்தையை அறியாமல் வளர்ந்தவளுக்கு வாழ்க்கைத் துணை என்கிற உறவும் மலரும் முன்னே கருகி போனதை நினைத்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

உன் மீதான ஞாபகம்

எழும்போதெல்லாம் வாழ்க்கையை

ரசிக்கிறேன் நீ

வேண்டுமென ஒவ்வொரு அனுவும்

ஏங்குகிறது வருவாயா என்னவனே?

என்று சிந்தித்தபடி அங்கேயே உறங்கிப் போனாள்.

தில்லையோ தனதறையில் கையில் ஒரு டைரியை வைத்தபடி கண்மூடி அமர்ந்திருந்தார். அவர் கைகள் அந்த டைரியை வருடியபடி இருந்தது. மெல்ல கண்களை திறந்து டைரியின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டினார்.

அதில் ஒரு பக்கத்திலிருந்த வாக்கியம் அவரின் கணகளில் கண்ணீரை வரவழைத்தது.

‘வாழ்க்கை எனக்கு கொடுத்ததெல்லாம் இந்த குரலும், அன்பு காட்டிய என்னவனையும் என்று ஆனந்திதிருந்தேன். என் பாடல் என் உயிரென்றால் அவன் என் உணர்வன்றோ? உயிரை விட்டு உணர்வை பிரித்தவன் எவனோ? எனக்கு ஏனிந்த வாழ்க்கை?’

அந்த வரிகளைப் படிக்கும் போது “மன்னிச்சிடும்மா’ என்று கூறிக் கொண்டார்.

“நடந்த தவறுகளை திருத்த முடியாது என்றாலும் பரிகாரம் தேடலாம். நிச்சயமாக அதை நான் செய்வேன். யார் தடுத்தாலும்” என்று கூறிக் கொண்டு தனது கப்போர்ட்டில் டைரியை வைக்கச் சென்றவர் அங்கிருந்த புகைப்படத்தை பார்த்து அப்படியே நின்றார்.

புகைப்படத்தில் இருந்தவளின் பார்வையில் ஆயிரம் கேள்விகள், பல குற்றச்சாட்டுகள். அனைத்தையும் தன் காலம் முடிவதற்குள் சரி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கதவை மூடும் முன்பு அங்கிருந்த

டேப் ரெக்கார்டரின் மீது பார்வை படிந்து விலகியது.

தன்னையறிமாலே அதை போட்டு விட்டார்.

இல்லாத மேடை ஒன்றில்

எழுதாத நாடகத்தில் எல்லோரும்

நடிக்கின்றோம் எல்லோரும் பார்க்கின்றோம்

கேள்வியின் நாயகனே இந்தக்

கேள்விக்கு பதிலேதைய்யா

என்று இனிமையான குரலில் பாடல் ஒலித்தது.

இத்தனை உயிர்ப்புள்ள ஒரு குரலை கழுத்தை நெறிக்க எப்படி அவனுக்கு மனம் வந்தது? அதிலும் அவளின் ஆன்மா எங்கிருக்கிறது என்று அறிந்து கொண்ட பின்னும் அதை செய்ய எப்படி அவன் துணிந்தான்.

அதன்பின் அனைத்தையும் மறந்து சந்தோஷமாக எப்படி வாழ முடிந்தது? என்றெண்ணி சோர்ந்து போனார். ரெக்கார்டரை அணைத்து விட்டு படுக்கையில் சாய்ந்தவருக்கு தலைவலி அழுத்தியது.

கண்மூடி படுத்தவரின் இமைகள் மட்டுமே மூடியது. மனமோ நடந்தவைகள் கனவாக இருக்க கூடாதா என்று கெஞ்சியது. ஒவ்வொரு இரவும் அவருக்கு வலியும், வேதனையும் மட்டுமே மிஞ்சியது.

உதய்பூர் அரண்மனை தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவனின் மனம் வதனாவை எண்ணிக் கொண்டிருந்தது.

கோயம்புத்தூரில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு திருமண நிகழ்வில் பாடிக் கொண்டிருந்தவளை முதன்முறையாக கண்டான். அவனை மயக்கியது அவளது குரல். நண்பனின் உதவியுடன் அவளிடம் சென்று பேசினான்.

கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருப்பவள் இது போன்ற நிகழ்வுகளில் பாடுவது உண்டு என்று அறிந்து கொண்டான். அதன்பின்னர் அவள் பாடும் இடங்களை எல்லாம் அறிந்து கொண்டு அங்கெல்லாம் சென்றான்.

ஆரம்பத்தில் அவனை கவனிக்காதவள் தொடர்ந்து தான் போகும் இடங்களிலெல்லாம் அவனது வரவைக் கண்டதும் சற்றே எச்சரிக்கை அடைந்தாள்.

அன்றைய நாளின் நினைவில் அவன் முகம் இளகியது. தன் மனதை அவளிடம் கூறிய நாளை எண்ணி ஆகாயத்தைப் பார்த்து கண்கள் பனிய நின்றான்.

அன்று கச்சேரியை முடித்துவிட்டு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். மழை வரும் போல இருந்தது. அதற்கு முன் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று சென்றாள். வாயிலின் அருகே சென்றவளை இடைமறித்தவன் “ஹலோ மிஸ் நான் விஷ்ணு” என்று கூறி கை நீட்டினான்.

அவனை மேலும் கீழும் பார்த்தவள் “என்ன வேணும் சார் உங்களுக்கு? கொஞ்ச நாளாவே பார்க்கிறேன் என்னோட எல்லா கச்சேரிக்கும் வரீங்க. யார் நீங்க? நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது. தயவு செய்து வழியை விடுங்க நான் போகனும்” என்றாள் கடுப்பாக.

“என்னை தப்பா எடுத்துக்காதீங்க. நான் உங்க கிட்ட பேசணும் வாங்க நானே டிராப் பண்றேன்” என்றான்.

அவனை முறைத்து “ப்ளீஸ்! வழியை விடுங்க. உங்களுக்கும் எனக்கும் பேச என்ன இருக்கு? கிளம்புங்க சார்” என்று கடுப்படித்துவிட்டு அவனை சுற்றிக் கொண்டு வெளியேறினாள்.

அவளின் செயலில் இதழில் புன்னகை குடியேற அவசரமாக அவளின் பின்னோடு ஓடி வழியை மறைத்தான்.

கோபமாக அவனை முறைத்துக் கொண்டு நின்றவளின் முன்னே “இந்த ஆகாயம் சாட்சியாக இந்த நிலவு சாட்சியாக நான் உன்னை மனதார காதலிக்கிறேன் வதனா” என்று அவன் சொல்லி முடிக்கும் போது சில்லென்று மழை நீர் இருவரையும் நனைத்தது.

அவன் அப்படி காதலை சொல்வான் என்று எதிர்பார்க்காதவள் அதிர்ந்து நின்றிருக்க, மழை நீரின் உபயத்தால் சுயநினைவிற்கு திரும்பினாள்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் முகத்தில் பொய்யில்லை என்பதை புரிந்து கொண்டாள். யாரென்றே தெரியாத ஒருவனின் காதலை ஏற்க பயந்து அவசரமாக திரும்பி பார்க்காமல் மழையில் நனைத்தபடி ஓடினாள். அவளுடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

பழைய நினைவுகளில் நீந்திக் கொண்டிருந்தவன் ‘அன்று என் காதலை ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும் பின்னொரு நாளில் எனக்கான காதலை அவள் கண்களில் கண்டேனே. அது பொய்யா? நிச்சயமாக இருக்காது! என்னை மறுத்து செல்ல அவளிடம் வலுவான காரணம் இருக்க வேண்டும். அதை வெளிக்கொண்டு வர வேண்டும்’ என்று கூறிக் கொண்டான்.

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்

என்ன தரப் போகிறாய்?

என் காதலே என்னை என்ன

செய்யப் போகிறாய்?