காதல் சர்க்கஸ் - கதை திரி

#21
காதல் சர்க்கஸ் 7

அனு கண் கலங்கிவிட்டாள். தனக்கும் இப்படி ஒரு நல்ல நிகழ்வுகள் வாழ்க்கையில் கிடைக்கப் பெறும் என கனவிலும் அவள் நினைக்கவில்லை. அப்புவின் சுனாமி காதல் அலைகளில் திக்குமுக்காடித்தான் போனாள். அவனின் அன்பு அக்கறைக்கு அவனே நிகர்.

வரதன் அவளை அரங்கில் அறிமுகப்படுத்திய விதமே அவளை மெய் சிலிர்க்க வைத்தது “உலகில் எந்த ஒரு ஆடவனும் பெண்ணை சார்ந்தே வாழ்கிறான். அவள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. அப்படி இருக்க நம் சர்க்கஸ் மட்டும் விதிவிலக்கா? இதோ இங்கேயும் அனு இல்லாமல் எதுவும் அசையாது.

உலகளவில் சர்க்கஸில் பெண் கோமாளியைவிட ஆண் கோமாளிள் அதிகம். நம்மோடு அனு என்பவர் இன்று முதல் நம் லியோ சர்க்கஸில் பெண் கோமாளியாக உங்களை மகிழ்விப்பார்” என்றார்.

கேரக்டர் கோமாளி பிரிவில் அனு சேர்க்கப்பட்டாள். லியோ சர்க்கஸ் அவளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தது. அவளுக்கு பயிற்சி ஆசிரியர் அப்புதான். முக பாவங்கள் உடல் மொழி என நடிப்பதில் மற்றும் கோமாளித்தனம் செய்வதில் அவனையே மிஞ்சிவிட்டாள். அவளுக்கென பிரத்யேக உடை ஒப்பனை என அணைத்தும் கொடுக்கப்பட்டது.

முதன் முதலில் அப்பு கத்தி எறியும் பயிற்ச்சியின் போது பயத்தில் சத்தமிட்டு ஊரையே கூட்டிவிட்டாள். பளபளப்பான கூர்மையான முனையும் அதன் பெரிய அலங்கார கைப்பிடியும் அவளை அலற வைத்தது. “என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்கு?” என அப்பு தன் சக குட்டி நண்பர்களிடம் புலம்பினான்.

“பாருமா கத்தி உன் மேல படாது. நீ ஆடாம அசையாம இருக்கணும்” என பொறுமையாக எடுத்துரைத்தான். அவள் பயம் போக்க முதலில் அட்டை கத்திகளை பயன்படுத்தினான். அவனின் குறி ஒரு போதும் தப்பாது என்பதை போகப் போக புரிந்துக் கொண்டாள்.

“அப்பு இனி நீ உண்மையான கத்தியே பயன்படுத்தலாம். எனக்கு பயமில்ல” என்றாள்

“அட அனு அவன் உண்மையான கத்திதான் பயன்படுத்தினான். உனக்கு தெரியாதா?” என அப்புவின் நண்பன் உண்மையை உடைத்து சிரிக்க . . மற்றவர்களும் சிரித்துவிட்டனர்.

“ஏண்டா என்பதாய்?“ அப்பு பார்வையால் அவர்களை மிரட்டினான். இந்த நிகழ்வால் அனு வருத்தப்பட்டாள். பின்னர் அவளை அப்பு சமாதானப்படுத்தினான்.

அதன் பிறகு அவளே மனதளவில் தன்னை தயார்படுத்தினாள். “அப்பு உண்மையான கத்தி போடு” என்பாள் முன்னதாகவே. அப்படிதான் இருவருக்குமான நட்பு தொடங்கியது.

பின் காதலாய் மலர்ந்தது. அப்பு அவளிடம் நேரடியாக “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிச்சிருந்தா? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” எனக் கேட்டான்.

சட்டென்று இப்படி சொல்லிவிட்டவனை அனு முறைக்க “பிடிக்கலன சொல்லிடு . . உன்னை நினைச்சி பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமேனு பாடிட்டு போயிடுவேன். உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்” என்றான்.

அவளுக்கு அப்புவை பிடித்திருந்தது. ஆனால் தனக்கும் குறை உள்ளது. தங்களுக்கு குழந்தை பிறக்குமா? அப்படியே குழந்தை பிறந்தாலும் ஆரோக்கியமாக இருக்குமா அல்லது தங்களின் குறைபாடு குழந்தைக்கும் இருக்குமா? என்கிற சந்தேகமும் பயமும் அவளைத் தொற்றிக் கொண்டது.

அவள் காலம் கடத்த விரும்பவில்லை இரெண்டொரு தினங்களில் சொல்லிவிட்டாள்.

இதைக் கேட்ட அப்பு சிரித்துவிட்டான். “இந்த பிரச்சனை வருமா? வராதானு தெரியாது. அதுக்காக கவலைப்படறே . . . அப்படியே நமக்கு குறையோட குழந்தைப் பிறந்தா உலகத்தின் சிறந்த மனிதனா வளர்த்துக் காட்டுவோம்”

அவன் உருவம் சிறியது ஆனால் உள்ளம் மிகப் பெரியது என புரிந்துக் கொண்டாள். அவளும் அவனை மனதார விரும்பினாள். சர்க்கஸ் காட்சிகள் இல்லாத நேரங்களில் அவளை சந்தித்துப் பேசுவான். அப்பு கண்ணியம் குறைவாக நடந்ததில்லை. ஒவ்வொரு முறையும் எதையாவது செய்து சிக்ஸர் அடித்துக் கொண்டே இருந்தான்.

அவர்கள் காதல் மெல்ல மெல்ல சர்க்கஸில் கசிந்தது. அனைவரும் அவர்களை கேலி கிண்டல் செய்யத் தொடங்கினர். அனுவிற்கு அது ஒரு அழகான சங்கடமாய் போனது. இவற்றை அனுதினமும் அனுபவிக்க ஆசைப்பட்டாள்.

ஆனால் சர்க்கஸ் என்று வந்துவிட்டால் அப்பு என்றுமே கத்தி வீசும் சாகசத்திற்கு அனுவை தேர்ந்தெடுக்க தயங்கியதே இல்லை. “எப்படிடா காதலி மேல கத்தி வீசுற?” என நண்பன் கேட்கையில் “அனுக்கு எதுவும் ஆகாது” என்பான். அவன் வரையில் என்றுமே குறி தப்பியதில்லை.

ஒருமுறை ஒத்திகையின் போது அனுவின் தோழி அழைக்க அனு கவனிக்காமல் நகர கையில் லேசான வெட்டு காயம் உண்டானது. துடித்துப் போனான் அப்பு. ஆனால் அடுத்த முறையும் அவளைதான் அந்த சாகசத்துக்கு அழைத்தான்.

“என்ன பிளாஷ்பேக்கா?” என்ற அப்புவின் கேள்வி அவளை நிகழ் காலத்திற்கு வரவழைத்தது. வெட்கத்தை மறைத்து “அதெல்லாமில்ல” என்றாள் மிடுக்காக.

“அம்மா கல்யாணத்துக்காக ஜோசியர்கிட்ட பேசி மூணு தேதி கொடுத்திருக்காங்க. உனக்கு எது சரிவரும்?” என தன் செல்போனில் இருந்த குறுஞ்ச் செய்தியை காண்பித்தான்.

பார்த்தவள் “ரெண்டாவது டேட் ஒ.கே” என்றாள்

“ஏன் முதல் டேட் வேண்டாமா?”

“வேண்டாம்” என்பதாய் தலையசைத்தாள்

“ஏன்?”

”ஐயோ புரிஞ்சிக்கோடா” என்றவள் முகம் இன்னுமாய் சிவக்க.

சில நொடிகளுக்கு பின்பு புரிந்தவனாய் “ம்ம் சரி” என்றான். அவளை ஏறெடுத்துப் பார்க்காமல். அதற்கு மேல் அங்கு நிற்க இயலாதவளாய் “சரியான டியூப்லைட்” என வெளியே வந்தாள். “அனு ஷாப்பிங் . .” என சொல்லியபடி அவனும் தொடர்ந்தான்.

வெளியே கூட்டமாய் அனைவரும் நின்றிருந்தனர். புதியதாக சிலர் இருந்தனர். அவர்கள் வீரபாகுவிடம் வாதாடிக் கொண்டிருந்தார்கள். “பாருங்க சார் இது சட்ட விரோதமானது” என்றான் புதியவன்.

“நீங்க சொல்ற மாதிரி இங்க எதுவும் நடக்கல” என வீரபாகு கூறியதைக் கேளாமல் அவர்கள் உள்ளே சென்றுப் பார்வையிட்டார்கள்.

அப்பு சன்னமாக தன் நண்பனிடம் “யார் அவங்க?” கேட்க

“விலங்கு நல அமைப்புல இருந்து வந்திருக்காங்க.” என்றான்.

“எதுக்கு?”

“நாம மிருகங்களை கொடுமைப்படுத்துறதா சொல்றாங்க”

“யார் சொன்னது?”

“அவங்கதான் . அதோட அப்பு இனி சர்க்கஸ்ல விலங்குகள் பயன்படுத்தக் கூடாதாம்”

அதிர்ந்த அப்பு “இது என்ன அநியாயமா இருக்கு?” என முன்னே சென்றான்.

“சார் நாங்க எந்த மிருகத்தையும் கொடுமைப்படுத்துல. சொல்லப் போனா நாங்க மிருகங்களை எங்க குடும்பத்துல ஒருத்தராதான் நினைக்கறோம். .” என்றான் அப்பு இடையில் புகுந்து

நான்கு பேர் இருந்தனர். அவர்கள் விலங்குகளை மேற்பார்வையிட்டபடி இருந்தனர். அப்பு சொன்னவற்றை கேட்ட ஒருவன் “அப்ப உங்க குடும்பத்துல எல்லாரையும் கூண்டுலதான் வெச்சிருப்பிங்களா?” எனக் கேட்க
என்ன சொல்வதென்று தெரியாமல் அப்பு விழித்தான்.


புதியவன் “இந்த சிங்கத்துக்கு எப்படி காயம் ஏற்பட்டுச்சி? இங்க யார் ரிங்மாஸ்டர்?”
வீரபாகுவை முன்னே வர அவனை நோக்கி “நீங்க சிங்கத்தை அடிச்சிங்களா?” என்றார்.
“கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணும் போது . . .” என வீரபாகு தடுமாற
 
#22
“வீட்ல பிள்ளைங்க படிக்கலனா அடிக்கறது இல்லயா? அதுக்காக பிள்ளைங்க மேல பாசம் இல்லனு அர்த்தமில்ல” என அப்பு பதில் கொடுத்தான்.

அப்போது நால்வரில் ஒருவர் முன்னே வந்தார். “என் பேரு கேசவன். உங்கிட்ட சில விஷயங்களை விரிவா பேசணும். ஒரு குறிப்பிட்ட கால அளவு நாம ஒருத்தரோட பழகிட்டா அவங்க மேல ஒரு அட்டாச்மெண்ட் கண்டிப்பா வரும். அப்படிதான் உங்களுக்கும் இந்த விலங்குகள் மேல வந்திருக்கு. நான் மறுக்கல. ஆனா ஒரு காட்டு விலங்கு சுதந்திரமா இருக்கிறதுக்கும் இப்படி அடைப்பட்டு இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதோட உடல்நிலை மட்டுமில்ல மனநிலையும் பாதிக்கப்படும்.”

“சார் இங்க ரெகுலரா டாக்டர் விலங்குகளுக்கு செக் அப் பண்றார். விலங்குகள் ஆரோக்கியத்த நாங்க பாத்துகிறோம்.” அப்பு விடவில்லை.

இவை காதில் விழுந்தும் வரதன் எந்த பதிலும் சொல்லவில்லை. வரதன் இடிந்துப் போனார். அவரால் எதையும் பேச இயலவில்லை. எல்லாம் கைமீறி போய்விட்டது என்ற நிலையில் இருந்தார்.

கேசவன் “கூண்டுல அடைப்பட்ட விலங்குகளுக்கு எத்தனை உடல் உபாதைகள் வருது தெரியுமா?” கேட்டார்.

அவரே தொடர்ந்தார் “ஓபிசிட்டி அதாவது உடல் பருமன் மனுஷங்களுக்கு மட்டும்தான் வருதுனு நினைக்கிறீங்களா? இல்ல சர்க்கஸ் யானைகள் அதிகம் பாதிக்கப்படுது. காட்டுல யானைகள் சராசரியா ஒரு நாளைக்கு குறைஞ்சது முப்பது மைல் நடக்கும். ஆனா இங்க முடியுமா?

சில இடத்துல யானைகளுக்கு உடல் பருமன் வருது வேற சில இடத்துல சிங்கம் புலி போன்ற விலங்குகளுக்கு போஷாக்கு குறைவான உணவால மெலிந்து இருக்கு

அடுத்தது ஆர்த்தரட்டீஸ் மூட்டு சம்பந்தமான நோய். ஒரு சர்வே பிரகாரம் மூட்டு பிரச்சனை அறுபத்தி இரண்டு ஆசிய யானைகளுக்கும், ஐஞ்சி ஆப்பிரக்க யானைகளுக்கும் இருக்கு. வெவ்வேறு இடத்துல இருக்கிற சர்க்கஸ் மற்றும் மிருக்க்காட்சி சாலையில இந்த யானைகள் இருக்கு. இந்த பிரச்சனையால மிகவும் மோசமான நிலையில இருக்கிற மிருகங்களை கருணைக் கொலைக் கூட பண்ணியிருக்காங்க.

விலங்குகளுக்கு பிராக்டிஸ் கொடுக்கும் போது எல்லாரும் பண்ற ஒரு விஷயம் பட்டினி போடறது. அதுங்க சரியா செஞ்சாதான் உணவுக் கொடுக்கிறது. அது இங்கயும் நடக்குதுனு நினைக்கிறேன் என வீரபாகுவை பார்க்க. அவன் தலைகுனிந்தான்.

பசி பட்டினி தாகத்தால மிருகங்கள் தான் சரியா செய்தால்தான் உணவு கிடைக்கும்ங்ற மனநிலைக்கு தள்ளப்படுது. இது எத்தனை கொடுமையான விஷயம்.

ஒரு இடத்துல இருந்து வேற இடத்துக்கு நீங்க சர்க்கஸ் பண்ண போகும் போது அதிகமான மிருகங்களை ஒரே கூண்டுல அடைச்சி எடுத்துட்டு போவீங்க. அப்ப உரசல் காரணமா புண்கள் வர வாய்ப்பிருக்கு.

டீபின்னு சொல்லப்படற டீயூபர்க்ளோசிஸ் வரவும் வாய்ப்புகள் அதிகமா இருக்கு. கூண்டுல அடைப்பட்டு இருக்கும் மிருகங்களோட குட்டிகள் குறைப்பாட்டோட பிறக்கவும் வாய்ப்பு இருக்கு. இதெல்லாமே நான் சொல்லல ஆராய்ச்சிகள்ல உறுதிபடுத்தபட்டவை. மனச் சோர்வு இறுக்கம் போன்ற மனம் சம்பந்தபட்ட நோய்களும் விலங்குகளை தாக்குது.

சர்க்கஸ் எப்பவுமே நமக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி. ஆனா விலங்குகளுக்கு பாதிப்பு அதிகம். இந்த உலகம் எல்லாருக்கும் சொந்தம். எல்லாரும் நிம்மதியா வாழ உரிமை இருக்கும் போது ஏன் மிருகங்கள் மட்டும் அவதிபடணும்?

எனக்கு உங்க நிலைமை புரியுது. உங்களால இந்த விலங்குகளை விட்டு இருக்க முடியாது. ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோங்க. காட்டு விலங்குகள் இங்கவிட காட்டுல சுதந்திரமா இருந்தாதான் அதுக்கு ஆரோக்கியம் மற்றும் நிம்மதி.

நாளைக்கு இதே நேரம் விலங்குகளை சரணாலயத்திற்கு கூடிட்டு போக வருவோம். தயவு செய்து எந்த பிரச்சனையும் பண்ணாதீங்க. இது அரசு உத்தரவு என சில காகிதங்களை வீரபாகுவிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் அப்பு வரதனிடம் சென்றான். “சார் வேணானு சொல்லுங்க சார். என்னால் அவங்கள பிரிஞ்சி இருக்க முடியாது. நீங்க பேசினா அவங்க கேட்பாங்க” என அழுது கெஞ்சினான்.

“எனக்கு இரண்டு நாள் முன்னாடியே தெரியும். அதனாலதான் ஷோல சர்க்கஸ் பத்தி குழந்தைங்ககிட்ட பேசினேன். நம்ம சர்க்கஸ் வாழ்க்கை முடிஞ்சி போச்சு. இனிமே லியோ சர்க்கஸ் இல்ல அப்பு” என்றவர் விரக்தியாக லியோ சர்க்கஸ் என பெயரிடப்பட்ட தங்க உருண்டையை நிறுத்தினார்.

அது சுழன்று சுழன்று மெதுவாக நின்றது. அதைப் பார்க்கையில் அனைவருக்கும் துக்கம் பீரிட்டது. அனைவரும் அழுதுவிட அவர்களுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. அந்த நொடி ஏதோ ஒன்று இதயத்திலிருந்து அறுபட்டதுப் போல் வலி ஏற்பட்டது அப்புவிற்கு.

சர்க்கஸ் என்னும் தங்கள் முகவரியை அவர்கள் இழக்கப் போகிறார்கள். இனி அவர்கள் வாழ்க்கையின் அடுத்த நகர்வு என்ன என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.

அப்புவின் மனம் பழைய நினைவுகளை அசைப் போட்டது. அவன் அங்குள்ள எல்லா விலங்குகளுக்கும் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கத்தை ஏற்படுத்தினான். அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் காடுகள் இருந்தால் அங்கு சென்று சின்ன விலங்குகளை வேட்டையாடி கொண்டு வருவான்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எத்தனை மகிழ்ச்சியான தருணங்கள் உள்ளன. ஒருமுறை தாய் குரங்கு ஒன்று இறந்துவிட அதன் குட்டி வெகுவாய் சோர்ந்துப் போனது. அதை அரவணைத்து உணவு ஊட்டி என அப்பு அதை தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

மற்றவர்களும் அப்படிதான் விலங்குகள் மேல் உயிரை வைத்திருந்தனர். அவைகளை தங்கள் அடிமைகளாகவே அல்லது பணம் சம்பாதிக்கும் வழியாகவோ என்றுமே நினைத்தது இல்லை. வீரபாகு சிங்கம் புலி போன்றவைக்கு பயிற்சிக் கொடுக்கையில் சில நேரங்களில் மட்டும் கடுமையாக நடந்துக் கொள்வான்.

தங்கள் வாழ்க்கையின் அத்தனை பாதைகளும் மூடிவிட்டது. இனி லியோ சர்க்கஸ் வட்டமிடாது என்கிற எண்ணம்தான் அனைவர் மனதிலும் வேதனையை கிளப்பியது.

வட்டமிடும் . . .
 
#23
காதல் சர்க்கஸ் 8

காலை உணவை முடித்த கிருஷ் குளித்து தயாரானான். பின்னர் சத்யமூர்த்தியிடம் தன் பெற்றோர் வரும் விமானம் குறித்த தகவல்களை கேட்டு அறிந்தான். விமானம் தற்பொழுது சரியாக வந்துக் கொண்டிருக்கிறதா என்பதை அதற்கு ஏற்ற இணையதளத்தில் டிராக் செய்து திருப்தி அடைந்தான்.

காவ்யா முன் மண்டியிட்டு எழுந்ததில் இருந்து கால்வலி சற்று அதிகமாயிருந்தது. “இந்த ஒவர் ஏக்டிங் தேவையா?” என தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.

கதிர் காவ்யா என அனைவரும் தங்கள் வேலையில் முழ்கி இருக்க என்ன செய்வதென்று தெரியாமல் தன் தனிமைப் போக்க கேமிராவை கையில் எடுத்தான்.

சர்க்கஸில் எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்தபின் அவற்றை அப்புவிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினான்.

நேரத்தை கடக்க அப்புவிடம் பேசலாம் என போன் செய்தான். ரிங் போனது எடுக்கவில்லை. அடுத்து இரண்டு முறை செய்தும் பயனில்லை.

“என்னமோ சரியில்ல” என மனம் சொன்னாலும் “நேத்துதானே ஷோ முடிஞ்சிருக்கு சோர்வால தூங்கிட்டு இருக்கானோ என்னவோ” என மூளை லாஜிக்காக பதில் அளித்தது. மனம் ஏற்கவில்லை.

நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் சங்கடம் என்றால் அதை எப்படியும் நாம் கொஞ்சமாவது உணர்வோம். அப்படிதான் கிருஷ் மனம் சஞ்சலமடைந்தது. கிருஷ் அனுவிற்கு போன் செய்தான். வெகு நேரத்திற்கு பின்தான் எடுத்தாள்.

“ஹலோ கிருஷ் பேசறேன் அனு”

“ஹலோ அண்ணா கால் வலி எப்படி இருக்கு?” என கேட்டாள். தன் அழுகையை கட்டுப்படுத்தியபடி

எப்பொழுதும் இருக்கும் துள்ளல் அவள் குரலில் இல்லாத்தை உணர முடிந்தது “இப்ப கால் பரவாயில்லமா . . நேத்து ஷோ பிரமாதமா இருந்திச்சி. அடுத்து ஷோ எப்ப? நான் கண்டிப்பா பாக்க வருவேன். அப்புறம் அப்பு எங்க?”

அவன் வார்த்தைகளை கேட்டு மகிழ்ச்சியும் துக்கமும் கலந்து அவளை என்னவோ செய்தது.

“அது .. அப்பு .” என்ன சொல்வதென்று தெரியாமல் “காட்டுக்கு போயிருக்கான்” என சொல்லி வைத்தாள். தங்கள் பிரச்சனை தங்களோடு இருக்கட்டும் என்று.

“அனு எதாவது பிரச்சனையா? உன் குரலே சரியில்லயே” என்றான்.

அதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை அழுதேவிட்டாள். “அனு என்னாச்சி? . . அனு அனு சொல்லுமா” என பதறினான் கிருஷ்.
அப்புவிற்கு எதாவது நேர்ந்துவிட்டதா? இல்லை வரதன்? வீரபாகு? அல்லது வேறு எவருக்கு? என மனம் இல்லாத பிரச்சனைகளை பட்டியலிட்டு பாடாய்படுத்தியது.
“அனு சொல்லு அனு”


தன்னை சமாளித்தவளாய் “அண்ணா ” என தொடங்கி அனைத்தையும் கூறினாள். ஆடிப் போய்விட்டான் கிருஷ். இனி அவர்களின் சர்க்கஸ் நிகழ்ச்சி பார்க்கவே முடியாது என எண்ணக் கூட முடியவில்லை. அதோடு அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்னவாகும்? என பல கேள்விகள் மனதைக் குடைந்தது.

“அனு நான் இப்பவே கிளம்பி வரேன்” என போனை கட் செய்தபடி “அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தே ஆக வேண்டும்” என முடிவெடுத்தான்.

கதிரைத் தேடி வந்தான். அவனை காணவில்லை. வேலைக்காரனிடம் கேட்க அவனோ சத்யமூர்த்தியும் கதிரும் முக்கிய வேலையில் இருப்பதாகவும் தொந்தரவு செய்ய முடியாது எனவும் சொல்லி நகர்ந்தான்.

வேறொரு அறையில் கதிரும் காவ்யாவும் சிரித்து பேசிக் கொண்டிருந்தது கர்ட்டன் அணிந்திருந்த கண்ணாடி ஜன்னலில் கொஞ்சமாய் தெரிந்தது.

அப்பொழுதும் அவனின் குறும்பு மூளை வேலை செய்ய சற்றே குரலை தாழ்த்தி “கதிர் கங்கா தேவியோட பி.ஏ நம்பர் என்ன?” என சத்யமூர்த்தியின் குரலைப் போல கிருஷ் கதவருகே பேசினான். இப்படிதான் சத்யமூர்த்தி சற்று நேரத்திற்கு முன் அழைத்தார்.

விழுந்தடித்தபடி கதிரும் காவ்யாவும் வெளியே வந்தனர். கதிர் “சார் கங்கா தேவி இல்ல . . . அது காயத்ரி தேவி” என சொல்லியபடி முன்னே செல்ல முயன்றவனிடம் “ஓ மாத்தி சொல்லிட்டேனா? இட்ஸ் ஓகே காயத்ரி தேவி கோச்சிக்க மாட்டாங்க” என்றான் கிருஷ்.

சடன் பிரேக்வுடன் யூ டர்ன் போட்ட கதிர் “நீதானா? என்னடா குரல் சரியில்லயேனு நினைச்சேன்” என்றான் காண்டாக

“ சார் வேலையில ரொம்ப பிஸி” என இருவரையும் மாற்றி மாற்றி கிண்டலாக பார்த்தான்.

“இல்ல பிஸ்னஸ் விஷயமா பேசிட்டு இருந்தோம். அதான்” என காவ்யா சமாளித்தாள்.

“நம்பிட்டேன்” என அழுத்தமாக கூற

“எதுக்கு கூப்ட கிருஷ்?” என கதிர் பேச்சை மாற்றி தன் காதலியை காப்பாற்றினான்.

“சர்க்கஸ்ல பெரிய பிரச்சனை. நான் போகணும். ”

“என்ன பிரச்சனை?” இது கதிர்

கிருஷ் அனு கூறிய அனைத்தையும் கூறினான். “நானும் வரேன்” என கதிர் சொல்ல காவ்யாவும் சேர்ந்துக் கொண்டாள்.

“யாருக்கு என்ன பிரச்சனை?” என சத்யமூர்த்தி அங்கே அழைக்கா விருந்தாளி ஆனார். கிருஷ் மீண்டும் அனைத்தையும் கூறினான்.

“என் வருங்கால மாப்பிள்ளையை காப்பாத்திக் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு நான் நன்றி சொல்லணும் அதனால நானும் வரேன்” என சத்யமூர்த்தியும் சேர்ந்துக் கொண்டார்.

“மாப்பிள்ளனு சந்துல சிந்து பாடறானே” என மூவருக்கும் எரிச்சலாய் இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் சத்யமூர்த்தியை அழைத்துச் சென்றனர்.

எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் சர்க்கஸ் களையிழந்து மயான அமைதியுடன் காட்சி அளித்தது. அப்பு வரதன் என ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில் சிலையென அமர்ந்து இருந்தனர்.

அப்பு அழுது அழுது அவன் கண்ணீர் வற்றிப் போனது. கிருஷ் மற்றும் அவனுடன் வந்தவர்கள் வரதனிடம் ஆறுதலாக பேச முயன்றனர்.

அவர் எதையும் ஏற்கும் மனநிலையில் இல்லை. அப்பு ராஜா என்னும் சிங்கத்தின் அருகில் அமர்ந்திருந்தான் அதை தடவிக் கொடுத்தபடி. “நாளைக்கு நீ போயிடுவ . . என்னை மறந்திடாத ராஜா” என ஆயிரமாவது முறை கூறினான்.

அவன் மட்டும் அல்ல அனைவரும் தங்களுக்கு பிரியமான விலங்குடன் இருந்தனர். நாளை முதல் இவற்றை காண முடியாது என்கிற எண்ணமே கசந்தது.

கிருஷ் கதிர் மற்றும் காவ்யா காரில் வரும்பொழுதே அடுத்து என்ன செய்ய இயலும் என விவாதித்தபடி வந்தனர். கிருஷ் மற்றும் கதிர் அடுத்தாக அப்பு வரதன் வீரபாகுவை ஒரு சேர அழைத்து அமர்த்தினர். சத்யமூர்த்தி என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களோடு அமர்ந்தார்.

கதிர் தொடங்கினான் “என்ன நடந்திருக்கோ அது மோசமான விஷயம். ஏத்துக்க முடியல ஆனா அதுல இருந்து வெளியில வந்தே ஆகணும். இப்படியே இருந்திட முடியாது. அடுத்து என்ன?”

“சர்க்கஸை மூடணும்” என்றார் வரதன் விரக்தியாக

“அப்படி சொல்லாதீங்க . . . ” வேதனையுடன் அப்பு இடைமறித்தான்.

“உங்களால அனிமல்ஸ் இல்லாம சர்க்கஸ் நடத்த முடியும்” கிருஷ் நிதானமாக பேசினான். அவன் வார்த்தைகள் அவர்களை எந்த
 
#24
விதத்திலும் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.

“இல்ல தம்பி சர்க்கஸ் பாக்க வர்றவங்கள்ல குழந்தைங்கதான் அதிகம். அவங்க ஆர்வமா ஆசையா பாக்குற விஷயம் விலங்குகள். அதுவும் விலங்குகள் செய்யுற ஜாலங்கள் மலைக்க வைக்குது. சர்க்கஸை தவிர வேற எங்கயும் இப்படி பாக்க முடியாது இல்லையா? சர்க்கஸ்ல விலங்குகள் இல்லாம கஷ்டம்பா” என விரதன் பதிலளித்தார்.

“விலங்குகள் நல ஆர்வலர்கள் பார்வையில இருந்து பார்த்தா அவங்க சொல்றதும் சரிதானே. விலங்குகளை அடைச்சி . . ஸாரி தப்ப எடுத்துகாதீங்க” கிருஷ் கூற

“நாங்க விலங்குகல கஷ்டப்படுத்தினது இல்ல” என அப்பு பேசினான்.

கதிர் அப்பு முன் மண்டியிட்டு “புரியிது அப்பு. ஆனா சட்டத்தை மீற முடியாது. வேற யோசிக்கலாம்”

“வேற எதுவுமில்ல” இது வீரபாகு

“இருக்கு. விலங்குகள் இல்லா சர்க்கஸ்” காவ்யா கூறினாள்.

“ஆமா சார் விலங்குகள் இல்லாத சர்க்கஸ் உலகத்துல இருக்கு. சர்க்கஸ் வர்க்காஸ், பிளையிங் ப்ரூட்பிளை சர்க்கஸ், வாண்டர்லஸ்ட் சர்க்கஸ், பிண்டில்ஸ்டிப் பேமிலி சர்க்கஸ், சர்க்கஸ் சென்டர், சர்க்கஸ் பினலி இப்படி நிறைய இருக்கு சார்.”

“இது எல்லாமே விலங்குகள் இல்லாத சர்க்கஸ்” கதிர் சேர்ந்தான்.

“நிஜமாவா?” அப்பு சற்றே உற்சாகம் ததும்ப கேட்டான். நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவன் முகத்தில் போட்டிப் போட்டது.

கதிர் இணையதளத்தில் அவற்றினை காட்டினான். அனைவரும் பார்க்க அவர்களுக்குள் நம்பிக்கை கீற்று துளிர்விடத் தொடங்கியது.

“ஹாலோகிராம்ல விலங்குகள் வர மாதிரி செய்லாம் இல்லயா? துபாய்ல நடந்த மாதிரி ஒரு வீடியோ வைரல் ஆச்சு” அப்பு சந்தேகமாகக் கேட்டான்

“எக்ஸாட்லி அப்பு” கிருஷ் புன்னகைக்க. அந்த வீடியோவை அனைவருக்கும் கூகுளில் தேடிக் காட்டினான்.

“நீங்க சர்க்கஸ்க்காக டிரைனிங் ஸ்கூல் கூட ஆரம்பிக்கலாம். எதிர்காலத்துல சர்க்கஸ் அழியாம இருக்கும். அடுத்த தலைமுறைக்கு எடுத்திட்டு போகலாம். வெளிநாட்டுல இப்படி நிறைய இருக்கு”. கதிர் தீவிரமாக ஆலோசனை வழங்கினான்.
வரதன் மனம் நிமிர்ந்து


“சர்க்கஸ்க்கு இன்னிக்கு இந்த நிலைமை வர மக்களான நாமளும் ஒரு காரணம். சினிமா மால் இதுக்கெல்லாம் ஆயிரத்துல செலவு செய்யற நாம சர்க்கஸை ஒரு நாளும் மதிக்கல. இப்படி எத்தனையோ கலைகளும் அதன் கலைஞர்களும் அழிஞ்சு போக காரணமே நாமதான். முதல் குற்றவாளியே மக்கள்தான்.” என்றாள் காவ்யா உணர்ச்சிமிகுந்தவளாய்.

“கரெக்டா சொன்ன காவ்யா. பேரண்ட்ஸ் குழந்தைங்கள அழைச்சிட்டு போகணும். இளைஞர்களும் பண்பாடு கலாசாரம் இதையெல்லாம் பேஸ்புக் டிவிட்டர்ல லைக் ஷேர் பண்ணா கடமை முடிஞ்சா மாதிரி நினைக்கறாங்க.” கிருஷ் அவன் கருத்தை கூறினான்.

“தெருக் கூத்து கிராமிய கலைகள் எல்லாம் ஒரு காலத்துல எத்தன பிரபலம். சுதந்திர போராட்டத்துக்கு கருவியா கூட பயன்படுத்தினாங்க. ஆனா இப்ப கலையும் இல்ல அந்த கலைஞர்கள் என்ன ஆனாங்க? பாவம்.” காவ்யா மீண்டுமாய் கேட்க

“வரதன் சார் நாம விலங்குகள் இல்லா சர்க்கஸை நடத்துவோம். சர்க்கஸ் ஸ்கூல் தொடங்கலாம். ஹோலோகிராம் பயன்படுத்திகலாம். சரினு சொல்லுங்க சார்“ என பரிதாபமாக அப்பு வரதனைப் பார்த்துக் கேட்டான்.

வட்டமிடும் . . .
 
#25
காதல் சர்க்கஸ் 9

அனைவரும் வரதன் என்ன பதில் சொல்லப் போகிறார் என ஆர்வமாக பார்த்தனர்.

“நீங்க சொல்றதெல்லாம் கேட்க சந்தோஷமாதான் இருக்கு. இதெல்லாம் எந்த அளவு சாத்தியம்? பிராக்டிகலா யோசிக்கணும்” என்றார் வரதன்.

“படிபடியா போகணும் சார் முதல்ல நாம ஷோவை எப்பவும் போல பண்ணலாம். அதுல “அனிமல்-ப்ரீ சர்க்கஸ்” அப்படிங்கற டேக் லைன சேர்த்துக்கலாம். அதுவே வித்யாசமா இருக்கும்” அப்பு ஆர்வமாக பேசினான்.

“அடுத்தா வெளி மாநிலங்கள்ல ஷோ பண்ணுங்க. அப்புறம் வீசா கெடுபிடிகள் அதிகம் இல்லாத வெளி நாடுகளுக்கு ஷோ நடத்த முயற்சிக்கலாம்.” இது கிருஷ்

“நாம வெளி நாட்டுல பெர்பார்ம் பண்ணாலே அதை ஒரு பாயிண்டா வெச்சி ஸ்கூல்க்கு அஸ்திவாரம் போடலாம். சர்க்கஸ் ஸ்கூல் இப்ப உடனே முடியாது ஆனா எப்பவுமே முடியாதுனு இல்ல” அப்புவும் சேர்ந்துக் கொண்டான்.

மேலும் கிருஷ் “ ஹோலோகிராபிக்கு நான் வெவ்வேறு காடுகள்ல விலங்குகளை எடுத்த வீடியோ இருக்கு. அதை பயன்படுத்திக்கலாம்”.

“ஆனா இதுக்கெல்லாம் நிறைய பணம் செலவு ஆகுமே? எங்கள நம்பி யார் பணம் தருவாங்க? என்கிட்டயும் பணம் அதிகமில்ல.” என வரதன் வருத்தமாகக் கூறினார்.

சத்யமூர்த்தி உடனே “சார் உங்களுக்கு எத்தனை பணம் வேணும் சொல்லுங்க. நான் தரேன்” என்றார். வரதனும் மற்றவர்களும் அவரை யாரென குழப்பமாக பார்க்க .. காவ்யா தன் தந்தை என அறிமுகப்படுத்தினாள்.

“சார் பணம் ஒரு பெரிய பிரச்சனை இல்ல. நம்ம கையில இருந்து காசு அதிகமா செலவு பண்ணாம முடியும்” என கதிர் சொல்ல

“எப்படி?” ஆச்சரியமாய் அனைவரும் பார்த்தனர்.

“அதுக்கு கிரவுட் பண்டிங் முறையை பயன்படுத்திக்கலாம்.” என்றான்.

“கிரவுட் பண்டிங்னா என்ன தம்பி?” வீரபாகு கேட்டார். இந்த கேள்வி வரதன் மற்றும் அப்பு மனதிலும் இருந்தது.

“கிரவுட் பண்டிங்னா சோஷியல் பவர் ப்ளஸ் டெக்னாலஜி. நாம ஒன்றுக்கும் மேற்பட்டவர்கிட்ட இருந்து டெக்னாலஜி மூலமா கடனாக இல்ல நன்கொடையாக பணம் வாங்குறது இல்ல கொடுக்கறது தான் கிரவுட் பண்டிங்”

“புரியலயே?” அப்பு கேள்விக் குறியோடுப் பார்த்தான்.

“ஆன்லைன்ல குறிப்பிட்ட இணையதளத்துல நமக்கு தேவையான நிதி அதற்கான காரணம். அதோட பணம் எப்படி பெறுவது . . . அதாவது கடன் இல்ல நன்கொடை போன்ற தகவல்களை தக்கபடிக் கொடுக்கணும். இதைப் பார்த்த நல்ல உள்ளங்கள் உதவுவாங்க.” கதிர் விளக்கினான்.

“இது ஹெல்த் இஷ்யூஸ்க்கு மட்டும் தானே கதிர்” என காவ்யா சந்தேகமாக கேட்டாள்.

“இல்ல நிறைய ஸ்டார்ட் அப் இதை பயன்படுத்துறாங்க மேடம்” பதிலளித்தான். சத்யமூர்த்தி இருப்பதால் மேடம் என்றான்.

மேலும் “நாம இங்க கடனா வாங்குறது நல்லது” என்றான்.

“இல்ல கதிர் நன்கொடை தான் நல்லது” காவ்யா கூற

தலையாட்டி மறுத்தவன் “இல்லவே இல்ல கடனா வாங்கினா என்ன ஆகும்? நாம பணத்த திருப்பி தரணும். அதுக்கு நம்ம சர்க்கஸ் நல்லா போகணும். காசு கொடுத்தவன் என்ன செய்வான்? போட்ட பணம் எடுக்கணும் அதுக்கு சர்க்கஸ் நல்லா போகணும்னு அவனும் நினைப்பான் இல்லயா?. அதனால அவனுக்கு தெரிஞ்ச நாலு பேருகிட்ட சர்க்கஸ் பத்தி சொல்லுவான். அதுல ஒருத்தராவது சர்க்கஸ் பாக்க வருவாங்க. இது ஒருவகையான செலவில்லாத விளம்பரம் யுக்தி”

“சபாஷ்” என சத்யமூர்த்தி தன்னையும் மறந்து சொன்னார். கதிரை ஆச்சரியமாக பார்த்தார்.

“அடுத்ததா சர்க்கஸ் பாக்க வரவங்களுக்கு. அடுத்த முறை சர்க்கஸ் டிக்கெட் விலைல ஐம்பது ரூபாய் கேஷ்பேக் ஆப்பர் கொடுக்கலாம்”

“இது நஷ்டம் ஆகாத தம்பி” வரதன் கேட்க

சிரித்தபடி கதிர் “ முதல் தடவை நூறு ரூபாயாக இருக்கற டிக்கெட்டை அடுத்த முறை நூத்தம்பதா பண்ணிடலாம். இந்த ஆப்பர்காகவே அடுத்த முறை பாக்க வருவாங்க. இப்படி நிறைய செய்யலாம் சார்” என கதிர்

“ஆமா துணிக் கடை ஹோட்டல்ல கூட இப்படி இருக்கு.” என கிருஷ் சொல்ல

லியோ சர்க்கஸ்க்குள் புது ரத்தம் பாய்ச்சிய ஒரு உணர்வு. அனைவருக்கும் புது நம்பிக்கை புது தெம்பு. அதோடு மனநிறைவு.

“காலையில இருந்து வரதன் சார்ல இருந்து யாரும் எதுவும் சாப்பிடல நான் எல்லாருக்கும் குடிக்க ஜுஸ் கொண்டு வரேன்” என அப்பு போனான். “வேண்டாம்” என தடுத்தும் அவன் நிற்கவில்லை. அவன் என்றுமே கௌரவம் பார்த்தது இல்லை.

கிருஷ் கால் மறத்துப் போனது. மெல்ல எழுந்து நடந்தான். கதிர் அவன் கூட வர எத்தனிக்க “நான் பார்த்துக்கிறேன்” என்பதாய் ஜாடை செய்து நடந்தான். காலையில் இருந்த மனப்புழுக்கம் அகன்று மனம் லேசாய் இருந்தது.
சத்யமூர்த்திக்கு யாரிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அதனால் கிருஷ் உடன் வந்தார்.


“மாப்பிள . . பிரச்சன தீர்ந்தது இல்லயா?” என தொண தொணத்தபடி கூடவே வந்தார்.

“ஐய்யயோ என்னடா தொல்ல” கிருஷ் மைண்ட் வாய்ஸ் சொல்ல கடனே என புன்னகைத்தபடி நடந்தான்.

ஆங்காங்கே சில சர்க்கஸ் கலைஞர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். இன்னும் விவாதிக்கபட்ட விவரங்கள் அவர்களை சென்று அடையவில்லை.

கிருஷ் ஒரிடத்தில் நின்றான். சத்யமூர்த்தியும் நின்றார். சற்றே தொலைவில் அழகிய இளம் பெண் போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் அகன்ற விழிகள் அவனை நிறுத்தியது. ஏதோ ஒன்று இருவரையும் இணைப்பதுப் போல உணர்ந்தான். கிருஷ் அனுமதியில்லாமல் அவள் பேச்சு காதில் தானாக விழுந்தது.
 
#26
“இல்ல இனி சர்க்கஸ் நடக்காது நின்னிடும்” என்றாள் லேசாய் கண்ணீர் எட்டிப் பார்க்க

“. …….”

“மனசே சரியில்ல”

“……………”

“நான் போறேன்” என போனை கட் செய்தவள் வேகமாக ஓடினாள். இதைக் கண்ட கிருஷ் சந்தேகத்தோடு அவனை பின் தொடர்ந்தான்.

ஒரிடத்தில் மேலே சரசரவென ஏறினாள். அசம்பாவிதம் நடந்துவிடப் போகிறது என கிருஷ் உள்ளம் அஞ்சியது.

“ஹலோ ஹலோ” என கிருஷ் பதட்டதுடன் அவள் பின்னால் ஏறினான்.

அவளின் வேகத்துக்கு இவனால் ஈடுக் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு ஏறினான்.
மேலே சென்றவள் ஒரு சின்ன மரப்பலகை போல் இருந்ததின் மேல் நின்றாள். அவனும் அங்கு சென்ற நொடி அவள் ஒரு கயிறைப் பிடித்தபடி லாவகமாக இங்கும் அங்குமாய் ஊஞ்சலாடினாள்.


“இதுக்கா மேல ஏறின” என அலுத்துக் கொண்டவன் கீழே பார்க்க ஆடிப் போய்விட்டான். ஒரு நொடி தன்னையும் மறந்து “ஹெல்ப் . . ஹெல்ப்” என கத்திவிட்டான்.

ஊஞ்சலாடிய பெண் அவன் குரல் கேட்டு அவனிடத்தில் தென்றலாய் வந்து நின்றாள். அவனை ஏற இறங்க பார்த்தவள் “சர்க்கஸ்க்கு புதுசா?” எனக் கேட்டாள்

“இல்ல” என்றான்

“இங்க என்ன பண்ற?”

“உன்னை காப்பாத்த வந்தேன்”

“என்னையா?” விழி அகல கேட்டாள்

“நீ தற்கொலை பண்ணிக்க வந்தே”

சிரித்தவள் “நானா தற்கொலையா?”

“ஆமா நான் போறேன் சொன்னியே”

“மனசு சரியில்லனா டிரப்பீஸ் பண்ணுவேன். அதை சொன்னேன்”

“சரியா சொலலக் கூடாதா?” பாவமாய் கேட்டான்

“நீ கீழயே கூபபிட கூடாதா?”

“ஹலோ ஹலோனு கூப்பிட்டேன்”

“அது நீதானா நான் யாரோ போன்ல சிக்னல் கிடைக்காமா பேசறாங்க நினைச்சேன். ஆமா நீ யாரு?”

“பேட்டி எடுக்கறத விட்டுட்டு என்னை கீழ இறக்கிவிடும்மா உனக்கு புண்யமா போகட்டும்” என்றான்

“நெட்ல குதி”

“ஐயோ” என மலைத்தான்

“இங்க இருந்து பத்தடிதான் . . தரைக்கு இருபத்தஞ்சி அடி” சாதாரணமாய் அவள் கூற

“நான் என் அம்ம அப்பாக்கு ஒரே தவப்புதல்வன் என்னை காப்பாத்து” கெஞ்சாத குறையாக கூற

“சரி என்னை புடுச்சிக்கோ” என்றதும் அவளை இறுக்கமாக அணைக்காத குறையாக பிடிக்க . . அவள் முறைப்பில் லேசாய் இடையை பிடித்துக் கொண்டான்.

இறங்குகையில் அவன் மனதோடு கேமராவும் நெட்டில் விழுந்தது. அவள் மெல்ல இறங்க உதவினாள். அப்பொழுது “என் பேரு கிருஷ் உன் பேர் என்ன?” கிருஷ் கேட்க

“சந்தியா” என்றாள்.

வட்டமிடும்
 
#27
காதல் சர்க்கஸ் 10

சத்யமூர்த்தி தன் மகள் காவ்யாவை அழைத்தார்.


“என்னப்பா?”

“நான் ஒண்ணு சொல்லணும்” என மென்றுமுழுங்கினார்.

“சொல்லுங்கப்பா”

“என்னடா அப்பா இப்படி சொல்லுறாறேனு நினைக்கக் கூடாது. உன் நல்லதுக்காகதான் சொல்லுறேன்”

“என்ன?” என்பதாய் பார்க்க

“நீ கதிரை கல்யாணம் பண்ணிக்கோம்மா. கிருஷ் வேண்டாம்” என்றார்.

“என்னப்பா சொல்லுறீங்க?” என்றவள் மனதில் காதல் விவகாரம் கசிந்துவிட்டதா? என சந்தேகித்தாள்.

“கதிர் தம்பி என்னமா பிஸ்னஸை பத்தி பேசுது. நாலு காசை நூறா மாத்திற டெக்னிக் தம்பிக்கிட்ட இருக்கு. இந்த கிருஷ்ஷை பாரு எப்ப பார்த்தாலும் கர்ணனோட கவச குண்டலம் மாதிரி கேமராவ கழுத்துல மாட்டிக்கிட்டு பாக்க நல்லாவா இருக்கு.”

“இல்லப்பா கிருஷ் போட்டேகிராபி” என சொல்ல வந்தவளை

“பாரும்மா கிருஷ் ராஜா வீட்டு கண்ணுகுட்டி. காசை செலவு செய்ய மட்டும் தான் தெரியும். அதே கதிர் அப்படியில்ல என்னமா பேசுது பாத்தேயில்ல”. அவர் வரையில் பிஸ்னஸ் நடத்த தெரிந்தவன் புத்திசாலி. கலைகள் பொழுதுப்போக்க மட்டுமே.

சந்தோஷம் தாளவில்லை காவ்யாவிற்கு “அப்பா நீங்க யாரை சொல்லுறீங்களோ நான் அவரையே கட்டிக்கிறேன். நீங்க எனக்கு கெடுதலா செய்யப் போறீங்க” என லாரி ஐஸை அவர் மேல் கொட்டினாள்.

அவரும் உருகியபடி “ கிருஷ் பாரு கட்டிக்க போற பொண்ணு முன்னயே வேற பொண்ணு பின்னாடி போயிட்டான். கதிர் உன்கிட்ட ஒரு நாளாவது சிரிச்சி பேசியிருப்பானா?”

“அடாடா கதிர் பத்தி எனக்குல தெரியும்” என நினைத்தவள்

“சரிப்பா கிருஷ் அப்பா அம்மா கிட்ட என்ன சொல்லுவீங்க?” எனக் கேட்டாள்.

“ஜாதகம் சரிவர்ல சொன்னா ஆச்சு” என்றார்

“நமக்குனு ஒரு ஸ்டேடஸ் இருக்கே?” சந்தேகத்தை நிவர்த்திச் செய்தாள். பின்னர் பிரச்சனை வரக் கூடாதென.

“அட போம்மா நானும் ஒரு காலத்துல ஏழையா இருந்தவன்தான் இப்ப பாரு. எல்லா நம்ம மனசுலதான் இருக்கு” என்றார்.

காவ்யாவால் நம்பவே முடியவில்லை. இத்தனை எளிதில் தன் காதல் கனிந்துவிடும் என கனவிலும் நினைக்கவில்லை.

கதிர் கிருஷ்ஷை தேடிக் கொண்டுப் போனான். கிருஷ் அப்பெண்ணுடன் லீலையில் இருப்பதை கண்டதும் புன்னகையுடன் அகன்றுவிட்டான். நேராக சத்யமூர்த்தி இருக்கும் இடத்திற்கு வர அங்கே தன் பெயர் அடிப்படுவதைக் கண்டதும் மறைவாக நின்றுக் கேட்டான். அவனால் நம்பவே முடியவில்லை.

அவர்கள் பேசி முடித்ததும் வேண்டுமென்றே சென்று “சார் உங்களுக்கு உட்கார நாற்காலி கொண்டு வரேன். வெய்யில்ல நிக்காதீங்க சார்” அவனின் நாடகத்தில் உச்சி குளிர்ந்துப் போனார். பின் வரதனிடம் நன்றி சொல்ல வேண்டுமென சென்றுவிட்டார்.

காவ்யா தந்தையுடன் நடந்த சம்பாஷணையை கூறினாள். தான் அனைத்தையும் கேட்டதாக அவன் சொன்னான். “முன்னமே நிறைய ஐடியாக் கொடுத்தேன். அப்பெல்லாம் உனக்கு ஒண்ணும் தெரியாது சும்மா இருனு உன் அப்பா அடக்கிடுவாரு” என குறைப்பட்டான். “சரிவிடு” என சமாதானப்படுத்தினாள்.

இருவருக்கும் மட்டஅற்ற மகிழ்ச்சி ஆனால் வெளிக்காட்ட இயலாமல் தத்தளித்தனர். கால் நொண்டியபடி கிருஷ் வந்துச் சேர்ந்தான்.

அவனிடம் இருவரும் அனைத்தையும் கூறினர். “சீக்கிரமா கல்யாணம் பண்ணிகோ கதிர் . . உன்னைவிட எவனாவது நல்ல ஐடியா கொடுத்திட போறான்” என கிண்டலாக கிருஷ் சொன்னான். மூவரும் சிரித்தனர்.

“அந்த உயரத்துல இருந்து உன்னால இறங்க முடியாதா? அந்த பொண்ணு என்ன நினைக்கும் உன்னை பத்தி?” கதிர் கேட்க

“பொண்ணு மனசுல ஏறணும்னா கொஞ்சம் இறங்கறதுல தப்பில்ல” என்றான் கணணடித்து

அப்பொழுது அந்த பெண் அங்கு வந்து “உங்க கேமராவை மறந்துடீங்க” எனக் கொடுத்தாள்.

”அங்க என்னோட கேமரா மட்டும்தானா இருந்திச்சி?” என குறும்ப்பாகக் கேட்க

“வேற எதுவுமில்லையே”

“என் மனசைக் கூட அங்க விட்டுட்டேன்” என அவளை ஊடுருவிப் பார்க்க

வெட்கத்தை மறைத்தபடி “வரதன் சார்கிட்ட பொண்ணு கேளுங்க” சொல்லிச் மறைந்துவிட்டாள்.

வரதன் சர்க்கஸில் உள்ள அனைவரையும் அழைத்து மகிழ்ச்சியான செய்தியை கூறினார். பின்னர் லியோ சர்க்கஸ் உருண்டையை சுழல விட அது மீண்டும் கம்பீரமாக சுழன்றது. அதைக் கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி.

கதிர் மற்றும் அவனுடன் வந்தவர்கள் கிளம்பி விட்டனர். இரவு அனைவருமாய் சென்று கிருஷ் பெற்றோரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்தனர்.

கிருஷ் காரில் வீட்டிற்கு வரும் பொழுதே சந்தியாவைப் பற்றியும் கதிர் காவ்யா பற்றியும் கூறிவிட்டான். அவர்களுக்கும் சம்மதம்.

மறுநாள் காலை லியோ சர்க்கஸிற்கு விலங்கு நல ஆர்வளர்கள் வந்து விலங்குகளை அழைத்துச் சென்றனர்.
கனத்த மனதுடன் அவைகளுக்கு விடைக் கொடுத்தனர். அப்பு ஒவ்வொன்றையும் கட்டி அணைத்து முத்தமிட்டு “உங்களை கூண்டுல அடச்சி வெச்சதுக்கு ஸாரி” என மன்னிப்புக் கேட்டு வழி அனுப்பினான்.


அப்புவால் அவைகளை பிரிய முடியவில்லை. இருப்பினும் மற்ற உயிரினங்களை தங்களுக்காக கட்டுப்படுத்த வேண்டாம் என மனதைத் தேற்றிக் கொண்டான்.

அன்பு சூழ் உலகு இங்கு தன் இஷ்டப்படி யாருக்கும் தொல்லைக் கொடுக்காமல் வாழ அனைத்து உயிர்களுக்கும் உரிமை உண்டு. எப்படி மனிதன் சுதந்திரத்திற்காக ஆசைப்படுகிறானே அப்படிதான் விலங்குகளும்.

இவைகளும் சுதந்திரமாக தங்களுக்கான சூழலில் வாழ வேண்டும். அப்புவிற்கு சர்க்கஸை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது. தெரிந்துக் கொள்ளும் ஆவலும் இல்லை.

அவன் தன் இறுதி மூச்சுவரை சர்க்கஸில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டான். உலகின் தலைசிறந்த சர்க்கஸாக லியோ சர்க்கஸைக் கொண்டு வர முழு முயற்சியில் இறங்கினான்.. வரதனுக்கு உருதுணையாக ஒவ்வொரு அடியிலும் இருந்தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

தன்னை முழுவதுமாய் மாற்றிக் கொண்டான். பல விஷயங்களை அறிந்துக் கொண்டான். அப்பு அனுவை மட்டுமல்ல சர்க்கஸையும் காதலிக்கிறான். சர்க்கஸ் அவனுக்கு அழகானதொரு காதலை கொடுத்துள்ளது.

சுபமுகூர்த்த சுபதினத்தில் அனு அப்பு திருமணம் இனிதே நடைப் பெற்றது. கிருஷ் சந்தியா மற்றும் கதிர் காவ்யா திருமணமும் நடந்தது.

அப்பு தன் உழைப்பால் லியோ சர்க்கஸை ஒரு விதையிலிருந்து முட்டி மோதி அனைத்து எதிர்ப்புகளையும் மீறி விருட்சத்தைப் போல நிமிர வைப்பான்.

இனி லியோ சர்க்கஸ் என்னும் வட்டரங்கு இனி உலகையே வட்டமிடும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.

உங்கள் ஊரில் என்றேனும் லியோ சர்க்கஸ் நடக்கும். அப்பு சந்திக்க மறவாதீர்கள்.

முற்றும்