Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63
755

அத்தியாயம் - 20

“வர்ஷா! நீ முதல்ல, திவ்யா தலையில் பூவை வை. அடுத்து, சஹானா நீ” என்று நடக்க வேண்டியவற்றை சொல்லிக்கொண்டிருந்தார் பரிமளம்.

சொன்னபடியே செய்த வர்ஷா, “அண்ணீ…!” என்றபடி திவ்யாவை அணைத்துக் கொண்டாள்.

கூச்சத்துடன் புன்னகைத்த திவ்யா, “தேங்க்ஸ் வர்ஷா!” என்றாள்.

அடுத்து வந்த சஹானாவும், “உரிமையோட உங்களை, நம்ம வீட்டுக்கு வரவேற்கிறோம் அண்ணி!” என்றவள் அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கினாள்.

“ஸ்ரீராம்! இங்கே வா” என்ற சுகுணா, கணேசனிடமிருந்து மோதிரத்தை வாங்கி மகனிடம் கொடுத்தார்.

“மச்சான்! ஆல் த பெஸ்ட்டா!” என்று பிரபாவும், தமிழும் குரலெழுப்ப, பிரபு அமைதியாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொள்ள, அந்த இடமே ஆரவாரத்தில் அமர்க்களமாக இருந்தது.

மகளின் முகத்திலிருந்த சந்தோஷத்தை மனநிறைவுடன் பார்த்துக்கொண்டார் வைதேகி. ஏதோ எடுக்க அங்கே வந்த பரிமளத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டவர், “அக்கா! என் பொண்ணு இனி, உங்க வீட்டுப் பொண்ணு. அவளுக்கு, இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் என்னோட வேண்டுதலே. இன்னைக்கு அது நல்லபடியா நடந்துடுச்சி. இனி, அவ உங்களோட பொறுப்பு…” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னவரை அன்புடன் அணைத்துக்கொண்டார் பரிமளம்.

“இங்கே பாரு வைதேகி! உன் பொண்ணு மட்டுமில்ல, நீயும் எங்கள்ல ஒருத்திதான். உன் வீடு என் வீடுன்னு பிரிச்சிப் பேசாதே. அங்கே பாரு ஆளு அங்கே இருந்தாலும், உன் பொண்ணோட கண்ணெல்லாம் இங்கே தான் இருக்கு. முதல்ல கண்ணைத் துடை” என் அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்தாள் திவ்யா.

“ஏம்மா அழற?” என்று கேட்கும்போதே அவளுக்கும் அழுகை வந்துவிட, பரிமளத்திற்கு அவர்களைச் சமாதானப்படுத்துவது பெரும்பாடாகிப் போனது.

அவள் உள்ளே வந்ததிலிருந்து திவ்யாவை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராம், நடப்பவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான்.

சற்றுநேரம் பொறுத்து உள்ளே வந்தவன், “தியா! கண்ட்ரோல் யுவர் செல்ஃப்! நீயே அழுதா, அத்தையை யார் சமாதானம் செய்யறது?” என்று அவளது தோளை வளைத்தவன், “அத்தை! உங்க பொண்ணுகிட்ட எந்தக் குறையும் இல்லாம, என்னைக் கவனிச்சிக்கச் சொல்லுங்க. நான் ரொம்பவே சென்சிடிவான ஆளு. சட்டுன்னு ஃபீல் ஆகிடுவேன். சோ, உங்க பொண்ணுதான் என்னைப் பார்த்துக்கணும்” என தீவிர பாவத்துடன் சொன்னான்.

வைதேகி வாயை மூடிக்கொண்டு சிரிக்க, திவ்யா கிளுக்கென நகைத்தாள்.

“அவ்வளவுதான். நீ வா” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

பரிமளம் சிரிப்புடன், “வைதேகி! உன் பொண்ணோட சந்தோஷத்துக்கு, நான் கேரண்டி. பார்த்தயில்ல… எங்க ஸ்ரீ, அவளைத் தங்கமா பார்த்துக்குவான். சரி நேரமாகுது. சாப்பாட்டு வேலையைக் கவனிப்போம். சின்னதுங்க கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டும்” என்றார்.

“சரிக்கா! இலையை போட்டுடுவோம்” என்று வேலையில் இறங்கினர் பெண்கள்.

முன்னால் பந்தி நடந்துகொண்டிருக்க, பின்னாலிருந்த தோட்டத்தில் திவ்யாவின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

“என்ன இப்படி ஃபீல் பண்ற? நீ அழறதைப் பார்த்தா, என்மேல உனக்கு டௌட் இருக்கா மாதிரியே தோணுது” என்ற ஸ்ரீராம் அவளது முகத்தைக் கைகளில் தாங்கியபடி, பெருவிரல்களால் அவளது கண்ணீரைத் துடைத்தான்.

“அம்மா அழுததும் எனக்கு மனசு தாங்கல. நான் சொல்ல வர்றது உங்களுக்குப் புரியுதில்ல” எனக் கேட்டாள்.

முறுவலித்தவன், “புரியாம என்ன? ஆனா, நீ என்னை நம்பணும்” என்றான்.

“உங்களை நம்பாமலா, கல்யாணம் வரைக்கும் வந்திருக்கேன்” என்றாள்.

“அப்போ, நீ இப்படி ஃபீல் பண்றதை விட்டுட்டு நிம்மதியா நம்ம கல்யாண நாளை எதிர்பார்த்து கனவு கண்டுட்டு இரு. ஆகவேண்டியதை, நான் பார்த்துக்கறேன். எங்க வீட்லயும் புரிஞ்சிக்காதவங்க இல்ல. சோ, கல்யாணத்துக்குப் பின்னாலயும் அத்தை நம்மோட இருப்பாங்க. அதுக்கு நான் கேரண்டி” என்றான் உறுதியாக.

“உங்களைப் பற்றி தெரியாதா ராம்! என கவலை, அம்மாவைப் பத்தி. அவங்க இந்த ஏற்பாட்டுக்கு நிச்சயம் சம்மதிக்கமாட்டாங்க” என்றாள் வருத்தத்துடன்.

“இதைத் தான் சொன்னேன். என்னை நம்புன்னு. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். ஆணுக்கு மட்டும் இல்ல; பெண்களுக்கும் கல்யாணத்துக்குப் பிறகு, பெத்தவங்களைப் பார்த்துக்க எல்லா ரைட்ஸும் இருக்கு. எல்லாம் நாம நினைப்பதைப் போலவே நல்லபடி நடக்கும்” என்றான் ஆறுதலாக.

அவளும், “ம்” என தலையை ஆட்டினாள்.

“கொஞ்சம் சிரிக்கலாம்னு நினைக்கிறேன். இல்லன்னா, நைட்ல இந்த அழுமூஞ்சிதான் கண்ணுக்கு முன்னால வரும். அப்புறம் என் மூட் கெடும். தூக்கம் வராது… உனக்கு மெசேஜ் அனுப்புவேன். உன் தூக்கம் கெடும். அப்புறம் ஸ்வீட் டிரீம்ஸ் வராது. காலைல ஆஃபிஸ்ல நானும், ஹாஸ்பிட்டல்ல நீயும் தூங்கி வழியணும். தேவையா இதெல்லாம்!” என்றான் தீவிர பாவனையுடன்.

பெருமூச்சொன்றை விடுத்தவள், “இவ்ளோ பெரிய லெக்சருக்குப் பதிலா, கொஞ்சம் சிரின்னு ஒரு வார்த்தைச் சொன்னா, சிரிக்க மாட்டேனா!” என்றாள்.

“ஓ! அப்போ, நான் சொன்னதும் நீ செய்வ” என வில்லங்கமாக சிரித்துக்கொண்டே கேட்டான்.

புரியாமல் அவளும், “சொல்லித்தான் பாருங்களேன். தெரியும்” என்றாள்.

தீவிர பாவத்துடன், “இறுக்க அணைச்சி உம்மா தரு” என்றான்.

திகைப்புடன், “என்னது?” என்றாள்.

“அதுக்கு எதுக்குக் கண்ணு இவ்ளோ பெரிசா விரியுது? இறுக்க அணைச்சி உம்மா தரு” என்றபடி, அவளது கரங்களைப் பிடித்து அருகில் இழுத்தான்.

“ஹலோ! இது அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்” என்றாள்.

“என்னது? கல்யாணத்துக்குப் பின்னால, நான் ஏன் உன்னைக் கெஞ்சிகிட்டு இருக்கப் போறேன்” என்றவன் அவளை மேலும் தன்னருகில் இழுத்து, ஒரு கையால் அவளது இடையை வளைத்து அணைத்தான்.

“ராம்! யாராவது வரப்போறாங்க” என்றவள் அவனிடமிருந்து விலக முயன்றபடி, சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“சும்மா இரு. நமக்கு பாடிகார்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க…” என்றவன், தனது திட்டத்தைச் செயல்படுத்திக் கொள்ள முனைய, மெல்ல அவனது அணைப்பில் ஒன்றினாள் அவனது தியா.

*************

வீட்டிற்கு வந்தபின்பு அறைக்குள் வந்து அடைந்தவள் தான் தேவி. எதற்குமே அசைந்து கொடுக்காமல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். மனம் அதன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தது.

‘திடுதிப்பென இப்படி ஒரு குண்டைத் தூக்கித் தன் தலையில் போடுவானா அவன்! போடுவானா என்ன? அதான் போட்டுவிட்டானே! இதில், பதிலைச் சீக்கிரமே சொல்ல வேண்டுமாம். வேண்டாமென்று விலகி ஓடுபவளைத் துரத்திப் பிடிப்பான் போல.

தேவையா இதெல்லாம் எனக்கு! ஒழுங்காக வீட்டிலேயே இருந்திருக்கலாம். இரண்டு நாட்கள் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று வந்ததல்லவா இப்போது தவறாகிவிட்டது. கடவுளே! எனக்கு எதற்கு இந்தச் சோதனை?
அவன் ஃப்ரெண்டோட நிச்சயதார்த்தம்னு வந்தான். நீ அமைதியா இருக்க வேண்டியது தானே. சாப்பிட்டுவிட்டுக் கையலம்ப வந்தவனைப் பார்த்து சிரிப்பானேன்? இப்போதும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பானேன்?’ என்று மனத்திற்குள் புலம்பியபடி படுத்திருந்தாள்.

மதியம் நடந்ததெல்லாம் நினைவில் வர எரிச்சல்தான் மண்டியது.

கையைத் துடைத்தபடி, “படிப்பெல்லாம் எப்படிப் போகுது தேவி?” உரிமையுள்ளவன் போலக் கேட்டுக் கொண்டே, அவளருகில் வந்து அமர்ந்தான் தமிழ்ச்செல்வன்.

“ம்…” என்று மலங்க மலங்க விழித்தவள், “நல்லா போகுது சார்!” என்றாள் தடுமாற்றத்துடன்.

“இன்னும் எத்தனை செமஸ்டர் இருக்கு?”

“இதான் லாஸ்ட்…”

“அப்புறம்?”

“மாடலிங்” என்றாள்.

“மாடலிங்கா!” ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ம், மாடலா இல்ல. டிரெஸ் டிஸைனரா. என்னோட கிரியேட்டிவிட்டி ஊரெல்லாம் பேசப்படணும்” என்று கண்களில் கனவுகளுடன் சொன்னாள்.

“ஓ! நல்ல விஷயம். உன் கனவெல்லாம் நிறைவேறினதும் என்ன பண்ணுவ?” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

“புரியலையா? கல்யாணத்தைப் பத்திக் கேட்டேன்.”

முகத்தை அஷ்டக்கோணலாக்கியவள், “ஐயையே… எனக்கு அந்த ஐடியாவே இல்ல” என்றாள்.

“ஆனா, எனக்கு இருக்கே” என்றான்.

“என்னது?” என்று மீண்டும் முகத்தைச் சுளித்தாள்.

“நான் கல்யாணம் செய்துக்கற ஐடியால இருக்கேன். உன்னை…” என்றான்.

அதிர்ச்சியுடன் இமைகளை மூடாமல், அவனைப் பார்த்தாள்.

“இதோ, இதே பார்வைல தான் நான் விழுந்தேன். எப்போ தெரியுமா? உன்னை முதன்முதல்ல பார்த்தேனே அப்போவே. அதை என்னைக்குக் கன்ஃபார்ம் பண்ணேன்னா, என்கிட்ட லேட் நைட்ல மாட்டினபாரு அன்னைக்கு” என்றான்.

“இல்ல… நான்…” என்று திணறினாள்.

“படிப்பை முடிக்கிற வரை நான் வெயிட் பண்றேன். கல்யாணத்துக்குப் பிறகு, உன் ஆம்பிஷனுக்கு நான் ஹெல்ப் பண்றேன். அது எந்த வகையிலும் ஸ்பாயில் ஆகாது. அதுக்கு கேரண்டி” என்றான்.

அவளால் எதுவுமே பேசமுடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.

“உனக்கு ஷாக்கா இருக்கும். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க. நான் இன்னும் ஒன் ஹவர்ல சென்னைக்குக் கிளம்பறேன். ஃப்ரீயானதும், உனக்குப் போன் பண்றேன். ஓகே” என்றவன் அவளது கன்னத்தில் தட்டிவிட்டுக் கிளம்பினான்.

“சார்!” என்றாள்.

“தமிழ்… அப்படியே கூப்பிடு” என்றான்.

“ஆ… இ..ல்ல இல்ல… அது கல்யாணம்…”

“உன் படிப்பு முடியட்டும் அப்புறம்” சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றான்.

நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவிப்பாகவும், குழப்பமாகவும் இருந்தது.

காதல் வளரும்..
 
  • Like
Reactions: saru