காகித மலரவள் - கதை திரி

#2
மலர் - 01
காலை நேர பரபரப்பில் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து காணப்பட்டது. இருசக்கர வாகனங்களும் கனரக வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் நகர்ந்து கொண்டிருக்க பெசன்ட் நகரில் அமைந்திருந்த அந்த கிளினிக் முன் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார் ராஜா, உடன் அவரின் மனையாள்.

"ஏங்க பாப்பா இங்க வருவா தானங்க?.. எனக்கு என்னமோ பயமா இருக்குங்க.." என்றார் கண்களில் பயத்தை தேக்கியபடி.

"வந்துருவா செல்வி, சாதனா பொண்ணு தான் அவள கூட்டிட்டு வர்றது என்னோட பொறுப்புனு சொல்லுச்சுல்ல மா.. நீ கவலப்படாம உள்ள வா இப்போ.." என்றபடியே அந்த கிளினிக்கிற்குள் நுழைந்தார் ராஜா.

அது ஒரு உளவியலாளரின் கிளினிக். ரொம்ப பெரிது என்றிறாமலும் சிறிதும் என்றிறாமலும் நடுத்தர அளவில் இருந்தது அந்த கிளினிக். உள்ளே நுழைந்தவர், அங்கு வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் "நிர்மலா மேடம்ம பார்க்கணும்.." என்றார் ராஜா.

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா சார்?.." என அந்த வரவேற்பறையில் இருந்த பெண் வினவ "அவங்க ஒன்பது மணிக்கு வர சொன்னதா சொன்னாங்க மா.. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு, வர்ஷினிங்கிற பேருல அப்பாயிண்ட்மெண்ட் போட்ருக்கு" என்றார் ராஜா.

"ஒன் மினிட் சார்.." என்றவள் அங்கிருந்த குறிப்பெழுதும் புத்தகத்தில் பெயரை பார்த்து குறித்துவிட்டு "அங்க உட்காருங்க சார், மேம் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துருவாங்க.. உங்க கூட வர்ஷினி வந்துருக்காங்கலா? சார்.." என்றாள் அந்த பெண்.

"வந்துக்கிட்டு இருக்காங்க மா.." என்றவர் தன் மனையாளுடன் வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் ராஜா.

செல்விக்கு அடி வயிற்றில் பயபந்துகள் உருண்டன. காரணம் நேற்று தன் மகளிடம் உளவியலாளரை பார்க்க வேண்டும் என அழைக்க, அவளோ கோபத்தில் "என்ன விட்டா பைத்தியம்னு நெத்தில எழுதி நீங்களே கீழ்பாக்கத்துக்கு அனுப்பிருவீங்க போல.. நார்மலா இருக்கிற ஒரு பொண்ண சைக்காலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போக வேண்டிய அவசியம் என்ன?" எனக் கொகித்தெழுந்தாள் வர்ஷினி.

"இல்ல மா.. சாதனா அங்க போறது நல்லதுனு சொன்னா?.. அதான்" என செல்வி தயங்கி தயங்கி கூற அவளோ பத்ரகாளி ஆனாள்.

"சாது சொன்னா உடனே நீங்களும் சைக்காலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போய் என்னை பைத்தியம் ஆக்கிருவீங்க, அப்டி தான..?" என்றாள் வர்ஷினி.

"இல்ல மா..." என அவர் மறுக்கும் போதே "இங்க பாரு செல்வி, அவ கிட்ட சொல்லிரு.. நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு, அவள அங்க வர சொல்லு.. நான் உயிரோட இருக்கணும்னு அவ நினைச்சா நாளைக்கு காலைல அவ அங்க வந்தாகணும்" என தன் மனைவியிடம் கூறுவது போல் மகளிடம் கூறிவிட்டு விறுவிறுவென வெளியே கிளம்பினார்.

இதுவரை அவளை "தங்கம், செல்லம்" என கொஞ்சியவர் இன்று தன்னிடம் நேரடியாக கூட பேச விரும்பாதவராக தன் தாயிடம் கூறியது அவள் மனதில் வருத்தத்திற்கு பதில் கோபத்தை கிளறியது.

எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள் வர்ஷினி. நடந்த அனைத்தையும் சாதனாவிற்கு அலைபேசியில் தெரிவித்தார் செல்வி.

"அம்மா நீங்க கவலப்படாதீங்க, நாளைக்கு காலைல வர்ஷூவ கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு… நீங்க கரெக்ட்டான டைம்க்கு அங்க வந்துருங்க, நான் அவள கூட்டிட்டு வந்தறேன்" என நம்பிக்கையூட்டினாள் சாதனா.

ராஜா - செல்வி தம்பதியினரின் ஒரே செல்ல மகள் தான் வர்ஷினி. வரவுக்கும் செலவுக்கும் இடையே தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர குடும்பம். இருவருமே தனியார் துறையில் பணிக்கு செல்கின்றனர். வர்ஷினி சென்னையில் புகழ்பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறாள்.

தங்களின் வரவும் செலவும் சரியாக இருக்கும் பட்சத்தில் மகளை ஆடம்பரமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டினர் பெற்றவர்கள். தாங்கள் படும் துயரத்தை தங்களின் தவப்புதல்வியும் படக்கூடாது என அவளை செல்வ செழிப்புடன் வளர்த்தனர்.

அவள் இன்னது வேண்டும் என கேட்கும் முன்பே அதனை நிறைவேற்றினர் பெற்றவர்கள். ஆனால் அதற்கான பணத்திற்காக அவர்கள் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அதனால் வர்ஷினி உடன் இருக்கும் நேரம் குறைவானது.

சாதனா வர்ஷினியின் பள்ளித் தோழி. அவளுக்கு சிறுவயதில் இருந்தே ஊடகத்துறை(journalism) மேல் ஒரு ஈர்ப்பு. அதனால் தன் பள்ளி படிப்பு முடிந்தவுடன் ஊடகத்துறையில் கல்லூரி படிப்பைத் தொடங்கினாள்.

தற்பொழுது இறுதி ஆண்டில் இருப்பவள் ஒரு புலனாய்வு ஊடகவியலாளராக உருவெடுத்துள்ளாள். சமூகத்தில் நடைபெறும் முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து தன் ஆய்வைத் தொடங்கி உள்ளாள்.

ராஜாவும் செல்வியும் வர்ஷினி, சாதனாவின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
'வர முடியாது' என்றவளை சமாளித்து ஒருவழியாக அங்கு அழைத்து வந்திருந்தாள் சாதனா.

வர்ஷினியும், சாதனாவும் உள்ளே நுழைய செல்வி அவர்களைப் பார்த்து எழுந்து நின்றார். சாதனா வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் பேசிவிட்டு அவர்களை நோக்கி வந்தாள்.

அவள்பின் வர்ஷினி வேண்டா வெறுப்பாக வர அவளைக் கண்ட தாயுள்ளம் மனதிற்குள் அழதது. "சாரி மா… ரொம்ப டிராபிக், அதான் கொஞ்சம் தாமதமாகிருச்சு..." என்றாள் சாதனா.

"பரவால்ல மா… நாங்களும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்ன தான் வந்தோம்" என்றவர் தன் மகளைப் பார்க்க அவளோ அவர்களை கண்டு கொள்ளாமல் அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

அவளின் செயலில் செல்வியின் கண் ஓரம் நீர் கோர்க்க சாதனா அவரின் கரங்களை ஆதரவாக பற்றினாள்.

ஆனால் வர்ஷினியோ எதனையும் சட்டை செய்யாமல் தன் கையில் இருந்த சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள ஆப்பிள் ஐபோன் 11 ஃப்ரோ மேக்ஸ்யில் தன் கவனத்தைப் பதித்திருந்தாள்.

அங்கு அமைதியே மையம் கொண்டிருக்க ஐந்து நிமிடத்திற்குப் பின் "மேடம் வந்துட்டாங்க, உங்கள உள்ள வர சொல்றாங்க.." என வரவேற்பறையில் இருந்த பெண் சாதனாவிடம் கூற "நீங்க இங்கயே இருங்க பா… நானும் வர்ஷூவும் உள்ள போறோம், உங்கள அப்புறம் கூப்பிடறேன்..." என்றவள் வர்ஷினியிடம் "வா வர்ஷூ..." என அழைத்தாள்.

அவளோ வேண்டா வெறுப்பாக அவளைப் பின்தொடர அனுமதி கேட்டு அந்த அறைக்குள் நுழைந்தாள் சாதனா.

அங்கு முப்பதின் தொடக்கத்திலும் சாந்தமான முக அமைப்போடும் நிர்மலா அமர்ந்திருக்க "குட் மார்னிங் மேம்…" என்றாள் சாதனா.

"வெரி ஹேப்பி மார்னிங்..." என அவர் புன்னகை முகமாய் பதிலளிக்க இதனை எதுவும் கண்டு கொள்ளாமல் தன் கையில் இருந்த ஐபோனில் தான் கவனம் பதிந்திருந்தாள் வர்ஷினி.

"டேக் யுவர் சீட்..." என அவர் கை காட்ட "தேங்க் யூ மேம்..." என்றவள் அமர வர்ஷினியும் அமர்ந்தாள்.

சாதனா பேசத் தொடங்கினாள். "என் நேம் சாதனா மேம், அன்னிக்கு போன் பண்ணது நான் தான்" என தன்னை அறிமுகப்படுத்த "இவங்க தான் வர்ஷினியா?.." என்றார் நிர்மலா.
"எஸ் மேம்.." என அவள் பதிலளிக்க அப்பொழுது தான் அவரைப் பார்த்தாள் வர்ஷினி.

"ஹேப்பி மார்னிங் வர்ஷினி.." என புன்னகையோடு அவர் கூற அவளோ "பேட் மார்னிங்.." என பதிலளித்தாள்.

தன் தோழியின் பதிலில் சங்கோஜமுற்றவள் அவள் கைகளில் தன் கைகளை வைத்து அழுத்தம் தந்து நிர்மலாவை மன்னிப்பு வேண்டும் பாவனையில் பார்த்தாள்.

ஆனால் அவரோ அவளின் பதிலில் எல்லாம் கோபம் கொள்ளாமல் அதே புன்னகை முகத்துடன் வர்ஷினியைப் பார்த்தார்.

இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவள். அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருத்தம் இல்லாத அதீத ஒப்பனை. இறுக்கமான உடை அவளின் தேக வனப்பை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

"பேட் மார்னிங்... ம்.. ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?.." என்றார் நிர்மலா.

"ப்ச்... என்கிட்ட என்ன கேள்வி கேட்கணுமோ அத முதல்ல கேளுங்க, எனக்கு டைம் இல்ல.." என வர்ஷினி பதிலளிக்க "உன் விருப்பத்தோட தான இந்த கவுன்சிலிங் அட்டெண்ட் பண்றீங்க வர்ஷினி?" என கேள்வியோடு அவளைப் பார்த்தார் நிர்மலா.

அந்த கேள்வியில் சாதனாவைப் பார்த்து முறைத்தவள் "என் விருப்பத்தோட தான் வந்துருக்கேன்..." என பதிலளித்தாள்.

சாதனா இந்த பதிலில் நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஆமாம் அவளை சம்மதிக்க வைத்து இங்கு அழைத்து வருவதற்குள் அவள் ஒரு போராட்டத்தையே சந்திக்க வேண்டியதாயிற்றே. இதில் இவளுக்கு சம்மதம் இல்லை எனத் தெரிந்தால் கண்டிப்பாக இந்த கவுன்சிலிங் இனி தொடராது என்பதையும் அறிந்தவள். அதனால் தான் வர்ஷினியின் சம்மதம் அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

"வாட்'ஸ் யுவர் நேம்?." என நிர்மலா வர்ஷினியைப் பார்த்து வினவ அவளோ தன் கோபத்தை அப்பட்டமாக முகத்தில் காட்டினாள்.

சாதனா அவளிடம் கண்ணால் கெஞ்ச "வர்ஷினி.." என்றாள்.

"ம்... நைஸ் நேம், என்ன படிக்கிறீங்க?.." என அவளிடம் அவளைப் பற்றின தகவல்களை அவள் வாயிலிருந்தே வரவழைத்தார் நிர்மலா.

அவளுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் பதில் அளித்தவள், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து "என்னை இங்க கவுன்சிலிங்க்கு தான வர சொன்னீங்க, இப்போ என்னடான்னா இண்டர்வியூ எடுத்துக்கிட்டு இருக்கீங்க.. முதல்லயே சொல்லிட்டேன், எனக்கு டைம் இல்லனு... சோ கொஞ்சம் சீக்கிரமா உங்க அட்வைஸ்ஸ ஆரம்பிங்க..." என்றாள் வர்ஷினி எரிச்சலுடன்.

அவளின் பதிலில் சிரித்தவர் "கவுன்சிலிங்கிறது பத்து நிமிஷத்துலயே முடியக் கூடிய விசயம்னு நினைச்சுட்டீங்களா மிஸ். வர்ஷினி?.." என்றார் நிர்மலா.

அவளோ புரியாமல் அவரைப் பார்க்க "உங்கள பத்தின டீடைல்ஸ் எனக்கு உங்க பிரண்ட் சாதனா ஏற்கெனவே தந்துட்டாங்க, உங்களோட பேமிலி, அண்ட் இப்போ நீங்க இருக்கிற சிட்சுவேஷன், எல்லாமே... பட் என்னைப் பொறுத்தவரை உங்கள பத்தி உங்களுக்கு தான் நல்லா தெரியும், அதான் உங்க வாயால உங்களப் பத்தி சொல்ல சொன்னேன்.. நம்ம கவுன்சிலிங்க ஸ்டார்ட் பண்ணலாம்.." என்றார் நிர்மலா.

"இங்க பாருங்க, இந்த கவுன்சிலிங்க்கு என் பேரண்ட்ஸ் கொடுத்த பணத்த விட உங்களுக்கு நான் டபுள் அமௌண்ட் தரேன்.. என்னை இப்போ போக விடுறீங்களா?.." என அவள் கிளம்புவதிலே குறியாய் இருந்தாள்.

"எனி அர்ஜெண்ட் வொர்க்?.." என நிர்மலா வினவ "என் வேல்யூ என்னனு தெரியாம என் டைம்ம வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. உங்க கூட நான் ஸ்பெண்ட் பண்ண டைம்ல ஒரு பாட்னர் கூட ஸ்பெண்ட் பண்ணி இருந்தா இந்நேரம் எனக்கு ஒரு லட்சம் கிடைச்சுருக்கும்.. இப்போ புரியும்னு நினைக்கிறேன்!.. என் டைம்மோட வேல்யூ என்னனு?" என்றவள் அவரிடம் அனுமதி பெறாமலே எழுந்து வெளியே சென்றாள்.

சாதனா வர்ஷினியின் பேச்சில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
 
#3
மலர் - 02

சாதனா செய்வதறியாமல் தவிக்க வர்ஷினியின் செயல்களை தான் எதிர்ப்பார்த்தது போல் பார்த்தார் நிர்மலா.

"சாரி மேம்..." என சாதனா மன்னிப்பு வேண்ட "வர்ஷினி மாதிரி நிறைய பொண்ணுங்கள என் கெரியர்ல பார்த்துருக்கேன் சாதனா... டோன்ட் வொர்ரி, இப்போ தான கவுன்சிலிங் ஆரம்பிச்சு இருக்கோம்... போக போக எல்லாம் நல்ல படியா போகும்" என்றார் நிர்மலா.

"தேங்க்யூ மேம்... இந்த மாதிரியான சூழ்நிலைல என் பிரண்ட்ட பார்ப்பேனு நான் நினைச்சு கூட பார்க்கல, அவ தான் தங்களோட உலகம்னு அவளுக்காகவே அவ பேரண்ட்ஸ் வாழ்றாங்க, ஆனா இவ இப்படி ஒரு சிச்சுவேஷன்ல இருக்கிறத நினைச்சு அவ பேரண்ட்ஸ் ரொம்ப கஷ்டப்படறாங்க மேம்... அதான் நான் உங்கள பத்தி சொல்லி அவங்கள இங்க கூட்டிட்டு வந்தேன்.." என்றாள் சாதனா.

"ஒரே வயசு பொண்ணுங்க நீங்களும், உங்க தோழியும்... ஆனால் ஆளுக்கொரு திசைல பயணம் செய்றீங்க, இதுல யாரு நல்ல பாதைல போறாங்ககிறது தான் இங்க முக்கியம்,.. எனி வே, உங்க பிரண்ட்ட இதுல இருந்து நீங்க அவங்கள வெளில கொண்டு வரணும்னு நினைக்கிறதே பாதி வெற்றி தான்... அவங்க இதுல இருந்து நல்லபடியா வெளிய வருவாங்கனு அவங்க பேரண்ட்ஸ்கிட்ட நம்பிக்கையா சொல்லுங்க அண்ட் இந்த கவுன்சிலிங்ல வர்ஷினியோட பேரண்ட்ஸ்க்கும் தனிப்பட்ட கவுன்சிலிங் இருக்கு... அப்போ மட்டும் அவங்க வந்தா போதும்" என்றார் நிர்மலா.

"சுயர் மேம்... தேங்க்யூ, நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் மேம்... ஸ்பேர்சனலா... ப்ளீஸ் மேம்" என்றாள் சாதனா.

"சொல்லு மா... என்ன விசயம்?" என்றார் நிர்மலா.

"ஏற்கெனவே உங்களுக்கு தெரியும், நான் ஒரு இன்வெஸ்டிகேட் ஜெர்னலிஸ்ட்னு... இன்னும் சொல்லப் போனா வர்ஷினி மாதிரியான டீன் ஏஜ் பொண்ணுங்க திசை மாறி போக அடிப்படை காரணம் என்ன?.. அவங்கள அதுல இருந்து எப்படி மீட்டெடுக்கிறது? அதற்கான விழிப்புணர்வ மக்கள்கிட்டயும் கேர்ஸ்கிட்டயும் எப்படி கொண்டு போறது?.. இது தான் எங்களோட ஆய்வோட முக்கியமான நோக்கம்... இதப் பத்தி தெரிஞ்சுக்க போகும் போது தான் ஆக்ஸிடெண்ட்டலா வர்ஷினிய அந்த மாதிரியான சூழ்நிலைல நான் பார்த்தேன்... நாங்க அவங்கள பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும், அதுக்கு தான் உங்க ஹெல்ப் வேணும் மேம்... உங்க கிட்ட இது மாதிரி பாதிக்கப்பட்டவங்க நிறைய பேர் கவுன்சிலிங்காக வந்துருப்பாங்க, சோ அவங்க ஏன் இப்படி தடுமாறுறாங்க, இதுக்கான முக்கிய காரணம் பணமா? இல்ல பெயருக்காகவா? இதெல்லாம் எனக்கு தனிப்பட்ட விதத்துல சொல்ல முடியுமா? மேம்.. ப்ளீஸ்" என்றாள் சாதனா.

"நல்ல விசயத்துக்காக இத கேட்குறீங்க, கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு நான் உதவி செய்றேன் சாதனா... இதுல யார் யார் பாதிக்கப்பட்டாங்கனு என்னால தனிப்பட்ட விதத்துல சொல்ல முடியாது, ஆனால் ஏன் இப்படி திசைமாறி போறாங்கனு என்னால விளக்க முடியும்.. இன்னிக்கு ஈவ்னிங் ஐந்து மணிக்கு என்ன பார்க்க வாங்க... என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு உதவி பண்றேன்.." என்றார் நிர்மலா.

"தேங்க்ஸ் அ லாட் மேம்..." என்றவள் வெளியேற அங்கு அவளுக்காக பதட்டத்துடன் காத்திருந்த ராஜாவும் செல்வியும் அவளைக் கண்டு எழுந்தனர்.

"என்ன மா சொன்னாங்க மேடம்?.. வர்ஷூ கோபமா வெளிய கிளம்பி போறா… என்னாச்சுனு கேட்டதுக்கு அவ பதில் சொல்லாம விறுவிறுனு போய்ட்டாமா, என்னாச்சு மா..?" என தவிப்புடன் செல்வி வினவ "ஒன்னும் இல்ல மா… அவ வேலை இருக்குனு தான் வெளிய போறேனு கிளம்புனா… கண்டிப்பா பழைய வர்ஷினியா அவ நமக்கு கிடைப்பா மா... அவக்கிட்ட நீங்க எதுவும் பேச வேண்டாம், எப்பவும் போல நார்மலா இருக்க முயற்சி பண்ணுங்க, முடிஞ்ச அளவு அவக்கிட்ட கோபப்படாதீங்க மா..." என்றாள் சாதனா.
"எப்டி மா கோபப்படாம இருக்க சொல்ற.. எங்க கண்ணு முன்னாடி யாரோ ஒருத்தன் வர்ஷூவ ஒரு கார்ல வந்து பிக் பண்ணிட்டு போறான்... அத எல்லாம் பார்த்துட்டும் எங்க உயிர் இன்னும் போகாம இருக்கேனு தான் நெஞ்சு வேகுது..." என ஒரு தந்தையாய் வேதனைப்பட அவர்களை எப்படி சமாதானம் செய்வது எனத் தெரியாமல் குழம்பியவள் அவர்களை ஒருவழியாக சமாளித்து அங்கிருந்து அழைத்துச் சென்றாள் சாதனா.

ராஜாவையும் செல்வியையும் வீட்டிற்கு அனுப்பியவளின் மனம் வேதனையில் உழன்றது. அருகே இருந்த பூங்கா ஒன்றிற்கு சென்றவள் அங்கு இருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தாள் சாதனா.

அவளின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன…

சாதனாவிற்கு மறைக்கப்பட்ட உண்மைகள், சமுதாயம் அறியாத அதன் மற்றொரு பக்கத்தை தேடி அதனைக் கண்டறிவதில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதனால் தான் அவள் புலனாய்வு ஊடகத்துறையை தனக்கு ஏற்ற துறை என அதனைத் தேர்வு செய்தாள்.

அவள் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதன் முக்கிய சாரம்சம் பதின்பருவ பெண்கள் விபச்சாரத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தான். அதிலும் பள்ளி, கல்லூரி பெண்கள் தங்களின் பாக்கெட் மணிக்காக இதனை பகுதி நேர வேலை போல் செய்வது பெரும் வேதனைக்குரிய விசயம். அதனை ஆராய்ந்து அவர்கள் வழி மாற அடிப்படை காரணம் என்ன? என ஆய்வை மேற்கொண்டனர்.

அப்பொழுது தான் எதிர்பாராத விதமாக அந்த தொழிலில் தன் பள்ளித் தோழியைக் கண்டாள் சாதனா. வர்ஷினி அவளுடன் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவள். நெருங்கிய தோழியாக இருவரும் இல்லா விட்டாலும் சக வகுப்பு தோழியாக தான் இருவரின் நட்பும் நகர்ந்தது.

பின் இருவரும் தங்களின் கல்லூரி படிப்பை வெவ்வேறு துறையில் கால் பதித்திருக்க அவர்களின் நட்பும் பள்ளியோடு முடிந்தது. மூன்று வருடங்கள் கழித்து அன்று தான் தன் தோழியை கண்டாள் சாதனா. ஆனால் அந்த சூழ்நிலையில் அவளை காண்போம் என அவள் கனவில் கூட நினைத்திராத வகையில் இருந்தது அந்த சூழ்நிலை.

ஆம், ஒரு பணக்கார தொழிலதிபருடன் அவள் உல்லாசமாக இருப்பதைக் கண்டாள் சாதனா. அதன்பின் அவளை பின்தொடர்ந்தவளுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

அவள் பணத்திற்காகவும் புகழ் போதைக்காகவும் விபச்சாரத்தை கையில் எடுத்துள்ளாள் என்று. அவளின் இல்லத்திற்கு செல்ல அங்கும் அப்பொழுது தான் அவளின் பெற்றோர்கள் தங்கள் மகள் திசை மாறி சென்றிருப்பதை அறிந்து அவளை கோபத்தில் வசைப்பாடி கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் ராஜா கோபத்தில் வர்ஷினியை அறைய போக அதனை தடுத்தாள் சாதனா. அவளிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் அவளை அதிலிருந்து மீட்பது கடினம் என்பதை விளக்கியவள் ஒரு உளவியலாளரிடம் அவளை அழைத்துச் செல்லலாம் என்க ஒரு கட்டத்தில் அதனை ஏற்றனர் வர்ஷினியின் பெற்றோர்.

அதன்படி தான் சென்னையில் புகழ்பெற்ற உளவியலாளரான நிர்மலாவை சந்திக்க ஏற்பாடு செய்தாள் சாதனா.

அவள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க அதற்கு காரணமானவளோ கடற்கரை ஓர விருந்தினர் மாளிகை ஒன்றில் ஒருவனை தன் வசப்படுத்தி அதீத இன்பத்தில் அவனைத் திளைக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவன் இன்பத்தில் அவளிடம் தேன் குடிக்கும் வண்டாய் மாறிக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் நிர்மலாவை காண அவரின் தோழி ஒருவர் வந்திருக்க "ஹலோ மேடம், எப்டி இருக்கீங்க?... ரொம்ப பிஸி போல..." என்றார் அவரின் தோழி கவிதா.

"என்னைப் பத்தி தான் உனக்கு தெரியுமே கவி... டெய்லி ஒரு கவுன்சிலிங்னு ரொம்ப டைட்..." என்றார் நிர்மலா.

"ஏன் டி நானும் ஒரு சைக்காலஜிஸ்ட் தான...! எனக்கே சில நேரம் சந்தேகம் வருது உன்னால... எப்டி எல்லா கேஸையும் அட்டெண்ட் பண்ற?.. என்னால முடியல பா... சில கேஸ்கள்லாம் வர்றப்பவே அவங்க குடுக்கிற அந்த பிச்சை காசுல தான் நாம வாழற மாதிரி பேசிட்டு போகுதுங்க, சிலர் தான் கொஞ்சம் ஷாப்ட்டா இருக்காங்க..." என்றார் கவிதா.

"ஒரு சைக்காலஜிஸ்ட்டா இருந்துக்கிட்டு இப்டி பேசலாமா?.." என்றார் நிர்மலா.

"என்ன பண்ண சொல்ற நிரு, அவங்க பண்ற பிகேவியர்ஸ்ல நம்மளோட பொறுமைலாம் காத்துல பறந்துருது, அத இழுத்து வந்து ஒரு கட்டத்துல பொறுமையா பேசுனா கடைசில நம்மள பைத்தியம் மாதிரி பார்க்கறாங்க சிலர் பேர்..." என்றார் கவிதா.

"இவ்ளோ சோகமா பேச காரணமானவங்க யாரோ?.." என அவர் கிண்டலாக வினவ "வேற என்ன?.. எல்லாம் பிராஸ்டியூசன் கேஸ் தான், காலேஜ் ஸ்டூடண்ட்… நம்மகிட்ட வந்தாங்க... நான் முடியாதுனு சொல்லிட்டேன்" என்றார் கவிதா.

"என்ன கவி இப்டி?.. அவங்கள நம்மனால முடிஞ்ச அளவு அதுல இருந்து வெளிக் கொண்டு வர முயற்சி பண்ணலாமே?.." என்றார் நிர்மலா.

"என்னை விட இதுல உனக்கு தான் அதிக எக்ஸ்பீரியன்ஸ்... இந்த மாதிரி கேஸ்லாம் கடைசி வரை திருந்த மாட்டாங்க. நம்ம கொஞ்சம் மாத்தலாம்னு முயற்சி பண்ணா நீ மட்டும் ஒழுங்கா?.. ஒருத்தன் கூட தான் *****?... பச்சை பச்சையா கேள்வி வரும், அந்த இடத்துல நம்ம பத்தினினு அவங்க கிட்ட நிரூபிக்கவா முடியும்... எதுக்கு இந்த வம்பு, அதான் நான் இந்த மாதிரி கேஸ்லாம் எடுக்கிறதே இல்ல... காலம் போன கடைசில திரும்ப அதுகளே திருந்த நம்மகிட்ட வருவாங்க. அப்போ பார்த்துகலாம்" என்றார் கவிதா.

அவர் கூறுவதும் ஒரு வகையில் உண்மை தான். மற்ற வகையினரைக் கூட ஒரு வகையில் திருந்த வழி வகுக்கலாம். விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் 75% பேர் தெரிந்தே அந்த புதைகுழியில் விழுந்தவர்களாக இருப்பர்.

அந்த குழியில் இருந்து யாரேனும் அவர்களை மீட்க முயற்சி செய்தாலும் அவர்களையும் அந்த புதைகுழி இழுக்கும். இல்லை என்றால் அந்த கறையை அவர்கள் மீதும் தூவுவர்.

இதான் நிதர்சன உண்மை. இதில் எல்லோரும் அந்த வகையினர் தான் என ஒதுக்கவும் முடியாது. அதிலும் சிலர் அதிலிருந்து மீள தாங்களே இது போல் உளவியலாளர்களை சந்திப்பதும் உண்டு.

சில உளவியலாளர்கள் இந்த மாதிரியான கேஸ்களை எடுக்க தயங்குவர், கவிதாவைப் போல். ஏனெனில் அதற்கு வானம் கடந்த பொறுமை வேண்டும். ஆனால் நிர்மலாவோ தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என எண்ணுபவர்.

அதனால் பின்வாங்க மாட்டார். முயற்சி செய்து பார்ப்போமே என எண்ணுபவர். வர்ஷினியைப் போல் பல பதின்பருவ பெண்களை கடந்து வந்தவர். அதனால் தான் வர்ஷினியின் கோபத்தையும் புன்னகை முகத்துடன் ஏற்றார்.
 
#4
மலர் - 03

நிர்மலாவை பார்க்க மாலை 4.45-க்கு அவரின் கிளினிக்கிற்கு வந்தாள் சாதனா. அவரும் அந்த நேரத்தில் ஓய்வில் இருந்ததால் அவளை அவரின் அறையிலிருந்து உள்ளே இருக்கும் ஒரு சின்ன அறைக்கு அழைத்துச் சென்றார்.

அது அவர் ஓய்வெடுப்பதற்கான அறை. அங்கு ஷோபா போடப்பட்டிருக்க பார்க்க சிறு அறையாக இருந்தாலும் அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது.

"உட்காருங்க சாதனா..." என்றவர் தானும் ஷோபாவில் அமர "தேங்க் யூ மேம்.." என்றவள் அமர்ந்தாள்.

"உங்களுக்கு என்ன மாதிரி விசயங்கள் வேணும்னு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி நான் சொல்ல வசதியா இருக்கும்." என்றார் நிர்மலா.

"இப்போ காலேஜ் கேர்ஸ் அதிகமா பாக்கெட் மணிக்காக விபச்சாரத்துல ஈடுபடுறாங்க... அதுக்கான முக்கிய காரணம் என்ன மேம்?.. பணமா? புகழுக்கா?..." என்றாள் சாதனா.

"இதுல காலேஜ் கேர்ஸ் மட்டும் இன்வால்வ் ஆகறது இல்ல... பர்டிகுலரா அவங்க தான்னு சொல்ல முடியாது, ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் கூட இப்போ பிராஸ்டியூசன்ல ஈடுபடறாங்க... டீன் ஏஜ்ல ஒரு புது சொசைட்டிய பேஸ் பண்ணனும், அதுவரை ஒரு அழகான கூட்டுக்குள்ள முளைவிடாத சிறகோட இருக்கிறவங்க சுதந்திரமா சமூகத்த எதிர்நோக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பமாகுது.."

"சிலர் நல்ல பாதைய தேர்ந்தெடுப்பாடுங்க, இன்னும் சிலர் வழி தடுமாறி போவாங்க, இதுல பாதி பேர் இரண்டுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு தவிப்பாங்க... ஆடம்பர வாழ்க்கைக்காக சிலர் இது மாதிரி விபச்சாரம் பண்ணாலும் இன்னும் சிலர் புகழ் போதைக்காக அதுல போறவங்களும் இருக்காங்க... "

"உதாரணமா சொல்லணும்னா ஒரு சின்ன கடைல துணி வாங்கற ஒரு பொண்ணுக்கு பெரிய கடைல வாங்கணுங்கிற ஏக்கம் வரும், சோ அந்த இடத்துல ஏக்கங்கள் ஆரம்பிக்கும்... அது அப்டியே வளர ஆரம்பிக்கும் போது அடுத்த கட்டமா ஒரு பெரிய மால்ல வாங்கணுங்கிற ஆசை வரும், இன்னும் அந்த ஏக்கம் விருட்சமா வளரும் போது ஸ்பெஷல் பொட்டிக்ல வாங்கணும்னு தோணும், இன்னும் சிலர் அவங்களுக்காகவே தனியா வடிவமைக்கப்பட்ட ஆடைகள உடுத்தணும்னு ஆசை வரும்... இங்க பணம் ரொம்ப இன்றியமையாததா மாறுது, அப்போ அவங்க அந்த பணத்த சம்பாதிக்கிற வழிமுறைகள் மாறுபடும்... பார்ட் டைம்மா வேலைக்கு போனாலும் அதீத ஆசைகள அவங்கனால நிறைவேத்த முடியாத சூழ்நிலை, அப்போ எந்த வழில அதிகம் பணம் வருதுனு தான் பார்ப்பாங்க... இந்த இடம் தான் அவங்க தடுமாற காரணம், மோஸ்ட்லி கிராமத்து பொண்ணுங்க, நடுத்தர பிண்ணனி பொண்ணுங்க தான் இதுமாதிரி தடுமாறி போறாங்க அப்டிங்கிற ஒரு மாயத்தோற்றம் இருக்கு, ஆனால் அது உண்மை இல்லை... எல்லாவிதமான பொண்ணுங்களும் இதுல ஈடுபடறாங்க.. பணக்காரங்க, ஏழைங்க, இல்ல கிராமத்து பொண்ணுங்கனு இல்ல,எல்லாருமே..." என்றார் நிர்மலா.

"மேம் இப்போ ரீசன்ட்டா ஹோம்லியான ஹவுஸ் வொய்ப்ஸ் கூட இந்த மாதிரியான தொழில்ல ஈடுபடறதா எங்களுக்கு தகவல் கிடைச்சது, அது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்றாள் சாதனா.

"உண்மை தான், இப்போ இந்த தொழில்ல அதிக டார்கெட் ஹவுஸ் வொய்ப்ஸ் தான், இங்க தான் ஒழுங்க்கிற அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடுது, தவறான உறவுமுறைல ஈடுபடக் கூட இந்த தலைமுறை யுவன், யுவதிகள் அதிகம் ஆர்வம் காட்றாங்க, அதையும் தாண்டி ஒழுக்கம் கலாச்சாரம்னு நம்ம கேட்டா நம்மள பைத்தியத்த பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க... இருக்கிறது ஒரு வாழ்க்கை தான், அத எங்க இஷ்டப்படி நாங்க வாழ்றோம்னு சொல்றாங்க, இதுக்கு மேல அவங்க கிட்ட நம்மனால பேச முடியாது, அங்கையே இதுக்கு முற்றுப்புள்ளி வச்சறாங்க" என்றார் நிர்மலா.

"ரொம்ப அதிர்ச்சியான தகவல் மேம்... பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவங்க இதனால உடல் அளவுல ஏற்படும் பாதிப்புகள பத்தி குறிப்பா நோய்கள பத்தின விழிப்புணர்வு அவங்க கிட்ட இருக்குமா? மேம்..." என்றாள் சாதனா.

"கண்டிப்பா, இந்த மாதிரி ஹை கிளாஸ் ரேஞ்சுல விபச்சாரத்துல ஈடுபடறவங்களுக்கு முக்கியமான மூலதனம் அவங்க அழகு, அப்புறம் உடல்நிலை. சோ பெரிய இடத்துல இருக்கிறவங்க, இந்த மாதிரி கால் கேர்ள்ஸ்ஸ அழைக்கும் போது அவங்களோட புல் பாடி மெடிக்கல் செக்கப் கொடுப்பாங்க, அவங்க உறவுமுறைக்கு ஏற்ற உடல்நிலைல இருக்கிறாங்களானு தான் பர்ஸ்ட் பார்ப்பாங்க, ஆனால் என்ன தான் இந்த அளவு பாதுகாப்போட இந்த தொழில்ல ஈடுபட்டாலும் கஸ்டமரா வர்றவங்கள்ள சிலர் ஷாப்ட்டா இருப்பாங்க, சிலர் முரட்டுத்தனமா இருப்பாங்க... உடல் அளவுலயும் மன அளவுலயும் பாதிப்புக்கள் இதனால ஏற்பட வாய்ப்புகள் அதிகம், சிலர் அப்டி பாதிக்கப்பட்டும் இருக்காங்க..." என்றார் நிர்மலா.

"இப்படி மாற யார் காரணம்?.. நம்ம சமூகமா? இல்ல இன்றைய தலைமுறையோட தவறான புரிதலா? மேம்..." என தன் ஐயத்தை வினவினாள் சாதனா.

"மேலை நாட்டு கலாச்சாரத்துக்கு நம்ம அடிமை ஆனது தான் முக்கிய காரணம், நம்ம முன்னோர்கள் சிலர் ஒருவனுக்கு ஒருத்தி தான் அப்டினு வாழல தான், சிலர் இரண்டாம் கல்யாணம் அப்டினு இரு பெண்களோட வாழ்ந்தவங்களும் இருக்காங்க.. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி உறவுமுறைங்கிறது நம்ம சமூகத்துல ஏத்துக்க முடியாத ஒன்று, ஆனால் மேலை நாட்டு கலாச்சாரத்துல லிவ் இன் முறை ரொம்ப சாதாரண விசயம்... பாரீன்காரன் எவ்ளோ நல்ல விசயங்கள்ள முன்னேறுனாலும் அத நம்ம எடுத்துக்காம இந்த உறவுமுறைய மட்டும் எடுத்துக்கிறோம்.. பிடிச்சா ஒருத்தன் கூட வாழலாம், பிடிக்கலையா பரஸ்பர பிரிதல்... இது தான் இப்போ இருக்கிற அதிக பேர் சொல்றது..."

"நேத்து நான் பார்த்த விசயத்தப் பத்தி சொல்றேன், நீங்களே புரிஞ்சுக்குவீங்க நம்ம எந்த நிலைமல இருக்கிறோம்னு... நேத்து ஒரு பொண்ண மீட் பண்ணேன், இருபத்தி மூணு இருபத்தி நாலு வயசு இருக்கலாம்... ஐடி கம்பெனில மாசம் லட்சத்துல சம்பாதிக்கிறவ, இப்போ ஒரு பையன் கூட செக்சுவல் ரிலேஷன்சிப்ல இருக்கா.. அந்த பையனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிருச்சு, அவன் வொய்ப் கிட்ட இந்த பொண்ண அவனோட தோழினு சொல்லி அறிமுகப்படுத்தி இருக்கான்... இந்த பொண்ணு அவங்க வீட்டுக்கு தோழியா போக வர இருக்கா, இப்பவும் அவங்களுக்குள்ள செக்சுவல் ரிலேஷன்சிப் இருக்கு, இதப் பத்தி கேட்டா என்ன மேம் கல்சர் இது, நம்ம வாழ்றது ஒரு வாழ்க்கை, எப்டி லைப் லாங் ஒருத்தன் கூடயே வாழ முடியும்? என்றவள் என்கிட்ட ஒரு கேள்வி கேட்டா பாரு!.. எனக்கே ஏன் டா இந்த பொண்ணுக்கிட்ட பேசுனோம்னு ஆகிருச்சு" என்றார் நிர்மலா.

"என்ன மேம் சொல்றீங்க?" என சாதனா வினவ,

"ஆமா சாதனா... என்கிட்ட எப்படி மேடம் உங்கனால ஒருத்தர் கூடவே இவ்ளோ நாள் வாழ முடியுது? போர் அடிக்கலயானு கேட்கிறா?" என்றார் நிர்மலா.

"எனக்கு வடிவேல் காமெடி தான் ஞாபகத்துக்கு வந்துச்சு 'நல்லா தான போய்க்கிட்டு இருக்கு'" என வடிவேல் போல் அவர் பேசிக் காட்ட சாதனாவோ இதற்கு சிரிப்பதா? இல்லை நம் தலைமுறை வளர்ச்சி என்று வீழ்ச்சியில் போய்க் கொண்டிருப்பதற்காக வருத்தப்படுவதா? எனப் புரியாமல் தவித்தாள்.

"இதெல்லாம் சின்ன விசயம் சாதனா, இதுக்கும் மேலலாம் நடக்கும், இங்க ஒரு சைக்காலஜிஸ்ட்டா உட்காந்து பார்த்தா தெரியும், எவ்ளோ மனப்பிரச்சனை இந்த தலைமுறைக்கிட்ட இருக்குனு, இன்னும் சொல்லப் போனா பழகி போச்சு, நானும் முதல்ல இத தெரிஞ்சுக்கும் போது ஷாக்கானேன் தான்.. ஆனா அது போக போக பழகி போன ஒன்னாகிருச்சு, அதான் நான் வர்ஷா ஹார்ஸ்ஸா பிகேவ் பண்ணும் போது கூட அமைதியா இருந்தேன்" என்றார் நிர்மலா.

"எனக்கு என்ன சொல்றதுனு தெரியல மேம்... இதான் உண்மை, வர்ஷா மேலக் கூட எனக்கு முதல்ல ரொம்ப கோபம், ரொம்ப நல்லப் பொண்ணு.. எப்டி தடம் மாறி போனானு அவ்ளோ கோபம்.. அந்த கோபத்தோட தான் அவ வீட்டுக்கு அவள பார்க்க போனேன், ஆனா அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது எனக்கு இப்போ தெரிஞ்ச மாதிரி தான் அவ பேரண்ட்ஸ்க்கும் இப்போ தான் தெரிஞ்சுருக்குனு... அவ அப்பாவும் அம்மாவும் ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க, காலைல வேலைக்கு போனா அவங்க ரெண்டு பேருமே வர நைட் ஆகிரும்.. இவ ஒழுங்கா காலேஜ் போய்க்கிட்டு இருக்கானு நினைச்சுக்கிட்டு இருந்தவங்களுக்கு இவளோட இந்த மாறுதல் ரொம்ப ஷாக்கா இருந்துருக்கு... இதுவும் அப்பா எதேட்சையா அவள ரெண்டு மூணு தடவ வெளிய பார்த்துருக்காரு, அதுவும் வேற வேற பசங்களோட.. அப்போ தான் ஏதோ தப்பா இருக்குனு அப்பா அவள வாட்ச் பண்ண ஆரம்பிக்கும் போது இவ இந்த மாதிரி தடம் மாறுனது தெரிஞ்சுருக்கு, அதப் பத்தி அவரு கேட்கும் போது அவளுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லாம 'ஆமா, நான் அப்டி தான்னு' வெளிப்படையா சொல்லிருக்கா... இது தான் ரொம்ப அதிர்ச்சியா இருந்துது மேம்" என்றாள் சாதனா.

"ஒரு கட்டம் வரைக்கும் தான் பெற்றோர் மேலயும் சமூகம் மேலயும் பயம் வரும், அதுக்கப்புறம் இந்த பயம்லாம் தூசு மாதிரி பறந்திரும். என் வாழ்க்கை, என் உரிமை அப்டிங்கிற சிந்தனை தான் அதிகமாகும்..." என்றார் நிர்மலா.

"உண்மை தான் மேம், நான் இத வர்ஷூ மூலமா நேரடியா பார்க்கிறேன்... இத விட வேற எந்த எவிடென்ஸ்ம் வேண்டாம் இதப் பத்தி தெரிஞ்சுக்க, வர்ஷூவ இதுல இருந்து மீட்க முடியுமா? மேம்" என கண்ணில் ஒரு தோழியாய் தவிப்புடன் வினவ,

"அவங்க இந்த மாதிரி தடம் மாறி டூ இயர்ஸ்னு தான சொன்னீங்க.. இது மிட் ஸ்டேஜ், அவங்கள இதுல இருந்து மீட்கறது ரொம்ப எளிதானது இல்ல... பட் அவங்களும் ஒத்துழைச்சா கண்டிப்பா நம்ம அவங்கள இதுல இருந்து மீட்க முடியும்" என்றார் நிர்மலா.
"இதுல வர்ஷினியோட ஒத்துழைப்பு கண்டிப்பா இருக்கும் மேம்... அவள ஒத்துழைக்க வைக்கிறது எங்க பொறுப்பு" என்றாள் சாதனா.

"ஓ.கே சாதனா... இன்னும் ஏதாவது டீடைல்ஸ் வேணுமா?" என்றார் நிர்மலா.

"இப்போதிக்க இது போதும் மேம், அப்புறம் ஒரு ஹெல்ப் மேம்... வர்ஷினியோட கவுன்சிலிங்க்கு நான் கூட இருக்கலாமா? மேம்" என்றாள் தயக்கத்துடன்.

"எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல சாதனா, இதுல வர்ஷினியோட சம்மதம் தான் முக்கியம், அவங்களுக்கு இது ஓ.கேனா நீங்க இந்த கவுன்சிலிங்ல கூட இருக்கலாம்" என்றார் நிர்மலா.

"தேங்க்யூ மேம், எனக்காக இவ்ளோ நேரம் பொறுமையா நிறைய விசயங்கள் சொன்னதுக்கு, நான் நெக்ஸ்ட் கவுன்சிலிங்ல வர்ஷினியோட உங்கள மீட் பண்றேன் மேம்..." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
 
#5
மலர் - 04

வர்ஷினிக்கு கவுன்சிலிங்கின் முதல் நிலை தொடங்கப்பட்டது. கவுன்சிலிங்கின் முதல் நிலை உளவியலாளருக்கும் அவர்களுக்குமிடையேயான நல்லுறவை ஏற்படுத்துதல். அவர்களின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துதல்.

இன்றும் வர்ஷினி எதிரே அமர்ந்திருந்த நிர்மலாவை பார்த்து மரியாதை நிமித்தமாக கூட ஒரு புன்னகையை சிந்தவில்லை. அவளுடன் சாதனாவும் வந்திருந்தாள்.

"உங்க கூட சாதனா இந்த கவுன்சிலிங்ல இருக்கிறதுல உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இருக்கா வர்ஷினி?" என்றார் நிர்மலா.

அவள் ‘இல்லை’ என தலையாட்ட "ஓ.கே வர்ஷினி..." என்றவர்,

"என்ன வர்ஷினி இன்னிக்கு உங்க பொன்னான நேரத்த எங்க கூட ஸ்பெண்ட் பண்ணலாம் தான?.. இல்ல இன்னிக்கும் உங்களுக்கு அர்ஜெண்ட் வொர்க் இருக்கா?" என்றார் நிர்மலா சாதரணமாக.

"என்ன வேணும் உங்களுக்கு?.." என அவள் கோபமாக வினவ "உங்க டைம்மோட வேல்யூ என்னனு அன்னிக்கே எனக்கு சொல்டீங்க, அப்டி இருக்கும் போது உங்க டைம்ம நான் வேஸ்ட் பண்ணக் கூடாதுல்ல.. அதான் கேட்டேன்" என்றவர் அடுத்து கேட்ட கேள்வியில் சாதனாவுமே சற்று அதிர்ந்தாள்.

"அன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருந்தீங்களா? வர்ஷினி" என்றார் நிர்மலா.

வர்ஷினியும் இந்த கேள்வியை எதிர்ப்பார்க்கவில்லை. அவள் அதிர்ந்து அன்று நடந்தவைகளை நினைவில் நிறுத்தினாள்.

அந்த கடற்கரையோர விருந்தினர் மாளிகையில் ஒரு பணக்கார புள்ளியுடன் அவள் சந்தோசமாக தான் இருந்தாள். இடையிடையே அன்றைய கவுன்சிலிங் வேறுஞாபகம் வர அதனை வலிய ஒதுக்கி தள்ளியவள் அவனுடன் இன்பத் தேனில் ஊறிக் கொண்டிருந்தாள்.

அவனின் இன்பம் முடிந்தவுடன் அவள் மேல் பணத்தை வீசியவன் அத்தோடு வேலை முடிந்ததாக அவன் அவளை விட்டு பிரிய அவள் மனம் சற்றென்று சோர்ந்தது.

அவள் வேலை அது தானே. வந்த வேலை முடிந்தது, இதற்குமேல் அவளுக்கும் அங்கு வேலை கிடையாது. ஆனாலும் அவள் மனம் ஏனோ வாடத் தொடங்கியது.

பணத்தை எடுத்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். அப்பொழுதும் அவள் மனம் மட்டுமே சற்று வாடினாலும் அதனை அவள் கையில் இருந்த பணம் ஈடுகட்டியது.

நினைவுகளில் இருந்தவளை நிர்மலாவின் அழைப்பு நிஜவுலகிற்கு கொண்டு வர அவள் அவரைப் பார்த்தாள்.

"என்ன வர்ஷினி யோசிக்கிறீங்க, ஒருவேல நான் கேட்ட கேள்வி தப்போ?" என்றார் நிர்மலா.

"நான் ஹேப்பியா தான் இருந்தேன்..." என்றாள் அவள். "ஏன் வர்ஷினி உங்கள நீங்களே ஏமாத்திக்கிறீங்க?" என்றார் நிர்மலா.

"வாட்?..." என அவள் கோபத்துடன் வினவ,

"சந்தோசமா இருக்கிறதா உங்கள நீங்களே ஏமாத்திக்கிறீங்கனு சொன்னேன் வர்ஷினி" என்றார் நிர்மலா.

"நான் சந்தோசமா இருக்கனா இல்லையானு உங்களுக்கு என்ன தெரியும்... இது என் லைப், நான் எப்டி இருந்தாலும் அதோட பாதிப்பு எனக்கு மட்டும் தான், அதப் பத்தி நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம்" என்றாள் வர்ஷினி.

"நான் யோசிக்கல, பட் உங்க பேரண்ட்ஸ் யோசிப்பாங்கள்ள வர்ஷினி..." என்றார் நிர்மலா.

"என் வாழ்க்கைல முடிவு எடுக்கவோ என்னைப் பத்தி யோசிக்கவோ என்னை பெத்தவங்களுக்கும் ரைட்ஸ் கிடையாது, என் வாழ்க்கைய என் விருப்பப்படி வாழ்றேன், அதுல நன்மை, தீமைகள் பத்தி வேற யாரும் யோசிக்க தேவயில்ல" என எடுத்தெறிந்து கூறினாள்.

மேலும் "ஆமா ஏன் எல்லாரும் என்னை ஒரு குற்றவாளியா பார்க்குறீங்க?. என்ன தப்பு பண்ணேன் நான், எனக்கு பிடிச்ச மாதிரி நான் வாழறேன், அதுல என்ன தப்பு இருக்கு?" என்றாள் வர்ஷினி.

இதனை எல்லாம் நேரில் கேட்ட சாதனாவுக்குமே தலை சுற்றியது. வர்ஷினியின் மேல் கோபம் கூட வந்தது. ஆனால் நிர்மலாவோ அந்த பதிலை எதிர்ப்பார்த்தது போல் தான் அமைதியாக இருந்தார்.

"உங்களுக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கைனு நீங்க எத சொல்றீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா? வர்ஷினி" என்றார்.

"அது..." என சற்று தயங்கி "இப்போ இருக்கிற என் வாழ்க்கை..." என்றாள் வர்ஷினி.

"ஏன் அந்த வாழ்க்கைய என்னனு கூட சொல்ல முடியலயா? வர்ஷினி, அவ்ளோ கேவலமா இருக்கா?" என்றார் நிர்மலா.

"நான் ஏன் கேவலப்படணும், இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, எனக்கு தேவை பணம், அப்புறம் வர்ஷினி அப்டினாலே எல்லாரும் எவ்ளோ அமௌண்ட்னாலும் ஓ.கே, எனக்கு வர்ஷினி தான் வேணும்னு என்கிட்ட வர்ற என் கஸ்டமர்ஸ்... அது ஒரு சுகம், தெரியுமா?.. அத அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும் தான் புரியும்" என கண்கள் மூடி புகழ் போதையில் கூற நிர்மலாவும் சற்று அதிர்ந்தார் தான்.

தன்னை யாராவது ஒருவர் "அழகா இருக்கீங்க" எனக் கூறினால் அந்த வார்த்தைகளில் மயங்காத பெண்கள் வெகு சிலரே. அவர்களை தங்களின் அடிமையாக்க ஒரே தாரக மந்திரம் அவர்களின் அழகினை புகழ்தல். இதனால் எத்தனையோ பெண்கள் தங்களின் வாழ்வையும் இழந்து சமூகத்தில் நிர்கதியாய் நிற்பவர்களும் நாம் தினமும் கண்ணால் காணும் ஒன்றாயிற்றே.

வர்ஷினிக்கு அவள் அழகின் ஆராதனை போதை போன்று அவளை அடிமைப்படுத்தி வைத்திருந்ததை நிர்மலா நன்குணர்ந்தார்.

"இந்த அழகும் அதுக்காக வர்றவங்களும் இன்னும் எத்தனை வருஷம் வருவாங்க வர்ஷினி, அழகு என்றுமே நிரந்தரம் கிடையாதே... நிரந்திரமில்லாத ஒன்னுக்கு வாழ்நாள் முழுவதும் எப்படி மதிப்பு இருக்கும்?, எவ்ளோ தான் நம்ம அழக பராமரிச்சாலும் நாப்பது வயசுக்கு மேல தோல் சுருக்கம், உடல்ல மாற்றம் எல்லாமே ஏற்படுமே... அப்போ உனக்கான வாழ்க்கை என்ன?" என ஒரு பெரிய கேள்வியை அவள் முன் வைத்தார் நிர்மலா.

அவள் இதுவரை நினைத்திராத கோணம் இது. அறிவு யோசிக்க சொல்ல மனமோ அதனை தடுத்தது. "அதப் பத்தி உங்களுக்கு என்ன கவல, இவ்ளோ தெரிஞ்ச எனக்கு இதப் பத்தி யோசிக்க மாட்டனா?" என்றாள் வீம்பாய்.

"அப்போ அதுக்கும் முன் யோசனை இருக்கு, அது என்னனு தெரிஞ்சுக்கலாமா?" என்றார் நிர்மலா.

அவளோ அதனை எவ்வாறு சொல்வாள். அப்படி ஒன்றை இதுவரை யோசித்ததே இல்லையே. ஆனாலும் அந்த இடத்தில் அதனை ஒத்துக் கொள்ள முடியாமல் "என் பியூச்சர பார்த்துக்க எனக்கு தெரியும், நீங்க வீணா கவலப்பட வேண்டாம்" என்றவள் அங்கிருந்து வேகமாக எழுந்து செல்ல, போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் நிர்மலா.

சாதனாவிற்கு இதெல்லாம் புது அனுபவமாக இருந்தது. அதுவும் தன் தோழி இந்த நிலையில் என்றால், அவளால் அதனை ஜீரணிக்க கூட முடியவில்லை.

"மேம்.." என தயங்க "கவலப்படாதீங்க சாதனா, கண்டிப்பா வர்ஷினி நல்லபடியா மீண்டு வருவாங்க, இப்போ தான அவங்க பியூச்சர பத்தி யோசிக்க ஆரம்பிச்சுருக்காங்க... காலம் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு புரிய வைக்கும், உடனே அவங்கள இதுல இருந்து மீட்க முடியாது தான், ஆனால் கண்டிப்பா ஒருநாள் அதுல இருந்து அவங்க மீண்டு வருவாங்க... நீங்க தைரியமா போங்க" என்றார் நிர்மலா.

"தேங்க்ஸ் மேம்" என்றவள் அங்கிருந்து கிளம்பினாள் சாதனா.

அதன்பின் தொடர் ஆலோசனை வகுப்புகள் தொடர்ந்தது. ஆனால் வர்ஷினி ஈடுபாடே இல்லாமலும், தான் தவறு செய்யவில்லை என்றுமே அதே இடத்திலே இருக்க சாதனாவிற்கே கோபம் வந்தது.

ஆனால் நிர்மலாவோ பொறுமை காக்க ஒரு கட்டத்தில், "எப்டி மேம், இவ்ளோ பொறுமையா இருக்கீங்க?... சத்தியமா எனக்கு வர்ற கோபத்துக்கு வர்ஷூவ அடிச்சாலும் அடிச்சுருவேன்" என்றாள்.

"வர்ஷினி தான் பண்றது சரிங்கிற கோணத்துல மட்டும் அவங்க வாழ்க்கைய பார்க்கறாங்க சாதனா, அது தப்புனு நம்ம என்ன எடுத்து சொன்னாலும் இப்போ அவங்களுக்கு புரியாது... திரும்ப திரும்ப தன் பக்கத்த நியாயப்படுத்த தான் முயற்சி பண்ணுவாங்க, நம்ம அவங்க வழிலயே போய் தான் அவங்களோட தப்ப ரியலைஸ் பண்ண வைக்கணும்... நெக்ஸ்ட் கிளாஸ் ஹிப்னாஸிஸ், அவங்க இப்டி தடம் மாற காரணம் என்னனு அவங்க வாயாலயே சொல்ல வைக்கணும், கண்டிப்பா அவங்கள மீட்க அதுல ஒரு குளூவாவது கிடைக்கும்" என்றார் நிர்மலா.

"ஓ.கே மேம், நாளைக்கு மார்னிங் நான் வர்ஷூவ கூட்டிட்டு வரேன் மேம்" என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

மறுநாள் இனிதே ஆரம்பமானது. வர்ஷினியை கட்டாயப்படுத்தி தான் ஒவ்வொரு வகுப்பிற்கும் சாதனா அழைத்து வந்திருந்தாள். இன்றும் அவளுடன் பல வாக்குவாதங்களுக்கு பின் தான் அவளை அழைத்து வந்திருந்தாள் சாதனா.

ஹிப்னாட்டிசம் தொடங்கப்பட்டது. முதலில் அதற்கு மறுத்தவள் பின் ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தாள் வர்ஷினி.

அவளின் ஆழ்மனதில் புதைந்துள்ள சிறுசிறு விசயங்களை மையப்படுத்தி கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார் நிர்மலா.

அவளின் குழந்தைப் பருவத்தை பற்றி வினவ அவளின் சந்தோச தருணங்கள் வெளிப்பட்டது.

பள்ளி காலம், அப்படியே கல்லூரி காலம் வரை கேள்விகள் வர அவள் தன் கல்லூரி பருவத்தை கூற ஆரம்பித்தாள்.
 
#6
மலர் - 05

"அப்பா நான் ஆசைப்பட்டேனு தான் அவ்ளோ பெரிய காலேஜ்ல கஷ்டப்பட்டு சீட் வாங்கி குடுத்தாரு, ரொம்ப சந்தோசமா என்னோட முதல் நாள ஸ்டார்ட் பண்ணேன் என் காலேஜ்ல... அங்க பணக்காரங்க, பெரிய பெரிய செலபிரிட்டியோட பசங்க தான் அதிகம், அவங்களோட டிரஸ்ஸிங் சென்ஸ், அப்புறம் கணக்கு வழக்கு இல்லாம பணத்த செலவு பண்றது எல்லாமே எனக்கு புதுசா இருந்துது.. அப்பாவும் அம்மாவும் எனக்கு எந்த குறையும் வச்சது இல்ல, நான் கேட்கிறதுக்கு முன்னமே எனக்கு அது கிடைச்சுரும்..."
"நான், அப்பா, அம்மா மூணு பேருமே ரொம்ப சந்தோசமா இருப்போம்... முதல்ல அம்மா, நான் காலேஜ் விட்டு வீட்டுக்கு போகும் போதே அவங்களும் வேலை முடுஞ்சு வந்துருவாங்க, அப்பாவும் ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துருவாரு... அப்டியே நல்லா போன என் வாழ்க்கைல எனக்கு பிரண்டா அறிமுகமானா நேகா..." என்றவள் சற்று இடைவெளி விட்டே தொடங்கினாள்.

"நேகா பெரிய பிஸினஸ் மேனோட பொண்ணு, நல்லா பேசுவா... நாங்க ரெண்டு பேரும் குளோஸ் பிரண்ட்ஸ் ஆனோம்"...

"இந்த டிரஸ் உனக்கு செம ஹாட்டா இருக்கு வர்ஷூ" என்றாள் நேகா ஒருநாள்.

அன்று பிங்க் நிற சல்வாரில் இருந்தாள் வர்ஷினி. "தேங்க்யூ நேகா, போன மந்த் கூட இந்த டிரஸ்ஸ பார்த்துட்டு நம்ம பிரண்ட்ஸ் நல்லா இருக்குனு சொன்னாங்க" என்றாள் வர்ஷினி.

"வாட்... போன மாசம் இத போட்ருந்தியா?" என அவள் முகம் சுழிக்க "ஏன் நேகா...?" என்றாள் வர்ஷினி புரியாமல்.

"நான்லாம் ஒரு தடவைக்கு மேல எந்த டிரஸ்ம் போட மாட்டேன்..." என அவள் சர்வ சாதாரணமாக கூற வர்ஷினிக்கு ஒரு மாதிரி ஆனது.

வர்ஷினியும் நல்ல ஆடைகளை தான் உடுத்துவாள். ஆனால் அதற்காக ஒரு முறை மட்டுமே அந்த ஆடையை உபயோகிப்பது என்ற அளவில் எல்லாம் இல்லை.

"இது கொஞ்சம் ஓவரா தெரியல?" என்றாள் வர்ஷினி.

"இதுல என்ன ஓவர், டெய்லியும் விதவிதமா டிரஸ் பண்ணனும்... நம்ம ஒரு தடவ போட்ட டிரஸ்ஸ போடத் தான் எத்தனையோ அனாதை ஆசிரமங்கள் இருக்கே, நம்மள மாதிரி ஆளுங்க கொஞ்சம் கருணை காட்டுனா தான அவங்கலாம் வாழ முடியும்" என்றாள் நேகா.

அவளின் இந்த கருத்தை அவளால் ஏற்க முடியாமல் போனாலும் தன் தோழியிடம் எதிர்த்து பேச மனமில்லாமல் சரி என தலையாட்டினாள்.

மறுநாள் கல்லூரி கிளம்பும் போது எந்த உடையை அணிவது என தன் அலமாரியின் முன் நின்றவளின் பார்வை அந்த அலமாரியை ஆராய்ந்தது.

அந்த அலமாரி முழுவதும் அவளின் உடைகள் தான் நிரம்பி வழிந்தன. ஆனால் ஏனோ அவள் மனதில் தன் தோழி கூறியதே நினைவில் வர "இன்னிக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போகணும்" என நினைத்தவாறே ஒரு உடையை தேர்வு செய்தாள்.

அன்று மாலையே பத்தாயிரம் ரூபாய்க்கு கல்லூரிக்கு அணிவதற்கு ஏற்ற உடைகளை அவள் எடுக்க அவள் கேட்ட பணத்தை கொடுத்தார் ராஜா.

"என்னம்மா, திடீர்னு இவ்ளோ டிரஸ் எடுக்கிற?" என்றார்.

"நான் படிக்கிற காலேஜ்ல எல்லாருமே ஹை க்ளாஸ் ப்பா... நான் மட்டும் லோ க்ளாஸ் மாதிரி பீல் ஆகுதுப்பா, அதான்" என்க அவரும் தன் மகளின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல் பணத்தை கொடுத்தார்.

இப்படியே நாட்களும் நகர அவளின் பணத் தேவை அதிகமானது.

நேகாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் இவளின் உடைகளை.

"என்ன வர்ஷூ, நான் சொன்னதுக்கு அப்புறம் இப்போலாம் நீயும் டெய்லியும் புது டிரஸ் தான் போல!" என்றாள் நேகா.

"ஆமா நேகா..." என்றவள் "ஆனால் உனக்குலாம் பரவாயில்ல, உன் அப்பா கோடில புரல்றாரு, நீ டெய்லியும் புது புது டிரஸ் போடுவ, என் அப்பா முதல்ல கேட்ட பணத்த தந்துட்டு தான் இருந்தாரு... ஆனா இப்போலாம் அவர்கிட்ட கேட்டா இப்போ இல்ல மா அப்டினு தான் சொல்றாரு" என கவலைப்பட,

"என் அப்பா மட்டும் கேட்டவுடனே அள்ளி அள்ளி பணத்த கொடுத்துவாரா என்ன?..." என்றாள் நேகா.

"என்ன சொல்ற நேகா?"என்றாள் புரியாமல்.

"என் அப்பா கிட்ட மணி கேட்டா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாரு, இது எல்லாம் என்னோட சம்பாத்தியம்" என்றாள் நேகா.

"நீ ஜாப் ஏதும் போறியா?" என்க,

"ஜாப்பா... வாட் அ காமெடி, நம்ம அழகு தான் நம்ம மூலதனமே" என்றாள் நேகா.

அவள் புரியாமல் பார்க்க "நாளைக்கு என்கூட வா, எல்லாம் தானா புரியும்" என்றவள் மறுநாள் ஒரு பப்க்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு போகும் போதே இவள் சல்வாரில் இருக்க "என்ன டிரஸ் டி இது, உனக்கு இதெல்லாம் செட் ஆகாது... உன்னை டோட்டலா சேன்ஜ் பண்ணனும் போலயே" என்றவள்,

அவளை வேறு உடைக்கு மாற வைத்திருந்தாள். வர்ஷினி தன்னை கண்ணாடியில் ஒருமுறை பார்க்க அந்த உடை அவளின் தொடை வரை மட்டுமே இருந்தது.

பால் நிற தேகத்திற்கும் அவளின் அந்த உடையிலும் அவள் தேகம் ஜொலித்தன. அவளின் அதரங்களின் வனப்பை கண்ணாடி போல் காட்டியது அந்த உடை.

தன்னைப் பார்த்தவளுக்கோ அதிர்ச்சி. அதிர்ச்சியுடன் ஆச்சர்யமுமாய் பார்க்க"செம ஷேப் டி உனக்கு, அப்படியே பால்கோவா மாதிரி இருக்க... எனக்கே உன்மேல ஆசை வந்துரும் போல, இன்னிக்கு பசங்க எல்லாம் கிளீன்போல்ட் தான்" என அவள் கன்னம் கிள்ள,

"எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல நேகா..." என தயங்கினாள் வர்ஷினி.

"பழக்கம் இல்லனா பழக்கப்படுத்திக்க வேண்டியது தான் வர்ஷூ, நீ என்ன சின்னப் பொண்ணா…? நம்ம ஆசைப்படி வாழ கத்துக்கணும்" என அவளை சமாதானப்படுத்த அவளுக்கும் அவள் கூறியது சரி என்றே பட்டது.

இருவரும் அந்த இரவு நேர களியாட்டத்தில் கலந்து கொள்ள அங்கோ இவளை போல் ஒத்த வயதுடைய பெண்களும் ஆண்களும் நிறைய பேர் இருந்தனர்.

"கமான் வர்ஷூ" என அவளை உள்ளே அழைத்துப் போக அப்பொழுது அவர்கள் எதிரே வந்தவன் "ஹே பேபி, இன்னிக்கு ஓ.கே வா?" என்றவாறே நேகாவை அணைத்தான் அவன்.

"ஸாரி பேபி, ஆல்ரெடி புக்கிங்" என அவள் அவனுடன் இழைய "பேட் லக், ஓ.கே நாளைக்கு நான் தான், ஓ.கே வா?" என்றான் அவன்.

"ஓ.கே பேபி, இன்னிக்கு வேணும்னா நீ வர்ஷூ கூட ஜாய்ன் பண்ணிக்கோயேன்" என வர்ஷினி காட்ட அப்பொழுது தான் அவனின் பார்வை வர்ஷினியை பார்த்தது.

அவனின் பார்வை அவள்மேல் எக்குத் தப்பாக பட அவளோ கூச்சத்தில் நெளிந்தாள்.

"ஹாய் செக்ஸி, செம ஹார்ட்டா இருக்க, கேன் ஐ ஜாய்ன் வித் யூ?" என்றான் அவன்.

அவள் நேகாவை பார்க்க "செம பார்ட்டி டி, முடிஞ்ச அளவு பணம் கறக்கலாம்... ஜாய்ன் பண்ணிக்கோ" என அவளை அவனுடன் கோர்த்துவிட்டு அவள் அங்கிருந்து நகர அவனோ அவள் இடை பற்றி தன்பக்கம் இழுத்தான்.

அவன் இழுப்பில் சற்று தடுமாறியவள், நிற்க தடுமாற "என்ன பேபி?" என்றவாறே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அங்கு மேற்கத்திய இசை காற்றில் பரவ பலர் தங்கள் ஜோடிகளுடன் அந்த இசைக்கேற்ப நடனமாடினர்.

"கமான் பேபி" என்றவாறே அவள் இடையை அவன் வசத்திற்கு வளைக்க அவளும் அவன் கட்டுப்பாட்டிற்குள் நுழைந்தாள்.

ஒரு கட்டத்தில் அவன் அவளிடம் எல்லை மீற அப்பொழுது தான் அவளின் பெண்மை விழித்தெழுந்தது.

அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயல அவனோ "ஏன் பேபி, பர்ஸ்ட் ரேட் பேசணுமா?" என்றான் அவன்.

அவனின் கேள்வியில் அவளுக்கு அருவெருப்பாய் இருக்க "ச்சீ, முதல்ல என் மேல இருந்து கைய எடு டா ராஸ்கல்" என அவள் அவனை தள்ளி விட்டாள்.
அவன் அதிர்ந்து விலக அப்பொழுது அங்கு வந்த நேகா "என்னாச்சு வர்ஷூ?" என்றாள்.

"அவன் என்மேல...." என சொல்ல தடுமாற "என்ன பேபி?" என அவன்புறம் திரும்பினாள்.

"உன் பிரண்ட் கிட்ட இதப் பத்திலாம் சொல்லி கூட்டிட்டு வரலயா? இப்டி பிஹேவ் பண்றா?" என கோபப்பட "ஸாரி பேபி, ஸாரி" என்றவள் தர்ஷினி அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

"என்ன வர்ஷூ?, அவன் ஒரு மல்டி மில்லியனர், அவன் கூட எல்லாம் நம்ம லிங்க்ல இருந்தா நமக்கு தான் லாபம்" என்க,

"என்ன டி சொல்ற? அதுக்காக அவன் எக்குத்தப்பா கை வைப்பான், அத பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா?" என்றாள் கோபமாய்.

"இதெல்லாம் சகஜம் டி" என்க,

"எது டி சகஜம், எனக்கு அவன் ரேட் பேசறதா?" என்றாள் வர்ஷினி.

"என்கிட்ட நேத்து ஒரு கேள்வி கேட்டியே என்ன ஜாப் பண்றனு, இதான் என்னோட பார்ட் டைம் ஜாப்" என்க அவளோ அதிர்ந்து விழித்தாள்.
"வாட்!..." என அதிர,

"இதெல்லாம் இப்போ சகஜம் வர்ஷூ, நமக்கு தேவை பணம், அவங்களுக்கு தேவ நம்ம உடம்பு... இது ஒரு கமிட்மெண்ட் மாதிரி தான், எனக்கு தேவைங்கிறத அவங்க தராங்க, அவங்களுக்கு தேவையானத நான் தரேன்.. தட்ஸ் ஆல்" என சாதாரணமாக கூற அதனை வர்ஷினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என்ன தான் ஆடம்பரமாக வாழ நினைத்தாலும் நடுத்தர குடும்ப பிண்ணனியில் இருந்தாலும் ஒழுக்கத்தையே தன் உயிர்மூச்சாக நினைப்பவள் அவள்.

பணத்திற்காக தன் உடம்பை விற்கும் அளவிற்கா தான் கீழ் இறங்கி விட்டோம் என்று தோன்றியது.

அவளின் முக பாவனைகளை வைத்தே அவள் மனதில் ஓடுவதை புரிந்து கொண்ட நேகா, "இங்க பாரு வர்ஷூ, ஒருவனுக்கு ஒருத்தி அப்டிங்கிற கான்செப்ட்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு, இன்னிக்கு யாரும் அப்டி இல்ல... என்ன தான் ஒழுக்கம் கலாச்சாரம்னு பேசுனாலும் அவங்களோட வாழ்க்கை ஒன்னும் புனிதமானதா இருக்காது, இந்த காலத்துல யாரு லவ் பண்ணவங்களயே கல்யாணம் பண்ணிக்கறாங்க?, எல்லாம் முடிஞ்சதும் கை கழுவிட்டு போற மாதிரி போய்ருவாங்க, அப்புறம் வேற ஒருத்திய கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துவாங்க, ஆனா இந்த சமூகம் அவங்கள தான் ஒழுக்கசீலரா பார்க்கறாங்க... இது தப்புனா அதுவும் தப்பு தான?, ஒருத்தன் கூட போனா என்ன? பலர் கூட போனா என்ன?.. எல்லாம் ஒன்னு தான்..."

"எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு தோணல நேகா" என்றாள் வர்ஷினி.

"சரி ஒருத்தனயே நினைச்சு அவனயே கல்யாணம் பண்ணிக்கிற, ஓ.கே... காலம் பூரா அவன் கூட நீ சந்தோசமா வாழ்ந்துருவியா?, ஏதோ ஒரு கட்டத்துல அந்த வாழ்க்கை போர் அடிக்கும்... அப்போ உன் குழந்தைகளுக்காக வாழணும்னு நினைப்ப, இதான் வாழ்க்கையா?... நமக்கு இருக்கிறதே ஒரே வாழ்க்கை தான், அத நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதுல என்ன தப்பு?" என்றாள்.

அவள் கூற்றும் ஏனோ ஏற்புடையதாகவே இருக்க வர்ஷினி குழம்ப ஆரம்பித்தாள். இதனை தனக்கு சாதகமாக்கிய நேகா மேலும் தொடர்ந்தாள்.

"உன் அப்பா, அம்மாவையே எடுத்துக்கோ... வாழ்க்கை பூரா ஒருத்தனையே கட்டிக்கிட்டு அவங்க நாய் மாதிரி உழைக்கிறாங்க, உன்னைக் கூட கவனிக்க நேரம் இல்லை.. இதான் வாழ்க்கையா?, என்ன வாழ்க்கை இது, காலைல எந்திரிச்சோமா வேலைக்கு போனமா நைட் திரும்ப வந்து தூங்குணமான்னு, இது என்ன மாதிரியான வாழ்க்கை வர்ஷூ... நீயே கொஞ்சம் யோசி, கண்டிப்பா தெளிவு கிடைக்கும்" என்றவள்,

"இப்போ வீட்டுக்கு கிளம்பு, ஒரு வாரம் கூட டைம் எடுத்துக்கோ, யோசி… அப்புறம் என்னை வந்து பாரு, உண்மையான சொர்க்கத்துக்கு உன்னை கூட்டிட்டு போறேன்" என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

வர்ஷினியோ குழப்பத்துடனே வீட்டினை அடைந்தாள்.
 
#7
மலர் - 06

நேகாவின் சாம்பிராணி தூவல் நன்கு புகையூட்டப்பட்டது. வர்ஷினி குழப்பத்துடனே வீடு வந்து சேர இரவு எட்டாகியது.

அதன்பின் தான் அவளின் அம்மாவும் அப்பாவும் வேலை முடிந்து வந்தனர். இரவு உணவு உண்டுவிட்டு உழைத்த களைப்பில் இருவரும் உறங்க செல்ல, வர்ஷினியின் மனம் தடுமாற ஆரம்பித்தது.

"என்கிட்ட பேசக் கூட உங்களுக்கு டைம் இல்லயா ப்பா?... இதான் வாழ்க்கையா?, இதுல என்ன சந்தோசம் இருக்கு?..." என நினைத்தவளுக்குள் நேகாவின் கூற்றுக்களே மனதில் ரிங்காரமிட்டது.

மறுநாள் எப்பொழுதும் போல் அவளின் அன்னை அதிகாலையிலேயே எழுந்து அரக்க பரக்க உணவு தயாரித்தவர் வேலைக்கு கிளம்ப ராஜாவும் தன் வேலைக்கு தயாரானார்.
வர்ஷினி கல்லூரி கிளம்பாமல் இருக்க, "என்ன வர்ஷூ, காலேஜ்க்கு கிளம்பல… டைம் ஆச்சு பாரு" என்றார் ராஜா.

"இல்ல ப்பா, இன்னிக்கு நான் காலேஜ் போகல, லைட்டா தலைவலிக்குது, அதான்" என்க,

"எப்போ இருந்து மா தலைவலி, ஹாஸ்பிட்டல் போகலாமா?" என்றார் ராஜா.

"இல்ல ப்பா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும்" என்க,

"சரி மா, நீ ரெஸ்ட் எடு... எனக்கு லேட் ஆகிருச்சு, நீங்க என்னை டிராப் பண்றீங்களா?" என்றவாறேசெல்வி ராஜாவைப் பார்க்க,

அவரும் "நீ ரெஸ்ட் எடு வர்ஷூ, தூங்கும் போது கதவ சாத்திக்கோ" என்றவர், "வா, உன்னை விட்டுட்டு நான் ஆபிஸ்க்கு போகணும்" என்றார் ராஜா.

இருவரும் கிளம்பி சென்ற பின் தான் வர்ஷினிக்குள் பல குழப்பங்கள்.

"எனக்கு முடியலைனு சொன்னா அவங்க அவங்க வேல தான் முக்கியம்னு ஓடறாங்க, நாளைக்கு எனக்கும் கல்யாணம் ஆச்சுனா இப்டி தான் அரக்க பறக்க வேலைக்கு ஓடணும்... நமக்காக நாம வாழ முடியாதுல்ல" என நினைத்தாள்.

"இதுக்கெல்லாம் காரணம் பணம், அத சம்பாதிக்கிற வழிமுறை தான் ஒவ்வொரு இடத்துலயும் மாறுபடுது... நேகா சொன்னதுல என்ன தப்பு, அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஒரு மாசத்துல சம்பாதிக்கிற காச என்னால ஒரு நாள்ள சம்பாதிக்க முடியும் தான... ட்ரை பண்ணி தான் பார்ப்பமே" என நினைத்தாள்.

ஆனால் அவளின் அறிவோ "இது தப்பு இல்லையா?, அப்பா அம்மாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?... உன்னை தப்பா நினைக்க மாட்டாங்களா?" என்க,

"அவங்களுக்கும் பணம் தான முக்கியம், அத நோக்கி தான போறாங்க" என இவள் சமாளித்தாள்.

ஆனால் அவர்கள் இருவரும் இவ்வளவு கஷ்டப்படுவது தனக்கு தான் என அவள் புரிந்து கொள்ள தவறினாள்.

தன்னை ஆடம்பரமாக வாழ வைக்க அவர்கள் உழைக்க அவளோ அவர்களின் உழைப்பை குறை கூறினாள்.

அன்று முழுவதும் அவள் பல்வேறு விதமாக யோசித்துப் பார்த்தாள். என்ன தான் அவள் பணத்தின் மதிப்பை தெரிந்து இருந்தாலும் அவளால் சற்றென்று முடிவு செய்ய முடியவில்லை.

அன்று மாலையே நேகா அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள இவள் அதனை ஏற்று, "சொல்லு நேகா..." என்றாள்.

"நான் சொன்னத பத்தி யோசிச்சு பார்த்தியா? வர்ஷூ" என்றாள் நேகா.

இவள் அமைதி காக்க, "உனக்கு குழப்பமா இருக்கும்னு நினைக்கிறேன், நாளைக்கு ஒரு பார்ட்டி இருக்கு, நீ வரியா?... உன் மனசு தெளிவாகும்" என்க,

"ம்..." என அவளறியாமலே அவளிற்கு சம்மதம் கூற அவளோ "தெரியும் வர்ஷூ, நீ ஒத்துக்குவனு" என மனதில் கூறிக் கொண்டு "ஓ.கே வர்ஷூ, நாளைக்கு மீட் பண்ணலாம்" என்றவள் அலைபேசியை வைக்க, அவளின் தூண்டிலில் இவள் விட்டில் பூச்சியாய் மாட்டிக் கொண்டாள்.

மறுநாள் தன் மனதை தானே சமாதானம் செய்து நேகா அழைத்திருந்த பார்ட்டிக்கு செல்ல தயாரானாள்.

இவளை பிக்கப் பண்ண வந்த நேகா அவளின் உடையைப் பார்த்து விட்டு, "என்ன டிரஸ் வர்ஷூ இது, கேவலமா இருக்கு" என்றாள் நேகா.

அவள் தன்னை தானே ஒருமுறை பார்த்துக் கொண்டாள் வர்ஷினி. அந்த உடையின் மதிப்பு பத்தாயிரம் ரூபாய்.

பார்ட்டிக்கு செல்வதால் கொஞ்சம் கிராண்ட் லுக் தெரிய வேண்டும் என அவள் அதனை தேர்வு செய்து அணிந்திருக்க நேகாவின் முக சுளிப்பைக் கண்டு வருத்தமுற்றாள்.

அவளை தன் இல்லத்திற்கு அழைத்து சென்ற நேகா தன் உடையில் ஒன்றை எடுத்து தர அதனை வாங்கி பார்த்தவள், "இது ரொம்ப காஸ்ட்லியா? நேகா" என்றாள் வர்ஷினி.

"ஜஸ்ட் 25 K தான் வர்ஷூ, இத போடு, உனக்கு சூப்பரா இருக்கும்" என அவளை அந்த உடையை போட வைத்தவள் "சொன்னேன்ல, உனக்கு இது சூப்பரா இருக்கும்னு... செம, இத நீயே வச்சுக்கோ, என்னை விட உனக்கு தான் ரொம்ப நல்லா இருக்கும்" என்றாள் நேகா.

'இருபத்தைந்தாயிரம் மதிப்புள்ள உடையை இவள் என்ன சர்வசாதாரணமாக வைத்துக் கொள் என்கிறாள்' என நேகாவை பார்க்க, "இந்த டிரஸ் எனக்கு சிவா பிரசண்ட் பண்ணது, அன்னிக்கு பப்ல பார்த்தியே... அவன் தான்" என்றாள் நேகா.
"ஓ..." என்றவள் எதுவும் பேசாமல் அவளுடன் அந்த பார்ட்டிக்கு சென்றாள்.

அவள் இதுவே இது போன்ற பார்ட்டிகளுக்கு செல்வது முதல்முறை. சற்று தயக்கமாக இருந்தாலும் மனம் "என்ன தான் பண்றாங்கனு தெரிஞ்சுக்குவமே..." என்றது.

அங்கு பெரிய பெரிய புள்ளிகளை அறிமுகப்படுத்தினாள் நேகா. வர்ஷினிக்கு அனைத்தும் ஏதோ மாறுபட்ட உலகில் இருப்பது போல் ஒரு எண்ணவூற்றை தோற்றுவித்தது என்பதை விட அவளை அதற்குள் இழுத்து சென்றிருந்தாள் நேகா.

அங்கு ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அணைத்துக் கொள்வது, முத்தமிடுவது அனைத்தும் சர்வசாதாரணமாக இருக்க வர்ஷினிக்கு முதலில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் அவளுடனே இருந்த நேகா "என்ஜாய் பண்ணு வர்ஷூ" என்றாள்.

அப்பொழுது அங்கு வந்த சிவா, "என்ன பேப் இன்னிக்கு உன் பிரண்ட் ஓ.கே சொல்லுவாங்களா?..." என்றான்.

"நீயே கேட்டு தான் பாரேன்" என அவள் விஷம புன்னகையை சிந்த அவனோ,

"ஹாய் பேபி, அன்னிக்கு விட இன்னிக்கு செம ஹார்ட்டா இருக்க... ஒன் டே என் கூட ஸ்பெண்ட் பண்ண முடியுமா?" என சர்வசாதாரணமாக வினவினான்.

அவளோ நேகாவை பார்க்க அவளோ "ஓ.கே சொல்லு டி, ட்ரை பண்ணி தான் பாரேன்" என அவள் காதருகில் கிசுக்கிசுக்க அவள் தலை தானாக சரியென ஆடியது.

"வாவ்..." என குதித்தவன், அவளின் இடைப் பற்றி தன்னருகே இழுத்தான்.

நேகாவோ "என்ஜாய் பண்ணுங்க..." என்றவள், அங்கிருந்து நகர அவள் கரம் பற்றினாள் வர்ஷினி.

"அம்மா, அப்பாகிட்ட..." என தயங்க, "நான் போன் பண்ணி இன்பார்ம் பண்ணிறேன், இன்னிக்கு குரூப் ஸ்டடி இருக்கு, என்கூட நீ ஸ்டே பண்றதா சொல்லிறேன்... நீ சிவாக்கு நல்லா கம்பெனி குடு" என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அந்த உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டலிலே ஒரு அறை புக் செய்திருந்தான் சிவா.

அவளை அப்படியே தன்னுள் ஒட்டியவாறே அழைத்துச் சென்றவன், வரவேற்பறையில் அறையின் சாவியை வாங்க அந்த வரவேற்பறை பெண்ணோ சிநேகமாக அவனைப் பார்த்து புன்னகைத்தது.

"இவன் இங்க ரெகுலர் கஸ்டமர் போல" என எண்ணியவள்,

"அப்போ இவனுக்கு நம்ம எத்தனாவது ஆளு..." என்ற எண்ணமும் அவளுள் வந்து போனது.

ஆனால் அந்த எண்ணத்தை ஒருசில நொடிகளிலே தகர்ந்தெரித்தான் அவன்.

அவளிற்கு அணுஅணுவாக சொர்க்கத்தை காண்பிக்க அந்த இன்ப உலகில் தன்னை தொலைத்தாள்.

அவன் அதிகாலையில் உறங்க ஆரம்பிக்க உறக்கம் வராமல் விழித்திருந்தாள் வர்ஷினி.

அவள் மனதில் லேசாக ஏற்பட்ட குற்றவுணர்ச்சியை கூட துடைத்தெறிந்திருந்தான் அவன்.

காலை எழுந்தவன் அவளை கட்டியணைத்து "செம ஹார்ட் பேபி நீ, செமயா என்ஜாய் பண்ணேன்... இனி அடிக்கடி உன்னை டிஸ்டர்ப் பண்ண வருவேன்னு நினைக்கிறேன்" என்றவன் அவன் ஆண்மைக்கு விருந்தளித்த அவளின் பெண்மைக்கு பணத்தை வாரி இறைத்தான்.

‘ஓர் இரவிற்கு இத்தனை லட்சமா?...’ என இவள் அதிரும் வகையில் பணமழையில் குவித்தவன், "நான் யாருக்கும் இவ்ளோ தர மாட்டேன், பட் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் பேபி" என அவளை இறுக அணைத்திருக்க அவளுக்கு அனைத்தும் புதுவிதமாக தெரிந்தது.

அங்கு தனக்காக நேரத்தை செலவிடாமல் வெறும் பத்தாயிரம் கூட தாண்டாத அவர்களின் மாத சம்பளத்துக்கு செல்லும் தன் பெற்றோரை நினைத்து அந்த இடத்தில் வெறுக்க ஆரம்பித்தாள்.

ஆனால் தனக்காக தான் அவர்கள் இரவு பகல் பாராது உழைக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்த்த தவறி விட்டார்களா? இல்லை இவள் உணர தவறினாளா?... இது யாருடைய தவறு?...

பணம் என்ற மோகம் ஒருபக்கம் அவளை சாய்த்தால் ஆடம்பர வாழ்க்கை, புகழ் போன்றவைகளுக்காகவும் இவள் துணிந்து இந்த தொழிலில் இறங்க ஆரம்பித்தாள்.

அவளைப் பொறுத்தவரை உடம்பு என்பது என்றோ ஒரு நாள் மண்ணில் புதைந்து அதற்கு இரையாகும் ஒன்று. அந்த உடலை தன் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறேன் என தத்துவம் பேசுவாள். தன் பக்கத்தை நியாயப்படுத்த முயல்வாள். அவள் கல்லூரி செல்வதாக கூறி செல்பவள் தன் அழகை மூலதனமாக்கி பணத்தை ஈட்ட ஆரம்பித்தாள்.

அவளுக்கு அது இன்னும் போதையை கொடுக்க அதில் தீவிரமாக இறங்க ஆரம்பித்தவளுக்கு படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது. கல்லூரி முதலாமாண்டில் இருந்தவள் அதன் பின் ஒழுங்காக கல்லூரி செல்லவில்லை.

அந்த கல்லூரியில் பணக்கார வர்க்கத்தினர் இருப்பதாலோ என்னவோ படிப்பு விசயத்தில் அந்த கல்லூரி நிர்வாகமும் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. படிக்க விருப்பம் இல்லாதவராக இருந்தாலும் அவர்களுக்கு அந்த படிப்பிற்கான கட்டணம் தான் பெரிதாக இருந்தது.

இவள் கல்லூரி தான் செல்கிறாள் என நினைத்து அவளை அவள் போக்கில் விட அவளோ தன் பெற்றோரையும் எளிதாக ஏமாற்றத் தொடங்கினாள். இதோ இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது.

இந்த இரண்டு வருடத்தில் அவளை தேடி பல பணக்கார ஈக்கள் மொய்க்க ஆரம்பித்திருந்தனர்.

வர்ஷினியின் மறுபக்கம் அவள் வாயாலயே தெரிந்து கொண்டனர் நிர்மலாவும், சாதனாவும்.

சாதனாவிற்கு தன் தோழி எந்த அளவு இதில் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளாள் என்பதும் புரிந்தது.

அவள் நிராகரிக்கப்பட்ட இடமாக அவள் கருதுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் வர்ஷினியின் பெற்றோரும் தவறிழைத்துள்ளனர் என்றே தோன்றியது.

தாங்கள் அவளின் சந்தோசத்திற்காக தான் உழைக்கிறோம் என அவர்கள் அவளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களோ என்று தோன்றியது.

அந்த வகுப்பு முடிந்தும் சாதனாவிற்கு நிலை கொள்ளவில்லை. தன் தோழியா மானத்தை விட பணம் முக்கியம் என சென்றால் என்ற ஒன்றே அவள் மனதை அரித்தது.
 
#8
மலர் - 07

நிர்மலாவின் முன் சாதனா அமர்ந்திருக்க, "வர்ஷூ தடம் மாற இது தான் காரணம்னு நான் எதிர்ப்பார்க்கல மேம்..." என்றாள்.

"அவங்க இழந்தது அவங்க பெற்றோரோட அன்ப சாதனா... அவங்க தனக்காக தான் இரவு பகல் பாராம உழைக்கிறாங்க அப்டினு உணர மறுத்துட்டாங்க, அதான் அவங்க தடம் மாற காரணம்" என்றவர்,
"நான் வர்ஷினியோட பேரண்ட்ஸ்க்கு கவுன்சிலிங் குடுக்கணும், அவங்க இன்னிக்கு வந்துருக்காங்க தான சாதனா?" என்றார் நிர்மலா.

"எஸ் மேம், அப்பாவும் அம்மாவும் வெளிய தான் இருக்காங்க, அவங்கள வர சொல்லட்டுமா" என்க, அவரும் சம்மதம் தெரிவித்தார்.

ஒருசில நிமிடங்களுக்கு பின் ராஜாவும் செல்வியும் நிர்மலாவின் முன் அமர்ந்திருந்தனர்.

"நீங்க ரெண்டு பேருமே வேலைக்கு போறீங்க தான?" என்றார் நிர்மலா.

"ஆமா மேடம்..." என இருவரும் தலையாட்ட,

"எத்தனை மணிக்கு போய்ட்டு திரும்ப வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க ரெண்டு பேரும்...?" என்றார்.

"நான் காலைல ஒன்பது மணிக்கு போய்ட்டு நைட் ஒன்பது மணி ஆகிரும் மேடம், என் வொய்ப் ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துருவா" என்றார் ராஜா.

"உங்களுக்கு வர்ஷினி ஒரே பொண்ணு தான" என்க அவர்களும் ‘ஆமாம்’ என தலையாட்டினர்.
"நீங்க ரெண்டு பேரும் வர்ஷினி கூட ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க சார்?" என வினவ,

"நான் வரும் போது வர்ஷூ எழுத்து வேலை இருக்கு, படிக்கணும் அப்டினு அவ ரூம்ல இருப்பா மேடம், அதுனால அதிகம் பேசிக்க முடியாது... படிக்கிற புள்ளய தொந்தரவு பண்ண வேண்டாம்னு விட்ருவோம் மேடம்" என்றார் ராஜா.

"நீங்க ரெண்டு பேருமே இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்க காரணம் உங்க மக சந்தோசமா இருக்கணும், அதுக்காக தான?" என்றார்.

"ஆமா மேடம், அவ ஒருத்தி தான் எங்க வாழ்க்கையோட பற்று கோலே, அப்டி இருக்க அவ சந்தோசம் தான முக்கியம் மேடம்" என்றார் செல்வி.

"அந்த இடத்துல தான் நீங்க தப்பு பண்ணீட்டீங்க மேடம், நீங்க ரெண்டு பேரும் உழைக்கிறது வர்ஷினிக்காக தான்னு அவளுக்கு புரிய வைக்க தவறீட்டீங்க, அவ தடம் மாறி போக நீங்களும் ஒரு காரணம்" என்க, அவர்கள் இருவரும் அதிர்ந்தனர்.

"வர்ஷினிக்கு நீங்க நேரம் ஒதுக்கல, அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணல, ஏன் அவங்க என்ன பண்றாங்கனு கூட ஒழுங்கா கவனிக்கல, இது தப்புனு சொல்றத விட அந்த இடத்துல உங்க கடமைய தவற விட்டுட்டீங்க... அவங்க மேல நம்பிக்கை இருக்கிறது தப்பில்ல, அதே நேரத்தில அவங்கள ஹை பை'யா வாழ வைக்கணும்னு நீங்க நினைச்சதும் தப்பில்ல... ஆனால் நீங்க இவ்ளோ கஷ்டப்படறது அவங்களுக்காக தான்னு அவங்களுக்கு உணர வைக்க தவறீட்டீங்க... அவங்க கூட உங்க நேரத்த செலவிடுங்க, யாராவது ஒருத்தர் அவங்க கூட எப்பவும் குளோஸ்ஸா இருக்கணும், எந்த பிரச்சனைனாலும் அவங்க உங்ககிட்ட தைரியமா பகிர்ந்துக்கிற அளவு உங்க நட்பு அவங்களோட இருக்கணும்" என்க ராஜாவும் செல்வியும் தலைகுனிந்தனர் தங்களின் தவறை எண்ணி.

"உங்க பொண்ண கண்டிப்பா இதுல இருந்து மீட்க முடியும், அதுக்கு உங்க ஒத்துழைப்பும் எனக்கு வேணும்" என்றார் நிர்மலா.

"கண்டிப்பா எங்க ஒத்துழைப்பு இருக்கும் மேடம், நாங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க" என்றார் ராஜா.

"வர்ஷினியோட ஆழ்மனசுல தன் பெற்றோர் அன்ப தொலைச்சுட்டோம்னு ஆழமா பதிஞ்சுருக்கு, முதல்ல அத மாத்தணும்... உங்களோட அன்ப அவங்க தொலைக்கல, அவங்களுக்காக தான் நீங்க இரண்டு பேரும் வாழ்றீங்க அப்டிங்கிறத முதல்ல அவங்க உணரணும்... அவங்கள எந்த இடத்துலயும் குற்றப்படுத்தக் கூடாது, அது அவங்களுக்கு குற்றவுணர்ச்சிய தோற்றுவிக்கும்... அவங்க தொலைச்ச ஒரு அழகான வாழ்க்கைய திரும்ப அவங்கனால மீட்க முடியும்னு நம்ம அவங்களுக்கு உணர வைக்கணும், இதுக்கு உங்க ஒத்துழைப்பும் வேணும்" என்றார் நிர்மலா.

"கண்டிப்பா மேடம், எங்களோட முழு ஒத்துழைப்பும் கொடுக்கறோம்.. எங்க பொண்ணு இதுல இருந்து மீண்டு வரணும் மேடம், அதுக்கு நீங்க தான் உதவி பண்ணனும்" என செல்வி கையெடுத்து கும்பிட,

"அவங்க சீக்கிரம் இதுல இருந்து மீண்டு வரணும்னு அந்த ஆண்டவன வேண்டிக்கோங்க மேடம், என்னால ஆன முயற்சிகள நான் எடுக்கிறேன்" என்றார் நிர்மலா.

இருவரும் அங்கிருந்து கிளம்பினர். சாதனாவும் கிளம்ப நிர்மலாவோ யாருக்கோ அலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

சிறிது நேரம் பேசியவர், "தேங்க்யூ மேம்... நாளைக்கு மார்னிங் மீட் பண்ணலாம்" என்றவர் அலைபேசியை வைத்தார்.

வர்ஷினியின் மனமோ இரண்டாங்கெட்டான் நிலையில் இருந்தது. அவளின் மனம் தான் செய்வது சரியென நினைக்க, அதனை அவளது அறிவு தவறு என பட்டிமன்றம் நடத்தியது.

இரண்டுக்கும் நடுவில் தவிக்க ஆரம்பித்தாள். வீட்டில் அவள் பெற்றோர்களோ அவளிடம் அன்பாகவும், அவளுக்காக நேரம் செலவிடவும் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளுக்குள் சிக்குண்டாள்.

அன்றைய நாளிற்கான வகுப்பு தொடங்கப்பட்டது. எப்பொழுதும் போல் ஆலோசனை வகுப்பு சென்று கொண்டிருக்க அங்கு உள்ளே வர அனுமதி கேட்டு வந்தவரைக் கண்டு ஆச்சரியத்துடன் அதிர்ந்தாள் வர்ஷினி.

அங்கு வந்தது ஒரு புகழ்பெற்ற நடிகை. தற்பொழுது சினிமா உலகில் இருந்து ஒதுங்கி இருப்பவர்.

"ஹாய் நிரு... எப்டி இருக்க?" என்றார் அந்த நடிகை.

"நல்லா இருக்கேன் மேம், நீங்க எப்டி இருக்கீங்க?" என பரஸ்பர நல விசாரிப்பு முடிய வர்ஷினியை அவருக்கு அறிமுகப் படுத்தினார் நிர்மலா.

"இவங்க வர்ஷினியோட தோழி சாதனா" என அவளையும் அறிமுகப்படுத்த சிநேக புன்னகையை சிந்தியவர், "நீ சொன்ன பொண்ணு வர்ஷினியா? நிரு" என்றார் அவர்.

"ஆமா மேம்.." என்க, "ஹாய் வர்ஷினி" என்றார்.

அவளோ,"ஹாய் மேம், நான் உங்களோட தீவிர ரசிகை மேம், சின்ன வயசுல உங்க மூவிஸ் தான் அதிகம் பார்ப்பேன்" என்றாள் வர்ஷினி.
"தேங்க்யூ வர்ஷினி" என்றவர், "என்னோடஹெல்ப் வேணும்னு சொன்ன நிரு, என்ன பண்ணனும் நான்?" என்றார் அந்த நடிகை.

அவர் பத்து வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா உலகில் முண்ணனி நடிகையாக வலம் வந்தவர். கடந்த சில வருடங்களில் அதிலிருந்து ஒதுங்கி குடும்ப வாழ்வில் ஐக்கியமாகி உள்ளார்.

"வர்ஷினி கிட்டத்தட்ட உங்கள மாதிரி தான் மேம், நீங்க தாண்டி வந்த இடத்துல தான் இப்போ அவங்க இருக்காங்க, உங்களோட மறுபக்கம் வர்ஷினிக்கு சொன்னா கண்டிப்பா அவங்க இந்த தொழிலோட ஆபத்த உணர வைக்க முடியும்னு தான் உங்கள வரவழைச்சேன் மேம்" என்றார்.

இது ஆலோசனை வகுப்பின் மூன்றாம் கட்டம். இதற்கு முன் அவர்களை போல பாதிக்கப்பட்டவர்கள் பின் அதிலிருந்து மீண்டு வந்ததையும் அவர்களின் மறுபக்கத்தையும் உதாரணமாக காட்டினால் வர்ஷினி போன்றவர்களை இதிலிருந்து மீட்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் இந்த வகுப்பு தொடங்கப்படும்.

சினிமா உலகம் மட்டும் என்றிராமல் அனைத்து துறைகளிலும் பல வகையில் விழுந்து, இழந்து, உணர்ந்து வந்தவர்கள் தாங்களே முன்வந்து உதவ முயல்வார்கள்.

அதேப் போல் தான் இந்த நடிகையிடமும் நிர்மலா வர்ஷினியின் நிலையை எடுத்து கூறினார்.

"என்ன பத்தி எல்லாருக்கும் என்னோட ஒருபக்கம் தான் தெரியும் வர்ஷினி, ஆனா நான் இந்த இடத்துக்கு வர நிறைய இழந்துருக்கேன், உண்மை தான்... உன்னை மாதிரி இந்த டீன் ஏஜ்ல எனக்கு அந்த விசயத்தோட தீவிரம் புரியல, எனக்கு நடிக்கணும்னு ஆசை... ஆனா நடிக்க இங்க அழகும் திறமையும் மட்டும் பத்தாது, அதுக்காக எல்லாரும் தப்பானவங்க இப்டி தான் இருப்பாங்கனு சொல்ல முடியாது, சில ஒநாய்ங்க இதுலயும் இருக்காங்க... அப்படி அடிபட்டு வந்தவ தான் நான்... புகழ் போதை, பணம் என் கண்ண மறைச்சுருச்சு, எனக்கு இப்போ உனக்கு கவுன்சிலிங் கொடுக்கிற மாதிரி யாரும் கொடுக்கல, அதற்கு தயாராகவும் நான் இல்ல.. அதுல அடிபட்டு மிதிபட்டு தான் மேல வந்தேன்.. ஒருகட்டத்துல நிரு'வ பார்க்க வந்தேன், அவ்ளோ பொறுமையா என்னை வெளிய கொண்டு வந்தாங்க... இப்போ ஒரு அழகான கூட்டுக்கு குடும்ப தலைவியா, ஒரு மருமகளா, மனைவியா, தாயா என்னோட கடமைய கொடுத்துட்டு இருக்கேன்... உன்னாலயும் முடியும் வர்ஷினி, இது மட்டும் தான் வாழ்க்கை கிடையாது... வெளி உலகம் ரொம்ப பெருசு, வெளிய வர முயற்சி பண்ணு, கண்டிப்பா சுதந்திரமான காற்ற சுவாசிப்ப... உன்னை சுத்தி நிறைய பாசிட்டிவ் எனர்ஜி இருக்கு, பயன்படுத்திக்கோ... கண்டிப்பா உன் லைப் நல்லா இருக்கும்" என்றார் அவர்.

அதற்கு அவளோ சத்தம் போட்டு சிரித்தவள், "என்ன மேம் எல்லாத்தையும் வாழ்க்கைல அனுபவிச்சிட்டு இப்போ உங்களுக்கு போர் அடிச்சு போச்சா...? அதான் இப்டி எனக்கு லெக்சர் கொடுக்குறீங்களா?" என்றாள் வர்ஷினி.

அவரோ, "உன்னை மாதிரி நான் நிறைய பேர பார்த்துருக்கேன் வர்ஷினி, எல்லாரும் கேட்கற கேள்விய தான் இப்போ நீ கேட்கற, நான் தப்பு பண்ணேன் தான்... இல்லைனு சொல்லல, ஆனா அதுல இருந்து வெளிய வர முயற்சி பண்ணலாமே, இந்த உடம்பும் அழகும் ஒரு கட்டம் வரைக்கும் தான் வர்ஷினி..."

"அவங்க தேவைக்கு அப்புறம் நம்ம வெறும் டிஸ்யூ பேப்பர் தான்... அத காலம் கடந்து புரிஞ்சுக்கிட்டேன் நான், அதே நிலைம உனக்கு வந்தறக் கூடாதுனு தான் நான் இப்போ இங்க வந்து உன்கிட்ட பேச முக்கிய காரணம்" என்றார் அவர்.

"உங்களயே உங்களுக்கு பாதுகாத்துக்க தெரியல, இதுல எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க" என எடுத்துத்தெறிந்து பேச அவரோ நிர்மலாவை பார்த்தார்.

"நான் பார்த்துக்கிறேன் மேம், நான் கூப்டதுக்காக வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேம்" என்க, "இட்ஸ் ஓ.கே நிரு" என்றவர் அங்கிருந்து விடைபெற்று கிளம்பினார்.

சாதனாவோ தன் தோழியை கோபத்துடன், "உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க வர்ஷூ?... ஒருத்தவங்க தான் பட்ட கஷ்டத்த நீயும் படக்கூடாதுனு வந்து உனக்கு அட்வைஸ் பண்ணா இப்டி எடுத்தெறிஞ்சு பேசற, கொஞ்சம் கூட இதப் பத்தி யோசிக்கவே மாட்டியா?" என்றாள்.

"அமைதியா இருங்க சாதனா, வர்ஷினி ஸ்மார்ட் கேர்ள், அவங்களுக்கு எது தேவைனு அவங்களே புரிஞ்சுக்குவாங்க... அப்டி தான வர்ஷினி?" என்றார் நிர்மலா.

அவளோ கோபமாக முறைத்தவள் அங்கிருந்து கிளம்பினாள்.

சாதனாவோ, "எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல மேம்... இவ திருந்திரதுக்கான அறிகுறியே தெரியல மேம்" என்றாள் கவலையுடன்.

"இல்ல சாதனா, கண்டிப்பா முடியும்..., நம்பிக்கைய கை விட்றாதீங்க" என்றார் நிர்மலா.
 
#9
மலர் - 08

தொடர் ஆலோசனை வகுப்புகள். சில சமயம் தன் தவறை ஒரளவு அவள் உணர நேர்ந்தாலும் அதனை ஏற்க அவள் மனம் இடம் தரவில்லை. மீண்டும் தன் தவறை நியாயப்படுத்த முயன்றாள் வர்ஷினி.

மூன்று கட்ட ஆலோசனை வகுப்புகளும் தோல்விலேயே முடிய நிர்மலா அவள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

வர்ஷினி போன்றவர்களை இதிலிருந்து மீட்க சில வருடங்கள் என்ன பல வருடங்கள் கூட ஆகும் என்பதை கண்ணாற கண்டவராயிற்றே. அதனால் பொறுமையுடன் காத்திருந்தார் அவளின் மனந்திருந்தலுக்காக.

இதோ இன்றோடு ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டது. சாதனா தன் படிப்பை முடித்துவிட்டு ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் ஊடகவியலாளராக தன் பணியைத் தொடங்கினாள்.

வர்ஷினியின் படிப்பும் இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் இப்பொழுது அதிக நேரம் தன் வீட்டில் முடங்கியே நேரத்தை செலவிட்டாள். வெளியே செல்வது குறைந்தது. அவளிடம் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கூறி பேசுவதை தவிர்க்க ஆரம்பித்திருந்தாள். செல்வி தன் வேலையை விட்டு விட்டு வீட்டிலே இருக்கத் தொடங்கினார்.

வர்ஷினுடனான நேரத்தை ராஜாவும் அதிகப்படுத்தினார். அவளின் தவறுகளையோ அல்லது அவளின் தடம் மாறுதல்களையோ பேசாமல் எப்பொழுதும் போல் சகஜமாக அவர்கள் இருக்க இவள் மனதில் படிப்படியாக குற்றவுணர்ச்சி தலைத்தூக்கியது.
இதோ இன்று வகுப்புக்கு அவளே தயாராக சாதனா அவளை செல்ல வந்திருந்தாள்.

இத்தனை நாளும் அவள் வந்து போராடி தான் அவளை வகுப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இன்று அவளே தயாராக இருக்க, சாதனா ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

"போகலாமா சாது" என்க, அவளோ "ம்..." என தலையாட்டியவாறே தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தாள்.

ராஜாவும் செல்வியும் வீட்டிற்கு வெளியே வர அவர்களிடம் தலையசைப்பில் விடைப்பெற்றவள் வண்டியை செலுத்தத் தொடங்கினாள் சாதனா.

போகும் வழியில் வர்ஷினி அமைதியாகவே வர, "என்ன வர்ஷூ அமைதியா இருக்க?" என்றாள் சாதனா.

"நான் உங்கள எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்தறனா சாது...?" என்றாள் வர்ஷினி.

அவள் கேள்வியில் சடன் பிரேக் போட்டி வண்டியை நிறுத்தியவள், "வர்ஷூ...!" என அவளைப் பார்த்தாள்.
"உங்கள ரொம்ப கஷ்டப்படுத்தறன்ல"என்றவளின் கண்களில் இப்பவோ அப்பவோ என நீர்துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

"அப்டி நாங்க யாராவது சொன்னமா வர்ஷூ...?, கண்டதையும் யோசிச்சு குழப்பிக்காத" என்றவள் வண்டியை செலுத்தத் தொடங்கினாள்.

அன்றைய வகுப்பு ஆரம்பமானது. மூன்று கட்ட நிலையிலும் வெற்றியை காண முடியவில்லை என்பதால் அடுத்தக்கட்ட முயற்சியாக உளச்சிகிச்சையை (சைக்கோதெரபி) தொடங்கினார் நிர்மலா.

உளச்சிகிச்சை என்பது பாதிக்கப்பட்டோரின் நல்வாழ்வையும், உள நலத்தையும் அதிகரிப்பதற்கான மேற்கொள்ளப்படும் முறை.

அவர்களின் ஆழ் மனதில் அவர்கள் தொலைத்ததாக நினைத்த எதனையும் அவர்கள் தொலைக்கவில்லை, கால தாமதம் தான் ஆகியுள்ளது என அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க வேண்டும்.

வர்ஷினியும் அந்த ஒரு நிலையில் தான் உள்ளாள். தன் பெற்றோரின் அன்பை தான் தொலைத்துவிட்டோம், தன் படிப்பை தொலைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வுகள் அவள் மனதில் படிபடியாக வளரத் தொடங்கி இருந்தது.
தன்னுடன் பயின்றவள் இன்று தனது துறையில் தன் கண்ணெதிரே சாதித்துக் கொண்டிருக்கும் சாதனாவைக் கண்டு தான் அவள் படிப்பைத் தொலைத்ததை உணர்ந்தாள்.

நிர்மலா அவளின் மனவோட்டங்களை புரிந்து கொண்டு தான் இந்த சைக்கோதெரபி வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வகுப்பு தொடங்கப்பட்டது. அவர் அவள் தொலைத்தாக நினைப்பதை தொலைக்கவில்லை, சற்றே கால தாமதம் தான் ஆகியுள்ளது என அவளுக்கு புரிய வைக்க முயன்றார்.

ஒரே நாளில் அவள் மனதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது, தொடர் வகுப்புகள் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சைக்கோதெரபி வகுப்புகள் மட்டுமே சென்றது.

அவள் பெற்றோரும் உறுதுணையாக இருக்க அவள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத் தொடங்கினாள்.

அவள் மனம் மாற தொடங்கி இருந்த வேளையில் அவளுக்கு பிரச்சனைகளும் வரத் துவங்கின.

பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் அவர்களே அதிலிருந்து வெளி வரத் துடித்தாலும் அந்த புதைக்குழி அவர்களை மேலும் தன்னுள்ளே தான் இழுக்குமே தவிர அவர்களை அதிலிருந்து வெளியேற விடாது.

அதே தான் வர்ஷினியின் வாழ்விலும் தொடர்ந்தது. அவள் இதுவரை தன்னை நாடி வருபவர்களை தன் அழகின் மூலதனத்தை பெருமையாக நினைத்தாலோ அதே இன்று அவளுக்கு எதிராக இருந்தது.

அவளுக்கு தொடர் தொல்லைகளும் "திருந்தி என்ன பண்ண போற?... எவனையாவது கட்டிக்கிட்டு புள்ள பெத்துக்க போறியா?" போன்ற கேள்விகளும் அவளை அச்சுறுத்தின.

இதுவரை களங்கம் இல்லாமல் ஓரளவு தெளிந்த மனம் மீண்டும் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது.

"அடுத்து நான் என்ன செய்வது?... படிப்பு இல்லை, தனக்கான ஒரு அடையாளம் இல்லை, எத்தனை நாள் தன் பெற்றோரின் நிழலில் வாழ்வது?, அடுத்து திருமணமா?... யார் தன்னை திருமணம் செய்து கொள்வார்கள்? கெட்டு சீரழிந்து போன இந்த உடலை மணக்க யாருக்கு துணிவு வரும்? மீறி திருமணம் நடந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தன் கடந்த காலத்தைப் பற்றி பேசினால்?.. நீ கண்டவனோடு சென்றவள் தானே எனக் கேட்டாள்?, இனி தன் வாழ்வின் பற்றுகோல் என்ன?" என கேள்விகள் அவளை வரிசைகட்டி பயமுறுத்தின.
இந்த கேள்விகள் அனைத்தையும் நிர்மலாவின் முன் வைத்தாள் வர்ஷினி. "நான் திருந்தி வாழ்ந்தாலும் இப்டியே இதே சாக்கடைல கிடந்தாலும் ஒன்னு தான... எனக்கான வாழ்க்கை இப்டி தான்னு இருக்கும் போது நான் ஏன் திருந்தணும்?" என மீண்டும் முதல் நிலைக்கே வந்தாள் வர்ஷினி.

"உங்களோட முதல் கேள்வி படிப்பு இல்லை, ஏன் உங்களுக்கு பல்லு போன வயசா என்ன?... இப்போ இருபத்தி மூணு தானவர்ஷினி, படிக்க வயது ஒரு தடையில்லையே, இப்பொழுது நீங்க படிக்க நினைத்தாலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு பட்டதாரி, அதன்பின் உங்கள் சொந்த காலில் நிற்க முடியும், படிப்பு முக்கியம் தான் அதோட திறமையும் முக்கியம், உங்க திறமைகள வளர்த்துக்கோங்க... உங்களுக்கு பிடித்த துறைல உங்கனால கண்டிப்பா முன்னுக்கு வர முடியும்"

"அடுத்த கேள்வி திருமணம், அது உங்களோட தனிப்பட்ட விருப்பம்... உங்களோட கடந்த காலத்தையும் ஏத்துக்கிட்ட ஒருத்தர் உங்க வாழ்க்கைல வந்தா ரொம்ப சந்தோசம், ஆனா அவங்க திரும்ப உங்களோட கடந்த காலத்தை பத்தி பேசுனா என்ன பண்றதுனு கேட்குறீங்க?... உண்மை தான், மனித மனம் குரங்கு மாதிரி, அது எப்போ எப்டி இருக்கும்னு தெரியாது... உங்களுக்கு விருப்பம் இருந்தா கண்டிப்பா நீங்க திருமண வாழ்க்கைய ஏத்துக்கலாம்"

"நான் ஏன் திருந்தி வாழணும்னு கேட்டீங்க?.. உங்களுக்காக இல்லைனாலும் உங்க பேரண்ட்ஸ்காக ஒருதடவ திருந்தி வாழ்ந்து பாருங்களேன், அப்போ தான் அந்த வாழ்வோட அர்த்தம் புரியும்... திரும்ப அதே சாக்கடைல போய் விழணும்னு ஏன் நினைக்கிறீங்க?... அந்த சக்கடைல விழப் போறவங்கள தடுக்கலாமே வர்ஷினி... ஏன்னா அது உங்கனால முடியும்..." என்றார் நிர்மலா.

அவரின் கடைசி வரிகளில் சிந்திக்க ஆரம்பித்தாள் வர்ஷினி.

"திரும்ப அதே சாக்கடைல போய் விழணும்னு ஏன் நினைக்கிறீங்க?... அந்த சக்கடைல விழப் போறவங்கள தடுக்கலாமே வர்ஷினி" என்ற வார்த்தைகள் அவள் மனதை அசைக்க ஆரம்பித்தது.

"உண்மை தான, நான் ஏன் திரும்ப அதுல விழணும்னு நினைக்கிறேன், அதுல விழ இருக்கிற பல பேர விழாம தடுக்கலாமே... என்னோட நிலை வேற யாருக்கும் வராம தடுக்க என்னால முடியும் தான?" என தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டாள் வர்ஷினி.

அவள் அதிலிருந்து மீளத் தொடங்க புது சமூகத்தை எதிர்க்கொள்ள தயாரானாள் வர்ஷினி.

அவளிற்கு துணையாக அவள் தோழியும் பெற்றோரும் கைகோர்க்க நிர்மலாவின் வழிகாட்டுதலின் படி மெல்ல மெல்ல அந்த சாக்கடையிலிருந்து வெளிவரத் துவங்கினாள்.

இறுதி வகுப்பாக ஆர்ட் தெரபி (Art therapy). ஆர்ட் தெரபி வகுப்பில் முக்கிய பங்கு வகிப்பது ஓவியம். வர்ஷினிக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரபி (Martial Arts Therapy) தொடங்கப்பட்டது.

இதில் ஏதாவது ஒரு கலைகளில் அவர்களை ஈடுபட வைத்தல். வர்ஷினிக்கு சிலம்பம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரபியில் சிலம்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னை அவர்கள் மீண்டும் புதுப்பித்து கொள்ள, முழு ஆற்றலுடன் செயல்படுதல், ஒழுக்கம், மனதை திசைதிருப்பி நல்வழியில் செயல்படுதல் போன்றவற்றை இதன்மூலம் பெற இயலும்.

அவளின் தன்னம்பிக்கையும் ஊடே விதையூன்றப் பட்டது. தன்னை முழுவதுமாக கடந்த காலத்திலிருந்து மீட்டுக் கொண்டவள் தன் கவனத்தை நல்வழியில் செயல்படுத்த தொடங்கினாள் வர்ஷினி.
 
#10
மலர் - 09

தான் விட்ட கல்வியை மீண்டும் தொடர்ந்தாள் வர்ஷினி. காலம் தான் சற்று தள்ளிப் போனாலும் மீண்டும் பழைய வர்ஷினியாய் அவள் மாறிப் போனாள்.

அவளுக்கு திருமணத்தின் மேல் நாட்டம் இல்லாமல் இருக்க அதனை அறிந்த பெற்றவர்களின் மனம் வாடினாலும் அவள் விருப்பப்படி விட்டு விட்டனர்.
இதோ ஐந்து ஆண்டு கடந்த நிலையில் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள பெண்ணாய், தன் பெற்றோருக்கு நல்மகளாய், தன் தோழிக்கு தோள் கொடுக்கும் தோழியாய் மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த தாயாகவும் உருவெடுத்துள்ளாள் அவள்.

ஆம், இன்று அவள் ஒன்றரை வயதான அவளின் குட்டி தேவதைக்கு தாய்.

"ம்மா..." என பற்கள் இப்பொழுது தான் முளைவிட ஆரம்பித்திருந்தும் அந்த செவ்வரிசி போல் தெரியும் அந்த பொக்கை வாயில் ஒரு விரலை வைத்து சூப்பிக் கொண்டு தத்தகா பித்தா என தன் செம்பாதங்கள் தரையில் பட நடந்து வந்தாள் அவளிடம்.

சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த வர்ஷினி தன் மகளின் குரல் கேட்டு திரும்ப கொள்ளை அழகுடன் அந்த குட்டி தேவதை அழகாய் நடைப்பயின்றவாறே வந்து கொண்டிருந்தாள் தன் தாயை நோக்கி.

"குட்டிமா...!" என்றவாறே அவள் சென்று தூக்க குழந்தையோ அவள் கன்னத்தில் நச்சென்று இச் பதித்தாள்.

"என்ன டா குட்டிமா அம்மாக்கு காலங்காத்தாலயே இப்டி நச்சுனு இச் வைக்கிறீங்க" என அவள் மூக்கோடு இவள் மூக்கு உரச குழந்தையோ வெட்கப்பட்டு அவள் தோளில் புதைந்தாள்.
"என்னமோ பண்ணி வச்சுட்டு தான் இப்டி வந்து என்கிட்ட செல்லம் கொஞ்சுறியா டி கள்ளி" என்றவாறே அவள் வெளியே வர அங்கு ஹாலில் அவளின் தேவதை சிறுநீர் அபிஷேகம் செய்து வைத்திருந்தாள்.

"அதான் லஞ்சமா முத்தம் குடுத்தீங்களா?..." என்றவாறே அவளை அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தவள் தன் அன்னையை அழைத்தாள்.

அவர் வீட்டின் பின்கட்டிலிருந்து, "ஏன் வர்ஷூ?..." என்றவாறே வர,

"இங்க பாருங்க உங்க பேத்திய... பண்றதெல்லாம் பண்ணிட்டு எனக்கு முத்தம் கொடுக்கிறா லஞ்சமா...!" என குறைபட்டாள்.

"என் பேத்திய குறை சொல்லனா உனக்கு தூக்கம் வராதே" என தன் மகளை கூறியவர் தன் பேத்தியை தூக்கி கொண்டு செல்லம் கொஞ்ச ஆரம்பித்தார்.

அப்பொழுது தான் வாக்கிங் முடிந்து உள்ளே வந்த ராஜா, "என்ன செல்வி என் பொண்ண ஏதோ சொன்ன மாதிரி இருந்துது?..." என்றவாறே வர,

"இவரு மகள ஒன்னும் சொல்லிறக் கூடாது, உடனே மூக்கு வேர்த்துரும் மனுஷனுக்கு" என்றார் செல்வி.

வர்ஷினி தன் தந்தையிடம் தன் மகளை பற்றி குற்ற பத்திரிக்கை வாசித்துவிட்டு, "அப்பா இன்னிக்கு எனக்கு ஒரு ஸ்கூல்ல அவேர்னஸ் கிளாஸ் ஒன்னு இருக்கு, சீக்கிரம் கிளம்பணும்... நீங்க என்னை டிராப் பண்ணிருங்க" என்றாள் வர்ஷினி.

இதுவரை தன் பேத்தியை போல் செல்லம் கொஞ்சியவள் இப்பொழுது பொறுப்புள்ள பெண்ணாய் பேச, "சரிம்மா, நீ போய் கிளம்பு" என்றார் ராஜா மனமகிழ்வுடன்.

செல்வி தன் பேத்தியை பார்த்துக் கொள்ள வர்ஷினி தயாராகி வந்தாள்.

பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்கள் தடம் புரளாமல் நல்வழியில் செல்லவும் ஆலோசனை வகுப்புகளையும் விழிப்புணர்வு வகுப்புகளையும் எடுக்கிறாள் வர்ஷினி.

அதனோடு மட்டுமல்லாமல் சிலம்பம் பயில விரும்பும் பெண்களுக்கு சிலம்ப வகுப்பும் எடுக்கிறாள். அவள் பல இடங்களில் அவளின் கடந்த காலத்தால் புரணிக்கப்பட்டாலும் துவண்டு விடாமல் வீறுநடையிட்டு சிங்கப் பெண்ணாய் சமூகத்தில் வலம் வருகிறாள் தர்ஷினி.

நிர்மலாவின் உதவியோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பல பெண்களுக்கு மறுவாழ்வும் அளித்து அவர்களையும் இச்சமூகத்தில் சிங்கப் பெண்களாக மாற்றிக் கொண்டு வருகிறாள்.

இதோ அவள் சமுதாயத்தில் மட்டுமல்லாமல் ஒரு குழந்தைக்கு தாயாய் விளங்குகிறாள். எதிர்பாராத ஒருநாளின் அவள் வாழ்வில் வந்தவள் தான் ஆதிரா.

பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்த நிலையில் பெற்றவளால் கைவிடப்பட்டு குப்பைத் தொட்டியை அடைக்கலமாக கொண்டிருந்த அந்த தொப்புள் கொடி அறுக்காத நிலையில் கண்ட வர்ஷினியின் உள்ளம் பதபதைக்க அக்குழந்தையை தன் கரங்களால் ஏந்தினாள்.

காவல்துறையில் குழந்தையைப் பற்றி கூறியும் யாரும் அதற்கு சொந்தம் கொண்டாட வராத நிலையில் அக்குழந்தையை தானே தத்தெடுத்துக் கொண்டாள்.

தனக்கு மகளாகவும் தன் பெற்றோருக்கு பேத்தியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டாள் ஆதிரா.

அவள் வாழ்வின் பற்றுகோலாய் இப்பொழுது ஆதிரா இருக்க, அவள் வாழ்வும் பல போராட்டங்களைத் தாண்டி இன்று மணம் வீசுகிறது.

இன்றைய கால பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவைகளைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல் பல பிரச்சனைகளில் சிக்கி சீரழிகின்றனர்.

ஒருவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் பெற்றோரின் வளர்ப்பில் தான்.

ஏழையாய் இருந்தால் என்ன, பணக்காரனாய் இருந்தால் என்ன?.. தாங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் தங்களின் பிள்ளைகளுக்காக தான் என அவர்களுக்கு புரிய வைக்க முயலுங்கள். அதுவும் உங்களின் கடமையே.

இதோ வர்ஷினியின் பெற்றோரே ஒரு உதாரணம். நல்லதிற்கு அல்ல, தீய வழியில் வர்ஷினி செல்வதற்கு ஓர் காரணமாய் அமைந்தார்கள்.

அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுவது அவளுக்காக தான் என உணர வைக்க மறந்தவர்கள், அதன்பின் அவர்கள் அதனால் பட்ட கஷ்டங்களையும் நீங்களும் அறிவீர்கள்.

எவ்வளவு பெரிய சாக்கடையில் விழுந்தாலும் கண்டிப்பாக அதிலிருந்து மீண்டு வரலாம். தப்பு செய்தால் அதனை குறை கூற தெரிந்த நமக்கு அவர்களை அதிலிருந்து மீட்கும் வழி தெரியவில்லை என்பது காலத்தின் கோலமோ...
முடிந்தவரை இன்றைய இளந்தலைமுறைக்கு நல்லதை எடுத்துக் கூற முன்வாருங்கள். அவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஒவ்வொரு பெற்றோரும் இருக்க முயலுங்கள். பாலியல் தொழில் மட்டுமல்ல பாலியல் வன்புணர்வுகளும் குறையத் தொடங்கும். அதற்கு ஒவ்வொருவரின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

பெற்றோராய், அண்ணனாய், தம்பியாய், அக்காவாய், தங்கையாய், கணவனாய், மனைவியாய், உற்றார் உறவினராய் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்த முயலுங்கள்.

பெண்ணியம் பேசும் நாம் அதன்படி நடந்து கொள்கிறோமா? என சிந்தியுங்கள். தான் கட்டிய மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணின் கழுத்தின் கீழ்பகுதிக்கு மேல் பார்வை செல்ல அனுமதிக்காதீர்கள். அவள் கண் பார்த்து பேசுங்கள். தானாய் தவறுகள் குறையும்.

இங்கு ஆண்களையோ அல்லது பெண்களையோ குற்றம் சொல்லவில்லை. தவறிழைக்கும் மனித இனத்தைப் பற்றி தான் கூறுகிறேன். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, தவறு தவறு தான். ஆனால் அந்த தவறிலிருந்தும் வெளிவர வழிவகைகள் உள்ளது என மறக்காதீர்.

நானும் இளந்தலைமுறை தான்.இன்றைய கலிகாலத்தில் உடனிருந்து பயணிப்பவள் என்ற முறையில் கூறுகிறேன் ஒவ்வொர் சமூக தவறுகளுக்குப் பின்னும் நம் ஒவ்வொருவரின் பங்கும் உள்ளது. அதனை உணர்ந்து நல்வழியில் செயலாற்றுங்கள்.
மழையது நனைக்கவில்லை, வெயிலதும் வாட்டவில்லை.,
இறைவனடி கண்டதில்லை, இசைக்கும் வண்டுகள் என் தேன் உண்டதில்லை.,
அழகுண்ட மலர்களது சூழலுக்கேற்ப நிறம் வாட, எச்சூழலிலும் குணம் மாறா காகித மலரெனும் நான்..

_சுபம்_
 
#11
இக்கதை முழுக்க உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. ஒரு உளவியலாளரின் வழிகாட்டுதலோடு எழுதப்பட்டது.

வழக்கமான காதல் கதைக்களங்களில் இருந்து சற்று மாறுபட்ட கதைக்களத்தை தர முடிவு செய்யும் போதே என்னுள் பல குழப்பங்கள். இதுவரை காதல் கதைகளை மாறுபட்ட வகையில் நாவல்களாக எழுதிய நான் இக்கதையை எப்படி எடுத்துச் செல்வேன் என்ற தயக்கம். அதுவும் இது எனது இரண்டாம் குறுநாவல்.

குறுநாவல் எழுதி பழக்கமில்லா எனக்கு "உயிரியற்கையாம் காதல்" குறுநாவலே எனது முதல் குறுநாவல். "காகித மலரவள்" விழிப்புணர்வு நாவலை ஒரு நல்ல பயனுள்ள கருத்தோடு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நானும் கல்லூரி மாணவி என்பதால் பல வர்ஷினிகள் தடம் மாறாமல் இருக்க இக்கதையை சமர்ப்பணம் செய்கிறேன்.

இக்கதை எழுத உளவியல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் எனக்கு பொறுமையாக விளக்கிய உளவியலாளரும் என் அக்காவுமான என் இனிய தோழிக்கு இத்தருணத்தில் என் நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன்.

இக்கதை பற்றின உங்களது கருத்துக்களை கருத்து திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே.
 
#12
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கோடும், விமர்சனப்படுத்தும் நோக்கோடும் இக்கதை எழுதப் படவில்லை.
 
#13
'அன்பு ஒன்னு தான் அனாதை Sir'னு Status போடுற முட்டா மூதேவிங்க இருக்க இடத்துல அன்பு எப்பவுமே அனாதை ஆகாது'னு அழகா ஆழமா சொன்னதே பெரிய பாராட்டுக்குரிய விஷயம்..

பெத்தவங்க பக்கத்துல இருந்து ஒரு பிள்ளை தர்ற வலியையும்., அந்த பிள்ளையோட பக்கத்துல இருந்து பெத்தவங்களோட கவனக்குறைவையும்., சமூத்தோட பார்வையில இவங்க 2 பேரும் பண்ண தவறுகளையும் தெளிவா சொல்லிருக்கீங்க..

வேகமா ஓடிட்டு இருக்குற உலகத்துல பணத்துக்காக ஓடுற பெத்தவங்க'எதுக்காக தான் டா இப்டி ஓடிட்டு இருக்கீங்க.. ?!. எப்போ தான் டா ஓடுறத நிப்பாட்டுவீங்க'னு நல்லா உறைக்குற மாதிரி அழுத்தமா கேட்டிருக்கீங்க.. அதுக்கே கண்டிப்பா வாழ்த்துகள் சொல்லனும்..

வாழ்க்கையே முடிஞ்சு போச்சு'னு நினைக்கறவங்களுக்கு., இன்னும் வாழ்க்கையே தொடங்காத ஒரு பிஞ்சு குழந்தையோட துயரத்தை வச்சு காட்டினது ரொம்ப அழகான நெகிழ்ச்சியான புரிதல்..

நேரம் வந்தா நட்டுக்க போற வாழ்க்கைல பணம்'ங்கறது இரண்டாம் மொழி தான்.. வாழ்க்கைய நகர்த்தி போக கண்டிப்பா பணம் அவசியம் தான்., ஆனா பணம் மட்டுமே அவசியம் இல்ல'ங்கறத எல்லோருக்கும் புரியுற மாதிரி சொன்னது அழகு..

சும்மா ஒரு 5 கதாபாத்திரத்திங்கள வச்சி நிதானமா ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கொடுத்து இருக்கீங்க பாப்பா.. கண்டிப்பா எல்லாரும் படிக்க வேண்டிய கதை..

வாழ்த்துகள் மா.. உங்களோட அடுத்த படைப்புக்காக அவளோட காத்திருக்கேன்..
 
#14
அக்கா உண்மையா வேற லெவல் இதுவரை காதல் கதைகள் மட்டும் எழுத்துகிட்டு இருந்த நீங்க இந்த மாதிரி சமூக கருத்துள்ள கதைகளும் எழுதுவது உண்மையா மனசுக்கு சந்தோசமா இருக்கு உங்கள் எழுத்து பயணம் தொடர தம்பியை என் வாழ்த்துகள்...
 
#15
அக்கா உண்மையா வேற லெவல் இதுவரை காதல் கதைகள் மட்டும் எழுத்துகிட்டு இருந்த நீங்க இந்த மாதிரி சமூக கருத்துள்ள கதைகளும் எழுதுவது உண்மையா மனசுக்கு சந்தோசமா இருக்கு உங்கள் எழுத்து பயணம் தொடர தம்பியை என் வாழ்த்துகள்...
Thank u so much da thangam
 
#16
சாரா மோகனின் காகித மலரவள்.
நல்ல ஒரு உளவியல் சார்ந்த விழிப்புணர்வு கதை.
பதின் பருவ பெண்ணான வர்ஷினி தடம் மாறி போகிறாள்.அவளை எப்படி மீட்டு எடுக்கிறார்கள் என்பது கதை.
இந்த கதையில் அவளின் வயதே ஆன அவள் தோழி தன் வாழ்வில் எவ்வளவு தெளிவாக தன் கேரியரை முடிவெடுத்து பயணிக்கிறாள் என்பதையும்,வர்ஷினி எப்படி தடம் மாறுகிறாள் என்பதையும் நம் மனம் ஒப்பிட்டு பார்க்கிறது!சந்தர்ப்பமும் சூழ் நிலையும் மட்டும் யாரையும் படுகுழியில் தள்ளுவதில்லை,நாம் மனம் தடுமாறாமல் இருந்தால் யாரும் நம்மை எந்த நிலையிலும் கெடுக்க முடியாது.வர்ஷினியின் கல்லூரி தோழியின் ப்ரெயின்வாஷ் பேச்சுக்கள் தேன் தடவிய கொடிய விஷம்!மிகவும் சரி என நினைக்க கூடிய விதத்தில் அவளின் பேச்சுகள்...ஒருவனுக்கு ஒருத்திங்கிற கான்செப்ட்டெல்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு,இன்னிக்கு யாரும் அப்படி இல்ல,இந்த காலத்துல யாரு லவ் பண்ணியவங்கள கல்யாணம் பண்ணிக்குறாங்க?எல்லாம் முடிஞ்சதும் கை கழுவிட்டு வேற ஒருத்தங்களை கட்டிகிட்டு குடும்பம் நடத்துவாங்க,அவங்களை இந்த சமூகம் ஒழுக்கசீலராதான் பார்க்கும்.இது தப்புன்னா அதுவும் தப்புதான்.ஒருத்தன் கூட போனா என்ன பல பேர் கூட போனா என்ன எல்லாம் ஒண்ணுதான்!ஒருத்தனை கல்யாணம் பண்ணி வாழ்க்கை நடத்தி அது போரடிச்சா பிள்ளைகளுக்காக வாழ்வியா?இருக்கிறது ஒரு வாழ்க்கை,அதை நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும்!ஒரு டிரெஸ்ஸை ஒரு முறைதான் போடணும்,அனாதை ஆசிரமங்களில் இருக்கவங்களுக்கு நம்மை மாதிரி ஆட்கள் தானே கருணை காட்டணும்!

முதல் முறை விழுந்தவள் தொடர்ந்து தன் இஷ்டப்படி இருக்க சாதனா மன நல மருத்துவரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் ஆரம்பிக்கிறது!நிர்மலா என்னும் மருத்துவரின் அணுகு முறை அபாரம்!படிப்படியான மருத்துவமுறைகள் வியப்பை அளிக்கிறது!இவ்வளவு படி நிலைகளா?நல்லா ஹோம் வர்க் செய்து இருக்காங்க கதையில்!பாராட்டுக்கள்!பெற்றோர் எந்த இடத்தில் தவறுகிறார்கள் என்பதிலிருந்து,அவள் மனதில் இருபத்து மூன்று வயதில் படிப்பை விடக்கூடாது என்பதிலிருந்து பிற் கால வாழ்க்கை வரை பொறுமையாக எடுத்து சொல்வது அருமை!நல்ல ஒரு வித்தியாசமான கதைக்களம்!
 
#17
சாரா மோகனின் காகித மலரவள்.
நல்ல ஒரு உளவியல் சார்ந்த விழிப்புணர்வு கதை.
பதின் பருவ பெண்ணான வர்ஷினி தடம் மாறி போகிறாள்.அவளை எப்படி மீட்டு எடுக்கிறார்கள் என்பது கதை.
இந்த கதையில் அவளின் வயதே ஆன அவள் தோழி தன் வாழ்வில் எவ்வளவு தெளிவாக தன் கேரியரை முடிவெடுத்து பயணிக்கிறாள் என்பதையும்,வர்ஷினி எப்படி தடம் மாறுகிறாள் என்பதையும் நம் மனம் ஒப்பிட்டு பார்க்கிறது!சந்தர்ப்பமும் சூழ் நிலையும் மட்டும் யாரையும் படுகுழியில் தள்ளுவதில்லை,நாம் மனம் தடுமாறாமல் இருந்தால் யாரும் நம்மை எந்த நிலையிலும் கெடுக்க முடியாது.வர்ஷினியின் கல்லூரி தோழியின் ப்ரெயின்வாஷ் பேச்சுக்கள் தேன் தடவிய கொடிய விஷம்!மிகவும் சரி என நினைக்க கூடிய விதத்தில் அவளின் பேச்சுகள்...ஒருவனுக்கு ஒருத்திங்கிற கான்செப்ட்டெல்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு,இன்னிக்கு யாரும் அப்படி இல்ல,இந்த காலத்துல யாரு லவ் பண்ணியவங்கள கல்யாணம் பண்ணிக்குறாங்க?எல்லாம் முடிஞ்சதும் கை கழுவிட்டு வேற ஒருத்தங்களை கட்டிகிட்டு குடும்பம் நடத்துவாங்க,அவங்களை இந்த சமூகம் ஒழுக்கசீலராதான் பார்க்கும்.இது தப்புன்னா அதுவும் தப்புதான்.ஒருத்தன் கூட போனா என்ன பல பேர் கூட போனா என்ன எல்லாம் ஒண்ணுதான்!ஒருத்தனை கல்யாணம் பண்ணி வாழ்க்கை நடத்தி அது போரடிச்சா பிள்ளைகளுக்காக வாழ்வியா?இருக்கிறது ஒரு வாழ்க்கை,அதை நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும்!ஒரு டிரெஸ்ஸை ஒரு முறைதான் போடணும்,அனாதை ஆசிரமங்களில் இருக்கவங்களுக்கு நம்மை மாதிரி ஆட்கள் தானே கருணை காட்டணும்!

முதல் முறை விழுந்தவள் தொடர்ந்து தன் இஷ்டப்படி இருக்க சாதனா மன நல மருத்துவரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் ஆரம்பிக்கிறது!நிர்மலா என்னும் மருத்துவரின் அணுகு முறை அபாரம்!படிப்படியான மருத்துவமுறைகள் வியப்பை அளிக்கிறது!இவ்வளவு படி நிலைகளா?நல்லா ஹோம் வர்க் செய்து இருக்காங்க கதையில்!பாராட்டுக்கள்!பெற்றோர் எந்த இடத்தில் தவறுகிறார்கள் என்பதிலிருந்து,அவள் மனதில் இருபத்து மூன்று வயதில் படிப்பை விடக்கூடாது என்பதிலிருந்து பிற் கால வாழ்க்கை வரை பொறுமையாக எடுத்து சொல்வது அருமை!நல்ல ஒரு வித்தியாசமான கதைக்களம்!
அழகான ஆழ்ந்த விமர்சனம் சகோதரி.. மிக்க நன்றிகள். இந்த கதைக்களத்தை எடுக்கும் போது இருந்த தயக்கங்களை எல்லாம் தகர்த்தெரிக்கிறது உங்களின் வரவேற்புற்கு மத்தியில். தேங்க் யூ ஸோ மச் சிஸ்.
 

lakshmi

Active member
Staff member
#18
அருமையான கதை, சமுதாய சிந்தனையில் எழுதப்பட்ட கதை அரும நடைமுறையில் எத்தனை வர்ஷினிக்கள் இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை,அவர்களுக்கெல்லாம் வர்ஷினிக்கு கிடைத்த மாதிரி தோழி அப்பா அம்மா கிடைக்க வேண்டுமே.