உயிரியர்க்கையாம் காதல் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

உயிரியக்கையாம் காதல் என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார் சாரா மோகன்...
 
#2
உயிரியற்கையாம் காதல்

காதல் - 01

மாவிலைத் தோரணங்கள், வாசல் முன் தொங்கிய குழை வாழை, பந்தற்கால் என அந்த இல்லத்தில் நடைபெற்ற திருமணத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில் இருந்த அந்த இல்லம்.

உள்ளே மணமகன், மணப்பெண் வீட்டினரின் சில முக்கிய உறவுகள் விருந்துண்டு கொண்டிருக்க ஒரு அறையில் நேற்று செல்வி. கவிநிலாவாக இருந்து இன்று திருமதி. அர்ஜீனாக மாறியவளுக்கு அலங்கார ஒப்பனைகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன அவளின் முதலிரவுக்காக.

தோழியர் பட்டாளங்கள் அவளை சீண்டிக் கொண்டிருக்க அவளின் முகத்திலோ சந்தோசம் என்ற ஒன்றே காணாமல் சிந்தனையும் குழப்ப ரேகைகளுமே அவள் முகத்தில் பிரதிபலித்தன.

அவளின் தோழி ஒருத்தி "என்ன கவி டல்லா இருக்க... இன்னும் உன் கொள்கைகள் தான் மனசுக்குள்ள ஓடுதா?.." என வினவினாள். அவள் அதற்கு பதிலேதும் கூறாமல் அவளை ஒரு பார்வைப் பார்த்தவள் பழைய நினைவுகளுக்குள் மூழ்கினாள் கவிநிலா.

அவள் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் போது அவளின் வகுப்பு தோழி ஒருத்தி தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கூறி அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க "லவ் மேரேஜ்ஜா டி ரம்யா?" என்றாள் கவிநிலா.

"அப்டிலாம் இல்ல டி, அரேன்ஜ் மேரேஜ் தான்... மாப்பிள்ளை தூரத்து சொந்தம், அவங்க வீட்டுல இப்பவே மேரேஜ் பண்ணனும்னு கட்டாயப்படுத்துனாங்க... அதான் உடனே பிக்ஸ் ஆகிருச்சு" என்றாள் ரம்யா.

"ஓ......." என இழுத்தவள் "அவங்கள உனக்கு எத்தனை மாசமா தெரியும் ரம்யா" என இவள் வினவ "டூ மந்த்ஸ் டா கவி, ஏன் கவி?" என்றாள் அவள்.

"இரண்டு மாசம் மட்டுமே தெரிஞ்சவரோட உன் வாழ்க்கையே பகிர்ந்துக்க போறீல?" என்க அவளோ அவளின் கூற்று புரியாமல் திருதிருவென முழித்தாள்.

"என்ன டி இது...." என அவளின் தோழி ஒருத்தி அவளைப் பார்த்து வினவ "இல்ல டி, எனக்கு இந்த லாஜிக்கே புரியல... எப்படி ஒருத்தர வீட்டுல பிக்ஸ் பண்ணி இவர தான் நீ கட்டிக்க போற.. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்னு சொன்னவுடனே தலையாட்ட முடியுது?" என்றாள் கவிநிலா.

"இதென்ன டி புதுசா கேட்கிற... காலங்காலமா நம்ம பின்பற்றிகிட்டு வர்றது தான, இப்பவும் தன் பிள்ளைங்க காதல்னு வந்து நின்னோனே எத்தனை பேரண்ட்ஸ் டி ஒத்துக்கிறாங்க, ஏதோ ஒருசில காதல் தான் கல்யாணத்துல முடியுது... அரேன்ஜ் மேரேஜ் ஒன்னும் தப்பில்லயே!" என்றாள் அவளின் தோழி ஆர்த்தி.

"நான் இங்க தப்பு, சரினு பேச வரல டி.. ஒருத்தர பார்த்து அவர காதலிச்சு அந்த காதல உணராம வீட்டுல சொன்னாங்க அப்டிங்கிறதுக்காக அவர பிடிக்கலைனாலும் சரினு தலையாட்டி அவர் மேல கற்பனையா ஒரு காதல வளர்த்துக்கிட்டு... சத்தியமா இந்த லாஜிக் எனக்கு புரியவே இல்ல, கல்யாணங்கிறது என்ன விளையாட்டு பொருளா? இல்ல பண்டமாற்று முறையா?.. இது ரெண்டு பேர் மனசு சம்பந்தபட்ட விசயம், ஆனால் இங்க குடும்பத்துக்காக ஒத்துக்கிட்டு பொண்ணு அழகா இருக்காளா? எவ்ளோ நகை போடறாங்க!.. பையன் ஹேண்டசமா இருக்கானா? இல்ல நல்ல செட்டில்டு பேமிலியானு பார்த்திட்டு ஓ.கே சொல்லி எப்டி அவங்க குடும்ப வாழ்க்கைக்குள்ள இணைய முடியும்?.. இங்க காதல்னு ஒன்னு இல்லவே இல்ல, ஜஸ்ட் ஒரு கமிட்மெண்ட்ஸ் தான்... பணம் வாழ்க்கைக்கு தேவை தான், ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லையே... நம்ம இறுதி மூச்சு வரை நம்மளோட வாழ போற ஒருத்தர இப்டி தான் முடிவு பண்றதா?" என்றாள் கவிநிலா.
இவளின் வாதத்தில் பாவம் ரம்யா தான் ரொம்ப குழம்பி போனது மட்டுமில்லாமல் அவளை பாவமாக பார்க்க அவளோ "நான் உன்னை தப்பா சொல்லல ரம்யா... வீட்டுக்காக கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லிட்ட சரி, அவர உனக்கு இந்த இரண்டு மாசமா தான் தெரியும், இன்னும் கல்யாணத்துக்கு பதினைஞ்சு நாள் தான் டைம் இருக்கு, அதுக்குள்ள நீ அவர புரிஞ்சு அவரு உன்னை புரிஞ்சு... ரொம்ப கஷ்டம் தான, அப்டி இருக்கும் போது இன்னும் பதினைஞ்சே நாள்ள அவர பத்தி முழுசா தெரியாம அவரோட உன் வாழ்க்கைய பகிர்ந்துக்க போற.. உன் பேரண்ட்ஸ்காக சம்மதம் சொன்ன சரி, அதுக்கப்புறம் உங்களுக்குள்ளான உறவுகள கூட உங்க குடும்பத்துக்காக தான கணவன், மனைவியா இருப்பீங்க, அப்புறம் உங்க குழந்தைகளுக்காக லைப்.. இப்டியே வாழ்க்கை முடிஞ்சுருமே, இதுல காதல்னு ஒன்னு இல்லவே இல்ல... ஜஸ்ட் கமிட்மெண்ட் மாதிரி தோணல, உன் வீட்டுக்காக நீயும் அவரு பேமிலிக்காக அவரும் கல்யாணங்கிற பந்தத்துல இணைய போறீங்க, அப்டி இருக்கும் போது இந்த இடைப்பட்ட காலத்துல கல்யாண வேலைகள் தான் தலைக்கு மேல இருக்கும், அதுல உங்கனால ஒழுங்கா கூட பேசிக்க முடியாது, அடுத்து கல்யாணம் அடுத்த ஒரே மாசத்துல கர்ப்பம், அடுத்து குழந்தைகளுக்காக வாழ்றது இப்டியே எந்தவித லாஜிக்கும் இல்லாம ஒரு கமிட்மெண்டா போகிரும்ல...." என அவளையும் சேர்த்து குழப்பினாள்.

கவிநிலாவின் தோழிகளோ "இங்க பாரு கவி, உங்க வீட்டுல உன் ஆசைக்காக நீ ஆசைப்பட்டவன கல்யாணம் பண்ண ஒத்துக்கலாம்..... அதே மாதிரி எல்லாருக்கும் அமையும்னு சொல்ல முடியாதுல்ல... கல்யாண கனவுல இருக்கிறவள ரொம்ப குழப்பாத டி, அவ என்ஜாய் பண்ணட்டும்" என்றனர்.

"நான் இப்போ லவ் மேரேஜ், அரேன்ஜ் மேரேஜ் பத்தி ஆர்கியூ பண்ணவோ இல்ல அவளோ குழப்பவோ சொல்லல டி, லவ்வே இல்லாம எப்படி ஒருத்தவங்க தன் வாழ்க்கைய ஆரம்பிக்க முடியும்?, இந்த இடத்துல நம்ம உடம்ப மட்டும் இல்ல மனசையும் தனக்கு வாழ்க்கை முழுக்க வர்றவங்க கூட பகிர்ந்துக்க போறோம், ஜஸ்ட் பேமிலிகாக ஒரு கமிட்மெண்ட்ஸ் இதெல்லாம் எப்டினு தான் எனக்கு புரியல!" என்றாள் கவிநிலா.

"ரம்யா நீ மத்தவங்களுக்கு பத்திரிக்கை குடு டி, இவக்கிட்ட இன்னும் கொஞ்சம் நேரம் நின்ன அப்புறம் உன் கல்யாணத்த உன்னையவே நிறுத்த வச்சுருவா..." என அவளின் தோழிகள் அவளை அங்கிருந்து கிளப்பினர்.
அவள் நகர்ந்தவுடன் "அவ இப்போ எனக்கு அவரு மேல லவ் இல்லைனா சொன்னா, அப்பா அம்மா பார்த்தாங்க எனக்கும் பிடிச்சுருந்துது, அதான் ஓ.கே சொன்னேனு சொன்னாள்ள டி... இதுல அவளோட முழு விருப்பம் இருக்கே" என்றாள் ஆர்த்தி.

"இல்ல டி, இது அவ பேமிலிக்காக அவளே அவ மனசுல அவர ஏத்துக்கிட்டதா நினைக்கிற பிரம்மை டி... இவரு தான் வாழ்க்கைனு அவ மனசுல பிக்ஸ் ஆகிருச்சு, அதான் அவ அப்டி சொல்றா..." என்றாள் கவிநிலா.

"என்னமோ போ டி, நீ மேரேஜ் பண்ணும் போது காதலிச்சே கல்யாணம் பண்ணிக்கோ டி... இப்போ எங்கள ஆள விடு" என அவர்கள் கையெடுத்து கும்பிடாத குறையாய் கேட்டனர்.

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை உலுக்கினர் தோழிகள். "என்ன டி இன்னும் அதே கல்யாண கமிட்மெண்ட்ஸ் பத்தி குழப்பமா?.... அதெல்லாம் யோசிச்சு உன் மனச தேவையில்லாம குழப்பிக்காத டி, ஒழுங்கா அண்ணா கூட சந்தோசமா வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ற வழிய பாரு...." என்றனர்.

அவள் நினைத்தது ஒன்று, ஆனால் நடந்ததோ வேறொன்று. அவள் கல்லூரி படிப்பு முடித்தவுடன் பல வரன்கள் வர அவளோ தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என மறுத்தாள். அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது தான் ஒருவரை முழு மனதார காதலித்து அவருடன் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து வாழ்நாள் முழுக்க இருவரும் காதலில் திளைக்க வேண்டும், அங்கு மனமும் ஒன்றோடு ஒன்று சேர வேண்டும் என எண்ணுபவள். ஆனால் அவள் மனதில் இதுவரை காதல் என்ற ஒன்றே முளைக்கவில்லை.
அவள் மனதிற்கு பிடித்த ஒருவன் இன்னும் அவள் வாழ்வில் வரவில்லை போலும்.

ஆனால் விதியோ அவள் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது ஜாதகம் என்ற ரீதியில். ஆம் அவளுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதாக அவளின் குடும்ப ஜோதிடர் கூற அவளின் பெற்றோர் இதுநாள் வரை வந்த வரன்களை தட்டி கழித்ததற்காக வருத்தப்பட்டனர்.

ஏனெனில் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இணைத்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. ஆனால் அதற்கு ஏற்ற செவ்வாய் தோஷ வரன் கிடைப்பது குதிரை கொம்பாக தான் இருக்கும்.

அந்த நேரத்தில் வந்த அர்ஜீனனின் ஜாதகம் செவ்வாய் தோஷத்துடன் இருக்க அவனின் குடும்ப பிண்ணனியும் கவிநிலாவின் பெற்றோருக்கு திருப்திகரமாக இருந்தது.

அவன் ஜாதகத்தையும் கவிநிலாவின் ஜாதகத்தையும் சேர்த்து பார்த்தனர். ஜோசியரும் பத்து பொருத்தங்களும் உள்ளது என அவர்கள் நெஞ்சில் பாலை வார்க்க உடனே நிச்சயம் பேசப்பட்டன. அந்த இடத்தில் கவிநிலாவின் வாதங்கள் இழலுக்கிறைத்த நீராகின.

திருமணமும் உடனே முடிவானது. அதனை கேள்வியுற்ற கவியோ கொதித்தெழுந்தாள். "என்னப்பா இது, ஜாகதம் பார்த்தீங்க சரி.. ஆனால் ஒரே மாசத்துல கல்யாணத்த பிக்ஸ் பண்ணி இருக்கீங்க., என்ன தான் உங்க மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?., நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க, எங்கையாவது போய்றேன்..." என்றவளின் கண்கள் கலங்கி இருக்க அதனைக் கண்ட அவளின் தந்தைக்கும் வருத்தம் உண்டானது

"நாங்களும் உடனே கல்யாணத்த வைக்கணும்னு நினைக்கலடா கவி, மாப்பிள்ளைக்கு வர்ற பங்குனி வந்தா இருபத்தெட்டு வயசு ஆக போகுதாம், இருபத்தியேழுலயே கல்யாணம் பண்ணனும்னு ஆசைப் படறாங்க அவங்க வீட்டுல, அதான் தை மாசமே கல்யாணம் வச்சுக்கலாம்னு பேசி முடிச்சுட்டோம்..." என்றார் கவிநிலாவின் தந்தை.

"ஊருல உங்களுக்கு வேற மாப்பிள்ளை கிடைக்கலயாப்பா?... இவன் ஒருத்தன் தான் இருக்கானா?" என கோபம் முழுவதும் அர்ஜீன் பக்கம் திரும்ப "வாய்லயே போட்டேனு வையு, என்ன டி பேச்சு இது... மாப்பிள்ளைய போய் அவன் இவனு பேசுற, இங்க பாரு உன் ஜாதகத்துல செவ்வாய் தோஷம்... செவ்வாய் தோஷம் இருந்தா அந்த ஜாகத்துக்கு ஏத்த மாப்பிள்ளை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம், அந்த தம்பியோட ஜாதகமும் உன் ஜாதகமும் பொருந்தி போச்சு, அது மட்டுமில்லாம அந்த பையனுக்கு என்ன கொறைச்சல், நல்ல பையன், நல்ல குடும்பம்.. இப்போ உன் வீம்புக்காக இந்த வரன விட்டுட்டா காலம் போன கடைசில வரன் தேடி அலையணும்" என்றார் கவிநிலாவின் தாய்.

"நல்ல பையன், நல்ல குடும்பம்... ஆனால் காதல்... அது இல்லாம எப்டி..." என மனதினுள் நினைத்தவள், "அதுக்காக ஒரே மாசத்துல கல்யாணத்த முடிவு பண்ணிருவீங்களாமா?.. அவர பத்தி எனக்கு என்ன தெரியும்?.. இல்ல அவருக்கு தான் என்னைப் பத்தி என்ன தெரியும்?.. காலம் பூரா ஒன்னு சேர்ந்து வாழ போறது நாங்க, இந்த ஜாதகத்த காரணம் காட்டி என் வாழ்க்கைல விளையாடாதீங்க" என்றாள் கவிநிலா.
 
#3
"என்னத்த பெருசா தெரிஞ்சுக்க போற டி, அதான் இந்த ஒரு மாசம் டைம் இருக்குல்ல, அந்த தம்பிகிட்ட பேசி பழகிக்கோ... உன் அப்பாவ நான்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்ததே இல்ல, தாலி கட்றப்போ கூட அரைகுறையா தான் பார்த்தேன், ஏன் நாங்க ரெண்டு பேரும் சந்தோசமா இல்லயா?.." என்ற தன் தாயிடம் "அது அந்த காலம் மா.. தாத்தா கை நீட்டுன மாப்பிள்ளைக்கு நீங்க ஒத்துக்கிட்டீங்கனா அது அந்த காலம்.. என்னால அந்த மாதிரிலாம் ஏத்துக்க முடியாது, அப்பவும் இப்பவும் ஒன்னா மா?.. ஏன் என் மனச புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க?" என்றாள் கவிநிலா கோபமாய்.

"ஏன் டி, யாரையாவது காதலிக்கிறியா?..." என தன் அன்னையின் கேள்விக்கு "ஏன்ம்மா? கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அதுக்கு காதலிச்சுருந்தா மட்டும் தானா.. அப்டி ஒருவேள காதலிச்சுருந்தானும் உங்கக்கிட்ட இவர் தான் நான் லவ் பண்ற பையனு கூட்டிட்டு வந்து காமிச்சுருப்பனே..." என்றாள் கவிநிலா.

"அப்பறம் என்ன டி பிரச்சனை உனக்கு?.. கல்யாணத்துக்கு ஆயிரத்தெட்டு வேல தலைக்கு மேல கெடக்கு, உன்கிட்ட பேசி என்னால புரிய வைக்க முடியாது.." என்றவர் தன் வேலைகளைப் பார்க்க போக தனர அன்னையிடம் பேசி இனி புரயோஜனம் இல்லை என தெளிவாக புரிந்து கொண்டவள் அதன்பின் எதுவும் பேசவில்லை.

அவள் பேசாததை யார் கவனித்தார்கள்?... அவளின் தந்தையோ தங்களின் நிலையை அவளிடம் எப்படி எடுத்துரைப்பது என தெரியாமல் அமைதியானார்.

திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட அர்ஜீனோ ஓரிரு முறை மட்டுமே அவளை போனில் தொடர்பு கொண்டான். ஆனால் இவள் அவனின் கேள்விகளுக்கு மட்டுமே இயந்திரகதியாக பதிலளிக்க அதன்பின் அவனும் திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்ததால் அவளிடம் பேச முடியவில்லை.

ஒருவழியாக திருமண நாளும் வந்தன. அவளை சுற்றி என்ன நடக்கிறது என கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. தன் வாழ்க்கை இந்த அத்தியாத்தோடு முடிந்து விட்டது என்றே நினைத்தாள். தன் கனவுகளுக்கு ஜாகதம், வயது எல்லாம் தடைகளாக இருக்கும் என அவள் கனவில் கூட நினைத்திராத நேரத்தில் அவள் வாழ்வின் முக்கிய அங்கமான திருமணம் இதோ முடிந்தே விட்டது. அவளின் சங்கு கழுத்தில் அர்ஜீனனின் கரங்களால் மஞ்சள் நாண் மூன்று முடுச்சிடப்பட்டது.

அவள் காதல் கனவை சிதைத்ததோடு மட்டுமில்லாமல் அவளின் வாழ்வும் அவளுக்கு கேள்விக்குறியாக மனதில் நின்றது. ஆனால் விதியோ அவள் வாழ்வில் தன் விளையாட்டை ஆரம்பித்தது......
 
#4
காதல் - 02

திருமண சடங்குகள், போட்டோ ஸூட் என அனைத்திலும் அவள் கடமைக்காக ஏற்றுக் கொள்ள அர்ஜீனும் திருமண அலைச்சலில் அவளை ஒழுங்காக கவனிக்கவில்லை.

இதோ இன்னும் சில நொடிகளில் தன் வாழ்க்கையை யாரென்றே தெரியாத ஒருவனுடன் பங்கு போட போவதை நினைத்து கவிநிலாவின் உள்ளம் உலைகளமானது. அவளின் நாத்தனார் அவள் கையில் பால் சொம்பை கொடுத்து "இதெல்லாம் சம்பிரதாயம் கவி, அதுக்காக இதுல இருக்கிற பால புல்லா குடிச்சா நைட் நல்லா தூக்கம் தான் வரும்...." என கண்ணடித்தவர் "அடுத்த மூணு மாசத்துல எனக்கு மருமக புள்ளைக்கு ஏற்பாடு பண்ணிறனும், சரியா...." என்க அவளோ இன்னும் கொதித்தாள்.

"அவ்ளோ தானா, இனி கடமைக்காக அவரோட மனைவியா, இந்த வீட்டோட மருமகளா இருக்கணும், இது தான் இனிமேல் என் வாழ்க்கையா?... அதுக்கப்புறம் குழந்தைகளுக்காக...." என நினைக்கும் போதே தன் ஒட்டுமொத்த வாழ்வும் இன்றோடு முடிந்து விட்டதாக நினைத்தாள்.

அவர்களின் அறைக்கு அருகில் கொண்டு வந்த விட்ட அர்ஜீனனின் சகோதரி "வாழ்த்துக்கள் கவி...." என அவள் உள்ளே செல்லும் வரை நின்றிருந்தவர் அவள் உள்ளே சென்று அறையை சாற்றிய பின் அங்கிருந்து கிளம்பினார்.

கவிநிலாவோ பல குழப்பங்களோடு உள்ளே நுழைய அந்த அறை முழுவதும் பூ அலங்காரத்துடன் மணமணக்க அங்கு அர்ஜீன் இல்லாததைக் கண்டு அவள் விழிகள் அவனைத் தேடி அலைபாய்ந்தது.

அங்கிருந்த டீப்பாயின் மேல் பால் சொம்பை வைத்தவள் திரும்ப அதற்கு நேரெதிரே இருந்த பால்கனியில் இருந்து கைகளை கட்டிய வண்ணம் அர்ஜீன் அவளை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

அர்ஜூன் அழகில் குறைந்தவனில்லை. கோபியரை மயக்கும் கண்ணனாக தான் இருந்தான். ஆனால் அவளுக்கு அந்த அழகை விட காதல் என்ற ஒன்றே பெரிதாகப்பட்டது. ஆனாலும் ஒரு நிமிடம் அவளின் மனம் அவன் அழகை ரசிக்கத் தான் செய்தது.

அவள் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க அவளின் தவிப்பை புரிந்து கொண்டவன் "இங்க வா நிலா, சுகமா காத்து வருது, கொஞ்சம் நேரம் இந்த காத்த அனுபவிக்கலாம்" என்றான் அர்ஜூன்.

அவளும் பால்கனிக்கு வர அவனோ "நிலா ரொம்ப அழகா இருக்குல்ல" என்க அவளோ அவனை பார்க்க அவன் "அந்த நிலாவ சொன்னேன்" என வானத்தில் தெரிந்த நிலவை காட்டினாலும் அவன் கண்கள் அவளை தான் ரசித்தன. அவள் அவன் தன்னை தான் ரசிக்கிறான் என்பது புரிந்தாலும் அவளால் அதனை ரசிக்க முடியவில்லை.

ஊதக்காற்று இருவரின் தேகத்தையும் குளிரூட்ட "பனி அதிகமாகிருச்சுல்ல, சரி வா உள்ள போகலாம்" என அவன் அறைக்குள் செல்ல அவளும் அவன் பின்னாலே சென்றாள். அவன் கட்டிலில் அமர அவள் தயங்க "ஹே உட்காரு நிலா... எவ்ளோ நேரம் நின்னுக்கிட்டே இருப்ப" என்க அவளோ கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.

அர்ஜூன் பேசத் தொடங்கினான். "என்னை உனக்கு பிடிச்சுருக்கா நிலா?" என்க அந்த கேள்வி அவனுக்கே அபத்தமாக தோன்றினாலும் கேட்க தோன்றியதைக் கேட்டான். அவளோ "இத இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு கேட்ருக்கலாம்ல" என மனதினுள் தான் கூறிக் கொண்டாள். அவளின் எண்ணவோட்டத்தை அறிந்தவன் போல் பேசத் தொடங்கினான் அர்ஜீன்.

"இத இப்போ கேட்க கூடாது தான், ஆனால் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இதப் பத்தி பேச நேரம் கிடைக்கல, உன்கிட்ட கூட என்னால ஒழுங்கா பேச முடியல... ஸாரி நிலா, அப்பாவால எல்லா வேலையும் செய்ய முடியாது, சுகர் பேஷண்ட், அவரால அதிகம் வெளி வேலைகளை பார்க்க முடியல, அதான் எல்லா வேலையும் நானே பார்க்க வேண்டிய சூழ்நிலை... உன்கூட என்னால டைம் ஸ்பென்ட் பண்ணக்கூட முடியல.... உனக்கும் பல ஆசைகள் இருந்திருக்கும்ல" என்றான் அர்ஜூன்.

"என் கனவு, ஆசை எல்லாம் தான் மொத்தமா அழிச்சுட்டீங்களே.. இப்போ கேட்டு என்ன புரயோஜனம்" என நினைத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க "நிலா...." என்றான் அர்ஜூன்.

"ம்....." என அவள் அவன் முகம் பார்க்க "நெர்வஸ்ஸா இருக்கனு நினைக்கிறேன், என்னை உன் பிரண்டா நினைச்சுக்கோயேன், கொஞ்சம் ப்ரியா பீல் பண்ணு...." என்றான் அர்ஜூன்.

"உன்னைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது, ஸோ உன்னை பத்தி கொஞ்சம் சொல்லு... உன் ஆசைகள பத்தி சொல்லு, நானும் தெரிஞ்சுக்கிறேன்" என்றான் அவன்.

அவளுக்கோ "என்னோட ஆசைகள் மொத்தத்தையும் காலைல எரிஞ்ச அக்னி குண்டத்துலயே எரிச்சுட்டீங்களே, அப்புறம் என்ன ஆசை..." என்றிருந்தது.

"அதுவந்து...." என அவள் தடுமாற "இன்னும் உன்னால என்னை உன் கணவனா ஏத்துக்க முடியலயா நிலா?" என அவன் நேரடியாக விசயத்திற்கு வர அவள் தலையோ இருபுறமும் தானாக ஆடியது.

"இத ஆமானு எடுத்துக்கவா, இல்லைனு எடுத்துக்கவா?" என அர்ஜூன் தலைசாந்து அவளைப் பார்த்து கூற அவள் திருதிருவென முழித்தாள்.

"நிலா இப்போ என்னை உன் கணவனா நினைக்காம உன் பிரண்டா நினைச்சுக்கோயேன்... உனக்கு என்ன என்ன உன் மனசுல தோணுதோ அத எல்லாம் ஒரு பிரண்டா ஷேர் பண்ணு, நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்" என்றான் அர்ஜூன்.

அவள் எதிர்ப்பார்த்து வந்தது அவளிடம் அவன் கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொள்வான் என்று தான். ஆனால் இங்கோ அவன் தன்னை நண்பனாக நினைக்க சொன்னது அவளுள் அவன் மேல் ஒருவித நம்பிக்கை உணர்வு ஏற்பட்டது.

இதற்காகவே காத்திருந்தாள் போல், மடைத்திறந்த வெள்ளமாய் தன் மனக்குமறலை கொட்ட ஆரம்பித்தாள்.

அவனை என்ன கூறி அழைப்பது என முதலில் தடுமாற "ஏன் நிலா?" என்றான். "அதுவந்து உங்கள நான் எப்டி கூப்பிடறது?..." என ஒருவழியாக கேட்க வந்ததை கேட்டு முடிக்க அவனோ யோசிப்பது போல் பாவனை செய்தான்.

"எப்டி வேணும்னாலும் கூப்பிடலாம் நிலா.. உன் இஷ்டம், பேர் சொல்லி கூப்பிட்டாலும் எனக்கு ஓ.கே தான்" என்க அவள் தயங்கினாள்.

"இதெல்லாம் இப்போ சகஜம் தான... உனக்கு எது கம்பர்டபிளா இருக்கோ அப்டியே கூப்பிடு நிலா.." என்றான் அர்ஜூன்.

"ம்...." என அவள் தலையாட்ட "பாரு நான் கேட்ட கேள்விய மறந்துட்டேன்... சரி இப்போ சொல்லு" என அவன் அவளை ஆர்வமாக பார்த்தான்.

"எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பமில்ல" என்க அவன் அதிர்ச்சியாகுவான் என எதிர்ப்பார்த்து அவனைப் பார்க்க அவனோ "அப்போ உனக்கு அந்த அர்ஜீன் பைய கட்டாய தாலி கட்டிட்டானா என்ன, இப்பவே சொல்லு அவன உண்டு இல்லைனு பண்ணிறட்டா..." என்றான். ஆனால் மனதினுள் அவனுக்கு ஒரு ஓரம் வருத்தம் இருக்கத் தான் செய்தது. அவளை பார்த்த நொடியில் இருந்து அவள் மேல் காதல் வசப்பட்டவன் ஆயிற்றே.

அவளுக்கு தன் மேல் காதல் என்ற அளவு இல்லை என்றாலும் பிடித்தாவது இருக்கும் என நம்பினான். ஆனால் அவளோ மொத்தமாக கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினால் என்ன செய்வான். தன் எதிர்பார்ப்பை மறைத்தவன் சாதாரணமாக கேட்டான்.

அவள் அவனை ஆச்சரியத்துடன் பார்க்க "இப்போ நான் உன் பிரண்ட், எனக்கு என் பிரண்ட்டோட ஹேப்பி தான் முக்கியம்...." என்க அவள் உதடுகள் தானாக "தேங்க்ஸ்" என அசைந்தன. "பிரண்ட்ஸ்குள்ள நோ தேங்க்ஸ்... அப்புறம்...." என கதை கேட்க உட்கார அவளும் தன் கனவுகளையும் ஆசைகளையும் கூற ஆரம்பித்தாள்.

"காதல்ல ஒரு ஒரு விசயத்தையும் நான் முழுசா அனுபவிக்கணும், கொஞ்சம் நாள் அவர ரொம்ப ரொம்ப காதலிக்கணும்... அதுக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்" என்க "அத நான் வந்து கெடுத்துட்டனோ" என்றான் அர்ஜூன். அவன் முகத்தில் ஏதோ ஒரு ஏமாற்றம் இருந்ததை அவளும் உணர்ந்தாள்.

"அப்டிலாம் இல்ல... காதல்ல ஒவ்வொன்னையும் நான் அனுபவிக்கணும்னு ஆசைப்பட்டேன், அவ்ளோ தான்" என தயங்க "சரி மேல சொல்லு" என்றான் அர்ஜூன்.

"காதல்ல முதல் அணைப்பு, முதல் முத்தம், முதல் சீண்டல்கள், தீண்டல்கள் எல்லாமே அத அனுபவிச்சு வாழ்க்கை முழுக்க அந்த அனுபவத்த நினைக்கும் போது உள்ளுக்குள்ள ஒரு பரவசம் வரணும்....." என அவள் மோன நிலையில் இருக்க "ஏன் இதுலாம் அரேன்ஜ் மேரேஜ்ல நடக்காதா? நிலா.." என்றான் அர்ஜூன்.

"இருக்கும் தான்,...." என அவள் அடுத்து கூற தயங்கியவள் பின் "ஆனால் அதெல்லாமே ஒரே நாள்ள முதலிரவுங்கிற பேர்ல தான்..... முதல் தீண்டல், முதல் முத்தம்னு இங்க எதுவுமே அனுபவிக்க முடியாது... எல்லாம் ஒரே நாள்ள, அதுனால தான் எனக்கு அரேன்ஜ் மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல...." என்றாள் கவிநிலா.

அவளின் கூற்றில் அவளுடைய எண்ணவோட்டங்களை புரிந்து கொண்டான் அர்ஜீன்.

"நீ சொல்றதும் ஒரு விதத்துல சரி தான்..." என்க,

அவள் மேலும் தொடர்ந்தாள். "காதல்ல முதல்ல மனசு தான் பகிரப்படும், ஆனால் இங்க...." என அவள் தயங்க "அவங்க தான் வாழ்க்கைனு ஆனதால அவங்க கூட தன்னை முழுசா பகிர்ந்துக்கறாங்க, இதுல என்ன தப்பு?" என்றான் அர்ஜூன்.

"தப்புனு சொல்லல, ஆனா ஒருத்தர பத்தி ஒன்னுமே தெரியாம குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணி அவங்க கூட எப்படி தன்னையே பகிர்ந்துக்க முடியும், அந்த இடத்துல அந்த பொண்ணோட கனவு, ஆசைகள் எல்லாமே பறி போகுதுல்ல" என்க அவளின் மனநிலையை அவன் நன்றாக புரிந்து கொண்டான் அர்ஜீன்.

"ஏன் அரேன்ஜ் மேரேஜ் பண்ணிட்டு அதுக்கப்புறம் ரெண்டு பேரும் லவ் பண்ணி நீ சொன்ன முதல் தீண்டல், சீண்டல் எல்லாம் அனுபவிக்கலாமே..." என்றான். "ஆனால் இங்க இவங்க தான் வாழ்க்கைனு ஆனதால வந்த கட்டாய காதல் தான, அதுல எந்தவொரு பீலிங்ஸ்ம் இருக்காதே?.. ஏதோ கடமைக்காக காதலிக்கிற மாதிரி இருக்காதா?.." என்றாள் கவிநிலா.

"உன் பீலிங்க்ஸ் புரியுது நிலா, ரொம்ப நேரமாச்சு, படுக்கலாம்... காலைல குலதெய்வம் கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க, நீயும் டயர்டா இருப்பீல...." என்க அவன் படுக்கலாம் என்றவுடனே அவள் முகம் பீதியில் உறைய "உன் அனுமதி இல்லாம எப்பவும் நான் உன்னை தொட மாட்டேன், என்னை உன் கணவனா நினைக்காம ஒரு நண்பனா ஏத்துக்குவியா நிலா..." என்றான் அர்ஜூன் கண்களில் ஒரு எதிர்ப்பார்ப்புடன்.

"ம்....." என அவள் தலை தானாக ஆட "பிரண்ட்ஸ்" என அவன் கை நீட்ட அவளும் கை குலுக்கினாள். "சரி நீ பெட்ல படு, நான் ஷோபால படுத்துகிறேன்" என அவன் பெட்ஷீட் தலையணையை எடுக்க அந்த ஷோபாவை பார்த்தாள் கவிநிலா. அது கண்டிப்பாக அர்ஜீனின் உயரத்துக்கு பாதி தான் இருக்கும். அதில் இரவு முழுவதும் எப்படி உறங்குவான் என நினைத்தவள் "பெட்லயே படுத்துக்கோங்க... எனக்கு பிராப்ளம் இல்ல" என்க அவன் அவளை ஆச்சரியமாக பார்க்க அவளோ கட்டிலின் மறுபுறம் சென்று இடையே தலையணையை வைத்தவள் "படுத்துக்கோங்க" என்றாள். அவன் இதழ்கள் அவளின் செயலில் புன்னகையால் மலர அவளின் மறுபுறம் படுத்து கொண்டான் அர்ஜீன்...
 
#5
காதல் - 03

இருவருக்கும் தலையணை அணையாக தடுத்திருக்க படுத்த உடனே உறங்கி போனாள் கவிநிலா. ஆனால் அர்ஜூனுக்கு தான் உறக்கம் வராமல் தவித்தான். உறங்கும் கவிநிலாவையே ரசித்துக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் அவள் கால் அந்த தலையணையை தாண்டி அவன்மேல் படர்ந்தது.

"குழந்தை மாதிரி தூங்கறத பாரு" என்றவன் தன்பக்கம் வந்த அவள் கால்களை அவள் பக்கம் நகர்த்தியவன் உறங்க ஆரம்பிக்க அவளோ உறக்கத்தில் அந்த தலையணை எல்லாம் தாண்டி அவன் அருகில் படுத்திருந்தாள்.

அவள் கரங்கள் அவன் நெஞ்சின் மேல் இருக்க அவள் கால்களோ அவன் மேல இருந்தது. "மேடம் கை, கால்லாம் சொன்ன பேச்சு கேட்காது போல" என நினைத்தவன் விலக்க விரும்பாமல் உறங்க ஆரம்பித்தான். காலையில் அவளுக்கு முன்பே எழுந்து அவளை நேராக படுக்க வைத்தவன் தானும் மறுபுறம் உறங்குவது போல் நடிக்க கண்விழித்த அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். "அப்பாடா நைட் எப்டியோ அவர் மேல கால் போடாம தூங்கிட்டோம், அம்மா கூட படுத்து படுத்து பழக்கமாகிருச்சு, இங்கயும் வந்து அப்டியே அவர்மேல கால போட்ருவனோனு பயந்துட்டேன்" என வாய்விட்டு புலம்பியவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

"மேடம்க்கு இப்டி ஒரு வீக்னெஸ் இருக்கா..." என நினைத்தவன் தானும் எழுந்து ஹாலிற்கு சென்றான்.

காலையில் எப்பொழுதுமே கவிநிலாவிற்கு சீக்கிரம் எழுந்து பழக்கவில்லை. கல்லூரி செல்லும் போது கூட எட்டு மணிக்கு எழுந்து எட்டரை மணிக்குள் கிளம்பி வேகவேகமாக ஓடுவாள்.

அவளின் தாயார் பலமுறை அவளைத் திட்டியும் பார்த்தார், கோபப்பட்டும் பார்த்தார். ஆனால் அதனை எல்லாம் அவள் சட்டை செய்தாலில்லை. அதற்கு மேல் தன் தாய் ஏதாவது கூறினால் உடனே தன் தந்தையிடம் போய் கெஞ்சி கொஞ்சி பேச அவரும் தன் மகளுக்கு பரிந்து பேசுவார்.

"அப்பனும், மகளும் என்னமோ பண்ணித் தொலைங்க.. போற இடத்துல இப்டி இருந்தா அவ மாமியாரு என்ன இவ அம்மா பொண்ண பெத்து வளர்த்தாளோனு என்ன தான் குறை சொல்லுவாங்க, போற இடத்துல உங்க மக ஒரு நாள் கூட தங்க மாட்டா.. மறுநாளோ அழுதுட்டு இங்க தான் வருவா.. இப்டியே போச்சுனா அதான் நடக்கும் பாரு" என அவரின் புலம்பலை கொட்டிவிட்டு போன பின் "கவிம்மா அம்மா சொல்றதும் நியாயம் தான், நாளைக்கு கொஞ்சமே கொஞ்சம் சீக்கிரம் எந்திரிருச்சுக்கோ மா..." என்க அவளோ தன் தந்தையை எரிக்கும் பார்வை பார்ப்பாள்.

"உங்க கிட்ட போய் நீதி கேட்க வந்தேன் பாரு, என்னை சொல்லணும்" என தலையில் அடித்து கொண்டவள் எப்பொழுதும் போல் கல்லூரி கிளம்புவாள்.

காலையில் எப்பவும் சுப்ரபாதம் போல் தன் அன்னையின் திட்டுக்களை வாங்கி எழுபவள் இன்று ஏனோ ஐந்தரை மணிக்கே எழுந்து விட்டாள்.

புது இடம் என்பதனாலா? இல்லை அம்மா கூறியது போல் தன் மாமியார் வந்து திட்டுவதற்குள் எழுந்துவிட வேண்டும் என்ற நினைப்பில் எழுந்தாளா என்று அவளுக்கே புலப்படவில்லை. ஆனால் காலையிலேயே தன் தாயின் நினைவு அவள் மனதில் உண்டானது.

திருமணம் ஆன அன்று எப்பொழுதும் பெண்ணின் வீட்டில் தான் முதலிரவு சம்பிரதாயம் நடக்கும். ஆனால் இவள் ஊர் கரூர் என்பதால் கோயம்பத்தூருக்கும் கரூருக்கும் தொலைவு என காரணம் காட்டி அர்ஜீனின் இல்லத்திலே இல்லை இல்லை அவளின் புகுந்த வீட்டிலே முதலிரவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

கல்யாணம் கோயம்பத்தூரில் நடைபெற்றதால் மீண்டும் இரவுக்குள் கரூர் செல்வது மிகுந்த அலைச்சலை உண்டாக்கும் என்று தான் இந்த முடிவு. மறுநாள் மறுவீட்டு விருந்துக்கு அழைப்பு இருப்பதால் கவிநிலாவின் பெற்றோர்கள் கோயம்பத்தூரில் உள்ள கவிநிலாவின் சித்தி வீட்டில் தங்கி இருந்தனர்.

"ஒருநாள் கூட ஆகல, அதுக்குள்ள இந்த அம்மாவோட நினைப்பு வந்துருச்சு...." எனப் புலம்பி கொண்டே குளித்து விட்டு வந்தாள். இதில் காலையிலேயே அவள் தலைக்கு குளித்துவிட்டு தான் பூஜையறைக்கு சென்று விளக்கேற்ற வேண்டும் என்ற தன் அம்மாவின் கட்டளையும் அவள் நினைவில் வந்து போயின.

"இந்த அம்மா ஒன்னு, காலைல கூட இல்ல... மிட் நைட்ல எந்திரிச்சு தலைக்கு குளிக்க சொல்லுது, லூசு அம்மா" எனப் புலம்பி கொண்டே அர்ஜீன் உறங்கி கொண்டிருக்கிறான் என்றெண்ணி தன் புடவையை சரி செய்தவாறே புலம்பிக் கொண்டிருந்தாள் கவிநிலா.

தலைமுடியை துண்டால் கட்டி இருக்க அதனையும் மீறி நீர் துளிகள் அவள் முகத்தில் இருந்து தொண்டை குழி வழியே இறங்க அவளின் அழகை கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

பிங்க் வண்ண டிசைனர் புடவையில் அன்றலர்ந்த மலராய் இருந்தவளைக் கண்டு அர்ஜீன் அவளின் அழகை தன் கண்ணால் பருகினான்.

அவளின் புலம்பலைக் கேட்டு "ஆறு மணிலாம் மிட் நைட்டா நிலா?.. இது எனக்கு தெரியாம போச்சே..." என்க அவனின் குரலில் அதிர்ந்தவள் "ஙே...." என்று முழிக்க "ஷாக்க குறை... ஷாக்க குறை... ஏன் இவ்ளோ ஷாக்?" என்றான் அர்ஜூன்.

"அதுவந்து.... " என அவள் இழுக்க "காலைலயே அத்தைக்கு அர்ச்சனை பண்ணியாச்சு, அடுத்து யார?... ஒருவேளை நானா?.." என்றான் அர்ஜூன்.

அவள் புரியாமல் முழிக்க "இல்ல அத்தை சீக்கிரமா எந்திரிக்க சொன்னதுக்கு அர்ச்சனை முடிஞ்சுருச்சு, நெக்ஸ்ட் இதுக்கெல்லாம் காரணம் நான் தான... அதான் அடுத்த அர்ச்சனை எனக்கானு கேட்டேன்" என்றவாறே தலையணையில் தலை சாய்ந்து அமர்ந்தவாறே வினவ அவளோ "இல்லை" என தலையாட்டினாள்.

"மனசு ஆமானு சொல்லுதே..." என்க அவள் நினைத்தது என்னவோ உண்மை. அடுத்து அவனை தான் அவள் திட்ட நினைத்தாள். ஆனால் அதனை அப்படியே கூற "அப்டிலாம் இல்ல" என அவசரமாய் மறுத்தாள்.

"அப்டியா...." எனக் கேட்டவாறே அவள் அருகில் அவன் வந்திருக்க அவள் சற்று தடுமாறி போனாள். கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தைக் காட்டி "உன் அப்பா உனக்கு பொருத்தமா தான் நிலானு பேரு வச்சுருக்காரு..." என்றான்.

அவன் கூற்றில் அவள் கன்னங்கள் கோவப்பழமாய் சிவந்தது கோபத்தில் அல்ல, வெட்கத்தில். அதற்குள் அவளை ரசித்தவன் குளியல் அறைக்குள் நுழைந்தான்.

அவள் கண்ணாடியில் தன் உருவத்தையே திரும்ப பார்த்தாள். அவள் முகத்தில் ஏதோ ஒன்று அழகைக் கூட்டியது. அவள் விரல்கள் தானாக அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் நாணை பற்றியது.

ஒரு பெண்ணிற்கு ஒரு சாதாரண மஞ்சள் கயிறு இவ்வளவு பொழிவை கொடுக்குமா? என்ன?. என நினைத்தாள்.

வில்லாய் வளைந்திருந்த புருவத்திற்கிடையே ஒரு பொட்டை வைத்தவளுக்கு நேற்று தன் தாய் கூறியது நினைவில் வந்தது. அதன்பின் அருகில் இருந்த குங்கும சிமிழை எடுத்தவள் தன் விரலால் தொட்டி நடுவகிட்டில் வைத்தாள்.

அவள் முகம் அவளுக்கே அழகாய் தோன்றியது. பின் பூஜையறைக்கு சென்றவள் விளக்கேற்றி மனமுருக வேண்டினாள். இதுவரை தன் வீட்டு பூஜையறையை எட்டிக் கூட பார்த்திராவள் இன்று காலையிலே எழுந்து விளக்கேற்றி ஆண்டவனிடம் பிராத்தனை வேறு வைத்தாள்.

"ஏன் என் வாழ்க்கைய இப்டி சோதிக்கிற சாமி, நான் காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சது தப்பா?... என்னை அவரு புரிஞ்சுக்கிட்டதால பிராப்ளம் இல்ல, ஆனால் புரிஞ்சுக்காம அவரோட நேத்தே அவருக்கு மனைவியா நான் இருந்திருக்கணும்னு நினைச்சிருந்தா...." எனும் போதே அவள் தேகம் நடுங்கியது.

பின் மனதார வேண்டிக் கொண்டவள் அடுப்பறைக்குள் நுழைந்தாள் கவிநிலா. அங்கு அர்ஜீனின் தாயார் தங்கம் டீ போட்டு கொண்டு இருந்தார். கவிநிலாவைக் கண்டவர் அவள் குளித்து மங்களகரமாக தன்முன் நிற்பதைக் கண்டு நெட்டி முறித்தவர் "நான் டீ போட்டுட்டேன் கவி, நீ அர்ஜீனுக்கு கொண்டு போய் குடு" என இரு டீ டம்பளரை அவளிடம் கொடுத்தார்.

"சரிங்கத்தை" என்றவள் இருவருக்கும் டீயை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தாள். அப்பொழுது அர்ஜூனும் குளித்து முடித்து வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தான்.

அவளோ கதவை தட்டிவிட்டு உள்ளே வர "இது நம்ம ரூம் நிலா, ஏன் கதவை தட்டிட்டு வர..." என்றான் அர்ஜூன்.

"அதுவந்து நீங்க குளிக்கப் போய்ருந்தீங்க, அதான்......" என தடுமாற "சரி, ஆனால் இத வேற யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க... இனி நான் உள்ளயே டிரஸ் மாத்திக்கிறேன்" என்றான் அர்ஜூன்.

"ம்....." என தலையாட்டிவள் "டீ..." என நீட்ட அவனும் டீயை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான். அவளும் அவனுடன் பால்கனியில் நின்று டீயை குடிக்க அவனோ டீயை அருந்தாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பனி இன்னும் விலகாமல் இருக்க அந்த பனி மூட்டத்தில் புடவையில் கொள்ளை அழகாய் ஜொலித்தாள் அவனின் நிலா. அர்ஜூனுக்கு அவளை அள்ளி அணைக்க தோன்றிய கைகளை இறுக கட்டிக் கொண்டான்.

இன்னும் அவள் மனதளவில் இந்த திருமணத்தைக் கூட ஏற்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது அவன் எப்படி தன் ஆசைகளை செயல்படுத்த முடியும். தன்னைக் கட்டுப்படுத்தி கொண்டவன் அவளைப் பார்த்தான்.

நேற்று அவள் சங்கு கழுத்தில் அவன் மூன்று முடிச்சிட்ட மஞ்சள் நாண் அவள் கழுத்தை இன்னும் அழகாக்கி கொண்டிருக்க அவள் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமம் அவளை பேரழகியாய் காட்டியது.

அவனின் பார்வையை உணர்ந்தவள் அவனைப் பார்க்க அவனோ பார்வையை திசைதிருப்பினான் அர்ஜீன். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக டீயை குடிக்க அவனும் அந்த இளங்காலை பொழுதை தன்னவனின் அருகாமையுடன் ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான்.
 
#6
காதல் - 04

அன்றைய பொழுது குலதெய்வம் கோவில் செல்வதிலே கழிய இருவரும் தனித்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் குறைவாக இருந்தன. சுற்றி இருந்தவர்களின் கிண்டல், கேலிகள் என அன்றைய பொழுது கழிந்தன.

மீண்டும் இரவு உறக்கத்தில் தலையணை இருவருக்கும் தடுப்பணையாக இருப்பதும் பின் அந்த தடுப்பணையை அவளே தூக்கத்தில் தகர்ப்பதுமாய் அந்த இரவு கழிய அவள் எழுவதற்கு முன் அவன் அந்த தடுப்பணையை மீண்டும் உருவாக்குவதுமாய் நாட்கள் நகர்ந்தன.

அவன் நிலாவின் நெருக்கம் நிலா தோன்றி மறையும் வரை மட்டுமே இருக்க அந்த நிலவின் வருகையையும் தன் நிலாவின் நெருக்கத்தையும் மிகவும் விரும்பினான். ஆனால் இதனை எல்லாம் அவள் உணர்ந்தாளில்லை. அவனுடன் ஒரு தோழியாக தான் அவளும் தன் நட்பை தொடர்ந்தாள்.

மறுவீட்டு விருந்து என பல நாட்கள் அதற்கு கழிய தற்போது தான் அந்த இல்லத்தில் தன்னையும் ஒருத்தியாய் புகுத்திக் கொண்டாள் கவிநிலா. அத்தை, மாமாவுடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள். சமையலில் தன்னால் ஆன உதவிகளை செய்ய தன் மாமியருடனும் நெருக்கமாக ஆரம்பித்தாள்.

அந்த இல்லத்தில் அர்ஜீனின் பெற்றோரை மாமனார், மாமியாராக ஏற்றுக் கொண்டவள் அர்ஜீனை மட்டும் அவளால் நண்பனாக மட்டுமே ஏற்றுக் கொண்டாள். அவளின் நிலையையும் அவனும் புரிந்து கொண்டு அவளுடன் ஒரு நண்பனாக மட்டுமே பழக ஆரம்பித்தான்.

அன்று எழும் போதே அவளுக்கு ஒருமாதிரியாக இருக்க அன்றைய தேதியை நாட்காட்டியில் பார்த்தாள். அவளின் மாதவிடாய்க்கான நாள் நெருங்கி இருப்பதை நாட்காட்டி காண்பிக்க "கல்யாணம், அது இதுனு இத மறந்துட்டேனே.. காலைல இருந்தே ஸ்டொமக் பெயினா இருக்கு" என நினைத்தவள் சற்று சங்கோஜப்பட்டாள்.

என்ன தான் இந்த வீட்டில் அவள் ஒன்றி போனாலும் மாதவிடாய் நேரத்தில் அது அந்நிய இல்லமாக தான் தோன்றியது. காலையில் இருந்தே அவளின் முகமாற்றங்களை கவனித்து கொண்டு தான் இருந்தான் அர்ஜீன். "என்ன நிலா, உடம்பு ஏதும் சரியில்லயா?" என்க அவனிடம் என்ன பதில் கூறுவது என தயங்கியவள் "ஒன்னும் இல்லங்க, கொஞ்சம் டயர்ட்... அவ்ளோ தான்" என சமாளித்தாள்.

அவன் வேலைக்கு கிளம்பி சென்ற பின் தான் தன் அத்தையிடம் தான் மென்சஸ் ஆனதை கூற அவரும் "கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ கவி, வெந்தயம் எடுத்து தரேன், அத போட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கு, தண்ணி நல்லா குடி மா.. சரி ஆகிரும்" என்க அவளும் வெந்தயத்தை போட்டு கொண்டு படுத்து விட்டாள்.

அவளுக்கு மாதவிடாயின் முதல் நாளின் போது வயிற்றுவலியும் கால் வலியும் ஏற்படும். அவளால் அந்த ஒரு நாளில் எங்கேயும் நகர கூட முடியாத அளவு அவஸ்தைப் படுவாள். தங்கள் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறக்கம் அவளை தழுவ உறங்க ஆரம்பித்தாள்.

நன்றாக உறங்கி கொண்டிருந்தவள் தன் காலை யாரோ பிடித்து விடுவது போல் சுகமாய் உணர்ந்து கண்களை திறக்க எதிரில் இருந்தவனைக் கண்டு பதறி தன் கால்களை அவசரமாய் தன்பக்கம் இழுக்க "ஹே நிலா, பொறுமையா எழுந்திரு...." என்றான் அர்ஜூன்.

"நீங்க எப்போ வந்தீங்க?" என அவள் தடுமாற "எனக்கு காலைலயே உன் முகத்த பார்க்கும் போது ஏதோ டிஸ்டர்ப்டா பீல் ஆச்சு, அதான் ஆபிஸ் போனோனே அம்மாக்கு போன் பண்ணேன், அவங்க தான் உனக்கு வயிறுவலினு சொன்னாங்க, நான் வரும் போது நீ தூக்கத்துல கால் வலில கால பிடிச்ச மாதிரியே படுத்திருந்தியா அதான் கால பிடிச்சு விட்டேன்" என்றான் அர்ஜூன்.

"நீங்க போய் என் கால..." என அவள் தயங்க "இதுல என்ன கவி இருக்கு, நானும் ஒரு தங்கச்சியோட பொறந்தவன் தான், இந்த வலிய அனுபவிக்கலைனாலும் உணர முடியும், அம்மாக்கும் இந்த நேரத்துல கால் வலி வரும், சின்ன வயசுல அம்மாவோட கால நான் நிறைய தடவ பிடிச்சு விடுவேன், அதான் உனக்கும் வலினு தெரிஞ்சோனே பிடிச்சு விட்டேன்... இப்போ ஓ.கேவா நிலா, இல்ல கொஞ்சம் நேரம் பிடிச்சு விடவா.." என்றான்.

"இல்ல இப்போ கொஞ்சம் பரவாயில்லங்க" என்றவளுக்கு கால்வலி சற்று குறைந்து தான் இருந்தது.

அவளை நேரநேரத்திற்கு சாப்பிட வைத்தான். "தண்ணி நிறைய குடிக்கணும் நிலா..." என அட்வைஸ் செய்தவன் "வேற ஏதாவது வேணுமா நிலா?..." என்றான் அர்ஜூன்.

"இல்லங்க... எதுவும் வேண்டாம்" என்றாள் அவள். அவனோ "இல்ல மெடிக்கல் ஷாப் போகணுமா...." என்றான்.

"இல்லங்க, இருக்கு....." என்க "சரி, கொஞ்சம் நேரம் படு... ஈவ்னிங் வெளிய போகலாம்" என்றவன் அறையை விட்டு வெளியே செல்ல "தேங்க்ஸ் அர்ஜீன்....." என்றாள் கவிநிலா.

அவள் இன்று தான் முதன்முறையாக அவனை அர்ஜீன் என்றழைக்கிறாள். இதுவரை வாங்க, போங்க என்பவள் சில நேரங்களில் அவனை அழைக்க சற்று தடுமாறி போவாள்.

இன்று அவனை ஒருவழியாக பெயர் சொல்லி அழைத்திருக்க அவனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன. அன்று முழுவதும் அவளுடனே இருந்தான் அர்ஜீன்.

மாலைப் பொழுதில் அருகில் உள்ள மாலிற்கு அழைத்துச் சென்றான். "வலி ஏதும் இருந்தா சொல்லு நிலா?.. இன்னொரு நாள் கூட போய்க்கலாம்" என்றான் அர்ஜூன்.

"இப்ப வலி இல்லங்க, பரவாயில்ல...." என்றாள் கவிநிலா. மீண்டும் "ங்க..." வந்திருக்க "திரும்ப முதல்ல இருந்தா...." என நினைத்தவன் "ஒருவேள அப்போ அவ என்னை அர்ஜீன்னு கூப்பிடது தெரியாம கூப்பிட்டுட்டாளோ..." என மனதினுள் நினைத்துக் கொண்டான்.

அவளை முதன்முறையாக வெளியே அழைத்து வருவதால் அவளுக்கு ஏதாவது பரிசளிக்க நினைத்து என்ன வாங்கலாம் என யோசித்தவனின் கண்ணில் எதிரே இருந்த டைட்டான் கடிகார ஷாப் தெரிய அவளை அங்கு அழைத்துச் சென்றான்.

"இப்போ இங்க எதுக்குங்க?" என அவள் வினவ "வாட்ச் கடைக்கு எதுக்கு வருவாங்க நிலா?.. வாட்ச் வாங்க தான்" என்றான் அர்ஜூன்.

"ஓ...." என இழுத்தவள் அவனுக்கு தான் வாங்க போகிறான் என்றெண்ணி அவளும் அவனுடன் எதுவும் பேசாமல் சென்றாள்.

அவனோ பெண்கள் செக்ஷனில் பார்க்க அவளோ குழம்பி போனாள். ஒரு கை கடிகாரத்தை எடுத்தவன் "இது உன் கைக்கு அழகா இருக்கும்ல...." என அவளுக்கு காண்பிக்க "எனக்கா...." என்றாள் கவிநிலா.

"இதென்ன கேள்வி நிலா, பொண்டாட்டிய கடைக்கு கூட்டிட்டு வந்துட்டு ரோட்ல போற பொண்ணுக்கா வாட்ச் வாங்கி தர முடியும்?" என்க அவளோ முறைத்தாள்.

"வாங்கி பாருங்க, அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என கோபத்தில் அவள் வாய்கள் தன்னால் முணுமுணுக்க "சொல்றத கொஞ்சம் கேட்கிற மாதிரி சொன்னா நல்லா இருக்கும்" என்றான் அர்ஜூன்.

"ஒன்னுமில்ல..." என அவள் முகத்தை திருப்பிக் கொள்ள அவளின் உரிமையான கோபம் அவன் மனதில் சந்தோசத்தை உண்டாக்கியது.

"சரி உனக்கு வேண்டாம்னா விடு, அதோ அங்க இருக்க பிகருக்கு இந்த வாட்ச் சூப்பரா இருக்கும்... அந்த பொண்ணுக்கிட்ட வேணுமானு நான் கேட்டுட்டு வரவா?" என அவன் மேலும் சீண்ட "யூ.... ராஸ்கல்...." என அவனை அவள் குத்த ஆரம்பிக்க அவனோ புன்னகையுடன் அவளின் குத்துக்களை வாங்கி கொண்டான்.

அவள் ஓர் கட்டத்தில் தான் அவனை தான் அடித்ததை உணர்ந்து அவனிடமிருந்து விலக "எல்லா பொண்ணுங்களும் இந்த விசயத்துல ஒரே மாதிரி தான் இருக்கீங்க?...." என்றான் அர்ஜூன்.

"எல்லா பொண்ணுங்கள்னா?... எத்தனை பொண்ணுங்கள உங்களுக்கு தெரியும்?" என அவள் கேட்க அவளின் கேள்வியில் கோபம் அப்பட்டமாய் அப்படியே தெரிந்தது.

"எங்க நிறைய பொண்ணுங்களுக்கு போறது, இருக்கிற ஒரே பொண்டாட்டியவே என்னால கரெக்ட் பண்ண முடியல... நான் அந்த அளவுக்குலாம் வொர்த் இல்லமா தாயே... உன் கற்பனை குதிரைய கடிவாளம் போட்டு கட்டி வச்சுக்கோ" என்றான் அர்ஜூன்.

அவள் அவன்மேல் கொண்ட உரிமையையும் அவள் உணர்ந்தாலோ இல்லையோ அவன் உணர்ந்தான். இப்பொழுது தான் பூ மலர தொடங்கி உள்ளது, இன்னும் அது காயாகி பழுத்து அதனை நினைக்கும் போதே அவனுக்கு கண்ணைக் கட்டியது.

"ப்பா..... எனக்கு ஸ்ட்ரெயிட்டா அறுபதாம் கல்யாணத்துல தான் பர்ஸ்ட் நைட் நடக்கும் போல... பரவாயில்ல நிலாக்காக காலம் முழுக்க காத்திருந்தாலும் தப்பில்ல" என நினைத்தவன் "இந்த வாட்ச் உனக்கு பிடிச்சுருக்கா நிலா?" என்றான் அர்ஜூன்.

அவள் பார்வை வேறு ஒரு கை கடிகாரத்தின் மேல் இருக்க அதனை உணர்ந்தவன் அவளைப் பார்த்தான். அவளோ அது தான் அவனுக்கு பிடித்திருக்கும் போல் என நினைத்து "பிடிச்சுருக்குங்க...." என்றாள் கவிநிலா.

"எனக்கு இது தான் பிடிச்சுருக்குனு ஓ.கே சொல்றியா டி பொண்டாட்டி.... ம்...." என புன்னகைத்தவன் "இத விட அது இன்னும் உனக்கு சூப்பரா இருக்கும்ல நிலா? என அவள் பார்த்தை கை காட்ட " இல்ல, இதுவே நல்லா இருக்குங்க" என்றாள் கவிநிலா.

அவனோ அந்த கைக் கடிகாரத்தை எடுத்து பில் போட கொடுக்க "இவரு என்ன, நாம ஒன்னு சொன்னா இவரு இத எடுத்து பில் போடக் குடுக்கறாரு...." என்ற யோசனையில் முகம் சுருங்க "எனக்கு அது தான் பிடிச்சுருக்கு நிலா" என்றவன் அதனை பேக் பண்ண சொன்னான்.

அதனை இருவரும் வாங்கி கொண்டு வெளியே வர கவிநிலாவோ "இவரு நமக்காக வாங்கி கொடுத்த மாதிரி நாமளும் ஏதாவது இவருக்கு வாங்கி கொடுக்கணுமா?" என நினைத்தாள்.

"என்ன நிலா, என்ன யோசனை..." என்றான் அர்ஜூன். "ஒன்னுமில்ல..." என தலையாட்டியவள் "இப்போ வாங்கி கொடுத்தா அவரு வாங்கி கொடுத்ததால தான் வாங்கி குடுக்கிறோம்னு தப்பா நினைச்சுட்டா என்ன பண்றது?" என நினைத்தவள் "அவருக்கு இன்னொரு நாள் நாமளே வந்து வாங்கி கொடுக்கலாம்..." என அந்த யோசனையை ஒத்தி வைத்தவள் அர்ஜீனுடன் புறப்பட்டாள் கவிநிலா.

இருவரும் இரவுணவை ஹோட்டலிலே முடித்து விட்டு வீடு திரும்பினர். பின் உறங்க அறைக்குள் செல்ல அவளின் மனமோ என்ன தான் சந்தோசமாக இருந்தாலும் தன் அம்மாவை தேடியது. அவளின் முக மாறுதல்களை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவன் எதுவும் கேட்காமல் தங்களுக்கு இடையில் இருந்த தலையணையை எடுத்தவன் "எப்பவும் இந்த நேரத்துல அம்மாவோட அருகாமைய தேடுவனு நினைக்கிறேன், இன்னிக்கு என்னை உன் அம்மாவ நினைச்சுட்டு பக்கத்துல படுத்துக்கோ...." என்க அன்று முழுவதும் அவளுக்கு அவள் அம்மாவின் ஞாபகம் இருந்ததால் அவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவனுள் ஒன்றி உறங்க ஆரம்பித்தாள்.

அவளை அணைத்து கொண்டவன் தலையை கோதி விட அவளும் உறங்க ஆரம்பித்தாள். அதன்பின் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த தலையணைக்கு வேலை இல்லாமல் போய் இருந்தது. அவளே அவன் அருகில் வந்து ஒன்றி உறங்க ஆரம்பித்தாள். ஏனோ அவன்மேல் அவளுக்கு ஒரு இனம்புரியாத ஈர்ப்பு உண்டாக ஆரம்பித்தது. அவனும் அவளின் மனமாற்றத்தை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

இப்போது தினந்தினம் அன்றைய இரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கவிநிலா. அவனின் அணைப்புக்காக தான் அவள் காத்திருக்க ஆரம்பித்தது. அவனோ தினமும் அவனின் நிலவை எதிர்ப்பார்த்திருக்க அவளோ அவனின் அணைப்பை எதிர்ப்பார்த்திருந்தாள். இருவரும் தெரிந்தே கண்ணாமூச்சி ஆடினர்.... அவனின் அணைப்பில் அவள் பாதுகாப்பை உணர்ந்தாள்..
 
#8
காதல் - 05
ஒருநாள் அவளைப் பார்க்க அவள் தோழிகள் வந்திருக்க அவர்களை தன் மனைவியுடன் இன்முகத்துடன் வரவேற்றான் அர்ஜீன். அவர்களுடன் அவள் பேசிக் கொண்டிருக்க அவனும் அவர்களுடன் கலந்து கொண்டான். அப்பொழுது அவர்களுள் ஒருத்தி "அண்ணா எங்க பிரண்ட் எப்டி உங்கள பார்த்துக்கிறா, நல்லா பார்த்துகிறாளா?" என்றாள்.

"உங்க பிரண்ட் என்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்கிறாம்மா...." என்றவன் "அப்டி தான பொண்டாட்டி" என அவளைப் பார்த்து கண்ணடிக்க அவளை அறியாமல் அவனின் கண்ணடித்தலையும் பொண்டாட்டி என்ற உரிமையான அழைப்பிலும் வெட்கத்தில் சிவந்தாள். அதனைக் கண்ட அவளின் தோழிகள் "கவி வெட்கப்படறத பாரேன்" என கிண்டல் பண்ண "என் பொண்டாட்டி எப்பவும் அழகு தான், ஆனால் வெட்கப்படறப்போ தேவதை மாதிரி இருக்கா...." என அவள் தோள் மேல் கைப் போட்டான் அர்ஜீன்.

ஆனால் அவள் தோள்மேல் அவன் கை படாமல் தான் இருந்தது, ஆனால் அவளின் தோழிகளுக்கு அவள்மேல் கை போட்டது போல் தான் தெரியும் வண்ணம் வைத்திருந்தான். அவளின் தோழிகளுக்காக தான் அவன் இவ்வாறு பேசுகிறான் என்பது புரிந்தாலும் அவள் மனம் ஏனோ இது நிஜமாக இருக்க கூடாதா என ஏங்க ஆரம்பித்தது.

உண்மையை கூற வேண்டும் என்றால் அவளை அவன் தான் பார்த்துக் கொள்கிறான். இதுவரை அவனுக்காக அவள் ஒன்றும் செய்தது இல்லை. ஆனால் தன் தோழிகளிடம் தன்னை விட்டுக் கொடுக்காமல் அவன் பேசியது அவளுக்கு அவன்மேல் உள்ள ஈர்ப்பு அதிகமானது.

அவனின் இயல்பான குணநலன்களை அவளும் நன்கு புரிந்து கொண்டாள். தவறு என தெரியும் பட்சத்தில் அவனின் கோபம் பலமடங்காகும். ஓரிரு முறை அந்த கோபத்திற்கும் அவள் ஆளானதுண்டு. அவனின் அன்பை புரிந்து கொண்டவளால் அவனின் கோபத்தையும் புரிந்து கொள்வது பெரிய விசயமாக தோன்றவில்லை.

அவனை அவனாகவே இருக்க தான் அவளும் ஆசைப்பட்டாள். அவனின் கோபத்தைக் கூட ரசிக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் அவனின் மேல் கொண்ட தன் காதலை உணர ஆரம்பிக்கும் போது அவளுள் இனம்புரியாத சந்தோசம் உண்டாக ஆரம்பித்தது.

அன்றிலிருந்து அவனின் அணைப்பிற்காக ஏங்க ஆரம்பித்தாள். அவளின் ஒவ்வொரு அசைவிலும் அவளின் காதலை அவனும் புரிந்து கொண்டாலும் எதுவும் பேசாமல் அவன் அமைதி காத்தான்.

இரவு அணைப்பு என்றது இப்பொழுது காலையில் அவன் வேலைக்கு செல்வதற்கு முன் அவள் நெற்றியில் இடும் முத்தமாகவும் அவர்களின் காதல் வளரத் தொடங்கியது. அவனின் ஒற்றை முத்தத்திற்காய் அவள் காத்திருக்க ஆரம்பித்தாள். அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு இன்பத்தை அளித்தது.
காதலின் ஒவ்வொரு நிமிடத்தையும் அணுஅணுவாய் ரசிக்க வேண்டும் என்ற அவளின் ஆசையை அவன் நிறைவேற்றிக் கொண்டிருந்தான் என்பதே உண்மை.

அவளுடன் சமையலறையில் சமைக்க உதவுவும் போது அவளுக்கு அவன் மேல் இன்னும் காதல் அதிகரிக்க ஆரம்பித்தது.

அன்று மாலை வேலையிலிருந்து அவன் வரும் போதே ஏனோ அவன் முகம் சோர்வாக இருந்தது. அதனைக் கவனித்தவள் டீ போட்டு கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள் கவிநிலா.

"என்னங்க டீ...." என அவள் நீட்ட அவனோ அவளைப் பார்க்காமல் "வேண்டாம்" என ஒற்றை வார்த்தையில் முடிக்க அவளுக்கோ ஏதோ போல் ஆனது.

"இல்ல டல்லா இருக்க மாதிரி இருந்தீங்க, அதான் டீ...." என தயங்கி தயங்கி கூற அவனோ சற்று கோபத்தில் "அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்ல, எடுத்துட்டு போ.." என சற்று கோபமாகவும் வேகமாகவும் கூற அவளோ பயத்தில் கையில் இருந்த டீ கப்பை நழுவ விட்டாள்.

அதில் இன்னும் எரிச்சல் அடைந்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து வேகமாக நகர அவனின் இந்த கோபத்தை அவளால் தாங்க முடியவில்லை. அவளின் கண்களில் நீர் கோர்க்க டீ கொட்டிய இடத்தை தொடைத்துக் கொண்டிருந்தாள்.

அவன் வெளியே சென்றுவிட்டு பின் வீ்ட்டிற்கு வந்தவன் தன் மனைவியை பார்க்க அவளோ அவனை பார்க்காது அமைதியாக டீவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனின் கோபம் அவள் மேல் இல்லை. அன்று அவன் பணிபுரியும் அலுவலகத்தில் சிறு பிரச்சனை. அதனால் சற்று கோபத்தில் இருந்தவன் அந்த கோபத்தை அவள் மேல் காட்டி விட்டான்.

தன் தவறை உணர்ந்தவன் தன் மனைவி கோபமாக இருப்பதைக் கண்டவன் "மேடம இப்போ சமாளிக்கணுமே.. என்ன பண்ணலாம்" என யோசித்தவன் அவள் அருகில் சென்று அமர அவளோ அவனை கண்டு கொள்ளாது டீவியையே பார்த்துக் கொண்டிருக்க "இப்போ மேடம எப்டி சமாதானம் பண்றது" என யோசித்தவன் சமையலறைக்கு புகுந்தான்.

அவனின் செயல்களை அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவனின் கோபம் தன்மேல் இல்லை என்பதை அவன் சென்ற அடுத்த சில நொடிகளிலே புரிந்து கொண்டாள்.
ஆனால் அவனை கொஞ்சம் அலைய விட வேண்டும் என்று அவள் அவன் வந்தவுடன் பேசாமல் அமர்ந்திருந்தாள் கவிநிலா.

அங்கு சமையலறையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்க சமையலறைக்குள் சென்ற தங்கம் "என்ன டா உருட்டிக்கிட்டு இருக்க?" என்றார்.

"கேரட் அல்வா பண்ண போறேன் மா..." என்க "சொன்னா நாங்க பண்ணி தர மாட்டமா?" என்றார் தங்கம்.
"இல்ல மா, நானே பண்ணிக்கிறேன்" என்றவன் செய்ய தொடங்க அவரும் அவன் வந்ததில் இருந்து இருவரையும் கவனித்துக் கொண்டு இருந்ததால் "அவங்களுக்குள்ள ஏதோ சண்டை போல.. என்னமோ பண்ணட்டும்" என நினைத்தவர் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றார்.

அவரை அழைத்த கவிநிலா "அத்தை , நைட்டுக்கு சப்பாத்தி பண்ணட்டுமா?" என்றாள்.
"சரிம்மா, பண்ணு" என்றவர் தன் வேலையை பார்க்க அவளோ கோதுமை மாவை பிசைந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒரே கிட்சனில் தங்களின் வேலைகளைப் பார்த்து கொண்டிருக்க அர்ஜீனோ "இப்போ எப்டி அவள இத சாப்பிட வைக்கிறது" என யோசித்தவாறே கேரட் அல்வாவை செய்து முடித்தான்.

தன் அருகில் ஒரு ஜீவன் இருப்பதையே மறந்தவள் கோதுமை மாவை பிசைந்து கொண்டிருக்க பூனை போல் அவள் பின்னே சென்று "கேரட் அல்வா...." என அவள் முன் நீட்ட "அதுக்கு என்ன இப்போ?" என்றாள் அவள்.
"அதுவந்து, உனக்கு தான்....." என அவன் திக்கி திணற வந்த புன்னகையை சிரமப்பட்டு அடக்கியவள் "எனக்கு தான்....." என அவள் அவனை போலே கூற "உனக்கு தான் செஞ்சேன்" என்றான் அர்ஜூன்.

"நான் கேட்கலயே" என்க "இல்ல, அதுவந்து" என அவன் தடுமாறி தான் போனான்.
அவளால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட "ஹப்பாடா..." என்றான் அர்ஜூன்.

"ஸாரி நிலா, கொஞ்சம் கோபத்துல...." என இழுக்க "கொஞ்சம் கோபத்துல...." என மீண்டும் அதே போல் கூற "சரண்டர் ஆகிறேன் நிலா..." என கையெடுத்து கும்பிட "சரி, அல்வாவ அத்தை, மாமாக்கு கொண்டு போய் குடுங்க" என்றாள் கவிநிலா.

"அது உனக்காக பண்ணேன்...." என்றான் அர்ஜூன்.

"இத புல்லா என்னால சாப்பிட முடியாது, அதுனால இத பர்ஸ்ட் அத்தை மாமாக்கு கொண்டு போய் குடுங்க" என்றாள் கவிநிலா.

அவர்கள் இருவருக்கும் கொடுத்தவன் தன் மனைவியிடமும் ஒரு கப்பில் போட்டு கொடுக்க அவளோ வாங்காமல் அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவன் அவளுக்கு அவனே ஊட்டிவிட அவள் புன்னகையுடன் சாப்பிட்டாள்.
பின் இருவரும் சேர்ந்தே இரவு உணவு செய்ய ஆரம்பித்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டாலும் கவிநிலா தன் காதலை மட்டும் அவனிடம் கூறவில்லை. அவளாய் வந்து கூறுவாள் என்று தான் அவனும் காத்திருக்க ஆரம்பித்தான்.

அவளை முதன்முறையாக கண்ட பொழுதிலே அவள் மேல் காதல் கொண்டவனாயிற்றே. அவளின் முழுமையான காதலையும் வேண்டி தான் அவன் காத்திருக்க ஆரம்பித்தான். நாட்களும் அதன் போக்கில் நகர ஆரம்பித்தன.
 
#9
காதல் – 06

அன்று தன் காதலை அவனிடம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். அவனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் தன் அறைக்கு வர அவளோ கண்ணாடி முன் அவனிடம் எப்படி பேசுவது என ஒத்திகைப் பார்த்து கொண்டிருந்தாள்.

அவளை பின்னிருந்து அணைத்தவன் அவள் காதில் "அப்டி என்ன மேடம் கண்ணாடில பார்க்குறீங்க" என கிசுக்கிசுக்க அவளின் உதடுகளோ தந்தியடிக்க ஆரம்பித்தன.

அவள் அவனிடமிருந்து விலக "உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்" என்க "ம்....." என்றவன் அவளையே பார்க்க "எனக்கு குழப்பமா இருக்கு, உங்கமேல எனக்கு எப்படி லவ் வந்ததுனே குழப்பம்... நீங்க தான் என் வாழ்க்கை அப்டினு முடிவானதால தான் உங்கமேல எனக்கு காதல் வந்துச்சா... இல்ல ஒருவேளை நமக்கு கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலும் உங்கமேல எனக்கு காதல் வந்துருக்குமா?" என குழப்பத்துடன் அவளைப் பார்க்க "உன் குழப்பத்த மொத்தமா கொட்டிரு நிலா.. எந்த கேள்விக்கும் கட்டாயம் ஒரு பதில் இருக்கும்" என்றான்.

"மென்சஸ் டைம்ல ரொம்ப கேர் எடுத்து பார்த்துக்கிட்டீங்க, அன்னிக்கு என் பிரண்ட்ஸ்கிட்ட என்னை விட்டுக் கொடுக்காம பேசுனீங்க.. இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள்ள என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டீங்க, எனக்கு உங்க அன்பு மட்டும் பிடிக்கல.. உங்க கோபமும் பிடிச்சுருக்கு, ஆனால் இதெல்லாம் நீங்க என் கணவர்ங்கிறதால உண்டான காதலா? இல்ல நம்ம கல்யாணம் நடக்காம இருந்திருந்தாலும் எனக்கு உங்கமேல காதல் வந்துருக்குமா?" என தன் ஒட்டுமொத்த குழப்பத்தையும் அவனிடம் கொட்டினாள்.
அவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன் "இந்த உலகத்துலயே இப்டி புரப்போஸ் பண்ணது நீயா மட்டும் தான் இருப்ப டி பொண்டாட்டி..." என அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் "நீ எப்போ இந்த கல்யாணத்த தடுக்காம இதுக்கு சம்மதிச்சியோ அப்பவே உனக்கு என்னை ஏதோ ஒரு மூலைல பிடிச்சிருந்தது தான் காரணம், இந்த கல்யாணம் பிடிக்கலனு நினைச்சியே தவிர இத நிறுத்தணும்னு என்னிக்காகவது நினைச்சியா?" என்க அவளோ இல்லையென தலையாட்டினாள்.

"இந்த கல்யாணத்த நீ நினைச்சிருந்தா நிறுத்திருக்கலாம், உன் அப்பா அம்மாவுக்காக நீ சம்மதம் சொன்னததா தான் உன் மனச நீயே தேத்திக்கிட்ட.. ஆனால் அது உண்மை இல்ல, உன்னோட கனவே காதலிச்சு கல்யாணம் பண்ணனும்கிறது, அப்டி இருக்கும் போது இந்த ஜாதகம், வயசு எல்லாம் உன் கனவை அழிக்க அவ்ளோ ஈசியா விட்டுருவியா என்ன?.... ஆனால் என்ன அத உன்னால புரிஞ்சுக்க முடியலைனு சொல்றத விட அத நீ மனசளவுல ஏத்துக்கலைங்கிறது தான் உண்மை... மே பி நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி சந்திச்சுருந்தா நமக்குள்ள காதல் வந்துருக்குமானு கேட்டா என்னோட பதில் கண்டிப்பா காதல் வந்துருக்கும்... ஏன்னா நீ எனக்காக பொறந்தவ டி பொண்டாட்டி" என்றான் அவளை அணைப்பிலே வைத்துக் கொண்டு.
அவள் அப்பொழுதும் குழப்பத்திலே இருக்க "உன்னை நான் கேர் பண்ணிக்கிட்டது நீ மனைவிங்கிறத தாண்டி என்னோட முதல் குழந்தை நீ, அப்போ என் குழந்தைய நான் நல்லா பார்த்துக்கணும்ல.. அதான், உன்னை மென்சஸ் டைம் கேர் பண்ணது, அந்த டைம்ல ஒரு பொண்ணோட வலிய புரிஞ்சுக்கிட்ட ஒருத்தனா நடந்துகிட்டேன் அவ்ளோ தான்.. அப்புறம் இந்த தேவையில்லாத குழப்பம்லாம் வேண்டாம், எப்போ நீ என்னை நண்பனா ஏத்துக்கிட்டியோ அப்பவே நமக்குள்ள ஒரு புரிதல் உண்டாகிருச்சு..." என்றான் அர்ஜூன்.
"அன்னிக்கே உங்கனால என்கிட்ட கணவன்கிற உரிமைய நிலைநாட்டி இருக்க முடியும், ஆனால் அத விட்டுட்டு என்னை பத்தி தெரிஞ்சுக்க ஏன் விரும்புனீங்க" என்றாள்.

"எனக்கு தேவை உன் உடம்பு மட்டும் இல்ல நிலா, உன் மனசும் தான்... காதல்ல காமம் இருக்கலாம், காமத்துல காதல் இருக்க முடியாது... செக்ஸ் ஒரு மனிதனுக்கு முக்கியம் தான், ஆனால் அதவிட ஒரு பொண்ணோட உணர்வுகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கணும்" என்றான் அர்ஜூன்.

"ஆனால் இப்போ இந்த காதல் சரியா?.. என் மனசுல சின்னதா ஒரு குழப்பம், இந்த காதல் கட்டாயத்தால வந்ததா?.. ஏன்னா எனக்கு நீங்க தான் அப்டினு முடிவானதால வந்த காதலா?" என்றாள் கவிநிலா.

"காதல்ல என்ன கட்டாய காதல், நம்ம மனசு எப்பவும் அடுத்தவங்களோட கட்டாயத்துக்கு அடிபணியாது, நீ எப்போ என்னை நண்பனா பார்க்க ஆரம்பிச்சியோ அப்பவே உன் மனசுல எனக்கான ஒரு இடம் உண்டாக ஆரம்பிச்சுருச்சு... நட்புக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல, இரண்டு இதயம் ஒன்னு சேர்றது தான் நட்பு, அதையும் தாண்டி இரண்டு உயிர் ஒன்னு சேர்றது தான் காதல்... என்னை பொறுத்தவரை இது தான் நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம்.... இப்ப சொல்லு, நான் உன் நண்பனா? இல்ல காதலனா?" என்றான்.

அவளும் அதே கேள்வியை தான் மனதினுள் கேட்டுக் கொண்டாள். அவனை முதலில் நண்பனாக பார்த்தாள் தான். ஆனால் இப்பொழுதோ. அவளையே அவனிடம் தர காத்திருக்கிறாளே.. அப்போ இதற்கு பெயர்?... அவள் மனதில் வேகமாய் ஒலித்தது காதல், காதல், காதல்...

"நான் காதலிக்கிறேன்.. நான் காதலிக்கிறேன்" என கத்த வேண்டும் போல் தோன்றியது.
அவளின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. ஆம், காதல் தானே அவளின் கனவு. இதோ இன்று கண்முன்னே காதலனே கணவனாய் அவள் முன்.

காதலனே கணவனாக வேண்டும் என அவள் நினைத்திருக்க கணவனே காதலனாகி நிற்கிறான்.

அவனை அவள் அணைத்துக் கொள்ள அந்த அணைப்பே ஓராயிரம் அர்த்தங்கள் மொழிந்தன. "பர்ஸ்ட் ஹக் எப்டி இருக்கு டி பொண்டாட்டி" என்றான் காதலுடன்.

"ம்......" என்றவாறே அவனுள் புதைந்து கொண்டாள் அவள். "என்ன வெறும் ம் தானா?..." என அவள் முகத்தை பார்க்க அவளோ வெட்கத்தில் அவனின் மார்பினுள் புதைய "இப்டி வெட்கப்பட்டா என்னால எப்டி டி பொண்டாட்டி சும்மா இருக்க முடியும்" என காதலுடன் காமமும் கலந்து கூற அந்த பெண்ணவள் நாணத்தில் அவனுள் ஒன்ற "நைட் வரை காத்திருக்கணுமா பொண்டாட்டி?" என்றான் கிறக்கத்துடன்.

அவளோ "இவ்ளோ நாள் பொறுத்து கிட்டீங்கள்ள, இன்னும் கொஞ்சம் நாள்.... வெய்ட் பண்ணுங்க" என அவனிடமிருந்து விலகி ஓட "இன்னுமா?" என ஷர்க்கானான்.

"கல்யாணம் ஆகியும் பிரம்மசாரியா இருக்கேன் டி, என்னைப் பார்த்தா பாவமா தெரியல....." எனப் புலம்பி கொண்டே உடைமாற்றி விட்டு ஹாலுக்கு வந்தான் அர்ஜீன்.

கவிநிலாவோ அவனின் பார்வையை தவிர்த்து கொண்டே தன் அத்தையிடம் வழவழத்துக் கொண்டிருந்தாள்.
"இவ தெரிஞ்சே இப்டி பண்றாளே..." என சோகமாய் அமர்ந்திருக்க அவளோ "இவ்ளோ நாள் பொறுத்திருந்தீங்கள்ள, இப்போ கொஞ்சம் நாள் வெய்ட் பண்ண என்னவாம்?" என்றாள் விழி மொழியில்.
"அதான் இவ்ளோ நாள் வெய்ட் பண்ணேன்ல, இப்போவும் வெய்ட் பண்ண வைக்கிறது நியாயமா?" என்றான் இவன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது, வெய்ட் பண்ணுங்க" என விழியிலே பதில் கூறியவள் தன் அத்தையுடன் பேசிக் கொண்டிருக்க இருவரின் விழி மொழிகளையும் கவனித்து கொண்டிருந்த தங்கம் "எனக்கு அலுப்பா இருக்கு கவி, நான் போய் தூங்கறேன்...." என அவர் அங்கிருந்து நகர அர்ஜீனோ அதற்காக காத்திருந்தவன் போல் அவள் அருகில் வந்தான்.

அவளோ "அய்யோ இவரு முழியே சரியில்லயே.. அத்தை வேற எஸ்கேப் ஆகிட்டாங்க, என்ன பண்றது" என புலம்பியவள் அவனிடமிருந்து நழுவ பார்க்க அவனோ அவளை விட்டால் தானே.
அவளை அள்ளி தூக்கி கொண்டவன் அவர்கள் அறைக்குச் செல்ல இதுவரை மறுப்பு தெரிவித்தவள் இப்போது அவனுள் ஒன்றி போக "என்னடி இன்ன வரை அப்டி பேசிட்டு இப்போ சமத்து பொண்ணா மாறிட்ட?..." என்றான் அர்ஜூன்.

"அதெல்லாம் சீக்ரெட்..." என்றாள் அவள்.

"அப்டி என்ன சீக்ரெட்....." என்க "அங்கயே நான் ஓ.கே சொல்லிருந்தா இப்போ என்னை இப்டி தூக்கிட்டு போவீங்களா? இல்ல கொஞ்சி கெஞ்சி தான் இருப்பீங்களா?" என்றாள் கவிநிலா.

"கள்ளி, என்னை சுத்தவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதுல அவ்ளோ ஆசையா டி பொண்டாட்டி உனக்கு" என்றான் அர்ஜூன்.

"இருக்காதா பின்ன, காதல சொன்ன அடுத்த செகண்ட்டே சார் ரொமான்டிக் ஹீரோவா மாறுனா நல்லாவா இருக்கும், அதான் கொஞ்சம் அலைய விட்டேன்..." என்றாள் கவிநிலா.

"அப்போ நான் வில்லனா மாறுனா தான் சரிபட்டு வருவ போல...." என அவனின் முரட்டு தனத்தை அவள் மீது காண்பிக்க ஆரம்பிக்க அவளோ புன்னகை முகமாய் அதனை ஏற்க ஆரம்பித்தாள்.......


_ சுபம் _