உந்தன் மடியில் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"உந்தன் மடியில்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார் அன்னபூரணி அவர்கள்.....
 
#2
அன்புள்ளங்களுக்கு வணக்கம்!

சென்ற முறை வாங்க எழுதலாம் என்ற குறுநாவல் போட்டியில் எனக்கு எழுத வாய்ப்பளித்து என்னாலும் குறு நாவல் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை முதல் முதலில் விதைத்தார் சுதாம்மா! அந்த தன்னம்பிக்கையில் முதல் குறுநாவலை எழுதினேன்! அந்த நாவல் பலரால் வெகுவாகப் பாராட்டப்பட்டதால் என் தன்னம்பிக்கை வளர்ந்தது! அதன் விளைவு, அடுத்தடுத்து 3 குறுநாவல்களை வெற்றிகரமாக எழுதி முடித்துள்ளேன்! அதில் ஒன்று பெண்மை இணையம் மாதமொரு முறை வெளியிடும் பெண்மை மின்னிதழில் தொடர்கதையாகவும் வந்துள்ளது!

இதோ, மீண்டும் ஒரு குறுந்தொடர் கதைப் போட்டிக்கு சுதாம்மா அழைப்பு விடுத்ததும், ஓடி வந்துவிட்டேன்!

உந்தன் மடியில்.... என்ற தலைப்பில் என் குறுந்தொடர் கதையை எழுதவிருக்கிறேன்!

கதையின் தலைப்பு: உந்தன் மடியில்....
நாயகன்: அபிமன்யூ
நாயகி: யாழினி


உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் குறிப்பாக பின்னூட்டங்களுமே எனக்கு எனர்ஜி டானிக் என்று கூறிக் கொண்டு கதையின் டீசரை இன்று பதிவிடுகிறேன்!


**********

உந்தன் மடியில்.... - டீசர் இதோ!

பெண் பார்க்க வந்த இடத்தில் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அபிமன்யூ சொல்ல, யாழினியுடன் தனியாக பேச அனுமதிக்கப் பட்டான்.

அந்த ஓட்டு வீட்டில் தனியாக அறையென்று என்ன உள்ளது? குடிசையின் பின்னால் இருந்த தென்னை மரத்தின் அருகே நின்று அவர்களைப் பேசச் சொன்னார்கள். தங்கள் கண் பார்வையிலேயே இருவரையும் நிற்க வைத்திருந்தார்கள். அதனால் மிகவும் சுருக்கமாக தன்னால் முடிந்த வரை யாழினியின் காதில் மட்டும் விழுமாறு பேசினான் அபிமன்யூ.

“தப்பா எடுத்துக்காதீங்க! நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன். அம்மா ஒத்துக்கல. என்னாலயும் அவள மறக்க முடியல. உங்கள கல்யாணம் பண்ணிகிட்டாலும் உங்களோட சந்தோஷமா என்னால வாழ முடியாது. அதனால தயவு செஞ்சு என்னப் பிடிக்கலன்னு சொல்லிடுங்க!” என்று கூறிவிட்டு அவள் முகம் பார்த்தான்.

அவள் இவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இத எப்டி நான் சொல்வேன்?” என்றாள். ஆனால் வார்த்தையே வரவில்லை.

அதற்குள் சித்தி உள்ளே அழைக்க யாழினி உள்ளே ஓடினாள். அவள் போவதையே பார்த்திருந்துவிட்டு அபிமன்யூ உள்ளே வந்தமர்ந்தான்.

யாழினி உள்ளுக்குள் மிரண்டுதான் போனாள். இத எப்டி சித்திகிட்ட போய் சொல்வேன்? கடவுளே! என்ன ஏன் இவ்ளோ சோதிக்கற!

மரகதம் மற்றவர்களுக்காக பெண்ணின் சம்மதத்தைப் பெற உள்ளே வந்தாள். உண்மையில் அவளை ஒத்துக் கொள்ள வைக்கவே வந்தாள்.

“இங்க பாருடீ! நீ எந்த ஜென்மத்தில பண்ணின புண்ணியமோ, பண்ணையாரம்மாவே உன்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!”

“ஆனா சித்தி!”

“என்னடீ! எதித்துப் பேசற?”

“இல்ல சித்தி! அவரு வெளிநாட்ல போய் படிச்சவரு. அங்க எப்டியிருந்தாரோ! என்னவோ! அதனாலதான் வசதி கம்மியான வீட்ல பொண்ண கட்றாங்க போல!” ஜாடையாக சொல்லிப் பார்த்தாள்.

“அதனால என்னடீ! ஆம்பளைன்னா கொஞ்சம் அப்டி இப்டீன்னுதான் இருப்பான். நம்மதான் அஜஸ்ட் பண்ணிப் போகணும்! நீ பண்ணையாரம்மா வீட்ல வாக்கப்பட்டா ஊருக்குள்ள எனக்கு தனி மரியாத கெடைக்கும். ரேசன் கடைக்காரன்லேந்து பால்காரன் வரைக்கும் என்னப்பாத்து சல்யூட் அடிப்பான். நான் பண்ணையாரம்மாவோட சம்மந்தின்னு கொஞ்சம் கவுரதையா இருப்பேன். மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்கோ! இல்லன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன்!”

இதற்கு மேல் என்ன செய்வாள் யாழினி! வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டாள். இப்ப மட்டும் என்ன? மனுஷியாவா இருக்கீங்க? என்று நினைத்துக் கொண்டாள்.

சித்தி வாயெல்லாம் பல்லாக யாழினி திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டாள் என்றாள். யாழினியின் அப்பா பாண்டித்துரை ரொம்பவும் சந்தோஷப்பட்டுப் போனார்.

யாழினி தன்னை நிராகரித்துவிடுவாள் என்று நினைத்ததற்கு மாறாக பரிபூரண சம்மதம் சொல்லிவிட்டாள் என்று அறிந்ததும் அபிமன்யூ கொதித்துப் போனான். தான் அவளிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லியும் கூட இந்த திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறாளே!

திமிரு பிடிச்சவ! பணத்துக்கு ஆசப்பட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கறாளா! இருடீ நான் யாருன்னு காட்றேன். நீ நிம்மதியா காலாட்டிக்கிட்டு இங்க இருந்துடலாம்னு நெனச்சு வரியா! வா! வா! நான் உன்ன எப்டி கொடும பண்ணப் போறேன்னு வந்து பாரு! நீ அனுபவிப்படீ! நல்லா அனுபவிப்ப! என்று மனதுக்குள் கருவிக் கொண்டான்.


♥♥♥♥♥♥♥
முதல் எபி விரைவில்....
 
#3
நண்பர்களே!

இதோ முதல் அத்தியாயத்துடன் வந்து விட்டேன்! படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கருத்து திரியில் பதிவிட வேண்டுகிறேன்!

உந்தன் மடியில்....

1.மதுரையின் கிழக்கு கோடியில் இருந்த அந்த கிராமத்தின் ஒரு திருமண மண்டபத்தில் பெற்றோர், உற்றார், உறவினர் நண்பர்கள் குழுமியிருக்க வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, கெட்டி மேளம் நாதஸ்வரம் மங்கல இசை முழங்க, பெரியவர்கள் அக்ஷதை தூவி வாழ்த்த யாழினியின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டி முடிச்சிட்டு முடிச்சில் குங்குமம் இட்டான் அபிமன்யூ. அவளுடைய கழுத்தைச் சுற்றி தன் கையைக் கொண்டு போய் அவளுடைய உச்சியிலும் குங்குமத்தை இட்டான். ஐயர் மந்திரம் சொல்ல பின்னாலேயே அதை திருப்பிச் சொல்லி ஹோம குண்டத்தில் அவர் போடச் சொன்னதைப் போட்டான். பின்னர் அவளுடன் எழுந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு அக்கினியை மூன்று முறை வலம் வந்தான். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவளுடன் சேர்ந்து ஏழுஅடி எடுத்து வைத்தான். திருமணச் சடங்கு இனிதே முடிந்தது. மணமக்கள் இருவரும் பெற்றவர்கள் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கினர்.

அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் முறைத்தாள். அவன் கோபத்தோடு திரும்பிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து அவள் எதற்கோ திரும்பும் போது எதேச்சையாக அவனுடைய முகத்தைப் பார்த்தாள். இப்போது அவன் முறைத்தான்.

“நான் பாக்கும்போது மொறைச்சிட்டு இப்ப இந்தம்மா பாக்காத மாதிரி பாக்கறா! நான் இவளப் பாத்து இளிக்கணுமா? மூஞ்சியப் பாரு! மைதா மாவ அப்பிகிட்டு வந்து நிக்கிது!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

அவன் தன்னைத்தான் திட்டுகிறான் என்று புரிந்து கொண்டாள். ம்க்கும்! என்று கழுத்தை வெட்டித் திரும்பிக் கொண்டாள்.

அபிமன்யூவின் நண்பர்கள் அவனருகில் வந்தனர்.

“கங்க்ராட்ஸ்டா மச்சி! ஹேப்பி மேரீட் லைஃப்!”

“தேங்க்ஸ்டா!”

அபிமன்யூ தன் நண்பர்களை யாழினிக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை.

“டேய் நம்ம செட்ல மொத மொதல்ல உனக்குதான்டா கல்யாணம் ஆகியிருக்கு! அதனால இவங்க எங்களுக்கு அண்ணிடா!” என்றான் ஒருவன்.

“அண்ணி! நாங்க ரொம்ப தொந்திரவு செய்வோம்! நீங்க பொறுத்து போவீங்களா அண்ணி!” என்றான் மற்றொருவன்.

அவள் வெறுமே புன்னகை செய்தாள்!

நண்பர் பட்டாளம் கேக் வெட்டும் வைபவத்தை ஆரம்பித்தது!

“டேய் இதெல்லாம் எதுக்குடா.. சும்மா இருங்கடா.." என்று அபி அவர்களிடம் கடுகடுத்தான்!

"இருக்கட்டுங்க.." என்ற யாழினி, அவனுடைய நண்பர்களிடம், "நீங்க கன்டின்யூ செய்ங்க.." என்றாள்!

அவனுடைய நண்பர்கள் ஆரவாரமாக கேக் வெட்டும் வைபவத்தை கொண்டாட, அவனுக்கு ஆத்திரமாய் இருந்தது. நல்லா நடிக்கறா? எல்லாம் நம்ம தலையெழுத்து! என்று நினைத்துக் கொண்டான்.

நண்பர்கள் இவனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருவரையும் கேக் வெட்ட வைத்து அதன் க்ரீமை இருவர் முகத்திலும் பூச வைத்து செலஃபீ எடுத்து இருவரையும் ஒரு வழி செய்து விட்டு அதன் பின்னரே அவ்விடம் விட்டு நகர்ந்தனர்!

திருமண சடங்குகள் முடிந்து விருந்துண்டுவிட்டு சங்கரனின் கிராமத்து வீட்டில் யாழினியை கொண்டு விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

அபிமன்யூவின் தாயார் கனகவல்லி, யாழினியை சுவாமி விளக்கேற்றச் சொன்னாள். அவளும் ஏற்றினாள். மணமக்கள் இருவரும் சுவாமி நமஸ்காரம் செய்தனர். பின்னர் கனகவல்லியை நமஸ்காரம் செய்தனர்.

அதோடு தன் கடமை முடிந்ததாய் அபிமன்யூ தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டான்.

கனகம் யாழினியை அழைத்துப் போனாள்.

“அபி ரொம்ப நல்லவன்! ஆனா கொஞ்சம் கோபக்காரன். நீதாம்மா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும். தகப்பனில்லாத புள்ள. கொஞ்சம் அதிகமா செல்லம் குடுத்து வளத்துட்டேன்! ஆனா யாருக்கும் அவனால எந்த கெடுதலும் வராது! தன்னோட கடமைலேர்ந்தும் அவன் பின் வாங்க மாட்டான். ஏதாவது கோபமா பேசினா கொஞ்சம் பொறுத்துப் போகணும்மா!” என்றுாள்!

புதிதாய் திருமணம் செய்து கொண்டு வந்திருக்கும் மருமகளை மிரட்ட இந்த சொற்கள் போதாதா? யாழினி மிரண்டுதான் போனாள்.

அடராமா! வாணாலிக்கு பயந்து அடுப்பிலயே விழுந்திட்டேனா! எனக்கு விமோசனமே கிடையாதா! என்று நினைத்துக் கொண்டாள்.

கனகம் தான் அவளை அழைத்த வேலை முடிந்ததாய் நினைத்துவிட்டாள் போல.

“சரிம்மா! நீ ரொம்ப அசதியா இருக்க! போய் கொஞ்ச நேரம் படுத்திரு. சாயங்காலம் காபி போடும்போது நம்ம ராசாத்தி வந்து எழுப்புவா! நீ போம்மா!” என்று இவளிடம் கூறிவிட்டு தன்னுடைய உறவுப் பெண்ணிடத்தில் ஏதோ பேசத் திரும்பினாள்.

“சரிங்க அத்த! .......ஆனா .......நான் .........எங்க ரெஸ்ட் .... எடுக்க?” தயங்கித் தயங்கி கேட்டாள்.

“ஐயோ! நான் ஒருத்தி! உனக்கு அவன் ரூம் எதுன்னு தெரியாதுல்ல! வா நான் கூட்டிட்டுப் போறேன்.” என்று யாழினியிடம் கூறினாள்.

“நீங்கல்லாம் இருங்க! இப்ப வரேன்!” என்று மற்றவர்களிடம் கூறிவிட்டு அவளை தன் மகனின் அறைக்கு அழைத்துச் சென்றாள் கனகம்.
- தொடரும்....