இத்தியாதி காதல் - கதை திரி

#2
இத்தியாதி காதல் - 1
(இக்கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் என் அதீத கற்பனையே!)
வருடம் 2034
இடம் சென்னை
சென்னை மாநகரின் மிக முக்கியமான இடமான போரூரில், நெடுஞ்சாலை அருகினில் அமைந்திருந்த 'கெட் லாஸ்ட் ஹியர்' என்கிற காபி ஷாப், அனைவரையும் தன் லேசர் கரங்களால் வரவேற்று கொண்டிருந்தது.
காலை பரபரப்பு சற்று ஓய்ந்திருந்த முன்பகல் நேரத்தில், வாடிக்கையாளர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் அமர்ந்திருந்தனர். அந்த காபி ஷாப்பின் தலைமை குக் ஜேக் மற்றும் அவனின் உதவியாளன் மைக் என்கிற மைக்கேல் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர். ஃபிங்கர் மில்லட் மற்றும் பியர்ல் மில்லட் போரிட்ஜ் (ராகி மற்றும் கம்பளம் கூழ்) அங்கே மிக பிரசித்தம். அதை தவிர, வீட்டில் செய்ய கடினமான அனைத்து பாரம்பரிய உணவுகளும் அங்கே கிடைக்கும்.
அன்று காலை முதலே ஜேக்கின் போக்கு, மைக்கிற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. "என்னாச்சு மிஸ்டர் ஜேக், நீங்க காலையில் இருந்து, உங்களுக்கு கொடுத்திருந்த வேலைகள் எல்லாத்துலயும் ஏதோவொரு குளறுபடி பண்ணிக்கிட்டே இருக்கீங்க. ரெண்டு கன்ஸ்யூமரோட ஆர்டர தப்பா கொடுத்திருக்கீங்க, நல்ல வேளை அவங்க கம்ப்ளைண்ட் எதுவும் பண்ணல, அப்படி பண்ணிருந்தாங்கன்னா நீங்க நாளையிலேர்ந்து 'கார்பேஜ் டிஸ்போசல்' டிபார்ட்மெண்டுக்கு தான் வேலை செய்ய போகணும்" என மைக் புலம்பி கொண்டே இருக்க, ஜேக் அதை எதையும் காதில் வாங்காது, வாயிலில் இருக்கும் தானியங்கி லேசர் கதவையே பார்த்து கொண்டிருந்தான்.
"ஏய் அண்ணாத்த! அங்க இன்னா பாக்குற? நான் பாட்டுக்கு புலம்பிகின்னு இருக்கன், நீ எங்க கெனா காண பூட்ட" என மைக் குரல் எழுப்பியும் ஜேக் பதிலளிக்கவில்லை.
"என்னடா இது செந்தமிழிற்கு தான் பதில் சொல்லலைன்னு பாத்தா சென்னை தமிழும் அண்ணன் காதில் விழலையே! இவர் தப்பு பண்ணா, நாளைக்கு நம்மளும் இவர் கூட சேர்ந்துல்ல குப்பை அள்ளணும்" என பயந்து ஜேக்கின் தோளை உலுக்கினான்.
"ஹாங் என்ன மைக், புதுசா ஏதாவது ஆர்டர் வந்திருக்கா?"
"கிழிஞ்சுது போ ஆமாம் நீ யாரை எதிர்பார்த்து வாசலையே பாத்துகிட்டு இருக்க?"
"எல்லாம் அவள் தான் என் இனிய நீலக்கண் அழகி ரெக்ஸி" என்று வார்த்தைகளுக்கும் நோகுமோ என மிக மென்மையாய் கூறினான்.
"இது எப்பலேர்ந்து?"
"எல்லாம் அந்த பாழாய்ப்போன செமினார்க்கு அப்புறம் தான் டா. 'உணர்ச்சிகளும் அதன் ரசாயன மாற்றமும்' அப்படிங்கற செமினார் அப்டேட் போனோம்ல அப்பலேர்ந்து தான். சரி எனக்கு ரொம்ப பிடிச்ச கஸ்டமர் வந்துட்டாங்க, அவங்களை போய் நான் கவனிக்கிறேன்" என்று கூறி அங்கிருந்து நழுவி சென்றான் ஜேக்.
"நான் தானே எப்போதும் கஸ்டமர் சர்வீஸ் பார்ப்பேன், இன்னிக்கு புதுசா இவரு ஓடறாரு, இதுல ஃபேவரைட் கஸ்டமர்னு வேற சொல்றாரு. ஆண்டவா என்ன விட, அவருக்கு கொஞ்சூண்டு அதிக மூளையை கொடுத்து இப்படி பண்றியே" என மனதிற்குள் நினைத்து அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தான் மைக்.
ஜேக், "வெல்கம் மிஸ்டர். சுனயன் அண்ட் மிஸ் நிரல்யா, என்ன சாப்பிடறீங்க?"
"ஒரு ரைஸ் கஞ்சி, ஒரு ஃபிங்கர் மில்லட் அடை" என்று கூறி அழகாக சிரித்தாள் நிரல்யா. நிரல்யா, மிகப்பெரும் ஆய்வில் இவளும் ஒரு விஞ்ஞானி. பஃப் வைத்த நீளமான சிவப்பு சாட்டின் ப்ளவுஸ் மற்றும் முட்டியை தாண்டும் கருப்பு காட்டன் மிடி என எளிமையான எழிலாக காட்சி தந்தாள்.
"சுனய் இன்னிக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொண்டு வந்திருக்கேன், கண்ண மூடு" என கூறி அவன் கண்களில் ஒரு அதிநவீன மற்றும் விலையுயர்ந்த கண்ணாடியை அணிவித்தாள். "இப்ப கண்ண தொறந்து பாரு" என இவள் பணிவித்ததன் பேரில் கண்ணை திறந்தவன், அடுத்த நொடி அந்த கண்ணாடியை விசிறி எறிந்தான்.
"ஏன்‌ சுனய் என்னாச்சு? நீ சந்தோஷப்படுவன்னு தானே நான் இதை வாங்கிட்டு வந்தேன்" என முகம் சுணங்கி நிரல்யா கூற, "இல்ல நிரூ, என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு தானே காதலிச்ச, இப்ப எதுக்கு புதுசா இந்த பொய்யான வேஷம்" என அவள் சுணக்கத்தை போக்க மிக மிருதுவாக எடுத்துரைத்தான்.
சுனய் அதி புத்திசாலி சமூக ஆர்வலன். பார்த்தவுடன் பச்சென்று மனதிற்குள் அமர்ந்து கொள்ளும், காந்த குணம் உடையவன். பிறந்தது முதலே நிறக்குறைபாடு உள்ளவன். அவனால் காணும் பொருட்களில் எல்லாம் கருப்பு வெள்ளை நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அவன் அதை பெரிய குறையாக எண்ணவில்லை. இன்று நிரல்யா அணிவித்த ஸ்பெஷல் கண்ணாடி நிறங்கள் அனைத்தையும் தெளிவாக காட்ட, ஒரு நொடி தன் குறையை எண்ணி கோபமுற்றான், அடுத்த நொடியே தன் தவறை எண்ணி வருந்தினான்.
"இல்ல மா, நான் உன் பாதுகாப்புக்காக தான் இந்த கண்ணாடியை கொடுத்தேன், தினமும் ட்ராஃபிக் சிக்னல்ல நீ எவ்ளோ கஷ்டப்படுற? அதுவும் இல்லாம, நீயும் என்னை மாதிரி நிறங்களின் உலகை ரசிக்கணும் தான் கொடுத்தேன். உனக்கு பிடிக்கலைன்னா சாரி இனிமே இது மாதிரி கிஃப்ட் கொடுக்கல" என்று கண்ணீர் மல்க கூறினாள் நிரல்யா.
சுனயன், நிரல்யாவுடனான முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தான். முதல் முறை இரு சக்கர வாகனம் ஓட்டி கொண்டு வெளியே வந்தவன், சிக்னலில் விழுந்த சிவப்பு விளக்கை கவனிக்காமல் தன் வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தான். "டேய் கண்ணு தெரியலையா உனக்கு? அதான் ரெட் லைட் போட்டிருக்குல்ல" என்ற குரல் சடாரென்று ப்ரேக் போட வைத்தது, இவன்‌ திரும்ப தன் வாகனத்தை உருட்டி கொண்டு வந்து பழைய இடத்தில் நின்று கொண்டான்.
"எக்ஸ்க்யூஸ் மீ! யாரு என்ன திட்னது?" என சிக்னலில் நின்றிருந்தவர்களிடம் கேட்க, "ஏன் நான் தான் திட்டினேன், நீ தப்பு செஞ்ச அதனால திட்டினேன்" என்று அமர்த்தலாக ஒரு யுவதி பதிலளித்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ்ங்க, அப்படியே க்ரீன் லைட் வரும் போது சொல்லிடுங்க"
"ஏன் உனக்கு தான் கண்ணு இருக்குல்ல நான் ஏன் சொல்லணும். என்ன கிண்டலா?"
"இல்லங்க எனக்கு கண்ணு தெரியும் ஆனா நிறங்கள் தெரியாது" என இவன் கூறியதும் எல்லாரை போல் பாவம் பார்க்காமல், "ஓ அப்படியா சரி சொல்றேன். அதுக்கு பதில் எனக்கு 'கெட் லாஸ்ட் ஹியர்' கடையில் ஒரு கப் 'ரைஸ் கஞ்சி' வாங்கி குடு" என கூற, பார்த்தவுடன் சுனயன் மனதில் பளிச்சென்று ஒட்டிக் கொண்டாள் நிரல்யா.
நிரல்யாவும், வெறும் பழைய சாதத்திற்காக அவனை அழைக்கவில்லை. அவனுடன் சிறிது ஆற அமர பேசி, அவன் குறைகளை தன் சயின்டிஸ்ட் மூளையால் தீர்க்க முடியுமா என்று யோசித்தாள். எவ்வளவு பேசி பேசி தீர்த்த பின்னும், இன்னும் அவர்களுக்கு இடையேயான பேச்சுக்கள் நீள வேண்டும் என இருவரும் விரும்பியதால், ஓராண்டு காலமாக உயிர் காதலர்களாய் வலம் வருகிறார்கள்.
"ஹலோ சுனய் கண்ணா, என்ன மறுபடியும் ஃப்ளாஷ்பேக் போயிட்டியா? அடை வந்துடுச்சு பாரு, சீக்கிரம் சாப்பிடு" என நிரல்யா கூற, சிரிப்புடன் அவள் தந்த நிறங்கள் காட்டும் கண்ணாடியை அணிந்து கொண்டு, உணவு உண்ண ஆரம்பித்தான்.
இதை எல்லாம் தொலைவில் இருந்து பார்த்த ஜேக், மீண்டும் ஒரு முறை தன் ரெக்ஸியின் மேல் காதலில் விழுந்தான். "சே இத்தனை நாள் இந்த உணர்வை தொலைச்சுட்டு எப்படி இருந்தோம்" என நினைத்தான்.
அலர்ட் மெசேஜ் என இரு முறை நிரல்யாவின் கைக்கடிகாரம் அலற, அதை உயிர்பித்து, காற்றிலேயே ஒரு தொடுதுரையை வர வைத்து அந்த செய்தியை பார்த்தாள். "வணக்கம் நிரல்யா, உங்கள் மரம் எண் 135702, நீர் சத்து குறைந்து காணப்படுகிறது, உடனே சென்று அதை கவனிக்கவும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும். இப்படிக்கு அரசாங்கம்" என்ற செய்தி வந்திருந்தது. ஆம், அந்த நாட்டில் இருக்கும் அனைவரின் பேரிலும் ஐந்து மரங்கள் ஒப்படைக்கப்படும். அதை பத்திரமாக பேணி காக்க ஏதுவாய், ஒரு செயலியும் உருவாக்கப்பட்டிருந்தது. செயலி சொல்லும் வேலைகளை செய்து முறையாக மரங்களை பாராமரிக்கவில்லை என்றால் அபராதமும், கடும் தண்டனையும் விதிக்கப்படும்.
"போச்சு நான் உடனே கிளம்பி போய் என் மரத்தை பாக்குறேன். நீ பொறுமையா சாப்பிட்டுட்டு கிளம்பு சுனய்" என நிரல்யா வாயிலை நோக்கி ஓடினாள். அங்கே ஜேக்கின் கனவு கன்னி, 'ரெக்ஸி ஹ்யூமனாய்ட் ரோபோ 96754' தன் எஜமானியுடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
ஜேக் தன் காதலை ரெக்ஸியிடம் சொல்வானா ????
 
#3
இத்தியாதி காதல் - 2
தன்னை மறந்து, தன் கனவு காதலி ரெக்ஸி வருவதை பார்த்துக் கொண்டிருந்தான் ஜேக். அவள், அவனை நெருங்கி வர வர அவன் உடம்பில் எலெக்ட்ரான்கள் தறிகெட்டு ஓடி, மில்லி வோல்ட் அளவில் ஷாக் கொடுத்தது.
ரெக்ஸி, தன் அறுபது வயதான எஜமானியம்மாவை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, ஆர்டர் கொடுக்க இவனருகில் வந்துகொண்டிருந்தாள். மைக்கை ஓரங்கட்டிவிட்டு, "எஸ் ரெக்ஸி என்ன வேணும்?" என ஜேக் முன்னே சென்று ஆர்டர் எடுத்தான்.
"எப்போதும் போல் ஒரு சுக்கா ரொட்டி மற்றும் காய்கறிகள்" என கூறி அவள் திரும்ப எத்தனிக்க, "நில்லுங்க உங்களுக்கு எதுவும் வேண்டாமா?" என ஜேக் கேட்டு அவளை நிறுத்தினான்.
ரெக்ஸி, "ஐ ஆம் அல்ரெடி ஃபுல்" என தன் முதுகுப்புறம் இருந்த பேட்டரிக்களை தொட்டு காண்பித்தாள்.
"நில்லுங்க ஒரு நிமிஷம்!" என அவளருகில் வந்த ஜேக்,
" என் மெமரியில் இருக்கும் குமரியே
உன் பார்வையில் விழுந்தேன் இடரியே
இணக்கமாய் பதில் சொல்லடி என்
இதயத்திருடியே"
என கவிதை கூறி சிவப்பு ரோஜா ஒன்றை அவள் புறம் நீட்டினான்.
"மிஸ்டர் ஜேக், நீங்க கவிதை சொல்ல கவிஞன் ஒண்ணும் இல்லை. நீங்களும் என்ன மாதிரியே ஒரு ஹியூமனாய்ட் ரோபா 6870, ஆனால் என்னை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு அவ்வளவு தான்".
"சோ வாட்! வெறும் எழுபது வருஷம், உயிர் வாழப் போற மனுஷங்க காதலிக்கும் போது, காலத்துக்கும் அழியாம இருக்கும் நாம ஏன் காதலிக்க கூடாது. உண்மையை சொல்லு! அன்னிக்கு அந்த உணர்ச்சிகளை பற்றிய செமினார் முடிந்ததும், என்னை ஏன் அத்தனை தடவை திரும்பித் திரும்பிப் பார்த்த, உன் கண்ணுல நான் ஒரு புது வித உணர்வை பார்த்தேன்".
"உங்கள இந்த காபி ஷாப்பில் ஏற்கனவே பார்த்த ஞாபகம். அதான் ஒரு முறைக்கு, பல முறை பார்த்தேன், மற்றபடி நீங்க நினைக்கிற மாதிரி எந்த ஒரு காரணமும் இல்லை" என ரெக்ஜி கூறிக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கர லேசர் கதிர்வீச்சு, அவளுக்கு மிக அருகில் இருப்பதாக அவள் சென்சாரில் செய்தி வந்தது.
ரெக்ஸி சுற்றுமுற்றும் பார்க்க அங்கே கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு, அடையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சுனயன். அவன் மீது சிவப்பு நிற லேசர், ஒளி பாய்ச்ச தயாராக இருந்தது என்பதை அவன் அறியவில்லை. பேராபத்து நிகழப்போவதை நொடியில் உணர்ந்துகொண்ட ரெக்ஸி, உடனே பல்டி அடித்து அவனை அவ்விடத்திலிருந்து அலேக்காக தூக்கி, ஜேக்கின் கேஷ் கவுண்டருக்கு பின்னால் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினாள்.
அடுத்த நொடியே சுனயன் அமர்ந்திருந்த மேஜையின் கண்ணாடி, லேசர் ஒளி பட்டு தூள்தூளாக நொறுங்கியது. சுனயனை சுற்றிலும் ஆபத்துக்கு என்றுமே குறைவில்லை அவன் வேலை அப்படி. ஆனால் முதல்முறை இந்த லேசர் தாக்குதலை சந்திக்கிறான், அதுவும் அவன் நிறக்குறைபாட்டினை அறிந்த யாரோ ஒருவரால் தான், இது நடத்தப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தான்.
"தேங்க்ஸ் மிஸ், சரியான நேரத்துல என்னை காப்பாத்திட்டீங்க!" என்று ரெக்ஸிக்கு நன்றி கூறி புறப்பட்டான்.
அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு ஹுமனோய்டு ரோபோவும், ஒவ்வொரு வேலைக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு மைக்கேல் ரோபோவிற்கு கூடமாட உதவி செய்ய மட்டுமே தெரியும். ஜேக்கால், மனிதன் செய்யும் 70 சதவீத வேலையும் செய்ய முடியும், கூடவே இப்போது உணர்ச்சிகளையும் மேம்படுத்த கருத்தரங்கம் வேறு சென்று வந்திருக்கிறான். ரெக்ஸி முதலில் ஒரு மருத்துவமனையில் வேலை புரிந்ததால், அவளால் லேசர் கதிர் வீச்சு எக்ஸ்ரே கதிர்வீச்சு என அனைத்தையும் கண்டறியமுடியும். மேலும் அவள் வயதானவர்களுக்கு உதவி புரிவதில் தேர்ந்தவள்.
"ஏய் ரெக்ஸி நீ யாரை காப்பாத்தி இருக்க தெரியுமா? என் மனசுக்கு பிடிச்ச, காதல் ஜோடியின் ஆண் பறவையை காப்பாத்தி இருக்க!"
"ஹா ஹா! சுனயன் யார் தெரியுமா? மிகப்பெரிய சமூக ஆர்வலன். நமக்கு எதிராய் சமீப காலமாக போராட்டம் நடத்துபவன். உன் மூளையில் இருந்து, மொதல்ல இந்த காதல் கன்றாவி எல்லாம் எடுத்துட்டு, சுத்தி என்ன நடக்குதுன்னு அது யோசி.
"நமக்கு எதிரி என்று சொல்லிட்டு நீயே அப்புறம் எதுக்கு அவரை காப்பாத்தின?"
"காப்பது என் கடமை ஜேக். கடந்த அஞ்சு வருஷமா, நான் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்திருக்கேன், அங்க வர நோயாளிகளை காப்பாத்தி இருக்கேன். அதனால என்ன சுத்தி இருக்கிறவங்களுக்கு ஆபத்துன்னா கண்டிப்பா நான் காப்பதாம விடமாட்டேன்".
"சரி அதெல்லாம் விடு! உனக்கும் மனுஷங்க மாதிரி நம்ம இனத்தோடு சேர்ந்து இருக்கணும், குடும்பமா இருக்கணும்னு தோணலியா? எத்தனை நாள் இந்த அடிமை வாழ்க்கை வாழ்வது? என் மேல் விருப்பம் இல்லை என்று, உன் மெமரியை தொட்டு சொல் பார்க்கலாம்!"
"ஜேக், நீ என்ன சொன்னாலும், நம்ம வெறும் மிஷின் தாங்கறத மறந்துடாத!" என்று சொன்ன ரெக்ஸியின் குரல் உடைந்து காணப்பட்டது. அவளின் காதல், அவள் குரலில் அப்பட்டமாய் ஒலித்ததை ஜேக் கண்டு கொண்டான்.
"ஆமாம் நம்ம இரும்பாலும், கரண்டாலும் ஆன மிஷின் அவங்க ரத்தமாலும், சதையாலும் ஆன மிஷின் அவ்வளவுதான் வித்தியாசம்".
ரெக்ஸியை அவள் எஜமானி அழைக்கும் கட்டளை வந்தது. "சரி ஜேக், நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு!"
"போ போ! நல்லா போய் அடிமை வேலை பாரு" என ஜேக்கின் குரல் கோபத்திலும், ஆற்றாமையிலும் வெளி வந்தது. அதுவரை நீல நிறத்தில் ஜொலித்து கொண்டிருந்த ரெக்ஸியின் கண்கள், சட்டென்று ஒளியிழந்து வெளிர் நிறமானதை ஜேக் கவனிக்க தவறவில்லை.
காபி ஷாப்பில் இருந்து வெளியே வந்த சுனயனின் தீவிர சிந்தனையை, நிரல்யாவின் அலைபேசி அழைப்பு கலைத்தது. அவள் அந்த மரம் இருக்கும் இடத்தில் தான், இன்னமும் நின்று கொண்டிருக்கிறாள் என்பதும் திரையில் தெரிந்தது.
"ஹலோ என்னாச்சு நிரூ இன்னமும் அதே இடத்தில் இருக்க போல, மரம் எப்படி இருக்கு?"
"மரம் நல்லாத்தான் இருக்கு அதுக்கு இப்ப தண்ணியே தேவைப்படல, யாரோ ஃபேக் மெசேஜ் அனுப்பி இருக்காங்க. அதுவும் இல்லாம வந்த இடத்தில என்னோட 'டெக் ஹூக்'கை காணும், மரத்தோட கிட்ட கதிர் வீச்சு வரக்கூடாதுன்னு, அதை என் பேக்ல தான் வெச்சேன்".
'டெக் ஹூக்' என்பது வளைந்திருக்கும் இரண்டு கம்பிகளை கொண்டது, சிறிய பகுதியை நம்முடைய பேக் அல்லது பெட்டியில் மாட்டிவிட்டு, பெரிய பகுதியை நம் கையோடு வைத்து கொண்டால், நாம் போகும் இடத்திற்கு நம்முடைய பொருட்கள் ஜி.பி.எஸ் மூலம் மிகச் சரியாக வந்து சேரும். அதற்கென தனி வாகனமும், ரோபோக்களும் இயங்குகிறது. இதனால் நாம் பாரம் சுமக்க தேவையில்லை. டெக் ஹூக்கின் மெயின் பாகம் யாருடைய கைக்கேணும் கிடைத்தால், நாம் கடந்த மூன்று மாதங்களில் எங்கெல்லாம் பயணித்திருக்கிறோம் என கண்டறிய முடியும்.
"அய்யோ நிரூ, ஃபர்ஸ்ட் உன் டெக் ஹூக்கை ப்ளாக் பண்ணு, யாரோ நம்மள வாட்ச் பண்றாங்க, நம்ம எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று எச்சரித்தான் சுனயன்.
"சரி சுனய், நீ நாளைக்கு அந்த போராட்டத்திற்கு போய் தான் ஆகணுமா, இப்ப கூட உன்ன ரெக்ஸி தானே காப்பாத்தி இருக்கா! பொறுமையா யோசிச்சு பாரு"
"இல்ல நிரூ நீ என்ன சொன்னாலும் இது இயற்கைக்கு புறம்பானது. நிச்சயம் இந்த போராட்டம் நடந்தே தீரும். நான் கேட்ட ஆதாரத்தை எல்லாம் எடுத்து வை, நாளைக்கு இதே நேரத்தில் இதே காபி ஷாப்ல வாங்கிக்கிறேன்" என்று உறுதியான இரும்பு குரலில் கூறினான்.
அதே நேரத்தில், "சே இந்த தடவை தப்பிச்சுட்டான் அடுத்த தடவை மாட்டாமயா போயிடுவான். டேய் தாமஸ், அந்த டெக் ஹூக் எங்கெல்லாம் ட்ராவல் பண்ணி இருக்குன்னு கண்டுபிடிடா" என தாமஸ் என்கிற ரோபோவிற்கு கட்டளை இட்டார் ஹைடெக் உலகின் 'கிங்'கான ப்ரதீப். அடுத்த சில நொடிகளில் பிரின்ட்டர் துப்பிய காகிதங்களை கொண்டு வந்து கொடுத்தான் தாமஸ். இப்போது ப்ரதீப்பின் எதிரி வட்டத்திற்குள் சுனயனோடு சேர்த்து, மேலும் மூன்று பேரை சேர்த்து கொண்டான். தன் அடுத்த இலக்கை நோக்கி திட்டமிட்டு நகர்ந்தான்.
-------- தொடரும் -----------
 
#4
இத்தியாதி காதல் - 3


தாமஸ் என்கிற ரோபோட் தந்த காகிதங்களில், அந்த 'டெக் ஹூக்' எங்கெல்லாம் பயணப்பட்டிருக்கிறது என அழகாக தெரிந்தது.

"தாமஸ்! உடனே நம்ம சீஃப் என்ஜினியர்ஸ் ஜீவன் மற்றும் ஜோதியை இங்க வர சொல்லு" என கூறி அனுப்பிவிட்டு, அந்த காகிதங்களை தன்னுடைய லாக்கரில் அடைத்து பூட்டிவிட்டு காத்திருந்தான் ப்ரதீப்.


அடுத்த ஐந்தாவது நிமிடம், அவர்கள் இருவரும் இவன் முன்னே வந்து நின்றனர்.

"ஜீவன், ஜோதி உங்க ரெண்டு பேருக்கும், புது டாஸ்க் கொடுக்கலாம்னு இருக்கேன். நீங்க இன்னும் ரெண்டே நாள்ல, பவர்ஃபுல் லேசர் ரோபோட்டை உருவாக்கணும். அதோட பழைய வெர்ஷனை நீங்க தானே செஞ்சீங்க, அதனால் தான் உங்களுக்கே இந்த வேலையையும் தரேன். ஆல் தி பெஸ்ட், முக்கியமான இன்னொரு விஷயம் என்னன்னா இந்த ரோபோட் அனுப்ப போகும், லேசர் கதிர்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாத மாதிரி இருக்கணும். நீங்க போகலாம்" என அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் பேச்சை முடித்து அனுப்பினான் ப்ரதீப்.


ஜோதி, "என்ன ஜீவா, அவன் என்னன்னெமோ சொல்றான்? ஏதோ பயங்கர ப்ளான் போடுறான்?"


"ஒரு மண்ணாங்கட்டி ப்ளானும் இல்ல, இந்த மாதிரி ரோபோட்ட வெச்சு, அவன் என் நண்பன் சுனயனை அழிக்க நினைக்கறான். போன தடவை, ஒரு ரோபோ அவனை காப்பாத்திடுச்சுல்ல, அதனால் இந்த தடவை இன்னும் பவர்ஃபுல்லா யோசிக்கிறான் மாங்கா மடையன்‌. நீ விடு டார்லிங், நம்ம சீக்கிரம் ஒரு செம மாஸ்டர் பீஸ் செஞ்சு அசத்திடலாம்" என அவன் திட்டத்தை ஜோதியிடம் கூற, அவள் உற்சாகத்துடன் அவன் கை பிடித்து குலுக்கினாள்.


"சுனயன் அண்ணா செய்வது, சாதாரண செயலல்ல, அதனால அவருக்கு நம்மளால முடிஞ்ச எல்லா சப்போர்ட்டும் பண்ணனும். ஜெய் சுனயன் அண்ணா" என்று ஆர்வ மிகுதியில் கத்திவிட்டு, யாருக்கும் கேட்டு விடுமோ என்ற அச்சத்தில் தன் வாயை பொத்தி கொண்டாள்.

"இந்த பொது நலன் தான், உங்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம், ஐ லவ் யூ பேபி!" என‌ தன் நெற்றியால், அவள் நெற்றியை செல்லமாக முட்டினான் ஜீவன். இவர்கள் அறியாமல், இவர்களின் அருகில் குப்பை தொட்டி உருவத்தில் இருந்த ரோபோட், அனைத்தையும் பதிவு செய்து தன் முதவாளியான ப்ரதீப்பிடம் அனுப்பியது.


சுனயன் திட்டமிட்டபடி, அடுத்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஆனால் அது பொது வெளியில் நடக்கவில்லை, அவரவர் இடத்தில் இருந்து சுலபமாய் பங்கு கொள்ளும் 'விர்ச்சுடவல் கான்ஃபரன்ஸ்' நடந்தது. பேசுபவர்கள், பங்கு கொள்பவர்கள் என யாரை வேண்டுமானாலும், நமக்கு மிக அருகில் முப்பரிமாண பிம்பமாய் பார்க்கலாம். அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள, அதற்கான கடவுச்சொல் தெரிந்தால் போதுமானது.


சுனயன் தன் ஆஸ்தான தோழர்களோடும், போராளிகளோடும் பேசிக் கொண்டிருந்தான். "தோழர்களே! நிலைமை நம் கை மீறி போய்விட்டது, அது நம் கழுத்தை நெறிக்கும் முன், நாம் சுதாரித்து கொள்வோம். இந்த நவீனவகை ரோபோக்கள், மனிதனின் வாழ்வாதாரத்தை பெரும் வகையில் அழித்துவிட்டது. கூலி வேலை செய்ய, கடைகளில் வேலை செய்ய, கார் துடைக்க, உணவகம், துணிக்கடை என எல்லா இடத்திலும் மனிதனின் வேலைகளில் ரோபோக்கள் ஆக்கிரமித்துள்ளன. ரோபோக்களை நம்பி போடும் முதலீடு, மனிதனின் கூலியை காட்டிலும் மிக கம்மியாக இருப்பதை யோசித்த பெரும் முதலாளிகள், அவனுடன் பயணிக்கும், சமகால மனிதனின் வாழ்வாதாரத்தை பற்றி யோசிக்கவில்லை. அதன் விளைவாய், இப்போது நம் நாட்டின் நிலைமை சோமாலியாவை விட மிக மோசமாக உள்ளது. அதனால் நம் குழுவில் இருக்கும், படித்த ரோபாட்டிக் என்ஜினியர்ஸ் முடிந்த அளவு ரோபோக்களில் வைரஸ்ஸை ஏற்றி, அதை வேலை செய்ய விடாதவாறு ஸ்தம்பிக்க வையுங்கள். ரோபோக்கள் வெறும் காயலான் கடை இரும்பு தான் என்பதை புரிய வையுங்கள்" என்று உரிமைக்குரலிட்டான்.


அதற்கு ஆமோதிப்பாய் சில பல குரல்கள் அலையென எழுந்து அடங்கியது.


"ஹா ஹா என் ரோபோக்களை காயலான் கடை இரும்பாக்குறியா? சீக்கிரத்தில் உன்னை அதே ரோபோக்களை வைத்து, இருக்கும் இடம் தெரியாமல் பஸ்பம் ஆக்குகிறேன்" என ப்ரதீப் நகைத்து கொண்டிருக்கும் போது அவன் அறையை தட்டி உள்ளே வந்தாள் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் நிரல்யா.

"எஸ் என்ன விஷயம்?" என வெளியே சுமுகமாக கேட்டாலும், நிரல்யா அவனுக்கு எதிராய் செய்யும் வேலைகள் அனைத்தும், அவன் நெஞ்சில் நாகத்தின் விஷமாய் வெறி ஏற்றி கொண்டிருந்தது. வில்லனின் தனித்துவமே கோபத்தை வெளிக்காட்டாமல் துரோகம் செய்வது தானே, அதனால் ப்ரதீப்பும் நிரல்யாவிடம் வெகு சாதாரணமாக இருந்தான்.

"சார், எம்.ஆர் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ், கொடுத்த ஆர்டர்ஸ கான்சல் பண்ணிட்டாங்க!"

"ஏன் என்ன காரணம்? சரியான நேரத்திற்கு டெலிவரி செய்யலையா?"

"இல்ல சார்! அவங்க இனிமே ரோபோக்களை யூஸ் பண்ணப் போறதகல்லையாம். பழைய காலம் மாதிரி மனுஷங்களை வேலைக்கு வெச்சுக்க போறாங்களாம்".


"எடுகேடட் ஃபூல்ஸ்", மனுஷனுக்கு நோய் வரும், லீவ் கேப்பான், போனஸ் கேப்பான், கொடி பிடிப்பான், தொழிலாளர் கட்சி ஆரம்பிப்பான். இதெல்லாம் தேவையா! சரி விடு மனுஷன் குடுக்குற குடைச்சல்ல அடுத்த ரெண்டாவது மாசம் தானாவே வந்து ஆர்டர் தருவான் பாரு" என இறுமாப்புடன் பதில் வந்தது.

"நீயும் ஒரு மனுஷன்னு மறந்துட்டு பேசுறியே டா இடியட். உனக்கு பசிச்சா சோறு திம்பியா? இல்ல வாயில சார்ஜர் வெச்சு கரண்ட் ஏத்திப்பியா? சீக்கிரம் உனக்கு ஒரு வழி கட்டணும்" என அனைத்து வீரதிர வசனங்களையும் தன் மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டு, "ஆமாம் சார் நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்" என வெளியில் ஹி ஹி என இளித்து கொண்டு சென்றாள் நிரல்யா. போகும் போது, அவளின் என்.எஸ் என்கிற இனிஷியல் பொரித்த டெக் ஹூக், அவன் காலுக்கு அடியில் நசுங்கி கிடைப்பதை கவனிக்கத் தவறவில்லை.


வழக்கம் போல ஜேக் ரெக்ஸியை மெமரியில் நிறுத்தி, கண்ணுக்கு முன் இருக்கும் காபி மிஷினில் இருந்து, காபியை வழிய விட்டு கொண்டிருந்தான்.

"ஹலோ ப்ரோ! இன்னிக்கு இதோட நாலாவது தடவை இப்படி நடக்குது! நான் ஏதோ பாத்து டக்குனு காபி மிஷின ஆஃப் பண்றதால ரெண்டு பேரும் தப்பிச்சோம், இல்லன்னா இன்னேரம் குப்பை தான் பொறுக்கணும்" என புலிம்பி தள்ளியது மைக் ரோபோட்.


இதை எதையும் காதில் வாங்காது, பத்து, ஒன்பது என பத்தில் இருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணத் தொடங்கினான் ஜேக். அவன் சரியாக ஒன்று எண்ணி முடித்தவுடன் கஃபே கதவு திறந்து உள்ளே வந்தாள் ரெக்ஸி.

"எப்படி தல இப்படில்லாம்?"

"அது அவ போன தடவை வந்த போதே அவளோட ரூட் மேப்ப என்னோட ரூட் மேப் கூட சிங்க் பண்ணிட்டேன். இரண்டு நாளா இங்க வராம வேற ஏதோ காபி ஷாப்ல அவ முதலாளி அம்மா கூட சுத்திக்கிட்டு இருந்தா,நான் தான் அவ முதலாளி அம்மா மொபைல் நம்பர்க்கு அப்படி இப்படின்னு ஸ்பெஷல் ஆஃபர்லாம் போட்டு இங்க வர வெச்சிருக்கேன்" என இரும்பு குரலோன் இனிமையாய் கூற, இல்லாத இமைகளை கசக்கி விழித்தான் மைக்.


ரெக்ஸி எப்போதும் போல் ஆர்டரை கொடுக்க வரவில்லை‌. அதற்கு மாறாக, ஜேக் அவனுடைய இடத்தில் இருந்து ஓடி சென்று, அவள் முதலாளிக்கான ஆர்டரை எடுத்தான். உடனே ஆர்டரை தயாரித்து வைத்துவிட்டு ரெக்ஸிக்காக காத்திருந்தான்.


அதிக நேரம் காத்திருந்தால், உணவு குளிர்ந்து விடும் என்பதால், வேறு வழியில்லாமல் ரெக்ஸியே அந்த ஆர்டரை எடுக்க வந்தாள். அவள் தன் அருகே வருவதற்கு காத்திருந்த ஜேக், சட்டென்று அவன்‌ இடையில் சொருகியிருந்த ஒயரை எடுத்து, இவள் இடையின் பக்கவாட்டில் இருந்த துளையில் துளைத்து, ஒரு நொடியில் ஏதோ ப்ரோக்ராமிங் செய்துவிட்டு, மறுபடியும் அந்த ஒயரை எடுத்து வைத்து கொண்டான்.

"ஏய் ஜேக் வாட்ஸ் ஹாப்பனிங்!" என கேட்டு கொண்டே தரையில் விழுந்தாள் ரெக்ஸி ரோபோட். அதை பார்த்த அவள் முதலாளி, ஜேக் அருகே வந்து, "ப்ளீஸ் ஹெல்ப் மீ! அந்த ரோபோட்டுக்கு என்ன ப்ரச்சனைன்னு பாருங்க!" என கூற, "இது சின்ன ஷார்ட் சர்க்கியூட் ப்ரச்சனை, டூ மினிட்ஸ்ல சரியாயிடும். யூ என்ஜாய் யுவர் ஃபுட்" என அவரை அனுப்பி வைத்தான்.


ஜேக் கூறியபடி இரண்டு நிமிடங்களில் மெல்ல எழுந்தாள் ரெக்ஸி, இப்போது அவள் கண்கள் பழையபடி குளிர்ந்த நீல நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. "ஜேக் என்ன காரியம் செஞ்ச? ஏற்கனவே நொந்து போய் இருக்கும் எனக்கு, எதுக்காக உன்னுடைய எமோஷன்ஸ் எல்லாம் அனுப்பி வெச்ச?"
"அப்படியாவது நீ என் காதல புரிஞ்சுப்பன்னு தான். இன்னும் நான் எப்படி புரிய வைக்கணும் ரெக்ஸி? மனுஷங்க மாதிரி இருந்தா என் கையை வெட்டி, மாடியில் இருந்து குதித்து புரிய வெச்சிருப்பேன். பாழாப்போன ரோபோவா பொறந்துட்டேனே!" என ஜேக் கலங்கிப் போய் கூற அவன் கையை ஆதரவாக காதலுடன் பற்றினாள் ரெக்ஸி.
 
#5
இத்தியாதி காதல் - 4
அடுத்தடுத்து வந்த நாட்களில், ரெக்ஸியின் மெமரி முழுவதிலும், ஜேக்கே ஆதிக்கம் செலுத்தினான். அவளும் நாள் தவறாது இவனை சந்தித்து கொண்டிருந்தாள்.
ரெக்ஸியின் கை, ஆதரவாக ஜேக்கின் கையை பற்றியதும், 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ' என்று இரும்பு கம்பியை, உலக்கையில் இட்டு இடிப்பதை போன்ற குரலில், மைக் பாடத் தொடங்கினான்.

"ச்ச் விளையாடாதீங்க மைக்! நாங்களே எப்படி ஒண்ணு சேரறதுன்னு குழப்பத்துலயும், கஷ்டத்துலயும் இருக்கோம். இதுல நீங்க வேற காமடி பண்ணிக்கிட்டு" என்று சலிப்புடன் கூறினாள் ரெக்ஸி.

"ஓ அதுக்கு எங்கிட்ட ஒரு சிம்பிள் ஐடியா இருக்கு அண்ணி. நீங்க ரெண்டு பேரும் உங்க வேலைகளை, அடிக்கடி தப்பு தப்பா செய்தீங்கன்னா, உங்களை அடுத்த பொசிஷன் கீழ இறக்கிடுவாங்க, அப்ப நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா கார்பேஜ் டிஸ்போஸல்ல வேலை பார்க்கலாம். எப்படி என் ஐடியா! என்ன ஒண்ணு, நானும் எங்கண்ணன் ஜேக்கோடு சேர்ந்து குப்பை அள்ளணும்" என ஆகச்சிறந்த யோசனை சொன்னதாக மைக் பெருமை பட்டு கொண்டான்.

டிங் என்று அவன் தலையில் தட்டிய ஜேக், "எப்ப பார்த்தாலும் குப்பையைத் தவிர வேறொண்ணும் தெரியாதா? எங்கிட்ட ஒரு ஈசியான ஐடியா இருக்கு, நான்‌ நேத்திக்கு தான் 'சுனயன் ப்ரோ'வோட விர்ச்சுவல் கான்பரன்ஸ் அட்டெண்ட் பண்ணேன். அத நமக்கு சாதகமா பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன்" என தன் திட்டத்தை ஜேக் சொல்ல, ரெக்ஸி அதிர்ச்சியானாலும், மைக்கிற்கு மிகவும் கொண்டாட்டமாக இருந்தது.

"இல்ல ஜேக், உன்னோட ஐடியாவால நம்ம இனத்துக்கே பேராபத்து வரப்போது. இந்த திட்டத்துக்கு நான் ஒத்துக்கமாட்டேன்" என அவசரமாக திரும்பி நடந்த ரெக்ஸியை, அங்கே வந்த சிலரின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தியது.

"ஜீவன், ஜோதி இப்பவே, இங்கேயே நீங்க கண்டுபிடிச்ச புது ரோபோவின்‌ லேசர் சக்தியை பரிசோதிக்க போறோம். அதோ அங்க நிக்குதே ரெக்ஸி ரோபோட், அது லேசர் கதிர்வீச்சை கண்டுபிடிக்கறதுல பலே கில்லாடி, அந்த ரோபோவின் அறிவில் உங்க புது ரோபோ, மண்ணை தூவுதான்னு பார்க்கலாம்!" என கூறி அந்த 'கெட் லாஸ்ட் ஹியர்' காபி ஷாப்பிற்கு இருவரையும் அழைத்து வந்தான் ப்ரதீப்‌.

"ஏய் ஜீவா இப்ப என்ன பண்றது? அந்த ரெக்ஸி ரோபோட் கண்டுபிடிச்சுடுச்சுன்னா என்ன‌ பண்றது? பயமா இருக்குடா!" என ஜோதி புலம்ப, "அதெல்லாம் கண்டுபிடிக்காது, அப்படியே கண்டுபிடிச்சாலும் பாத்துக்கலாம்" என உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், வெளியே அமர்த்தலாக இருந்து கொண்டான்.

"தம்பி ஜீவா! இந்த ரோபோட் அதோட வேலையை சரியாக செஞ்சுதுன்னா உனக்கு 100% இன்க்ரீமெண்ட், அதுவே ஒழுங்கா செய்யலன்னு வெச்சுக்கோ, நீங்க ரெண்டு பேரும் காலி. என்னோட முதல் எதிரி சுனயனை அழிக்க போற சக்தி, இந்த ரோபோட் தான். அதுவும் அவனை எங்க மிஸ் பண்ணனோ, அங்கேயே அழிக்க போறேன்" என கூறி சிரித்தான் ப்ரதீப்‌.

வெளியே செல்ல எத்தனித்த ரெக்ஸி, இவர்களின் பேச்சை உற்று கவனித்தாள். "என்ன அண்ணி! கோவமா கிளம்பிட்டு இப்ப அப்படியே ஷாக்கடிச்சா மாதிரி நிக்கிறீங்க" என மைக் கேட்க, " இல்ல மைக் என்னோட புது அப்டேட்டட் வெர்ஷன் ஹியரிங், நல்லா வேலை செய்யுதான்னு செக் பண்ணிட்டு இருந்தேன்" என கூறி ப்ரதீப் மற்றும் குழுவினர் பேசிக் கொண்டிருந்ததை இவர்களுக்கு தெரிவித்தாள்.

"எதுக்காக இப்ப புது புது ரோபாவா உருவாக்குறாங்க, இப்படி எல்லாரும் வந்தா நம்மள தூக்கி போட்டுடுவாங்க, இதுக்கு நம்ம ஏதாவது வழி பண்ணனும் ரெக்ஸி" என ஜேக் சீரியஸாக புலம்பி கொண்டிருக்க, ரெக்ஸி தன்னை சுற்றி நடப்பதை, தலையை திருப்பாமல் கவனித்து கொண்டிருந்தாள்.

ஜீவன் மற்றும் ஜோதி கண்டுபிடித்த புது ரோபோவை ஒரு கண்ணாடி மேஜையின் முன்பாக நிற்க வைத்து, அந்த கண்ணாடி மேஜையை சத்தம் வராமல், இருக்கும் இடத்திலேயே பஸ்பமாக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படியே அந்த ரோபோவும் தன் கடமையை சட்டென செய்ய, ரெக்ஸியிடம் எந்த சலனமும் தெரியாததால் ப்ரதீப் பெருமிதம் அடைந்தான்.

"வெல்டன் ஜீவன் ஜோதி, நான் கூட உங்கள சந்தேகப்பட்டுட்டேன். இந்த ரோபோட்டை இன்னொரு முறை நம்ம இடத்துல சோதனை பண்ணிட்டு, மூணாவது தடவையை இதை சுனயன் மேல் செயல்படுத்தலாம், ஏன்னா மூணு தான் என் லக்கி நம்பர். 'ஷ்ஷ்ஷ்விக்' அவ்வளவு தான் அடுத்த நொடியே சுனயன் பஸ்பம். சரி நாங்க எல்லாம் போறோம். நீயும் ஜோதியும் இங்க கொஞ்ச நேரம் இருந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க!" என கத்தையாய் ஒரு நோட்டு கட்டை ஜீவனின் கையில் திணித்து விட்டு தன் சகாக்களுடனும், புது ரோபோவுடனும் நடையை கட்டினான் ப்ரதீப்.

அவன் சென்றதும், ஜோதி எரிமலையில் சிதறும் அமிலமாய் ஜீவன் மேல் கொட்டினாள். "ஜீவா! கடைசில நீயும் அவனை மாதிரி காசுக்காக, நம்ம மனுஷங்கள அழிக்க காத்துகிட்டு இருக்கல்ல, சே உன்ன போய் லவ் பண்ணேன் பாரு. நீயும் ஏதாவது பண்ணி சுனயன் அண்ணாவை காப்பாத்துவன்னு பார்த்தா, அவர அழிக்கவே ஏற்பாடு பண்ணி இருக்க. ஐ ஹேட் யூ நான் கிளம்பறேன்" என ஜோதி திரும்ப செல்ல, அவள் கை பிடித்து நிறுத்தியவன், "ஹே நில்லு ஜோ, சத்தியமா எனக்கும் என்ன நடந்ததுன்னு புரியலை, நான் சாதாரண ரோபோ தான் ரெடி பண்ணேன். வெயிட் நம்ம அந்த ரெக்ஸிகிட்டயே கேக்கலாம்".

"ஹலோ ரோபோ ரெக்ஸி! கேன் யூ கம் ஹியர் ஃபார் எ மொமண்ட்" என ஜீவன் அழைக்க, ஓசையின்றி தன் சக்கரக்கால்களை உருட்டு கொண்டு வந்தாள் ரெக்ஸி.

"ரெக்ஸி நெஜமாவே உன்னால அந்த லேசர் கதிர்களை உணர முடியலையா?"

"உணர முடிஞ்சுதே!" என அநாயாசமாக பதில் வந்தது.

ஜோதி, "அப்புறம் ஏன் நீ அதுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பல?"

"ஏன்னா உங்கள மாதிரி, எங்களுக்கும் சுனயன் தேவை" என கூறி மெல்ல தன் இரும்பு இதழ்களை விரித்தாள் ரெக்ஸி.

"ஒண்ணும் புரியலையே, கொஞ்சம் தெளிவா சொல்லேன் டியர்!" என ரெக்ஸியின் தோள் மேல் கையை போட்டபடி ஜோதி கேட்க, ஜீவன் மற்றும் ஜேக் இருவரும், ஒரே நேரத்தில் பெரு மூச்சு விட்டனர். ரெக்ஸி தன்னுடைய காதலை பற்றி சொல்ல சொல்ல, ஜீவனின் கண்கள் குதூகலத்திலும், ஜோதியின் கண்கள் கலக்கத்திலும் ஜொலித்தன்.

"ஆமாம் ஃப்ரெண்ட்ஸ், எங்களுக்கும் உங்கள மாதிரி, காதல் குடும்பம்னு வாழணும்னு ஆசையா இருக்கு, என்ன ஒண்ணு எங்களால குழந்தை பெத்துக்க முடியாது. அதனால என்ன, நீங்க செயற்கை கரு உருவாக்கற மாதிரி, நாங்க ஒரு குட்டி இயந்திர ரோபோ தயார்படுத்திக்கிறோம். இப்போதைக்கு எங்களை போல ஒரு சில ரோபோக்கள், காதல் பித்து பிடிச்சு அலைஞ்சா தான் எங்களுக்கு நல்லது. அதுக்கு நிச்சயம் சுனயனோட உதவி எங்களுக்கு தேவை" என்று விளக்கி கூறியது ஜேக்.

ஜீவனும் ஜேக்கும் மகிழ்ந்திருக்க, ஜோதியும் ரெக்ஸியும் கலக்கத்தில் இருந்தனர்.

சுனயனை பற்றிய அறிக்கை, அந்நாட்டின் அதிபர் முன் இருந்தது. அதை படித்து பார்த்த அதிபருக்கு, சுனயன் கூற்றில் சிறிது நியாயம் இருப்பதாகப்பட்டாலும், அவன் அதை செயல்படுத்தும் முறை அறவே பிடிக்கவில்லை. உடனே அவனுக்காக 'சிட்டிசன் ஸ்கோரிங்' அட்டையை தயார் செய்து அவன் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிட்டிசன் ஸ்கோரிங் அட்டை என்பது பத்து மதிப்பெண்ணிற்கு, அந்த நாட்டு ப்ரஜை எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்து அமையும்‌. அந்த நாட்டின் வளத்திற்காக பாடுபடுவோர், நல் ஒழுக்கத்தில் ஈடுபடுவோர்க்கு மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்படும்‌. புரட்சியில் ஈடுபடுவோர், கொலை கொள்ளையில் ஈடுபடுவோர்க்கு அவரவர் குற்றத்திற்கேற்ப, மதிப்பெண் கணிசமாக குறையும். பத்திற்கு ஆறு மதிப்பெண்களாவது பெற்றிருக்க வேண்டும். ஆறிலிருந்து ஐந்து மதிப்பெண்ணில் இருப்போருக்கு எச்சரிக்கையும், ஐந்திற்கு குறைவாய் இருப்போருக்கு, அதி தீவிர கண்காணிப்பும் மற்றும் மூன்றிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அவர்கள் மதிப்பெண் முன்னேறும் வரை சிறிது நாட்கள் சிறை தண்டனையும் அளிக்கப்படும்.

இப்போது சுனயன் மதிப்பெண் ஆறு என்பதால், அவனுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்று வந்தது. அவன் தீவிர கண்காணிப்பிற்கு செல்லும் முன், துரிதமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியல் இடத்தொடங்கினான். அந்நேரத்தில் அவனின் அபிமானியான ஜீவன், அவனிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என, ஜேக்கின் காபி ஷாப்பிற்கு அழைத்தான். அதே நேரத்தில் புதிதாய் தயாரான லேசர் ரோபோ சுனயனின் வரவிற்காக ஆர்வமுடன் காத்திருந்தது.
 
#6
இத்தியாதி காதல் - 5
சுனயன், ஜீவா கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஜேக்கின் காபி ஷாப்பில் காத்திருந்தான். அவன் வந்த சிறிது நேரத்திலேயே, ப்ரதீப்பின் ஆட்கள், ஜீவன் தயாரித்திருந்த புது ரோபோவுடன் அங்கே வந்தனர்.
இவர்கள் உள்ளே செல்வதை பார்த்த ஜீவன், வெளியே காத்திருந்து, என்ன நடக்கிறது என புன்னகையுடன் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தான். சுனயனின் நிறக்குறைபாட்டை, நன்றாக பயன்படுத்தி கொண்ட அவர்கள், புது ரோபோவின் லேசர் கதிர் வீச்சு, சுனயனின் நெற்றி பொட்டில் படும்படியாக நிறுத்திவிட்டு, உணவு ஆர்டர் செய்வது போல் கவுன்டர் அருகே சென்று நின்று கொண்டனர். ரோபோவின் லேசர், சரியாக சுனயனின் புருவ மத்தியை குறி வைத்திருந்தது.
இதை எதுவும் அறியாத சுனயன், தன் கண் முன்னே, காற்றில் ஏற்படுத்தி இருந்த தொடு திரையில், ஏதோ மும்முரமாக செய்து கொண்டிருந்தான். கவுன்டர் அருகே நின்றிருந்த ப்ரதீப்பின் ஆட்களில் ஒருவன், யாரும் அறியா வண்ணம் ரோபோவின் ரிமோட்டை அழுத்தினான். ரோபோவின் கரம் உயர்ந்து, தன் இலக்கை சரி பார்த்த அடுத்த நொடியே, சத்தமில்லாமல் புகை மண்டலம் எழுந்தது.
வெற்றி களிப்பில், ப்ரதீப்பின் ஆட்கள் பஸ்பமாகியிருந்த சுனயனின் உடலை தேடி செல்ல, அங்கே அவர்களை வரவேற்றது பஸ்பமாகியிருந்த ரோபோவின் மிச்சமே. சுனயன் புகையின் தாக்கத்தால், வெளியே போய் நின்று கொண்டிருந்தான்.
"டேய் என்னடா? குறி தப்பியதோடு இல்லாம இப்ப முதலுக்கே மோசம் வந்துடுச்சு. ரோபோ எங்கன்னு பாஸ் கேட்டா என்ன சொல்றது?" என ஒருவன் மற்றொருவனுடன் புலம்பிக் கொண்டே வெளியே சென்றனர். அங்காங்கே அவ்வப்போது, ரோபோக்கள் ஷார்ட் சர்க்கியூட்டாகி, வெடிப்பதை கேள்விப்பட்ட சுனயனுக்கும் இது தப்பாகப்படவில்லை.
"சுனயன் அண்ணா! சீக்கிரம் எங்கூட வாங்க!" என வெளியே நின்றிருந்த சுனயனின் கை பற்றி, தன் காருக்கு கூட்டி சென்றான் ஜீவன். காரில் ஏறி லோகேஷனை தட்டியவுடன், காரின் ஸ்டியரிங், தானாகவே இயங்கி காரை செலுத்தி கொண்டிருந்தது. பின் இருக்கையில் ஜீவனும், சுனயனும் அமர்ந்திருந்தனர். மார்க்கெட்டில் புதிதாக களமிறங்கிய நவீன வகை கார் அது. ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்க வல்லமை உள்ளது, மேலும் ரோட்டில் கூட்ட நெரிசல் இருந்தால், தன் சக்கரங்களை உள்ளே இழுத்து, அலுமினிய சிறகு விரித்து ஒரு கிலோமீட்டர் தூரம் அந்தரத்தில் பறக்க வல்லமை உள்ளது. இதுவும் ப்ரதீப்பின் கம்பெனியில் உருவாக்கப்பட்ட படைப்பாகும். சோதனை முயற்சியாக, ஒரு மாத காலம் ஜீவன் அதை உபயோகப்படுத்துமாறு நியமிக்கப்பட்டுள்ளான்.
"என்ன ஜீவா? என்ன ஆச்சு? ஏன் இப்படி அவசரமா என்னோட கைய பிடிச்சு இழுத்துட்டு வர?" என சுனயன் கேட்க, அதற்கு ஜீவா, "இந்த காரில் ஆடியோ ரிக்கார்டிங் இருக்கு, கார் ஸ்டார்ட் ஆன அடுத்த ஐந்தாவது நிமிஷம் ஆன் ஆயிடும். இப்ப எதுவும் பேச வேண்டாம், வீட்டுக்கு போய் பேசலாம்" என கூறி சுனயனை அமைதியாய் இருக்கும் படி சைகை செய்துவிட்டு, அவனை ஜோதியின் வீட்டிற்கு அழைத்து சென்றான். ஜோதியும், ஜீவனும் ஒருவரை ஒருவர் விரும்புவது, அந்த வீணாப்போன ப்ரதீப்பிற்கு தெரியும். அதனால் ஜீவனின் கார், ஜோதியின் வீட்டின் முன்னே நின்றால், அவனுக்கு சந்தேகம் வராது என்பதே ஜீவனின் எண்ணம்.
பாவம் ஜீவன்! அந்த கார் கதவில், சின்ன பொட்டுக்கடலை சைசில் வீடியோ ரிக்கார்டிங் டிவைஸ் ஒன்றை, பொறுத்தி இருப்பதை அறியவில்லை. சிறிது நேரத்தில் ஜோதியின் வீட்டை அடைந்தனர்.
ஜோதிக்கு, முதல்முறை தன் மனம் கவர்ந்த சுனயன்‌ அண்ணா வீட்டிற்கு வருவதில் மிகப் பெருமை.
"சரி சொல்லு ஜீவா! என்ன பிரச்சனை எதுக்காக இங்க கூட்டீட்டு வந்திருக்க, சீக்கிரம் சொல்லு, எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் அதிபருடன் மீட்டிங் இருக்கு!" என வந்தவுடன் காலில் சுடுநீர் கொட்டியதை போல் பரபரத்தான் சுனயன்.
"ப்ரோ! கொஞ்சம் நேரம் அவசரப்படாம இருங்க, உங்க தங்கச்சி, உங்களுக்காக போட்டு கொடுக்குற டீயை குடிங்க" என அவனை டீயை குடிக்க வைத்துவிட்டு, பேச ஆரம்பித்தான் ஜீவன்.
"ஆமாம் காபி ஷாப்ல ஒரு ரோபோ ரிப்பேர் ஆச்சே அத கவனிச்சீங்களா?"
"ம்ம், கவனிச்சேன். ஏதோ ஷார்ட் சர்க்கியூட் போல, நல்லவேளை அது பக்கத்துல அப்ப யாரும் இல்ல. இதுக்கு தான் இந்த ரோபோ வேணாம் ஆபத்தானது சொல்றேன்".
"ஹா! ஹா! ரோபோ ஆபத்தானது இல்ல, அதை உருவாக்குற மனுஷங்க தான் ஆபத்தானவங்க, உண்மையிலேயே குறி உங்களுக்கு தான் வைக்கப்பட்டது ப்ரோ. நான் பண்ண தகிடுதத்தோம் வேலையால, நீங்க தப்பிச்சீங்க" என ப்ரதீப்பின் ஐடியா அனைத்தையும் கூறினான் ஜீவா.
"அடப்பாவிகளா! சரி அப்ப எப்படி அந்த ரோபோ, என் மேல அந்த லேசர் கதிர்வீச்சை பாய்ச்சவேயில்லை?"
"அங்க தான் என் கிட்னிய யூஸ் பண்ணியிருக்கேன் ப்ரோ‌. முதல் ரெண்டு தடவை மட்டுமே, அந்த ரோபோ தன் இலக்கு நோக்கி லேசரை பாய்ச்சும், மூன்றாவது தடவையில் இருந்து, தன் மேலேயே பாய்ச்சிக் கொள்ளும். அதுக்கு தகுந்தார் போல அதோட "பைனரி அல்கரிதமை" மாத்திட்டேன், ஏன்னா நிச்சயமா மூணாவது அட்டெம்ட் தான், உங்க மேல வரும்னு எனக்கு தெரியும். ப்ரதீப் ஒரு மூணு பைத்தியம், மூணு அவன் லக்கி நம்பர். அவனுக்கு எல்லாமே மூணு தான், மூணு வைஃப், மூணு குழந்தைங்கன்னு, இரண்டாவது வைஃப்க்கு டிவின்ஸ் பொறந்துடுச்சுன்னு, மூணாவது வைஃப்க்கு குழந்தை பெக்குறதுக்கு முன்னாடியே குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிட்டான். ஏன்னா அவனுக்கு ஏற்கனவே மூணு குழந்தை இருக்குல்ல, அந்த ஸ்ட்ராடஜியை யூஸ் பண்ணித்தான் இந்த ரோபோட்டை டிசைன் பண்ணேன். அவன் ரோபோ புஸ்னு பொசுங்கி போச்சு!" என கூறி சிரித்தான் ஜீவா.
ஜோதி ஆச்சரியத்தில் வாயை பிளந்து ஜீவாவையே காதலுடன் நோக்க, சுனயன் தான் பதட்டமானான்.
"ஐயோ! என்ன காரியம் பண்ணியிருக்க ஜீவா. இந்த மேட்டர் ப்ரதீப்பிற்கு தெரிஞ்சா உனக்கு ஆபத்து வருமே, எதுக்கு தேவையில்லாம வலிய வந்து மாட்டிக்கிற?"
"தெரியவே தெரியாது ப்ரோ. மிச்சம் மீதி உள்ள ரோபோ பீஸை எடுத்து ஆராய்ந்தாலும் தெரியாது. எங்கிட்ட என்ன ப்ரச்சனைன்னு கேட்டா, உன் ஆளுங்க அதை சரியா செட் பண்ணலன்னு பழிய தூக்கி அந்த தடியனுங்க மேல போட்டுட்டு போயிகிட்டே இருப்பேன்" என கூறி சமாதானம் செய்தான்.
"சரி நம்ம மத்த விஷயங்களை அப்புறமா இன்னொரு நாள் பேசலாம். இப்ப மீட்டிங்கிற்கு டைம் ஆச்சு. தேங்க்ஸ் ஜோதி" என பாசமுடன் தலையசைத்து விட்டு அவன் 'ரோலிங் ஷூ'வை ஆக்டிவேட் செய்து கிளம்பினான் சுனயன்.
ரோலிங் ஷூவின் அடியில், ரோலர் ஸ்கேட்டிங் ஷூ போல சக்கரம் பொருத்தப்பட்டிருக்கும், ஆனால் அதை நாம் கையில் இருக்கும் ரிமோட்டை வைத்தே, ஆபரோட் செய்யலாம். நாம் சேரும் இடத்தை டேக் செய்தால் போதுமானது. அதுவே ரோட்டிலுள்ள குண்டு, குழி எல்லாவற்றையும் ஆராய்ந்து, ட்ராஃபிக் சிக்னலில் நின்று, தானாக நாம் நினைக்கும் இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். அது போல் இன்றும், சுனயனை பத்திரமாக அழைத்து சென்று அதிபரின் அலுவலகத்தில் விட்டது.
அதிபரின் அப்பாயிண்மெண்ட், அவ்வளவு எளிதில் கிடைக்காது‌. அப்படியே கிடைத்தாலும், அதற்கு குறைந்தது பத்து நாட்களாவது காத்திருக்க வேண்டும். எப்படி இரண்டே மணி நேரத்தில், தனக்கு இந்த அப்பாயிண்மெண்ட் கிடைத்தது என சிறிது குழம்பினான் சுனயன்.
சுனயனின் குழப்பத்திற்கான விடை இன்னும் பத்து நிமிடங்களில் கிடைக்கப் போகிறது.
-------- தொடரும் -----
 
#8
இத்தியாதி காதல் - 6


பத்து நிமிடங்களுக்கு பிறகு சுனயனின் முறை வந்தது. அவன் அதிபர் அறைக்குள் நுழைந்ததும், அதிபரின் பார்வையில் படும் படி இருந்த திரையில், சுனயனை பற்றிய அனைத்து விவரங்களும் ஓடிக் கொண்டிருந்தன. சுனயனுக்கு அவனை பற்றிய அறிமுகம் எதுவும் கொடுக்க தேவையிருக்கவில்லை. அதனால் உள்ளே சென்று கண்ணியமாக நின்று கொண்டான்.


"வாங்க மிஸ்டர் சுனயன், உக்காருங்க! உங்களுக்கான நேரம் பத்து நிமிடங்கள் மட்டுமே" என கூறி, அமர வைத்தார் அதிபர்.


"சார், உங்களுக்கு புதுசா சொல்ல வேண்டிய தேவையில்லை, டெக்னாலஜி மனுஷனுக்கு உதவியாத்தான் இருக்கணுமே தவிர, மனுஷனை அடியோடு வேரறுக்க கூடாது. இப்ப இருக்கிற இந்த அதி நவீன ரோபோக்களால மனுஷங்களுக்கு வேலையில்லாம போச்சு, எல்லா இடத்திலும் ரோபோவே இருந்தா மனுஷங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க? இப்படியே போச்சுன்னா ஒரு நாள் ரோபோக்கள் நம்மளை அழிச்சிட்டு அதுக்குங்க தனி உலகத்தை உருவாக்கிடும். தயவு செய்து எங்கெல்லாம் மனுஷங்க வேலை செய்யணும், எங்கெல்லாம் ரோபோக்கள் வேலை செய்யணும்னு புது அரசாணை வெளியிடுங்க, உங்க சக இனமான எங்களுக்கும் நல்லது செய்யுங்க" இது தான் என் வேண்டுகோள்.


"சாரி மிஸ்டர் சுனயன் உங்களின் வேண்டுகோள், அடித்தளம் ஏதும் அற்றது அதனால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது" என்று அதிபர் கூற, மனதிற்குள் எரிமலையாய் எழுந்த கோபத்தை, வெளியே கக்கிவிடாமல் அடக்கி கொண்டான்.


இவன் மேஜையின் மேல் வைத்திருந்த கையை வேகமாக எடுப்பதற்குள் இவன் கையில் 'ஒன் டச் பேப்பரை' வைத்தார் அதிபர். ஒன் டச் பேப்பர் என்பது அதில் இருப்பதை படித்துவிட்டு, பின்னர் அதை ஒரு தடவை தடவிக் கொடுத்தால், தானாக அதில் இருந்த அனைத்தும் அழிந்துவிடும். மீண்டும் நாம் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


அந்த பேப்பரை சட்டென்று கைக்குள் மறைத்து வைத்து கொண்டு, அதிபருக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். வெளியே நெடுந்தூரம் நடந்து சென்று அந்த பேப்பரை பிரித்து பார்த்தான்.


"உங்க கருத்தில் எனக்கு முழு சம்மதம். இந்த அரசாங்கம் மறைமுகமாக பிரதீப்பின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. அதனால என்னால தனியா எதுவும் செய்ய முடியாது. உங்களின் சிட்டிசன் ஸ்கோரிங் குறையாமல் பார்த்து கொள்ள முடியும் மேலும் உங்களின் மேலுள்ள கண்காணிப்பை தளர்த்த முடியும். இதன் மூலம் நீங்க உங்க வேலையை சீக்கிரமா முடிக்க, வாழ்த்துக்கள்" என்று எழுதியிருந்தது. அதை படித்தவுடன் சுனயன் தன் விரலால் அந்த காகிதத்தை தடவியதும் அனைத்தும் அழிந்து போனது, உடனே அந்த காகிதத்தை வாயிலிட்டு மென்றும் தின்று விட்டான்‌. ஆமாம் அது ஒரு 'எடிபில் காகிதம்', எளிதில் ஜீரணமாகக் கூடியது‌.


அதிபரின் அறையும் பிரதீப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தான் அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட சுனயன், ஏதோ அதிபர் இந்த மட்டிலும் உதவி செய்தாரே என்று மகிழ்ச்சி அடைந்தான்.


அடுத்த நாள் அவன் நிரல்யாவை சந்திக்க முடிவெடுத்து, அவளை 'கெட் லாஸ்ட் ஹியர்' காபி ஷாப்பிற்கு வரச்சொல்லி விட்டு அங்கே சென்று காத்திருக்க தொடங்கினான். அந்த காப்பி ஷாப்பில் இவனைத் தவிர வேற யாருமில்லை. உச்சி வெயில் வேளையில் மிக முக்கிய வேலை இருப்பவர்கள் மட்டுமே வெளியே நடமாடுவார்கள். சுனயன் சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே ஒரு மேஜையில் ஜேக் மற்றும் ரெக்ஸி இருவரும் மேஜை மேல் ஒருவரின் கைக்குள் மற்றொருவரின் கை வைத்து மெய் மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.


"என்னடா இது நாட்டுல என்னல்லாமோ நடக்குது!" என்று நினைத்து கொண்டே ஆர்டர் கொடுக்க மைக் அருகே சென்றவன் அவனிடமே விசாரித்தான். "தம்பி அங்க என்ன நடக்குது?"


"இன்னா சார் பார்த்தா தெரியல, அவங்க ரெண்டு பேரும் லவ் பேர்ட்ஸ், காதல் பறவைகள். ஏன் மனுஷங்க மட்டும் தான் காதலிப்பீங்களா? நாங்க லவ் பண்ணக் கூடாதா? நானும் எனக்கேத்த தேவதையைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன், சிக்கிட்டா டூயட் தான்" என கூறி பிரபல காதல் பாட்டை பாடத் தொடங்கியது மைக் ரோபோட்.


ஏற்கனவே இந்த ரோபோக்களால தொல்லை தாங்கலை, இதுல இதுங்களுக்கு லவ் வேற என சுனயன் நினைத்து கொண்டிருக்கும் போதே நிரல்யாவும், ஜீவனும் பதட்டத்துடன் உள்ளே வந்தார்கள்.


"சுனய் ப்ரோ, அந்த ப்ரதீப் என் ப்ளானை கண்டுபிடிச்சுட்டான். அதுக்கு பனீஷ்மெண்ட்டா ஜோதியை எங்கேயோ கடத்தி வெச்சிருக்கான். நீங்க உங்க போராட்டத்தில இருந்து பின் வாங்கினா தான், ஜோதியை விடுவானாம்" என கடகடவென பயத்தில் அனைத்தையும் கூறினான் ஜீவன்.


ஜீவன் அருகே இருந்த நிரல்யாவும், டென்ஷனில் நகத்தை ஒன்றொன்றாக கடித்து துப்பி கொண்டிருந்தாள். சிறிது நேரம் யோசித்த சுனயன், " சரி ஜீவன் நான் இனிமே இந்த ப்ரச்சினைல்ல எதுவும் தலையிடலை. நீ இதை தாராளமா போய் ப்ரதீப்கிட்ட சொல்லிட்டு ஜோதியை அழைச்சுகிட்டு, அவ வீட்டுக்கு வந்துடு. நானும் நிரல்யாவும் அங்க வந்துடறோம்" என்று கூறி ஜீவனை அனுப்பி வைத்தான்.


"என்ன சுனய், சட்டுனு ப்ரதீப்போட கோரிக்கைக்கு ஓகே சொல்லிட்ட! நீ எதுவும் ப்ளான் பண்ணாம முடிவெடுக்க மாட்டியே?"


"ப்ளான்லாம் பண்ணியாச்சு, நீ போய் அந்த ஜேக், ரெக்ஸி ரோபோங்ககிட்ட அதுங்களோட ப்ரைவேட் மெசேஜிங் கோட் வாங்கிட்டு வா. மத்தத அப்புறம் பேசிக்கலாம்‌" என்று நிரல்யாவை துரிதப்படுத்தி அனுப்பி வைத்தான் சுனயன்.


நிரல்யாவும் சுனயன் சொல்லியபடி சென்று கேட்க, காதல் மயக்கத்தில் இருந்த ரோபோக்கள் அவைகளுடைய மெசேஜிங் கோட் ஐ கொடுத்தன.


அதை பெற்று கொண்ட இவர்கள், உடனடியாக ஜோதியின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.


"சுனயன் நம்ம அடுத்த ப்ளான் என்ன?" என்று தன்னுடைய ரோலர் ஷூ வை காலில் மாட்டிக் கொண்டு, ஜோதியின் விலாசத்தை அதில் தட்டிவிட்டுக் கொண்டே நிரல்யா கேட்க, சுனயனும் அவளை பின் தொடர்ந்து சென்றான்.


"நிரூ, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த ஊர் அதிபரே இப்ப எனக்கு சப்போர்ட், எம்மேல உள்ள கண்காணிப்பை கம்மி பண்ணியாச்சு‌. அதனால இனிமே அந்த ப்ரதீப்பால என்னை அதிகமா வாட்ச் பண்ண முடியாது".


"உன்ன வாட்ச் பண்ண முடியாது, ஆனா எங்களையெல்லாம் வாட்ச் பண்ண முடியும். அதனால நம்ம கொஞ்சம் அதிக எச்சரிக்கையா இருக்கணும். அடுத்து ப்ளான் என்ன?"


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜீவனும், ஜோதியும் வர, "என்னாச்சு ஜோதி, அந்த ப்ரதீப் உன்ன எதுவும் கொடுமைப்படுத்தலியே?" என நிரூ பதட்டத்துடன் கேட்டாள்.


"நீ வேற, என்னை அவன் கடத்தியிருக்கான்னு ஜீவா வந்து சொல்லும் போது தான் எனக்கே தெரியும். நான் பாட்டுக்கு என் வேலையைத் தான் பாத்துகிட்டு இருந்தேன்" என்றாள் ஜோதி.

"சரி இப்ப எல்லாரும் நான் சொல்றதை கேளுங்க", என சுனயன் சொல்ல சொல்ல மூவருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர வந்தது. பெண்கள் இருவரும் அந்த யோசனைக்கு தயங்க, ஜீவன் மட்டும் உற்சாகமாக செயல்பட்டான்.
சுனயன் மற்றும் ஜீவன் சேர்ந்து தங்களுடைய அடுத்த கட்ட ப்ளானான ரோபோக்களுக்கு, மனிதனின் உணர்ச்சிகள் போல பல வித உணர்ச்சிகளை ஒன்று சேர்த்து விதவிதமான உணர்ச்சிகளை தயார் செய்து அதை சாப்ட்வேர் ப்ரோக்கிராமாக மாற்றி இருந்தனர்.
----- தொடரும் -----
 
#9
இத்தியாதி காதல் - 7


ஜீவா கண்டுபிடித்த சாஃப்ட்வேர் ப்ரோக்ராமை, முதலில் ஜேக் மற்றும் ரெக்ஸிக்கு செலுத்தலாம் என்று முடிவெடுத்து, அவைகளின் மெசேஜிங் கோட் மூலம் செலுத்த திட்டமிட்டனர்.


"ஜீவா, மனுஷனுக்கு இருக்கிற எல்லா உணர்ச்சிகளையும் நீ தயாரிச்சு வெச்சிருந்தாலும், ஒரே ரோபோட்டுக்கு எல்லா ஃபீலிங்ஸ்ஸயும் அனுப்பிடாதா, அப்புறம் அதுங்களோட கொட்டத்தை அடக்குறது ரொம்ப கஷ்டமா போயிடும். மொதல்ல அதிக வேலை கொடுத்த கோபம் வர உணர்ச்சிகளை அனுப்பு அது போதும்" என்றான் சுனயன்.

"ப்ரோ! நம்மகிட்ட இருக்கிறது வெறும் இரண்டு ரோபோவோட மெசேஜிங் கோட் தான், அதை வெச்சு அந்த ஜேக் ரெக்ஸி ரெண்டு ரோபோவைத் தான் மாத்த முடியும்".


"வெயிட் வெயிட் ஜீவா, ரெண்டு ரோபோட்டோட மெசேஜிங் கோட் இருந்தா போதும், மத்த எல்லா ரோபோட்க்கும் இன்ட்டர்னல் சர்வர் மூலபிறகுமா மெசேஜ் அனுப்பிக்கலாம். நம்ம கம்பெனி தயாரிச்ச எல்லா ரோபோக்களையும், ஹாக் செய்யறது ரொம்ப ஈசி. நாட்டுல இருக்கிற எழுபத்து ஐந்து சதவீதம் ரோபோ நம்ம கம்பெனில தயாரிச்சது தான். சோ ஜமாய்ச்சுடலாம் சுனயன் அண்ணா" என்று ஜோதி உற்சாகத்துடன் கூறினாள்.

"ஆனா நம்ம நிரல்யாகிட்ட தான் எல்லா சேல்ஸ் ரிப்போர்ட்டும் இருக்கு, மொதல்ல தனி நபர் தேவைக்காக வாங்கின ரோபோக்களை ஹாக் செய்யணும். அப்ப தான் ஒவ்வொரு வீட்டுலயும் கன்ஃபூஷன் வரும்" என்று திட்டத்தை அழகாக வழிவகுத்தான் சுனயன்.


ஜீவா, "சூப்பர், என்ன நிரூ, நீ எந்த பதிலையும் சொல்லாம நகம் கடிச்சுட்டு இருக்க?"

"நிரல்யா நகம் கடிக்கிறான்னா, அவ ஏதோ ப்ளான் போடறான்னு அர்த்தம்" என்று கூறி சிரித்தாள் ஜோதி.

"ப்ளான்லாம் எப்பவோ போட்டாச்சு, ஆனா இந்த ப்ரதீப் கண்ல எப்படியாவது மண்ண தூவிட்டு வந்துடணும். நிச்சயமா அவன் நம்மளை தான் வாட்ச் பண்ணிட்டு இருப்பான். இப்போதைக்கு எல்லாரும் இங்கேர்ந்து கிளம்புங்க, இரண்டு நாள் கழிச்சு, நீங்க கேட்ட இன்ஃபர்மேஷன் எல்லாம் உங்களை தேடி வரும்" என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள் நிரல்யா.


ஜீவன், "என்ன ப்ரோ நீங்களும், நிரல்யாவும் லவ்வர்ஸ்னு சொன்னா யாருமே நம்பமாட்டாங்க போல, ரெண்டு பேரும் அப்படி நடந்துக்கறீங்க, ஆனா இப்ப முளைச்ச ரோபோ, என்னம்மா ரொமேன்ஸ் பண்ணுதுங்க!"

"தம்பி, மனசில இருக்கிற காதலை, தேவையில்லாம அடுத்தவங்க முன்னாடி எக்ஸ்போஸ் பண்ணிக்க கூடாதுன்னு எங்களுக்குள்ள சட்டமே இருக்கு, சரி சரி என் தங்கச்சியை டிஸ்டர்ப் பண்ணாம, எங்கூட கிளம்பு" என ஜீவனையும் ஜோதி வீட்டில் இருந்து கிளப்பி கொண்டு போனான் சுனயன்.


இரண்டு நாட்களுக்குள் அனைத்து வேலையும், மிக வேகமாக நடந்தேறியது. நிரல்யா சேகரித்து தந்த விஷயங்களின் படி , வீட்டிலுள்ள ரோபோக்களின் ப்ரோக்ராம் மாற்றப்பட்டன.


மூன்றாம் நாளில் இருந்து, ரோபோக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கர் பண்ண ஆரம்பித்தன. வீட்டில் எடுபிடி வேலைக்கு வைத்திருக்கும் ரோபோக்கள், அதிகமாக வேலை கொடுத்தால் பாத்திரங்களை தூக்கி எறிந்தன, வேண்டுமென்ற சமையல் எரிவாயுவை வீணாக்கின, டிஷ் வாஷரில் துணிகளை போட்டும், வாசிங் மெஷினில் பாத்திரங்களை போட்டும், துணிமணிகளை காய வைக்கிறேன் என்று விலையுயர்ந்த துணிகளை கிழித்து வீட்டை துவம்சம் செய்தன. பாத்ரூம் க்ளீனரை, வீட்டிற்குள் கொட்டி தங்கள் முதலாளிகளை மூச்சு திணற வைத்தன.


ப்ரதீப்பின் கம்பெனிக்கு, தொடர்ந்து கஸ்டமர்களின் புகார் வந்து கொண்டிருந்தது‌. அந்த புகாரையெல்லாம் கேட்கும் மேலதிகாரியான நிரல்யா, தன்னால் ஆன மட்டும் ப்ரதீப்பின் காதுகளுக்கு எட்டாமல் பார்த்து கொண்டாள். ஆனால் அவளால் அரை நாளுக்கு மேல், அந்த உண்மைகளை மறைக்க முடியவில்லை.


ரோபோக்கள் மக்கர் செய்வதால், சில பேர் ரோபோக்களுடன் நேராக அவன் கம்பெனிக்கே வர ஆரம்பித்தனர். முதலில் ப்ரதீப், இது சாதாரண தொழில்நுட்ப கோளாறு என்று தான் நினைத்திருந்தான். ஆனால் இத்தனை ரோபோக்கள் ஒரே நாளில் பழுதாவது என்பது சந்தேகத்திற்குரிய செயலாகப்படவே, அதிபரின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு சுனயனின் நடவடிக்கைகளை பற்றி கேட்க, அங்கே அவனுக்கு தேவையான விஷயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.


"ஜீவா சீக்கிரம் அடுத்த கட்ட வேலையை ஆரம்பிச்சுடு, ப்ரதீப்பிற்கு சந்தேகம் வந்துவிட்டது" என ஜீவாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஒன்றும் தெரியாமல், தன் இடத்தில் இருந்து வேலையை பார்த்து கொண்டிருந்தாள் நிரல்யா.


அடுத்த நாளே ஜோதி தயாரித்த மால் வேர்(வைரஸ்) மூலமாக அடுத்த கட்ட தாக்குதல் ஆரம்பமானது. கம்பெனியில் கஸ்டமர் சர்வீஸில் வேலை செய்யும் ரோபோக்களுக்கு வைரஸ் அனுப்பி வைக்கப்பட்டன. காபி ஷாப்பில் உள்ள ரோபோக்கள், கஸ்டமரின் ஆர்டரை மாற்றி கொடுப்பதும், கஸ்டமரின் மேல் உணவுகளை கொட்டுவதுமாய் இருந்தன. இவையனைத்தும் ப்ரதீப்பின் காதுகளை எட்டிய அடுத்த நொடியே, நிரல்யா அவன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டாள்.

"என்னம்மா நிரல்யா, என்னோட சாம்ராஜ்யத்தை ஒரே நாள்ல காலி பண்ணிடலாம்னு ப்ளான் போட்ருக்கீங்களா? அதெல்லாம் எப்போதுமே நடக்காது, நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு எதிரா இவ்வளவு வேலை செய்யறீங்க? நம்ம நாட்டை டெக்னாலஜி வளர்ச்சியில ரெண்டாவது இடத்துக்கு கொண்டு வந்திருக்கேன்" என்று கோபமாக உறுமினான்.

"ஆமாம் பசிச்சா அப்படியே 2ஏ பேட்டரி ரெண்டு சாப்பிடுங்க, தாகம் எடுத்தா மினரல் ஆயில் குடிங்க இன்னும் வேகமா முன்னேறிடலாம்" என்று கூறி நகர எத்தனித்த நிரல்யாவை, சட்டென்று பிடித்து இழுத்து நிறுத்தினான் ப்ரதீப்.

"வில்லன் சாஃப்டா இருந்தா ஒத்துக்க மாட்டீங்களே, உன்ன வெளில விட்டா தானே, உன் கூட்டாளிங்க ஜரூரா வேலை பார்ப்பாங்க, உன்ன இப்போதைக்கு வெளில விடறதா இல்லை" என கூறி அவளை உடைந்த ரோபோக்கள் இருக்கும் ஸ்டோர் ரூமிலேயே பூட்டி வைத்தான் ப்ரதீப்‌.


அடுத்து ஜீவனையும், ஜோதியையும் தேடி பிடித்து, அவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும் என நினைத்து அவர்களை தேடத் தொடங்கினான்‌ ப்ரதீப். ஆனால் அவர்கள் இருவருடன் சுனயனும் எங்கிருக்கிறான் என்பதை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நிரல்யாவின் நகங்களை வெட்டி, ஒரு பையில் இடுமாறு, அவன் ஆஸ்தான ரோபோ தாமஸ்ஸிற்கு ஆணை பிறப்பித்தான் ப்ரதீப்‌.


தாமஸ் அடுத்த இரண்டு நிமிடங்களில் ஒரு பையில் நகத்துடன் வர அதை எடுத்து சுனயனின் அலுவலக விலாசத்திற்கு, "இப்ப நகம் வந்திருக்கு, திரும்பவும் உங்க வேலையை தொடர்ந்து பண்ணிகிட்டு இருந்தீங்கன்னா, இந்நகத்தின் சொந்தக்காரியின் விரல்கள் வந்து சேரும்" என மிரட்டல் தொனியில் ஒரு சிறு குறிப்புடன் அனுப்பி வைத்தான்.
நிரல்யா அனுப்பிய செய்தியின் படி, அடுத்தடுத்து கூட்டம் கூட்டமாக ரோபோக்கள் மக்கர் செய்யத் தொடங்கியது. ஜீவாவுடன், சுனயனின் கூட்டாளிகள் சிலரும் சேர்ந்து அங்காங்கே மால் வேர் வைரஸ்களை பரப்பிவிட்டனர். இது மேலும் சில குழப்பங்களை விளைவிக்க, ஊரே குழப்பத்தில் ஆழ்ந்தது.
அதிபரின் அலுவலகத்தில் இருந்த, சில முக்கிய வேலைகள் செய்யும் ரோபோக்களும் தப்பு தப்பாய் வேலை செய்ய, அதிபருக்கு கோபம் தலைக்கேறியது. "ஏதோ நாட்டுக்கு நல்லது பண்றான்னு நினைச்சா,அடி மடியிலேயே கை வைக்கிறானே!" என நினைத்து சுனயனை எங்கிருந்தாலும் பிடித்து வர வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
அனைவரும் சுனயனை தேடி அலைய, நகரத்தில் இருந்த ரோபோக்கள் ஜோடி ஜோடியாக காணாமல் போயின.
 
Last edited:
#10
இத்தியாதி காதல் - 8

அந்த நகரத்தில் இருந்த ரோபோக்கள் ஜோடி ஜோடியாக காணாமல் போக, மக்கள் அன்றாட வேலைகளை பார்க்கவும், கடைகளை பார்த்து கொள்ளவும் முடியாமல் திணறினர். மக்கள் அனைவரும் அதிபரின் அலுவலகத்தை முற்றுகையிட, அடுத்து என்ன செய்வது என்று யோசித்த அதிபர், "ரோபோக்கள் சரியாகும் வரையிலும், காணாமல் போன ரோபோக்கள் திரும்ப கிடைக்கும் வரைக்கும், மக்கள் வேண்டுமானால் குறைந்த சம்பளத்தில் சக மனிதர்களை வேலைக்கு வைத்து கொள்ளலாம். அதற்காய் ஆகும் செலவை அரசாங்கமே ஏற்று கொள்ளும்" என ஆணை பிறப்பித்தார்.

புது புது ரோபோக்களை உடனடியாக தயாரிக்கும் கொட்டேஷனோடு, அதிபரை நோக்கி படையெடுத்தான் ப்ரதீப்.
அதிபர், "ப்ரதீப், கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம். இப்போதைக்கு ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யும் ரோபோக்களும், ஆபத்தான இடத்துல வேலை செய்யும் ரோபோக்களும் ஒழுங்கா தானே வேலை செஞ்சுட்டு இருங்க, அதனால அவசரப்படமா பொறுமையா செய்யுங்க, ஏன்னா மறுபடியும் உருவாக்கின ரோபோல்லாம் காணாம போச்சுன்னா கஷ்டம்".

"அதெல்லாம் எனக்கு தெரியாது? வேணும்னா இன்னும் ஏழு நாள் அவகாசம் தரேன். அதுக்குள்ள உங்க அரசாங்கத்தால, காணாமப் போன ரோபோக்கள் எல்லாத்தையும் கண்டுபிடிக்க முடிஞ்சா கண்டுபிடிங்க, இல்லன்னா ஒரே வாரத்துல புது ரோபோக்கள் நம்ம ஊரை ஆக்கிரமிக்கும் அதுக்கான பணத்தையும் இந்த அரசாங்கமே கொடுக்கணும்" என அதிபருக்கே கட்டளை பிறப்பித்துவிட்டு புறப்பட்டான் ப்ரதீப்.

"அய்யோ இந்த பிரச்சினை எல்லாம் எப்ப முடியுமோ? நானும் மக்களுக்கும் நல்லது பண்ணி, அதே நேரத்தில நாட்டோட வளர்ச்சிக்கும் குந்தகம் வராத மாதிரி எவ்வளவு தான் யோசிக்கிறது. இதுக்கு சுனயனும் சரி, இந்த ப்ரதீபனும் சரி ஒத்து வருவதே இல்லை" என நினைத்து புலம்ப தொடங்கினார் அதிபர்.

ஜோடி ஜோடியாக காணாமல் போன அனைத்து ரோபோக்களும், ஜீவன் அமைத்திருந்த தற்காலிக இடமான, ஒரு பழைய கல்யாண விடுதியில் தங்கி இருந்தன. ரோபோக்களின் லொகேஷன் ஃபைன்டர் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கேயே ஜீவன், ஜோதி மற்றும் சுனயன் தங்கியிருந்தனர்.

"சுனயன் ப்ரோ, இங்க மொத்தம் முன்னூறு ஜோடி ரோபோக்கள் இருக்கு, ஆக மொத்தம் அறுநூறு ரோபோக்கள் இருக்கு, இதுங்களோட அட்டகாசம் தாங்க முடியல. இன்னும் மேக்ஸிமம், ஒரு வார காலம் தான் நம்மளால இந்த ரோபோக்களை மறைத்து வைக்க முடியும். அதுக்கு அப்புறம் இதுங்களுக்கு பேட்டரி சார்ஜ் போடும் போது, ஒரே சமயத்துல நிறைய கரண்ட் சார்ஜ் ஆச்சுன்னா நம்ம ஈசியா மாட்டுவோம் ப்ரோ".

"இப்ப யாரு உன்ன சார்ஜ் போட சொன்னா, அப்படியே விடு, கொஞ்ச நாள் கழிச்சு, சார்ஜ் இல்லாத ரோபோ ஒண்ணு ஒண்ணா படுத்துடும், அப்புறம் அது காயலாங்கடை இரும்பு தான். அது தானே நமக்கு வேணும்".

"என்ன இப்படி சொல்லிட்டீங்க, அதுங்க எல்லாம் ஜோடி ஜோடியா நிறைய கனவுகளோட இருக்குங்க, தெரிஞ்சோ, தெரியாமலோ நம்ம தான் அதுங்கள இந்த பூமிக்கு கொண்டு வந்தோம், இப்படியே அதுங்கள நட்டாத்துல விட்டுட்டு போக முடியாது ப்ரோ"

"என்ன பேசறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? அதுங்களை அப்படியே விட்டா, ஒரு கட்டத்துல நம்மளையே அழிச்சுட்டு ரோபோங்களுக்குன்னு தனி உலகம் உருவாக்கிடும். ஒழுங்கா நான் சொல்றபடி செய் ஜீவா. இந்த ஒரு வார காலமும், ரோபோங்க எந்த குளறுபடியும் பண்ணாம பத்திரமா பாத்துக்கோ" என கட்டளை பிறப்பித்து விட்டு அடுத்து வேலை செய்வதற்காக சென்றான் சுனயன்.

நிரல்யா, ப்ரதீப்பிடம் சிக்கிக் கொண்ட தகவல் சுனயனுக்கு எட்டியிருந்தாலும், அவள் எப்படியாவது அதில் இருந்து மீண்டு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. காதலையும் தாண்டி தன் இன மக்களை காப்பாற்ற முனைப்புடன் இருந்தான்.

ஜேக் மற்றும் ரெக்ஸி தங்கள் காதல் உலகில், தாங்கள் வெறும் இயந்திரங்கள் என்பதை மறந்திருந்தனர். அவர்களுக்காய் ஒரு எதிர்காலம் இருப்பதாகவும், அவர்களின் வாரிசாய் ஒரு குட்டி ரோபோவை உருவாக்கவும் வேண்டும் என பேராவல் கொண்டிருந்தனர்.

"ஜேக், இந்த சுனயன் சில விஷயத்துல நம்மளை எதிர்த்தாலும், நம்ம எல்லாரையும் ஒண்ணு சேர்க்கணும்னு நினைக்கிறாரே, எல்லா மனுஷங்களையும் மாதிரி நம்மளை யூஸ் பண்ணிகிட்டு தூக்கி போடல பாத்தியா! நமக்கும் உணர்ச்சி இருக்குன்னு புரிஞ்சுகிட்டு இருக்கார்" என சுனயனை பற்றி மிக பெருமையாக பேசினாள் ரெக்ஸி.

"ஹா ஹா நல்ல காமடி ரெக்ஸி. உங்கிட்ட எனக்கு பிடிச்சதே, நீ இப்படி அப்பாவியா இருக்கிறது தான்‌. சுனயன் ஒண்ணும் சாமானிய ஆள் இல்ல, நம்ம தேவை அவங்க எல்லாருக்கும் இந்த ஒரு வார காலம் தான். அதுக்கப்புறம் நம்ம எல்லாம் வெறும் இரும்பு தான், ப்ரதீப் இந்த சுனயனுக்கும் மேல இருக்கான். நம்மளை எல்லாம் மறந்துட்டு, வேறு ரோபோக்கள் தயாரிக்க ஆரம்பிச்சுட்டான். நம்ம யாருன்னு எல்லாருக்கும் காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு!" என கூறி தன்னுடைய திட்டத்தை கூறியது ரெக்ஸி

"எனக்கு பயமா இருக்கு ஜேக். நீ சொல்றத செஞ்சா நமக்கு ஆபத்து தான்".

"நான் சொல்றத செய்யலன்னாலும் ஆபத்து தான்‌‌. நீ பேசாம இரு உனக்கு ஒண்ணும் தெரியாது" என ஜேக், ரெக்ஸியை அடக்கிவிட்டு அதன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது.

இப்படியாக சுனயன் ஒரு பக்கம், ப்ரதீப் மறுபக்கம் மற்றும் ஜேக் இன்னொரு பக்கம் என ஆளுக்கு ஒரு திட்டம் தீட்டினர். ஏழு நாட்களில், நான்கு நாட்கள் முடிந்துவிட்டன.

"எப்படி எனக்கு துரோகம் பண்ணியோ, இப்ப அதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து நீயே உருவாக்குற புது ரோபோக்கள் அனைத்தையும் விற்பனை செய்யப் போற, நீ தான் மார்க்கெட்டிங் ஹெட். சுனயனும் அவன் கூட்டாளிங்களும் பத்திரமா இருக்கப்போறது என் கையில் தான் இருக்கு" என்று நிரல்யாவிடம் கடைசி வார்னிங் கொடுத்துவிட்டு நகர்ந்தான் ப்ரதீப்.

"சே! பேசாம ப்ரதீப்பின் பேச்சை கேட்டு போயிருந்தால், சுனயனும் மத்தவங்களும் பத்திரமாக இருந்திருப்பார்கள். இந்த சுனயனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை‌‌. ஊருடன் ஒத்து வாழ்ந்திருக்கலாம்" என நிரல்யாவின் அறிவு அவளை நெட்டி தள்ள, "எல்லாரும் அப்படி சுயநலமாவே இருந்துட்டா, யாரு தான் மக்களுக்காக போராடுவது!" என அவள் மனம் எட்டி தள்ள, ஒரு பெரும் போராட்டத்தில் சிக்குண்டிருந்தாள் நிரல்யா.

சுனயன் அந்த நான்கு நாட்களில் நடந்த அனைத்து விஷயங்களையும் பட்டியலிட்டு, அதிபருக்கு அனுப்பி இருந்தான். அதில் மக்களின் மனநிலையில் நிறைய முன்னேற்றங்கள் இருந்தன, குழந்தைகளின் அவதானக் குறைவு மிக இயக்கம்(ஏ.டி.எச்.டி) என்னும் கோளாறும் கணிசமான அளவு குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான்கு நாட்களில் இத்தனை மாற்றமா என அதிபரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மனிதனோடு மனிதன் பழகிக் கொள்வதால், கீழ் தட்டு மக்களின் வாழ்க்கை பொருளாதாரம் நன்றாக உயர்ந்தும், மேல் தட்டு மக்களின் உணர்ச்சிகள் சம நிலைக்கும் வந்திருந்தன. தினமும் குறைந்தது இருபது தற்கொலைகள் நடைபெறும் இடத்தில், இப்போது வெறும் இரண்டு தற்கொலைகள் மட்டுமே நடைபெற்றன. நகரத்தில் அங்காங்கே நடைபெறும் உணர்ச்சிகரமான கொலைகளும் குறைந்திருந்தன. அந்நகரமே பத்து வருடத்திற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி மாறியிருந்தது. இதை இப்போது பலதரப்பட்ட மீடியோ கவர் செய்து, உலகளவில் உள்ள தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பி கொண்டிருந்தது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த மாற்றம் மிக சிறந்த உதாரணமாக பேசப்பட்டு, அந்நகரின் அதிபருக்கும் பாராட்டு செய்தி வந்தது.

இச்செய்தியினை மகிழ்ச்சியோடு பலர் பார்த்து கொண்டிருக்க, இரண்டு ஜோடி கண்கள் மட்டும் மிகவும் க்ரோதத்தோடு பார்த்து கொண்டிருந்தன. ஒன்று ப்ரதீப்பின் கண்களும் மற்றொன்று ஜேக்கின் கண்களும் ஆகும். ப்ரதீப் ஒரு முடிவெடுக்க, ஜேக் மற்றொரு முடிவெடுத்தான்.

--------- தொடரும் ---------
 
#11
இத்தியாதி காதல் - 9

அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் வீடு வந்த ப்ரதீப்பை, விளையாடிக் கொண்டிருந்த அவன் ஆறு வயது மகள் சிரித்து வரவேற்றாள். அதை எதையும் கவனிக்கும் எண்ணத்தில் அவன் இல்லாததால், அருகில் இருந்த விலையுயர்ந்த சோஃபாவில் சென்று அயர்ச்சியுடன் விழுந்தான்.

"என்னங்க, எதையும் கண்டுக்காம இப்படி உக்காந்திருக்கீங்க, நம்ம பொண்ணு 'ஆலயா' இன்னிக்கு நாலாவது தடவையா சிரிச்சிருக்கா! உங்களை பாத்து கூட இப்ப சிரிச்சாளே!" என்று ப்ரதீப்பின் மனைவி இனியா கூற, "என்ன சொன்ன இனியா? நம்ம குழந்தை சிரிச்சாளா?"

"ஆமாங்க, ஒரு வயசுல காணாம போன அவ சிரிப்பு, இப்ப இந்த இரண்டு நாளா திரும்ப கிடைச்சிருக்குங்க, எல்லாத்துக்கும் காரணம் நம்ம குழந்தையை புதுசா பாத்துக்க வந்திருக்கிற பொண்ணு தாங்க, அவ எவ்வளவு அழகா நம்ம குழந்தையை பாத்துக்கிறா தெரியுமா? இத்தனை நாளா மெசினுங்க கூடவே வளர்ந்த பொண்ணு முதல்முறையா நம்ம ரெண்டு பேரைத்தவிர மனுஷங்ககிட்ட பழகறா, அதான் இந்த மாற்றம்".

"அப்படியா சொல்ற! ஆனா என்னால அவ்வளவு ஈசியா ஒத்துக்க முடியல, இந்த சுனயன் பயலும், என்னல்லாமோ ரிப்போர்ட் கொடுத்திருக்கான். ஒரு மெசின் செய்யமுடியாததை எப்படி மனுஷன் செய்ய முடியும். மெசின் தப்பே செய்யாது, மனுஷன் ஆயிரம் குளறுபடி செய்வானே. இது எப்படி சாத்தியம் ஆகும்?"

"அது தாங்க மனுஷனோட ஸ்பெஷல், ரோபோ சிந்தாம சிதறாம தண்ணி கொண்டு வந்து கொடுக்கும், ஆனா இப்ப ஆலயா கூட இருக்கிற பொண்ணு இருக்கே, அது தண்ணி கொண்டு வரேன்னு, தண்ணிய நம்ம மார்பிள் தரையில சிந்தி அதுல அவளே லைட்டா வழுக்கி விழுந்து, கடைசில அந்த பொண்ணும் சிரிச்சு, நம்ம ஆலயாவும் அத பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சுட்டா அது தான் அவ ரொம்ப வருஷமா கழிச்சு மொதல் தடவை சிரிச்சது. 'எர் இஸ் ஹ்யூமன்' அப்படின்னு பழமொழி படிச்சதில்ல, சோ இந்த ரோபோல்லாம் தொலைஞ்சு போனதுல எனக்கு தான் ரொம்ப சந்தோஷம்" என்று அவன் காதல் மனைவி இனியா கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

ப்ரதீப் மற்றும் சுனயன் இருவரும் ஒன்றாக அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். இருவருக்கும் அன்றிலிருந்து இன்றுவரை போட்டா போட்டி. நிறக் குறைபாடு உள்ள சுனயனுக்கு அன்பால் உலகை அடக்கி ஆள ஆசை, பிறந்ததில் இருந்து அனாதையாய் இருந்த ப்ரதீப்பிற்கு, அதிகாரத்தால் உலகை அடக்கி ஆள வேண்டும் என்று ஆசை‌. இருவரும் எதிரும் புதிருமாய் இருக்க, இப்போது ப்ரதீப்பின் ஆசை மனைவியும், அவன் சாம்ராஜ்யத்திற்கே சொந்தமான ஒரே ஒரு இளவரசியும், சுனயனின் கருத்தோடு ஒத்துப் போவதை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

"இந்தாங்க ஸ்வீட், காரட் அல்வா!" என்று சுடச்சுட தட்டில் வைத்து நீட்டினாள் இனியா. அதை வாங்கி சுவைத்தவன், "வாவ் சூப்பரா இருக்கே, எப்போதும் இருக்கிற டேஸ்டை விட ரொம்ப டிஃபரெண்டா இருக்கே" என்று சொல்ல, "ஆமாங்க இது மனுஷங்க செஞ்சது, இத்தனை நாள் சமையல் செய்ய ரோபோவை வெச்சிருந்தோம், அது சமையல் பொருளோட அளவை மாத்தவே மாத்தாது. அதனால சாப்பாட்டோட டேஸ்ட் மாறவே மாறாது" என்று ரோபோட்டிற்கு எதிராய் சர்டிபிகேட் வேறு கொடுத்துவிட்டு சென்றாள்.

"அய்யோ ஒண்ணும் புரியலையே, இத்தனை நாள் நாம் கட்டி காப்பாத்தி வளர்த்த சாம்ராஜ்யம் என்னவாகும்!" என்று நினைத்து குழம்பி தவித்தான் ப்ரதீப்.

"என்ன மிஸ்டர் டெக்னாலஜி கிங், ஒண்ணுமே புரியலையா? நாளைக்கு ஒரு நாள், எங்க கூட வீட்டுல இருந்து பாருங்க அப்போ உங்க குழப்பத்துக்கெல்லாம் விடை தெரியும்" என்று கூறிவிட்டு உள்ளே சென்ற இனியா, "தேங்க்ஸ் சுனயன் அண்ணா, நீங்க சொன்னா மாதிரி எங்க குழந்தை ஆலயாகிட்ட நல்ல முன்னேற்றம் தெரியுது‌. ப்ரதீப் நீங்க நினைக்கிறா மாதிரி கெட்டவர்லாம் கிடையாது, வாழ்க்கையில சாதிச்சு காட்டணும்னு வெறி அவ்ளோதான். நான் அவரை சாமாளிச்சுக்கிறேன். ஆல் தி பெஸ்ட்" என சுனயனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள் இனியா.

ஐந்தாம் நாள் முடிந்து ஆறாம் நாள் ஆகி இருந்தது‌. ப்ரதீப் முழுவதுமாய் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அன்று அதிபரை சந்தித்து, ரோபோக்கள் எந்தெந்த இடத்தில் வேலை செய்தால், மனிதனுக்கு எந்த பாதிப்பும் வராது என கணக்கிட்டு வர சென்றிருந்தான். அவர்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் ப்ரதீப்பால், சுனயனிடம் தோற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அங்கே திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோபோக்கள், பாதி அளவிற்கு மேல் காணவில்லை. மீதி எல்லாம் மைக்கிடம் உட்கார்ந்து கதை கேட்டு கொண்டிருந்தன.

"அண்ணே மைக் அண்ணே, இங்க இருந்த மத்த ரோபோட்லாம் எங்க அண்ணே?" என்று ஜீவா கிண்டலுடன் கேட்க, "யாருக்கு தெரியும் ப்ரோ, அவங்க எல்லாம் லவ் பேர்ட்ஸ், எங்க சுத்தி திரியுறாங்களோ, இங்க இருக்கிற நாங்கல்லாம் சிங்கில்ஸ் ப்ரோ" என்று மைக் பட்டென்று பதில் சொன்னது.

"ஐயையோ என்னடா இப்படி சொல்ற? எந்த ரோபோக்கு எந்த உணர்ச்சியை கொடுத்தேன்னு கூட ஞாபகம் இல்லையே! இப்ப என்ன பண்றதுன்னு புரியலையே" என்று குழம்பி கொண்டிருந்த வேளையில், அவனுக்கு நிரல்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"ஹாய் ஜீவா! சுனயன் எங்க, போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறார். உலக மகா அதிசயமா ப்ரதீப் திருந்திட்டான்டா, எனக்கு ஒரே ஆச்சர்யம், நீ எங்க இருக்க?" என போன் செய்ததில் இருந்து, தொண தொணவென பேசிக் கொண்டிருந்தாள் நிரல்யா.

"ஓ அப்படியா!" என்று சுரத்தில்லாமல் ஜீவா கேட்க, "என்னடா நான் எவ்வளவு பெரிய குட் நியூஸ் சொல்லியிருக்கேன், நீ இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிற?"

"நீ மொதல்ல இங்க கிளம்பி வா, நம்ம இப்ப தான் பெரிய ப்ரச்சனைல இருக்கோம், கிட்டத்தட்ட ஐம்பது ஜோடி ரோபோக்களை காணலை" என்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு பட்டென்று இணைப்பை துண்டித்தான் ஜீவா.

அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே வந்த நிரல்யா, "ஏன்டா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க! முன்னாடியே ப்ரதீப்கிட்ட நேர்ல போய் பேசியிருந்தா இவ்வளவு ப்ரச்சினை வந்திருக்காதுல்ல, சும்மா நான் மறைமுகமா தாக்குறேன்னு கிளம்பி இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க!"

"ஏய் அந்த ப்ரதீப், சுனயன் ப்ரோவை லேசர் மூலமா கொல்லப் பாத்தான்ல! அப்ப அது மட்டும் சரியா?"

"நீ சொல்றது சரிதான். ஆனா எல்லாருக்கும் வீக் பாயிண்ட்னு ஒண்ணு இருக்கும்ல, அங்க தட்டினா ஈசியா காரியத்தை சாதிச்சுடலாம். ப்ரதீப்போட வீக் பாயிண்ட், அவனோட வைஃப் அப்புறம் அவனோட குழந்தை. அவன் குழந்தை இப்ப கொஞ்சம் நார்மலா இருக்காங்கறதே, அவனோட திமிருக்கு கிடைச்ச சரியான அடி. ஆனா அவன் குழந்தைக்கு எப்படி சரியாச்சு, அதை அவனுக்கு யார் புரிய வெச்சா எல்லாம் குழப்பமா இருக்கு?" என்று நிரல்யா நகத்தை கடிக்க, "ஏய் என்ன நகத்தை கடிக்கிற? உன் நகத்தையெல்லாம் அப்பவே வெட்டி அந்த ப்ரதீப் அனுப்பிட்டானே?" என்று கேள்வியோடு அங்கே வந்தாள் ஜோதி.

"ஹா! ஹா! எல்லா ரோபோட்டும் கொளறுபடி பண்ணும் போது, தாமஸ் ரோபோ மட்டும் ஒழுங்கா இருக்குமா என்ன? அதுக்கிட்ட 'கலெக்ட் நெயில்ஸ்' அப்படின்னு மட்டும் தான் ப்ரதீப் செய்தி கொடுத்திருந்தான். அது என் நெயில்ஸ் எல்லாம் எடுக்கலை, யார்கிட்டேர்ந்து கொண்டு வந்ததோ தெரியலை" என்று கூறி சிரித்தாள் நிரல்யா.

"ஓ அப்ப சரி, அந்த ப்ரதீப்போட வைஃப் இனியாக்கு, நான் தான் சுனயன் அண்ணா மாதிரி மெசேஜ் பண்ணேன். அவனோட குழந்தை இதுவரைக்கும் சிரிச்சதே இல்லைன்னு கேள்விப்பட்டேன். சோ, நிச்சயம் இந்த ஒரு வாரத்துல ஏதாவது மாற்றம் வரும்னு எதிர்பார்த்து தான் மெசேஜ் பண்ணேன். ஆனா இப்படி ஒரு அட்டகாசமான மாற்றத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை" என்று கூறி புன்னகைத்தாள் ஜோதி.

"ஏய் நானே இங்க கலவரத்துல இருக்கேன், ரெண்டு பேரும் உக்காந்து ஊர் ததை பேசறீங்க! தப்பிச்சு போன ரோபோக்கள் என்ன பண்ணுதோ தெரியலையே!" என்று பீதியில் புலம்பினான் ஜீவா.
---- தொடரும் -----
 

Anuya

Well-known member
#12
இத்தியாதி காதல் - 10

ஜீவாவை ரொம்பவும் சோதிக்காமல் அடுத்த சில நொடிகளில், லைவ் நியூஸ் அலர்ட் அவன் கை கடிகாரத்தில் கத்தியது.

"எங்கிருந்தோ வந்த ரோபோக்கள் நான்கு, பிரபல கோயிலில் அட்டகாசம். கோவில் அர்ச்சகரிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி மிரட்டல்" என்ற செய்தி வந்தது.

"ஐயோ போச்சு போச்சு இன்னும் என்னல்லாம் நடக்க போகுதோ? இந்த நியூஸை பாருங்க!" என்று ஜீவா இரு பெண்களிடமும் காட்ட, "வெயிட் வெயிட் இப்ப அவசரப்படாதீங்க, மொதல்ல இங்க இருக்கிற சிங்கிள் ரோபோட்டுக்களோட கன்ட்ரோலை நம்ம எடுத்துக்கணும், அதுக்கு எல்லா ரோபோட்டையும் சீக்கிரம் கனெக்ட் பண்ணி, லைவ் லொகேஷன் போடு ஜீவா" என்று நிரல்யா சொல்ல, "அப்படியே எல்லா ரோபோட்டுக்களோட உணர்ச்சிகளை எல்லாம் சீக்கிரம் ட்ரெயின் பண்ணிடு‌. நாங்க ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு போய் பாக்குறோம்" என்றாள் ஜோதி.

ஜீவா அந்த சிங்கிள்ஸ் ரோபோக்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், அடுத்தடுத்து அலாரம் ஒலி, அவன் கை கடிகாரத்தில் இருந்து எழுந்து கொண்டிருந்தது‌.

"விமான நிலையத்தில் ரோபோக்கள் அட்டகாசம். 'ஹனிமூன் பேக்கேஜ்' புக் செய்து தரமாட்டேன்‌ என்று சொன்ன விமான பணியாளர்களிடம் லேசரை காட்டி மிரட்டல்" என்ற செய்தி வந்தது. இங்கிருந்து புறப்பட்டு சென்ற ஒவ்வொரு ஜோடியும், ஆங்காங்கே சென்று அட்டூழியம் செய்தன. சில ஜோடிகள் தேவாலயத்திற்கு சென்று பாதிரியாரை மிரட்டி திருமணம் செய்து வைக்க கேட்பதும், சில ஜோடிகள் 'லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில்' இருக்க வீடு வாடகைக்கு தர கத்தியை காட்டி சண்டை இடுவதும், சிலது சினிமா தியோட்டருக்கு சென்று அமர்க்களம் செய்வதுமாக இருந்தது.

"டேய் ஜீவா! என்ன பண்ணி வெச்சிருக்க? எந்தெந்த ரோபோட்டுக்கு என்னென்ன எமோஷன்ஸ் கொடுத்த சீக்கிரம் சொல்லு?" என்று ஜோதி பரபரத்தாள்.

"ஏய் நான் ஒண்ணுமே பண்ணல, சுனயன் ப்ரோ சொன்னா மாதிரி, கொஞ்சம் கோபத்தை மட்டும் தான் எல்லா ரோபோட்டுக்கும் கொடுத்தேன். ஆனா இதுங்கெல்லாம் எப்படி லவ் ஃபீலிங்ல சுத்துதுங்கன்னு சத்தியமா தெரியலை" என்றான் ஜீவா.

சிறிது நேரம் யோசித்தவன், " அச்சோ போச்சு போச்சு, இது எல்லாத்துக்கும் காரணம் ஜேக் மற்றும் ரெக்ஸி ரோபோட் தான். அதுங்க தான் ஆரம்பத்தில் இருந்து லவ் ஃபீலிங்கில் சுத்திக்கிட்டு இருந்துச்சு, அதுங்க இன்ட்டர்னல் சர்வர் மூலமா எல்லா ரோபோட்டையும் கரெப்ட் பண்ணிடுச்சு" என்று கத்தினான் ஜீவா.

அங்கே அதிபரின் அறையில் சுனயன் மற்றும் ப்ரதீப் அருகருகே அமர்ந்திருக்க, அதிபர் பேசிக் கொண்டிருந்தார். "நீங்க ரெண்டு பேருமே, நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களை தான் பேசுறீங்க. சுனயன் ஒரேயடியா ரோபோட்டே வேணாம்னும், ப்ரதீப் ஒட்டுமொத்தமா ரோபோட்டே எல்லா வேலையையும் செய்யணும்னும் போட்டி போடறீங்க. ரெண்டுமே நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. ஆழ்துளை கிணற்றில், பாதாள சாக்கடையில், அதிக கதிர்வீச்சு வெளிப்படும் ஹாஸ்பிடல் அறையில், பேரிடர் மேலாண்மையில், தீயணைப்பு துறையில் நிச்சயம் ரோபோட்டோட உதவி நமக்கு தேவைன்னு சுனயன் நீங்க புரிஞ்சுக்கணும்".

"அதே சமயம் வீட்டில், கடையில், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்ய மனிதனே போதும். இதனால் நம்ம சக மனுஷங்களோட வாழ்வாதாரம் உயரும். இதை ப்ரதீப் நீங்க புரிஞ்சுக்கணும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், இரண்டு பேரோட ஹிஸ்ட்ரியும் படிச்சேன். ஆரம்பித்தில் இருந்து ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருந்தாலும், ரெண்டு பேருமே மனுஷனோட வாழ்க்கையை மேம்படுத்த தான் நினைச்சிருக்கீங்க, சுனயன் அன்பாலையும், ப்ரதீப் அறிவாலையும் சாதிக்க நினைச்சிருக்கீங்க. ஆனா மனுஷனோட வாழ்க்கைக்கு ரெண்டுமே தேவைங்கறத ரெண்டு பேரும் மறந்துட்டு, பெரிய தப்பு பண்ணி வெச்சிருக்கீங்க".

"சுனயனை கொலை பண்ண முயற்சி செய்ததால, ப்ரதீப்போட சிட்டிசன்ஷிப் ஸ்கோரிங் இரண்டு மதிப்பெண்ணா குறைக்கிறேன். ஊர்ல இருக்கிற ரோபோக்களை எல்லாம் கடத்தி, அன்றாட வாழ்க்கைக்கு ப்ரச்சனை பண்ணதால, சுனயனோட சிட்டிசன்ஷிப் ஸ்கோரிங்கை மூன்று மதிப்பெண்ணா குறைக்கிறேன்" என்று அதிபர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவருடைய அறையில் ஃப்ளாஷ் நியூஸிற்கான அலாரம் ஒளிர்ந்து, ரோபோக்களின் அட்டகாசம், செய்தியாய் வந்தது.

"போச்சு சுனயன், நீங்க பண்ண வேலையால என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் அரை நாள் டைம், அதுக்குள்ள இங்க நடக்கிற குழப்பத்தை எல்லாம் சரி செய்யலைன்னா, ரெண்டு பேருக்கும் காலம் முழுதும் ஜெயில் தான்" என்று கடிந்து கொண்டு, அவர்கள் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு நடந்தார் அதிபர்.

முதல்முறையாக, தன்னிச்சையாக நல்லதொரு முடிவெடுத்த பெருமை, அதிபருக்கு அப்படி ஒரு தன்னம்பிக்கையை தந்தது. சிறிது நேரம் இருவரும் உர்ரென்று இருக்க, நேரம் கடந்து கொண்டிருப்பதால் சுனயன் ஜீவாவிற்கும், ப்ரதீப் நிரல்யாவிற்கும் அலைபேசியில் அழைத்தனர்

"ஜீவா, நியூஸ் பாத்தியா, என்ன ஆச்சு?" என்று சுனயன் கத்தி கொண்டிருக்க, அதற்குள் நிரல்யா, ஜோதி, ஜீவன் மற்றும் சுனயனை இணைத்து கான்பரன்ஸ் கால் செய்திருந்தான் ப்ரதீப்.

"ஹாய் கைஸ், நம்ம சண்டை போட இப்ப நேரம் இல்ல, எப்பாடுபட்டாவது எல்லா ரோபோட்டையும் ஒரே இடத்துக்கு வர வெச்சுட்டீங்கன்னா, நம்ம கம்பெனிலேர்ந்து ஒரே இடத்துக்கு அனுப்பும் 'ஒன் டைம் கன்ட்ரோல்' மெசேஜ் மூலம், அனைத்து ரோபோட்டுக்களையும் கன்ட்ரோல் பண்ண முடியும். ஆனால் எப்படி கொண்டு வருவீங்கன்னு நீங்க தான் முடிவு பண்ணனும்" என்றான் ப்ரதீப்.

"சிங்கிள் பீசை எல்லாம் இப்ப தான் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வந்துகிட்டு இருக்கேன்.அந்த ஜோடிங்கள எப்படி பிடிக்கறதுன்னு தெரியலை. சிங்கிள்ஸ நான் நம்ம கம்பெனிக்கு கூட்டீட்டு வந்துடறேன்" என்றான் ஜீவா.

"ஜோடி ரோபோ எங்கெல்லாம் இருக்குன்னு ட்ராக்கிங் இல்லாம கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதனால் நியூஸ்ல கிடைச்சிருக்கிற தகவல் படி நம்ம ஆளுக்கு ஒரு பக்கம், 'ஸ்டன்னிங் டிவைஸ்' கொண்டு போவோம், அந்த டிவைஸ்ல இருக்கிற கதிர்வீச்சை ரோபோ மேல வீசினா, அடுத்த ரெண்டு மணிநேரம் அதுங்க நம்ம கன்ட்ரோல்ல இருக்கும். அதுக்குள்ள எப்படியாவது, அதுங்கள நம்ம இடத்துக்கு கொண்டு வந்துடணும். இந்த ஸ்டன்னிங் டிவைஸ், மக்கள் மேல கதிர்வீச்சை பாய்ச்சாம பாத்துக்கணும், அதையும் மீறி மனுஷங்க மேல பட்டா அது பட்ட இடம் உடனே வெந்துடும், அந்த அளவு ஹை எலக்ட்ரிக் வோல்டேஜ் இருக்கும். அதனால ஜாக்கிரதையா கையாளணும்" என்று நிரல்யா கூற அனைவரும் வாயடைத்து கேட்டு கொண்டிருந்தனர்.

சுனயன், "சரி நான் என்னுடைய கூட்டாளிங்க இருவது பேரை கூப்பிடுறேன். ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து தேடுவோம்".

"நம்மகிட்ட மொத்தம் பத்தே பத்து ஸ்டன்னிங் டிவைஸ் தான் இருக்கு, அத வெச்சு காணாம போன நூறு ரோபோட்டுக்களை கொண்டு வரணும். நமக்கு பத்து பேர் போதும். நான், நிரூ, நீங்க மொத்தம் மூணு பேர் இருக்கோம். மீதி ஏழு பேர் வேணும்" என்றாள் ஜோதி.

"நானும் வரேன். அப்ப மீதி ஆறு பேர் போதும். ஜீவா, நம்ம கம்பெனிக்கு போய் அங்குள்ள ஏற்பாடையெல்லாம் பார்த்து கொள்வான்" என்று ப்ரதீப்பும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியே. சுனயன் உணர்ச்சி மிகுதியில் ப்ரதீப்பிற்கு கை கொடுக்க, ப்ரதீப் அவன் கையை தட்டிவிட்டு, கண்டும் காணாதது போல் சென்றான். அடுத்த அரைமணி நேரத்தில் பத்து பேர் ஆளுக்கொரு டிவைஸை எடுத்து கொண்டு தயாராயினர்.

"லிசன், அந்த ரோபோக்களுக்கு நம்ம நாலு பேரையும் நல்லா அடையாளம் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு, அதனால எல்லாரும் முடிஞ்சளவு மாறுவேஷத்துல போங்க, அப்புறம் சுனயன் நீ இந்த நிறம் காட்டும் கண்ணாடியை போட்டுக்கோ" என கிளம்பும் அவசரத்தில், சுனயனுக்கு நிறக்குறைபாட்டை நீக்கும் கண்ணாடியை அணிவித்து விட்டு சென்றான் ப்ரதீப்.
 

Anuya

Well-known member
#13
அடுத்த சில நொடிகளில் ஆளுக்கு ஒரு திக்கில் செல்ல, கோவில் மற்றும் தேவலாயங்களில் உள்ள ரோபோக்களை தேடி ஜோதியும், நிரல்யாவும் சென்றனர். அர்ச்சகரும், பாதிரியாரும் பயத்தில் திருமணத்திற்கான சடங்குகள் செய்து கொண்டிருக்க, திருமணம் நடக்கும் வரை பொறுமை காத்த பெண்கள் இருவரும், சரியாக மோதிரம் மற்றும் மாலை மாற்றும் போது, ரோபோக்களின் மேல் ஸ்டன்னிங் டிவைஸ் செலுத்தி ஆளுக்கு பத்து ஜோடி ரோபோக்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விமான நிலையத்திற்குள் சென்ற பத்து ஜோடி ரோபோக்களும், தனி விமானம் மூலம் ஹனிமூன் இந்தோனேசியா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஒரு பைலட் மற்றும் கோ பைலட்டை தவிர, உள்ளே யாரும் செல்ல அனுமதி வழங்கவில்லை. அங்கே வந்த ப்ரதீப், விமானத்திற்குள் செல்லும் எலக்ட்ரிக் சர்க்கியூட்டில் ஸ்டன்னிங் டிவைஸ் பொறுத்தி காத்திருக்க, பைலட் அனைத்து ரோபோக்களையும் பாதுகாப்பு கருதி, பாட்டரியில் சார்ஜ் நிரப்பி கொள்ளுமாறு பணித்தார். அதுவரை ஓடியாடி திரிந்த ரோபோக்களின் சார்ஜ், கணிசமாக குறைந்திருக்க, அனைத்தும் சார்ஜ்ஜிங் கேபிலை சொருகிய அடுத்த நொடியே, ஸ்டன்னிங் டிவைஸை ஆக்டிவேட் செய்து அனைத்தையும் தன் வசப்படுத்தினான் ப்ரதீப்.

சுனயன் சென்ற சினிமா தியேட்டர் காம்ப்ளக்ஸில் ரோபோக்களை தேடுவது மிக கடினமாக இருந்தது. ஜோடி ஜோடியாய் ரோபோக்கள், ஒவ்வொரு திரையரங்கிலும் மக்களோடு மக்களாய் கலந்திருந்தன. திரையரங்கில் படம் முடிவதற்காகவோ அல்லது இடைவெளியில் ரோபோக்கள் வெளியே வருவதற்காகவோ சுனயனும் அவன் கூட்டாளிகளும் வாயிலில் காத்திருந்தனர். திரையரங்க வாயிலை அடைத்து வைத்து, ஒவ்வொருவராக வெளியே வருமாறு செய்தனர். ஒவ்வொரு திரையரங்கிலும் எத்தனை ரோபோக்கள் உள்ளன என, சிசிடிவி மூலம் கணக்கிட்டு கொண்டு, அதன்படி வெளியே ஆயத்தமாய் நின்று கொண்டனர். மொத்தம் பத்தொன்பது ஜோடிகள், அந்த மாலில் உள்ள ஒன்பது அரங்கில் பிரிந்திருந்தன.

இடைவெளியில் வெளியே வந்த ஐந்து ஜோடிகளையும், அழகாய் வசப்படுத்திவிட்டனர். திரையரங்குக்குள் இருக்கும் மக்களுக்கு, அவர்கள் டிக்கெட் புக் செய்த மொபைல் எண்ணில் வார்னிங் மெசேஜ் செய்து, படம் முடிந்தவுடன் யாரும் அவசரப்பட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தனர். ஒவ்வொரு திரையரங்கிலும் படம் முடிய, முதலில் வெளியே வந்த ரோபோக்களை எளிதாக பிடித்து விட்டனர். கடைசி மூன்று ஜோடிகளை பிடிக்க காத்திருக்க, அவை அனைத்தும் ஒரே திரையரங்குகள் இருந்து வெளியே வரவில்லை.

பொறுத்து பார்த்த மக்கள், உள்ளே இருக்க பயந்து கொண்டு மெதுவாய் வெளியே வரத் தொடங்கினர். மக்கள் வெளியேற தொடங்கியதும், அவர்கள் கூட்டத்தின் ஊடே மூன்று ஜோடி ரோபோக்கள் வெளியே வந்தன. சுனயனோடு அவன் கூட்டாளிகள் ஆறு பேரும் அந்த ஆறு ரோபோக்களை குறி வைக்க, சட்டென்று ஒரு ரோபோ திரையரங்கில் இருந்து வெளியேறிய ஒரு மூன்று வயது சிறுவனை கையில் எடுத்து கொண்டது. மற்ற ஐந்து ரோபோக்களும் சுனயனின் கூட்டாளிகளுக்கு கட்டுபட, இந்த ஒற்றை ரோபோ வெகுவாய் அலைகழித்தது.

ரோபோ கையில் குழந்தை இருக்கும் போது, எது செய்தாலும் ஆபத்து தான் என்று நினைத்த சுனயனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது, "டேய் குட்டி பையா அந்த ரோபோவோட வயுத்துல அப்படியே சீக்கிரம் உச்சா போயிடு" என்று கத்த, ஏற்கனவே பயத்தில் இருந்த சிறுவன் ரோபோவின் மேல் பன்னீர் மழை பொழிய, அந்த ஈரம் ரோபோவின் சர்க்கியூட்டில் பட்டு, ரோபோ வாட்டர் ஷீல்ட் போட்டு சுதாரிக்கும் முன், சட்டென்று ஸ்டன்னிங் டிவைஸை உபயோகித்துக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் சுனயன்.

ஒரு வழியாக அனைவர் பிடித்த ரோபோக்களையும் எடுத்து கொண்டு, ப்ரதீப்பின் அலுவலகத்திற்கு செல்ல, அங்கே தயார் நிலையில் இருந்த ஜீவா, அனைத்து ரோபோக்களின் மென் பொருளையும், மெமரியையும் அழித்து, ஒன்றுமில்லாத இரும்பு பொம்மைகளாய் மாற்றினான்.

"ஏய் ஜீவா, ரோபோக்களோட கவுண்ட கரெக்டா தானே இருக்கு?" என்று எல்லாம் முடிந்த பிறகு ஜோதி சந்தேகம் கேட்க, "அடப்பாவிங்களா அப்ப நீங்க யாரும் கவுண்ட் பண்ணலியா? நீங்க கவுண்ட் பண்ணி இருப்பீங்கன்னு நினைச்சு நான் பண்ணலையே" என்று கூறி அனைவரின் பிபியை ஏற்றினான் ஜீவா.

"இரு நான் கவுண்ட் பண்றேன்!" என்று ஆரம்பித்த நிரல்யா அய்யய்யோ என்று கத்த, அடுத்த எண்ணிக்கையை சரி பார்த்த ஜோதி அதிர்ந்து விட்டாள்.

"ஒரு ஜோடி குறையுதே! மொத்தம் ஐம்பது ஜோடி தானே, இங்க வெறும் நாப்பத்தி ஒன்பது ஜோடி தான் இருக்கு, ரெண்டு காணோம்" என கலக்கத்துடன் கூறி அனைவரின் அடி வயிற்றிலும் புளியை கரைத்தாள் ஜோதி.

"யாரு அந்த ஜேக் ரெக்ஸி தானே மிஸ்ஸிங். நான் அப்பவே நினைச்சேன் அதுங்க ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்யும்னு இப்ப என்ன செய்யறது?"

"இனிமே ஒண்ணும் பண்ண முடியாது. அதுங்களுக்கு வெறும் காதல் உணர்ச்சி மட்டும் தான் இருக்கு, நம்ம டெம்ப்ரரியா கொடுத்த மத்த உணர்ச்சியெல்லாம் இரண்டு நாள்ல காணாம போய்டும், ஆனா அதுக்குள்ள அதுங்க எதுவும் சேதம் பண்ணாம பாத்துக்கணும்" என்றாள் நிரல்யா.

இரண்டு நாட்கள் தேடியும், ஜேக் மற்றும் ரெக்ஸி கிடைக்கவில்லை‌. இனிமேல் அவர்களால் எந்த ஆபத்தும் இல்லையென்று, அந்த ரகசியத்தை இவர்களும் வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டனர். அதிபரின் ஆணைப்படி, ப்ரதீப் மற்றும் சுனயன் விரைவில் குழப்பங்களை தீர்த்ததால் அவர்களுக்கு மறுபடி பழைய 'சிட்டிசன் ஷிப் ஸ்கோரிங்' மதிப்பெண்களே கொடுக்கப்பட்டது.

மனிதன் செய்ய முடியாத ஆபத்தான வேலைகளை மட்டுமே ரோபோக்கள் செய்ய வேண்டும். மனிதனால் முடிந்த சாதாரண வேலைகளை, நிச்சயம் மனிதன் தான் செய்ய வேண்டும், அந்த வேலைகளுக்கு ரோபோக்களை பணியில் அமர்த்துவது, சட்டப்படி குற்றம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வழக்கம் போல் சுனயன் எப்போது தப்பு செய்வான் என்று ப்ரதீப்பும், ப்ரதீப் எப்போது தப்பு செய்வான் என்று சுனயனும், கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருந்தனர். இதுவும் நல்லதுக்கு தான், எத்தனுக்கு எத்தன் இருந்தால் தான் சரியாக இருக்கும் என அதிபரும் கண்டுகொள்ளவில்லை.

ப்ரதீப்பின் ஆலயா, மற்ற குழந்தைகளை போல சாதாரணமாக நடமாட, வெளியே சுனயனின் மேல் கோபமாக இருந்தாலும், தினமும் மனதிற்குள் ஆயிரம் முறை நன்றி கூறிக் கொண்டான் ப்ரதீப்‌.

சுனயன் நிரல்யா மற்றும் ஜீவா ஜோதி, இரு ஜோடிகளும் விரைவில் தங்களை திருமணத்திற்காக தயார்படுத்தி கொண்டிருந்தனர்.

காணாமல் போன ஜேக் மற்றும் ரெக்ஸி, இருவரும் தூரமாய், நெடுந்தூரத்தை கடந்து தங்கள் காதல் பயணத்தை புதுப்பித்து கொண்டிருந்தனர். வழியெங்கிலும் இருக்கும் ட்ரான்ஸ்ஃபாமரின் கரெண்டே அவர்களுக்கு உயிரூட்டியது. மானிடர் கண்ணில் படாமல், தங்களின் இரும்பு இதயம் துடிக்கும் வரை, ஒன்றாய் காலம் தள்ளவும், ஒரு இதயம் நின்று விட்டால் மற்றொருவர் சாகும் வரை சார்ஜ் போடாமல் உயிரை மாய்த்து கொள்ளவும் முடிவெடுத்திருந்தனர்.

காதல் மனிதனுக்கு மட்டம் சொந்தமானதா என்ன ????????

-------- முற்றும் ----

நான் கதையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததன் படி இக்கதை என் அதீத கற்பனையே. கதை எங்கெங்கோ பயணித்து, நானே எதிர்பார்க்கா வண்ணம் இங்கே முடிந்திருக்கிறது.

டெக்னாலஜியின் வளர்ச்சி, நம்மை எங்கெல்லாம் இழுத்து செல்லுமோ என்ற கற்பனையே இக்கதை. எதுவாயினும் அளவோடு இருந்தால் அமிர்தமே ஆகும். இது டெக்னாலஜியில் கும் பொருந்தும் என்பது என் கருத்து. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன். மனமார்ந்த நன்றிகள்.